புதன், 19 ஜனவரி, 2011

நவீன காலணித்துவத்தின் சுவடுகள் - 3

சுதந்திரம் என்பது என்ன?

எமது நாடான இலங்கை ஒரு காலத்தில் ஏகாதிபத்திய வாதிகளால், காலணித்துவ வாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, ஆளப்பட்டது. இராணுவ ரீதியான படையெடுப்பினூடாகத்தான் இந்த ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்டு, 1948 இல் ' நாம் சுதந்திரம் அடைந்து விட்டோம்' என்று பெருமையாகக் கூறிக் கொள்கிறோம்.


இந்தக் கூற்றில் தப்பில்லை; உண்மையானதுதான். அரசியல் ரீதியான சுதந்திரத்தை நாம் பெற்றிருந்தாலும், கலாசார ரீதியாக, பண்பாட்டு ரீதியாக, சிந்தனா ரீதியாக நமது நாடு சுதந்திரம் பெற்றுள்ளதா என்பதை ஒரு முறை நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். சுதந்திரத்தின் பின்னரும் அவர்களுடைய சிந்தனை, கருத்தியல், கொள்கை கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகள் என்பன தொடர்ந்தும் எம்மை ஆக்கிரமித்துள்ளன. அந்தக் கலாசாரப் படையெடுப்பிலிருந்து நாம் தப்பிக் கொள்ளவில்லை. அவற்றைத் தொடர்ந்தும் பின்பற்றுகின்ற ஒரு சமூகத்தை அவர்களது ஆக்கிரமிப்பு தோற்றுவித்திருக்கிறது.

ஒரு சமுதாயத்தின் மீதான ஆக்கிரமிப்பு என்பது அரசியல் ரீதியானதோ அல்லது இராணுவ ரீதியானதோ மட்டுமல்ல. சிந்தனா ரீதியாகவும் ஒரு சமுதாயம் ஆக்கிரமிக்கப்படலாம் என்பதை நாம் பார்த்தோம். எப்போது மற்றொரு சமுதாயத்தின் கொள்கை எமது கொள்கையாக மாறுகிறதோ, அப்போது அந்த சமுதாயம் நம்மை ஆக்கிரமித்திருக்கிறது என்பதுதான் பொருள். கல்வி அல்லது அறிவைத்தான் இத்தகைய ஆக்கிரமிப்புக்கு அவர்கள் பயன்படுத்துகிறார்கள். தாம் விரும்பும் அறிவை அல்லது கல்விக் கொள்கையை ஆக்கிரமிக்கப்பட்ட சமுதாயத்தின் அறிவாக, கல்விக் கொள்கையாக மாற்றி விட்டால், அவர்கள் தொடர்ந்தும் அடிமைப்பட்ட சமுதாயமாக இருக்கும் என்பதை ஆக்கிரமிப்பாளர்கள் மிகத் தெளிவாக அறிந்து செயல்பட்டதன் விளைவை இன்றும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

எந்த ஒரு நாடும் அல்லது சமுதாயமும் முழுமையான, உண்மையான, யதார்த்தமான சுதந்திரத்தை அடைய வேண்டுமென்றால், அரசியல் ரீதியாக மாத்திரமன்றி, கலாசார ரீதியாக, பண்பாட்டு ரீதியாக அனைத்துத் துறைகளிலும் சுதந்திரத்தைப் பெற வேண்டும். அதனை உத்தரவாதப்படுத்த வேண்டுமென்றிருந்தால், அந்த சமூகத்துக்கே உரிய கலைத்திட்டமும் கல்வித்திட்டமும் நடைமுறையில் இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக