செவ்வாய், 18 டிசம்பர், 2012

சவால்களும், சந்தர்ப்பங்களும் (அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் (நளீமி)


இலங்கை முஸ்லிம்கள் சமாதான விரும்பிகள். வரலாறு நெடுகிலும் அவர்கள் இந்நாட்டில் வாழும் எல்லா சமூகங்களுடனும் பொதுவாகவும், சிங்கள பௌத்தர்களுடன் குறிப்பாகவும் சமாதானமாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வந்துள்ளனர். வரலாற்றுத்துறைப் பேராசிரியை லோனா தேவராஜா எழுதிய The Muslims of Sri Lanka- One thousand years of ethnic harmony எனும் நூல் இலங்கை முஸ்லிம்களின் சகவாழ்விற்கும் தேசிய பங்களிப்புக்கும் ஆதார பூர்வமாக சாட்சி பகர்கின்றது.

ஆயினும் அண்மைக் காலமாக சில சக்திகள் இந்நாட்டில் வாழும் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவை சீர்குலைக்கும் வகையிலும் இன முரண்பாடுகளை உருவாக்கும் விதத்திலும் செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக இச்சக்திகள் முஸ்லிம்களை குறி வைத்து இயங்குவதைக் காண முடிகின்றது. இந்நிலை எந்த வகையிலும் ஆரோக்கியமானதல்லளூ அனுமதிக்கத்தக்கதுமல்ல. மூன்று தசாப்தங்களைக் கடந்த உள்நாட்டுப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு நாட்டில் சமாதானம் மலர்ந்து, மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு அமைதியாக வாழ முற்பட்டுள்ள இவ்வேளையில் மற்றுமோர் இனமுறுகலுக்கு தூபமிடப்படுவதை நாட்டு நலனில் அக்கறையுள்ள எவரும் அங்கீகரிக்கப்போவதில்லை.
எனவே, அரசு, அதிகாரிகள், மதத்தலைவர்கள், சிவில் சமூகத்தலைமைகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் காலதாமதமின்றி இப்பிரச்சினைக்கு உடன் தீர்வு காண முன்வரல் வேண்டும். இல்லாதபோது நாடும் மக்களும் பெரும் பாதிப்புக்களைச் சந்திக்க வேண்டி வரும்.
இன்றைய நிலையில் குறிப்பாக முஸ்லிம்கள் விழிப்புடனும், அவதானத்துடனும் நடந்து கொள்ளல் வேண்டும்ளூ வதந்திகளை நம்பலாகாதுளூ சமூகக் கட்டுக்கோப்பைப் பேணி எந்நிலையிலும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளல் வேண்டும்ளூ சமூக ஒற்றுமையைப் பாதிக்கும் வாதப் பிரதிவாதங்கள், தர்க்க, குதர்க்கங்கள், கருத்து மோதல்கள் முதலியன தவிர்க்கப்படல் வேண்டும்ளூ சமூக ஒற்றுமை அனைவரது முதல் முன்னுரிமையாக மாறுதல் வேண்டும். இத்துறையில் உலமாக்களும் தாஇகளும் கூடிய கரிசனை காட்டுதல் வேண்டும்.
மேலும் முஸ்லிம்கள் இச்சந்தர்ப்பத்தில் தங்களுக்கெதிராகப் பரப்பப்பட்டு வரும் விஷமத்தனமான பிரசாரங்களுக்கு நிதானத்துடன் உண்மையானதும் அறிவு பூர்வமானதான விளக்கங்களை வழங்க ஆவண செய்தல் வேண்டும். இந்தவகையில் முஸ்லிம் புத்திஜீவிகள், ஊடகவியலாளரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. குறிப்பாக இவ்விடயத்தில் முஸ்லிம் மீடியா போரம் தனது பங்களிப்பை சிறப்பாக நிறைவேற்றுதல் வேண்டும்.
சமூகங்களுக்கிடையிலான நல்லுறவை பலப்படுத்தும் வகையில் பல்வேறு செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டு முன்னெடுக்கப்படல் வேண்டும். முஸ்லிம்களைப் பற்றி தப்பெண்ணம் கொண்டு அவர்களுக்கெதிராக செயற்பட்டு வரும் சக்திகளை அடையாளம் கண்டு அவற்றுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடல் வேண்டும். இத்தகைய முயற்சிகள் முஸ்லிம்கள் பற்றி நிலவும் சந்தேகங்களைக் களைவதற்கும் நல்லெண்ணத்தை வளர்ப்பதற்கும் உதவலாம். இத்துறையில் ஜம்இய்யமுல் உலமாவின் கீழ் இயங்கும் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான கவுன்ஸிலின் முன்னெடுப்புக்களுக்கு அனைவரும் பூரணமான ஒத்துழைப்பை வழங்க முன்வரல் வேண்டும். முஸ்லிம் கவுன்ஸில் அமைப்பின் முயற்சிகளுக்கும் அனைவரும் துணை நிற்பது அவசியம். இவ்விடயத்தில் முனைப்புடன் செயற்படுகின்ற மற்றும் பல முஸ்லிம் அமைப்புகளினதும் பணிகள் பாராட்டத்தக்கவையும் எல்லோரது ஈடுபாட்டையும் வேண்டி நிற்பவையுமாகும். அனைத்திற்தும் மேலாக முஸ்லிம்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்புதல் வேண்டும்ளூ தௌபா, இஸ்திஃபாரில் ஈடுபடல் வேண்டும்ளூ துஆ- பிரார்த்தனை எனும் ஆயுதத்தை கையில் ஏந்த வேண்டும்ளூ சமூகத்தின் பாதுகாப்பிற்காகவும் நாட்டில் அமைதி நிலவவும் அல்லாஹ்விடம் இரைஞ்சுதல் வேண்டும். பாவங்களிலிருந்து விடுபடல், கொடுக்கல், வாங்கல்களில் ஹலால், ஹராம் பேணுதல், அதிகம் தானதர்மங்கள் செய்தல் முதலான அம்சங்களிலும் சமூகம் கூடிய கரிசனை காட்டுதல் வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா சமூகத்தையும், நாட்டையும் எல்லா வகையான ஆபத்துகளிலிருந்தும் பாதுகாத்து அருள்புரிவானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக