எமது வரலாறு


கஹட்டோவிட்ட வரலாறு

அறிமுகம்

மேல் மாகாணத்தில், கம்பஹா மாவட்டத்தில், அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள, நூற்றுக்கு நூறு முஸ்லிம்களைக் கொண்ட கிராமமே கஹட்டோவிட்ட. இது, நிட்டம்புவ - வல்கம்முல்ல ஊடான கிரிந்திவல (185) பாதையில், நிட்டம்புவ நகரில் இருந்து சுமார் 8 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. கஹட்டோவிட்டாவின் ஓர் எல்லையாக ஓடுகின்ற 'அத்தனகலு ஓயா', இதன் அழகுக்கும் பசுமைக்கும் இன்னும் வலிமை சேர்க்கின்றது. இலங்கையில், முஸ்லிம்களை மாத்திரம் உள்ளடக்கிய ஒரு சில ஊர்களில் இதுவும் ஒன்றாக இருப்பது இதன் ஒரு சிறப்பம்சமாகும். நாடளாவிய ரீதியில், கல்வி, உயர் அரச பதவிகள், மார்க்க அனுஷ்டானங்கள், அரசியல் போன்ற பல்வேறு காரணிகளால் ஓரளவு பிரபல்யமடைந்த ஊராக கஹட்டோவிட்ட காணப்படுகின்றது. இதன் தற்போதைய சனத்தொகை சுமார் 6000.

பெயரும் காரணமும்
 
கஹட்டோவிட்ட என்ற பெயர் எவ்வாறு வந்தது என்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், அவற்றில் மிகவும் பொருத்தமானதாக பின்வரும் தகவலைக் குறிப்பிடலாம்.
  ,
இந்த ஊரின் எல்லையூடாகச் செல்லும் அத்தனகலு ஓயாவின் கரையில் அக்காலம் தேயிலைச் செடிகள் காணப்பட்டன. ஆற்றோரம் என்பதற்கு சிங்களத்தில் 'ஒயிட்டி' என்றும், தேயிலைக்கு 'கஹட்ட' என்றும் வழங்குவதன் காரணமாக, 'கஹட்ட' மற்றும் 'ஒயிட்டி' ஆகிய இரண்டையும் இணைத்து, 'கஹட்டோவிட்டி'( கஷ்டோவிட்டி)என்று அழைக்கப்பட்டு, பின்னர் மருவி, 'கஹட்டோவிட்ட' என்ற பெயர் பெற்றதாகக் குறிப்பிடப்படுகின்றது. அண்மைக்காலம் வரை இவ்வூரின் சில பகுதிகளில் தேயிலைச் செடிகள் இருந்ததற்கான தக்க சான்றுகள் உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது 'மஸ்ஜித் ஜாமிஉ' அமைந்துள்ள காணிக்கு எதிரே, வீதியின் மறுபக்கமாக இருந்த காணிகள், 1960 களில் கூட, 'தேயிலைத் தோட்டம்' என அழைக்கப் பட்டமை இதற்கு சிறந்த சான்றாகும்.
   
கஹட்டோவிட்ட 400 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைத் தன்னகத்தே கொண்ட ஒரு புராதன கிராமம். கஹட்டோவிட்ட கிராமத்துக்கு முஸ்லிம்கள் எவ்வாறு, எங்கிருந்து வந்தார்கள் என்பதற்கு இரு வகையான தகவல்கள் கூறப்படுகின்றன.
 
முதலாவது தகவல்:- கிறிஸ்துவுக்கு முன்னரே அறேபியர் வர்த்தக நோக்கில் இலங்கைக்கு வந்துபோனதாக நிறைய சான்றுகள் உள்ளன. அத்துடன் கி.பி. 8ம் நூற்றாண்டுகளில் அறேபிய வம்சாவழியிலான முஸ்லிம் குடியேற்றங்கள் பேருவலை, காலி, அட்டுலுகம போன்ற கரையோரப் பிரதேசங்களில் காணப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இலங்கைக்கு ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னர் கரையோரங்களில் குடியேறிய முஸ்லிம்கள், இலங்கையின் வர்த்தகத்தில் தனியான இடத்தைப் பெற்றிருந்தனர். ஆயினும் போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தபோது முஸ்லிம்களின் வர்த்தகத்தைத் திட்டமிட்டு அழித்து, அவர்களை விரட்டிவிட்டு, வர்த்தக மேலாதிக்கத்தை தாம் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டனர். சீதாவக்கை இராச்சியத்தை ஆண்ட மாயாதுன்ன அரசன் முஸ்லிம்களுக்கு உதவிபுரிய முன்வந்தாலும், கோட்டை இராச்சியத்தை ஆண்ட 7ம் புவனேகபாகு, போர்த்துக்கேயரின் வேண்டுகோளின் படி, முஸ்லிம்களைக் கரையோரங்களில் இருந்து துரத்தினான். போர்த்துக்கேயரின் இந்நடவடிக்கைகளால் நாட்டின் உட்பகுதிக்குச் சென்ற முஸ்லிம்கள், நீர்நிலைகளை அண்டிய பிரதேசங்களில் குடியமர்ந்தனர். இதன் காரணமாகவே இன்றும் முஸ்லிம்கள் நாடளாவிய ரீதியில் சிதறி வாழ்கின்றனர்.

போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்தில், அவர்களின் பிரதான ஒரு தளமாக மல்வானை காணப்பட்டது. இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை போர்த்துக்கேயரிடம் கையளிப்பதற்கான அல்லது எமது நாடு இன்னொரு நாட்டின் ஆளுகைக்கு உட்படுவதற்கான முதலாவது ஒப்பந்தம், மல்வானையிலேயே நடந்தது. இதனால் இவ்வொப்பந்தம் 'மல்வானை ஒப்பந்தம்' என்றும் அழைக்கப்படுகின்றது.

போர்த்துக்கேயரை இலங்கையிலிருந்து துரத்துவதற்கு, சீதாவக்கை மன்னன் மாயாதுன்ன, தன் மகன் இராஜசிங்கனின் தலைமையில் முல்லேரியா போரை நடத்தினான். 1562 இல் இடம்பெற்ற இப்போரின் போது, மல்வானை பகுதியில் இருந்த முஸ்லிம்கள் இராஜசிங்கனுக்கு உதவியதால், அங்கிருந்த முஸ்லிம்களைப் போர்த்துக்கேயர்கள் இம்சைப்படுத்தினர். இதனால் அப்பிரதேசத்தை விட்டு பல முஸ்லிம்கள், களனி ஆறு வழியே ஹங்வெல்ல, பூகொட பிரதேசங்களுக்கு வந்து, பின்னர் கஹட்டோவிட்ட, திஹாரிய போன்ற இடங்களில் வந்து குடியேரியனர். இது 'கம்பஹா மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு' என்ற ஆய்வு நூலில் இடம்பெற்றுள்ளது.

கஹட்டோவிட்டாவுக்கு முஸ்லிம்களின் வருகை பற்றிய அடுத்த தகவல் இவ்வாறு அமைந்துள்ளது.
 
இரண்டாவது தகவல்:-மலையாளத்திலிருந்து இடம்பெயர்ந்து, அத்தனகல்ல, பண்டாரஓவிட்ட என்ற இடத்துக்கு வந்திருந்த ஷேக் அப்துல் காதர் மற்றும் அவரது தோழர்களை சந்திக்க, அட்டுலுகமவிலிருந்து முஹம்மத் காஸிம் என்பவர் அடிக்கடி வந்துள்ளார். முஹம்மத் காஸிம், பல்துறை சார்ந்த ஒரு திறமைசாலியாக இருந்ததாகவும், இச்சந்தர்ப்பத்தில் அவ்வழியே வந்த சிங்கள மன்னன் ஒருவன் இவரது திறமைகளைக் கண்டு இப்பிரதேசத்தை அன்பளிப்பாக வழங்கியதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்நிகழ்வின் பின்னர், கஹட்டோவிட்ட பிரதேசம் முஸ்லிம்களின் குடியிருப்பாக மாறி, பல்வேறு இடங்களிலிருந்தும் மக்கள் இங்கு வந்து குடியமர்ந்தனர்.
 
சன்மார்க்க எழுச்சி


கஹட்டோவிட்டாவின் மார்க்க எழுச்சி வரலாறு பற்றிக் குறிப்பிடும் போது இருவரின் பங்களிப்புகள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. இவ்விருவரும் அறபு நாடுகளிலிருந்து சன்மார்க்க போதனைக்காக கஹட்டோவிட்டாவுக்கு வந்துள்ளனர். 1700 களின் பிற்பகுதியில் ஷெய்க் பாதிப் மவ்லானா (யமனி) அவர்களும், ஷெய்க் முபாரக் மவ்லானா அவர்களும் வருகை தந்து, ஊரின் மார்க்க எழுச்சியில் பெரிதும் பங்காற்றியுள்ளனர். ஷெய்க் முபாரக் மவ்லானா இங்கு நீண்டகாலம் தங்கியிருக்காவிட்டாலும், ஷெயக் பாதிப் மவ்லானா அவர்கள் தாம் மரணிக்கும் வரை இங்கு தங்கியிருந்து மார்க்கப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் இருவரினதும் போதனைகளை நடைமுறைப்படுத்த இரு தக்கியாக்களும் கட்டப்பட்டன.

இதன் பின்னர் 1792 இல், இப்பிரதேசத்தின் முதல் பள்ளிவாயல், கஹட்டோவிட்டாவுக்கும் உடுகொடைக்கும் இடையிலிருந்த கொடல்ல எனும் இடத்தில் கட்டப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. இது மோதரான அப்பா அவர்களின் காணியில், சின்ன லெப்பை சுலைமான் லெப்பபை அவர்களின் தலைமையில் கட்டப்பட்டது.

தற்போதுள்ள முஹியத்தீன் பள்ளிவாசல், கறுத்த ஆலிம் அப்பா அவர்களின் வழிகாட்டலில், 1795 இல் அத்தனகல்லையிலிருந்து குடியேறிய அஹமது லெப்பையால் வழங்கப்பட்ட காணியில் கட்டப்பட்டது. இவரே இப்பள்ளியின் முதல் கதீபும் ஆவார். கஹட்டோவிட்ட ஜும்ஆ மஸ்;ஜித் என்றழைக்கப்பட்ட இப்பள்ளிவாசல், 1970 இல், முஹியத்தீன் ஜும்ஆ மஸ்ஜித் எனப் பெயர் பெற்றது.

இதன் பின்னர் இரண்டாவது பள்ளிவாசலாக, 1974 இல், மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் ஆரம்பிக்கப் பட்டது. புஹாரி ஆலிம் என்பவருக்குச் சொந்தமான கட்டடமொன்றில் இயங்கி வந்த குர்ஆன் மத்ரஸாவே இவ்வாறு பள்ளிவாசலாக மாற்றம் பெற்றது.

தற்போது, 2000 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட மஸ்ஜித் ஜாமிஉ ஜும்ஆ பள்ளி அடங்கலாக மொத்தம் மூன்று ஜும்ஆ பள்ளிவாசல்கள் கஹட்டோவிட்ட கிராமத்தில் உள்ளன.
 
கல்வி


ஆரம்பத்தில் கல்வி நடவடிக்கைகள் பள்ளிவாசல்களை மையமாகக் கொண்டே இயங்கி வந்தன. இதன் அடிப்படையில், முஹியத்தீன் பள்ளிவாசலுக்கு அருகில் அமைந்துள்ள, பாதிபிய்யா தக்கியாவுக்கு சொந்தமான கட்டடத்திலேயே முதலாவது பாடசாலை அமைந்திருந்தது. பின்னர், 1920 இல், அரசினர் பாடசாலையாக இது மாற்றம் பெற்றது. இதன் பின்னர், இப்பாடசாலை, தற்போதைய அமைவிடத்துக்கு மாற்றப்பட்டு, இப்போது அல்பத்ரியா ம.வி. என்ற பெயரில் இயங்கி வருகின்றது.

அடுத்து, பெண்களுக்கான தனியான பாடசாலை 1946 இல் ஆரம்பிக்கப்பட்டது. இன்று ஒரு தனியார் சர்வதேசப் பாடசாலை அடங்கலாக மொத்தம் மூன்று பாடசாலைகள் செயற்பட்டு வருகின்றன.

கஹட்டோவிட்ட, சுற்றியுள்ள முஸ்லிம் கிராமங்களோடு ஒப்பிடும் போது, கல்விமட்டத்தில் மிகச் சிறந்த நிலையில் அன்றும் இன்றும் இருந்து வருகின்றது. உதவித் தேர்தல் ஆணையாளர், உதவிப் பரீட்சை ஆணையாளர் போன்ற உயர் அரச பதவிகளிலும் மற்றும் மருத்துவம், பொறியியல், சட்டம், ஊடகத்துறை போன்ற பல்வேறு துறைகளிலும் அதிகமானோர் பங்காற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 மர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் முதல் இன்று வரை மார்க்கத் துறையிலும் பலர் பல்வேறு இயக்கங்களில் இருந்து தொண்டாற்றி வருகின்றனர்.

இவை தவிர 1959 ஆம் ஆண்டிலே கஹட்டோவிட்டாவுக்கான தனியான உபதபாற்கந்தோர் திறந்துவைக்கப்பட்டது. இங்கு 1981 இல் மின்சார இணைப்பும் வழங்கப்பட்டது. இவ்வாறு பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் கண்ட ஒரு தனித்துவ அடையாளத்தைப் பிரதிபலிக்கும், கட்டுக்கோப்பான சமுக அமைப்பைக் கொண்ட ஒரு ஊராக கஹட்டோவிட்ட திகழ்ந்து வருகின்றது.
 
 
இந்த வரலாற்றுக் குறிப்புகள்

 
, அடிப்படையில், எமது ஊரைச் சேர்ந்த அஷ்ஷெய்க் ஹிஷாம் ராஸிக் என்பவரால் தொகுக்கப்பட்டு, மீள்பார்வை இதழில் வெளியிடப் பட்டிருந்தது. அவற்றுடன், எமக்குத் தெரிந்த தகவல்களையும் இணைத்து, சற்று விரிவுபடுத்தி இங்கு மீள் பிரசுரிக்கிறோம். வாசகர்களாகிய நீங்களும், உங்களுக்குத் தெரிந்த ஆதாரபூர்வமான தகவல்களை எமக்கு வழங்குவதன் மூலம் இதனை மேலும் விரிவுபடுத்த உதவ முடியும்.
குறிப்பு


குடியேற்றம்

`


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக