சிரிய நாட்டு நவீன சிந்தனையாளர் ஜவ்தத் ஸஈத் தன்னுடைய சமூக, உள
மாற்றத்துக்கான விதிகள் எனும் நூலில் குறிப்பிடும் ஒரு கருத்தை நினைவு கூறி
இலங்கையில் இஸ்லாமிய தஃவாவின் யதார்த்த நிலை குறித்த சில பொது நோக்குகளை
முன்வைக்க முயல்கிறேன்.
'மோசமான சமூக சூழலை மாற்றுவதற்கு நாம் ஆசை வைக்கின்றோம். ஆனால்
முதலில் எங்களுக்குள்ளால் அந்த மாற்றம் உருவாக வேண்டும் என்பதை மறந்து
விடுகிறோம். நாங்கள் ஒவ்வொருவரும் அவரவர் போக்கில் திருப்தி காண்கிறோம்.
சமூகத்தை குற்றம் சாட்டுகின்றோம். ஆனால் அவர்களில் அதிகமானவர்களின் மோசமான
நிலைதான் மொத்த சமூகத்தின் இழிநிலைக்குக் காரணம் என்பதை மறந்து விடுகிறோம்.
இதனையே அல் குர்ஆன் எமக்கு போதிக்கிறது. 'மனிதன் தன்னைப் பற்றிச்
சிந்திக்காதவரை தனது பலவீனங்கள், பிழைகளை திருத்திக் கொள்ளாதவரை
அல்லாஹ்வும் திருத்த மாட்டான்.'
இலங்கை முஸ்லிம் சமூகத்திற்குள் மேற்கொள்ளப்பட்டு வரும்
தஃவா ஆத்மீக, அறிவு ரீதியாக ஆக்கபூர்வமான முன்னேற்றத்தை நோக்காகக்
கொண்டமைந்துள்ளது. சீரான சிந்தனைத் தெளிவும், உயர்ந்த ஒழுக்கப் பண்பும்,
ஆழ்ந்த ஆத்மீகப் பலமும் கொண்ட உறுதிமிக்க ஒரு சமூகத்தை உருவாக்கி அதனூடாக
ஒரு பாரிய தஃவாப் பணியை பெரும்பான்மை அந்நிய சமூகத்துக்கு மத்தியில்
மேற்கொள்வது ஆழ்ந்த எதிர்பார்ப்பாக உள்ளது. இத்தகைய பாரிய வேலைத் திட்டத்தை
நோக்கிப் பயணிக்க இன்றைய தஃவா நிறுவனங்கள், இயக்கங்கள், தனிமனிதர்கள்
அப்பணியை சுமக்கும் போதிய தகுதிகள், வளங்கள், திறன்களைப் பெறவேண்டியுள்ளன.
எனவே இந்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக சீர்திருத்தப் பணி பாரிய
வேலைத் திட்டமொன்றுக்கு தயாராகும் ஆரம்ப நிலையிலே உள்ளது. வெற்றிகரமான
தஃவாப் பணி அறிஞர்கள், சிந்தனையாளர்கள், துறைசார் நிபுணர்கள், வளமான கல்வி
நிறுவனங்கள், அதிகாரம் போன்ற அடிப்படையான கீழ்க்கட்டுமான வசதிகளை வேண்டி
நிற்கின்றது.
ஆரம்பநிலை தஃவா பாரிய பல சவால்களுக்கு மத்தியிலே
பயணிக்கிறது. இந்நாட்டு முஸ்லிம்களுக்கு பெரிய அறிவியல் பின்னணியோ,
திருப்தி காணத்தக்க அரசியற் பலமோ, முற்போக்கு இஸ்லாமிய சிந்தனைக்கு உரிய
மக்கள் ஆதரவோ அற்ற ஒரு தஃவா சூழ்நிலையில் ஆக்கபூர்வமான தஃவா அடித்தளமொன்றை
உருவாக்கும் பணி பெரும் சவாலாக உள்ளது.இலங்கை நாட்டின் ஸ்தீரமற்ற அரசியற்
சூழலும் தேசிய ரீதியான பின்னடைவுகள், பிரச்சினைகளும் தஃவாவுக்கு
முன்னாலுள்ள இன்னொரு சவாலாகும்.
இந்நாட்டிலே ஏறத்தாழ இருபது இலட்சம் முஸ்லிம்கள் நிலத் தொடர்புகளற்ற
சிதறிய நிலையிலே வாழ்கிறார்கள். இரண்டு வகையான சவால்களை அவர்கள்
எதிர்கொள்கிறார்கள்.
1. குடும்பம், பொருளாதாரம், அரசியல், சுயநிர்ணயம் போன்ற இருப்போடும், சமூக வாழ்வோடும் தொடர்பான பல பிரச்சினைகள்.
2. இஸ்லாத்தை விளங்குதல், பின்பற்றுவதோடு தொடர்பான பிரச்சினைகள்.
சரியான இஸ்லாமிய வாழ்வைக் கடை பிடிப்பதற்கு தடையாக சூழ்ந்து
காணப்படும் ஜாஹிலிய்யத் தீமைகள், மிகப் பரவலாக இஸ்லாம் முஸ்லிம்
சமூகத்துக்குள் பிரச்சாரம் செய்யப்படாமை, இஸ்லாமிய அடிப்படையிலான சரியான
பயிற்றுவிப்புக்கள் பரவலாக வழங்கப்ப டாமை போன்ற காரணிகள் காணப்படுகின்றன.
இஸ்லாம் பிரச்சாரம் செய்யப்படும் பகுதிகளிலும் தஃவாவை முன்வைப்பதிலுள்ள
பலவீனங்கள், அல்லது ஜாஹிலிய்யத் தீமைகளின் கவர்ச்சி என்பவற்றினால்
முஸ்லிம்களுக்கு மத்தியில் போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இலங்கை
முஸ்லிம் சமூகம் பாரம்பரிய இஸ்லாமிய சிந்தனை மீது அளவுக்கதிகம் பற்றுகொண்டு
சரியான இஸ்லாமிய சிந்தனையை நோக்கி நகரும் மனோநிலையை பெறாமையும் தஃவாக்
களம் எதிர்கொள்ளும் இன்னொரு சவாலாகும். எமது முஸ்லிம் சமூகத்தில் இஸ்லாத்தை
குத்பா பிரசங்கம், சாதாரண பயான் நிகழ்ச்சி என்பவற்றிற் கூடாக புரிந்து
கொள்வதில் மாத்திரம் திருப்திகண்டு கஷ்டப்பட்டு, தேடிக் கற்கும் உயர்ந்த
மனோ நிலையை பெற்றிராத ஒரு பிற்போக்கு நிலையை பரவலாக அவதானிக்க முடியும்.
இலங்கை அரசியல் நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், கலை
நிகழ்ச்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பும்,ஆதரவும், பங்கேற்பும் இஸ்லாமிய
ரீதியான செயற்பாடுகளில் காண முடியாத மிக மோசமான துர்ப்பாக்கிய
நிலையுமுள்ளது. இஸ்லாத்தில் ஆர்வம் காட்டுபவர்களும் தன்னுடைய சொந்த
வாழ்வோடு தொடர்புபட்ட சிலபோது தனது வாழ்வை பாதிக்கும் எனக் கருதும்
பகுதிகளில் இஸ்லாமியத் தீர்வைத் தேடிச் செல்லாது தனக்கு சார்பான
பகுதிகளிலும், சமூக விவகாரங்களிலும் அக்கறை காட்டும் பலவீனமான மனிதர்களை
தஃவாக் களத்திலே அவதானிக்க முடியும்.
இத்தகைய யதார்த்தபூர்வமான பண்புகள் கொண்ட இந்நாட்டு முஸ்லிம்
சமூகத்தில் தஃவாப் பணியை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்வது குறித்து
யதார்த்தபூர்வமாக சிந்திக்க வேண்டியுள்ளது. சாத்தியங்களுக்கு அப்பால்
கற்பனா ரீதியாக சிந்திப்பதை விட இந்நாட்டு முஸ்லிம்களின் பண்புகளுக்கும்,
தகுதிகளுக்கும் உள்ளால் நின்று சிந்திப்பதே சிறந்த தீர்வாக அமைய முடியும்.
இந்நாட்டு முஸ்லிம் சமூகம் மூன்று வகையான சிந்தனை அமைப்புக்களை காண்கிறது.
1. பாரம்பரிய இஸ்லாமிய சிந்தனை இஸ்லாத்தின் ஏதாவதொரு பகுதி அல்லது சில
பகுதிகளில் கூடிய கவனம் செலுத்தி தஃவா முறையை மேற்கொள்ளும் அமைப்புக்கள்,
இயக்கங்கள்
2. முற்போக்கான இஸ்லாமிய சிந்தனை சர்வதேச ரீதியாக தோன்றிய நவீன இஸ்லாமிய
இயக்கங்களை பின்பற்றி இஸ்லாமிய சிந்தனையை முன்வைத்து செயற்படும் இஸ்லாமிய
இயக்கங்கள்
3. வழிதவறிய சிந்தனைகள்
தூய இஸ்லாமிய சிந்தனையிலிருந்து விலகிய ஷீஆ,காதியானியா, பஹாஇய்யா போன்ற வழி தவறிய இயக்கங்கள்
மூன்றாவது சிந்தனைப் பிரிவு பாரிய வழி பிறழ்வாக இருப்பினும் அண்மைக்
காலமாக அவற்றின் செல்வாக்கு இலங்கை முஸ்லிம் சமூகத்தில் இடம்பிடித்து
வருகின்றன. இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் மிகப்பாரிய சவாலாக இது
உள்ளது. அதேபோல் பாரம்பரிய சிந்தனையமைப்புக்கள் பெற்றிருக்கும் மக்கள்
பலமும், அதிகார செல்வாக்கும் முற்போக்கு சிந்தனை அமைப்புக்களால் பெற
முடியாத நிலையையும் அவதானிக்க முடிகின்றது. வழிபிறழ்ந்த சிந்தனைகளையும் தூய
இஸ்லாமிய சிந்தனைப் பிரிவாக நோக்கும் பாமர முஸ்லிம் சமூகத்தை அவற்றின்
தீமைகளிலிருந்து காப்பதோடு, பாரம்பரிய சிந்தனையமைப்புக்களின் செல்வாக்கை
மிகைத்த ஒரு நிலையை முற்போக்கு இஸ்லாமிய இயக்கங்கள் அடைவது
மிகப் பாரிய வேலைத்திட்டமாக அமைந் துள்ளது.
நீண்ட காலமாக இத்தகைய பண்பு கொண்ட முஸ்லிம் சமூகத்துக்குள்
தொடர்புபட்டு வரும் முற்போக்கு இஸ்லாமிய இயக்கங்கள் தொடர்ந்தும் அவற்றின்
கொள்கைப் போக்கை இழக்காமல் நிலைப்பதும் பெரும் சவாலாக உள்ளது.
சிந்தனைகளையும் கொள்கை களையும் முன்வைத்து மக்கள் ஆதரவையும்,
செல்வாக்கையும் பெற்றுக் கொள்ள முடியாத போது பொது வேலைகளில் கூடிய கவனம்
செலுத்தி கொள்கை அடையாளத்தை இழக்கும் ஓர் அபாய நிலையும் தோன்றியுள்ளது.
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பண்புகள், எதிர்கொள்ளும் சவால்கள்,
சிந்தனைப் பிரிவுகள் குறித்த சரியான ஆய்வும், சீரிய சிந்தனை, தகுதியுள்ள
செயற்பாட்டாளர்களின் தொழிற்பாடும், எந்நிலையிலும் கொள்கைப் பண்புகளை
இழக்காத தாஈக்களின் உறுதியும், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஆரம்பநிலை
தஃவாவை வெற்றிகரமாக நகர்த்திச் செல்ல அடித்தளமாக அமைய முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக