இலங்கையில் மூவாயிரம் எயிட்ஸ் நோயாளிகள் இருப்பதாக அறிவித்துள்ள எயிட்ஸ் கட்டுப்பாட்டுப் பிரிவினர், எயிட்ஸ் நோய்த் தாக்கத்துக்கு உளானவர்கள் பல்வேறு பால்வினை நோய்களுடன் நாட்டின் பல பாகங்களிலும் பரவியுள்ளதால் இந்த நோய் ஏனையவர்களையும் மிக
இலகுவாகத் தாக்கும் அபாயம் இருப்பதாக விடுத்துள்ள எச்சரிக்கை, மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இலகுவாகத் தாக்கும் அபாயம் இருப்பதாக விடுத்துள்ள எச்சரிக்கை, மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
எயிட்ஸ் நோய் தொற்றியவர்களில் இதுவரையில் 1350 பேர் சுகாதாரத் துறையினரால் இனங்காணப்பட்டு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருவதால் அவர்கள் மூலம் எயிட்ஸ் பரவுவதற்கான அபாயம் தடுக்கப்பட்டுள்ள போதும் ஏனையவர்களை இனங்காண்பதில் ஏற்பட்டுள்ள சவால்கள், சிக்கல்களினால் எயிட்ஸ் நோய் மேலும் பரவும் அபாயத்தை முற்றாகத் தடுக்க முடியாதுள்ளதாகவும் எயிட்ஸ் நோய்க்கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் மேல் மாகாணத்திலேயே எயிட்ஸ் நோய் வேகமாகப் பரவுவதாகக் கூறப்படுகின்றது. இம் மாகாணத்தில் தினமும் ஒருவர் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. மேல் மாகாணத்தில் அபிவிருத்தியென்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டுவரும் சில நடவடிக்கைகளினாலேயே எயிட்ஸ் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. விபசாரம், சிறுவர் பாலியல் வர்த்தகம், சூதாட்ட விடுதிகள் போன்றவற்றுக்கு மறைமுகமாக வழங்கப்பட்டுள்ள அங்கீகாரமே இத்தகையதொரு அபாய நிலையைத் தோற்றுவித்துள்ளது.பெண் பாலியல் தொழிலாளர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், போதைவஸ்துப் பாவனையாளர்கள், கடற்கரையோரச் சிறுவர்கள்,சிறைக் கைதிகள் போன்றோரே அதிகளவில் எயிட்ஸ் தாக்கத்துக்குட்படுவதாக எயிட்ஸ் நோய்க் கட்டுப்பாட்டுத் திட்ட அதிகாரிகள் கூறுகின்றனர்.
இலங்கையில் முதலாவது எயிட்ஸ் நோயாளி 1987 ஆம் ஆண்டே இனங்காணப்பட்டார். அன்றிலிருந்து இன்றுவரை மூவாயிரம் பேர் வரை இக்கொடிய நோயினால் தாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1350 பேர் இனங்காணப்பட்டுள்ள போதும் 350 பேரின் நிலைமையே மிக மோசமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எயிட்ஸ் நோய் உள்ளவர்களென இனங்காணப்பட்டவர்களில் 520 பேர் பெண்களாகவுள்ளனர். இவர்களினூடாக 46 குழந்தைகளுக்கும் எயிட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. எயிட்ஸ் தொற்றுக்குள்ளாகி மிகமோசமான நிலையில் இருப்பவர்களில் 104 பேர் பெண்களாகவுள்ளனர். உலகளாவிய ரீதியில் 33.4 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை ஆண்டு தோறும் 2 மில்லியன் மக்கள் இந்நோயினால் உயிரிழக்கின்றனர். இது தவிர வருடாந்தம் 2.7 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயாளர்களாகப் புதிதாக இனங்காணப்படுகின்றனர்.
இலங்கையைப் பொறுத்தவரையில் சுகாதாரத்துறை ஆரோக்கியமானதாக இல்லையென்றே கூறவேண்டும். மருந்துவர் தட்டுப்பாடு, மருத்துகள் பற்றாக்குறை, மருந்துகள் இறக்குமதி, உற்பத்திகளில் மோசடிகள், வைத்தியசாலைகளுக்கு மூடு விழாவென சுகாதாரத்துறை பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. எமது நாட்டின் சுகாதாரத்துறைக்கு சவால் விடுவது போன்றே டெங்குக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், எலிக்காய்ச்சல், எயிட்ஸ் என கொடிய தொற்றுநோய்களும் போர் தொடுக்கின்றன. இவற்றுக்கு முகம் கொடுப்பதில் சுகாதாரத்துறை திணறிவரும் நிலையில் இலங்கையில் நோயாளர்களின் உயிர்களுடன் விளையாடிவரும் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலி டாக்டர்கள் வேறு தலையிடியைக் கொடுக்கின்றனர். இவற்றுக்கெல்லாம் முகம்கொடுக்கக் கூடியளவுக்கு ஆட்பலலோ நிதியுதவியோ இன்றியே சுகாதாரத்துறை காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் தான் இலங்கையில் தற்போது எயிட்ஸ் நோய்த்தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் எயிட்ஸ் நோய்த் தடுப்புத் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் போதாது. இங்கு எயிட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகக்கூறி வெளியிடப்படும் அறிக்கைகளில் உள்ள எண்ணிக்கையை விடவும் மூன்று மடங்கு அதிகமானவர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனரென ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே எயிட்ஸ் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களை இனங்காண்பது, அவர்களை உடனடி சிகிச்சைக்குட்படுத்துவது தொடர்பிலான நடவடிக்கைகள் முழுவீச்சில் ஆரம்பிக்கப்பட வேண்டும். அத்துடன் எயிட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு செயற்றிட்டங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி மக்களை உசார்படுத்தி இக்கொடிய நோயின் தாக்கத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்னும் சில வருடங்களில் எயிட்ஸ் நோயாளர்கள் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்ந்து விடுவதைத் தவிர்க்க முடியாது போய்விடும்.
நன்றி: தினக்குரல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக