திங்கள், 27 டிசம்பர், 2010

இஸ்லாமிய வரலாற்றில் தரீக்காக்களின் தோற்றமும் வளர்ச்சியும்

- குர்ஆன், ஸ{ன்னாவின் அடியாகத் தோன்றிய ஓர் ஆத்மீகக் கோட்பாடாக வளர்ச்சி கண்ட தஸவ்வுப் கலை வரலாற்றின் ஒரு வளர்ச்சிக் கட்டமே தரீக்காக்களாகும்.
- தரீக்காக்கள் என்பவை ஆத்மீக ஞானிகளால் நிறுவப்பட்ட இஸ்லாமிய ஆத்மீக பண்பாட்டுப் பயிற்சிக்கான அனுஷ்டான முறைகளை உள்ளடக்கிய ஆத்மீக மரபுகளாகும்.
- பிக்ஹ{ கலைத் துறையில் சில வரலாற்றுக் காரணங்களால் மத்ஹப்கள் தோற்றம் பெற்றது போல தஸவ்வுப் கலையில் தரீக்காக்கள் தோற்றம் பெற்றன.
- ஆனால், இவ்விரு கலைகளினதும் மூலாதாரங்களாக குர்ஆனும், ஸ{ன்னாவும் அமைந்திருக்கின்றன.

காதிரிய்யா
- தஸவ்வுப் வரலாற்றில் தோன்றிய முதலாவது தரீக்காவே இதுவாகும்.
- அப்துல் காதர் ஜிலானி (ஹிஜ்ரி 471) என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.
- ஈரானிலுள்ள ஜீலானில் பிறந்த இவர் பக்தாதிலுள்ள நிழாமிய்யா கல்லூரியில் பயின்று ஆத்மீக பயிற்சிகளையும் பெற்று மக்களுக்கு அறிவைப் போதிக்கும் பணியிலும் ஈடுபட்டார்.
- இறைவனின் மகத்துவத்தையும் மார்க்கத் தத்துவத்தையும் உணர்ச்சி பூர்வமாக வெளியிட்ட அவரின் சொற்பொழிவுகளைக் கேட்கவென முழு பக்தாதுமே திரண்டு வந்தது.
- கலீபாக்களும், கவர்னர்களும் மக்களோடு மக்களாக அமர்ந்து அவரது உரையை கேட்டு மகிழ்ந்தனர்.
- அவர் நிகழ்த்திய 62 சொற்பொழிவுகளை உள்ளடக்கியதாக பத்ஹ{ர் ரப்பானி எனும் நூல் காணப்படுகின்றது.
- அவரது புதூஹ{ல் கைப் எனும் நூலில் அவரது78 சொற்பொழிவுகள் காணப்படுகின்றன.
- இவரது இவ்வுணர்ச்சி பூர்வமான உரைகள் பக்தாத் மக்களின் வாழ்க்கைப் போக்கையே மாற்றி அமைத்தது மட்டுமன்றி அவர்கள் தமது பாவங்களை நினைத்து மன்னிப்புத் தேடி புது வாழ்வு வாழவும் வழி அமைத்தன.
- இந்நிலையைத் தொடர்ந்து பேணுவதற்கு தொடர்ச்சியான ஓர்ஆத்மீகப் பயிற்சி வழிமுறை அவசியம் என்பதை உணர்ந்த அவர் இதற்கென அத்தகைய வழிமுறையொன்றையும் மேற்கொள்ளச் சித்தம் கொண்டார்.
- இதற்காக மக்களை விசுவாசப் பிரமானம் (பைஅத்) செய்யும் படி அழைத்து இஸ்லாமிய வழிமுயைப் பின்பற்றி ஒழுக்க ஆத்மீகத் துறையில் மேம்பட்ட ஒரு வழிகாட்டலை தான் முன்வைப்பதாகவும் அதனைப் பின்பற்றுமாறும் மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.
- இந்த அடிப்படையில் அவரது ஆழமான அறிவு, ஆழுமை, ஆத்மீகச் சிறப்பு என்பவற்றின் துணை கொண்டு பைஅத் எனும் அடிப்படைக்கு புத்துயிர் அழித்து இவர் காதிரிய்யா எனும், முற்றிலும் ஷரீஆவின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஓர் ஆத்மீக மரபை நிறுவினார்.
- இதனால் எண்ணற்றோர் பயனடைந்தனர்.
- அவரது மறைவின் பின் அவரது மாணவர்களால் உலகின் பல்வேறு நாடுகளில் தரீக்கா அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. (யமன், ஹழரமௌத், இந்தியா, இந்தோனேஷியா, ஆபிரிக்கா)
   
ஷாதுலிய்யா
- தாபகர் நூருத்தீன் அஹமத் இப்னு அப்துல்லாஹ் அபுல் ஹஸன் அஷ் ஷாதுலி (கி.பி. 1196 – 1258)
- பிறப்பு : குமாரா (Ghumara), மொரோக்கோ
- இடைக்காலத்தில் அப்துஸ் ஸலாம் இப்னு மஷீஷ் எனும் பெரியாரின் ஆலோசனைக்கு ஏற்ப டியூனீஷியாவுக்குச் சென்று அங்கு ஷாதலா எனும் இடத்தில் சில காலம் ஏகாந்த வாழ்விலும் தியானத்திலும் தனது நாட்களைக் கழித்தார். இதனாலேயே அவரது பெயரோடு ஷாதுலி எனும் பெயரும் ஒட்டிக் கொண்டது.
- இவரது கருத்துக்கள் மக்களைக் கவர்ந்த போது இவரது செல்வாக்குப் பெருகியதை விரும்பாத அப்பிரதேச மார்க்க அறிஞர்கள் பல சூழ்ச்சிகளைச் செய்தனர்.
- அங்கிருந்து எகிப்து சென்ற அவருக்கு மக்கள் ஆதரவளித்தனர்.
- பிரான்ஸிய மன்னன் சிலுவைப் போர் மூலம் எகிப்தைக் கைப்பற்றியிருந்த இக்காலப் பிரிவில் இவர் இஸ்ஸ{த்தீன் அப்துஸ்ஸலாம் போன்ற அறிஞர்களோடு சேர்ந்து சிலுவை வீரர்களக்கெதிராக அணிவகுத்துச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.
- ஹிஜ்ரி 656இல் ஹஜ் இலிருந்து திரும்பும் வழியில் ஹ{மைஸரா எனுமிடத்தில் காலமானார்.                               
- இவரது கருத்துக்களை அவரது மாணவர்களுல் ஒருவரான அதாவுல்லாஹ் என்பவர் அல் ஹகம் எனும் பெயரில் நூலுருப்படுத்தினார்.
- அபுல் அப்பாஸ் அல் முர்ஸி என்ற பிரிதொரு மாணவர் மூலம் ஷாதுலிய்யா பரவியது.
- இத்தரீகா எகிப்து, வட ஆபிரிக்கா, அரேபியா, ஸிரியா போன்ற பகுதிகளில் பரவியது.
- இத்தரீகாவின் கிளைகளாக பல தரீக்காக்கள் தோன்றின.
          1. வபாஇய்யா
          2. அல் ஜஸ_லிய்யா
          3. அல் பாஸிய்யா
          4. அல் ஹஸாபிய்யா

ரிபாஇய்யா
- ஷேக் அப்துல் காதர் ஜீலானியின் சமகாலத்தவரான இவரது பெயர் அஹமத் அர்ரிபாயி (578 ஃ 1182)
- இவர் தனது தரீக்காவை பஸ்ராவில் நிறுவினார்.
- இவரது பெயராலேயே இத்தரீகா அழைக்கப்படுகின்றது.
- .வரது வாழ் நாள் முழுவதும் ஈராக்கில் உள்ள பதாஇஹ் எனும் இடத்தில் கழிந்தது.
- எந்த ஒரு நூலையும் அவர் எழுதவில்லை.
- இவரது ஆத்மீக குருவாக அபுல் பழ்ல் அல்காரி அல்வாஸிதி என்பவர் திகழ்கிறார்.
- இவரது ஆத்மீகச் செல்வாக்கு அவர் வாழ்ந்த பிரதேசத்தையும் தாண்டி பரவிச் சென்றதால் எண்ணற்றோர் அவரது சீடர்களாக மாறினர்.
- இப்னு பதூதா இத்தரீகாவின் ஸாவியாக்கள் பலவற்றை கண்ணுற்றதாகக் குறிப்பிடுகின்றார்.
- எகிப்திலும், ஸிரியாவிலும், துருக்கியிலும், மாலைத் தீவிலும் பிரபல்யமாகியது.

நக்ஷபந்தியா
- தாபகர் : பஹாவுத்தீன் நக்ஷபந்தி (மரணம் 1389)
- கி.பி. 14ம் நூற்றாண்டில் புகாராவில் நிறுவப்படல்.
- இத்தரீகாவுக்கான திக்ர் முறைகள் பஹாவுத்தீனுக்கு முன்பு வாழ்ந்த அப்துல் காலித் அல் குஜாவானி என்பவரைப் பின்பற்றியே அமைந்துள்ளன.
- தஜிகிஸ்தானில் பிறந்த பஹாவுத்தீன் கலீல் எனும் துறவியோடு தொடர்பு கொண்டிருந்தார்.
- இத்துறவி 1340 இல் டிரான்ஸொக்ஸியானாவின் சுல்தானாக விளங்கியவர்.
- பஹாவுத்தீன் ஆறு வருட காலம் இந்த சுல்தானின் அவையில் இருந்தார்.
- கலீலின் மரணத்தை அடுத்து பஹாவுத்தீனுக்கு உலக வாழ்வில் வெறுப்பு ஏற்பட்டு புகாராவில் உள்ள ரிவார்துன் எனும் கிராமத்துக்கு மீண்டு அங்கு ஆத்மீக வளர்ச்சியில் தீவிர அக்கறை காட்டினார்.
- இதன் போது இவரோடு இணைந்து செயலாற்றிய ஒரு குழுவைச் சேர்த்து ஆத்மீக வழியில் அவர்களை நெறிப்படுத்தினார்.
- இதுவே காலப் போக்கில் நக்ஷபந்தியா தரீக்கா என வளர்ச்சி கண்டது. 
- அரபுப் பிராந்தியங்களில் இத்தரீகா பிரபல்யம் அடையா விட்டாலும் துருக்கி, கார்கேஷியஸ், குர்திஸ்தான், இந்தியா, சீனா, மாலைத் தீவு போன்ற இடங்களில் பரவியது.
- மொங்கோலியரால் இஸ்லாமும், கிலாபத்தும், அதன் சின்னங்களும் அழித்தொழிக்கப்பட்ட போது இஸ்லாமியக் கோட்பாடுகளைப் பரப்பி மக்களை இஸ்லாத்தில் இணைப்பதில் இத்தரீகா மகத்தான பங்களிப்புச் செய்தது.
- இந்தியாவில் செய்யித் அஹமத் ஸிரிஹின்தி இத்தரீகாவுக்குப் புத்துயிர் அளித்தார்.
- இக்காலை இந்தியாவில் பிரபல்யம் பெற்று விளங்கிய வஹ்ததுல் வுஜூத் கோட்பாட்டின் தவறுகளைச் சுட்டிக் காட்டி அதன் பாரதூரமான விளைவுகளையும் எடுத்துக் காட்டினார்.
- மட்டுமன்றி அக்பர் பாதுஷாவின் தீனே இலாஹி கொள்கையை முறியடித்து இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு பங்களிப்புச் செய்தவராகவும் ஸிர்ஹிந்தி கருதப்படுகிறார்.

ஷ_ஹ்ரவர்திய்யா
- தாபகர் : ஷேக் ஷஹாபுத்தீன் ஷ_ஹ்ரவர்தி (593 – 632)
- அப்துல் காதர் ஜீலானியின் மாணவரான இவர் இஸ்லாமியப் பிரசாரப் பணியிலும் ஆத்மீக வழியில் மக்களை நெறிப்படுத்துவதிலும் மிகச் சிறப்பான  பங்களிப்புச் செய்தார்.
- இத்துறையில் அவர் எழுதிய நூல் அவாரிபுல் மஆரிப்.
- இவர் தனது ஆரம்பக் கல்வியையும், ஆத்மீகப் பயிற்சிகளையும் தனது மாமனாரின் ரிபாத் எனும் ஆத்மீகப் பாசறையில் பெற்றார்.
- இவரது ஆத்ம, ஞான விளக்கங்களைக் கேட்பதற்கு ஏராளமான மக்கள் ஒன்று கூடினர்.
- பாரசீகத்தின் புகழ் பூத்த கவிஞர் ஸஅதி இவரது மாணவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இவரது மாணவர்கள் இவரது தரீக்காவை உலகின் பல பகுதிகளிலும் பரப்பினாலும் ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் போன்ற பிரதேசங்களில் மட்டுமே இத்தரீக்காவின் செல்வாக்கை காண முடிகிறது.
   
ஜிஸ்திய்யா
- தாபகர் ஸிரியாவைச் சேர்ந்த குவாஜா அபூ இஸ்ஹாக் முஈனுத்தீன் ஜிஸ்தி. (மரணம் : ஹிஜ்ரி 627)
- பிறப்பு : குராஸான் எனும் இடத்திலுள்ள ஸஜஸ்தான்.
- கல்வியைத் தேடி அக்காலை முஸ்லிம் உலகின் புகழ் பெற்ற அறிவியல் நகரங்களாக விளங்கிய புஹாரா, ஸமர்கந்த், ஹர்ரான், நைசாப்பூர், பல்க், கஸ்னி போன்ற நகர்களுக்கு பிரயாணித்தார்.
- இறுதியாக இந்தியாவுக்கு வந்த அவர் லாகூரில் சில காலம் தங்கிவிட்டு அஜ்மீரில் குடியேறி அங்கேயே மரணாமானார்.
- இவர் ஹேரத் எனும் இடத்திலுள்ள சிஸ{ஸ் எனும் ஊரில் குடியேறி ஆத்மீகப் பணி புரிந்ததால் இத்தரீககா இப்பெயரால் அழைக்கப்படுகிறது.
- இத் தரீக்கா இந்தியாவில் சிறப்பான வளர்ச்சி கண்டது.
- இந்தியாவை ராணுவ ரீதியாக முஹம்மத் இப்னு காஸிம், மஹ்மூத் கஸ்னவி, ஷிஹாபுத்தீன் கோரி போன்றோர் வெற்றி கொண்டு இஸ்லாமிய கிலாபத்தை நிலைக்கச் செய்தது போல இந்தியாவை ஆத்மீக ரீதியாக வெற்றி கொண்ட மகத்தான ஆத்ம ஞானியாக முஈனுத்தீன் ஜிஸ்தி கருதப்படுகிறார்.
- இவரது தரீக்கா இந்தியாவில் இஸ்லாத்தை ஒரு மாபெரும் ஆத்மீக சக்தியாக வளர்ச்சியடையச் செய்தது.

திஜானிய்யா
- தாபகர் அஹ்மத் அத் திஜானி.
- ஹிஜ்ரி 1195இல் வட ஆபிரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது.
- கி.பி. 19ஆம் நூற்றாண்டில் மேற்கு ஆபிரிக்காவில் பரவிய இத்தரீக்காவின் வளர்ச்சியில் முஹம்மத் இப்னு முக்தார் என்பவர் முக்கிய பங்கு வகித்தார்.
- சூடானில் பரவிய இத்தரீக்கா அந்நாட்டின் இஸ்லாமியப் பிரசாரப் பணியிலும், கல்விப் பணியிலும் முக்கிய பங்காற்றியது.
- பிரான்சிய ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டத்தில் இத்தரீக்காவின் பங்களிப்பு மகத்தானதாகும்.
- நைகர், செனிகல் எனும் பகுதிகளில் இஸ்லாத்தின் பரவலுக்கும் இத்தரீக்கா முக்கிய பங்காற்றியது.

உஷாத் துணைகள்
- ஸ_பித் தரீக்காக்களின் தோற்றமும் வளர்ச்சியும், இஸ்லாமிய சிந்தனை, கலாநிதி சுக்ரி
- இஸ்லாமிய கலைக் களஞசியம், அப்துர் ரஹீம்
- ஷரீஆவின் பார்வையில் தஸவ்வுப் - H.I. Khairul Bashar

1 கருத்து: