வெள்ளி, 21 டிசம்பர், 2012

இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தில் நூலகங்கள் (


உலகில் தோன்றிய நாகரிக எழுச்சிகளுக்கும் பண்பாட்டுப் புரட்சிகளுக்கும் பின்னால் குறைந்தபட்சம் ஒரு புத்தகமாவது இருந்திருக்கும் என்றால் அது மிகையாகாது. மத்திய கால முஸ்லிம் தேசம் அறிவியற் துறையில் தலைநிமிர்ந்து நின்றமைக்கும் மத்திய கால ஐரோப்பியர் இருளில் மூழ்கிக் கிடந்தமைக்கும் இடையில் பிரிகோடாக அமைந்தது வாசிப்புப் பழக்கமே. ஐரோப்பிய அரண்மனைகள் ஏமாற்று வித்தைகளினதும் மூட நம்பிக்கைகளினதும் மையமாக விளங்கியவேளை முஸ்லிம் தேசத்தின் சாதாரண வீடுகளில்கூட புத்தக அலுமாரிகள் காணப்பட்டன.

 அன்றைய ஐரோப்பியரிடம் வாசிப்புப் பழக்கமின்மையினாலேயே அவர்கள் அதலபாதாளத்தில் காணப்பட்டனர். ஆனால் அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் எழுப்பப்பட்ட இஸ்லாமிய அரசின் பள்ளிவாசல்களும் அறிவியல் நிலையங்களாகவே இருந்திருக்கின்றன.

           
 இஸ்லாமிய வரலாற்றில் புகழ் பெற்று விளங்கிய கூபா, பஸரா, புஸ்தாத், டமஸ்கஸ், பக்தாத், குர்துபா போன்ற நகரங்களில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல்கள் வெறுமனே தொழுமிடங்களாக மட்டுமன்றி கல்வி, கலாசார, பண்பாட்டு வளர்ச்சியின் கேந்திர நிலையங்களாகவும் தொழிற்பட்டன.
            

இஸ்லாமிய வரலாற்றில் அப்பாஸியர்களின் காலப் பிரிவே கல்வி, கலாசார பண்பாட்டு, நாகரிக வளர்ச்சியில் முக்கிய கட்டமாகக் கருதப்படுகின்றது. முஸ்லிம் ஆட்சியாளர்கள் அறிவுத் துறைக்கு வழங்கிய முக்கியத்துவம் காரணமாக கடதாசி உற்பத்தி, விற்பனை அதிகரிக்கப்பட்டதோடு நூற்கள் எழுதுதல், தொகுத்தல், பிரதி பண்ணுதல், மொழி பெயர்த்தல் போன்ற நடவடிக்கைகளும் இடம்பெற்றன. அறிவியில் துறையில் ஏற்பட்ட பெரு வளர்ச்சியின் காரணமாக நூல்களை வாங்கி வாசிக்கும் பழக்கமும் அவற்றை சேகரித்துப் பாதுகாக்கும் பழக்கமும் மக்கள் மத்தியில் அதிகரித்தன. இவ்வாறே படிப்படியாக வாசிப்பும் ஆய்வும் அதிகரித்த போது நூல் நிலையங்கள் தோற்றம் பெற்றன.

இந்த வகையில் தோற்றம் பெற்ற நூல் நிலையங்கள் 04 வகைப்படும். அவையாவன:
  1. 01.பொது நூல் நிலையம் (Public Library)
  2. 02.தனியார் நூல் நிலையம் (Private Library)
  3. 03.பள்ளிவாசல் நூல் நிலையம் (Masjid Library)
  4. 04.ஆய்வு நூல் நிலையம் (Academic Library)

பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்துவதற்காக அரசினால் ‘பொது நூலகங்கள்’ நிறுவப்பட்டன. இதற்கு உதாரணமாக கலீபா ஹாரூன் ரஷீத் அவர்களால் பக்தாதில் உருவாக்கப்பட்ட ‘பைத்துல் ஹிக்மா’வையும் கலீபா அல்ஹாகிம் அவர்களால் எகிப்தில் உருவாக்கப்பட்ட ‘தாருல் ஹிக்மா’வையும் குறிப்பிடலாம். இதற்குப் பிற்பட்ட காலத்தில் இஸ்லாமிய உலகின் எல்லா பிரதேசங்களிலும் ஆயிரக்கணக்கான நூல் நிலையங்கள் பல்கிப் பெருகின.
            
அறிஞர்கள் தங்களின் தனிப்பட்ட தேவைக்காகப் பிரத்தியேகமாக உருவாக்கிக் கொண்ட நூலகங்கள் தனியார் நூலகங்கள் எனப்பட்டன. பாத்திமீக்கள் தமக்கு சொந்தமாக வைத்திருந்தன நூலகத்தில் 20 இலட்சம் புத்தகங்கள் காணப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.
முஸ்லிம்களின் அறிவியல் பொக்கிஷங்களாக அக்கால நூல் நிலையங்கள் காணப்பட்டன.
            
ஹிஜ்ரி 387ல் புஹாராவில் அமைந்துள்ள ‘நூஹ் இப்னு மன்ஸுர்’ என்ற நூல் நிலையத்தில் காணப்பட்ட அனைத்து புத்தகங்களையும் வாசித்ததாக மருத்துவ மாமேதை இப்னு ஸீனா கூறியுள்ளார். இந்நூல் நிலையத்தில் எல்லாத் துறைகளையும் சார்ந்த நூற்கள் காணப்பட்டதாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

பைத்துல் ஹிக்மாவின் தோற்றமும் வளர்ச்சியும்
            
 கலீபா மன்ஸுரின் சிந்தனையின் அடிப்படையில் கலீபா ஹாரூன் ரஷீத் அவர்களால் கி.பி 839ம் ஆண்டு ‘பைத்துல் ஹிக்மா (House of wisdom) ஆரம்பிக்கப்பட்டது. இதுவே இஸ்லாமிய வரலாற்றில் முதல் கலாநிலையம் என கணிக்கப்படுகின்றது. இது 03 முக்கிய பகுதிகளை உள்ளடக்கியிருந்தது.
  1. 01.நூல் நிலையம் (Library)
  2. 02.கல்விக்கூடம் (Academy)
  3. 03.மொழிபெயர்ப்பு (Translation Bureau)
            
கி.பி. 813-833 வரை பக்தாதை ஆட்சி செய்த கலீபா மஃமூன் பைத்துல் ஹிக்மாவின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார். உரோம, பைசாந்திய பிரதேசங்கள் கைப்பற்றப்பட்டபோது அங்கு காணப்பட்ட பல்வேறு துறைசார்ந்த கிரேக்க மொழிப் புத்தகங்கள் அரபு மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டன. கெலன், ஹிப்போகிரடீஸ் போன்றோரின் மருத்துவ கட்டுரைகளும் இயுக்ளிடினின் கணக்கியல் ஆய்வுகளும் தொலமியின் வானியல் வரைபடங்களும் மற்றும் சோக்கிரடீஸ், பிளேட்டோ, டிஸ்கோளரட்ஸ் போன்றோரின் புத்தகங்களும் மொழிபெயர்க்கப்பட்டன. நாளடைவில் இப்புத்தகங்கள் முழு இஸ்லாமிய உலகுக்கும் விநியோகிக்கப்பட்டதன் விளைவாக ஸ்பெய்னில் இஸ்லாமிய நாகரிக, பண்பாட்டு அம்சங்கள் துரித கதியில் வேறூன்றத் தொடங்கின.
            
ஸ்பெய்னை ஆட்சி செய்த 03ம் அப்துர் ரஹ்மான் (912-961) மார்க்கத்தையும் விஞ்ஞானத்தையுமு வளர்ப்பதில் மிகமும் மும்முரமாக ஈடுபட்டார். ஸ்பெய்ன் நூலகங்களுக்கு பக்தாதிலிருந்து நூற்களை இறக்குமதி செய்ததோடு பெரும் கல்விமான்களையும் அதிக பணம் வழங்கி வரவழைத்துக் கொண்டார். இதன் காரணமாக அறிஞர்கள், கவிஞர்கள், தத்துவஞானிகள், உளவியலாளர்கள், இசை வல்லுனர்கள், வரலாற்றாசியர்கள் என பலரும் அங்கு வந்து சேர்ந்தனர். இவரது இம் முயற்சியின் காரணமாக நூல் நிலையங்களும் வைத்திய சாலைகளும் மொழிபெயர்ப்பு நிலையங்களும் ஆய்வு மையங்களும் பல்கிப் பெருகின. ஸ்பெய்ன் உலகின் புகழ்மிகு கல்விக்கூடமாக மாறியது.
           
 03வது அப்துர் ரஹ்மான் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது மகன் ஹகம் ஆட்சி பீடம் ஏறினார். அவரொரு புத்தகப் பிரியராகக் காணப்பட்டதோடு உலகிலுள்ள பல அரிய நூற்களை ஒன்று சேர்த்து தலைநகரில் மாபெரும் நூலகம் ஒன்றை அமைத்தார். சுமார் நான்கு இலட்சம் நூற்கள் அந்த நூலகத்தில் காணப்பட்டன. அந் நாட்களில் அந்தலூஸின் கல்வியறிவு 100% ஆகக் காணப்பட்டது. எழுத, வாசிக்கத் தெரியாத யாரும் அங்கு காணப்படவில்லை. அப்போது உலகப் பிரசித்தி பெற்று விளங்கிய 03 சர்வகலாசாலைகளில் ஒன்றாக குர்துபா கலாபீடம் காணப்பட்டது. அல்அஸ்ஹர் கலாசாலை-எகிப்து, நிழாமிய்யா கலாசாலை-பக்தாத், அந்தலூஸ் கலாசாலை-குர்துபா என்பனவே அவையாகும். கலீபா ஹகம் பொதுமக்களின் உபயோகத்திற்காக 70 நூலகங்களை தலைநகரில் ஸ்தாபித்தார்.
           
 கலீபா மஃமூன் இந்தியா, சிரியா, பாரசீகம் போன்ற  பிரதேசங்களிலிருந்து  பெறுமதியான   மொழிபெயர்ப்பு நூற்களையும் அரிதான ஆய்வு நூற்களையும் ஒன்று சேர்த்து நாட்டின் பல பாகங்களிலும் நூல் நிலையங்களை நிறுவினார். இத்தகைய அரிதான நூற்களை கலீபா அவர்கள் அந்தலூஸ் நூலகங்களுக்கு அனுப்பி வைத்தார். பக்தாத் உட்பட இன்னும் பல இஸ்லாமிய நகரங்களிலிருந்து அந்தலூஸிற்கு புத்தகங்கள் வந்து குவிந்தன. இதனால்தான் பேராசிரியர் ஸெய்த் ஹுஸைன் நாஸர் 756 முதல் 1031 வரையான அந்தலூஸிய ஆட்சியை ‘ஞானப் பொற்காலம்’ என வர்ணிக்கிறார். அக்காலப் பிரிவில் ஐரோப்பாவில் காணப்பட்ட நூலகங்களை விடவும் அவை அளவில் பெரியவைகளாகக் காணப்பட்டன. உலகின் நாலா பக்கங்களிலும் உள்ள அறிவுப் பொக்கிஷங்களை முஸ்லிம்கள் பாதுகாத்து வந்தமையே இன்று ஐரோப்பா அறிவியற் துறையில் முன்னேற்றமடையக் காரணம் என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
இஸ்லாமிய கலாசாலைகளில் அமைக்கப்பட்ட நூலகங்கள்
கி.பி. 11ம் நூற்றாண்டில் ‘நிழாமுல் ஹக் தூஸி’ இனால் பக்தாதில் நிறுவப்பட்ட ‘நிழாமிய்யா சர்வகலாசாலை’யில் உருவாக்கப்பட்ட நூலகத்திற்கு பலரும் பல்வேறு புத்தகங்களை அன்பளிப்புச் செய்ததன் காரணமாக அங்கு பல்லாயிரக் கணக்கில் நூற்கள் வந்து குவிந்தன. கி.பி. 1233ல் கலீபா முன்தஸிர், ‘முன்தஸரிய்யா கலாசாலை’யை நிறுவினார். அத்தோடு அவர் அங்கு ஒரு நூலகத்தையும் அமைத்தார். அந்த நூலகத்தில் 80 ஆயிரம் பிரதிகள் (Volumes) காணப்பட்டன. ஸ்பெய்னில் இரண்டாவது ஹகமுடைய ஆட்சிக் காலத்தில் ‘கோர்டோவா சர்வகலாசாலை’ நிர்மாணிக்கப்பட்டது. இங்கு பிரமாண்டமானதொரு நூல் நிலையமும் உருவாக்கப்பட்டது. கோர்டோவாவில் முஸ்லிம் மாணவர்கள் மட்டுமன்றி ஐரோப்பிய மாணவர்களும் கல்வி கற்றனர்.
            
நிழாமிய்யாவின் உருவாக்கத்தோடு பைத்துல் ஹிக்மாவின் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டது.  நிழாமிய்யா முன்தஸிரிய்யாவோடு இணைக்கப்பட்டபோது அங்கு பல இலட்சம் நூற்களைக் கொண்ட ஒரு நூலகம் உருவானது. முஸ்லிம் ஆட்சியாளர்களும் அமைச்சர்களும் அறிஞர்களும் தனிநபர்களும் முஸ்லிம் உலகின் எல்லா பாகங்களிலும் நூல் நிலையங்களை நிறுவினார்கள்.
            
நூலகங்களின் விருத்தியால் இன்னும் பல துறைகளும் வளர்ச்சி கண்டன. கி.பி. 1258ல் மொங்கோலியர்கள் பக்தாத் மீது படையெடுத்தபோது அங்கு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர். மேலும் ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த கலாசார சின்னங்களையும் நாசப்படுத்தினர். அங்கு காணப்பட்ட பல நூல் நிலையங்கள் அழித்தொழிக்கப்பட்டன. அதேபோன்று கி.பி. 13ம் நூற்றாண்டில் தாத்தாரியப் படையெடுப்பு நிகழ்ந்தது. அப்போது முஸ்லிம்கள் பலர் கொல்லப்பட்டதோடு பல அறிவுப் பொக்கிஷங்கள் அழிக்கப்பட்டன. சிறிது காலத்தின் பின் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். தோற்கடிக்கப்பட்டவனின் மார்க்கத்தில் வெற்றி பெற்றவன் நுழைவதை வரலாறு முதன் முதலில் பதிவு செய்தது.
            
மத்திய காலப்பிரிவில் முஸ்லிம்களும் ஐரோப்பியர்களும்
           
 இஸ்லாமிய உலகு கலை, கலாசார, பண்பாட்டு, நாகரிக அம்சங்களில் உச்ச கட்டத்தை அடைந்திருந்த காலப்பகுதியே மத்திய காலப்பிரிவு (Middle Age) என வர்ணிக்கப்படுகிறது. கி.பி. 5ம் நூற்றாண்டு முதல் 15ம் நூற்றாண்டு வரையான 10 நூற்றாண்டுகளை இஸ்லாமிய உலகின் பொற்காலம் எனவும் ஐரோப்பாவின் இருண்ட காலம் (Dark Age) எனவும் வரலாறு குறிப்பிடுகிறது.
           
 அறிவியல், நாகரிகம், பண்பாட்டு ரீதியாக எந்த வளர்ச்சியும் காணப்படாமல் ஐரோப்பா இருளில் மூழ்கியிருந்தது. அங்கு மூட நம்பிக்கைகளும் கற்பனைச் சித்தாந்தங்களுமே மக்களை ஆட்சி செய்தன. மதத்திற்கும் அறிவியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென கிறிஸ்தவ தேவாலயங்கள் பிரசாரம் செய்து வந்தன. ஐரோப்பியர்களுக்கு அறிவியல் முன்னோடிகளாகவும் பண்பாட்டு வழிகாட்டிகளாகவும் ஆரம்ப கால முஸ்லிம்களே காணப்பட்டனர்.
            
மத்திய கால முஸ்லிம் உலகின் வளர்ச்சியையும் ஐரோப்பாவின் பின்தங்கிய நிலையையும் ‘The Story of Medicine’ என்ற நூலில் ‘Victor Robinson’ பின்வருமாறு விளக்குகிறார்.
           
 ‘‘ஐரோப்பிய தேசம் சூரியன் மறைந்த உடனே இருளில் மூழ்கிவிடும். அதேநேரம் முஸ்லிம் ஸ்பெய்னினில் தெரு விளக்குகள் ஒளி வீசிப் பிரகாசித்துக் கொண்டிருக்கும். ஐரோப்பா அழுக்கில் மூழ்கியிருந்த அதேவேளை ஸ்பெய்னில் பல்லாயிரம் குளியலறைகள் கட்டப்பட்டிருந்தன. ஐரோப்பா துர்நாற்றத்தில் தத்தளித்தது; ஸ்பெய்ன் முஸ்லிம்கள் தினமும் தமது ஆடைகளை மாற்றி வந்தார்கள். ஐரோப்பிய தேசம் சேற்றில் புதையுண்டு கிடந்தது. குர்துபாவிலே செப்பனிடப்பட்ட அழகிய பாதைகள் காணப்பட்டன. ஐரோப்பிய அரண்மனைகளில் தூசு படிந்திருந்த அதேவேளை ஸ்பெய்னின் மாளிகைகள் அரபு எழுத்தணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஐரோப்பிய அரசர்களுக்கும் அமைச்சர்களுக்கும் கையெழுத்துப் போடத் தெரியாதிருந்தபோது குர்துபா சிறுவர்கள் பாடசாலைக்குப் போய்க் கொண்டிருந்தார்கள்…’’
           
 எழுச்சியும் வீழ்ச்சியும்
            
மத்திய கால இஸ்லாமிய உலகில் கலை, இலக்கியம், தத்துவம், விஞ்ஞானம் என்பன தீவிர வளர்ச்சியடைந்தமைக்கு முஸ்லிம் உலகில் காணப்பட்ட நூலகங்களின் பங்களிப்பே மிகக் கூடுதலாகக் காணப்பட்டது. இஸ்லாமிய ஆட்சி எங்கெல்லாம் பரந்து காணப்பட்டதோ அங்கெல்லாம் நூலகங்கள் நிர்மாணிக்கப்பட்டன. நாளுக்கு நாள் நூலகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. மத்திய ஆசியாவில் காணப்பட்ட நூலகங்கள் விலை மதிக்க முடியா சொத்துக்களாகவும் இஸ்லாமிய நாகரிகத்தின் பாதுகாப்புப் பெட்டகங்களாகவும் காணப்பட்டன.
           
 தற்போது தஜிகிஸ்தான், கஸகஸ்தான், உஸ்பெகிஸ்தான், துருக்மெனிஸ்தான் போன்ற நாடுகளில் காணப்படும் பல்லாயிரக் கணக்கான நூலகங்களில் பல இலட்சம் புத்தகங்கள் காணப்படுகின்றன. மேலும் கடந்த கால வரலாற்றிற்குப் புத்துயிரூட்டும் விதமாக ஆயிரக்கணக்கான கையெழுத்துப் பிரதிகளும் ஆங்கில, ரஷ்ய, ஜேர்மன், பிரெஞ்ச், ஹிந்தி, துருக்கி, உருது, சீனம், பாரசீகம் ஆகிய மொழிகளில் பதிப்பிக்கப்பட்ட பல இலட்சம் புத்தகங்களும் அங்கு காணப்பட்டன.
          
  தற்போது வாசிப்புச் செல்வம் முஸ்லிம்களை விட்டும் கைநழுவி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் கைகழுக்குப் போய் விட்டது. ஆரம்ப கால ஆட்சியாளர்களும் அறிஞர்களுமே நூலகவியல் துறைக்கு அடித்தளமிட்டார்கள். அவர்கள் தமது நேரங்களையும் சொத்து செல்வங்களையும் இதற்காகச் செலவிட்டார்கள். பிற்பட்ட காலத்தில் முஸ்லிம்களிடத்திலும் முஸ்லிம் ஆட்சியாளர்களிடத்திலும் ஏற்பட்ட மந்த நிலையும் பதவி மோகமும் பொருள் ஆசையுமே பொடுபோக்குமே எமது அறிவியல் வீழ்ச்சிக்கு பிரதான காரணிகளாகும்.-இஸ்லாமிக் வியூ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக