ஞாயிறு, 11 மார்ச், 2012

கொடுக்கும் உயர்ந்த கரம், வாங்கும் தாழ்ந்த கரத்தை விடச் சிறந்தது

ஒரு முறை பெரியார் ஷகீக் அல் பல்கீ வியாபார நோக்கமாக ஒரு பயணம் மேற்கொண்டார். தனது பயணத்துக்கு முன்னால் தனது நண்பர் அறிஞர்  இப்ராஹீம் இப்னு அத்ஹமைச் சந்தித்துப் பிரியாவிடை பெற்றுக் கொண்டார். இவரது இந்தப் பயணம் நீண்ட நாள் பயணமாகவே அமைய இருந்தது. ஆனால்
ஓரிரு நாட்களுக்குள் அவர் ஊர் திரும்பினார். அவரை மஸ்ஜிதில் சந்தித்த இப்ராஹீம் ஆச்சரியப்பட்டு, "என்ன நடந்தது? ஏன் அவசரமாக ஊர் திரும்பிவிட்டீர்கள்?" எனக் கேட்டார். அதற்கு ஷகீக், நான் எனது பயணத்தின்போது ஓய்வெடுத்துக்கொள்வதற்காக ஓரிடத்தில் தங்கினேன். அது பாழடைந்த ஓரிடம். அங்கே நான் குருடான, முடமான ஒரு பறவையைக் கண்டேன். கண் பார்வையற்ற; பறக்கவோ அசையவோ முடியாத அந்தப் பறவை, இந்த ஒதுக்குப் புறமான இடத்தில் எப்படி உயிர் வாழ்கிறது என நினைத்து நான் ஆச்சரியப்பட்டேன்.

சற்று நேரத்தின் பின் அங்கே பிறிதொரு பறவை வந்தது. இது இந்தப் பறவைக்கு இரையைக் கொண்டு வந்திருந்தது. இவ்வாறு ஒரு நாளைக்குப் பல தடவை அப்பறவைக்குப் போதுமான இரையைக் கொண்டுவந்து கொடுப்பதை நான் அவதானித்தேன். இதன் மூலம் 'இந்த இடத்தில் இப்பறவைக்கு உணவளிப்பவன்தானே எனக்கும் உணவளிக்கக்கூடியவனாக இருக்கின்றான்' என்ற உண்மையை உணர்ந்த நான், பயணத்தை இடை நிறுத்திவிட்டு ஊர் திரும்பினேன் என்றார்.

இதைக் கேட்ட நண்பர் இப்ராஹீம், ஷகீகே! உமது இந்த நிலைப்பாடு எனக்குப் பெரும் ஆச்சரியத்தைத் தருகின்றது. பிறரின் தயவில் வாழ்கின்ற அந்தக் குருடான, முடமான பறவையாக நீர் இருக்க விரும்புகிறீரா? ஏன் தனக்காகவும் பிறருக்காகவும் உழைக்கின்ற மற்றப் பறவையின் நிலையில் நீர் இருக்கக்கூடாதா? "கொடுக்கும் உயர்ந்த கரம், வாங்கும் தாழ்ந்த கரத்தை விடச் சிறந்தது என்பதை நீர் அறிய மாட்டீரா?" என வினவினார். இதைக்கேட்ட ஷகீக், இப்ராஹீம் இப்னு அத்ஹமின் கரங்களை முத்தமிட்டு, "நீங்கள் எனது உஸ்தாதல்லவா?" எனக் கூறிவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக