உலகம் 2012 டிசம்பர் 21ம் திகதியன்று அழியுமா? அழியாதா? என்ற மிகவும் பெறுமதி வாய்ந்த கேள்வியொன்றுடன் கடந்த பதிவில் விடைபெற்றிருந்தேன். 'உலகம் நிச்சயம் அழியும்' என்ற குரல் பலமாகவே இம்முறை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு அடிப்படையாய் அமைந்தவர்கள் என்னும் ரீதியில் மாயன்களையும், மாயன்கள் என்றாலே மாயமும், மர்மமும் என்பதால், உலகத்தில் உள்ள மர்மங்களையும் இதுவரை அலசி ஆராய்ந்து வந்தோம். ஆனால் இந்தத் தொடரின் வேர் என்பதே, 2012 டிசம்பர் 22 இல் உலகம் அழியுமா? இல்லையா? என்பதற்கான விடையறிதல்தான். எனவே, அதற்கான விடையை அலசும் கட்டத்திற்கு நாம் இப்பொழுது வந்துவிட்டோம். அப்பப்போ அழிவு பற்றி ஆங்காங்கே தொட்டுச் சென்றிருந்தாலும், அவற்றை எல்லாம் ஒன்று சேரத் தொகுத்து,இந்தத் தொடரில் மிகவும் விரிவாக நாம் பார்க்கலாம். அவற்றின் சாத்தியங்களையும் ஒன்று விடாமல் நாம் ஆராயலாம்.
அதற்கு முன்னர், கடந்த வாரம் (27.2.2012) வெளிவந்த ஒரு அசத்தலான செய்தியைச் சொல்கிறேன். இது எந்த வகையான செய்தியென்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். இது நடந்ததும் மாயன் பிரதேசத்தில்தான். உண்மையாகவே நான் சொல்லப் போகும் இந்தச் சம்பவம் நடந்தது24.07.2009 அன்றுதான். ஆனால் அது இப்போதுதான் மிகப் பெரிதாக வெளிவந்திருக்கிறது. இது உண்மையா? பொய்யா? என்பதற்கு என்னிடம் எந்தப் பதிலும் இல்லை. ஆனால் நீங்களும் இதை அறிந்திருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். 'என்ன நான் விசயத்தைச் சொல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறேன்' என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. சரி விசயத்துக்கு வருகிறேன்.
விசயம் இதுதான்........! எல் சல்வடோரைச் சேர்ந்த ஹெக்டர் சிலிஎஸார் (Hector Siliezar) என்பவர், தனது மனைவியுடனும், இரண்டு மகள்களுடனும்,சிசேன் இட்ஷா (Chichen Itza) என்னும் மாயன்களின் பிரமிட்டைப் பார்ப்பதற்கு உல்லாசப் பிரயாணம் மேற் கொண்டிருந்தார். இந்தப் பிரமிட்டைப் பற்றி முன்னர் பல தடவைகள் நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். அந்தப் பிரதேசத்தைக் கண்டுகளித்த சிலிஎஸார்,தனது இரண்டு மகள்களையும் அந்தப் பிரமிட்டைப் பின்புலமாக வைத்துப் போட்டோக்கள் எடுத்தார். அந்த நேரத்தில் சிறிதாக மழை மேகங்கள் மேலே சூழ்ந்து, மெல்லிய இருட்டாக மாறத் தொடங்கி இருந்தது. அவர் மகள்களைப் போட்டோ எடுத்தது தனது 'ஐபோன்' மூலமாக. அவர் எடுத்த முதல் இரண்டு போட்டோக்களும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் மூன்றாவதாக எடுக்கப்பட்ட போட்டோவில் இருந்ததைக் கண்டு அவர் அதிர்ந்து போனார். சாதாரணக் கண்களுக்குத் தெரியாமல் இருந்த அது, படத்தில் மட்டும் மிகத் தெளிவாகத் தெரிந்தது. அப்படி என்னதான் அந்தப் போட்டோவில் இருந்தது என்பதை நீங்களே பாருங்கள்.
முதல் படத்தில் எதுவுமே இருக்கவில்லை. ஆனால் அதற்கு ஒரு சில செக்கண்டுகளின் பின்னர் எடுத்த படத்தில், அந்தப் பிரமிட்டின் உச்சியிலிருந்து மேல் நோக்கி மெல்லிய, 'ரோஸ்' நிற ஒளிவீச்சு காணப்படுகிறது. அடிப்படையில் இந்தப் படத்தைப் பார்க்கும்போது, யாரோ போட்டோஷாப்பில் (Photoshop) செய்த கிராபிக்ஸோ என்ற எண்ணமே தோன்றும். அப்படியொரு செயற்கைத்தனம்தான் அந்தப் படத்திலும் இருக்கிறது. ஆனால் இதை ஆராய்ந்த அனைவரும் இந்தப் படத்தில் கிராபிக்ஸ் வேலை செய்யப்படவில்லை என ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். படத்தை அக்கு வேறு, ஆணி வேறாக ஆராய்ந்த அனைத்துத் தொழில்நுட்ப வல்லுனர்களும் இந்தப் படத்தில் எந்தவித சாகசங்களும், மாற்றங்களும் செய்யப்படவில்லை என்று அடித்துச் சொல்கின்றனர். இந்தப் படத்தின் தாக்கத்தைக் கேள்விப்பட்ட நாஸா (NASA) விஞ்ஞானிகள் கூட படத்தைப் பரிசோதித்து, அதில் கிராபிக்ஸ் வேலை செய்யபடவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் எந்த ஒரு அறிவியலாளர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாத இந்த நிகழ்வு, எப்படி நிகழ்ந்திருக்கலாம் என்பதற்கு, நாஸா விஞ்ஞானிகள் இப்படிப் பதில் சொன்னார்கள். அதாவது, 'போட்டோ எடுக்கப்பட்ட ஐபோன் கேமராவில் உள்ள லென்ஸின், சென்சரின் (Sensor) ஏற்பட்ட தவறான கணிப்பினால் இப்படி ஏற்பட வாய்ப்பு உள்ளது'என்றார்கள்.
கேமராக்களின் சென்சர்களில் ஏற்படும் தவறுகளால் இப்படிப்பட்ட படங்கள் உருவாவது என்னவோ உண்மைதான். அது மிகச் சரியாக இங்கும் நடந்திருக்குமா என்று யோசிப்பதற்குப் பலர் தயங்குகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், வெறும் 17 செக்கண்டுகளின் முன்னர் எடுத்த படத்தில் இல்லாமல், இந்தப் படத்தில் மட்டும் சென்சர் தவறு செய்யுமா?அத்துடன், படத்தில் வெளிவரும் ஒளிக் கீற்று மிகச் சரியாகப் பிரமிட்டின் உச்சியின் தளத்தில், மில்லி மீட்டர்கள் விலகாமல் ஆரம்பித்து மேலே செல்லுமா? அது மட்டுமல்லாமல் பிரமிட்டின் உச்சியின் சரி நடுவே அது எப்படித் தோன்ற முடியும்? எல்லாமே தற்செயலாக சென்சர் பழுதினால் ஏற்பட்டதா? இவைதான் அவர்களின் சந்தேகம். ஏற்கனவே நாஸா உண்மையைச் சொல்லாது என்னும் பெயர் அதற்கு இருக்கும் போது,இதைச் சொன்னாலும் அவர்கள் நம்பப் போவதில்லை.
மழை பெய்யத் தயாராகும் தருணங்களில், கண்ணுக்குத் தெரியாத ஒரு மின்னல் தாக்கின் மூலமாக, சென்சரின் தவறில் இப்படிப்பட்ட படம் உருவாகியிருக்கலாம் என்று நாஸா விஞ்ஞானிகள் சொல்வதை நம்ப வேண்டும் என்றே எனது மனதும் நினைக்கிறது. இதுவரை, உலகின் மிஸ்டரிகளையும், ஆச்சரியங்களையும் உங்களுக்குப் படிப்படியாகச் சொல்லி வந்த எனக்கு, பலவற்றில் உடன்பாடு இருக்கவில்லை. நான் அவற்றையெல்லாம் சொல்வதால், அவற்றை நம்புகிறேன் என்றும் பலர் என்னைப் பற்றி நினைக்கலாம். நான் உங்களுக்கு இப்படி, இப்படியெல்லாம் மிஸ்டரிகள் இருக்கின்றன என்ற தகவல்களைத் தருவது என்பது வேறு,அதை நம்புவது என்பது வேறு. அதனால் மேற்படி செய்தியையும் நம்புவதற்கு என் மனமும் இடம் தரவில்லை. ஆனால் என்னைத் தடுமாற வைத்த இன்னுமொரு நிகழ்வை அடுத்து நான் கண்டபோது அசந்து போனேன். இதை எந்த வகையில் சேர்ப்பது என்றே என்னால் சொல்ல முடியவில்லை. அதை நீங்களும் பாருங்களேன்.
போஸ்னியா (Bosnia) நாட்டில் விஸிகோ (Visiko) நகரில், தற்செயலாக ஆராய்ச்சியாளர்களால் ஐந்து பிரமிட்டுகள் (Pyramid) கண்டுபிடிக்கப்பட்டன. எகிப்தில் மட்டும்தான் பிரமிட்டுகள் இருக்கின்றன என நினைத்திருக்கும் நமக்கு, மாயன் பிரமிட்கள் தந்த அதிர்ச்சிகள் போதாதென்று,போஸ்னியாவிலும் பிரமிட்டுகள் இருப்பது பேரதிர்ச்சியாக இருக்கும். பிரமிட்டுகள் இங்கு மட்டுமல்ல, உலகின் பல இடங்களில் உண்டு. என்ன,நமக்குத்தான் அவற்றை அறிந்திருக்கும் வசதி இல்லாமல் போய்விட்டது. மெக்சிக்கோ, எல் சல்வடோர், குவாத்தமாலா அதிகம் ஏன், எமக்கு அருகில் இருக்கும் சீனா ஆகிய நாடுகளிலும் பிரமிட்டுகள் இருக்கின்றன. போஸ்னியாவில் இருக்கும் ஐந்து பிரமிட்டுகளும், சூரியன், சந்திரன், ட்ராகன் (Dragon), பூமி, அன்பு ஆகிய ஐந்துக்கும் அடையாளமாய் கட்டப்பட்டிருக்கின்றன. இந்தப் பிரமிட்டுகளின் வயதைக் கேட்டால் தலை சுற்றி விழுந்து விடுவீர்கள். 12000 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டவை அவை. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பிரமிட்டுகளிலே மிகவும் பழமையானவை அவை.
ஆனால், நான் இப்போது சொல்ல வந்தது இந்தப் பிரமிட்டுகளைப் பற்றியல்ல. இவற்றைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், மீண்டும் இன்னுமொரு தொடர் ஆரம்பிக்க வேண்டும். எனவே பிரமிட்டின் தகவல்களைத் தருவதை விட்டுவிட்டு, சொல்ல வேண்டியதை மட்டும் சொல்கிறேன்.
2010 களில் போஸ்னியாப் பிரமிட்டுகளை ஆராயச் சென்ற பௌதிகவியலாளர்கள், சூரியப் பிரமிட்டிலிருந்து ஒளிவீச்சு ஒன்று மேலே செல்வதைக் கண்டுபிடித்தனர். அந்த ஒளிக் கற்றை ஒன்பது மீட்டர்கள் அகலத்தில் மேல் நோக்கி வெளிவருகின்றது என்பதையும் கண்டுபிடித்தனர். அத்துடன் இந்த ஒளிக் கதிர்வீச்சின் சக்தியையும், அதாவது அதன் அலை நீளத்தையும் கண்டுபிடித்துள்ளனர். அது 28 கிலோ ஹேர்ட்ஸ் (kHz)அளவில் இருப்பதாகக் கணிக்கப்பட்டது. இது பௌதிகவியல் விஞ்ஞானிகளாலேயே கண்டு பிடிக்கப்பட்டதால், எவரும் மறுக்கவில்லை.
எல்லாமே போட்டோஷாப் வேலைகள்தானா? எல்லாமே கிராபிக்ஸ்தானா?இல்லை, இவை எடுத்த அனைத்துக் கேமராக்களின் சென்சர்களும் பழுதாகிவிட்டனவா? இப்படி எல்லாம் தற்செயல்கள் இருக்க முடியுமா?இவை உண்மையென்றால், மாயனின் 'சிசேன் இட்ஷா' பிரமிட்டில் எடுத்தது மட்டும் ஏன் பொய்யாக இருக்க வேண்டும்? இந்த 'சிசேன் இட்ஷா'பிரமிட்டின் அதிசயங்களையும், அதன் கட்டட அமைப்புகளைப் பற்றியும் முன்னர் நான் சொல்லியிருக்கிறேன். அத்துடன், அது பற்றி இன்னுமொரு அதிசயமும் உண்டு, அதைப் பின்னர் சொல்கிறேன் என்றும் சொல்லியிருந்தேன். அதை நீங்கள் மறந்திருக்கலாம். ஆனால் நான் மறக்காமல் சொல்ல வேண்டுமல்லவா?
சிசேன் இட்ஷா பிரமிட் மாயன்களால், 'குக்கிள்கான்' என்னும் அவர்களுடைய கடவுளுக்காகக் கட்டப்பட்டது. இந்தக் குக்ககிள்கான் என்னும் கடவுள்தான், மாயன்களின் அறிவுக்கே அடிப்படைக் காரணமானவர் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உண்மையில் இந்தக் குக்கிள்கான் ஒரு கடவுள் அல்ல, அவர் கிழக்குப் பக்கத்தில் இருந்து கப்பல் மூலம் மாயன்களிடம் வந்து சேர்ந்த ஒருவர் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். அப்படிக் கிழக்கில் இருந்து வந்தார் என்றால், எங்கிருந்து வந்திருப்பார் என்று பார்த்ததில், அவர்களுக்கு இரண்டே இரண்டு விடைகளே கிடைத்தன. ஒன்று அவர் சுமேரியாவில் இருந்து வந்திருக்கலாம் அல்லது தமிழர்களின் பிரதேசத்தில் இருந்து வந்திருக்கலாம் என்பவையே அவை.
இந்தக் குக்கிள்கான் என்பவரை பாம்புக் கடவுள் என்று மாயன்கள் வணங்கியிருக்கிறார்கள். பாம்பு என்பது மேற்குலகில் சாத்தானின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட நிலையில், பாம்பைக் கடவுள் அம்சமாகப் பார்க்கும் தன்மை இந்துக்களான நம்மிடம் அதிகம் இருந்ததும், குக்கிள்கான் தமிழ்ப் பிரதேசங்களில் இருந்து வந்திருக்கலாமோ என்னும் வாதத்துக்குப் பலமூட்டுகிறது. இந்தப் பாம்புக் கடவுளான குக்கிள்கானுக்காகவே கட்டப்பட்டது அந்தப் பிரமிட். உலக அதிசயங்களைத் தன்னுள் அடக்கிய ஒரு பிரமிட் அது. மாயன்களின் கணித அறிவையும், வானியல் அறிவையும், கட்டடக்கலை அறிவையும் இன்றும் பறைசாற்றிக் கொண்டு,நிமிர்ந்து நிற்கிறது இந்தப் பிரமிட். இதன் நான்கு பக்கமும், வருடத்தின் நான்கு காலங்களையும், அதில் உள்ள படிகளின் எண்ணிக்கைகள் 365நாட்களையும் குறிப்பது இந்தப் பிரமிட்டின் சிறப்பு. அத்துடன் இந்த நான்கு பக்கமும் உள்ள படிகள் மிகச் சரியாக 45 பாகை கோணத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமில்லாமல், இந்தப் பிரமிட்டின் நான்கு மூலைகளையும் குறுக்காக இணைக்கும் இரண்டு கோடுகளும், மிகச் சரியாக வடக்குத் தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் அமைந்திருக்கின்றன். இவையெல்லாம் மாயன்களின் அறிவுக்கும் கட்டடக் கலைக்கும் முக்கிய சான்றுகளாகும்.
இவற்றை விடவும் மிக ஆச்சரியமான ஒன்று அந்த பிரமிட்டில் உண்டு. இந்தப் பிரமிட்டின் நான்கு பக்கப் படிகளிலும், வடக்குப் பக்கத்தில் உள்ள படிகளில் ஒரு சிறப்பான அம்சம் அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்தப் படிகளின் அடிப்பக்கம் இரண்டு பக்கமும் இரண்டு பாம்புகள் வாயைத் திறந்து கொண்டிருப்பது போல அமைக்கப்பட்டிருக்கின்றன. வருடத்தில் இரண்டு முறைகள், மிகச் சரியாக மார்ச் 21ம் திகதியும், செப்டம்பர் 22ம் திகதியும் அந்தப் படிகளின் பக்கச் சுவர்களில், சூரியனின் நிழல் படுகின்றது. "அப்படி அந்தச் சூரியனின் நிழலில் என்ன விசேசம்" என்றா கேட்கிறீர்கள்?அதைப் படத்தில் பார்த்தால் உங்களுக்குப் புரியும் பாருங்கள்.
புரிகிறதா? பிரமிட்டின் மூலைகளில் படும் சூரிய ஒளி, அந்தப் பாம்பின் உடல் போல வளைந்து வளைந்து சரியாக அதன் தலையுடன் பொருந்தும். இதில் இன்னுமொரு விசேசம் என்னவென்றால், மாயன்கள் அந்தப் பக்கச் சுவரில் மட்டும் பாம்பின் தோல் போன்ற அமைப்பில் கற்களை வைத்துக் கட்டியிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு வருடமும் சரியாக மார்ச் 21ம் திகதியும், செப்டம்பர் 22ம் திகதியும் மாற்றமே இல்லாமல் இந்த நிழல்கள் தெரியும். "அப்படி என்ன விசேசம் இந்த மார்ச் 21ம் திகதிக்கும், செப்டம்பர்22ம் திகதிக்கும்" என்று யோசிக்கிறீர்களா? உலகில் எந்த ஒரு இடத்திலும்,வருடத்தில் எப்போதும், இரவும் பகலும் ஒரே அளவு நேரமாக்க் கொண்டிருப்பது இல்லை. வருடத்தில் இரண்டே இரண்டு நாட்கள் மட்டும்தான் இரவும், பகலும் ஒரே அளவாக இருக்கும். மாயன் பிரதேசத்தில் இந்த இரவும் பகலும் ஒன்றாக இருக்கும் நாட்கள்தான் மார்ச்21ம் திகதியும், செப்டம்பர் 22ம் திகதியும். தற்கால கட்டட நிபுணர்களே தடுமாறும் இந்த ஆச்சரியமான கட்டட அமைப்பைக் கொண்டு அமைந்த இந்தப் பிரமிட்டில், பல அதிசயங்கள் நடக்கின்றன என்று மக்கள் நம்பும்போது, அதை மறுப்பதற்கு நிமிடம் எதுவும் இல்லாமல் போகிறது.
சரி, இப்பொழுது மீண்டும் நாம் உலக அழிவுக்கு வரலாமா....?
முதலில், உலகம் அழிவது என்றால் என்னவென்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். உலகம் அழிய வேண்டும் என்றால், அது இரண்டு வழிகளில் நடைபெற வேண்டும். 1. சூரியக் குடும்பத்தின் தலைமகனான சூரியன் அழிந்தால், அதனுடன் சேர்ந்து, பூமி உட்பட அனைத்துக் கோள்களும் அழிந்து போவது. 2. சூரியனுக்கு எதுவும் நடைபெறாமல், பூமி மட்டும் அழிவது. இங்கு, பூமி மட்டும் அழிவது என்று பார்த்தாலும், அதிலும் இரண்டு வகைகள் உண்டு. 1. நாம் வாழும் பூமியை ஏதோ ஒன்று மோதி அது சிதறியோ, வெடித்தோ அழிந்துவிடுவது. 2. பூமி அப்படியே இருக்க,பூமியில் உள்ள உயிரினங்கள் உட்பட அனைத்தும், நெருப்பினாலோ,நீரினாலோ, குளிரினாலோ, வெப்பத்தினாலோ அழிந்துவிடுவது.
மேலே கூறியதில் ஒன்றிலிருந்து முதலில் நாம் தெளிவாக வெளிவந்துவிடலாம். அதாவது, சூரியன் அழியுமோ என்னும் சந்தேகம் மாயன்களின் கதைகளிலிருந்தே நமக்கு ஏற்பட்டிருந்தது. மாயன்களின்'பொபோல் வூ' என்னும் புத்தகம் சொன்னபடி, சூரியன் கருமையான இடத்தை நோக்கி ஒவ்வொரு 26000 வருடங்களுக்கும் செல்வதால், அதனால் ஈர்க்கப்பட்டு அழியலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் நவீன விஞ்ஞானத்தின் மூலம் ஆராய்ந்ததில், மாயன்கள் சொல்லியபடி ஒரு கருப்பு இடத்தை நோக்கிச் சூரியன் நகர்வது உண்மைதான் என்றாலும்,அந்தக் கருப்பு இடம் ஒரு திடமான இடமல்ல. அதாவது ஒரு நட்சத்திரம் போலவோ, கோளைப் போலவோ திடமான இடமல்ல. மில்க்கிவேயில் கோள்கள், நட்சத்திரங்கள் என்னும் திடமானவை இருப்பது போல,தூசுக்களும், வாயுக்களும் ஒன்று சேர்ந்து கோடான கோடி கிலோ மீட்டர் பரவி, பல இடங்களில் இருட்டுப் போல இருக்கின்றன. பார்க்கும்போது மிகப்பெரிய இருண்ட பகுதி போல அவை தோன்றினாலும், அவை வெறும் வாயுக்களும் தூசுக்களும்தான். திடமான நட்சத்திரங்கள், கோள்களுக்கு அவற்றின் மையப் பகுதியில் ஈர்ப்புவிசை மிக அதிகமாக இருக்கும். ஆனால் இப்படிப் பரவி இருக்கும் இந்தக் கருமையான தூசுக்களுக்கும் ஈர்ப்பு விசை இருந்தாலும், அவை மையப் பகுதியைக் கொண்டிருக்காமல் இருப்பதால், பெரிய அளவில் ஈர்ப்பு விசைகளைக் கொண்டிருக்க முடியாது. இப்படி ஒரு கருமையான இடம் எமது சூரியன் பிரயாணம் செய்யும் இடத்துக்கு அருகிலும் உண்டு என்பது உண்மைதான். அதைத்தான் மாயன்கள் 'ஷிபால்பா' என்னும் மரணக் கடவுளின் இடம் என்று அழைத்தார்கள்.
மாயன்கள் சொல்லியது போல, சூரியனுக்கு எந்தத் தீங்கும் வரமுடியாது. அதாவது சூரியனைக் கவர்ந்திழுத்து அழிக்கவல்ல ஈர்ப்பு சக்தி அந்த கருப்புப் பள்ளத்துக்குக் கிடையாது. இங்கு பிளாக் ஹோல் (Black hole)என்பதற்கும், இதற்கும் வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிளாக் ஹோல் என்பதுதான் பிரபஞ்சத்திலேயே ஈர்ப்பு விசை அதிகமான ஒன்று. ஆனால் இது அதுவல்ல. மில்க்கிவேயின் மையப் பகுதியில் ஒரு ப்ளாக் ஹோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அது எமது பூமியிலிருந்து 50000 ஒளிவருடங்கள் தூரத்தில் இருக்கிறது. மிக மிக மிகத் தூரத்தில். எனவே சூரியன் அழியாது என்பதில் நாம் திடமாக இருக்கலாம். அத்துடன் சூரியன் அழியலாம் என்னும் விபரம் கூட, மாயன்களின் பிற்காலப் புத்தகமான பொபோல் வூவில்தான் இருக்கிறது. ஆரம்பகால மாயன் காலண்டர்களிலோ, புத்தகங்களிலோ இல்லை. நமது சூரியன்,என்றாவது ஒருநாள் தன் சக்திகள் அனைத்தும் முடிந்து அழிந்து போகும் நிலை வரும் என்றாலும், அதற்கு பில்லியன் பில்லியன் வருடங்கள் நீங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை யாராவது பிழைத்திருதந்தீர்கள் என்றால்,அது பற்றி எமக்கு அறியத் தரவும்.
சூரியன் அழியாது என்றதும், எம்முன் எஞ்சி இருப்பது பூமியின் அழிவு மட்டும்தான். பூமியின் அழிவிலும் இரண்டு விதமான அழிவு உண்டு எனச் சொல்லியிருந்தேன். அதில் முதலாவது, பூமியுடன் ஏதாவது மோதுவதால் பூமி அழிவது என்பதாகும். இதைச் சற்றே நாம் பார்க்கலாம்.
இதுவரை நாம் பார்த்ததில், 'நிபிரு' அல்லது 'பிளானெட் எக்ஸ்' என்று அழைக்கப்படும் ஒரு கோள் பூமிக்கு அருகே வரலாம் என்பது முக்கியமானது. இந்த நிபிரு என்ற ஒன்று இருப்பதை நாஸா மறுக்கிறது. அப்படி ஒரு கோள் இருந்தால், அது இப்போதே விஞ்ஞானிகளின் கண்களுக்கு அகப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள் அவர்கள். ஆனால் அந்த நிபிருவின் வேகம் மிக அதிகம் என்பதால், அது பூமியை அண்மிப்பதற்கு மிகச் சிறிய காலம்தான் தேவை எனவும், தற்போது அது எமது கண்ணுக்குத் தென்படாத தூரத்தில் இருப்பதாகவும் நாஸாவை எதிர்ப்பவர்கள் சொல்கிறார்கள். அத்தோடு அது ஒரு கருமையான கோள் என்றும், பிரபஞ்சத்தில் ஒளிபடாத, கருமையான எதுவுமே தெரிவதற்கு சாத்தியம் குறைவு என்றும் சொல்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும், இந்த நிபிரு என்ற ஒன்று இருப்பதற்கு 50க்கு 50 என்ற சாத்தியங்கள்தான் இருப்பதாக நாம் எடுக்க வேண்டும். அப்படி அது உண்மையாகவே இருக்கும் பட்சத்தில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு அப்புறம் அது நிச்சயம் நமக்குத் தெரியத் தொடங்க வேண்டும். எனவே ஆகஸ்ட் மாதம் வரை நாம் காத்திருக்கலாம். அப்போதும் எமக்கு நிபிரு தெரியாத பட்சத்தில் அந்தப் பயத்திலிருந்தும் நாம் விலகிக் கொள்ளலாம். தெரிந்தால், மூட்டையைக் கட்டலாம்.
இதற்கு அடுத்ததாக சொல்லப்படும் பூமியை நோக்கிய மோதல் என்றால் விண்கற்கள்தான். உண்மையில் இது மிகப் பெரிய ஆபத்தான ஒரு விசயமும் கூட. பூமி, விண்கல் தாக்குதலுக்கு உள்ளாகி அழிவதற்கு நூறு விகிதம் சாத்தியங்கள் உண்டு. ஆனால் அது எப்போது என்பதுதான் கேள்வி. பூமியை நோக்கி வந்து தாக்கக் கூடிய விண்கற்கள் எமது சூரியக் குடும்பத்திலேயே, பல்லாயிரக்கணக்காக இருக்கின்றன. அவற்றில் இதுவரை கணித்ததன்படி ஆயிரம் விண்கற்கள் பூமியை ஒட்டுமொத்தமாக அழிக்கும் அளவு பெரியவை. இவை போல ஒன்று தாக்கித்தான் முன்னர் இருந்த டைனசார்கள் எல்லாம் அழிந்தன. அந்த நேரத்திலும் பூமி முழுமையாக அழிந்தது. இப்படிப் பூமியை ஒட்டு மொத்தமாக அழிக்கக் கூடிய ஆயிரம் விண்கற்கள் விண்வெளியில் வலம் வருகின்றன. நூறு மீட்டர் பருமனுள்ள ண்கல் ஒன்றே போதுமானது பூமியை அழிக்க. ஆனால் இவற்றில் பல ஒரு உதை பந்தாட்ட மைதானதை விடப் பெரியன.
உலகத்தில் ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும்,ஒரு அட்டவணை போட்டு, இந்த ஆயிரம் விண்கற்களில் ஒவ்வொரு கற்களையும் தனித்தனியே, தினமும் அவதானித்து வருகின்றனர். ஏதாவது ஒரு விண்கல்லின் திசையாவது பூமியை நோக்கித் திரும்பும் பட்சத்தில் அவர்கள் உடன் அறிவிக்கத் தயாராக இருக்கின்றனர். ஆனால் டிசம்பர் 22ம் திகதி அளவில் பூமியை வந்து தாக்கக் கூடியதாக எந்த விண்கல்லும் இல்லை என்றே விஞ்ஞானிகள் சொல்கின்றனர். இதையும் தாண்டி கண்ணுக்குத் தெரியாத ஒரு விண்கல் தாக்கும் என்பதற்குச் சாத்தியம் மிகக் குறைவு. இதில் ஒன்றை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.2012 டிசம்பர் 22 ம் திகதி விண்கல் தாக்காது என்றுதான் வானிலை ஆய்வாளர்கள் சொல்கிறார்களே ஒழிய, விண்கல் என்றுமே தாக்காது என்று சொல்லவில்லை. அவர்களே சொல்லும் ஒன்று எம்மை நடுங்க வைக்கிறது. அதாவது பூமி நிச்சயம் ஒரு விண்கல் தாக்கி எப்போதாவது அழியும் என்பதுதான் அது.
எனவே, நிபிரு என்ற ஒன்றினால் ஆபத்து வருமென்றால் நமக்கு ஆகஸ்டில் புரிந்து போய்விடும், விண்கல் பயம் என்பது டிசம்பர் 22 வரை தேவையில்லாதது. என்னைக் கேட்டால் இந்த இரண்டைப் பற்றியும் கவலைப்படத் தேவையே இல்லை என்றே சொல்வேன்.
இப்போது நம்மிடையே எஞ்சியிருக்கும் பூமியின் அழிவு என்பது பின்வரும் நான்கு வகையில்தான் அனேகமாக இருக்கலாம். 1. சுனாமி, பூகம்பம் போன்ற தொடர்ச்சியான் இயற்கை அழிவுகள் 2. பூமிக்குள் குமுறிக் கொண்டிருக்கும் 'சசூப்பர் வோல்கான்' (Supervolcan) எனப்படும் பாரிய எரிமலைகளின் வெடிப்பு. 3. பூமியின் வட தென் துருவங்கள் இடம் மாற்றம் (Pole shift) 4. சூரிய வெப்பக் கதிரின் தாக்குதலும், அதன் மூலம் ஏற்படும் மின்காந்த விளைவுகளும்.
இவை எல்லாவற்றையும் நாம் சரியாக கவனித்துப் பார்த்தால், இவை எல்லாமே ஒரு வகையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட விளைவுகளையே கொடுப்பவை. உதாரணமாக, பூமியின் வட-தென் துருவங்கள் இடம் மாறுவதை நாம் கருத்தில் கொள்வோம். துருவமாகத் தற்போது இருக்கும் இடம் வெப்பப் பிரதேசமாகவும், வெப்பப் பிரதேசம் துருவமாகவும் மாறினால், தற்சமயம் துருவத்தில் இருக்கும் பனிக்கட்டிகள் அனைத்தும் கரைந்து போகும். அவை மட்டும் கரைந்தால் போதும். பூமியின் அத்தனை நிலப்பகுதிகளும் பல நூறு மீற்றர்களுக்கு நீரினால் மூழ்கிவிடும். அதன் ஆரம்பக் கட்டமாக ஏற்படுவது பாரிய சுனாமிகளும்,பூகம்பங்களுமாகத்தான் இருக்கும். மாயன்களிடமிருந்து எமக்குக் கிடைத்த நான்கு புத்தகங்களில், 'ட்ரெட்னர் கோடெக்ஸ்' (Dredner Codex) என்பதில்தான்2012 உலக அழிவு பற்றி விளக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. அதன்படி பூமியானது நீரினாலும், நெருப்பினாலும் சூழப்பட்டு அழிவதாகத்தான் உள்ளது.
பூமியின் துருவங்கள் இடம் மாறுவதற்கும், பூமியில் தனித்தனியாக சுனாமிகளும், பூகம்பங்களும் ஏற்பட்டு உலகம் அழியும் என்பதற்கும் சாத்தியங்கள் தற்சமயம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது. சுனாமிகளும், பூகம்பங்களும் தனித்தனியே ஆங்காங்கே ஏற்பட்டாலும்,அவை ஒட்டுமொத்த உலகை அழிவை ஏற்படுத்திவிடாது. அதுவும் டிசம்பர்22க்குள் ஏற்படவே முடியாது. இதனடிப்படையில் கடைசியாக, எம்மிடையே எஞ்சியிருப்பன இரண்டே இரண்டு வியசங்கள் மட்டும்தான். அவை 1.சூரியனின் வெப்பக் கதிர் வீச்சு, 2. சசூப்பர் வோல்கான். இந்த இரண்டினாலும் ஏற்படப் போகும் அழிவை, எந்த ஒரு விஞ்ஞானியும் மறுக்கவில்லை. இவை இரண்டிற்கும் 2012 டிசம்பர் அழிவுக்கும் சம்பந்தம் இருக்கலாமா என்று கேட்டால், உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் இல்லை என்று பதில் சொல்வதே இல்லை. இவற்றிற்கு சாத்தியங்கள் இருக்கலாம் என்று சந்தேகத்துடன் ஒரு சாரார் சொல்ல, இருக்கிறது என்று ஒரு சாரார் அடித்துச் சொல்ல, எஞ்சியவர்கள் அமைதியாகத்தான் இருக்கிறார்களே ஒழிய, இல்லை என்று மறுக்கவில்லை.
"இது என்னப்பா புதுக் கதை? சூப்பர் வோல்கான் என்று ஒரு புதுச் சரடு விடுகிறாரே இவர்" என்று வழமை போல நீங்கள் நினைக்கலாம். ஆனால் பூமியை அழிவை நோக்கி நகர்த்தும் வண்ணம் அமைந்திருக்கின்றன இந்த சூப்பர் வோல்கான்கள் என்று சொன்னால் அதில் பொய் ஏதுமில்லை. நீங்கள் இதுவரை பார்த்திருக்கும் எரிமலை போன்றவை அல்ல இவை. இவை எல்லாமே மலைகள் போல அல்லாமல், சாதாரணமாக நிலத்தின் கீழ் அடங்கியிருப்பவை. மொத்தமாகப் பூமியில் எட்டு சூப்பர் வோல்கான்கள் இருக்கின்றன. அதில் முக்கியமாக 2012 டிசம்பர் உலக அழிவுக்குக் காரணமாக அமையும் என்று நம்பப்படும் சூப்பர் வோல்கான்,அமெரிக்காவில் உள்ள 'யெல்லோ ஸ்டோன்' (Yellowstone) என்பதுதான்.
அமெரிக்காவின் Wyoming மாநிலத்தில் அமைந்திருக்கிறது இந்த யெல்லோ ஸ்டோன். 102 கிலோமீட்டர் நீளம், 82 கிலோ மீட்டர் அகலம் கொண்ட பாரிய நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது இந்த எரிமலை. 60 கிலோ மீட்டர் நீளமும், 40 கிலோ மீட்டர் அகலமும், 10 கிலோ மீட்டர் பூமியின் கீழே ஆழமுமாக அமைந்த மிகப்பெரிய எரியும் கூண்டு போல இது இருக்கிறது. உண்மையில் இது எரியும் கூண்டு அல்ல. ஆயிரம் ஆயிரம் அணுகுண்டுகளின் வெடிப்பு சக்தியை உள்ளடக்கிய பாரிய வெடிகுண்டு. இந்த யெல்லோ ஸ்டோன் பிரதேசங்களில் 10000 க்கும் அதிகமான வெந்நீர் ஊற்றுகள் நிலத்தில் இருந்து சீறியபடி இருக்கின்றன. இவற்றைப் பார்ப்பதற்கென்றே சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிகின்றனர்.
நாம் இப்போது கடைசியாக எம்மிடையே எஞ்சியிருக்கும் சூரியனின் வெப்பக் கதிர்த் தாக்குதலுக்கு வரலாம். மேலே சொன்ன அழிவுகளை சிலர் மறுத்துப் பேசினாலும், அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு ஆபத்து உண்டு என்றால், அது இந்தச் சூரியனின் வெப்பக் கதிர்த் தாக்குதல்கள்தான். இதற்குச் சாட்சியாக சமீபகாலங்களாக சூரியன் தனது வெப்பக் கதிர்வீச்சுகளை மிகவும் அதிகமாக்கியிருக்கிறது.
சூரியனின் இந்த கதிர்வீச்சுத் தாக்குதல் ஒரு புயல் போல பூமியைத் தாக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்படித் தாக்கும்போது அதனுடன் சேர்ந்து உருவாகும் மின்காந்த அலைகளின் தாக்குதல்கள் பூமியின்,இரண்டு துருவங்களுக்கு ஊடாக பூமியின் உள்நுழைந்து, பூமியில் இருக்கும் அனைத்துவிதமான மின்னியல் சாதனங்களையும் தொழிற்பட முடியாமல் செய்துவிடும். அத்துடன் பூமி நினைக்க முடியாத அளவு வெப்பமாகி எல்லாமே அழியும் நிலைக்கு வந்துவிடும். இதன் மூலம் நாம் எப்படி அழிவோம் என்ற கொடுமைகளைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துவிடலாம். ஆனால், இந்த சூரியக் கதிர்த் தாக்கத்தால் பூமி மொத்தமாக அழிவைச் சந்திக்கும். இந்த சூரியத் தாக்குதல் 2012 இல் நடப்பதற்கு நிறையச் சாத்தியங்கள் உண்டு என்பதே பலரின் அனுமானமாக இப்போது இருக்கிறது.
நான் விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் இல்லாத எந்த ஒரு அழிவையும் நம்பப் போவதில்லை. அதையே நம்பிக்கையாகவும் உங்களுக்குத் தரப் போவதும் இல்லை. இந்தத் தொடரை நான் எழுதுவதால், 2012 இல் உலகம் அழியும் என்னும் மூட நம்பிகையைப் பலருக்கு நான் விதைப்பதாக சிலர் எண்ணியிருந்தார்கள். எனது நோக்கம் நிச்சயம் அதுவல்ல. மூடநம்பிக்கைக்கு முற்றிலும் எதிரானவன் நான். எந்த ஒரு விளைவுகளுக்கும் விஞ்ஞான ரீதியான விளக்கம் உண்டு என நம்புபவன் நான். அப்படி விளக்கம் கொடுக்க முடியாதவற்றை 'மிஸ்டரி' என்னும் ஒரு தொகுதிக்குள் அடைத்து வைத்து படிப்படியாக அதற்கான விடைகளை அறிய விரும்புபவன். அதனால்தான், அறிவியலுடன் சம்பந்தப்பட்ட மாயனின் இந்தத் தொடரை என் கைகளில் எடுத்தேன். என்னைப் பற்றி இங்கு நான் அதிகம் சொல்ல வேண்டியதன் அவசியமே, 'என்னை யாரும் ஒரு மூடநம்பிக்கையைப் பரப்புபவன்' என்னும் ஒரு வட்டத்தில் அடைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்.
மொத்தத்தில் உலகம் அழிவதற்கான சாத்தியங்கள் உண்டா எனக் கேட்டால், ஆம், நூறு சதவீதம் உலகம் அழியக் கூடிய சாத்தியங்கள் உண்டு என்று சொல்லலாம். ஆனால் அது 2012 டிசம்பர் 22 இல் அழியுமா என்று கேட்டால், அதற்குரிய சாத்தியங்களும் இருக்கத்தான் செய்கின்றன என்றே சொல்லக்கூடியதாக இருக்கிறது. தற்காலப் பூமியின் நடைமுறைகளும் அவற்றையே சாட்சிப்படுத்துகின்றன என்றும் சொல்லலாம்.
ஆனால், "2012 டிசம்பர் 22 இல் உலகம் அழியுமா?" என என்னைத் தனிப்பட்ட முறையில் நீங்கள் கேட்பீர்களேயானால், நான், "2012 டிசம்பர் 23ம் திகதி உங்களுடன் தேனீர் அருந்தத் தயாராக இருக்கிறேன்" என்றுதான் சொல்வேன்.
பிற்குறிப்பு: இதுவரை இந்தத் தொடரைத் தவறாமல் வாசித்து வந்த உங்களுக்கு, என் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனது எழுத்து உங்களை ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்திருந்தால், அதற்கு இந்தத் தொடரை நான் எழுதத் தூண்டிய, என் அண்ணன் மகள் அருளினிக்குத்தான் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். அத்துடன் முதல் முறையாக இப்படி ஒரு தொடரை எழுதுவதற்குக் களம் அமைத்துத் தந்த திரு.மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கும், திரு.மனோ வர்ஷா அவர்களுக்கும், மறைவாக நின்று உதவி செய்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்
- ராஜ்சிவா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக