சனி, 24 மார்ச், 2012

இலவச பரிசோதனை - எமது தாய்மார் உதாசீனம்!

எமது ஊரில் அமைந்துள்ள 'தாய்மார் மற்றும் குழந்தைகள் நல கிளினிக்' இல், தாய்மார்களுக்காக இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச பரிசோதனையை, எமது 'தாய்மார்' உதாசீனம் செய்துள்ளதாக கிளினிக் நிலைய அதிகாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது:


அரசாங்கத்தின் சுகாதாரக் கொள்கையின் அடிப்படையில், 35 வயதை அடைந்த தாய்மார் அனைவரும், தங்களுக்கு எதிர் காலத்தில் மார்பு அல்லது கர்ப்பப்பை புற்று நோய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளனவா என்பதை அறிந்து கொள்ள, ஒரு பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.

இதன் அடிப்படையில், வருடா வருடம் இடம்பெறும் இந்தப் பரிசோதனை, இந்த வருடம் 1976 மற்றும் 1977 ஆம் வருடங்ககளில் பிறந்த தாய்மார்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், 40 தாய்மார்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இன்றைய முகாமுக்கு மொத்தம் 18 பேர் மாத்திரமே வருகை தந்திருந்ததாகவும் குறித்த அதிகாரி தெரிவித்திருந்தார்.

கடந்த வருடங்களில், பரிசோதனைக்காக ஒரு ஆண் மருத்துவர் வந்திருந்ததால், பெண்கள் அக்கறை காட்டாததன் காரணாமாக, இம்முறை, தான் மிகவும் சிரமப்பட்டு ஒரு பெண் அதிகாரியை ஏற்பாடு செய்ததாகக் கூறிய அவர், ஒரு பெண் அதிகாரி வருவதாக ஏற்கனவே அறிவித்திருந்தும் எதிர்பார்த்த பலன் கிட்டாததையிட்டு மிகவும் கவலைப்பட்டார்.

சுகாதார அமைச்சு உங்கள் ஊருக்குள் வந்து இலவசமாக வழங்கும் இந்த பரிசோதனையை, ஒரு தனியார் மருத்துவ மனையில் செய்வதாயின் ரூ. 6000 இற்கு மேற்பட்ட ஒரு தொகையை செலவிட வேண்டி வரும் எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக