செவ்வாய், 7 டிசம்பர், 2010

அப்பாஸியர்கள்

நபியவர்களின் பெரிய தந்தையான அப்பாஸ் (ர்ழி) யின் வழித்தோன்றல்கள் இப்பெயரால் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் நாளடவில் பல்கிப் பெருகி அரேபியாவெங்கும்வழ்ந்து வந்தனர். பாரசீகத்திலுள்ள
 குராஸான் மா நிலத்தில் அதிகமாக வாழ்ந்த இவர்கள் உமையாக்களை ஒழித்துக்கட்டி, கிலாபத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்ய ஆவல் கொண்டனர். நபியவர்களின் உறவினர்களாக இவர்கள் இருந்தமையால் இவர்களுக்கு மக்களிடையே ஆதரவும் பெருகிகியது. அலீ (ரழி) யின் வழித்தோன்றல்களும் இவர்களுக்கு ஆதரவளிக்க முன்வந்தனர்.



உமையாக்களின் வீழ்ச்சியின் பின்னர் இஸ்லாமியப் பேரரசின் ஆட்சியைக் கைப்பற்றிய இவர்களது எழுச்சியைத் தொடர்ந்து, இஸ்லாமிய அரசியல் வரலாற்றில் பல புதிய மாற்றங்கள் ஏற்பட்டன. ஸிரியாவிலிருந்து தலை நகரம் இராக்கிற்கு மாற்றப்பட்டது. அதுவரை ஸிரிய நாட்டு அரேபியர்கள் ஆட்சி அதிகாரத்திலும் சமூக அந்தஸ்திலும் வகித்து வந்த செல்வாக்கிற்குச் சாவு மணி அடிக்கப்பட்டது. மேற்காசியாவில் காலூன்றியிருந்த முன்னேற்றங்களும் அபிவிருத்திகளும் கிழக்காசியாவின் பக்கம் திரும்பலாயின. இவர்கள் ஆட்சிபீடம் ஏறும் வரை கிலாபத்தில் காணப்பட்டு வந்த ஒருமுகப்பாடு சிதைந்து சீர்குலைந்து போனது. தனித்தனி மாகான ஆட்சியாளர்களின் கீழ் பல சிற்றரசர்கள் தோற்றம் பெற்றன. அப்பஸிய கலீபாக்கள் வலிமையிழக்க, தனித்தனியான ஆட்சித் தலைவர்களின் கீழ் பல சிற்றரசுகள் தோற்றம் பெற்றன. உமையாக் காலம் வரை அரசாங்கத்திலும் சமூகத்திலும் பின்பற்றப்பட்டு வந்த அரபுப் பண்பாடுகளும் பழக்க வழக்கங்களும் செல்வாக்கிழக்க, பாரஷீகக் கலாசாரப் பாரம்பரியங்கள் நடைமுறக்கு வரலாயின. என்றுமில்லாத வகையில் கலை. கலாசார, பண்பாட்டு, நாகரிகத் துறைகளில் அசாதரண விருத்திகள் ஏற்படலாயின. இந்நிலையை ஒரு வரலாற்றாசிரியர் பின்வருமாறு குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

" ஆரம்ப காலத்து அப்பாஸியரது ஆட்சிக்காலம், கீழைத்தேய முஸ்லிம்களின் ஒளிமயமான காலமாய்த் திகழ்ந்தது." (இஸ்லமிய வரலாறு, ஏ.எம். அபூபக்கர்)



அப்பாஸ் (ரழி) யின் பேரரான முஹம்மத் என்பார்தான் உமையாக்களைக் கவிழ்க்கும் முயற்சியில் முதன் முதலில் ஈடுபட்டார். ஹிஜ்ரி 124 / 126 ல் இவர் மரணிக்க இவரது புதல்வன் இப்ராஹீம் அப்பாஸியரின் தலைவராகி உமையாக்களின் மிகப் பெரும் எதிரியாக விளங்கினார். கி. பி. 747ல் குராஸானில் புரட்சிக்கொடி தூக்கியபோது உமைய ஆட்சியாளர் இரண்டாம் மர்வான் சிறைப்படுத்தினார்.



இதன்பின் இவரது சகோதரர்களான அபுல் அப்பஸும், அபூ ஜஃபரும் அப்பாஸியருக்குத் தலைமைதாங்கி ஹிஜ்ரி 132ல் கூபாவைக் கைப்பற்றினர். அபுல் அப்பாஸ் அங்கு தன்னைக் கலீபாவாகப் பிரகடனம் செய்து கொண்டார். போரில் தோற்றோடிய உமைய கலீபா 2ம் மர்வான் எகிப்தில் வைத்துக் கொல்லப்ப்ட்டார். இரத்த வெறியன் எனப் பொருள்படும் "அஸ்ஸப்பாஹ்" எனும் பட்டத்தைத் தனக்குத் தானே சூட்டிக்கொண்டு உமயாக்களை ஈவிரக்க்மின்றிக் கொன்றொழித்தார். உமைய இளவரசர்களில் ஒருவரான அப்துர்-ரஹ்மான் என்பவர் மட்டும் தப்பியோடி ஸ்பானியாவில் (குர்துபா) உமயாக்களின் ஆட்சியைத் தாபித்தார். இவ்வாட்சி உமையாக்களின் இரண்டாம் கட்ட ஆட்சி என வழங்கப்படுகிறது.



அஸ்ஸப்பாவுக்குப் பின்னர் அவரது சகோதரர் அபூ ஜஃபர், அல்-மன்ஸூர் எனும் பட்டப் பெயர் தாங்கி ஆட்சி செய்தார். இவர் பக்தாதைத் தனது தலை நகராக அமைத்துக் கொண்டார்.



அப்பஸிய கலீபாக்களான ஹாரூன், மாமூன் முதலானோரும் மிகச் சிறப்பாக ஆட்சி செய்தவர்களாவர். இதன் காரணமாக கிலாபத்தில் வளம் பெருகியது. அமைதி நிலவியது. இருப்பினும் ஹாரூனின் காலத்திலேயே இத்ரீஸ் என்பவர் மொரோக்கோவில் சுதந்திர அரசொன்றை நிறுவினார். இது இத்ரீஸியச் சிற்றரசு என அழைக்கப்பட்டது. கைரவானில் ஏற்பட்ட குழப்பத்தை அடக்கிய இப்ராஹீம் பின் அக்லபீ என்பவருக்கு அந்த மா நிலத்தையே திரை பெற்றுக் கொண்டு வழங்க வேண்டிய நிர்ப்பந்த நிலையொன்றும் உருவானது. எனினும் கலீபா வாதிக் காலம் வரை அப்பாஸிய கிலாபத் சிறப்போடிலங்கி வந்தது. இதன் பின்னரே அப்பாஸிய ஆட்சி மெல்ல, மெல்லச் சரியத் தொடங்கியது.



குராஸானும் அப்பஸியரின் அதிகாரத்தை உதறித்தள்ளிவிட்டு சுதந்திர நாடாகத் தன்னைப் பிரகடனம் செய்து கொண்டது. எகிப்தில் அஹ்மத் இப்னு தூலூன் என்பவர் துலூனிய சிற்றரசை நிறுவினார். கலீபா முஃதஸிம் காலத்தில் உருவாக்கப்பட்ட துருக்கியப் படை பலம் பெற்று கலீபா முக்ததிரை வற்புறுத்தி "அமீருல் உமரா' எனும் பட்டத்தையும் அள்வற்ற அதிகாரங்களையும் முஇஸ் என்பவருக்கு வழநுமாறு செய்தது.



பின்னர் எகிப்தில் பத்திமீய சிற்றரசு தோன்றி. அதுவரை அப்பாஸிய கலீபாக்கள் மார்க்க விவகாரங்களில் வகித்து வந்த தலைமைப் பதவிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.அப்பாஸிய கிலாபத் நாளுக்கு நாள் குறுகி இறுதியாக பக்தாதிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் மட்டுமே இருந்து வந்தது. மங்கோலியர் ஹுலாகாவின் தலைமயில் பக்தாதின்மீது படையெடுத்து அந்நகரைச் சூரையாடினர். கடைசி கலீபா அல்-முஃதஸிம் (656 / 1258 ) கொல்லப்பட்டார். இவர் அப்பாஸிய அரச பரம்பரையில் தோன்றிய 37வது கலீபா ஆவார். இவரோடு அப்பாஸிய ஆட்சி முற்றுப் பெற்றது.



பக்தாதிலிருந்து தப்பியோடிய அப்பாஸியருள் ஒருவரை, எகிப்தை ஆட்சி புரிந்த மம்லூக்கிய சுல்தான் பைபஸ் கெய்ரோவில் வைத்து அல்-முஸ்தன்ஸிர் எனும் பெயருடன் ஆட்சியில் அமர்த்தினார். இவருக்குப் பின்னர் இருபதுபேர் ஒருவர் பின் ஒருவராகப் பேரளவில் கலீபாக்களாக நியமிக்கப்பட்டு வந்தனர். இவ்வாறு இரண்டரை நூற்றாண்டு காலம் தொடர்ந்தது. ஹிஜ்ரி 923ல் துருக்கிய சுல்தான் 1ம் ஸலீம் எகிப்துமீது படையெடுத்து வந்து மம்லூக்கியரைத் தோற்கடித்துப் பெயரளவில் கலீபாவாக இருந்த அல்-முதவக்கிலை கொன்ஸ்தாந்து நோபிளுக்கு அழைத்துச் சென்று, அவர் வகித்து வந்த எல்லா அதிகாரங்களையும் பறித்துக் கொண்டு அவரை வெறுங்கையோடு கெய்ரோவுக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர் ஹிஜ்ரி 945ம் ஆண்டு இறந்தார். இத்துடன் கிலாபத் பதவி துருக்கி சுல்தானின் கைக்கு மாறியது.



அப்பாஸிய கலீபாக்களுள் அஸ்ஸப்பாஹ், மஹ்தி, அமீன் ஆகியோரைத் தவிர்த்து ஏனையோரெல்லாம் பேர்பர், பாரசீக, அபிசீனிய, துருக்கிய, ஆர்மீனிய அடிமைப் பெண்களுக்குப் பிறந்தவர்களாவர்.



அப்பாஸிய கலீபாக்கள் ( 750-1258 )



1. அஸ்ஸப்பாஹ் 750-754

2. அல் மன்ஸூர் 754-775

3. அல் மஹ்தி 775-785

4. அல் ஹாதி 785-786

5. ஹாரூன் ரஷீத் 786-809

6. அல் அமீன் 809-813

7. அல் மாமூன் 813-833

8. அல் முஃதஸிம் 833-842

9. அல் வாஸிக் 842-847 10. அல் முதவக்கில் 847-861

11. அல் முந்தஸிர் 861-862

12. அல் முஸ்தஈன் 862-866

13. அல் முஃதஸ்ஸ் 866-869

14. அல் முஹ்ததீ 869-870

15. அல் முஃத்மித் 870-892

16. அல் முஃதஸித் 892-902

17. அல் முக்தஃபீ 902-907

18. அல் முக்ததிர் 907-932

19. அல் காஹிர் 932-934

20. அல் ராதீ 934- 940

21. அல் முத்தகீ 940-944

22. அல் முஸ்தக்ஃபீ 944-945



23. அல் முதீஃ 945-974

24. அல் தாயி 974-991

25. அல் காதிர் 991-1031

26. அல் கா இம் 1031-1077

27. அல் முக்ததீ 1077-1094

28. அல் முஸ்தஸர் 1094-1118

29. அல் முஸ்தர்ஷித் 1118-1134

30. அல் ராஷித் 1134-1135

31. அல் முக்தபீ 1135-1160

32. அல் முஸ்தன்ஜித் 1160-1170

33. அல் முஸ்தாழி 1170-1179

34. அல் நாஸிர் 1179-1225

35. அல் ஸாஹிர் 1225- 1226

36. அல் முஸ்தன்ஸிர் 1226-1242

37. அல் முஸ்தஃஸிம் 1242-1258





மத்திய கால உலகில் குறிப்பாக 9ம் நூற்றாண்டுகளில் அப்பாஸிய ஆட்சி சிறப்புற்று விளங்கிய பான்மையை ஃபிலிப் கே ஹிட்டியின் பின்வரும் கூற்று சான்றாக அமைகின்றது.

" கிறிஸ்தவ சகாப்தத்தின் 9ம் நூற்றாண்டு இரு பெரும் பேரரசர்களைப் பெற்றிருந்தது. அவர்களில் ஒருவர் மேலை நாட்டில் இருந்த பிரென்ஞ்சுப் பேரரசர் சார்லிமன்.

மற்றவர், கீழைத்தேசத்தில் இருந்த அப்பாஸிய கலீபா ஹாரூன் ரஷீத். ஆயினும் இவ்விருவலும் மேலானவர் ஹாரூனாவார்."



ஹாரூன் ரஷீதின் நட்பை விரும்பி இவருடைய அரசவைக்கு ஒரு தூதுவரை அனுப்ப அவரிடம் விலையுயர்ந்த துணிமணிகளையும், சொக்கட்டான் விளையாட்டுப் பலகை ஒன்றையும், யானை ஒன்றையும் அன்பளிப்பாக அனுப்பி வைத்தார் ஹாரூன்.



இவருடைய ஆட்சியின் போது "உலகத்திலேயே பக்தாதுக்கு நிகரான ஊர் ஒன்றில்லை" என்று கூறும் வண்ணம் அது சீரும் சிறப்பும் பெற்றுவிளங்கியது. அரண்மனையிலிருந்த அலங்காரங்களோ சொல்லும் தரத்தனவாய் இருக்கவில்லை. ஹாரூனின் மனைவி ஹுபைடா உண்ணும் பாத்திரங்கள் தங்கத்தாலும், வெள்ளியாலும் செய்யப்பட்டு அவற்றில் நவமணிகள் பதிக்கப் பெற்றிருந்தன. அவர் காலணிகள் கூட நவரத்தினங்கள் பதிக்கப் பெற்று ஒளிர்ந்தன.



கலீபா மாமூனுக்கும் பூரானுக்கும் நடந்த திருமணம் போன்று இஸ்லாமிய வரலாற்றிலேயே அத்துணை ஆடம்பரமான திருமணம் எவருக்கும் நிகழ்ந்திருக்க முடியாது. முதவக்கில் வைத்த ஒரு விருந்து வைபவமும் ஈடிணையற்றதாக இருந்தது என்பர். இவ்விருந்து நடைபெற்ற இரவும் மாமூனின் திருமண இரவுமாகிய இவ்விரண்டு இரவுகள் போன்று மூன்றாவது இரவொன்று இஸ்லாமிய வரலாற்றிலேயே இல்லை என்று கூறப்படுகிறது. அந்த விருந்தில் பயன்படுத்தப்பட்ட நற்காலிகளிலும் பாத்திரங்களிலும் நவரத்தினங்கள் பதிக்கப்பட்டிருந்தன.



பக்த்தாதிலே உலகத்தின் பல்வேறு நாட்டு வணிகர்களும், தங்கள் நாட்டு விளை பொருட்களுடனும், செய்பொருட்களுடனும் வந்து குழுமியிருந்தனர். அங்கிருந்த அரபி வணிகர்கள் சீனாவுக்கும், மலேயாவுக்கும், இந்தியாவுக்கும், ருஷ்யாவுக்கும், ஜேர்மனிக்கும், பின்லந்துக்கும், சுவீடனுக்கும் வணிகப் பொருட்களுடன் சென்று வந்தார்கள். அரபிக் கதைகளில் ஒன்றாகிய 'சிந்துபாத்' எனும் கதையில் வரும் நிகழ்ச்சிகளெல்லாம் அவர்கள் பல்வேறு நாடுகளில் நேரில் அனுபவித்து அறிந்த நிகழ்ச்சிகளாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக