சனி, 31 மார்ச், 2012

கருத்து வேறுபாடு ஒரு சாபமா?

அறிவுபூர்வமாக நோக்கினால், இல்லை என்பதுதான் இக்கேள்விக்கான பதிலாகும். ஆனால் சமீப காலமாக எமது சமூகத்தை வழி  நடாத்திச் செல்லவேண்டிய நிலையிலுள்ள ஆலிம் உலமாக்கள் முன்வைத்துச் செல்கின்ற கருத்துக்களைப் பார்கின்ற போது இப்படித்தான் நினைக்கத் தொன்றுகிறது.


இறைவன், தான் சிருஷ்டித்த மனிதனுக்கு அறிவையும் ஞானத்தையும் கொடுத்தது உண்மைதான். ஆயினும் எல்லா மனிதருக்கும் எல்லாவகையான அறிவையும் ஒரே விதத்தில் ஒரே பெறுமாணத்தில் அவன் கொடுக்கவில்லை. இந்த நிலையில் ஆளுக்காள் வெவ்வேறு அறிவுத்தரத்தைக் கொண்ட மனிதனின் தீர்வுகளும் முடிவுகளும் மட்டும் எப்படி ஒன்றாக அமைய முடியும்? மனிதனது அறிவுத்தர வேறுபாடு அவனது துலங்கலிலும்கூட வேறுபாட்டை ஏற்படுத்தும். அதுவே அவனது மாறுபட்ட தீர்வுகளுக்குக் காரணம்.

இந்தத் தத்துவத்தை - கருத்தியலை உலகியல் விவகாரங்களில் ஏற்று அங்கீகரிக்கப் பழகிவிட்டோம்; ஆனால் மார்க்க சட்ட விவகாரங்களில் மட்டும் இச்சிந்தனையைப் புறந்தள்ளிவிட்டோம். அதன் விளைவைத்தான் கருத்து வேறுபாடு எனும் பெயரால் நாம் அனுபவித்துக்கொண்டுமிருக்கிறோம்.

இன்று சாபமாக மாறியுள்ள இச்சொற்றொடர் நபித்தோழர்கள் காலத்தில் மட்டுமன்றி பின் வந்த காலப்பிரிவுகளிலும் மிகவும் ஆரோக்கியமான நிலையிலேயே இருந்து வந்தது. இவர்களிடையேயும் மாற்றுச் சிந்தனையைக்கொண்டவர்கள் இருக்கத்தான் செய்தார்கள். ஆனால் அங்கு ஒருவர் பிறிதொருவரை மிக மோசமாகச் சாடும் நிலையோ அல்லது திட்டித் தீர்த்து குஃப்ர் பத்வாக் கொடுக்கும் நிலையோ இருக்கவில்லை; சபிக்கவில்லை; கண்ணியமிலாத, நாகரிகமில்லாத வார்த்தையாடல்களால் உள்ளங்களை காயப்படுத்தவுமில்லை. மாற்றமாக ஒருவர் மற்றவரை கண்ணியப்படுத்தி மரியாதை கொடுக்கும் ஆரோக்கியமான நிலையே காணப்பட்டது.

சமீபத்தில் எமது முஸ்லிம் சகோதரர்களில் சிலர் (இவர்கள் மார்க்கத்தைக்கூட சரியாகக் கற்காதவர்கள்) தமது முக-நூல்களில் மதிப்புக்குரிய ஆலிம்கள் சிலரை "தோது" எனவும், "நொண்டி" எனவும், "கன்றாவி'' எனவும், "குறை மாதத்தில் பிறந்தவன்" எனவும் திட்டித் தீர்த்ததைக் கண்டு கவலையடைந்த நம் நாட்டிலுள்ள கணிசமான முஸ்லிம் சகோதரர்கள்; குறித்த அதே முக நூல்களில்,       "இவ்வாறு எழுதி அந்த அறிஞர்களின் கண்ண்ணியத்தைச் சிதைக்க வேண்டாம்" என்று COMMENT கொடுத்திருந்தார்கள். இந்த அவல நிலை இந்த நிமிடம் வரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.


இவ்வாறானவர்களுக்கு எமது முன்னோரின் பின்வரும் வரலாற்றுச் சம்பவங்கள் படிப்பினையாக அமையட்டும்!

கருத்து வேறுபாட்டின்போது எமது முன்னோர்கள் கடைப்பிடித்த ஒழுங்குகள்.

1. இமாம்கள் ஒருவர் மற்றவரைப் புகழ்ந்தமை
2. ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மரியாதை செலுத்தியமை
3. மறைவிலும் ஒருவர் மற்றவருக்காகப் பிரார்த்தித்தமை


அந்த இமாம்கள் ஒருவர் மற்றவரை எவ்வாறு மதித்து நடந்தார்கள் என்பதற்கான சில சான்றுகள்:

இமாம் மாலிக் (ரஹ்)

"ஒரு பாத்திரத்தில் அரைவாசி தங்கமோ வெள்ளியோ இருக்கும் என இமாம் அபூ ஹனீபா வாதிட்டால் அவர் ஆதாரத்துடனேயே வாதிடுவார்,"


இமாம் ஷாபிஈ (ரஹ்)

1. "மக்கள் இமாம் அபூ ஹனீபாவிடம் சட்டப் பிரச்சினைகளில் மிகவும் தேவையுடையவர்களாவர்."

2. "அறிஞர்களைப் பற்றிக் கூறினால் இமாம் மாலிக் பிரகாசிக்கும் நட்சத்திரமாவார்."

3. "நான் பக்தாதிலிருந்து மீளும்போது அங்கே அஹ்மத் இப்னு ஹன்பலைவிட பேணுதல் மிக்க, தக்வா உடைய , ஆழமான அறிவு பெற்ற ஒருவரை விட்டு வரவில்லை."

4. இமாம் ஷாபிஈ, இமாம் அபூ ஹனீபாவின் மஸ்ஜிதில் தொழுகை நிறைவேற்றிய போது ஸுபுஹுடைய குனூத் ஓதுவதைத் தவிர்த்து கொண்டார்கள் என இமாம் திஹ்லவி குறிப்பிடுகின்றார்.

5. "நான் இமாம் மாலிக்கிற்கு முன்னிலையில் அமர்ந்திருக்கும்போது அவர் மீது கொண்ட மரியாதை காரணமாகப் புத்தகங்களின் பக்கங்களைப் புரட்டுகின்ற சப்தம்கூட அவருக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்ற வகையில் அதை மெதுவாகப் புரட்டுபவனாக இருந்தேன்."


இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்)

"நான் நாற்பது வருடங்களாக இமாம் ஷாபிஈ அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தானை செய்து வந்தேன்."


இஸ்லாமிய வரலாற்றில் இமாம்கள் ஒருவரை ஒருவர் கௌரவித்து மரியாதை செலுத்தியதோடு அவர்களுக்காகப் பிரார்த்தித்தமைக்கான சான்றுகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. வரலாற்றில் தோன்றிய உயர்ந்த மனிதர்கள், உயர்ந்த சிந்தனைப் பாரம்பரியங்களைத் தோற்றுவித்தவர்களே தமக்கு மத்தியில் இவ்வாறு நடந்து காட்டியுள்ளார்கள் என்றால் .................நாம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதை நாம் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நன்றி:  "கருத்து வேறுபாடுகளும் இஸ்லாமிய எழுச்சியும்"   -   அஸ்கர் அரூஸ் (நளீமி)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக