திங்கள், 20 டிசம்பர், 2010

தென்னிந்தியருடனான இலங்கை முஸ்லிம்களின் உறவு


தென்னிந்தியாவுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவை பின்வரும் 3 தலைப்புக்களில் நோக்கலாம்.
1. இஸ்லாம் இலங்கையில் அறிமுகமான ஆரம்ப காலம்
2. பக்தாத் வீழ்ச்சியின் பின்
3. போர்த்துக்கேயரின் வருகைக்குப் பின்

1. இஸ்லாம் இலங்கையில் அறிமுகமான ஆரம்ப காலம்.
இந்தியாவின் தென் மேற்குக் கரையிலுள்ள கேரளா, இலங்கை போன்ற இடங்களுக்கும் அரபு நாட்டுக்குமிடையே நிலவிய வணிகத் தொடர்பு வரலாற்றுத் தொன்மை வாய்ந்ததாகும். இது குறித்து கலாநிதி சுக்ரி தனது இலங்கை முஸ்லிம்கள் எனும் நூலின் மூன்றாம் பக்கத்தில் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. இற்றைக்கு சுமார் 12 நூற்றாண்டுகள்க்கு முன் அரேபியர் காலி முதல் பேருவளை வரை குடியிருந்து வியாபாரம் செய்தார்கள், இந்நிலையில் தென்னிந்திய நகர்களான நாகூர், காரைக்கால், தொண்டி, காயல்பட்டணம் முதலாம் ஊர்களிலிருந்து முஸ்லிம் மனிதர்கள் வணிக நோக்கில் நம் நாட்டில் வந்து குடியேறினர். காலப்போக்கில் இலங்கையில் வாழ்ந்த அரபு சந்ததியினரையும் தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்தவர்களையும் கொண்டதான வித்தியாசம் காண முடியாத ஒரு கலப்புச் சமூகம் தோற்றம் பெற்றது.வணிகக் கப்பல்கள் தென்னிந்திய மேற்குக் கரையிலுள்ள துறைமுகங்களிளோ அல்லது இலங்கைக் கரையிலுள்ள துறைமுகங்களிலோ தரித்துச் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது. இத்துறைமுகங்களில் வணிகப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தமை, பாதுகாப்பு, உணவு, நீர், கப்பலைப் பழுது பார்க்கும் வசதி என்பன காரணமாயின. கலீபஹ் அப்துல் மலிக்கின் காலத்தில் (கி.பி.7ம் நூற்றாண்டு)  குடியேறிய ஹஷிமிகள் தென்னிந்தியாவிலுள்ள கொங்கன், கன்னியாகுமரி ஆகிய இடங்களிலும் இல்ங்கையில் மாந்தோட்டம், குதிரைமலை, புத்தளம், கொழும்பு, பேருவல, காலி முதலான இடங்களிலும் குடியேறினர். கி.பி.9ம் நூற்றாண்டில் மலபார், மஃபர் பிரதேசங்களிலிருந்து அரபிகள் இலங்கைக்கு வந்தனர். 9ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தென்னிந்திய கரையில் குடியேறிய முஸ்லிம்கள் பாண்டிய மன்னனிடம் செல்வாக்குப் பெற்று வழ்ந்தனர். இக்காலத்தில் இலங்கையுடனான கலாசாரத் தொடர்புகள் அதிகரித்தன. (அமீன்)

2. பக்தாத் வீழ்ச்சியின் பின்னர்
கி.பி. 12,13ம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியத் தமிழ் பேசும் முஸ்லிம்களுடன் நம் நாட்டு முஸ்லிம்களுக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. பக்தாத் வீழ்ச்சியைத் (கி.பி. 1258) தொடர்ந்து தோற்றம் பெற்ற மம்லூக்கிய ஆட்சி போன்றவற்றோடு தொடர்பு பின்னடைந்தது. முஸ்லிம்கள் இஸ்லாமிய உலகில் இருந்தும் துண்டிக்கப்படும் நிலை தோன்றியது. ஆயினும் வணிக ரீதியாக ஏற்பட்ட வளர்ச்சி அவர்களைத் தொடர்பு படுத்தியது. "மஃபர்" என்பது கொரமண்டல் கோஸ்ட் எனப்பட்ட சோழ மண்டலக் கரை. இதற்கு அரபுப் புவியியலாளர்கள் வைத்த பெயர்தான் மஃபர் என்பதாகும். கொல்லம் முதல் நெல்லூர் வரை உள்ள மூன்றரை மைல்கள் உள்ள கரையோரப் பிரதேசம் இவ்வாறு அழைக்கப்பட்டது. மலபார் முடிவதும் மஃபர் தொடங்குவதும் குமரிமுனையிலாகும். மஃபரில் முக்கிய குடியேற்றம் காயல்பட்டனமாகும். மலபாரின் வணிகப் பட்ட்னம் சிரங்கனூர்.இவர்கள் மாப்பிள்ளை எனும்  மலையாள முஸ்லிம்களின் மூதாதையராவர்.

கி.பி.12ம் நூற்றாண்டில் முஸ்லிம் வணிகர்களின் முக்கிய துறைமுகமாக விள்ங்கியது காயல்பட்டினமாகும். காயல் வ்ணிகர்கள் இலங்கையோடு வர்த்தகத் தொடர்பு கொண்டனர். இவர்களது வணிக முயற்சிகள் புத்தளத்திலிருந்து பேருவளை வரையிலான எல்லாத் துறைகளில்ய்ம் இடம்பெற்றன. (இலங்கை முஸ்லிம்கள் - சுக்ரி)

கி.பி.13ம் நூற்றாண்டில் பேருவளை முஸ்லிம் ஒருவர் நுண்ணிய புடவை நெய்யும் கலையை அறிந்திருந்த நெசவாளரை மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கைக்கு அழைத்து வந்தார். அதற்காக மன்னனிடம் அன்பளிப்புக்களைப் பெற்றதோடு செப்புப் பட்டயம் ஒன்றையும் வழங்கினார். (இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் கலாசாரமும் - M.A.M.அமீன்)

3. போர்த்துக்கேயரின் வருகைக்குப் பின்
1518ல் போர்த்துக்கேயர் கொழும்பில் கோட்டை கட்டிய போது முஸ்லிம்கள் எதிர்த்தனர். கள்ளிக்கோட்டை சமோரினது கடற்படை உதவியோடு நெருக்கடி கொடுத்தனர். இதனால் 1524ல் பொர்த்துக்கேயர் கோட்டையை இடித்துச் சென்றனர்.

புவனேகபாகு - போர்த்துக்கேயர் கூட்டை முறியடிக்க கள்ளிக்கோட்டை சமோரினிடம் உதவி கேட்க சில துறைமுகங்களைக் கொடுத்து படையுதவி வழங்கப்பட்டது. கொச்சியிலிருந்து பச்சிமரைக்கார், குஞ்சலி மரைக்கார், அலி இப்றாஹீம் போன்றோர் தலைமையில் கடற்படை அனுப்பப்பட்டது.

கேரளாவில் பொன்னானி எனும் பிரதேசத்தில் வணிகப் பெருங்குடியில் தோன்றிய குஞ்சலிமரைக்கார் சகோதரர்கள் சாமுத்திரி மன்னனிடம் கடற்தளபதிகளாகப் பணிபுரிந்தனர். 1ம் குஞ்சலி மரைக்கார் போர்த்துக்கேயரின் தோல்வியிலிருந்து விடுதலை பெறுவதற்காக மன்னன் மானவிக்ரமன் அவரிடம் வேண்டிக்கொண்டதற்கிணங்க, 1528ல் பர்கூர் எனுமிடத்தில் போரிட்டு வெற்றி
 பெற்றார்.

போர்த்துக்கேயர் 1538ல் மீண்டும் போரிட்டபோது கோவாவிலிருந்து (போர்த்துக்கேயர்) வந்தவர்களை கொழும்பில் சந்தித்தார். அவ்வேளை குண்டு பாய்ந்து ஷஹீதானார்.

3ம் குஞ்சலி மரைக்காரை போர்த்துக்கேயர் கோவாவில் சிறையிட்டனர். கிறிஸ்தவராக மாறினால் அல்லது போர்த்துக்கேயருக்கெதிராக புரட்சி செய்வதில்லை என்றால் உயிர்ப்பிச்சை அளிப்பதாக அவரிடம் தூதனுப்பினர். நான் வீரனாகச் சாக விரும்புகிறேன். தயவு செய்து என்னைக் கோழையாக்க முயலாதீர்கள் என விடையளித்தார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. (இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியர் பங்கு - யு.சேக் தாவூத்)

17ம் நூற்றாண்டில் தென்னிந்திய துறைமுகங்களுக்கும் இலங்கைக்குமிடயில் கணிசமான வணிகத் தொடர்புகள் காணப்பட்டன.

1626ல் போர்த்துக்கேயர் தமது பிரதேசங்களிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய போது சிலர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல சிலர் கண்டி இராச்சியத்துக்குச் சென்றனர்.

போர்த்துக்கேயர் காலத்திலும் வருடந்தோறும் சுமார் 500-600 பேர் வரை தென்னிந்தியாவில் குடியேறியதாக கெய்ரோஸ் குறிப்பிடுகிறார்.

தென்னிந்திய - இலங்கை முஸ்லிம் தொடர்பின் விளைவுகள்

மஃபரில் காணப்பட்ட முஸ்லிம் குடியேற்றங்களில் அரேபிய - இந்திய (சுதேசிகள்) மக்களிடம் வித்தியாசமான சமூக கலாசாரத் தனித்துவம் காணப்பட்டது. இவர்கள் இலங்கையில் குடியேறியபோது அதுவரை நம் நாட்டிலிருந்த அரபு-இஸ்லாமியத் தன்மை இழக்கப்பட்டு இந்தோ - அரேபியத் தன்மையைப் ( South Indianized Islam ) பெற்றது.

இலங்கை முஸ்லிம் குடியேற்றங்களில் தென்னிந்திய முஸ்லிம் சமூகத்திலிருந்து வந்து குடியேறியவர்கள் கணிசமான அளவில் இருந்தனர். அவர்கள் இங்கு தென்னிந்திய முஸ்லிம்  வணிகர்களிடையே அரபு வணிகர்களிடம் செல்வாக்குப் பெற்றவர்களும் இருந்தனர்.ஆட்சியாளர்களின் தேவைகளை வழங்கவும், நாட்டின் உற்பத்திப் பொருட்களுக்கு நல்ல சந்தை விலைகளைப் பெற்றுக் கொடுக்கவும்  அவர்கள் பலம் பெற்றிருந்தனர். இதனால் அவர்களது அரச அதிகாரத்தைப் பயன்படுத்த முயற்சிக்கவில்லை. இதனால் தன்னைத் தானே  பரிபாலித்து சொந்தச் சட்டங்களையும் மரபுகளையும் பேணிக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. இந்நடைமுறையை இலங்கை முஸ்லிம் சமூகம் சற்றுத் தளர்ந்த நிலையில் பின்பற்றியது. (இலங்கை முஸ்லிம்கள் - சுக்ரி)

இந்த லெப்பைமார் பெரும்பாலும் தென்னிந்தியாவிலிருந்து வந்த தகுதியற்ற சனங்கள். இவர்களுக்கு குர்ஆன் ஓதிக்கொடுக்க மட்டுமே தெரியுமல்லாமல் வேறு கல்விகளைப் புகட்டத் தெரியாது. அரபுப் பாஷையைப் படித்துக் கொடுப்பதற்கு இந்த லெப்பைமார் நேர்மையுள்ளவர்களல்லர். இந்த லெப்பைமார் திருத்தத்தின் வாடை வீசப்பெறாதவர்களாகவும் திருத்தம் ஏதென்று அறியாதவர்க்ளாகவும் இருப்பதால் இவர்களுக்குக் கீழ் ஓதுகிற எமது பிள்ளைகள் திருந்த மாட்டார்கள். (ஐ.எல்.எம்.அப்துல் அஸீஸ்)

அரபு வணிகர்களின் வழிவந்த கலப்பு இனத்தவரை இந்தியாவின் மேற்குக் கரையில் (மலபார்) மாப்பிள்ளை என்றும்  கிழக்குக்கரையில் (மஃபர்) லெப்பை என்றும்  அழைப்பதாக  காயல் ஹாபிஸ் எம். கே.செய்யித் அஹ்மத் முஸ்லிம் தமிழ்ப் பாரம்பரியம் எனும் நூலில் குறிப்பிடுகிறார். இலங்கையில் குடியேறிய பரம்பரையினரே லெப்பை எனப்படுவர்.

கொழும்பில் மரைக்கார் குழு, லெப்பைக் குழு என இரு குழுவினர் இருந்தனர். (முஸ்லிம் நேசன் 26/04/1885)

இலங்கை முஸ்லிம்களுக்கும் தென்னிந்திய முஸ்லிம்களுக்குமிடையிலான வணிக, கலாசார, பண்பாட்டுத் தொடர்பின் மூலம் இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் அறபுத் தமிழ் பரவி இலங்கை முஸ்லிம்களையும் இந்திய முஸ்லிம்களையும் இணைக்கும் கலாசார பாலமாக விளங்கியது.தென்னிந்திய முஸ்லிம் அறிஞர்களின் நூல்கள் இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரபல்யமடைந்தன.
உதாரணம்:
1. மாப்பிள்ளை லெப்பை ஆலிமின் மகானி, பத்ஹுத்தய்யான், இப்னு நபாதாவின் குத்பா மொழி பெயர்ப்பு தலைப்பாத்திஹா;
2. பேருவலை ஷெய்கு முஸ்தஃபா: பத்ஹுர்-ரஹ்மான் பி தர்ஜமதி தஃப்ஸீரில் குரான், மீஸான் மாலை
3. கஸாவத்தை ஆலிம் அப்பா: கஸீததுல்    முரப்பஹா, கஸீததுல் மகிய்யா, கஸீததுல் மதனிய்யா
4. ஸல்தீன் என்பவர் மலாய் மொழியில் மட்டுமன்றி அரபு மொழியிலும் அக்காலப் பிரிவில் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் வழக்கிலிருந்த அரபுத் தமிழிலும் புலமை பெற்றிருந்தார். முஹ்யித்தீன் முனாஜாத் எனும் அரபுத் தமிழ் நூலை மலாய் மொழியில் பெயர்த்தார். 1900 முதல் உண்மை எனும் பெயரில் அரபுத் தமிழ் பத்திரிகை ஒன்றையும்  வெளியிட்டார்.

காதிரிய்யா, ஷாதுலிய்யா, ரிஃபாய்ய்யா, நக்ஷபந்திய்யா முதலாம்  தரீக்காக்கள் தென்னிந்திய முஸ்லிம்களோடு ஏற்பட்டௌறவின் பயனாகவே நம் நட்டில் அறிமுகம் பெற்றன. மௌலூத், கந்தூரி, கத்தம், பாத்திஹா, ராத்தீபு.சந்தனக்கூடு, சாமத்திய / ஸுன்னத் சடங்கு, தாலி, ரொக்கம், சீதனம், மை வெளிச்சம், பால் (முகூர்த்தம்) பார்த்தல் முதலாம் விடயங்கள் நம் நாட்டு முஸ்லிம்களின் வாழ்வியல் அம்சங்களோடு ஒன்றறக் கலந்தன.

பிற்காலத்தில் தப்லீக், ஜமாஅதே இஸ்லாமி போன்ற இஸ்லாமிய இயக்கங்கள் தோற்றம் பெறவும், தௌஹீத் இயக்கப் பிரசாரகர்கள் இங்கு வருகை தரவும் இவ்வுறவு காரணமாக அமைந்தது. இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தாக்கம் காரணமாக இங்கு இலங்கை முஸ்லிம் லீக் தோற்றம் பெற்றது. இலங்கைக்கு வந்த இந்திய முஸ்லிம்கள் தமது வணிக மையங்களுக்கு அருகில் மஸ்ஜித்களை நிறுவினர். இது காலப்போக்கில் இலங்கையின் வணிக நகர்களிலெல்லாம் மஸ்ஜித்களும் ஸாவியாக்களும் தக்கியாக்களும் தர்ஹாக்களும் தோன்றக் காரணமாக அமைந்தது.

தென்னிந்திய மத்ரஸாக்களில் இலங்கை மாணவர்கள் கற்றனர். (பாக்கவி, நூரி, ஜமாலி) இலங்கையில் மத்ரஸாக்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றில் தென்னிந்திய  முடர்ரிஸ்கள் கற்பித்தனர். தென்னிந்திய மத்ரஸாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இஸ்லாமிய தமிழிலக்கியம் ஆரம்பமானது.

மேலதிக வாசிப்புக்கு:
1. இலங்கை முஸ்லிம்கள், தொன்மைக்கான வரலாற்றுப் பாதை (எம்.ஏ.எம்.சுக்ரி)
2. இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் கலாசாரமும் (எம்.ஐ.எம்.அமீன்)
3. பர்பரீன் (எம்.சீ.எம்.ஸாஹிர்)
4. கலாநிதி டி.பி.ஜாயா (எஸ்.எம்.கமால்தீன்)
5. இலங்கைச் சோனகர் இன வரலாறு (ஐ.எல்.எம்.ஏ.அஸீஸ்)
6. ஸர் ராசிக் பரீட் - வழியும் நடையும் (ஸயீத் எம்.இர்ஷாட்)
*13ம் தர மாணவர்களுக்கான புதிய பாடத்திட்ட அறிமுகக் கருத்தரங்கில் எம்.எச்.எம்.நாளிர் (B.A.) அவர்கள் தொகுத்து வழங்கிய அடிக்குறிப்பிலிருந்து

இவ்வுறவினால் விளைந்த சாதகங்கள்
1. முஸ்லிம்கள் தமது கலாசாரத்தைத் தொடர்ந்தும் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக அமைந்தமை
2. தமிழ் மொழியிலும் அரபுத் தமிழிலும் இஸ்லாமிய இலக்கியங்கள் கிடைத்தன.
   Eg: * தப்ஸீர்கள் (மகானீ - மாப்பிள்ளை லெப்பை ஆலிம் )
         * ஹதீஸ் நூல்கள்
         * பிக்ஹ் நூல்கள்
         * ஒழுக்கரீதியான நூல்கள் (அதபு மாலை, பெண் புத்தி மாலை, தலைப்பாத்திஹா)
3. அரபு மொழியிலான சமய நூல்கள் பெற வழி கிடைத்தமை
4. இந்திய மத்ரஸாக்களில் சேர்ந்து மார்க்கக் கல்வி கற்கச் சந்தர்ப்பம் கிடைத்தமை
5. சமயச் சடங்குகளுக்குத் தலைமை தலைமை தாங்க உள்ளூரில் ஆலிம்கள் கிடைக்காதபோது தென்னிந்தியாவிலிருந்து ஆலிம்களை வரவழைத்துச் செய்து கொள்ள வாய்ப்புக் கிடத்தமை
6. இந்திய வியாபாரிகள் / ஆலிம்கள் மஸ்ஜித்களையும் மத்ரஸாக்களையும் நிர்மாணித்தமை ( வெலிகம பாரி, காலி இப்ராஹீமிய்யா, புத்தளம் காஸிமிய்யா, தக்கியாக்கள், ஸாவியாக்கள் )
7. தமிழ் நூல்களை இந்தியாவில் பிரசுரிக்க வாய்ப்புக் கிடைத்தமையும் அவற்றை இறக்குமதி செய்ய இலகுவாய் அமைந்தமையும்
8.வியாபார, அரசியல் தொடர்பும் விளைவாக உள் நாட்டுச் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் பிறந்தமையும் ( முஸ்லிம் லீக் என்ற பெயர் )
9. கிலாபத் மற்றும் கல்வி மறுமலர்ச்சி தொடர்பான  சிந்தனைக்கு வித்திட்டமை (Sir, ஸெய்யித் அஹ்மத் கான்  (அலிகார் ) போன்ற இந்திய அறிஞர்களது சீர்திருத்த முயற்சிகளின் தாக்கம் சித்தி லெப்பை போன்ற அறிஞர்களிலும் உணரப்பட்டமை, ஸாஹிராக் கலூரியின் தோற்றத்தில் அலிகாரின் பங்கு )
10. இலங்கையில் சீர்திருத்த இயக்கங்களின் அறிமுகத்துக்கு வழி செய்தமை. (கேரளாவைச் சேர்ந்த பீடித் தொழிலாளர்கள் மூலம் அவர்கள் குடியிருந்த கொழும்பு டாம் வீதியில் ஜமாஅதே இஸ்லாமி அறிமுகமாகியது.

தென்னிந்திய உறவினால் ஏற்பட்ட பாதகங்கள்

1. அரபு மொழியின் முக்கியத்துவம் குறைந்தமை.
2. அரேபியருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டமை.
3. இஸ்லாம் என்ற பெயரில் தென்னிந்தியமயமாக்கப்பட்ட இஸ்லாமும் இலக்கியங்களும் நம் நாட்டு முஸ்லிம்களுக்குக் கிடைத்தமை.  Eg: கிஸ்ஸாக்கள் - தப்ஸீர் உரூஹுல் பயான், மஸாலாக்கள் - நூரு மஸாலா, முனாஜாத்துகள் - இரகசியமாக உரையாடுதல் / இறைவன் மீது புகழ் பாக்கள் பாடி இறைஞ்சுதல், பிள்ளைத் தமிழ்.
4. பிரதேச வாரியாக இஸ்லாமிய சிந்தனை கிடைத்தமையும் தென்னிந்திய கலாசாரத்தைத் தழுவிய சிந்தனைகள் அறிமுகமானமையும். (குறிப்பிட்ட சில சமய நூல்கள், குறித்த சில ஆசிரியர்களின், மத்ரஸாக்களின் கருத்துக்கள் மட்டும் இஸ்லாமாகக் கருதப்பட்டமை. Eg: சித்திலெப்பையினதும் மாப்பிள்ளை லெப்பையினதும் இரு வேறுபட்ட வழிமுறைகளைக் கொண்ட சிந்தனைகள்.
5.  இந்தியாவில் இருந்து ஆலிம்கள் வந்ததால் இலங்கையில் இருந்து கற்கச் செல்லத் தேவை இல்லாது போனமையும், தரக்குறைவான ஆலிம்களால் இஸ்லாம் ச்ரிவர விள்க்கப்ப்டாமையும். இக்காலப் பிரிவில் இலங்கையில் இஸ்லாத்தைக் கற்பிக்க ஆலிம்கள் தேவையென பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது. தொப்பி அணிகின்ற முஸ்லிமாகவும் முறையாக கோழி அறுக்கத் தெரிந்திருத்தல் வேண்டும் போன்ற அம்சங்களே அந்த ஆலிம்களுக்கான தகைமைகளாகக் கருதப்பட்டன. இவர்கள் தமது வயிற்றுப் பிழைப்புக்காகத் தென்னிந்திய இந்துக்களிடம் காணப்பட்ட கலாசார அம்சங்களுக்கு இணையான விடயங்களை நம் நாட்டு முஸ்லிம்களிடையே அறிமுகப்படுத்தினர். Eg: கந்தூரி, கத்தம் (திதி/திவசம்), பாதிஹா (தலைப் பாதிஹா, பாம்புப் பாதிஹா), மௌலிது, ராதிப், நார்ஷா, சுன்னத்து, சாமத்தியச் சடங்குகள், 40ம் நாளில் பிள்ளைக்குப் பெயர் சூட்டு விழா.
6. சமய, திருமண சடங்குகளில் தென்னிந்திய கலாசாரம் ஊடுருவியமை. (ரொக்கம், சீதனம், தாலி, நாள் நேரம் பார்த்தல், இசை நிகழ்வுகள்)
7. மஸ்ஜித், மத்ரஸாக்களில் தென்னிந்தியரின் ஆதிக்கம் ஏற்பட்டமை.
8. தென்னிந்திய தமிழ், அரபுத் தமிழ் இலக்கியங்கள் திணிக்கப்பட்டமை.
9. தவறான, அகீதாவுக்கு முரணான அத்வைத சிந்தனைகளோடு கூடிய வழிகெட்ட ஸூபித்துவ ஒழுங்குகளுக்கான அமைப்புக்கள் தரீகாக்கள் என்ற பெயரில் தோற்றம் பெற்றமை.
  ,இவ்வாறான தவறான சிந்தனைகளைத் தவிர்த்து மேற்கொள்ளப்படும் தரீகா நடவடிக்கைகள் இஸ்லாமிய நடைமுறைகளுக்கு என்றும் முரணாக அமைவதில்லை.
10. இலங்கை முஸ்லிம்களின்  வளங்கள் சுரண்டப்பட்டமை. (இஸ்லாத்தின் பெயரால் தவறான சடங்கு சம்பிரதாயங்கள், பிரச்சாரங்கள் மூலம்)

Cont: e-mal- mbshaishoumaz@gmail.com

1 கருத்து: