ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

குருட்டுக் கண்ணால் எப்படிப் பார்க்க முடியும்.................. ?!

உயர் தர மாணவர்கள் உட்பட, அல் பத்ரியா பாடசாலையின் பெரிய வகுப்பு மாணவர்கள் ஏழு பேர், கடந்த இரண்டு வாரங்களுள் திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் தமது கல்வியைத் தொடர்வதற்காக இணைந்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.


இவ்வளவு காலமும் தாம் கற்ற பாடசாலையை விட்டு, இவர்கள் ஏன் இவ்வாறு புதிய பாடாலையைத் தெரிவு செய்துள்ளார்கள் என்பது பற்றித் தெளிவு படுத்தப்படாத போதும், அல் பத்ரியாவின் கல்வி நிலை தற்போது பின்னோக்கிச் செல்வதே இதற்குக் காரணமென பலரும் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர்.

'பாடங்கள் ஒழுங்காக நடாத்தப்படுவதில்லை; பல ஆசிரியர்கள் தொடர்ந்து லீவு எடுக்கிறார்கள்; பல வகுப்புகளில், முதலாம் தவணைக்கான பாடங்கள் கூட ஒழுங்காகப் பூர்த்தி செய்யப்படவில்லை' போன்ற பெற்றாரின் குமுறல்கள், இந்தக் கருத்துக்கு உரம் போடுவது போல் அமைந்துள்ளன.

அத்துடன், நடைபெற்று முடிந்த முதலாம் தவணைப் பரீட்சையின் போது, தமக்கு கற்பிக்கப்படாத, அதே வேளை முதலாம் தவணைக்குரிய பாடங்களில் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது குறித்து, குறித்த வகுப்பொன்றின் மாணவர்கள், "எவ்வாறு விடை எழுதுவது?" என்று வினவியதாகவும், அதற்கு குறித்த ஆசிரியர், "தெரிந்ததை எழுதுங்கள்" என்று கூறி மாணவர்களை அடக்கியதாகவும் எம்மிடம் கூறிய ஒரு பெற்றார், "படிக்காத விடயத்தை பிள்ளைகள் எவ்வாறு எழுத முடியும்? பாடங்களை ஒழுங்காகச் சொல்லிக் கொடுக்காமல் இப்படியா நழுவுவது?" என்று எம்மிடம் கேள்விக்கு மேல் கேள்வியாகக் கேட்டிருந்தார்.

"பாடசாலை நேரக் கற்பித்தல் என்பது பலரின் பகுதி நேரத் தொழிலாக இருக்கும் போது, பாடசாலையின் முன்னேற்றம் எப்படி சாத்தியம்?" என்று மற்றொருவர் கவலைப்பட்டதும் ஞாபகம் வருகிறது.

இதே வேளை, அண்மையில் திஹாரிய அல் அஸ்ஹரில் இடம்பெற்ற அதிபர்களுக்கான கூட்டமொன்றின் போது, அல் பத்ரியா தொடர்பில், பிரபல ஆசிரியர் ஒருவர், பாட வேளையில் வெளியே சுற்றும் பொறுப்பற்ற நடவடிக்கை தொடர்பில், கல்வி அதிகாரிகளால், பலத்த கண்டனங்கள் வெளியிடப்பட்டதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. (அதிபர் என்று சொல்லப் படுபவரோ அல்லது தற்போது பதில் அதிபராகக் கடமையில் உள்ளவரோ இந்தக் கூட்டத்துக்குச் செல்லாமல், வேறு ஒரு ஆசிரியர் அதில் கலந்து கொண்டார் என்பது வேறு விடயம்...)

ஆயிரம் பாடசாலைகளுள் ஒன்றாக வரத்துடிக்கும் அல் பத்ரியாவின் நடவடிக்கைகள் மிக மிக விநோதமாக உள்ள இந்த நிலையில், பாடசாலையின் முன்னேற்றம் தொடர்பில் என்ன செய்யலாம் என்று, நாம் அனைவரும் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வருவது மிக மிக அவசியம். ஏனெனில், இந்தப் பாடசாலை எமக்கு ஒரு கண் போன்றது. அதனை நாம் இழந்துவிட்டு, எமது முன்னேற்றம், ஊர் முன்னேற்றம்......... பற்றி சிந்திக்கத்தான் முடியுமா?

குருட்டுக் கண்ணால் எப்படிப் பார்க்க முடியும்..................  ?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக