சிரியா இந்தப் பூமியின் மிகப் பழைமையான நாகரிகத்திற்குச் சொ ந்தமான நாடு.விவசாயமும் கால்நடைவளர்ப்பும் முதலில் தோன்றிய பிரதேசமாகவும் இது குறிப்பிடப்படுகிறது.10,000 வருடங்களுக்கு முற்பட்ட புதிய கற்கால நாகரிகத்தின் உறைவிடமாக இது திகழ்ந்தது என்பது இவை அனைத்தையும் உள்ளடக்கிய முக்கிய செய்தியாகும்.
துருக்கிக்கு வடக்கிலும் மெசப்பொட்டேமியாவிற்குக் கிழக்கிலும் ஒரு செமித்தியப் பேரரசு இருந்ததற்கான அடையாளம் வட சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் மூலம் வெளிப்பட்டுள்ளது.இது 3000 வருடங்களுக்கு முன்னர் சுமேரியர் அந்நாடியர்களுடனும் எகிப்தியர்களுடனும் வர்த்தகத் தொடர்புகளை வைத்திருந்த பேரரசாகக் கருதப்படுகிறது.இதனைத் தொடர்ந்து கனானியர்கள்,பீனிஷியர்கள்,ஆர்மேனியர்கள் என்று ஒருவர் பின் ஒருவராகப் பல நாகரிகக்காரர் இதை ஆட்சி செய்துள்ளனர்.கி.பி.1500 இல் எகிப்து சிரியாவைக் கைப்பற்றியது.மகா அலெக்ஸாண்டரும் தனது படைப் பலத்தைப் பயன்படுத்தி சிரியாவை ஆட்சி செய்தார்.ஏறத்தாழ கி.பி.100இலிருந்து 636 இல் அரேபியர் சிரியாவை வெற்றிகொள்ளும்வரை சிரியா உரோமரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.
சிரியப் பேரரசு சிரியா 10,000 வருடங்களுக்கு மேலாகப் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வந்த நாடாகும்.பெரிய நிலப்பரப்பிற்கும் பேரரசிற்கும் உரிமை கோரும் பெருநாடாக அது சக்தி பெற்றிருந்த காலம் சிரிய நாட்டின் பொற்காலமாகும்.கி.பி.661 இல் சிரியா அரபுகளினால் வெற்றி கொள்ளப்பட்டது.முஆவியாவைக் கலிபாவாக நியமித்ததோடு சிரியாவின் டமஸ்கஸ் நகரை உமையா ஆட்சியின் தலைநகரமாகவும் அவர் மாற்றி அமைத்தார்.ரோமர் முற்காலத்தில் ஆட்சி செய்து வந்த நிலப்பரப்புகளையும் கைப்பற்றி மேற்கில் பிரான்ஸ் வரையும் கிழக்கில் ஆப்கானிஸ்தான் வரையும் இஸ்லாமியப் பேரரசு இக்காலத்தில் வியாபித்தது.இது ஒரு தனி வரலாறாகும்.முஆவியாவின் சேவைகளையும் கிறிஸ்தவ சிலுவைப்போரில் முஸ்லிம் தரப்பினர் வெற்றிக்காக வீரப்போர் புரிந்தார் என்ற நோக்கில் சலாகுத்தீன் ஐயூபியையும் சிரிய மக்கள் இன்றும் மதித்துப் போற்றுகின்றனர்.
அரபுமுஸ்லிம்கள் சிரியாவை ஒரு வர்த்தக மையமாக்கினர்.1260இல் மங்கோலியப் படை எடுப்பில் பெரிய வீழ்ச்சியை சிரியா எதிர்கொண்டது.1516 இல் உதுமானியத் துருக்கியர் சிரியாவைக் கைப்பற்றினர்.1 ஆம் உலகப் போர் வளர சிரியா உதுமானிய ஆட்சியின் கீழ் துருக்கியின் ஒரு பாகமாக இணைக்கப்பட்டிருந்தது.1 ஆம் உலக யுத்தத்தின் பின்னர் ஐரோப்பிய நேச நாடுகளின் ஆதரவுடன் பிரான்ஸ் அங்கு காலடி வைத்தது.இதற்கு எதிரான சிரிய மக்களின் எழுச்சிகளை பிரான்ஸ் எதிர்த்துப் பல அழிவுகளை ஏற்படுத்தியது.
யுத்தத் தோல்விகள் 1930 இல் சிரியாவை சுதந்திர நாடாக பிரான்ஸ் அங்கீகரித்தபோதும் பிரான்ஸ் தொடர்ந்து சிரியாவில் தனது அதிகாரத்தை செலுத்தியது.மக்கள் இதை எதிர்த்தனர்.1930 களிலிருந்து 1940 கள் வரை தேசியவாதக் கிளர்ச்சிகள் பல நடைபெற்றன.அதேவேளை 1948 இல் நடைபெற்ற அரபுஇஸ்ரேலிய யுத்தத்தில் சிரியா பங்கேற்றது.ஆனால் சிரியா யுத்தத்தில் தோல்வியடைந்தது.பின்னர் கமால் அப்துல் நாசரின் ஐக்கிய அரபுக் குடியரசு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டு தனது அங்கத்துவத்தை சிரியா வழங்கியபோதும் அவ்வுடன்படிக்கை தோல்வியில் முடிந்தது.
19671973 வரை இஸ்ரேலுடன் நடந்த பல யுத்தங்களில் தனித்தும் எகிப்துடன் இணைந்தும் சிரியா பங்கேற்றது.அப்போது அது பல தோல்விகளைச் சந்தித்ததோடு பாரிய நிலப்பரப்புகளை இஸ்ரேலிடம் இழந்தது.1974 இவ் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹென்றி கீசிஸ்கயின் தீர்வுத்திட்டத்தின் கீழ் இழந்த நிலப்பரப்புகளை சிரியா மீளவும் பெற்றுக் கொண்டது.
ஹாபிஸ்அல்ஆஸாத் 1970 இல் இராணுவப் புரட்சி மூலம் ஹாபிஸ் அல்ஆஸாத் நாட்டைக் கைப்பற்றினார்.இராணுவ அடக்குமுறையை அதிகரித்ததோடு எதிர்க்கட்சிகள் தலை தூக்கமுடியாத சட்டங்களையும் அமுல் செய்தார்.போலியான தேர்தல்களின் மூலம் 30 ஆண்டுகள் தனது ஆட்சியை நீடித்தார்.நான்காவது முறை அவர் தேர்தலில் நின்று ஜெயித்தபோது 99.98% என்ற மிகப் பெரிய வாக்குத்தொகையால் அவர் வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது.தற்போதைய ஜனாதிபதி பாசர் அல்அஸாத் ஹாபிஸ்அல்ஆஸாத்தின் மகன்களில் ஒருவர்.2000 ஆம் ஆண்டு ஹாபிஸ் ஆஸாதின் மரணத்தைத் தொடர்ந்து இளைஞரான பாசர் ஆஸாத் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.இந்த நாடுகளின் ஜனாதிபதிகள் தேர்தல்களினால் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள்.மரணங்கள் மாத்திரமே தோல்வியைத் தரக்கூடியது என்பதற்கு ஹாபிஸ் ஆஸாத்தின் மரணம் ஒரு சான்றாகும்.ஆனால் ஆபத்து அத்துடன் முடிவதில்லை.தமக்குப் பின்னர் ஆட்சியைக் கையேற்க தமது பிள்ளைகளையும் அவர்கள் தயார் நிலையில் வைத்திருப்பதால் மரணமும் தோற்றுப் போவதாகவே கருத வேண்டும்.
அலவி இனம்
ஹாபிஸ்அல்ஆஸாத் "அலவியத்' என்ற சிறுப்பான்மைக் குழுவினரின் சாதாரண குடும்பத்தில் பிறந்தார்.அலவிகள் அல்லது அலவியத்கள் சிரியாவின் மத்திய பகுதியில் வாழ்கின்ற ஒரு சிறு குழுவினர்.இவர்கள் ஷீயி இஸ்லாத்தின் கிளைப் பிரிவினர்களாகக் கருதப்படுகின்றனர்.ஆரம்பத்தில் சிரியாவின் அந்துசாரிய்யா மலைப்பகுதியில் தான் இக்குழுவினர் தமது வாழ்க்கையை ஆரம்பித்தனர்.இப்போது எல்லாப் பெரிய நகரங்களிலும் இவர்கள் வாழ்கின்றனர்.10%வீதமான இவர்களின் எண்ணிக்கை இருபது இலட்சமாகும்.சிறிய அளவில் இவர்கள் லெபனானிலும் துருக்கியிலும் வாழ்கின்றனர்.அலவிய்யா இனக்குழு நான்கு பிரதான கோத்திரங்களின் ஒன்றிணைப்பாகும்.
1946 இல் பிரான்சியர் அலவிய்யா குழுவினருக்கு முக்கியத்துவம் தரும் வரை தலித்துகள் போல அலவிகள் ஒதுக்கப்பட்ட இனமாகவே வாழ்ந்தனர்.ஹாபிஸ் ஆஸாத் அலவி இனக்குழுவைச் சேர்ந்தவர்.தம்மை ஆள்வதற்கு தகைமையற்ற அலவி இனத்திலிருந்து ஒரு தலைவர் வருவார் என்று பெரும்பான்மை சிரிய மக்கள் நினைத்துப் பார்க்காத நிலையில் இராணுவத்தில் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி பாத் கட்சியின் பலத்துடன் ஹாபிஸ் 1970 இல் ஆட்சியைக் கைப்பற்றினார்.பெரும்பான்மை மக்கள் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்தனர்.பல நூற்றாண்டு காலப் பெருமையை ஹாபிஸ் ஆஸாத் முறியடித்ததாகப் பெரும்பான்மை மக்கள் குமுறினாலும் ஆஸாத்தின் ஆட்சி ஆரம்பமாகியது.
அலவிகள் தம்மை ஷீயி முஸ்லிம்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர்.தீவிர சுன்னிப் பிரிவு முஸ்லிம்கள் இவர்களை முஸ்லிம்கள் என்று ஏற்றுக் கொள்வதில்லை.சில ஷீயிப் பிரிவினரும் இவர்களை ஷீயி முஸ்லிம்கள் என்று ஏற்றுக் கொள்வதில்லை.கிறிஸ்மஸ்,ஈஸ்டர் பெருநாள்களையும் பாரசீகர்களுக்குரிய நவ்ரூஸ் விழாவையும் கொண்டாடும் இவர்களை ஸன்னிகளும் ஷீயாக்களும் தம்மவர்கள் அல்ல என்கின்றனர்.முஹம்மத் நபி,சல்மான் பார்சி,அலி ஆகியோரைக் கொண்ட அவர்களது திரித்துவ வகை நம்பிக்கைகளையும் வேறு சில நம்பிக்கைகளையும் வைத்து நவ இஸ்மாயிலிப் பிரிவினர் என்று சிலர் குறிப்பிடுகின்றனர்.தவிர்க்க முடியாத நிர்ப்பந்தங்களின் பின்னணியில் அலவிகளின் ஆட்சியை ஸன்னி முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டனர்.
ஆனால் ஹாபிஸ் அல் ஆஸாத்தும் அவரது மகன் வாசர் அல் ஆஸாத்தும் பதவி ஏற்ற காலத்திலிருந்து சுன்னிகளாகவே தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.சுன்னிகளின் பள்ளிவாசல்களில் தொழுவது போன்ற பல நடைமுறைகளை அவர்கள் பின்பற்றி வருகின்றனர்.பெரும்பான்மை மக்களின் மறவாத வெல்லும் அரசியல் உபாயம் என்று இது வர்ணிக்கப்படுகின்றது.
இந்த முரண்பாடு ஒருபுறம் இருக்க 1947 இல் பாத் கட்சி உருவாக்கப்பட்டதிலிருந்து இஸ்லாமியவாதிகள் அதற்கு எதிராகப் போராடி வருகின்றனர்.பாத் கட்சியினரின் சில கொள்கைகள் இஸ்லாத்திற்கு விரோதமானவை என்று அவர்கள் கூறுகின்றனர்.இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிரான பாத் கட்சியின் எல்லை கடந்த பிரசாரங்களால் முஸ்லிம் சகோதர இயக்கத்தினரும் சாதாரண ஸன்னிப் பொதுமக்களும் பாத் கட்சியை வெறுப்பது ஒரு வெளிப்படையான காட்சியாக மாறியுள்ளது.எனினும் 1970 இலிருந்து ஹாபிஸ் ஆஸாத் ஸன்னி முஸ்லிம்களும் முரண்பாடுகளை வளர்க்காத ஒரு கொள்கையைக் கடைப்பிடிப்பதிலும் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.
அலவிப் பிரிவைத்தவிர டுருஸர்,குருத் இனத்தவர்,ஆர்மேனியர் என்ற இன்னும் சில சிறுபான்மை இனப் பிரிவினரும் இங்கு வாழ்கின்றனர்.அவர்களும் தத்தமது இனங்களுக்கான உரிமைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் மோதிவருகின்றனர்.பிரதேசவாதம்,சமயப்பிரிவுகள்,சமய அடையாளம்,இனத்துவ முரண்பாடுகள் தொடர்பில் மக்களின் அபிலாசைகளும் தேசத்தைக் கட்டி எழுப்பும் பொது இலட்சியமும் ஒன்றுக்கொன்று முரணானதாகவே இங்கு செயற்பட்டு வந்துள்ளன.
தமது சொந்த இனமான அலவிகளுக்கு அரசியல் அதிகாரத்திலும் இராணுவத்திலும் அதிக அளவு இடமும் முன்னுரிமையும் தருவதில் ஆட்சித் தலைவர்கள் காட்டி வரும் ஆர்வத்தை எதிர்க்கட்சிகளும் பொது மக்களும் எதிர்த்து வருகின்றனர்.சமயச் சார்பற்ற ஆஸாத்தின் ஆட்சியை எதிர்ப்பதைவிட அலவிப் பிரிவினர்க்கு வழங்கும் அளவு கடந்த சலுகைகளை முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் வன்மையாக எதிர்த்து வருகிறது.இதனால் ஆஸாத் நிர்வாகமும் சகோதரத்துவ இயக்கமும் அடிக்கடி மோதல்களில் ஈடுபட்டு வருவது சாதாரண நிகழ்வாகியுள்ளது.
ஹமாஹ் தாக்குதல் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் வளர்ச்சியை முற்றாக அழிக்கும் விதத்தில் 1982 இல் ஆஸாத் நிர்வாகம் பாரிய இராணுவத் தாக்குதலை "ஹமாஹ்' என்ற நகரில் நடத்தியது.மனித உரிமைகள் அனைத்தையும் மறுதலித்துப் போராளிகளையும் பொதுமக்களையும் இரக்கமற்ற முறையில் கொன்று குவித்த பாரிய படுகொலை நிகழ்வாக இது இன்றும் நினைவுகூரப்படுகிறது.இப்போது பாசர் ஆஸாத் நிகழ்த்தும் இராணுவத் தாக்குதல்களையும் மக்கள் "ஹமாஹ்'படுகொலையுடன்தான் ஒப்பு நோக்குகின்றனர்.ஹமாஹ் படுகொலையில் குறித்த சில நாட்களுக்குள் 25,000 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
ஹமாஹ் நகரத்தாக்குதல்களின்போது சிரியாவின் நாகரிகச் சின்னங்களாக விளங்கிய பல கட்டிடங்களும் நினைவுச் சின்னங்களும் தரைமட்டமாக்கப்பட்டன.இத்தாக்குதல் மூலம் விலைமதிப்பற்ற வரலாற்றுச் சின்னங்களையும் சிரியா இழந்தது.அத்தோடு ஏறத்தாழ முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை செயல் அற்றதாக்கி விட்டதாகவும் அரசு அறிவித்தது.
1980 களைத் தொடர்ந்து உள்நாட்டின் அரசியல் உறுதிப்பாட்டை சீர்குலைக்கும் பல மோதல் சம்பவங்கள் நடந்த வண்ணமிருந்தன.இதற்கிடையில் பாலஸ்தீன இயக்கத்தை அழிப்பது என்ற போர்வையில் இஸ்ரேல் 1982,1983 களில் சிரியாவைப் பலமுறை தாக்கிச் சேதங்களை ஏற்படுத்தியது.
மூத்த ஆஸாத் சுய விளம்பரத்தின் மூலம் சொந்த ஆளுமையை ஊதிப் பெருப்பிக்கவும் அவரைப் பற்றிய ஒரு மாயையை மக்கள் மனதில் தோற்றுவிக்கவும் அரசாங்கப் பணத்தை அள்ளி இறைத்தாரே தவிர நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தவில்லை.மக்கள் எதிர்ப்பார்த்த வகையில் அரசியல் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி ஜனநாயக நடவடிக்கைகளை வளர்ப்பதற்கும் அவர் முயற்சிக்கவில்லை.
லெபனானில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை நிலைகொள்ளச் செய்தமை,இஸ்ரேலின் நியாயமற்ற ஆக்கிரமிப்பிற்கும் யுத்தங்களுக்கும் ஆளாகியமை,உள்நாட்டு மோதல்களுக்கு அடிக்கடி முகங் கொடுத்தமை,கோடை முதலிய இயற்கை தாக்கங்களுக்கு உள்ளாகியமை போன்றவற்றால் சிரியா பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் மூழ்கியது.சமூக மறுமலர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டிய கோடிக்கணக்கான செல்வத்தை யுத்தங்களுக்காகவும் உள்நாட்டு மோதல்களை அடக்குவதற்காகவும் சிரியா விரயமாக்கி வந்தது.
அண்மைக்கால சிரிய அரசியலில் இராணுவம் முன்னரை விட சக்திவாய்ந்த அணியாக மாறியுள்ளது.இன்று இராணுவ பலம் அலவி இனத்திற்கும் ஆஸாத்தின் குடும்பத்திற்கும் உரிய தனிப்பட்ட சொத்தாக மாறியுள்ளது.நாட்டின் அதிபர் அலவி இனத்தவர்.இராணுவம் அலவி இனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.தலைவரும் அலவி இன அங்கத்தவர் என்ற நிலையில் முழுநாட்டின் கட்டுப்பாடும் அலவி இனத்திற்குரியதாக இன்று மாறியுள்ளது.1970களில் மூத்த ஆஸாத் ஆரம்பித்த குடும்பத்திற்கே அரசியல் நிர்வாகத்தில் முதன்மை இடம் என்ற இலட்சியம் இன்றும் நிலைபெற்றிருப்பதை மக்கள் நிராகரிக்கின்றனர்.
மூத்த ஆட்சியாளரான ஹாபிஸ் அல் ஆஸாத் (19702000)முப்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார்.சிதறிக் கிடந்த அரசியல் சக்திகளை ஒன்று திரட்டி ஒரு மத்திய அரசாங்க அமைப்பை சிரியாவில் உருவாக்குவதில் வெற்றி பெற்றவராக ஹாபிஸ் அல் ஆஸாத் போற்றப்பட்டாலும் அவரது அரசியல் நடவடிக்கைகளும் குடும்ப ஆட்சியும் ஊழலும் அவரைச் செல்வாக்கற்ற தலைவராக்கியது.தனக்குப் பின் தனது மகன்களில் ஒருவரை சிரிய ஜனாதிபதியாக்குவதற்கே அவர் திட சங்கற்பம் பூண்டிருந்தார்.அவரது மறைவை அடுத்து பஸர் அல் ஆஸாத் 2000 ஆம் ஆண்டில் பதவி ஏற்றார்.
பாராளுமன்றக் குடியரசாக சிரிய அரசு பெயர் சொல்லி அழைக்கப்பட்ட போதும் அதிகாரங்கள் அனைத்தும் சிரிய ஜனாதிபதியின் கைகளிலேயே குவிக்கப்பட்டிருந்தன.பாத் கட்சிதான் ஒரே கட்சி.பஸர் ஆஸாத் பதவி ஏற்ற போது சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை தரப்போவதாக வாக்குறுதியளித்தார்.2000 ஆம் ஆண்டில் இவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் சீர்திருத்தத்தின் அவசியம் பற்றி வெளிப்படையாகப் பேசினார்.மக்கள் சபை இருந்த போதும் அதற்கென அதிகாரங்கள் இருக்கவில்லை.
ஈரான்சிரிய உறவு
ஆஸாத் நிர்வாகத்துடன் சிறந்த நட்பை உருவாக்கிய நாடுகளில் ஈரானும் ஒன்று.இருநாடுகளும் அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் எதிரிகள்.அரபுலகில் படை பலமுள்ள நாடொன்றோடு நட்பை வளர்த்துக் கொள்ள ஈரானுக்கு இருந்த ஆதரவை சிரியா மூலமாக ஈரான் நிறைவு
செய்து கொள்ள விரும்பியது.ஆஸாத்தின் ஷியா சமயப் பிரிவுப் பின்னணியும் இவ்வுறவை வளர்க்கும் சக்திகளில் ஒன்றாக இருந்திருக்கலாம்.
அதனால் இப்போது நடக்கும் போராட்டத்தில் ஆஸாத் பதவி துறந்தால் சிரியாவுடனான ஈரானின் தொடர்புகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.அலவி ஷியாப் பிரிவுத் தலைவர் ஒருவர் மீண்டும் சிரியாவின் அரசியல் தலைமையைக் கைப்பற்றுவதற்கு வாய்ப்புகள் இல்லை.
பஹ்ரைன் விடயத்தில் ஈரானின் அக்கறையை வெறுப்பதைப்போலவே சிரியாவுடனான ஈரானின் உறவுகளையும் அரபு நாடுகள் (குறிப்பாக ஜீ.சி.சி.நாடுகளின் கூட்டமைப்பு)தமது எதிர்ப்புகளை பகிரங்கமாகக் கூறி வருகின்றன.சிரியாவில் தலைமை மாற்றம் அரபு நாடுகளில் தனது செல்வாக்கை அதிகரிக்க நினைக்கும் ஈரானுக்கு ஏமாற்றமாக அமையலாம்.அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் வேறு பொருத்தமான ராஜதந்திர முயற்சிகள் மூலம் சிரியாவுடனான தொடர்புகளைப் பாதுகாப்பதற்கும் ஈரான் முயலக்கூடும் என்று வளைகுடா அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். அதாவது ஈரான் தனது நலன்களுக்குப் பாதகமற்றவிதத்தில் வெளிநாட்டுக் கொள்கையை மாற்றக்கூடும் என்பது இதன் பொருள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக