சனி, 1 ஜனவரி, 2011

உமையாக்கள் (ஹிஜ்ரி 41 - 132)

                                                                                                                   ஆரம்பத்தில் கஃபாவைப் பரிபாலித்து வந்த நபி இஸ்மாஈல் (அலை) அவர்களின்  பரம்பரையில் தோன்றிய குசை இப்னு கிலாப் என்பவர் மக்காவில் முதன் முதலில் நகர அரசொன்றை
(City States) உருவாக்கியிருந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து அவரது வாரிசுகளான அப்துத்-தார், அப்துஷ்-ஷம்ஸ் முதலானோர் இப்பொறுப்பை வகித்து வந்தனர்.

குஸையின் வாரிசுகளில் ஒருவரான அப்துஷ்-ஷம்ஸுக்கு ஹாஷிம், நௌஃபல், அப்துல் முத்தலிப் என மூன்று சகோதரர்கள் இருந்தனர். இவர்களுள் அப்துஷ்-ஷம்ஸின் மகனே உமையா என்பவர். ஒரு சமயம் அப்துஷ்-ஷம்ஸியரின் குடும்பத்தினருக்கும் அவரது சகோதரர் குடும்பத்தினரான ஹாஷிமீக்களுக்கும் இடையில் கஃபாவின் பரிபாலனத்தைப் பகிர்ந்து கொள்ளும் விடயத்தில் தோன்றிய முரண்பாடுகள்  சர்ச்சையில் முடிந்தன. ஈற்றில் ஹிஜாபா, லிவா, நத்வா போன்ற பொறுப்புக்கள் ஹாஷிமீக்களின் கீழ் வந்தன. இதனால் ஹாஷிமீக்களின் செல்வாக்கு அதிகரித்தது மட்டுமன்றி அப்திஷ்-ஷம்ஸியர் செல்வாக்கிழக்க வேண்டிய நிலையும் உருவாகியது.

இது கண்டு புழுங்கிய அப்துஷ்-ஷம்ஸின் புத்திரன் உமையா ஹாஷிமிக்களுடன் தகறாறு செய்யத் தொடங்கினார். கஃபா தொடர்பில் ஹாஷிமீக்களுக்குக் கிடைத்த துறைகள் தமக்கே கிடைக்க வேண்டுமென உமையா வாதாடினார். இப்போராட்டத்தில் மக்கள் மன்றத்தின்  தீர்ப்பு ஹாஷிமீக்களுக்கே சாதகமாக அமைந்தது. அதுமுதல் உமையா தம் குடும்பத்தாருடன் ஸிரியா சென்று வாழலானார். இதுவே இரு நூற்றாண்டுகளாக இஸ்லாமிய சகோதரத்துவத்தையே கேள்விக்குறியாக்கிய பகைமை உணர்வு ஹாஷிமீக்களுக்கும் உமையக்களுக்கும் இடையே காய்ந்து போகாத ரணமாக மறுவதற்குக் காரணமாக அமைந்தது.

உமையாவுக்கு இரு ஆண் மக்கள் இருந்தனர். அவ்விருவருள் ஒருவரான ஹர்பின் வழியில் அபூ சுபியான் தோன்றினார். இந்த அபூ சுபியான்தான் பிற்காலத்தில் உமையா கிலாபத்தைத் தோற்றுவித்த முஆவியாவின் தந்தையாவார். முஆவியாவின் மகனான யசீதுக்கு முஆவியா எனவும் காலித் எனவும் இரு ஆண் மக்கள் இருந்தனர். அவர்களுள் காலித் என்பவர்தான் அரேபியாவில் அல்கீமியா (Chemistry) எனும் கலையை அறிமுகம் செய்தார்.

உமையாவின் மற்றொரு மகனான அபுல் ஆஸுக்கு ஹகம் எனும் பெயரில் ஒரு மகன் இருந்தார். இவரது மகன் மர்வான் என்பவர்தான் உமைய ஆட்சியின் பிறிதொரு பிரிவான மர்வானிய ஆட்சிக்கு வித்திட்டார்.


உமைய ஆட்சியின் தோற்றமும் ஆட்சியைக் கையேற்ற விதமும்

நபியவர்கள் பனூ ஹாஷிம் குலத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில், இஸ்லாத்தின் பின்னால் இஸ்லாத்தின் வருகைக்குப் பின்னர் ஹாஷிமீக்களின் செல்வாக்கு அதிகரித்த அதேவேளை உமையாக்களின் மதிப்பும் சரிந்து செல்லலாயிற்று. உமையாக்களில் ஒருவரான நபித் தோழர் உஸ்மான் (ரழி) கலீபாவாக வந்தபோது உமையாக்கள் தாமிழந்த செல்வாக்கை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வைப் பெற்றனர். ஹிஜ்ரி 35ல் கலீபா உஸ்மான் கொலை செய்யப்பட்டமையானது, உமையாக்களின் உள்ளங்களில் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த இந்த உணர்வுக்கு எண்ணெய் வார்ப்பதாய் அமைந்தது. ஸிரியாவின் மாகாண ஆளுனராகக் கடமையாற்றிய நபித் தோழ்ர் முஆவியாவின் ஆட்சித் திறனும் உமையா ஆட்சியின் தோற்றத்துக்கான பிறிதொரு காரணியாக அமைந்தது.

கலீபா உஸ்மானின் காலத்தில் உமையாக்கள் படிப்படியாக தம்மைப் பலப்படுத்திக் கொண்டனர். கலீபாவின்  அந்தரங்கச் செயலாளர் மர்வான் தனக்கிருந்த  அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி திரை மறைவில் நின்று உதவினார். இதனால் உமையாக்கள் உயர் பதவிகளைப் பெற்றுக் கொண்டனர். பிறிதொருபுறம் கலீபாவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. கலீபா கொலையுண்ட போது, கொலையைச் சாதகமாகப் பயன்படுத்திய உமையாக்கள், முஆவியாவின் தலைமையில் கிள்ர்ச்சி செய்து, தமது இழ்ந்து போன செல்வாக்கைத் தக்க வைத்துக்கொள்ளும் நோக்கில் தலைமைத்துவத்துக்காகப் போராடினர். இப்போராட்ட முயற்சியே உமையாக்களை அடுத்த இரு நூற்றாண்டுக்கான ஆட்சியில் நாயகர்களாக ஆக்கியதெனலாம்.

ஆட்சி கைமாறிய பின்னனி

கலீபா உஸ்மான் மீது குற்றம் சுமத்தியோர் ஒரு குழுவாக வந்து கலீபாவின் வீட்டை முற்றுகையிட்டனர். பல நாள் முற்றுகையின் பின் ஒரு நாள் வீட்டினுள் பலவந்தமாக நுழைந்து கலீபாவைக் கொலை செய்தனர். அடுத்து வந்த கலீபா அலி கொலையாளியைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதில் பெரிதும் சிரமப்பட்டார். இந்நிலைக்குக் காரணம் :
  1. கொலையாளிகள் மதீனாவில் திரண்டு நின்று நபித்தோழர்களைப் பயமுறுத்தினர்.
  2.  ஹஜ்ஜுக்காக மக்கா சென்றார்கள், கொலையாலிகளாகச் சந்தேகப்பட்டவர்களைக் கொலை செய்தனர்.
  3. பஸராவில் கலீபாவுக்கு எதிராகப் போராட ஒரு குழு தயாராக இருந்தது.
  4. நபித்தோழர் முஆவியா கலீபாவுக்கு பைஅத் செய்யாமல் ஷாமில் அவருக்கு எதிராகச் செயற்பட்டார்.

கலீபா அலிக்கு முஆவியா பைஅத் செய்யாதிருந்தமை கிலாபத்தில் பெரும் புரளி ஏற்பட காரணமாயிற்று. உண்மையில் கலீபாவுக்கு முஆவியா பைஅத் செய்து கலீபவுக்கு ஒத்துழைப்பும் வழங்கியிருந்தால் கொலையாளியை இலகுவாக கண்டுபிடிக்க முடிந்திருக்கும்.

இந்நிலையில் கலீபவுக்கும் முஆவியாவுக்கும் இடையில் ஸிப்பீன் போர் மூண்டது. இந்த யுத்தத்துக்கு பின்வருவன காரணங்களாக அமைந்தன.
  1. முஆவியா அலியை கலீபாவாக ஏற்று பைஅத் செய்யாமை.
  2. ஷாம் தேசத்தவர்களும் உமையாக்களும் முஆவியாவுக்கு பக்கபலமாக நின்று உதவியமை.
  3. பைஅத் செய்யாதோருக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற இஸ்லாமிய விதியை கலீப நிலைநாட்டியமை.

ஸிப்பீன் போர் முஸ்லிம் சமூகத்தில் வேண்டாத பல விளைவுகள் தோன்/ரக் காரணமாகியது.
  1. முஸ்லிம் சமூகம் பிளவுபட்டமை.
  2. காரிஜீக்களின் தோற்றம்.
  3. தொடர்ந்த உள்நாட்டுப் போர்கள்
  4. கலீபா அலி கொலையுண்டமை
  5. கிலாபத் வீழ்ச்சியடைந்தமை.

காரிஜ்களின் எழுச்சியின் காரணமாக கலீபா அலி இரு முனைகளில் நின்று போராட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார். உள்நாட்டில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக அலியின் படை பாலம் குன்றிப் போயிற்று. இந்நிலை முஆவியாவுக்குச் சாதகமாக அமைந்தது. பின்னர் ஆட்சிக்கு வந்த அலியின் புதல்வர் ஹஸன் (ரழி) முஆவியாவுடன் ஒப்பந்தம் செய்து ஆட்சியை விட்டுக்கொடுத்தார். அதுமுதல் முஆவியா முழு முஸ்லிம் சாம்ராஜ்யத்தினது தனிப் பெரும் கலீபாவானார்.

உமையா கலீபாக்கள்
1. முஆவியா (661 - 680)
2. முதலாம் யஸீத் (680 - 683)
3. இரண்டாம் முஆவியா (683 -  684)
4. முதலாம் மர்வான் (684 - 685)
5. அப்துல் மலிக் (685 - 705)
6. வலீத் இப்னு அப்துல் மலிக் (705 - 715)
7. சுலைமான் இப்னு அப்துல் மலிக் (715 - 717)
8. உமர் இப்னு அப்துல் அஸீஸ் (717 - 720)
9. இரண்டாம் யஸீத் (720 - 724)
10. ஹிஷாம் (724 - 743)
11. இரண்டாம் வலீத் (743 - 744)
12. மூன்றாம் யஸீத் (743 - 744)
13. இப்றாஹீம் (743 -744)
14. இரண்டாம் மர்வான் (745 -750)

கலீபா முஆவியா (ரழி)

பொதுவாக உமைய ஆட்சியினதும் குறிப்பாக சுப்பானிய ஆட்சிப் பிரிவினதும் தாபகராகக் கருதப்படுகின்ற இவர், உமைய ஆட்சிக் கட்டிலை அலங்கரித்த 14 ஆட்சியாளர்களுள் முதன்மையானவர் ஆவார்.

இஸ்லாத்தின் ஆரம்ப கால எதிரியும் அப்போதைய குறைஷியரின் தலைவராகவும் விள்ங்கிய அபூ சுபியான் என்பவரின் மகனே முஆவியா (ரழி) ஆவார். ஹிஜ்ரத்துக்கு 15 வருடங்களுக்கு முன் மக்காவில் பிறந்த இவர் ஹிஜ்ரி 8ல் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். இவருடனே இவரது தந்தையும் குடும்பத்தினரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஆவியா ஆராம்பத்தில் நபியவர்களின் எழுத்தாளர்களில் (secretary) ஒருவராக கடமையாற்றினார். இவரின் சகோதரிகளில் ஒருவரான உம்மு ஹபீபா என்பவரை  நபியவர்கள் மணந்து கொண்டதன் மூலம் நபியவர்களுக்கு மைத்துனராக ஆகும் பாக்கியமும் அவருக்குக் கிடைத்தது.

கலீபா உமரின் ஆட்சிக் காலத்தில் பலஸ்தீனின் ஆளுநராக முஆவியாவின் சகோதரர் யஸீத் கடமையாற்றிய போது இவர் அப்பகுதிக்கான நிர்வாக உதவியாளராக நியமிக்கப்பட்டார்.

மூன்றாவது கலீபா புரட்சிக்காரர்களால் கொலை செய்யப்பட்ட பின்னர் அந்தக் கொலைக்குக் காரணமாக இருந்த கொலையாளிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தகுந்த தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனும் விடயத்தில் முனைப்புக் காட்டியது மாத்திரமன்றி, அதற்காகக் குரல் கொடுக்கவும் செய்தார். இந்நிலையில் ஆட்சிக்கு வந்த அலிக்கு பைஅத் செய்ய மறுத்த முஆவியா, டமஸ்கஸ் நகரில் தானே ஈடிணையற்ற கலீபா என  தன்னைத் தானே பிரகடனம் செய்து கொண்டார்.

கலீபா அலியின் மரணத்தின் பின் அவரது மூத்த மகன் ஹஸன் அடுத்த கலீபாவாக மக்களால் தெரிவு செய்யப்பட்டார். இயல்பிலேயே சமாதான நாட்டம் கொண்டிருந்த ஹஸன் ஆட்சிப் பொறுப்பில் இருந்து நீங்கிச் செல்வதாக அறிவித்தார். இது அதுவரை  அரசியல் ரீதியாக முஆவியாவுக்கு இருந்து வந்த பதவிப்போட்டிக்கு முற்றுப்புள்ளி வைத்தது மாத்திரமன்றி, அப்பொதைய நிலவரம் அனைத்தையும் முஆவியாவுக்குச் சாதகமானவையாக அமைவதற்குக் காரணமாய் அமைந்தது. ஹி.41ல் இமாம் ஹஸன் (ரழி) பதவி துறந்ததைத் தொடர்ந்து முஆவியா முழு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தினதும் தனிப் பெரும் கலீபாவனார்.
   
ஆட்சிக்கு வந்த முஆவியா முதல் நடவடிக்கையாக அதுவரை கூபாவில் இருந்து வந்த தலைநகரை டமஸ்கஸுக்கு மாற்றினார். நிர்வாகத்தோடு தொடர்பான விடயங்களுக்கு தகுதி வாய்ந்தவர்களைத் தெரிவு செய்து அதிகாரிகளாக்கினார். உதாரணத்துக்காகப் பின்வருவோரைக் குறிப்பிடலாம்.
1. அம்ர் பின் ஆஸ் - எகிப்திய கவர்னர்
2. முகீராபின் ஷுஃபா - கூபா கவர்னர்
3. ஸியாத் பின் ஸுமையா -  பஸரா கவர்னர்

இதனால் சுதேச, விதேச அரசியல் நடவடிக்கைகள் சீர்பெற்றதோடு நில்லாது உள் நாட்டு அலுவல்களில் சீர் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முக்கியமான பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. அவ்வாறான நடவடிக்கைகளுக்குப் பின்வருவன உதாரணங்களாகும்.
1. தபாற் சேவையைத் சீர்திருத்தும் வகையில் தீவானுல் பரீத் எனும் பெயரில் தபாற் திணைக்களம் ஒன்று உருவாக்கப்பட்டது.
2. தீவனுல் காதம் என்ற பெயரில் பதிவேட்டுத் திணைக்களம் ஒன்றை உருவாக்கி அதனூடாக அரச ஆவணங்களையும் கட்டளைகளையும் முத்திரையிட்டுப் பாதுகாக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தினார்.
3. பலம் மிக்க இராணுவப் பிரிவொன்றை உருவாக்கிய கலீபா முஆவியா, அதற்குப் பல்வேறு கோத்திரங்கள், பிரிவுகளில் இருந்தும் வீரர்களைத் திரட்டி மாதாந்த சம்பளம் ஒன்றை வழங்கவும் ஏற்பாடு செய்தார்.
4. நாட்டின் விவசாய, வர்த்தக முயற்சிகள் பெருக வழி செய்தார்.

கூபாவில் இருந்த தலைநகரை டமஸ்கஸுக்கு மாற்றப்ப்ட்டதால் அங்கு பரவலாக வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்களோடு கலீபாவுக்கு நெருக்கமான உறவு ஏற்பட்டது. இவர் கிறிஸ்தவப் பெண் ஒருவரை மணந்திருந்தார் என்றும் அவரது அரசவை வைத்தியராகவும் புலவராகவும் கிறிஸ்தவர்களே பணியாற்றினர் என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

கலீபா முஆவியா காலத்து இராச்சிய விஸ்தரிப்பு

இதனை மூன்று தலைப்புக்களில் நோக்கலாம்.
  1. வட ஆபிரிக்க வெற்றி
  2. கிழக்கு நாடுகளின் வெற்றி
  3. கொன்ஸ்தாந்துநோபில் முற்றுகை

வட ஆபிரிக்க வெற்றி
கலீபா உமர் காலத்தில் வட ஆபிரிக்காவின் ஒரு சிறு பகுதி முஸ்லிம்கள் வசம் வந்தது. இப்பகுதி மக்கள் முஸ்லிம் ஆட்சிக்கு திறை செலுத்த இணக்கம் தெரிவித்தனர். இதன் பேரில் முஸ்லிம் படை கோட்டை (garrison) வாயில்களில் மாத்திரம் படையினரை நிறுத்தி வைத்துவிட்டு இப்பிரதேசத்தை விட்டுச் சென்றது. கலீபா அலிக்கும் முஆவியாவுக்கும் இடையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது பைசாந்தியர் மீண்டும் வட ஆபிரிக்கப் பிரதேசத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். இதனால் முஸ்லிம்கள் வட ஆபிரிக்காவை இழந்தனர்.

முஆவியா ஆட்சிக்கு வந்தபோது பைசாந்தியரிடம் இழந்த பகுதிகளைக் கைப்பற்றி அவற்றைத் தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவர முஆவியா தீர்மானித்தார். கி.பி.670ல் உக்பாவின் தலைமையில் வட ஆபிரிக்கா நோக்கிச் சென்ற படை கைருவான் எனும் நகரை நிறுவுயது. இன்று டியூனிஸ் / டூனீஷியா என்றழைக்கப்படும் இந்நகரையே அன்று வட ஆபிரிக்காவின் தலைநகரமாக முஸ்லிம் படை அமைத்துக் கொண்டது. இந்நகர நிர்மாணம் கடல் வழியாக நடைபெற்ற ரோமர்களின் தாக்குதல்களை முறியடிக்க வழிவகுத்தது.

கிழக்கு நாடுகளின் வெற்றி

கலீபா முஆவியா காலத்தில் பாரசீகர் குழப்பம் விழைவித்த போது குழப்பத்தை அடக்குவதற்காக தள்பதி முஹல்லம் தலைமையில் ஒரு படை அனுப்பப்பட்டது. குழப்பங்களை அடக்கிய இப்படை கி.பி.663 - 671 காலப்பகுதியில் குராஸானை முழுமையாகக் கைப்பற்றிக் கொண்டது. கி.பி.674ல் Oxus நதியைக் கடந்து சென்று, அதுவரை Qubq அரசியின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்த துருக்கியரைத் தோற்கடித்தது. இதனைத் தொடர்ந்து கி.பி.675ல் புகாராவையும் 677ல் ஸமர்க்கந்து, திர்மிஸ் போன்ற நகரங்களையும் முஸ்லிம் படை தனது அதிகாரத்திற்குட்படுத்தியது.

கொன்ஸ்தாந்துநோபிள் முற்றுகை

இஸ்லாமிய கிலாபத்தின் வட மற்கு எல்லையால் கொன்ஸ்தாந்துநோபிளில் வழ்ந்த ரோமர்கள் ஆக்கிரமிப்புச் செய்தனர். அவர்கள்து கொட்டத்தை அடக்குவதற்கென மிகப் பெரும் கடற்படை ஒன்று உருவாக்கப்பட்டது. கொன்ஸ்தாந்துநோபிளை நோக்கியதான இப்படையெடுப்புப் பற்றி நபியவர்களும் முன்னறிவிப்புச் செய்திருந்ததால் இப்படையெடுப்பில் ஏராளமான நபித்தோழர்கள் கலந்து கொண்டனர். தனது மகன் யஸீதினதும் அலியின் மகன் ஹுஸைனினதும் தலைமையில் அமைக்கப்பட்ட இப்படை தரை மார்க்கமாகக் கொன்ஸ்தாந்துநோபிள் நோக்கிச் சென்றது. போகும் வழியில் ஸைப்ரஸ், ரோட்ஸ் போன்ற தீவுகளைக் கைப்பற்றிக் கொண்ட முஸ்லிம் படை, தமது கடற்படை நடவடிக்கைகளுக்கான முக்கிய தளமாக - Naval Base ஸைப்ரஸைப் பயன்படுத்தினர். சுமார் 7 மாதங்கள் வரை முற்றுகை நீடித்தது.

முற்றுகைக் கால்த்தில் எதிரிகள் பயன்படுத்திய ஒரு வகை நச்சுத் திரவம் / வாயு காரணமாக முஸ்லிம்கள் பெரும் இழப்புக்களைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டதால், முற்றுகையைக் கைவிட்டு விட்டு தலைநகர் திரும்பியது முஸ்லிம் படை. இப்படையெடுப்பில் கலந்து கொண்ட மூத்த ஸஹாபியான அபூ அய்யூபுல் அன்ஸாரி முற்றுகைக் கால்த்தில் மரணமான போது, கொன்ஸ்தாந்தினோபிள் மதிலுக்கருகே நல்லடக்கம் செய்யப்பட்டார்.

இவ்வாறு சுமார் 20 வருடங்கள் ஆட்சி செய்த கலீபா முஆவியா தனக்குப் பின்னர் ஆட்சி செய்யக்கூடிய அடுத்த கலீபாவாக தனது மகன் யஸீதை நியமித்தார். கிலாபத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்களும் யஸீதின் நியமனத்தை ஏற்றுக் கொண்டனர். புனித நகர்களான மக்கா, மதீனாவுக்கு கலீபா முஆவியாவே நேரில் சென்று அப்பிரதேச மக்களைச் சந்தித்து தனது மகனின் நியமனத்தை ஏற்றுக் கொள்ள வழி செய்தார். ஆனால் நபித்தோழர்களான கலீபா அலியின் மகன் ஹுஸைன், கலீபா உமரின் மகன் அப்துல்லாஹ், கலீபா அபூபக்கரின் மகன் அப்துர் ரஹ்மான் முதலானோர் கலீபாவின் வாரிசு நியமனத்தை ஏற்க மறுத்தனர். முஆவியாவின் இப்புதிய நடைமுறை கிலாபதுர் ராஷிதாவின் நடைமுறைக்கும் இஸ்லாமிய நெறி முறைகளுக்கும் முரணாகவே அமைந்திருந்தது. இக்காலை யஸீதை விட மிகவும் திறமை வாய்ந்த பல நபித்தோழர்கள் இருந்ததனால் அவர்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் தோன்றுவதைத் தடுப்பதற்காகவே, முஆவியா யஸீதை நியமித்தார் எனக் கூறுவோரும் உளர்.

இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய அரசியல் ஞானம் மிக்க ஆட்சியாளர்களில் குறிப்பிடத்தக்கவராகவும் கருதப்படும் முஆவியா, சாந்தம், அடக்கம் முதலாம் பண்புகளின் உறைவிடமாகவும் திகழ்ந்தார். கலீபா முஆவியா அடிக்கடி பின்வருமாறு கூறுபவராக இருந்தார். "ஒரு பிரச்சினையை எனது கசையால் தீர்க்க முடியுமாயின் அங்கு நான் வாளைப் பிரயோகிக்க மாட்டேன். குறித்த அதே பிரச்சினைக்கு எனது நாவினால் தீர்வு வழங்க முடியுமாயின் அப்போது எனக்கு கசையும் அவசியப்படாது." கி.பி.680 (ஹி.60)ல் கலீபா முஆவியா காலமானார். இவரைப் பற்றி பேராசிரியர் ஹிட்டியின் கருத்து நோக்கத்தக்கது.
"He was not only first but also the best of the Arab Kings" (history of the Arabs)

கலீபா யஸீத்

கலீபா முஆவியாவைத் தொடர்ந்து ஹி.60ல் ஆட்சிக்கு வந்த அவரது மகன் யஸீதுடைய ஆட்சியின் போது இஸ்லாமிய கிலாபத் வரலாற்றில் பரம்பரை ஆட்சி ஆரம்பமாகியது. அந்த வகையில் வாரிசு நியமனத்துக்கு வித்திட்டவராக கலீபா முஆவியா கருதப்படுகிறார். கிலாபதுர் ராஷிதாவில் இருந்து உமைய ஆட்சியை வேறுபடுத்திக் காட்டும் பிரதான அம்சமாகவும் பிரி கோடாகவும் இந்த வாரிசு நியமனம் அமைந்தது.

கலீபா முஆவியா இள்மையில் யஸீதின் தலைமையில் கொன்ஸ்தந்திநோபிளை வெற்றிகொள்ள ஒரு பெரும் பாடை ஒன்றை அனுப்பி வைத்தார். ஒரு சமயம் நபியவர்கள் இப்படையெடுப்பு பற்றி முன்னறிவிப்புச் செய்ததுடன் அதில் கலந்து கொள்வோருக்கு நன்மாராயமும் கூறியிருந்தார்கள்.

கலீபா யஸீத் இயல்பிலேயே  இரு வேறுபட்ட குணவியல்புகளைக் கொண்டிருந்தார். அன்பு, இரக்கம், வீரம் நிறைந்தவராகவும் நிர்வாகம், ஆட்சி முதலாம் அம்சங்களில் உறுதியானவராகவும் திகழ்ந்த அவரிடம் தவறிழைத்தல், பாவம் செய்தல் போன்ற அம்சங்களும் காணப்படவே செய்தன. உயரமாகவும் ஒல்லியாகவும் இருந்த இவர் அடிக்கடி மது அருந்துவதும் நாய் வளர்ப்பதும்  அவரது வாடிக்கையாக இருந்தன. தனது அன்னையைப் போலவே இவர் ஒரு கவிஞராக இருந்தார். பாரசீக கவிஞன் ஹாபிஸ் தனது தொகுப்பான தீவின் முதல், இறுதி அடிகளை யஸீதின் கவிதை வரிகளாலேயே அலங்கரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவரிடம் காணப்பட்ட சில தீய நடத்தைகள் காரணமாக இவரது ஆட்சி பற்றி திருப்தி கொள்ளாதவர்களும் உமைய கிலாபத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களும் கலீபா யஸீத் பற்றிப் பல குற்றச்சாட்டுக்களைப் புணைந்து கூரி வருகின்றனர்.

கர்பலாச் சம்பவம்
கலீபாயஸீதின் நியமனத்தை ஹுஸைன் மாத்திரமன்றி கூஃபா வாசிகளும் எதிர்த்து நின்றனர். எனவே, கூபாவுக்கு வந்தால் ஹுஸைனுக்கு ஆதரவு நல்குவதாகக் கூறி கூஃபாவாசிகள் ஹுஸைனை கூஃபா வருமாறு அழைப்பு விடுத்தனர். இதனை நம்பி ஹுஸைன் கூஃபா செல்ல முற்பட்ட போது அங்கு செல்ல வேண்டாமென்றும் அப்பிரதேச மக்கள் அடிக்கடி மனம் மாறக்கூடிய உறுதியற்ற உள்ளத்தைக் கொண்டவர்கள் என்றும்  கூறி ஹுஸைனின் ஆதரவாளர்கள் அவரைத் தடுக்க முற்பட்டனர். அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் மாத்திரமே கூஃபா செல்வது நல்லதென்று எதிரிடையாகக் கூறி ஆர்வமூட்டினார். ஈற்றில் கூஃபா வாசிகளின் ஆசை வார்த்தைகளுக்கு இரையான ஹுஸைன் தனது பரிவாரங்களுடன் கூஃபா செல்லத் தீர்மானித்தார்.

சுமார் 100 பேர் கொண்ட  தனது பரிவாரங்களுடன் கூஃபா சென்ற ஹுஸைன் ஸிபாலா எனும் இடத்தை அடைந்த போது, கூஃபா வாசிகள் யஸீதினால் புதிதாக நியமிக்கப்பட்ட உபைதுல்லாஹ் பின் ஸியாதின் கொடூரங்களுக்கு அஞ்சி யஸீதிற்கு ஆதரவாக நிற்கிறார்கள் என்ற அதிர்ச்சி தரும் செய்தியை அறிந்து கொண்டார். கூஃபாவின் நிலவரம் பற்றி அறிந்து வர ஹுஸைனினால் அனுப்பப்பட்ட அதிலும் முக்கியமான சிலரும் உபைதுல்லாஹ்வின் வேட்டைக்குப் பலியாகியிருந்தனர். இந்நிலையிலும் ஹுஸைன் கூஃபா சென்றார். இடையில் கர்பலா எனும் இடத்தை அடைந்த போது உமையாப் படைக்குத் தலைமை தாங்கி வந்த அம்ர் இப்னு ஸஅத் தன்னிடம் சரணடையுமறு இமாம் ஹுஸைனைப் பணித்தார்.

இமாம் ஹுஸைனுக்கும் அம்ருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவில் ஹுஸைன் பின்வரும் வகையிலான 3 நிபந்தனைகாளை முன்வைத்தார்.
  1. தன்னையும் தனது பரிவாரங்களையும் மக்காவுக்கு அல்லது மதீனாவுக்கு செல்ல அனுமதித்தல்.
  2. டமஸ்கஸ் சென்று யஸீதைக் கண்டு பேச அனுமதித்தல்
  3. தான் விரும்பும் எந்த இடத்துக்காவது சென்று வாழ அனுமதித்தல்

இந்த நிபந்தனைகளை அம்ர் கூஃபா கவர்னர் உபைதுல்லாஹ்விடம் முன்வைத்தார். நிபந்தனையை ஏற்றுக்கொள்ள மறுத்த உபைதுல்லாஹ் நிபந்தனையின்றிச் சரணடையுமாறும் யஸீதை கலீபாவாக ஏற்றுக்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.

சரணடைய மறுத்த இமாம் ஹுஸைனையும் அவரது பரிவாரங்களையும் எதிராளியினர் (Hostile troops) சுற்றி வளைத்துக் கொண்டனர். யூபரடீஸ் நதியிலிருந்து நீர் அருந்தவும் தடை விதிக்கப்பட்டது. முஹர்ரம் 10ம் நாள் ஹுஸைனுக்கு எதிரான உமையாக்களின் அழுத்தம் அதிகரித்தது. ஒரு பக்கம் இமாம் ஹுஸைனின் யுத்தப் பயிற்சி கூட இல்லாத சிறு படையும் மறுபுறம் இரணுவப் பயிற்சி பெற்ற கணிசமான அளவிலான உமையாப் படையினரும் கர்பலாப் பாலையில் சமபலமற்ற நிலையில் மோதிக் கொண்டனர். இந்த யுத்ததில் ஹுஸைனின் படையினருக்கு தமது உயிர்களைத் தியாகம் செய்வதை விட வேறு ஒரு தெரிவு அங்கிருக்கவில்லை.

கொலை வெறியர்கள் ஹுஸைனின் தலையை வேறாகத் துண்டித்தனர். தலையற்ற முண்டத்தை (உடலை) அதன் மேலால் குதிரைப் படையை அங்குமிங்குமாகச் செல்லவிட்டு உருக்குலைத்தனர் - சிதைத்தனர். எஞ்சியோர் கொடூரமான வன்முறைகளுக்கும் அவமானங்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர். ஹுஸைனின் அணியில் இருந்த ஆண்களைக் கொன்றொழித்தனர். இச்சம்பவம் கர்பலா மைதானத்தில் மட்டுமன்றி இஸ்லாமிய வரலாற்றிலும் கறை படிந்த ஓர் ஓர் அத்தியாயத்தையே தோற்றுவித்தது. கண்களைக் குளமாக்கும் இக்கொடூர நிகழ்வில் காய்ச்சல் காரணமாக ஹுஸைனின் இள்வல் அலி மாத்திரமே உயிர் தப்பினார். இவர் பிற்காலத்தில் ஸைனுல் ஆப்தீன் எனும் பெயரில் மக்கள் மத்தியில் அறிமுகம் பெற்றார்.

உள்ளத்தை உறுத்தும் இத்துயர கர்பலா நிகழ்வு முஸ்லிம் உலகின் அத்திவாரத்தையே பலமாக ஆட்டம் காணச் செய்தது. மட்டுமன்றி கடந்த 14 நூற்றாண்டுகளாக இப்பயங்கரச் சம்பவத்தின் நினைவுகள் இஸ்லாமிய வரலாற்றினைக் கறை படியச் செய்யும் வகையில் நிழலாய்த் தொடர்ந்தும் வந்து கொண்டிருக்கின்றது. For the last 14 hundred years, this trim tragedy has continued to cast the dismal shadow our. (History of Islam) இதனையே பேராசிரியர் ஹிட்டி, "கர்பலாவில் ஹுஸைன் சிந்திய இரத்தம் தான் ஷீஆக்களின் தோற்றத்துக்கான வித்தாக அமைந்தது." எனக் குறிப்பிடுகிறார். (History of the Arabs) கர்பலாவில் உமையாக்கள் இழைத்த கொடூரங்கள் தாம் பின்னாளில் உமையாக்களின் வீழ்ச்சிக்கும் காரணமாய் அமைந்தது.
கர்பலாச் சம்பவம் பற்றிய Gibbonஇன் கூற்றும் குறிப்பிடத்தக்கது. "கர்பலாவின் கொடூரம் பல யுகங்கள் கடந்த நிலையிலும் பல தேசங்களிலும் கவலையோடு நினைவுபடுத்தப்படும் ஓர் அம்சமாகத் திகழும்." (Decline and fall of the Roman Empire)

ஹிஜ்ரி 61ல் இடம்பெற்ற இந்த யுத்ததின் போது துண்டிக்கப்பட்ட இமாம் ஹுஸைனின் தலை கூஃபாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எஞ்சியோர் டமஸ்கசுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர், ஹுஸைனின் தலையுடன். இது கண்டு அதிர்ந்த யஸீத் கண்ணீர் சிந்தியவராக "நான் இவ்வாறு செய்யுமாறு உத்தரவிடவில்லை. இதற்குத் துணை செய்த உபைதுல்லாஹ்வுக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்" எனக் கூறினார். இத்தோடு நில்லாது, ஹுஸைனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தன்னோடு சில நாட்கள் தங்கச் செய்து தனது அனுதாபத்தையும் வெளிப்படுத்தி பல நங்கொடைகளையும் கொடுத்து அவர்களை மதீனாவுக்கு அனுப்பி வைத்தார் யஸீத்.

கர்பலாவின் விளைவுகள்

இஸ்லாமிய வரலாற்றை ஒரு குலுக்குக் குலுக்கிய இந்தக் கர்பலாச் சம்பவம் முஸ்லிம் சமூகத்தில் பல அரசியல், சமயப் பிரிவுகள் தோற்றம் பெறவும், இஸ்லாத்துக்கெதிராக பல சூழ்ச்சிகள் முடுக்கிவிடப்படுவதற்கும் காரணமாக அமைந்தது. கர்பலாவைத் தொடர்ந்து மக்காவிலும் மதீனாவிலும் ஏற்பட்ட பதற்ற நிலையால் மக்கள் கலீபா யஸீதுக்கு எதிராகக் கிள்ர்ச்சி செய்தனர். கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த யஸீதின் படை மக்கா, மதீனா நகர்களை முற்றுகையிட்டது. சுமார் 3 மாதங்கள் நீடித்த இம்முற்றுகை யால் இந்நகர் மக்களின் இயல்பு நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். இவ்வேளையில்  2 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன.
  1. ஹிஜாஸ் மக்களின் ஆதரவுடன் அப்துல்லாஹ் பின் ஸுபைர் கலீபா ஆனார்.
  2. ஹிஜ்ரி 64ல் கலீபா யஸீதின் மரணம்.

ஹிஜ்ரி 60ல் கலீபா முஆவியா காலமானதைத் தொடர்ந்து அவரது மகன் யஸீத் வாரிசு நியமன அடிப்படையில் அடுத்த கலீபாவாக ஆட்சியில் அமர்ந்தார். யஸீதின் பதவியேற்பைத் தொடர்ந்து இஸ்லாமிய அரசியல் வரலாற்றில்  பரம்பரை ஆட்சிக்கு வித்திடப்பட்டது. உமைய கிலாபத்தை கிலாபதுர்-ராசிதா ஆட்சியில் இருந்து வேறுபடுத்திக்காட்டும் பிரிகோடாகவும்  இந்த அம்சமே அமைந்தது.

கலீபா யஸீதின் காலத்தில் பேராசிரியர் ஹிட்டி குறிப்பிடுவதைப்போல முஸ்லிம் சமூகத்தினதும் இஸ்லாமிய அரசியல் வரலாற்றினதும் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்தகோரமும் துயரமும் மிகுந்த கர்பலாச் சம்பவத்தைத் தவிர குறிப்பிடத்தக்க வேறு எந்தவொரு நிகழ்வும் இடம் பெறவில்லை.சுமார் மூன்றாண்டுகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட நிலையில் ஆட்சி புரிந்த இவர், தனது 38வது வயதில் காலமானார்.

யஸீதின் மரணத்தைத் தொடர்ந்து அவரது புதல்வர் 2ம் முஆவியா தனது 21ம் வயதில் ஆட்சியாளராக்கப்பட்டார். இக்காலப்பகுதியில் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் மக்கா, மதீனா பிரதேசங்களை உள்ளடக்கிய ஹிஜாஸின் ஆளுனராகத் தன்னைப் பிரகடனம் செய்து ஆட்சி புரிந்து வந்தார். இவ்வேளையில் மர்வானியர் எனப்பட்ட உமையாக் கோத்திரத்தின் பிறிதொரு பிரிவினர் ஸிரியாவில் மர்வானின் தலைமையில் தமது ஆட்சியை நிறுவினர்.மர்வானியரில் முதன்மையானவரான மர்வான் இப்னு ஹகமின் ஆட்சியோடு ஸுப்யானியர் எனப்பட்ட முஆவியா வழி வந்த ஆட்சி மரபு முடிவுக்கு வந்தது.ஹிஜ்ரி 64ல் மர்வான் மக்களின் பைஅத்தைப் பெற்று கலீபாவானார். இவர் உமையாவின் இரண்டாவது மகன் அபுல் ஆஸின் புதல்வர் ஹகம் என்பவரின் புத்திரராவார்.

யஸீதின் காலத்தில் காணப்பட்ட குழப்பங்களும் உட்பூசல்களும்  இவரது காலத்திலும் தொடர்ந்தன. இவர் தனதாட்சிக் காலத்தில் பின்வரும்  முக்கிய சவால்களுக்கு முகம்கொடுத்தது மாத்திரமின்றி அவற்றை வெற்றிகரமாக முறியடிக்கவும் செய்தார். 
  1. கிலாபத்தின் முக்கிய சில பகுதிகளை அப்துல்லாஹ் பின் ஸுபைர் கைப்பற்றியிருந்தார்.
  2. ஷீஆக்களும் காரிஜ்களும் உமையாக்களுக்கு எதிராகப் புரட்சி செய்தமை
  3. தவ்வாபீன்களின் கிளர்ச்சி

தனது ஆட்சிக்காலத்தில் தோன்றிய பிரச்சினைகளுக்கு முடிவுகட்டிய மர்வான் தனக்குப் பின்னர் தனது மகன் அப்துல் மலிக்கை அடுத்த வாரிசாக நியமனம் செய்தார். இவர் தான் மணந்திருந்த பிறிதொரு மனைவியான யஸீதின் விதவை மனைவியினால் கி.பி.685ல் மூச்சுத்திணறடிக்கப்பட்டுக் (Smother) கொலை செய்யப்பட்டார். ஒரு வருடம் மாத்திரமே மர்வான் ஆட்சி செய்தார்.

கலீபா அப்துல் மலிக்


மர்வானுக்குப் பின்னர் ஹி.65ல்  அப்துல் மலிக் உமையாக்களின் அடுத்த கலீபாவானார். ஹி.65ல் ஆட்சிக்கு வந்த இவர், நீண்ட காலம் உமையா கிலாபத்தை ஆட்சி செய்த மூன்று கலீபாக்களுள் இவரும் ஒருவராவார். ஹி.26ல் பிறந்த இவர் ஓர் ஆட்சியாள்ருக்கு இருக்க வேண்டிய தகைமைகளைப் பெற்றவராகவும், உமையாக்கள் மத்தியில் தனிச் சிறப்பும், பரந்த அறிவும் படைத்தவராகவும் விளங்கினார். அப்டுல் மலிக்கின் நாங்கு புதல்வர்கள் இவரின் பின் ஒருவர் பின் ஒருவராக ஆட்சி பீடமேறியதால் கலீபா அப்துல் மலிக் "அரசர்களின் தந்தை" என்ற சிறப்புப் பெயர் கொண்டும் அழைக்கப்பட்டார். இவர் ஆட்சிக்கு வந்த வேளை இஸ்லாமியப் பேரரசானது அடித்தளம் தளர்ந்து ஆட்டம் காணும் கட்டடம் ஒன்றைப் போல காட்சியளித்தது. அதனை வீழ்ந்து விடாமல் நிலைப்படுத்திக் கட்டிக் காத்ததனால் "உமையாக் கிலாபத்தின் இரண்டாவது நிர்மாணி" என்றதொரு சிறப்புப் பெயரும் இவருக்குண்டு.

முஸ்லிம் கிலாபத் பல்கோணச் சிக்கலொன்றில் சிக்கித்தவித்த ஓர் இக்கட்டான நிலையிலேயே அப்துல் மலிக் ஆட்சிக்குகு வந்தார். அவ்வகையில் அவர் எதிர்நோக்கிய சவால்களை பின்வருமாறு நோக்கலாம்.
  1. அவருக்கு சிரிய மக்களின் ஆதரவோ, உமையாக்களின் முழுமையான ஒத்துழைப்போ கிடைக்கவில்லை. உமையாக்களில் தோன்றியிருந்த ஸுப்யானிய, மர்வானிய பிரிவினையே இதற்குக் காரணமாய் அமைந்தது. இந்நிலை உமையாக் கோத்திரத்துக்குள்ளேயே அவருக்குப் பலத்த எதிர்ப்பை உருவாக்கியது. காலித் பின் யஸீதும் அம்ர் பின் ஸஈத் பின் ஆஸும் இவரின் அரசியல் எதிரிகளாக மாறினர்.
  2.  அப்துல்லாஹ் பின் ஸுபைர் அரேபியாவிலும் இராக்கிலும் தனது ஆட்சியை நிலைப்படுத்தி இருந்தார். உமைய ஆட்சிக்கு மிகப் பெரும் சவாலாக விளங்கிய இவர் அப்துல் மலிக்கின் ஆட்சிப் பிரதேசத்தை விட விசாலமான பகுதிக்கு ஆட்சியாள்ராக விளங்கினார். அரேபியா, இராக், மெசபதேமியா, குராஸான், எகிப்து, கூஃபா, பஸரா முதலாம் பிரதேசங்கள் இவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.
  3. முக்தார் என்பவர் கூஃபாவில் வாழ்ந்த தவ்வாபீங்களையும் ஷீஆக்களையும் ஒன்று சேர்த்து ஹுஸைன் (ரழி) அவர்களை கொலை செய்தோரைப் பழிவாங்கும் நடவடிக்கையில் முனைப்புக் காட்டினார் - புரட்சி செய்தார்.
  4. தீவிர கொள்கைப் பற்று மிக்க காரிஜ்களும் பிறிதொரு புறமாக நின்று குழப்பங்களை விளைவித்துக் கொண்டிருந்தனர்.
  5. இவ்வாறு உள்நாட்டில் விளைந்து கொண்டிருந்த குழப்பங்களையெல்லாம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முனைந்த ரோமர், முஸ்லிம் பிரதேசங்களை ஆக்கிரமிப்புச் செய்யும் முயற்சியில் ஈடுபாடு காட்டினர்.

சவால்களை எதிர்கொண்ட விதம்


  1.காலித் பின் யஸீதின் பகைமையைச் சாதுரியமான முறையில் சாதித்துக்கொண்ட அப்துல் மலிக் தனது அடுத்த எதிரியான அம்ர் பின் ஸஈதை மாளிகைக்கு அழைத்து தனது கரத்தினாலேயே வெட்டிக் கொன்றார்.
  2. அப்துல்லாஹ் பின் ஸுபைருக்குப் பாதகமான ஒரு சூழ்நிலை உருவான போது, அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய அப்துல் மலிக் முதலில் ஸுபைரின் மாகாண அதிகாரிகளுள் ஒருவராக இருந்த முஸபை எதிர்க்க ஒரு படையை அனுப்பினார். நடந்த யுத்தத்தில் முஸ்அப் கொல்லப்பட்டதோடு முழு இராக்கும் அப்துல் மலிக் வசமாகியது.
  3. இந்நிலையில் ஸுபைரை எதிர்ப்பதற்காக ஹஜ்ஜாஜின் தலைமையில் ஹி.72ல் (கி.பி.692) ஹிஜாஸுக்கு ஒரு படை அனுப்பப்பட்டது. ஹிஜாஸை மிக இலகுவாகக் கைப்பற்றிக்கொண்ட இப்படை அடுத்தகட்ட நடவடிக்கையாக மக்காவை முற்றுகையிட்டனர். ஹஜ்ஜாஜின் படை மக்காவை தீயிட்டுக் கொழுத்தியதோடு மக்களையும் ஆயுதங்களுக்கு இரையாக்கினர்.
  4. பயங்கரமான இந்நிலைமையில் இருந்து மக்காவை காப்பாற்றும் வகையில் அன்னை அஸ்மாவின் தூண்டுதல் வர்த்தைகள் கேட்டுக் குதித்தார் அப்துல்லாஹ் பின் ஸுபைர். இப்போரில் அவர் உயிர் நீத்தார். இவரின் மரண்த்தோடு இஸ்லாமிய சாம்ரஜ்யம் முழுவதற்குமான தனிப் பெரும் கலீபா என்ற ஸ்தானத்தை கலீபா அப்துல் மலிக் அடைந்தார்.
  4. முக்தாரின் தலைமையில் கிளம்பிய புரட்சியை முறியடிப்பதற்காக அப்துல் மலிக், கசாப்புப் படை வீரன் எனப்பட்ட எனப்பட்ட உபைதுல்லாஹ் பின் ஸியாதின் ஒரு ஆயத்தம் செய்தார். இதை அறிந்த முக்தாரும் இப்றாஹீம் அல் அஷ்தார் என்பவரின் தலைமையில் ஒரு படையைத் திரட்டி அனுப்பினார்.  யுத்தத்தில் வெற்றி பெற்ற முக்தாரின் படை உபைதுல்லாஹ்வை துண்டம் துண்டமாக வெட்டிக் கொன்றது.
  5. உமையாக்களையும் அவர்களது மாகாண அதிபதிகளையும் குற்றம் சுமத்திக் குற்றம் விளைவித்த காரிஜ்கள் தாருல் இஸ்லாம் எனப்பட்ட இஸ்லாமிய நாட்டை எதிர்த்து நிற்பது கடமை என்றும் கூறி வந்தனர். சிலவேளைகளில் அவர்கள் தமக்குள்ளேயும் பிளவுபட்டுக் கொண்டனர். ஹாரிஜ்களால் ஏற்பட்ட தலியிடியைப் போக்கும் வகையில் தள்பதி முஹல்லபின் தலைமையில் ஒரு படையை அனுப்பி அவர்களின் கொட்டத்தை அடக்கினார்.
6. ரோமர்கள் எல்லைப்புறங்களில் குளப்பம் விளைவித்தபோது அவர்களையும் வெற்றிகரமாக முறியடித்தது மட்டுமன்றி அவர்களது சில பிரதேசங்களையும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தோடு இணைத்துக் கொண்டனர்.   


வட மேற்காபிரிக்காவில் அட்லஸ் மலைப் பகுதியில் வாழ்ந்த Berber இனக் காட்டுவாசிகளின் தலைவியாக Kahina எனும் அபார சக்தி கொண்ட ஒரு பெண் இருந்து வந்தாள். அவள் தனது மாயாஜால வித்தைகளால் அப்பகுதி மக்களை தன் பக்கம் சார்ந்து நிற்க வைத்திருந்தாள். இவள் மர்வானின் காலத்திலேயே முஸ்லிம் பிரதேசங்களில் சிலவற்றைக் கைப்பற்றிக் குழப்பம் செய்து வந்தாள். அப்துல் மலிக்கின் காலத்தில் இவள் முஸ்லிம்களை வலிந்து போருக்கழைத்தாள். இதனை ஏற்றுக்கொண்ட கலீபா கி.பி.702ல் ஹஸ்ஸான் இப்னு நுஃமானின் தலைமையில் காஹினாவின் கொட்டத்தை முறியடிப்பதற்காக வட ஆபிரிக்காவை நோக்கி அனுப்பி வைத்தார். முதல் கட்டமாக பறிபோயிருந்த கைருவானைக் கைப்பற்றிய பின் காஹினா வாழ்ந்த அட்லஸ் மலைத்தொடரை நோக்கி தன் படையை வழி நடத்தினார். காஹினாவுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நடைபெற்ற யுத்ததில் காஹினா, பிர்ருல் காஹினா (Kahina's Well) எனுமிடத்தில் கொல்லப்பட்டதோடு அவளது தலையும் துண்டிக்கப்பட்டு அப்துல் மலிக்கின் பார்வைக்காக டமஸ்கஸ் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அபார வெற்றி தான் முஸ்லிம்களை வட ஆபிரிக்காவின் வெற்றி மிக்க நாயகர்களாக மாற்றியது. அப்துல் மலிக்கின் காலத்தில் குவாரிஸ்ம், சமர்க்கந்த், குஷ், ரோமின் சில பகுதிகள் சிலவும் வெற்றி கொள்ளப்பட்டன.

அப்துல் மலிக்கின் சேவைகள்

1. இலக்கியத் துறை ஈடுபாடு
கவிதைகளையும் கவிஞர்களையும் ஆதரித்த இவர் தனது அரசவையில் ஃபரஸ்தக் என்ற உலகப் புகழ் பெற்ற கவிஞரை அரசவைக் கவிஞராக நியமித்தார்.
2. கட்டடக் கலையில் இருந்த ஆர்வத்துக்கு எடுத்துக்காட்டாக  ஜெரூஸலத்தில்  அமிந்துள்ள புனித கற்பாறை மீது அவரால் நிறுவப்பட்ட கும்மட்டம் திகழ்ந்து வருகின்றது. இராக்கில் வாஸித் நகர் நிர்மாணம் Tunis in North Africa .
3. இவர் அறிமுகப்படுத்திய புதிய தேசியமயமாக்கல் கொள்கையின் அடிப்படையில் அரபு மொழியை உத்தியோக மொழியாக பிரகடனம் செய்தார். இதற்கு முன்னர் அந்தந்தப் பிரதேச மொழிகளிலேயே நிர்வாக விடயங்கள் எழுதப்பட்டு வந்தன. நிர்வாக விடயங்களை இலகுபடுத்தும் வகையில்  அரபு மொழிக்கு உத்தியோகபூர்வ அந்தஸ்தை வழங்கினார். இதனால் பிற இன மக்களும் இம்மொழியைக் கற்பதற்கும், அதன் செல்வாக்கு ஏனைய நாடுகளில் பரவுவதற்கும் வழி பிறந்தது.
4. அரபு நாணயங்களில் அரபு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இஸ்லாமிய நாணயங்களை வெளியிட்டு வைத்தார். இதற்கு முன்னர் நாணயங்களில் வேற்று மொழி எழுத்துக்களே பொறிக்கப்பட்டிருந்தன.
5. நாணய வெளியீட்டுக்காக முதன் முதலில் நாணயம் அச்சிடும் நாணயச் சாலை ஒன்றையும் நிறுவினார். இந்த அருங்காரியத்தை இஸ்லாமிய கிலாபத் வரலாற்றில் சாதித்த முதல்வராக இவர் கருதப்படுகிறார்.
6. கலீபா முஆவியா காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த தபாற் சேவையைச் சிர்திருத்தி கலீபா அப்துல் மலிக் குதிரைகளையும், பயிற்றப்பட்ட புறாக்களையும் தபால்களை எடுத்துச் செல்ல வழி செய்தார். இதன் காரணமாக நாட்டுனடப்புக்கள் யாவும் உடனுக்குடன் மக்களுக்குக் கிடைத்தன.
7. இவரது காலத்து நீதித்துறைச் சீர்திருத்தமும் முக்கியமானதாகும். இவர் ஆட்சிக்கு வருமுன்  நீதித் துறையின் முழுப் பொறுப்பும் காழிகள் எனப்பட்ட நீதிபதிகளிடமே இருந்து வந்தது. இத்துறையில் விஷேட கவனம் செலுத்திய அப்துல் மலிக் நீதி நிர்வாகத்துக்கு உதவியாக நீதிபதிகளை நியமித்ததோடு தானே பிரதம நீதியரசராகவும்  கடமையாற்றிக் குறித்த தினத்தில் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பும் வழங்கி வந்தார். நீதித் துறை தொடர்பான விடயங்களின் பதிவுகளைப் பாதுகாப்பதற்கெனத் தனிச் சபை ஒன்றும் இவரால் நிறுவப்பட்டது. தனியான நீதிமன்றங்களும் முதன் முதலில் இவராலேயே நிறவப்பட்டன.
8. கிலாபத்தில் ஏற்பட்ட அமைதியைத் தொடர்ந்து தேவைக்கு மேலதிகமான இராணுவ வீரர்களைச் சேவையிலிருந்து நீக்கினார். இவர்கள் விவசாயம், வியாபாரம் முதலாம் தொழில்களில் ஈடுபட வழி செய்யப்பட்டதால் ஸ்காத், கராஜ் போன்ற வரிகளை அர்சுக்குச் செலுத்தும் அளவுக்கு அவர்கள் மாறினர். இதனால் நாட்டில் நிதித் துறையில் ஏற்பட்ட நெருக்கடி ஓரளவுக்கு நீங்கியது.

கலீபா மலிக் கடைப்பிடித்த அரபு மயம் அல்லது அரபுத் தேசிய மயமாக்கள் கொள்கை கிலாபத்தின் நிர்வாக அலுவல்களை இலகுபடுத்திய போதிலும் உமையாக்களின் எழுச்சிக்கு அது பெரும் தடையாகவே அமைந்தது. அரபியரல்லாத மவாலிகள் உமையாக்கள் மீது அதிருப்தி கொண்டனர். குறிப்பாக இரான், இராக் பகுதிகளில் வாழ்ந்த மவாலிகள் இந்த நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உமையாக்களின் வீழ்ச்சிக்குக்கூட இது ஒரு காரணமாக அமைந்தது.

இவ்வறு உமைய கிலாபத்தை மீண்டும் உயிர்ப்பித்து சுமார் 20 வருடங்கள் வெற்றிகரமாக ஆட்சி செய்த கலீபா அப்துல் மலிக் கி.705ல் மரணமானார். இவரைத் தொடர்ந்து இவரது மூத்த மகன் அல்-வலீத் மலிக் மரணித்த அதே ஆண்டில் உமையாக்களின் அடுத்த கலீபாவாக வாரிசு நியமன அடிப்படையில் தெரிவானார்.  வலீதின் காலத்தில் நாட்டில் அமைதி நிலவியதால் கிலாபத்தை விருத்தி செய்வதிலதிக கவனம் செலுத்தினார். இந்தியா முதல் ஸ்பைன் வாரை இவரது ஆட்சி விஷாலிக்கப்பட்டிருந்தது.உமைய கலீபாக்கள் வரலாற்றிலிவ்ரது காலம் புகழ்மிக்க ஒரு காலமாகும்.ஏக காலத்தில் ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்களிலும் இஸ்லாம் பரவ இவர் காரணமாக இருந்தார்.இதனையே வில்லிய மூர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்."There is no other reign not excepting even that of Umar in-which Islam so spread abroad and was consolidated" (History of the Arabs). உலகிலுள்ள மிகப்பெரிய மஸ்ஜித்களில் ஒன்றான டமஸ்கஸ் ஜாமியா மஸ்ஜித் கலீபா வலீதினாலேயே நிறுவப்பட்டது.

இ.பி. 715ல் கலீபா வலீதின் மரணத்தைத் தொடர்ந்து அவரது சகோதரர்களுள் ஒருவரான ஸுலைமான் இப்னு அப்துல் மலிக் அதே ஆண்டில் கலீபாவானார். இரண்டு வருட குறுகிய கால ஆட்சியின் பின்ன்னர் கி.பி.717ல் கலீபா ஸுலைமான் மரணமானார். இவர் தனது மரணத்தறுவாயில் தனக்குப்  பின் அடுத்த கலீபாவாக தனது தந்தையின் சகோதரரான அப்துல் அஸீஸின் மகன் உமரை நியமிப்பதாக நியமனப் பத்திரமொன்றை எழுதி வைத்திருந்தார். வகை வகையாய் உணவு சமைத்து உண்பதில் (Glutton) பிரியராக இருந்த இவர் செய்த சிறப்பு மிக்க பணியாகவும் இந்-நியமனப் பத்திரமே அமைந்தது. He was a glutton and was known for the voracity of his appettite. That was the cause of his death at a young age. (Hostory of Islam - Prof. Masudul Hasan)


கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) ஹி: (99 - 101, 717 - 720)

கலீபா ஸுலைமானையடுத்து அவர் எழுதி வைத்திருந்த நியமனப் பத்திரத்தின் பிரகாரம் உமைய வம்சத்தின் அடுத்த கலீபாவக உமர் இப்னு அப்துல் அஸீஸ் அட்சிக்கு வந்தார். இவரது தந்தை அப்துல் அஸீஸ், கலீபா மர்வானின் மகனும் கலீபா அப்துல் மலிக்கின் சகோதரருமாவார்.

வலீதின் ஆட்சிக்காலத்தில் உமர் ஹிஜாஸின் ஆளுநராகச் செயல்பட்டார். இஸ்லாமிய நெறிமுறைகளைப் பேணியதாகவே அவரது நிர்வாகச் செயற்பாடுகள் அமைந்திருந்ததால் அப்பிராந்திய மக்களால் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார். இதனால் அவரது பெயரும் புகழும் பிரபல்யமடைந்தன. ஹிஜாஸில் இவரது நல்லாட்சியால் உண்டான அமைதியும் மகிழ்ச்சியும்  கண்ட , அதுவரை ஹஜ்ஜாஜின் கெடுபிடிகளுக்கு உள்ளாகி அவரடு ஆட்சியில் அதிருப்தி அடைந்திருந்த மக்கள் அதிக எண்ணிக்கையில் மதீனாவில் வந்து குடியேறினர். தனது மாகாணத்திலிருந்து வெளியேறும் தேச துரோகிகளுக்கு கவர்னர் உமர் அடைக்கலம் அளிப்பதாக ஹஜ்ஜாஜ் கலீபாவிடம் முறையிடவே கலீபா வலீத் உமரைப் பதவி நீக்கம் செய்தது மட்டுமன்றி சிறையிலும் அடைத்தார்.

வலீதின் பின் ஆட்சிக்கு வந்த ஸுலைமான் உமரைச் சிறையில் இருந்து விடுவித்துத் தனது உற்ற துணையாகவும் பிரதம ஆலோசகராகவும் ஆக்கிக்கொண்டார். அத்துடன் நில்லாது தனக்குப் பின்னர் கலீபாவாக வரும் உரிமையையும் உமருக்கே வழங்கினார். கலீபா உமர் பின் அப்துல் அஸீஸ் கலீபா மலிக்கின் மகள் பாத்திமாவைத் திருமணம் செய்தார். இவரது தாயார் இரண்டாவது கலீபா உமர் (ரழி) யின் பேர்த்தியாவார். கலீபா ஸுலைமான் தன்னையே அவரின் வாரிசாக நியமனம் செய்துவிட்டுச் சென்றுள்ளார் என்ற செய்தியை அறிந்த உமர் மக்களை நோக்கி, "கலீபா ஸுலைமான் என்னைக் கலந்தாலோசிக்காமல் நான் விரும்பாத ஒரு காரியத்தைச் செய்துள்ளார். எனவே நீங்கள் வேறு ஒருவரைக் கலீபாவாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்"  எனக்கூறிய போது, " நீங்கள்தான் எமது கலீபா" என மக்கள் யாவரும் ஒருமித்துக் குரலெழுப்பினர். அப்போது உமர்  அவர்களை நோக்கி, "நான் இறைவனுடைய கட்டளைக்கு அடிபணிந்து நடக்கும் வரை என்னைப் பின்பற்றுங்கள்" எனக் கூறி பதவியை ஏற்றுக் கொண்டார். பதவிக்கு வந்த உமர் தனது ஆட்சியை கிலாபதுர் ராஷிதாக்களைப் போன்று இஸ்லாமிய நெறிமுறைகளைப் பேணி நடக்கக்கூடிய ஆட்சியாக அமைத்துக் கொண்டார்.

ஆட்சிக்கு வந்த உமர் தன்னை கலீபா ஸுலைமானின் வாரிசாகக் கருதாமல் கலீபா உமரின் வாரிசாகவே எண்ணிச் செயற்படத் தொடங்கினார். கலீபாவின் பயணத்தேவைக்காக அரச குதிரை அவர்களுக்குய் அளிக்கப்பட்ட போது அதனை ஏற்க மறுத்து தனது கோவாறு கழுதையை பயன்படுத்தலானார். கலீபாவுக்கென இருந்த அரச மாளிகைக்குச் செல்லாது தனது சிறு வீட்டிலேயே குடியிறுந்தார். இதுவே கலீபாவின் உறையிடமாகவும், அலுவலகமாகவும் இருந்தது. தனது பாதுகாப்புக்கென்று வழங்கப்பட்ட காவலர்களையும் ஏற்க மறுத்தது மட்டுமன்றி தனக்கு அல்லாஹ்வின் பாதுகாப்பே போதுமானது எனவும் கூறினார். உண்மையில் இத்தகைய பண்புகள் கலீபா உமர் மீண்டும் கிலாபதுர் ராஷிதாவின் நிழலாட்சி ஒன்றையே ஸ்தாபிக்க நாடியிருக்கிறார் என்பதைத் தெளிவாகக் காண்பிக்கின்றன. இவரது ஆட்சி சிறந்து விளங்கியதற்கு முக்கிய காரணங்களாக இரண்டு விடயங்களைக் குறிப்பிடலாம்.
  1. உமரிடம் காணப்பட்ட மார்க்க ஞானம்
  2. கவர்னராகப் பணிபுரிந்தபோது பெற்றுக்கொண்ட அனுபவங்கள்

கலீபா உமர் பின் அப்துல் அஸீஸ் தனதாட்சியில் பல மாற்றங்களைச் செய்தார். மக்கள் குறை கேட்டு ஆவண செய்த இவர், தனது உடமைகள் அனைத்தையும் 23000 திர்ஹம்களுக்கு விற்று, அப்பணத்தைப் பொது நிதியில் சேர்ப்பித்தார். கலீபா உஸ்மான் காலத்தில் நபியவர்களின் குடும்பத்தாரிடமிருந்து மர்வானால் அபகரிக்கப்பட்ட நிலத்துண்டுகளை மீண்டும் அவர்களிடமே பகிர்ந்தளித்தார். இது கண்டு உமையாக்கள் இவர் மீது வெறுப்பும், விரோதமும் கொள்ளலாயினர்.

இவருக்கு முன்பிருந்த உமைய கலீபாக்கள் அஜமிகளை அல்லது மவாலிகளை இரண்டாம் தரப் பிரஜைகளாகவே கருதி வந்தனர். ஆனால் இவர்கள் உமரின் காலத்தில் அரபிகளுடன் சரிசமமாகக் கணிக்கப்பட்டனர். பிற சமுதாயத்தினரான திம்மிகள் விடயத்தில் இவர் நீதியாக நடந்து கொண்டார். அவர்களுக்குத் தாராளமாக மதச் சுதந்திரம் வழங்கப்பட்டது. அவர்களது நலன்கள் நன்கு பாதுகாக்கப்பட்டதுடன் அவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த அநியாய வரிகளையும் நீக்கினார். பைதுல் மாலின் நிதி விவகாரத்தில் மிகவும் கண்டிப்புக் காட்டிய கலீபா, பொது மக்களை வருத்தி வரி வசூலிப்பதைத் தடுத்து நிறுத்தினார்.

கலீபா உமருக்கு முன்னைய காலத்தில் இருந்து வந்த நீதிதுறையில் கவர்னருக்கிருந்த எதேச்சதிகாரப்போக்கை நீக்கி, அத்துறை சார்ந்த பொறுப்புக்கள் நீதிபதிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. திம்மிகளது மதாலயங்கள் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்பட்டன. கலீபா முஆவியாவின் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் அலி (ரழி) அவர்களையும் அவரது குடும்பத்தினரையும் வெள்ளிக்கிழமை குத்பாக்களில் சபித்து வந்த மோசமான வழக்கை நிறுத்தினார். இஸ்லாமிய அழைப்புப் பணி புரிவதைத் தனது இலட்சியமாகக் கொண்ட கலீபா அதனை அரச ஆதரவில் உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளவும் வழி செய்தார்.

கிலாபத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பிர்சாரகர்களை அனுப்பி வைத்தார். சில போது அவரே நேரில் சென்று பிரசாரம் செய்தார். இஸ்லாமிய சட்டங்களையும் ஒழுக்கவியல் பெறுமானங்களையும் பாதுகாத்து அடுத்த பரம்பரைக்கு அளிக்கும் வகையில் ஹதீஸ்களைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டார். இக்கால்த்தில் வாழ்ந்த இமாம் ஸுஹ்ரி, இப்னு ஹஸ்ம் போன்ற மேதைகள் இத்துறையில் கலீபாவுக்கு உறுதுணையாக இருந்தனர். இவரது காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய பணிகளுள் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இவற்றுக்கு மேலாக நாட்டின் அபிவிருத்தியிலும் கவனம் செலுத்தினார். கிலாபத் முழுவதிலும் கிணறுகளும் வீடுகளும் மருத்துவமனைகளும் கட்டப்பட்டன. கைத்தொழில், விவசாயம் ஊக்குவிக்கப்பட்டன. திட்டமிட்ட அடிப்படையில் ஸகாத்தைத் திரட்டி பைதுல்மாலூடாக வழங்க வழி செய்யப்பட்டது. இதனால் இவரது காலத்தில் ஸகாத் வெறும் தகுதி கொண்டவர்களைக் காண முடியாது கொண்டவர்களைக் காண முடியாது போனதால் அந்த ஸகாத் வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

கண்டிப்புக்காட்ட வேண்டிய இடத்தில் கண்டிப்பாக நடந்து கொண்டார். ஒழுக்கவீனத்தை அவர் எச்சமயத்திலும் அனுமதிக்கவில்லை. ஜிஹாதின் போது  இஸ்லாத்தின் வரையறைகளை மீறக்கூடாதென வலியுறுத்தினார். போர்க்கைதிகள் நல்ல முறையில் நடத்தப்பட்டனர். அன்பையும் அறத்தையும் போதிக்கவென விஷேட சிறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

இவ்வாறு சாதனைக்கு மேல் சாதனை செய்த இஸ்லாமிய சிர்திருத்த வரிசையில் முதல்வராகக் கருதப்படுகின்ற கலீபா உமர் பின் அப்துல் அஸீஸ் ஹி.101ல் மரணமானார். இவர் நஞ்சூட்டிக் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

உமையாக் காலத்து நிர்வாக அமைப்பு
சட்டவாக்க உரிமை

இஸ்லாத்தின் இக்கருத்தியலை குலபாஉர் ராஷிதூங்கள் காலத்தைப் போலவே உமையாக்கள் காலத்தின் ஆட்சியாளர்கள் ஏற்று அமுல் நடத்தினர். தேவையின் நிமித்தம் இஜ்திஹாதும் மேற்கொள்ளப்பட்டாலும் கிலாபதுர் ராஷிதாவில் போல மஜ்லிஸ் - அஷ்ஷூரா மூலமன்றி தனிப்பட்ட முறையிலேயே மேற்கொள்ளப்பட்டது.

கலீபாத் தெரிவு
பரம்பரைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆட்சியாளர்களைத் தெரிவு செய்து கொண்ட அவர்கள் கலீபாவுக்கு அரசியல், ராணுவ, நிர்வாக, நிதி, நீதித் துறைகளின் தலைமை அதிகாரி அந்தஸ்து வழங்கினர். மஜ்லிஸ் - அஷ்ஷூரா பெயரளவிலேயே இயங்கியது. வாரிசு நியமன அடிப்படையில் தெரிவாகும் அடுத்த கலீபாவுக்கு நடப்பு கலீபா தலைநகரிலுள்ள பொது மக்களிடமும் உயர் அதிகாரிகளிடமும் பைஅத் பெறப்பட்டது. வெளிப் பிரதேச மக்களிடம் மாகாண கவர்னர்கள் மூலமாகத் தனது விசுவாச பிரமாணத்தை வழங்கினர். மொத்தத்தில் உமைய ஆட்சி முடியாட்சிக்கு இணையானதாகவே இருந்தது.

டமஸ்கஸ் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த உமையாக்களது ஆட்சியின் அடையாளச் சின்னமாக பிரம்பும் மோதிரமும் காணப்பட்டன. உமர் இப்னு அப்துல் அஸீஸைத் தவிர ஏனைய அனைத்து கலீபாக்களும் தமக்கென நிர்மாணிக்கப்பட்ட தனி மாளிகையிலேயே தங்கினர். பெரும்பாலும் தலைநகரிலேயே வாழ்ந்த கலீபாக்களுக்கு ம்ஸ்ஜித்களில் மக்ஸூரா எனப்பட்டதனி இடங்கள் அமைக்கப்பட்டதோடு அவர்கள் தொழுது முடியும் வரை மெய்க்காவலர்களால் பாதுகாக்கப்பட்டும் வந்தனர்.

தலைநகரையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளையும் கலீபாக்களே நேரடியாகக் கண்காணித்து வந்தனர். ஏனைய பகுதிகளைக் கவனிக்கவென கவர்னர்கள் நியமிக்கப்பட்டு உள்னாட்டு அலுவல்கள் அனைத்தும் அவர்களது பொறுப்பில் விடப்பட்டிருந்தன.

உமையாக் கால மாகாணங்கள்
  1. இராக் : இதற்குக் கிழக்கில் இருந்த சகல பகுதிகளும் இதன் கீழ் இருந்தது. (Babilonia, கார்தியா, ஈரான், சிந்து.......) தலைநகர் கூஃபா
  2. எகிப்து : இதன் மேற்கு, கிழக்குப் பகுதிகள்
  3. ஹிஜாஸ் : பஹ்ரைன், ஓமான் தவிர்ந்த முழு அரேபியாவும்
  4. ஜஸீரா : மெசப்பத்தேமியா, ஆர்மீனியா, அஸர்பைஜான், சின்னாசியா
  5. ஆபிரிக்கா : வட ஆபிரிக்கா, ஸ்பெய்ன், சிஸிலி, போல்டிக் தீவுகள்

வாலி எனப்பட்ட மாகாண கவர்னர்கள் தம்து தேவைக்கு ஏற்ப உதவி மாகாண அதிபதிகளையும் ஆமில் எனப்பட்ட இணைப்பு அதிகாரிகளையும் நியமித்துக் கொண்டனர். வெளிநாட்டு அலுவல்களில் கலீபாவின் அனுமதியைப் பெற வேண்டியிருந்த வாலிகள் ஐங்காலத் தொழுகையை நிறைவேற்றல், இராணுவத்துக்குத் தலைமை தாங்குதல், நீதி நிர்வாகத்துக்குப் பொறுப்பாக இருத்தல் போன்ற விடயங்களுக்கும்  பொறுப்பாக இருந்தனர்.

மாகாண நிதி நிதி நிர்வாகத்தைக் கவனிப்பதற்கென ஸாஹிபுல் ஸராஜ் எனப்பட்ட நீதித்துறை அதிகாரிகளும் ஒழுங்கு, கட்டுப்பாடு முதலானவற்றை நிலைநாட்ட ஸாஹிபுஷ் ஷுர்தா எனப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டிருந்தனர். நீதி நிர்வாகத்தைப் பேணவென காழிகள் நியமிக்கப்பட்டனர். உயர் நீதியரசரை கலீபா நியமிக்க மாகாணங்களுக்கான தலைமை நீதிபதிகளை உயர் நீதியரசரே நியமித்து வந்தார். மாகாண நீதிபதிகளுக்கு தமக்குக் கீழ் துணை நீதிபதிகளை நியமித்துக் கொள்வதற்கான உரிமை இருந்தது. இவர்கள் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
  1. தர்மச் சொத்துக்கள், அநாதைகளின் சொத்துக்களைப் பராமரித்தல்.
  2. வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளித்தல்.    
  3. சமயக் கடமைகள் தொடர்பான வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளித்தல்.

உமையாக்கள் தமது நிர்வாகத்தைத் திறன்பட செய்யும் நோக்கில் நிர்வாகத்தை 5 பகுதிகளாகப் பிரித்தனர்.
  1. தீவானுல் கராஜ் - நிதி, வரித் திணைக்களம்
  2. தீவானுல் ஜிந்த் - இராணுவத் திணைக்களம்
  3. திவானுல் ரஸாஇல் - ஆவணத் திணைக்களம்
  4. திவானுல் காதம் - பதிவுத் திணைக்களம்
  5. தீவானுல் பரீத் - தபாற் திணைக்களம்

பின்வருவன உமைய ஆட்சியில் வருமான மூலங்களாகும்.
 1. முஸ்லிமல்லாதோரிடம் இருந்து அவர்களது வருமான ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப அறவிடப்பட்ட ஜிஸ்யா எனப்படும் தலாவரி.
  2. சராஜ் எனப்பட்ட நிலவரி.
  3. கனீமா
  4. முஸ்லிம் படை போருக்குச் செல்லும் போது சண்டை நிகழாத நிலையில் கிடைக்கும் பொருட்கள்.
  5. உஷ்ர் - அங்க வரி.
  6. ஸதகா
  7. தண்டப் பணம்
  8. பூதல் சொத்துக்கள்
இப்படிக் கிடந்த வருவாய்களில் ஸகாத் மூலம் கிடைத்தவற்றை அல் குர்ஆன் குறிப்பிடும் எட்டுப் பிரிவினருக்கு வழங்கினர். ஏனைய வருவாய்கள் நிர்வாக, நீதி, சமூக, இராணுவ, சமூக நலன் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக