புதன், 19 ஜனவரி, 2011

அரபு நாடும் ஜாஹிலிய்யாக்காலமும்

# அரேபியாவின் புவியியல் அமைவு

அரபு நாடு ஆசியாக் கண்டத்தின் தென்மேற்கே அமைந்துள்ள ஒரு தீபகற்பமாகும். இது அரபு மொழியில் "ஜஸீரதுல் அரப்"  - அரேபியத் தீவகற்பம் (Arabian Peninsula) என அழைக்கப்படுகிறது. அப்போதைய அதன் எல்லைகள் பின்வரும் வகையில் அமைந்திருந்தன.
  1. வடக்கு எல்லை   -   ஸிரியாப் பாலைவனமும் இராக்கின் ஒரு பகுதியும்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                
  2. தெற்கு எல்லை   -   இந்து சமுத்திரமும் அரபுக்கடலும்
  3. கிழக்கு எல்லை   -   பாரசீக வளைகுடா, யூப்ரடீஸ், தைகிரீஸ் நதிகள்
  4. மேற்கு எல்லை   -  செங்கடல், ஸினாய்ப் பாலைவனம்

அரபு நாடு புவியியல், பௌதீக அடிப்படையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததோர் இடத்தில் அமையப்பெற்றுள்ளது. ஒரு பக்கம் பெரியதொரு பாலை நிலத்தாலும் ஏனைய மூன்று பக்கங்கள் கடலாலும் சூழப்பட்டுக் காணப்படுகின்றது. இக்குடா நாட்டுக்கு மிக அண்மையில் பாரசீகம், Rome போன்ற இரு சாம்ராஜ்யங்கள் காணப்பட்டன.ஆயினும் அரேபியாவின் வளம் குன்றிய புவியியல் நிலை காரணமாக அந்நிய அரசுகள் அதன்மீது ஆதிக்கம் செலுத்துவதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.

அரேபியா பிரதான மூன்று கண்டங்களை இணைக்குமொரு மையமாகவும் விளங்குகிறது. அதன் வட மேற்குத் திசையால் ஆபிரிக்காக் கண்டத்தினுள் பிரவேசிக்கக்கூடியதாகவும், வட கிழக்குத் திசையால் ஐரோப்பாக் கண்டத்தினுள் பிரவேசிக்கக் கூடியதாகவும் இருக்க கிழக்குத் திசை ஆசியப் பிரதேசங்களைத் தொடர்பு படுத்துகின்றது. மட்டுமன்றி முப்பெரும் கண்டங்களோடு கடல் மார்க்கமாகவும் அது இணைக்கப்படுகின்றது. இதனால் அரேபியாவின் வடக்கு எல்லையைத் தவிர்ந்த ஏனைய கரையோரப்பகுதிகள் அனைத்தும் மக்கள் தொடர்புக்கு வசதியாகக் காணப்பட்டன.

புவியியலும் வரலாறும் ஒன்றுடனொன்று தொடர்புடையது என்ற வகையில் உலகளாவிய ரீதியில் 'ரிஸாலத்' எனும் இறைத் தூது அருளப்படுவதற்குரிய இடமாக அரபு நாடு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அதன் இவ்வாறான புவியியல் அமைவும் முக்கியமான ஒரு காரணியாக அமைந்தது. அரேபியாவின் மிகப் பெரும் பகுதி பாலை நிலமாகும். இதனாலேயே அரேபியரின் பொருளாதாரத்திலும் பாலைவனத்தின் செல்வாக்கு மேலோங்கி நிற்கின்றது.

மாகாணங்கள்
அக்கால அரேபியா ஐந்து பெரும் மாகாணங்களைக் கொண்டதாக அமைந்திருந்தது. அவற்றைப் பின்வருமாறு நோக்கலாம்.

1. ஹிஜாஸ் மாகாணம்
பழம் பெரும் பெருமைவாய்ந்த இப்பிரதேசம் சீதோஷ்ண நிலை, நிலத்தினியல்பு, மக்களியல்பு என்பவற்றைப் பொறுத்துப் பல பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அரபு நாட்டின் மலைப்பாங்கான இப்பிரதேசம் அரேபியருக்கு மட்டுமன்றி அனைத்துலக முஸ்லிம்களுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இஸ்லாம் உதயமான இப்பிரதேசத்தில்தான் புகழ் மிக்க மக்கா, மதீனா, தாயிஃப்  முதலாம் நகர்கள் அமைந்துள்ளன. இங்கு பெரு நதிகள் இல்லையாயினும் ஆங்காங்கே இயற்கையான நீரூற்றுக்கள் தோன்றி ஓடிக்கொண்டிருக்கின்றன. இம்மாகாணத்திற்கு மேற்கே செங்கடலும் வடக்கே ஸிரியாப் பாலைவனமும் தெற்கே அஸீர் என்ற பகுதியும் அமைந்துள்ளன.

2. நஜ்த் மாகாணம்
அரேபியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இப்பகுதி நில, நீர் வளங்களைக் கொண்ட செழிப்பு மிக்க ஒரு பிரதேசமாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 40000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இப்பகுதியின் மூன்று எல்லைகளில் மணல் வெளிகளே அமைந்துள்ளன. இதன் வட புலத்தில் ஸிரியாப் பாலைவனமும் வடகிழக்கில் இராக் பாலைவனமும் காணப்படுகின்றன.கிழக்கே ஹிஜாஸின் மலைத் தொடரிலிருந்து பாரசீகக் குடாவிலுள்ள பஹ்ரைன், அல்-அஹ்ஸ் பாஸ்லைவனம் வரை நீண்டிருக்கும் இம்மாகாணம் பாலைவனங்களும் மலைக்கணவாய்களும் நிறைந்த பீடபூமியாகும். இடையிடையே பரவலாகக் காணப்படும் பாலைவனச் சோலைகள் பாதுகாப்பிடங்களைப் போன்று அமைந்துள்ளன. இங்குதான் யமாமா, ரியாழ் -Riyadh போன்ற நகரங்கள் கணப்படுகின்றன. சமகால ஸஊதி-அரேபியாவின் தலை நகராக இந்த ரியாழ் நகரமே இருந்து வருகின்றது.

3. உம்மான் மாகாணம்
இது இந்து சமுத்திரத்தின் கிளையான உம்மான் குடாக் கரையில் அமைந்துள்ளது. இதற்குக் கிழக்கே உம்மான் குடாவும் வடக்கே பஹ்ரைனும் மேற்கே தஹ்னாப் பாலைவனமும் தெற்கே ஹழ்ரமௌத் மாகாணமும் எல்லைகளாய் அமைந்துள்ளன. மஸ்கட் என்பது இம்மாகாணத்தின் தலை நகராகும். இப்பகுதியின் கடற்கரைப் பிரதேசம் செழிப்பான நிலவளம் பொருந்தியது. தற்காலத்தில் தனி ஒரு நாடாக விளங்கும் இப்பிரதேசத்தில் மலைகளும் குன்றுகளும் நிறைந்து காணப்படுகின்றன. மலைகளில் இரும்பு, செம்பு, ஈயம், கந்தகம் முதலாம் தாதுப்பொருட்களும் சந்தனம், அகில் போன்ற வாசனைத் திரவியங்களும் பெருமளவில் உற்பத்தியாகின்றன.

4. ஹழ்ரமௌத் மாகாணம்
இது யெமன் மாகாணத்தின் கிழக்கேயுள்ள பகுதியாகும். முன்பு இப்பிரதேசம் யெமனின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. இம்மாகாணத்திற்குத் தெற்கிலும் கிழக்கிலும் இந்து சமுத்திரமும் மேற்கில் யெமனும் வடக்கில் உம்மானும் எல்லைகளாக அமைந்துள்ளன. தேன் அதிகம் விளையும் இம்மாகாணத்தின் பெரும்பகுதி மலைப்பாங்கான பகுதியாகவும் சிறுபகுதி மணற் பாங்கானதாகவும் காணப்படுகின்றன.

5. யெமன் மாகாணம்
அரேபியத் தீபகற்பத்தின் தென்-மேற்குப் பகுதியில் இம்மாகாணம் அமைந்துள்ளது. சில சமயங்களில் இதனயும் ஹிஜாஸையும் சேர்த்து திஹாமா என்று அழைப்பர். செல்வச் செழிப்புக்கும் வியாபாரச் சிறப்புக்கும் பேர் பெற்ற இப்பிரதேசத்தின் தெற்கே இந்து சமுத்திரமும் மேற்கே செங்கடலும் வடக்கே ஹிஜாஸ், நஜ்த் மாகாணங்களும் கிழக்கே ஹழ்ரமௌத் மாகாணமும் எல்லைகளாக அமைந்துள்ளன. இங்கு விளையும் தங்கம், செம்பு, சாம்பிரானி முதலாம் செல்வப் பொருட்கள் வெளி நாட்டவரைக் கவர்ந்தன. இதனால் முற்காலத்தில் வெளி-நாடுகளிலிருந்து  பெருந்தொகையான வர்த்தகர்கள் அரேபியாவுக்கு வருகை தந்தனர். இன்றும் இப்பகுதி அரேபியாவின் மத்திய செல்வ நிலையமாகக் கருதப்படுகிறது. சிற்றாறுகளும் ஓடைகளும் இங்கு பெருமளவில் காணப்படுகின்றன. ஏடன் முதலாம் நகர்களைக் கொண்டுள்ள இம்மாகாணத்தின் தலை-நகராக அன்று முதல் இன்று வரை ஸன்-ஆ விளங்கி வருகின்றது.

அரபுத் தீபகற்பத்தை புவியியல் அடிப்படையில் இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்து நோக்கலாம்.
1. வட அரேபியா
2. தென் அரேபியா

அரேபியாவின் பூகோள அமைப்பில் ஹிஜாஸ் அதன் வட பகுதியில் இருக்கும் ஒரு மாகாணமாகும். இம்மாகாணத்தில் திஹாமா என்பது ஒரு மாவட்டமாகும். மக்கா, மதீனா ஆகிய பிரதான நகரங்கள் இங்குதான் அமைந்துள்ளன. பூமியில் முதன் முதலில் தோன்றியது கஃபாவும் அது அமைந்திருக்கும் மக்கா நகருமாகும். இதனாலேயே அந்நகருக்கு உம்முல் குரா  (நகரங்களின் தாய்) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இஸ்லாத்துக்கு முன்பிருந்தே பிரசித்தி பெற்ற கீழைத்தேய உரோம சாம்ராஜ்யத்துக்கும் தென்-கிழக்காசிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற வணிகப்பாதையின் முக்கிய தங்குமிடங்களில் ஒன்றாக இருந்து வந்தது.

# ஜஹிலிய்யாக் காலம் (Age of ignorance / darkness)
ஜாஹிலிய்யா எனும் பதம் ஜஹ்ல் எனும் வேர்ச் சொல்லில் இருந்து தோன்றியதாகும். இப்பதம் அறியாமை, அடக்கமின்மை, மடமை, சத்தியத்தை அலட்சியம் செய்தல், வம்புத்தனம் புரிதல், அடாவடித்தனம் செய்தல், காட்டுமிராண்டித்தனம், அநாகரிகத் தனம் முதலாம் கருத்துக்களைத் தன்னகத்தே கொண்ட, விரிந்த கருத்தை வேண்டி நிற்கும் சொற்செறிவு மிக்க ஒரு சொல்லாகும். கிறிஸ்தவ மதத்தின் தோற்றத்திற்கும் இஸ்லாத்தின் தோற்றத்திற்கும் இடைப்பட்ட காலப்பிரிவில் வாழ்ந்த மக்கள் இத்தனை பண்புகளுக்கும் இலக்கணமாக வாழ்ந்ததால் இக்காலப்பிரிவு இருண்ட யுகம் எனவும் அறியாமைக் காலம் எனவும் அரபியில் ஜாஹிலிய்யாக் காலம் எனவும் அழைக்கப்படுகிறது.

இஸ்லாத்துக்கு முற்பட்ட காலத்தில் குறிப்பாக நபி ஈஸா (அலை) அவர்களின் வருகைக்குப் பின்னர் அரேபியரிடையே இறைத்தூதர்களின் வழிகாட்டல்கள் இல்லாமையால் அந்த மக்களின் வாழ்வியல் அம்சங்கள் ஜஹ்ல் நிறைந்ததாக அமைந்திருந்தன. இதனால்தான் இக்காலத்தை  ஜாஹிலிய்யாக் காலம் என வரலாற்றாசிரியர்கள் அழைக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் வழங்கப்படுவதற்கு முற்பட்ட ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு காலம் ஜாஹிலிய்யாக் காலமாகும். "நபியவர்கள் பிறந்தபோதும் அதற்கு சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரும் நிலவிய காலப் பகுதியை இது குறிக்கிறது" என வரலாற்றாசிரியர் Hitti தனது History of the Arabs எனும் நூலில் ஜாஹிலிய்யாக் காலத்தை வரையறை செய்கிறார்.

இக்காலப் பிரிவில் தொழினுட்பம், கட்டடக் கலை என்பன ஓரளவு விருத்தியுற்றிருந்தன. மொழிப்புலமையும் கவிதைத் தேர்ச்சியும் வியந்து பாராட்டத்தக்களவு வளர்ச்சி கண்டிருந்தன. ஆகவே "ஜாஹிலிய்யாக் காலம்" என்பதை அறியாமைக் காலம் அல்லது இருண்ட காலம் எனும் பொருள்களில் மட்டும் பயன்படுத்துவது பிழையானதாகவே அமையும். மாற்றமாக மேற்குறித்த அதன் பரந்த பொருளில் அது பயன்படுத்தப்படுவதே பொருத்தமானதாகும்.

ஜாஹிலிய்யாக் காலத்தில் உயர் பண்பாடுகளோ சீரிய சிந்தனைகளோ விழுமிய வாழ்க்கைப் போக்குகளோ இல்லாது அநாகரிகப் பழக்க வழக்கங்களில் மக்கள் மூழ்கியிருந்தமையால், " மனிதர்களின் கரங்கள் தேடிக்கொண்ட தீய செயல்கள் காரணமாக தரையிலும் கடலிலும் குழப்பங்கள் தோன்றலாயிற்று." (30 : 01) என அல்-குர்ஆன் குறிப்பிடுவது இக்காலப் பகுதிக்கு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.

# ஜாஹிலிய்யாக் காலத்து சமூக நிலை
சுமார் 150 000 மக்கள் தொகையைக் கொண்டிருந்த ஜாஹிலிய்யாக் கால சமூகத்தை இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்து நோக்கலாம்.
1. பதவிகள் எனப்பட்ட நாடோடிகள்
2. ஹழரிகள் எனப்பட்ட நகர்ப்புறவாசிகள்

நாடோடிகள் (பதவிகள்)
பொருளாதாரத்திலும் நாகரிகத்திலும் பின்தங்கியிருந்த இவர்களே அரேபியாவில் அதிக தொகையினராக இருந்தனர். இவர்களுக்கு வசிப்பதற்கென நிரந்தரமான ஓரிடம் இருக்கவில்லை.  அடிக்கடி இடம் விட்டு இடம் மாறிய இவர்களின் பிரதான தொழில் மந்தை வளர்ப்பாகும்.  நீரூற்றுக்காகவும் பசுமையான புற்றரைக்காகவும் இடம் பெயர்ந்தனர். திடகாத்திரமான தேகத்தையுடைய  இவர்கள் சில வேளைகளில் வழிப்பறியிலும் ஈடுபட்டனர். கல்வியறிவில்லாத இவர்களுக்கு நாகரிகம் பற்றிய சிந்தனையென்பது  கிஞ்சிற்றும் இருக்கவில்லை.

பதவிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். குழுக்களை "கபீலா" என்றும் அவற்றின் தலைவர்களை "ஷெய்க்" என்றும் அழைத்தனர். வயது முதிர்ந்தோராகவும் சமூக அந்தஸ்துப் பெற்றோராகவும் தரும சிந்தை, வீரம் போன்ற சிறந்த ஆளுமையுடையோராகவும் இருந்தவர்களில் இருந்தே ஷெய்குகள் தெரிவு செய்யப்பட்டனர். ஒவ்வொரு குழுவும் தத்தம் குழுவின் கௌரவத்தைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்தியது. இதனால், அவர்களிடையே அடிக்கடி சண்டைகளும் போர்களும் ஏற்பட்டன. ஒரு குழு பிறிதொரு குழுவின் உடைமைகளைக் கொள்ளையடிப்பதும் அவர்களோடு சண்டையிடுவதும்  வழக்கமான நடவடிக்கைகளாக அமைந்திருந்தன.

நகர்ப்புற வாசிகள் (ஹழரிகள்)
ஹழரிகள் நீர், நில வளமுள்ள பிரதேசங்களில் வசித்து வந்தோராவர். இவர்கள் நிலையான வீடுகளில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் 'பதவி'களை விட பொருளாதாரத்திலும் கல்வித் துறையிலும் நாகரிகத்திலும் முன்னேற்ற்மடைந்து காணப்பட்டனர். ஆயினும் நகர்ப்புற வாசிகளிடமும் ஜாஹிலிய்யாப் பண்புகள் காணப்பட்டன. நகர்ப்புற வாசிகள் 'யெமன்', 'ஹழ்ரமவ்த்' பகுதிகளிலேயே அதிகமாக வசித்து வந்தனர். ஹிஜாஸில் பெரும் பகுதி நாடோடிகள் வதியுமிடமாக இருந்தது. இருப்பினும் ஹிஜாஸிலும் ஆங்காங்கே நகர்ப்புற வாசிகள் வசித்து வந்தனர். மக்கா ஹழரிகளைக் கொண்ட நகரமாக விளங்கிற்று.

அரேபிய சமூகத்தை பொருளாதார அடிப்படையில் 4 வகைப்படுத்தலாம்.
1. பிரபுத்துவ நிலையில் இருந்தோர்
2. மத்திய தர வகுப்பினர்
3. கூலி வேலையாட்கள்
4. அடிமைகள்

பிரபுத்துவ நிலையில் காணப்பட்டோர் நிலச் சுவாந்தர்கள் ஆவர். இவர்கள், 'ஹழரி'கள். தமது பணிகளை அடிமைகளையும் கூலியாட்களையும் கொண்டு நிறைவேற்றினர்.

பொருளாதாரத்தில் நடு நிலையில் காணப்பட்டோர் மத்திய தர வகுப்பினராவர்.

கூலியாட்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்கள். கூலி வேலை செய்தே தமது அன்றாட ஜீவனோபாயத்தைத் தேடிக்கொள்வர்.

அடிமைகள் தமக்கென எதுவித சொத்துக்களும் இல்லாதவர்கள். இவர்களது உழைப்பு முழுதும் எசமானருக்கே உரியது.

இவ்வாறான பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த சமூகத்தில் தோன்றிய இஸ்லாம், இத்தகைய பாரிய வேற்றுமைகளைக் களைந்து பொருளாதாரத்தில் ஆரோக்கியமான நிலையை ஏற்படுத்துவதற்காக பெரும்பாடுபட்டது.

சமூக அந்தஸ்தைக் கருத்திற்கொண்டு அரேபிய சமூகம் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1. சுதந்திரமானவர்
2. அடிமைகள்
3. அடிமையாக இருந்து விடுதலை செய்யப்பட்டோர்

சுதந்திரமானோர் சமூகத்தில் உயர் தர வர்க்கத்தினராவர். இவர்களிலிருந்தே 'ஷெய்கு'கள் தெரிவுசெய்யப்படுவர். யுத்தங்களின் போது கைது செய்தல், சந்தையில் கொள்வனவு செய்தல் போன்ற காரணிகளின் அடிப்படையில் ஒருவர் அடிமையாக்கப்படுவார். இவர்களுக்கு சமூகத்தில் எவ்வித மதிப்பும் இருக்கவில்லை. இவர்கள் எசமானனின் உடமைகள் ஆவர். விரும்பிய போது இவர்களை விற்கவும் வாங்கவும் எசமானுக்கு உரிமை இருந்தது.

இவ்வாறு அரேபியாவில் காணப்பட்ட சமூக ஏற்றத் தாழ்வுகளை அகற்றி சமத்துவம் நிலவும் ஒரு சமூக அமைப்பை ஏற்படுத்த நபியவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் அளப்பரியன.

# ஜாஹிலிய்யா சமூகத்தில் கலாசார நிலையும் இலக்கியத்தின் செல்வாக்கும்
அக்கால அரேபியரின் வாழ்வியல் அம்சங்களில் கலாசார நிலை ஓரளவு மேம்பட்டுக் காணப்பட்டது. அறியாமையில் இம்மக்கள் மூழ்கியிருந்தாலும் அவர்களுள் எழுத வாசிக்கத் தெரிந்த சிலரும் இருந்து வந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

அறிவுடையோரை மதிக்கும் பண்பைப் பெற்றிருந்த இம்மக்களது கலாசார வாழ்வில் கவிதை இலக்கியம் முக்கிய இடம் வகித்தது. கவிஞர்களுக்கு பெரு மதிப்பளித்த அந்த சமூகத்தினர் கவிஞர்களை கபீலாக்களின் அருஞ்சொத்தாக மதித்தனர்.கவிஞனில் ஆவி குடிகொண்டிருப்பதாக நம்பினர். அதனால் அவர்கள் கவிஞனுக்கு மதிப்பளித்த அதேவேளை அவனுக்கு அதிகம் பயப்படுபவர்களாகவும் இருந்தனர். அவனுக்கு ஷைத்தானோடு இருந்த தொடர்பு பிறரில் இருந்து அவனை மேம்படுத்தியது மட்டுமல்லாது அவன் அதன் மூலம் அதிசயமான ஆற்றலையும் பெற்றுக் கொண்டான். ஜிங்களும் ஷைத்தாங்களும் இந்தவகையில் மனித ஆற்றலை மிகைத்தவர்கள் என்பது அன்றைய அரபு மக்களின் நம்பிக்கையாகும். இதனால்தான் ஔவோர் அரபுக் கோத்திரத்தாரும் தமக்கிடையே ஒரு கவிஞன் தோன்றிவிட்டால் அக்கவிஞனுக்காக விழா எடுத்து மகிழ்ந்தனர். இந்நிலையை பேராசிரியர் நிகல்ஸன் தனது "அரேபியர் இலக்கிய வரலாறு" எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "அரபுக் கோத்திரமொன்றில் கவிஞனொருவன் இருக்கிறான் என்பது தெரிய வந்ததும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களெல்லாம் ஒன்றுகூடி அவனது வீட்டுக்குச் சென்றுமகிழ்ச்சி ஆரவாரம் செய்வதுடன் அவனது நல்லதிஷ்டத்திற்காக அக்குடும்பத்தையே வாழ்த்திவிட்டு வருவார்கள்."

அவர்களுள் அதிகமானவர்கள் நினைத்தவுடன் கவி பாடும் வல்லமை படைத்த வரகவிகளாக இருந்தனர். அரேபியாவில் பாலை நிலம் வரண்டாலும் கஞர்களின் உள்ளங்கள் வரண்டு போயிருக்கவில்லை. ஆற்றொழுக்குப் போன்று கவிதைகள் அவர்களது உள்ளங்களில் இருந்து பிரவாகித்துப் பாய்ந்தன. ஒட்டகையின் காலடி சந்தத்துக்கு இசைவாக அவர்கள் கவிதை பாடினர். இவ்வகையில் பிறந்தவை " ரஜ்ஸ்" இனக் கவிதைகள் எனப்பட்டன.

இஸ்லாத்திற்கு முந்திய காலக் கவிதைகளை முற்றுப்பெறாதது, முற்றுப்பெற்றது என இரு வகைப்படுத்தலாம். முதல் வகைக் கவிதையை ஸஜா, ரஜ்ஸ் என இரு வகையாகப் பிரிப்பர். ஸஜா என்பது எவ்வித செய்யுள் அமிப்பும் பெறாத, ஆனால், எதுகை மோனை வரப்பெற்ற - வசனச் சிதறல்களாகும். இவை செய்யுள் அமைப்புப் பெறாத போதும், இசையோடு பாடக்கூடியனவாய் அமைந்திருக்கும். றஜ்ஸ் என்பது செய்யுள் அமிப்போடு கூடிய 'ஸஜா' கவிதைகளின் திருத்திய வடிவமாகும். பல வகையான கவிதைகள் சேர்ந்த கவிதைத் தொகுதிகளை 'முற்றுப்பெற்ற' கவிதை என்பர். அக்காலத்தில் எழுந்த முஅல்லகாத், முபஸ்ஸலியாத் ஹம்ஸா போன்ற போன்ற கவிதைத் தொகுதிகள் இவ்வகையைச் சேர்ந்தவை.

ஆண்டுதோறும் உகாஸ், துஹ்ல் மஜாஸ் என்ற பெயர்களில் நடைபெறும் இலக்கிய விழாக்களில் அரபுக் கவிதைப் போட்டிகள் நடைபெறத் தவறுவதில்லை. நாட்டிலுள்ள புகழ்பெற்ற கவிஞர்களெல்லாம் இப்போட்டிகளில் கலந்துகொள்வார்கள். போட்டியில் வெற்றி பெற்றவர்களின் கவிதைத் தொகுதிகளைத் தங்கத்தில் செதுக்கி, கஃபாவின் சுவர்களிலே தொங்கவிடுவார்கள். இத்தகைய கவிதைத் தொகுதிகளை அவர்கள் 'முஅல்லகாத்' என்று பெயரிட்டு அழைத்தனர். இவ்வாறான ஏழு 'முஅல்லகாத்'கள் கஃபாவின் சுவர்களில் காணப்பட்டன. இம்ரஉல் கைஸ், ஜஸ்ஸாஸ், முகல்ஹில், அந்தராஹ் ஆகிய கவிஞர்கள் அக்கால அரேபியர்களிடையே மிகுந்த் புகழ் பெற்றிருந்தார்கள். இவர்களுள் இம்ரஉல் கைஸ் அக்கால அரபுக் கவிஞர்களின் மன்னனாகக் கருதப்பட்டார். இவருடைய கவிதைகள் இஸ்லாத்திற்கு முந்திய அரபுக் கவிதையின் வளர்ச்சியையும் மறுமலர்ச்சியையும் அளவிட உதவும் கருவியாக விளங்குகின்றன.

இக்காலத்தில் கவிஞர்கள் மட்டுமன்றி அக்தம், ஹாஜிப், ஹிந்தா போன்ற பல அறிஞர்களும் அந்த அரேபியரிடையே வாழ்ந்தார்கள். அரேபியர்களுள் பலர் பேச்சுவன்மை மிக்கவர்களாயும் இருந்தார்கள். இவற்றையெல்லாம் ஆராயும் போது இஸ்லாத்திற்கு முந்திய கால அரேபியர்கள் முற்றாகக் கல்வி அற்ற்வர்களாக இருக்கவில்லை என்று துணிந்து கூறலாம்.

அரேபியரின் உள்ளத்தைப் பொறுத்தவரை கவிதைச் சொல்லம்பானது வில்லம்பை விடப் பலம் வாய்ந்ததாக அமைந்தது. அடிக்கடி தோன்றும் கோத்திரச் சண்டைகளில் கவிஞனின் பங்கு எத்தகையதெனில், போராட்ட ஆயுதங்களை விடத் தாக்கம் மிக்கவனாக அவன் நோக்கப்பட்டான். இதனாலேயே நபியவர்கள் "குறைஷியருக்கு நீங்கள் கவிதையில் பதிலடி கொடுங்கள் ஏனெனில், அது அவர்களுக்கு ஈட்டி முனையை விடக் கூரியதாகும்" (ஸஹீஹ் முஸ்லிம்) என்று கூறினார்கள்.

ஜாஹிலிய்யாக் காலத்தில் உரை நடை இலக்கியம் வளர்ச்சியடைந்திருக்கவில்லை. கவிதை இலக்கியமே வளர்ந்திருந்தது. கவிதையின் கருப்பொருளாக பெரும்பாலும் காதல், போர், வேட்டை, மது, மாது போன்றவையே விளங்கின. ஜாஹிலிய்யாப் பருவம், அரபு இலக்கிய வரலாற்றில் கவிதை இலக்கியத்தின் பொற்காலம் என்று புகழப்படும் அளவுக்கு அக்காலம் கவிதை இலக்கியத்தில் முன்னேற்றமடைந்திருந்தது. இதனாலேயே "அஷ்ஷிஃரு தீவானுல் அரப் - கவிதை அரேபியரின் வாழ்க்கைப் பதிவேடு" என்று உமர் (ரழி)  கூறினார்கள்.

நபியவர்களுக்கு அருளப்பட்ட குர்ஆன், 'நழ்ம்' செய்யுள், 'நஸ்ர்' உரை நடை ஆகிய இரு வகை இலக்கியங்களுக்கும் இடைப்பட்ட ஒப்பற்றதொரு நடையில் அருளப்பட்டது. அத்துடன், அது ஜாஹிலிய்யாக் கால இலக்கியப் படைப்புக்களை விட அனைத்துத் துறைகளிலும் மேம்பட்டு விளங்கியது. இன்றும் கூட அரபு இலக்கியப் படைப்புக்களில் தன்னிகரற்ற ஒரே உருவமாக அல் குர்ஆன் விளங்குகின்றது.

# ஜாஹிலிய்யா சமூகத்தில் பெண்களின் நிலை
இக்காலத்துச் சமூகத்தில் பெண்கள் மிக மோசமாக இழிவுபடுத்தப்பட்டார்கள். சில கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வறுமைக்காகவும் மற்றும் வேறு சில காரணங்களுக்காகவும் பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர். இந்த இழி செயலைச் செய்தோருள் ரபீஆ, முழர், தமீம் முதலாம் கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் முக்கியமானவர்கள்.

பெண் குழந்தை பிறந்தபோது இவர்களது மனோ நிலை இருந்த விதம் பற்றிய அல்-குர்ஆனின் பின்வரும் கூற்று நோக்கத்தக்கது.
"அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ள்தாக நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கோபத்தால் கறுத்துவிடும். அவனிடம் கூறப்பட்ட செய்தியை தீய செய்தியாகக் கருதி அச்செய்தியின் கெடுதிக்காகத் தன் சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கின்றன். இழிவோடு அந்தக் குழந்தையை வைத்துக் கொள்வதா அல்லது அதனை உயிரோடு மண்ணில் புதைத்து விடுவதா என்று குழம்புகிறான்." (16: 58 - 59)

"நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே வாழ்க்கை வசதிகளை (யும் உணவையும்) அளிக்கின்றோம். அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்." (17:31) என்று கூறி அல்லாஹ் இத்தீய செயலை விளக்கினான்.

கொடிய பாவம் எது என்று நபியவர்களிடம் வினவப்பட்ட போது முதலாவதாக, அல்லாஹ்வுக்கு இணைவைத்தலையும், இரண்டாவதாக, தனது குழந்தையைக் கொலை செய்துவிடுவதையும் குறிப்பிட்டதாக ஒரு ஹதீஸ் ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹுல் முஸ்லிம் ஆகிய நூல்களில் பதியப்பட்டுள்ளது.

மேற்கண்ட அல்குர்ஆன் வசனங்களும் நபி மொழியும் குழந்தைகளை உயிருடன் புதைக்கும் பழக்கம் இருந்ததையும் காட்டுகின்றன. ஜாஹிலிய்யா சமூகத்தில் பெண்கள் தொடர்பாக மேலும் பல முறைகேடான பழக்கங்கள் இருந்தன. அவற்றுள் சில:
  1. கணவனை இழந்த கைம்பெண்ணை மற்றைய தாரத்து மூத்த மகன் திருமணம் செய்தல்.
  2. விதவையை தனது உறவினரிடம் செல்ல விடாது இறந்த கணவரின் உறவினர் பலாத்காரமாகத் தடுத்து வைத்தல்.
  3. உடன் பிறந்த இரு சகோதரிகளை ஓர் ஆண் சம காலத்தில் மனைவியாக வைத்திருத்தல்.
  4. பெண்கள் அந்நிய ஆடவர் மத்தியில் தமது உடல் அழகை வெளிக்காட்டிக் கொண்டு பகட்டாகப் பழகுதல்.
  5. 'ழிஹார்' என்ற முறை மூலம் மனைவியைத் தனது தாய்க்கு ஒப்பாக்கி, விவாகரத்தும் செய்யாது தாரமாகவும் கொள்ளாது கணவன் தன் மனைவியைத் தடுத்து வைத்தல்.
  6. பெண்ணுக்குச் சொத்தில் பங்கு கொடுக்காதிருத்தல்.
இவ்வாறாக பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக் களைந்து, அவர்களுக்குத் தகுதியான சகல உரிமைகளையும் கொடுத்து, அவர்களை சமூகத்தில் உன்னதமான ஓர் இடத்துக்கு அல்குர்ஆன் உயர்த்தியுள்ளது.

# ஜாஹிலிய்யாக் கால சமூகத்தில் காணப்பட்ட திருமண முறைகள்
  1. பெண்ணைப் பராமரிப்பவரிடமிருந்து (வலி) திருமணம் பேசி மஹர் கொடுத்து மணந்து கொள்ளும் முறை. இம்முறை "நிகாஹ் அஸ்ஸஹீஹ்" எனப்பட்டது.
  2. "நிகாஹ் அல்-இஸ்திப்ழாஃ" : கணவன் தனது மனைவிக்கு அவள் விரும்பும்கல்வி, வீரம் போன்ற சிறப்பியல்புகளைக் கொண்ட ஒருவருடன் உடல்ரீதியான உறவு கொண்டு கருவுற அனுமதியளித்தல். இதன் மூலம் பிறக்கும் குழந்தை குறித்த சிறப்பியல்பை அடைய வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு செய்யப்பட்டது.
  3. "நிகாஹ் அத் தவாதிஃ": ஒரு பெண் தான் விரும்பிய ஏறத்தாழ 10 ஆண்களோடு உடலுறவு கொண்டு  அதன் மூலம் குழந்தை பிறந்த பின்னர் அவள், அவர்களுள் தான் விரும்பும் ஒருவரைச் சுட்டிக்காட்டிப் பிறந்த குழந்தையின் தந்தை அவரே எனப் பிரகடனப்படுத்தல்.
  4. பெண் தனது வீட்டு வாசலில் சிவப்பு நிறக் கொடியொன்றப் பறக்க விடுதல். இந்தக் கொடி விபசார விடுதியைக் குறிக்கும் அறிகுறியாகும். எனவே அப்பெண்ணிடம் செல்லுக் எந்த ஆணையும் அவள் தடுப்பதில்லை.

இவற்றிற்கு அப்பால் அல்-முதஆ, அல்-பஃகாயா, அஷ்-ஷிஃகார் போன்ற திருமண முறைகளும் அங்கு காணப்பட்டன. இவற்றுள் முதல் வகைத் திருமண முறையை மட்டுமே இஸ்லாம் அனுமதித்தது. நபியவர்களும் அவர்களது மூதாதையர்களும் முதல் வகைத் திருமணத்தின் மூலமே பிறந்தனர். தூய்மையான ஆண்-பெண் உறவின் மூலம் பிறக்கும் பேற்றை இறைவன் நபியவர்களுக்கு அருளியிருந்தான்.

# ஜாஹிலிய்யாக் கால சமய நிலை
அன்றைய அரேபியாவில் இருந்த சமய அடிப்படையிலான குழுக்கள்
1. 'முஷ்ரிக்'குகள்
2.'ஸாBIஈன்'கள்
3. 'மஜூஸி'கள்
4. 'யஹூதி'கள்
5. 'நஸாரா'க்கள்
6.'ஹனீFகள்

1. 'முஷ்ரிக்'குகள்:
இவர்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்போராவர். இவர்களே அரேபியாவில் பெரும்பான்மையாக வசித்தவர்கள். குறைஷிகளுள் பெரும்பாலானோர் விக்கிரக வணங்கிகளாகவே இருந்தனர்.  நபியவர்கள் பிறப்பதற்கு சுமார் 300 வருடங்களுக்கு முன்பிருந்தே விக்கிரக வணக்கம் அறிமுகப்படுத்தப் பட்டிருந்தது. இதற்கு முன்னர் அரேபியர் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தை (மில்லத்) ஏற்று நடப்போராகவே இருந்தனர். பின்னர் "குஸா ஆ" கோத்திரத் தலைவனாக இருந்த அம்ர் இப்னு லுஹை என்பவன் ஸிரியாவுக்குச் சென்று, அங்கு பின்பற்றப்பட்டு வந்த விக்கிரக வணக்கத்தைப் பார்த்துவிட்டுத் திரும்புகையில் "ஹுபல்" எனப்பட்ட விக்கிரகத்தை எடுத்து வந்து விக்கிரக வழிபாட்டை ஆரம்பித்து வைத்தான்.

ஒரு நளைக்கு ஒரு கடவுள் என்ற வகையில் கஃபாவில் மாத்திரம் 360 சிலைகள் வைபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தினதும் தலைமைச் சிலையாக ஹுபல் வைக்கப்பட்டிருந்தது. விலை உயர்ந்த செந்-நிறக் கல்லில் செதுக்கப்பட்டிருந்த இந்த ஹுபலின் இரு மருங்கிலும் பொன்னால் செதுக்கப்பட்ட இரு மான் குட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றைச் சூழவே இதர 360 சிலைகளும் வைக்கப்பட்டிருந்தன.

அரேபியரின் விக்கிரக வழிபாட்டு முறைகள் சில:
1. விக்கிரகங்களுக்கு முன்னால் தலையை நிலத்தில் வைத்து வணங்குதல்
2. அவற்றுக்கு அண்மையிலமர்ந்து அவற்றிடம் தஞ்சமடைதல்
3. அவற்றைச் சுற்றி வலம் வருதல்
4. அவற்றுக்குப் படையல்களைச் சமர்ப்பித்தல்
5. கால் நடை, விவசாய விளைச்சல் முதலானவற்றில் நேர்ச்சை  செய்தல்

அரேபியரின் பிரதான விக்கிரகங்கள் பற்றியும், நபி நூஹ் (அலை) அவர்களது காலத்து விக்கிரகங்கள் பற்றியும் அல்-குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

  1. நீங்கள் வணங்கி வழிபடும் தெய்வங்களான "லாத்", "உஸ்ஸா" போன்றவற்றையும் மூன்றாவதான "மனாத்"தையும் பார்த்தீர்களா?(53: 19 - 20)
  2. மேலும் அவர்கள் உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள்; இன்னும் "வத்து" (ஆண் உரு), "ஸுவாஃ" (பெண் உரு), "யகூஸ்" (சிங்க உரு, "யஊக்" (குதிரை உரு, "நஸ்ர்" (கழுகு உரு) முதலானவற்றை நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள் எனவும் கூறுகின்றனர். (71: 22)

"அல்-ஜிப்த்", "அத்-தகூத்" எனும் பெயெரிலான இரு கடவுளர்களை குரைசியர் வணங்கி வந்தனர்.

நபி நூஹ் (அலை) அவர்கள் காலத்து விக்கிரகங்கள் புதைக்கப்பட்டிருந்தன. அவற்றை அகழ்ந்தெடுத்து வழிபாட்டுக்காக நிறுத்தியவனும் அவனேயாவான். சிலை வணக்கத்தில் ஈடுபட்டாலும் கூட திரிபடைந்த நிலையில் ஹஜ் வணக்கமும் அரேபியரிடம் இருந்தது. ஹஜ், உம்றாச் செய்தல், கஃபாவைத் தவாப் செய்தல், அரபா, முஸ்தலிபாவில் தங்குதல், குர்பான் கொடுத்தல், கஃபாவை கண்ணியப்படுத்தல் போன்ற வழிபாடுகளும் அவர்களிடம் காணப்பட்டன.

நபி இப்றாஹீம் (அலை) அவர்களால் தவ்ஹீதின் நிலைக்களமாக அமைக்கப்பட்ட கஃபா, 'ஷிர்க்'கின் மையமாக விளங்கிற்று. அதனுள் சிலைகள் நிரம்பிக் காணப்பட்டன. அவை நாட்தோறும் பூஜிக்கப்பட்டன. மக்கள் நிர்வாணமாக அதைச் சுற்றி வளம் வந்தனர். அவ்வேளை கைகொட்டி, சீட்டியடித்து, கொம்பூதி ஆரவாரிக்கப்பட்டது. 'குர்பானி'யின் இரத்தம் கஃபாவில் தோய்க்கப்பட்டு அதன் மாமிசம் தரையில் பரப்பப்பட்டது. 'இபாதத்' வழிபாட் சம்பிரதாயபூர்வமாக அமைந்ததே தவிர அர்த்த புஷ்டியுள்ளதாகவும் உள்ளார்ந்ததாகவும் அமையப்பெறவில்லை.

இவ்வாறு இவர்கள் சிலை வணக்கத்தில் ஈடுபட்ட போதும் அல்லாஹ்வுடைய ருபூபிய்யத் தொடர்பான விடயத்திலும் தெளிவான நம்பிக்கை இருந்தது. இதனை அல்-குர்ஆன் பின்வருமாறு நிறுவுகிறது.

"வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார் என்று அவர்களிடம் கேட்டால், "அல்லாஹ்" என்றே அவர்கள் நிச்சயமாகப் பதில் கூறுவார்கள்" (31: 25).

எனினும் அச்சிலைகள் தமக்காக அல்லாஹ்விடம் ச்பார்சு செய்யுமென அவர்கள் நம்பினர். இது பற்றி அல்-குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

"அல்லாஹ் அல்லாத, தமக்கு எந்தவொரு நன்மையோ தீமையோ செய்ய இயலாதவற்றை அவர்கள் வணங்குகிறார்கள். இன்னும் அவர்கள் இவை எங்களுக்காக அல்லஹ்விடம் மன்றாட்டம் செய்பவை என்றும் கூறுகின்றனர்." (10: 18)

2. ஸாபிஈன்கள் (நட்சத்திர வணங்கிகள்)
இவர்கள் ஏக இறைவனில் நம்பிக்கை கொண்டிருந்தனர். ரிஸாலத் பற்றிய நம்பிக்கையும் இவர்களுக்கிருந்தது. ஆயினும் அது பற்றிய தெளிவு இருக்கவில்லை. ஸாபிஈன்கள் அரேபியாவில் சிறுபான்மையினராவர். அல் குர்ஆன் யஹூதி, நஸாறாக்கள் பற்றிக் குறிப்பிடும் சந்தர்ப்பங்களில் ஓரிரு இடங்களில் ஸாபிஈன்களையும் சேர்த்துக் கூறியிருப்பதைக் காணலாம்.
(பார்க்க - 2 : 62, 22 : 17, 5 : 69)

3. மஜூஸிகள் (Zoroatrianism)
இவர்கள் நெருப்பு வணங்கிகள். அரேபியாவில் இவர்கள் மிகச் சிலரே வசித்து வந்தனர். அண்டை நாடான பாரசீகத்தில் மஜூஸிகள் நன்கு எழுச்சி பெற்று வாழ்ந்தனர். அரேபியருக்கும் பாரசீகருக்கும் வர்த்தகத் தொடர்பு இருந்தமையால் இவர்களின் மார்க்கம் பற்றிய அறிவு அரபியருக்கிருந்தது.

4. யஹூதிகள் (யூதர்கள்)
திரிபடைந்த தவ்றாத்தைப் பின்பற்றிய இவர்கள் மதீனாவின் அயலில் வாழந்த வந்தேறு குடிகளாவர். இஸ்ராயில் என்பவரின் சந்ததியினரான இவர்கள் எகிப்தில் மிகவும் செல்வாக்குடன் வாழ்ந்து வந்தனர். எகிப்தின் பூர்வீகக் குடிகளான கிப்தியரின் குறிப்பாக பிரௌனின் எல்லை மீறிய கொடுமைகளுக்கு உள்ளானபோது நபி மூஸா மூலம் யூதர்கள் காப்பாற்றப்பட்டனர். மூஸாவின் மரணத்தின் பின்னர் அவர்கள் ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் குடியேறி வாழ்ந்தனர். பலஸ்தீனில் யஹூதிய்யா எனும் பெயரில் இவர்கள் நிறுவிய அரசை அலக்ஸாண்டரும்(கி.மு.333), ரோமரும்(கி.பி. 44) அவ்வப்போது பலவீனப்படுத்தி அழித்ததனால் யூதர்கள் பல்வேறு பகுதிகளில் சிதறி வாழ்ந்தனர். அரபுத் தீவகற்பத்திலும் பல பகுதிகளில் தமது குடியிருப்புக்களை அமைத்தனர். யஸ்ரிபில் பனூ கைனுகா, பனூ குறைழா, பனூ நாழிர் முதலாம் பெயர்களில் குடியேறி வாழ்ந்து வந்த கோத்திரத்தவர்களும் யூதர்களாவர்.   பொருளாதார வளமிக்க இவர்கள் அரேபிய சமூகத்தில் பெரிதும் செல்வாக்குச் செலுத்தினர். இவர்கள் வட்டித் தொழில் மூலம் பொருளீட்டினர். நபியொருவர் அனுப்பப்படுவதை அறிந்திருந்த யூதர்கள் தமது சமூகத்துள்ளே அந்நபி அனுப்பப்படுவார் என நம்பி எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாற்றமாக குறைஷியருக்குள் நபி அனுப்பப்படவே அந்நபி மீது பொறாமை கொண்டு பல சமயங்களில் அவர்களைக் கொலை செய்யவும் அவர்கள் துணிந்தனர். 

5. நஸாராக்கள் (கிறிஸ்தவர்கள்)
திரிபடைந்த இஞ்ஜீலைப் பின்பற்றிய இவர்கள் மதீனாவின் சூழலில் கணிசமான அளவில் வாழ்ந்தனர். ரோமச் சக்கரவர்த்தி கொன்ஸ்தாந்தீன் (கி.பி. 326) மூலம் ஸிரியாவிலும் பலஸ்தீனிலும் இம்மதம் அறிமுகம் பெற்றது. பின்னர் படிப்படியாக நஜ்த், யஸ்ரிப்,நஜ்ரான் போன்ற பிரதேசங்களிலும் வியாபகமாகியது. திரித்துவக் கொள்கையை விசுவாசித்த அரபுக் கிறிஸ்தவர்கள் தமது சமயப் பிரசாரத்தை அரபுச் சந்தைகளில் மேற்கொண்டதாலேயே அரேபியர் மறுமை, விசாரணை, சுவர்க்கம், நரகம் முதலாம் அம்சங்கள் பற்றியறிந்து கொண்டனர். இஸ் இப்னு ஸாய்தா, உமையா பின் அபுஸ்ஸல்த் போன்றோர் அரேபியாவில் வாழ்ந்த கிறிஸ்தவக் கவிஞர்களாவர். கி.பி. 525 களில் யமன் நாட்டை ஆட்சி செய்த அப்ரஹாவும் ஒரு கிறிஸ்தவனே. 

6. ஹனீப்கள் / ஹனீபிய்யூன்
விக்கிரக வணக்கத்தையும் அன்றைய சமூகத்தில் நிலவிய படு பாதகச் செயல்கள் பலவற்றையும் விட்டொதுங்கி வாழ்ந்து வந்தவர்களே இப்பெயரால் அழைக்கப்பட்டனர்.விக்கிரக வணக்கத்தையும் அன்றைய சமூகத்தில் நிலவிய படுபாதகச் செயல்கள் பலவற்றையும் விட்டு ஒதுங்கி வாழ்ந்தோரே ஹனீப்களாவர். நபி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட மார்க்கம் ஒன்று இருப்பதாக இவர்கள் அறிந்திருந்தார்களாயினும் அது பற்றிய பூரண விளக்கம் இவர்களுக்கிருக்கவில்லை. அரபு நாட்டில் விரல் விட்டு எண்ணக் கூடிய மிகச் சில ஹனீப்களே வசித்தனர். அவர்களுள் பின்வருவோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
1. சிறந்த பேச்சாளரான குஸை இப்னு ஸாஇதா அல் இயாதி
2. ஸைதிப்னு அம்ரிப்னு நுபைல்
3. அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ்
4. உஸ்மான் பின் ஹுவைரிஸ்
5. உமையா பின் அபூ ஸல்லத்

# அரேபியரின் பண்புகள்
* சமய நம்பிக்கையுடன் தொடர்புடைய சில மூடப் பழக்கங்கள்
1. அம்பு வீசிக் குறி பார்த்தல்
2. சாஸ்திரம், சோதிடம் பார்த்தல்
3. ஃபஃல், மை வெளிச்சம் பார்த்தல்
4. நட்சத்திரக் குறி பார்த்தல் (நவ்'உ) -நட்சத்திரக் குறி பார்ப்பவன்  முனஜ்ஜிம் எனப்பட்டான்.
5. பறவைச் சகுனம் (தியரா)
6. நாட் பலன் பார்த்தல்
7. இறந்தோரின் ஆவி சாந்தியடைய வேண்டும் என்பதற்காகப் பலியிடல்

* தீய பழக்க வழக்கங்கள்
1. வழிப்பறி, கொள்ளையில் ஈடுபடுதல்
2. பழி வாங்குதல்
3. மதுவருந்துதல்
4. சூதாடுதல்
5. பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தல்
6. வரை கடந்த விபசாரம்
7. கோத்திரச் சண்டை

*  நற்பண்புகள்
1. தர்ம சிந்தை
2. வாக்கு மீறாமை
3. தன்மானம் காத்தல்
4. இலட்சிய வேட்கை
5. வறுமையில் பொறுமை
6. தலைமைத்துவத்துக்கு அடிபணிதல்
7. அமானிதம் பேணல்
8. விருந்தோம்பல்
9. போரில் புற முதுகு காட்டாமை
10. தளரா மன உறுதி
11. இறக்க சிந்தை
12. எளியோரை ஆதரித்தல்
13. நேர்மை
14. சுதந்திர வேட்கை

# ஜாஹிலிய்யாக் கால அரேபியாவின் பொருளாதார நிலை
அயல் நாடுகளோடு ஒப்பிடுகையில் அக்காலத்தில் அரேபியா பொருளாதாரத்தில் நலிவடைந்து காணப்பட்டது. உள் நாட்டினுள்ளே வட பகுதி வர்த்தகத்திலும் தென் பகுதி விவசாயத்திலும் விருத்தி கண்டிருந்தது. அன்றைய காலத்து அரேபியர் பின்வரு மூன்று வழிகளில் பொருளீட்டினர்.

1. வணிகம்:
இது அரேபியரின் குறிப்பாக மக்கத்துக் குறைஷியரின் பிரதான தொழிலாக அமைந்திருந்தது. மக்கா நகர் வர்த்தகத்தின் கேந்திரமாக விளங்கியது. வெளி நாட்டு வர்த்தகர்களுக்கு களவு, கொள்ளையிலிருந்து பாதுகாப்பு வழங்குவதற்காகக் கட்டணம் அறவிடும் முறையொன்றும் அங்கு இருந்து வந்தது. இவ்வாறு கட்டணம் அறவிடுவதால் ஒரு சாரார் பெருந்தொகைப் பணம் சம்பாதித்தனர். அரேபியாவில் கொடூரமான வட்டி முறையொன்றும் நிலவியது. அங்கிருந்த யூதர்கள் இத்தொழிலைச் செய்து வந்தனர்.

2. வேளாண்மை
விலங்கு வேளாண்மை, பயிர்ச்செய்கை ஆகிய இரு வகை வேளாண்மையும் அரேபியாவில் இருந்தன. விலங்கு வேளாண்மையில் ஒட்டகை வளர்ப்பு ஆடு வளர்ப்பு இரண்டும் பிரதானமானவை.பயிர்ச்செய்கையில் பேரீச்சை உற்பத்தி முக்கிய இடம் வகிக்க உப உணவுச் செய்கையும் நடைபெற்றது.

அரேபியரின் பொருளாதாரத்தில் பேரீச்சையும் ஒட்டகையும் இரு கண்கள். பேரீச்சை அவர்களின் பொருளாதாரத்தில் பாதியைப் பூர்த்தி செய்ய, ஒட்டகை மீதியைப் பூர்த்தி செய்தது. பேரீச்சை 'பதவி'களின் பிரதான உணவாகும். அவன் மகரந்தச் சேர்க்கை மூலம் உற்பத்தியை அதிகரிக்கும் அளவு அவர்கள் பேரீச்சைச் செய்கையில் முன்னேற்றமடைந்திருந்தனர்.

அ) விலங்கு வேளாண்மை
ஒட்டகை அவர்களது பொருளாதாரத்தில் வகித்த பங்கை அதற்கு அவர்கள் சூட்டியிருந்தஆயிரத்துக்கும் மேற்பட்ட பெயர்களைக் கொண்டு மதிப்பிட முடியும். "ஒட்டகை வாழுமிடங்களில்தான் அறேபியர்க்கு வாழ்வுண்டு" என்ற அரபுப் பழமொழி ஒட்டகையின் பொருளாதாரப் பயன்பாட்டை எமக்கு எடுத்துக்காட்ட வல்லது. ஒட்டகை பற்றிப் பேராசிரியர் Phlip K Hitti தனது History of the Arabs என்ற நூலில் பின்வ்ருமாறு குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

"ஒட்டகை பதவிகளின் உணவு; பயணத்தின் போது வாகனம்; சுமை தாங்கி; தனிவழியே நண்பன்; சீதனச் சொத்து; பாலைவனக் கப்பல்; ஷெய்கின் செல்வம்; நண்பர்க்கு விருந்து; அதன் தோல் அவர்களின் உடை; தோல், உரோமம், சாணம் இவை  கூடாரத்தின் கூரை; சாணம் அடுப்பின் விறகு; சிறு நீர் தலைக்கு எண்ணெய், நோய்க்கு மருந்து.

அரேபியரின் பொருளாதாரச் சுழற்சியில் குதிரைக்கும் ஓர் இடம் இருந்தது. குதிரை கொள்ளையடிப்பதற்கு உபயோகிக்கப்பட்டது. கொள்ளையடிப்பதன் மூலம் ஒரு சாரார் பொருளீட்டி வந்தனர். அரேபியாவின் நஜ்த் பிரதேசம் குதிரை வளர்ப்புக்குப் பிரசித்தமானது. பணம் படைத்தோரின் சொத்தாகவே இது கருதப்பட்டது. வேட்டையாடவும் துரிதமாகச் செல்லவும் இது பயன்படுத்தப்பட்டது. விளையாட்டுப் போட்டிகளிலும் போர்க்களங்களிலும் கூட குதிரை பெரும் பங்காற்றியது.

ஆ) பயிர்ச்செய்கை
மக்கா, மதீனா ஆகிய நகரங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களில் ஒரு பகுதி தாயிப் நகரிலிருந்து பெறப்பட்டன.மரக்கறி, திராட்சை, ஆப்பிள், மாதுளை, தோடை, வாழை, ஆப்ரிகொட் முதலானவையும் இங்கு விளைந்தன. ஹிஜாஸில் பேரூந்து செழித்து வளர்ந்தது. யெமனிலும் ஏனைய சில பாலைவனப் பகுதிகளிலும் கோதுமை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. 

3. கைத் தொழில்
கைத் தொழில் வகைகளுள் சலவைக் கல் வெட்டுதல், தோல் பதனிடுதல் என்பன குறிப்பிடத் தக்கவை.  இவை தவிர வேற் சில கைத் தொழில்களும் அங்கு காணப்பட்டன. இவை தவிர வேறு சிறு கைத் தொழில்களும் அங்கு காணப்பட்டன.  கைத் தொழிலாளர்கள் பெரும்பாலும் விருத்தி அடைந்திருந்த நகரங்களிலேயே நிரந்தரமாகக் குடியேறி வழ்ந்து வந்தனர்.

அரேபியாவில் மிகக் குறைந்தளவு மூல வளங்களே கிடைக்கப் பெற்ற போதும் இருந்த சொற்ப வளங்களையேனும் பயன்படுத்தி உற்பத்தியை மேற்கொள்வதற்கு அங்கு மத்திய அரசோ அல்லது பாரிய அளவிலான முயற்சியாளனோ இருக்கவில்லை. உண்மையில் இதுவே அரேபியாவில் பொருளாதார விருத்தி ஏற்படாமைக்கான பிரதான காரணியாக அமைந்தது.

# ஜாஹிலிய்யாக் கால அரசியல் நிலை
அக்காலப் பிரிவில் அரேபியாவுக்கு வெளியே இரு பெரும் பேரரசுகள் அல்லது சாம்ராஜ்யங்கள் காணப்பட்டன.
1. பாரசீகப் பேரரசு -  Persian Empire     (கிழக்கு)
2. ரோமப் பேரரசு   -  Romanian Empire (மேற்கு)

இவ்விரு பேரரசர்களுக்கு மத்தியில் அரேபியா அமைந்த போதும் அவற்றின் முடியரசு நிர்வாக முறை இங்கு பின்பற்றப்படவில்லை. இன, கோத்திர உணர்வு வலுப்பட்டிருந்ததே இதற்குக் காரணமாகும்.நபியவர்கள் பிறந்து வளர்ந்த ஹிஜாஸின் அரசியல் நிலை இதுவாயினும் கிழக்கே ஹீராவிலும் மேற்கே கஸ்ஸானிலும் முறையே பாரசீக, உரோம அரசின் கட்டுப்பாட்டின் கீழ் சிற்றரசர்கள் ஆட்சி செய்தனர். அரேபியாவில் மத்திய அரசு அமையாவிட்டாலும் ஒரு வகை நிர்வாக முறை அங்கிருந்ததை அறிய முடிகின்றது. சமூக மக்களுக்கிடையில் அவர்கள் சில பொறுப்புக்களைப் பகிர்ந்து கொண்டிருந்தனர்.
Eg: 
  1. பனூ ஜும்ஹ் குடும்பம் - குறிபார்க்கும் வேலை
  2. பனூ ஸஹ்ம் குடும்பம் - விக்கிரகங்களுக்காகப் பலியிடுபவற்றைப் பொறுப்பேற்றல், வழக்குகளைத் தீர்த்தல்.
  3. பனூ தமீம் குடும்பம்      - தண்டம் அறவிடல்
  4. பனூ அதீ குடும்பம்        - தூது செல்லல்

இவை தவிர அப்போது அங்கு வழக்கில் இருந்து வந்த பின்வரும் சொற்பிரயோகங்களும் அங்கு ஒரு நிர்வாக முறை இருந்ததை உணர்த்துகின்றன.
  1. 'தாறுன்-நத்வா'    ஆலோசனை மன்றம்,  இது பாராளுமன்றம் போன்றதொரு அமைப்பாகும்.2. 'லிவாஃ'                 கொடி, யுத்தத்தில் தலைமை தாங்குவதை இது குறிக்கும்.
  2. 'ஹிஜாபா'             கஃபாவிற்கு ஆடை போர்த்துதல்.
  3. 'ஸிகாயா'              ஹாஜிகளுக்குக் குடினீர் வழங்குதல்.
  4. 'ரிஃபாதா'               ஹாஜிகளுக்கு உணவு விநியோகித்தல்.

இவை அனைத்தும் இஸ்லாத்துக்கு முற்பட்ட காலத்தில் அரேபியாவில் முறை சாரா அரசியல் நிர்வாக அமைப்பொன்று இருந்துவந்ததை எடுத்துக் காட்டுகின்றன.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
By: MSM Boosary 
From:
* தொலைக் கல்வித் துறை - தே. க. நி. மஹரகம.
* அரேபியர் வாழ்வியல் - எம். ஐ. எம். அமீன்
* இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் - அப்துற்-றஹீம்
* இஸ்லாமிய வரலாறு - ஏ. எம். அபூபக்கர்

2 கருத்துகள்:

  1. //"அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ள்தாக நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கோபத்தால் கறுத்துவிடும். அவனிடம் கூறப்பட்ட செய்தியை தீய செய்தியாகக் கருதி அச்செய்தியின் கெடுதிக்காகத் தன் சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கின்றன். இழிவோடு அந்தக் குழந்தையை வைத்துக் கொள்வதா அல்லது அதனை உயிரோடு மண்ணில் புதைத்து விடுவதா என்று குழம்புகிறான்." (17: 58 - 59)// அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ், இந்த வசன எண்ணை சரிபார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  2. Br. Issadeen Rilwan.

    Thank you very much for your support to correct our mistakes. The correct verses are 16: 58-59. We took swift action to replace the wrong number with the correct number of the 'Soora' in the article.

    Once again we thank you for your visit to our site and looking forward similar assistance from you in developing our site.

    பதிலளிநீக்கு