ஒரு சில பெற்றோரின் உளக்குமுறல்
ஒரு பாடசாலையின் ஆரம்பப் பிரிவு என்பது, நீண்ட காலப் பாவனைக்கென அழகான முறையில் உறுதியாக நிர்மாணிக்கப்படுகின்ற ஒரு பாரிய கட்டடத்தை அமைக்க இடப்படுகின்ற அடித்தளத்தைப் ( FOUNDATION ) போன்றதாகும். அவ்வளவு முக்கியத்துவம் மிக்க அந்த அடித்தளத்தை எந்த விதமான தூர நோக்குமின்றி, அது தொடர்பான எந்தவொரு கவனக் குவிப்புமின்றி பாடசாலை நிருவாகத்தினர் சும்மா ஒரு கண்துடைப்பு நோக்கில் அமைத்து வருவது, மிக மிக வேதனை தரக்கூடிய விடயம் மாத்திரமன்றி எதிர்காலப் பரம்பரை ஒன்றையே அதன் எழுச்சிப் பருவத்திலேயே குழி தோண்டிப் புதைத்து விடுகின்ற மாபாதகச் செயலுமாகும்.
இங்கு ஆரம்பப் பிரிவு என்பது 1ம் தரம் முதல் 5ம் தரம் வரைக்குமான வகுப்புக்களையே குறிக்கும். இந்த வகுப்புக்களில் கற்பிப்பதற்கென்று தனியாக விஷேட கற்கை நெறி ஒன்றின் கீழ் ஆசிரியர்களை அரசாங்கம் பயிற்றுவித்து வருடா வருடம் வெளியேற்றி வருக்கின்றது. Primary Trained Teachers' எனப்படுகின்ற இவர்கள்தாம் எமது ஆரம்ப வகுப்புக்களில் கற்பிக்கத் தகுதி படைத்தவர்கள். நிலமை இப்படி இருக்க இன்று பட்டதாரி ஆசிரியகளைக் கொண்டே பெரும்பாலான ஆரம்ப நிலை வகுப்புக்கள் கற்பிக்கப்படுகின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
"என்ன, பல்கலைக் கழகப் பட்டதாரிகளுக்குக் கற்பிக்கத் தெரியாதா?" என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் நடப்பில் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. பட்டதாரிகள் என்போர், தமது பட்டப் பரீட்சைக்காக, தெரிவு செய்யப்பட்ட ஓரிரு பாடங்களைப் பயின்று தேறி வருபவர்களே தவிர, ஆரம்ப வகுப்புகளுக்குக் கற்பிக்கத் தகுதி படைத்தவர்களல்லர். பெரும்பாலான பட்டதாரிகளின் இன்றைய நிலை என்னவெனில், அவர்கள் தமது பட்டப் பரீட்சைக்காகக் கற்கின்ற ஒரிரு பாடங்ககளில் தேர்ச்சியோ அல்லது சிறப்புத் தேர்ச்சியோ பெற்றிருப்பார்களே தவிர ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்குத் தேவையான பாடத்துறைகளில் தேர்ச்சியோ புலமையோ பெற்றவர்களல்லர். இதன் கருத்து எதற்குமே அவர்கள் தகுதியற்றவர்கள் என்பதல்ல. மாற்றமாக பிரைமரிக்குக் கற்பிக்கத் தேவையான தகைமைகளைக் கொண்டவர்களாக இல்லை என்பதுதான். மற்றது, அவர்கள் குழந்தை உளவியலைப் பெரும்பாலும் அறிந்தவர்களாக இருப்பதில்லை. இவ்வளவையும் தெரிந்து கொண்டும்தானா நமது அதிபர்கள் பட்டதாரிகளை ஆரம்பப் பிரிவினருக்கு ஆசிரியர்களாக நியமிக்கிறனர்? இவ்வாறான ஆசிரியர்களில் பலருக்கு தமிழ் மொழியை பிழையின்றி எழுதுவதெப்படிப்போனாலும் அதனைச் சரியான உச்சாரங்களோடு மொழியவும் தெரியாதே! இவர்களே இப்படியென்றால் நமது பிள்ளைகளின் கதி?
இந்தப் பட்டதாரிகளை உயர்தர வகுப்புகளுக்குப் பயன்படுத்தலாமே என்று நீங்கள் மற்றுமொரு வினாவைத் தொடுக்கலாம். உண்மைதான். ஆனால் அவர்களில் சிலர் இதற்கும் லாயிக்கில்லையே! சமீப காலங்களில் வந்த பல பட்டதாரி ஆசிரியர்களை உயர் வகுப்பு மாணவர்களே நிராகரித்த அல்லது அவர்கள் பாடத்துக்காக வருகை தந்தபோது மாணவர்களே வெளி நடப்புச் செய்த சம்பவங்களும் அவ்வப்போது ஆங்காங்கே நடைபெற்றுள்ளன. ஆனால் இவை இருட்டடிப்புச் செய்யப்பட்டபோதும் அவற்றை மாணவர்களே இப்போது கூறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மறுபக்கமாக Primaryக்கு என்றே அரசால் Distance Education மூலமோ Training College மூலமோ அல்லது College of Education மூலமோ பயிற்றுவித்து அனுப்பப்படுகின்ற Primary Teachers என்பவர்கள்கூட பலபோது மேற்குறித்த தகைமைகளைப் பெற்றவர்களாக இல்லை என்பதை அண்மைக்காலப் புள்ளி விபரங்கள் சில நிரூபித்துக் காட்டுகின்றன. பெரும்பாலான இவ்வாறான ஆசிரியர்கள் அடிப்படைத் தமிழ் மொழிப் பயிற்சியைக்கூடத் தெரியாதவர்களாக இருப்பதனால், அவர்கள் கற்பிக்கின்ற வேளையில் கரும்பலகையில் எழுதுகின்ற வாக்கியங்களில் மாணவர்களே பிழை கண்டுபிடிக்கின்ற துர்ப்பாக்கியமான நிலை எமது பாடசாலைகளில் உருவாகியிருப்பது கவலை தரும் விடயமாகும்.
இன்றுவரை இந்நிலை சர்வ சாதாரணமாகவே கருதப்பட்டு வருகின்றபோதும், இதனால் ஏற்பட்டுள்ள பயங்கரமான சமூகப் பின்னடைவை எவருமே கண்டுகொள்ளாதிருப்பது வருந்தத்தக்க ஒரு விடயமாகும். உயர்தர வகுப்பிலுள்ள அதிகமானோருக்கு தமிழில் எழுதத் தெரியவில்லை. அவர்களது கலா மன்றங்களில்கூட, கலை உணர்வு மங்கிப்போன இந்த வெறுமை நிலையை அவதானிக்கலாம். பரீட்சைப் பத்திரங்களைத் திருத்தப்போகும் எந்தவொரு ஆசிரியரும் இதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார். "ஒருவனது உள்ளத்தில் தோன்றுகின்றவற்றை வெளிப்படுத்துவதற்கான ஊடகம்தான் மொழி அல்லது பாஷை என்பது". ஆனால் இன்று அவர்கள் பாஷை தெரியாதவர்களாக உருவாக்கப்படுகின்றனர். அப்படியாயின் Modern World, I.T. Age, Global World, Willage, Family என்றெல்லாம் பீற்றிக் கொள்கின்ற இந்த யுகத்தில் நமது வருங்காலச் செல்வங்களை நாம் ஊமையர்களாக உருவாக்கவா பாடசாலைகளுக்கு அனுப்புகிறோம்? குறிப்பாக இந்த நிலைக்கு ஆளாகுபவர்களில் அதிகமானவர்கள் ஆண் பிள்ளைகளே.
சமீபத்தில் எமது பிராந்தியத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11 மணவர்களது பெற்றோருக்கான கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இதன்போது குறித்த பாடசாலையின் பிரதி அதிபர், மேற்குறித்தவாறான விடயங்கள் சிலவற்றைத் தொட்டுக் காட்டிவிட்டு, இறுதியில் பெற்றோரைப் பார்த்து ஒரு வினாத் தொடுத்தார். அங்கிருந்த அனைத்துப் பெற்றோரையும் ஒரு கணம் உலுப்பிவிட்ட அந்த வினா இதுதான்.
" உங்களது ஆண் மாணவர்கள் குறைந்தபட்சம் எழுதவாவது கற்றுக் கொள்ளவில்லை. அடுத்தடுத்த கட்டங்களில் அவர்களுக்குப் பெண் பார்க்கச் செல்கின்றபோது எந்தப் பெண்தான் அவர்களை திருமணம் செய்து கொள்ள முன்வருவாள்? எந்த நிறுவனம்தான் அவர்களுக்குத் தொழில் வழங்க முன்வரும்?"
அல்லாஹ், சிந்திக்கத் தெரியாத மனிதர்களை மிக மோஷமான மிருகங்கள் என்றும் செவிட்டு ஊமைகள் என்றும் குறிப்பிடுகிறான்.
சிந்தியுங்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக