வெள்ளி, 7 ஜனவரி, 2011

ஓய்வு

இனிய நண்பனே!
உனக்கு ஓய்வெடுக்கத் தெரியுமா?


ஓய்வு என்பது உறக்கமல்ல.

ஒரு தலையணையைத் தலைக்கடியிலும் ஒரு தலையணயைக் கால்களின் இடுக்கிலும் இட்டுக் கொண்டு கண் மூடிக் கிடப்பதல்ல.

ஓய்வு என்பது உனது புலன்களைப் புதுப்பிக்கும் ஏற்பாடு. சோம்பேறிகளின் சொர்க்கத்தில் ஓய்வு என்பது சும்மாயிருப்பது. உல்லாசவாசிகளின் அகராதியில் ஓய்வு என்பது பலன்களைக் கிளர்ச்சிகளின் கிடங்கில் கிடத்துவது.

ஓய்வு என்பது புலன்களை மறக்கடிப்பதல்ல. புதுப்பிப்பது.

புலன்களை மறக்கடிப்பதே ஓய்வு எனும் ஆபத்தான விளக்கத்தையே நாம் அங்கீகரித்து விட்டதால் நம் இளைஞர்களில் பெரும்பாலோர் திரையரங்குகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

தமக்குத்தாமே மது எனும் திரவத் தீயை வைத்துக் கொள்கிறார்கள்.

சிலரது யாத்திரைகள் மாத்திரைகளில் நடந்துகொண்டிருக்கின்றன.

அல்லது உறக்கம் எனும் செயற்கைக் கல்லறைக்குள் பல மணி நேரம் இறந்து கிடக்கின்றார்கள்.

ஓய்வு என்பது புலன்களை மறக்கடிப்பதல்ல, புதுப்பிப்பது என்ற கருத்துக்கு நாம் காது கொடுத்தால் நமது வாழ்க்கையின் ஒரு பகுதியே நிறம் மாறிவிடும்.

இளைஞனே! நீ ஒய்வு என்பதை உனது அடுத்த கட்டப் போரின் ஆயத்தத்திற்கான அவகாசம் என்று அறிந்து கொள்.

வானத்தின் நீலத்தைப் பார்.

உனது கண்ணுக்குள் வானத்தின் நீலத்தை வாங்கு. தாவரப் பச்சையைவிட சுகமான பச்சை இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை.

மரஞ்செடி கொடிகளை சினேகித்து அவற்றின் பசுமையை நெஞ்சுக்குள் பரப்பு.

பூக்களை வசியப்படுத்து.

அவற்றின் இளமையெல்லாம், உன் இதயத்துக்கு வரவேண்டுமென்று எண்ணு.

இமைத்திரைகளை விலக்கிவிட்டு உன் மனசை ஒரு மெல்லிய மேகமாய் மிதக்கவிடு.

உன்னைக் கடந்து போகும் தென்றலைப் பார்த்து ஓடாதே என்று உத்தரவு போடு.

உன்னை வருடிக் கொடுக்கும் தென்றலை நீ வருடிக் கொடுத்து உற்சாகமாய்க் கொஞ்ச நேரம் உரையாடிக் கொண்டிரு.

இந்தப் பூமியே இசையால் நிரப்பி வைக்கப்பட்ட கிண்ணம் தான். நாம் வாழும் பூமியே ஒரு நடன சாலை தான்.

காற்றில் அசையும் தென்னங்கீற்றின் ஒலியில் சுதியிருக்கிறது. அது ஆடும் லயத்தில் ஒரு ஜதி இருக்கிறது.

வாழ்ந்து கெட்ட ஒருவன் தானம் கெட்டுப் போகும் போது தயங்கித் தயங்கிப் போவது மாதிரி மேகங்கள் சோக நடை போடுவதை நீ கவனித்திருக்கிறாயா?

ஒவ்வோர் உதயமும், ஒவ்வோர் அஸ்தமனமும் ஒவ்வொரு பௌர்ணமியும் லட்சம் கிலோவாட் மின் சக்தியை உள் மனசுக்குள் உற்பத்தி செய்யக்கூடியவை என்று நான் உணர்ந்திருக்கின்றேன்! உனக்கு எப்படி?

விரும்பியது அமையாவிட்டால் அமைந்ததை விரும்பு என்கிறது உபநிடதம்.

அமைந்தது நீ விரும்பாததாய் இருந்தால் நீ விரும்பியதை அமை என்கிறேன் நான்.

அதை அமைப்பதற்கான ஆற்றலும் உணர்ச்சியும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்றன.

ஆனால், சின்னச் சின்னத் தோல்விகளால் மனிதன் களைத்துப் போகிறான்.

அந்தக் களைப்பை நீக்கும் களிம்பு தான் ஓய்வு.

மீண்டும் சொல்கிறேன் - ஓய்வு என்பது புலன்களை மறக்கடிப்பதல்ல; புதுப்பிப்பது.


நன்றி: "சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்" - வைரமுத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக