புதன், 19 ஜனவரி, 2011

சங்க இலக்கியத்தில் இருந்து தங்கமான ஒரு கருத்து

ஆணும் பெண்ணும் தங்கு தடையின்றிப் பழகுவதையும், ஆண்-பெண் தனித்திருப்பதையும் நாகரிகம் என்றும் நவீனம் என்றும் கருதிச் செயல்படுவதால் ஏற்படும் பல்வேறு வகையான விபரீதங்களை அன்றாடம் நாம் கண்டும் கேட்டும் வருகின்றோம்.


ஓர் ஆணும் பெண்ணும் தனியிடத்தில் சந்தித்தால் ஏற்படும் விபரீதங்களை, விளைவுகளை சங்க கால இலக்கியம் கூட பட்டியலிட்டுக் காட்டி எம்மை எச்சரிக்கின்றது. முதலாவதாக, அவளை அடைய வேண்டும் என்ற வேட்கை ஏற்படும். அதையே இடைவிடாது நினைத்தால் அந்த நினைவாலேயே உடல் மெலிதல், தனது உள்ளத்தில் ஏற்படும் வருத்தம் அதிகரிப்பதைப் பிறருக்கு உணர்த்தல், இந்த நிலை நீடிக்க...... நாணத்தின் வரையறைகளைக் கடத்தல், காணும் பொருளெல்லாம் அவள் போலவே தோன்றுதல், அவனது அறிவு திரிதல், மோகத்தால் மயக்க நிலை ஏற்படுதல், இறுதியாக தன்னையே அழித்துக்  கொள்ளுதல் முதலானவையே அப்பட்டியலாகும்.

காட்சி, வேட்கை, ஒரு வகை உள்ளுதல், மெலிதல், ஆக்கஞ்செப்பல், நாணு வரையிறத்தல், நோக்குவதெல்லாம் அவையே போறல், மயக்கம், சாக்காடு என்பவற்றை "காட்சி முதலாச் சாக்காடு ஈறாகக் காட்டிய பத்து" என்று நம்பியகப் பொருள் சூத்திரம் 36 குறிப்பிடுகிறது.

இவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பதாலேயே இஸ்லாமும் இதனைத் தடை செய்கிறது.நபி (ஸல்) அவர்கள் ஒரு சமயம் பின்வருமாறு கூறினார்கள். "ஓர் ஆணும் பெண்ணும் தனித்திருந்தால் அங்கே மூன்றாவதாக ஷைத்தான் இருக்கின்றான்."  ஷைத்தான் மனிதர்களின் உள்ளங்களில் ஊசலாட்டத்தை ஏற்படுத்தக் கூடியவன். அவனது தூண்டுதலால் அவர்களுக்கிடையே ஏற்படும் சந்திப்பு (காட்சி),  அவர்களைச் சாக்காடு வரை இட்டுச் செல்லக் கூடியது என்பதாலேயே நபியவர்கள் இவ்வாறானதோர் எச்சரிக்கையை விடுத்துள்ளார்கள்.

தொடக்க காலம் தொட்டு உலக முடிவு நள் வரை ஒழுக்க விழுமியங்கள் முதலானவைஉலகின் எந்தப் பகுதியிலும் மாறாத் தன்மை கொண்டவை. அவற்றைப் பின்பற்றி வாழ்ந்தால் சங்ககாலமாயினும், கம்பியூட்டர் யுகமாயினும் கற்போடு வாழலாம். அவர்கள் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி; மேலும் அவர்கள் இந்தப் பூமிப் பந்தின் எந்த மூலை முடுக்கில் வாழ்ந்தாலும் சரியே. நன்றி "சமரசம்" 1-15 நவம்பர் 2000.

சுமார் 10 வருடங்களுக்கு முன் சமரசத்தில் வெளி வந்த இந்தச் செய்தியை தற்செயலாக இன்றைய திகதியில் (10. 01. 2011)எதேச்சையாகப் படித்தபோது, அது இன்றைய நவீன, கலப்பு வாழ்க்கையில் வேட்கை கொண்ட வேட்டை மனிதர்களுக்கும் பொருந்திச் செல்லும் பாங்கைக் கண்டு ஒரு கணம் திகைத்துப் போனேன். நேற்று முந்தினம் (08. 01. 2011) கொழும்பில். கம்பஹா மாவட்ட முஸ்லிம் பாடசாலைகள் கல்வித் துறையில் அடைந்துள்ள பின்னடைவுகளில் இருந்து அவற்றைக் காப்பது தொடர்பான ஒரு விழிப்புணர்வு நிகழ்வொன்று, மல்வானையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் அல்-ஹாஜ் எம். எம். இஸ்மாஈல் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.  இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்த நீதியரசர் கபூர் முதற்கொண்டு உரைகள் நிகழ்த்திய அத்தனை முக்கியஸ்தர்களது கருத்துக்களின் சாரமும், இந்தக் கலப்புக் கல்வியால் ஏற்படும் பாதிப்பு பற்றியதாகவே அமைந்திருந்தது. கூட்டத்தில் இறுதியாகக் கருத்துறை வழங்கிய உதவிப் பரீட்சை ஆணையாளர் ஜனாப் ஏ.எஸ். முஹம்மத், கலப்புப் பாடசாலைகளில் கற்கும் பெண் பிள்ளைகள் எதிர் நோக்கும் அவஸ்தைகளைப் பட்டியற்படுத்திக் காட்டினார். அதிகமான பெண் பிள்ளைகள் இளம் வயதிலேயே சிறு நீரக நோய்களுக்கு உட்படுவதாகவும் அதற்குக் காரணம், கழிவறைகளின் ஒழுங்கின்மையும் ஆண் மாணவர்களுக்கு முன்பாக கழிவறைகளுக்குச் செல்ல வெட்கப்படுவதுமே எனக் குறிப்பிட்டார். தனிப் பெண் பாடசாலைகள் அமைக்கப்படுவதை வெறுப்போர் இதுபற்றிச் சற்றுச் சிந்திதித்துப் பார்ப்பார்களாக!

குறிப்பு.
இந்த ஆக்கத்தை 'பின்னூட்டல்' பகுதிக்கு அனுப்பிய பெயர் குறிப்பிட விரும்பாத அன்பருக்கு நன்றி. இதனை ஒரு இடுகையாக இங்கு நாம் பிரசுரிக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக