புதன், 19 ஜனவரி, 2011

மனிதனுக்கு வரைவிலக்கணம்?!

எந்தவொன்றுக்கும் வரைவிலக்கணம் கூறுவதில் கிரேக்கர்களை விட வல்லவர்கள் உலகில் இருக்க முடியாது. அப்படிப்பட்ட கிரேக்கர்களில் சிலருக்கு ஒரு வருத்தம் இருந்தது.
'உலகத்தில் உள்ள எத்தனையோ பொருளகளுக்கு நாம் வரைவிலக்கணம் ஒதுக்கிவிட்டோம். ஆனால், மனிதனுக்கு மாத்திரம் இதுவரை ஒரு வரைவிலக்கணத்தை வகுக்க முடியவில்லையே. ஏனையவற்றைப் பற்றியெல்லாம் விளக்கம் கூறிய நாம், நம்மைப் பற்றி விளக்கம் கூறாதது பெரும் குற்றமல்லவா' என எண்ணிக் கவலைப்பட்டனர்.

எப்படியும் மனிதனுக்கு ஒரு வரைவிலக்கணத்தை கண்டே தீருவது என்று தீர்மானித்தார்கள். அதற்கென ஒரு நாளும் அவர்களால் முடிவு செய்யப்பட்டது. அந்நாளில் கிரேக்கத்தின் மிகப் பெரும் அறிஞர்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்று கூடினர். அன்று 'மனிதனுக்கு ஒரு வரைவிலக்கணம் காணாமல் எழுந்து செல்வதேயில்லை' என்று உறுதியும் செய்து கொண்டனர்.

நிகழ்ச்சி தொடங்கியது. ஒவ்வொருவராக எழுந்து தாம் சிந்தித்துக் கண்ட வரைவிலக்கணத்தைச் சொல்லத் தொடங்கினர். ஆனால், ஒவ்வொரு வரைவிலக்கணத்திலும் ஏதாவதொரு குறை இருக்கவே செய்தது. நேரம் கழிந்து கொண்டிருந்தது. ஆனால், ஒருவராலாவது சரியான வரைவிலக்கணத்தைத் தர முடியவில்லை.

இறுதியாக ஒருவர் எழுந்தார். "மனிதனைப் பற்றிய சரியான வரைவிலக்கணத்தை என்னால் சொல்ல இயலும் என நினைக்கிறேன்" என்று கூறினார். "சொல்லுங்கள்" என்று மற்றவர்கள் ஆவலோடு கேட்கத் தயாரானார்கள். அவ்வேளை அவர் சொன்னார் "மனிதன் என்பவன் இரு கால்களைக் கொண்ட பிராணியாவான்." இது பற்றி மற்றவர்கள் சிந்தித்துப் பார்த்தார்கள். அவர்களுக்கும் அது சரியாகவே பட்டது. எனவே, 'அதனையே மனிதனுக்கான வரைவிலக்கணமாக ஏற்றுக்கொள்ளலாம்' என முடிவு செய்தனர். 

அப்போது ஒருவர் எழுந்தார். "கொஞ்சம்  பொறுங்கள், அதற்குள் அவசரப்பட்டு முடிவு ஏதும் செய்து விடாதீர்கள். எனக்கு ஓர் 5 நிமிடம் அவகாசம் கொடுங்கள் இதோ வந்து விடுகிறேன்" என்று கூறிவிட்டு வெளியில் போய்விட்டார். 5 நிமிடங்கள் கழிந்து உள்ளே வந்த அவரது கையில் ஏதோவொன்று துணியால் மூடப்பட்டிருந்தது. "உங்கள் கையில் நீங்கள் துணியால் மறைத்து வைத்திருப்பது என்ன" என்று மற்றவர்கள் கேட்டார்கள். "மனிதன்" என்றார் அவர். துணியை அகற்றித் தான் கொண்டுவந்திருந்ததை அவர்களுக்கு நடுவில் வைத்தார். எல்லோரும் திடுக்கிட்டார்கள். அது ஒரு கோழி. "இது ஒரு கோழியல்லவா, இதை எப்படி மனிதன் என்கிறீர்கள்" என்று கேட்டனர் அவையோர். அவர் சொன்னார் "நான் சொல்லவில்லை, உங்கள் வரைவிலக்கணம் தான் சொல்லுகிறது. இது ஓர் இரு கால் பிராணியல்லவா?"

எல்லோரது முகத்திலும் அசடு வழிந்தது. அந்த வரைவிலக்கணத்தை சொன்னவருக்கு அவமானமாகிப் போய் விட்டது. அவர் எழுந்தார். "நான் சொன்ன வரைவிலக்கணத்தில் குறை இருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். அக்குறையைத் திருத்திச் சரியான வரைவிலக்கணத்தை இப்போது சொல்கிறேன் பாருங்கள்" என்றார். "கூறுங்கள்" என்றனர் அவையோர். அவர் சொன்னார் "மனிதன் என்பவன் இறகுகள் அற்ற இரு கால் பிராணியாவான்."

"இது கோழியையும் விலக்கி விட்டது. இப்போதுதான் இது சரியாக இருக்கிறது. ஆதலால், இதனை மனிதனுக்குரிய வரைவிலக்கணமாக ஏற்றுக்கொள்வோம்" எனத் தீர்மானித்தனர். கோழிக்காரர், "அதற்குள் அவசரப்படாதீர்கள், மீண்டும் எனக்கு 10 நிமிடங்கள் அவகாசம் கொடுங்கள்" எனக் கூறி வெளியே சென்றார்.

மறுபடியும் அவர் வந்த போது கையில் துணியால் மறைத்து ஏதோவொன்றை வைத்திருந்தார். "இப்போது என்ன கொண்டுவந்திருக்கிறீர்கள்" என்றனர் அவையினர். "வேறு எதனை, உங்கள் மனிதனைத் தான்" என்று கூறி துணியை அகற்றி, தான் கொண்டுவந்திருந்ததை காட்டினார்.

அதே கோழி. ஆனால், ஓர் இறகு கூட இருக்கவில்லை. எல்லா இறகுகளும் பிடுங்கப்பட்டிருந்தன.

"இதுவோ இறகுகளற்ற இரு கால் பிராணி. அதாவது, உங்களது வரைவிலக்கணப் படி மனிதன்" என்றார் குறும்புச் சிரிப்போடு.

சபை அத்துடன் கலைந்தது. ஆனால், கலைவதற்கு முன் அவர்கள் அனைவரும் கூடி ஏக மனதாகப் பின்வருமாறு ஒரு முடிவெடுத்தார்கள். 'மனிதனுக்கு வரைவிலக்கணம் காணவே முடியாது'

தேடித் தந்தவர்:
ஷௌகி பூஸரி
அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி
திஹாரிய

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக