செவ்வாய், 10 ஏப்ரல், 2012

இஸ்லாமும் பாடல்களும் (மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ)

மனிதன் உலகத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கு,  சில நிபந்தனைகளுடன் இஸ்லாம் முழு அனுமதியையும் வழங்கி இருக்கின்றது. அதில் ஒன்றுதான் பாடல்களை கேட்டு ரசிப்பது. இஸ்லாத்தில்   பாடல்கள் கேட்பதற்கு எந்த தடையுமில்லை, ஆனால் பாடல்கள் மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஒன்று ஷிர்க்கில்லாத பாடலாக இருக்க வேண்டும், இரண்டாவது தவறான கருத்துக்களில்லாத பாடலாக இருக்க வேண்டும். மூன்றாவது இசை இல்லாத பாடலாக இருக்க வேண்டும்.
ஷிர்க்கில்லாத பாடலென்பதின் கருத்து, நாம் படிக்கும் பாடல்களோ அல்லது நாம் கேட்கும் பாடல்களோ அல்லாஹ்விற்குரிய தன்மைகளை பிறருக்கு கொடுக்கக்கூடிய கருத்துக்களை பொருந்தியதாகவோ அல்லது அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய வணக்கங்களை அல்லாஹ்வின் படைப்புகளுக்கு கொடுக்கத் தூண்டும்படியான பாடல்களாகவோ இருக்கக்கூடாது. தவறான கருத்துள்ள பாடலென்பது, தவறான கலாச்சாரத்தையும் தவறான பழக்க வழக்கங்களையும் கூறக்கூடிய, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இரட்டை கருத்துள்ள பாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய   வார்த்தைகளை கூறக்கூடிய பாடல்கள்,  இவை அனைத்தையும் இஸ்லாம் தடுக்கின்றது. இத்துடன் பாட்டில் இசை கலந்திருக்கவும் கூடாது. இவைகள் அல்லாத பாடல்களை கேட்பதில் தவறில்லை.
இன்று நமது நாடுகளில் இஸ்லாமிய பாடல்கள் என்கிற பேரில் ஷிர்க் மற்றும் இசை கலந்த பாடல்கள் நமது வீடுகளில் வலம் வந்து கொண்டிருப்பது கவலைக்குரியதாகும். குறிப்பாக, அதிகாலையில் விழித்தெழுந்ததும் முதலில் கேட்பது நாகூர் E.M ஹனீபா மற்றும் அவர் போன்றவர்களின்  பாடல்களைத்தான். இவைகளுக்குப் பெயர், இஸ்லாமியக் கீதம்(?!).
இவைகள் இஸ்லாமியக் கீதமா? இஸ்லாத்திற்கு முறணான கீதமா? இஸ்லாத்திற்கு முறணான பல கருத்துக்களைக் கூறக்கூடிய, இந்த பாடல்களுக்கு  இஸ்லாமியக் கீதம் என்கிற முத்திரையையும் மக்கள் வழங்கியிருக்கின்றார்கள். இது போன்று மவ்லிது என்கிற பேரில் தெளிவான ஷிர்க்கியத்தான பாடல்களையும் நமது வீடுகளில் படிக்க வைப்பதற்கு, கூலிக்கு கூட்டி வந்து, நமக்கு தெரிந்தோ தெரியாமலோ பெரும் ஷிர்க்கையும் நமது வீடுகளில் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றோம்,  இதைப் பற்றிய தெளிவை மக்களுக்கு கூற வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முதலில் பாடல்கள் இயற்றும் கவிஞர்கள் பற்றி இஸ்லாம் கூறுவதை காண்போம்
அல்லாஹ் கவிஞர்கள் பற்றி குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்.
இன்னும் கவிஞர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள். நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (பாதையிலும்) அலைந்து திரிவதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?   இன்னும் நிச்சயமாக, நாங்கள் செய்யாததைச் (செய்ததாக) அவர்கள் சொல்லுகிறார்கள்.
ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட பின்னர் (அதற்காக) பழிதீர்த்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம்); அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்லவேண்டு மென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள். 26:224,227
அதாவது, கவிஞர்கள் உண்மைக்கு மாறாக பேசுபவர்கள், இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி, சொல்ல விரும்பும் செய்தியை எதைக் கூறியாவது நிலை நிறுத்தப்பார்ப்பவர்கள். ‘கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு அழகு பொய்’ என்று கூறுமளவு, கவிஞர்கள் பொய் கூறுவார்கள். இதுதான் இன்றைய உலக நடப்பும் கூட. ஒருவரை உயர்த்துவதற்காக  அவரை வானளாவ அளவுக்கு உயர்த்துவார்கள், ஒருவரை இகழ்வதற்காக அவரை தரைமட்டத்திற்கே இறக்கி கொண்டு வந்து விடுவார்கள். இதுதான் கவிஞர்களின் நிலையாகும்.
இவ்வாறு நபி(ஸல்) அவர்களுக்கு, நாம் கவிதையை கற்றுக் கொடுக்கவும் இல்லை, அது அவர்களுக்கு தேவையுமில்லை என்று திருமறை கூறுகின்றது.  இதுபற்றி அல்லாஹ்  திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.
(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல் இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை. 36:69
மேற்கூறப்பட்ட திருவசனங்களின் மூலம் பாட்டுப் பாடுவதும் அதை கற்றுக் கொள்வதும் அவசியமில்லாத ஒன்றாகும் என்றும், பாடகர்கள் பொய் சொல்லியே தங்களின் பாடல்களையும் கவிதைகளையும் மெருகூட்டுவார்கள் என்று கூறி அப்படிப்பட்ட பாடகர்ளை எச்சரிக்கின்றது இஸ்லாம். அதே நேரத்தில், நபி(ஸல்) அவர்களின் வீட்டிலே சிறுமிகள்  பெருநாள் தினத்தில் பாட்டுக்களை படித்துக் கொண்டிருக்கும் போது, அபூபக்ர்(ரலி) அவர்கள் அதை தடுத்த போது, நபி(ஸல்) அவர்கள், இது அவர்களின் பெருநாளுடைய தினம், பாடவிடுங்கள் என அனுமதி வழங்கினார்கள் என்று ஹதீது புகாரி முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் பதிவாகியிருக்கின்றது. மற்றும் நபி(ஸல்) அவர்களை குறைஷி கவிஞர்கள் கவிதை மூலம் நபி(ஸல்) அவர்களை வசைபாடிய போது, ஹஸ்ஸான் இப்னு தாபிது(ரலி) அவர்களுக்கு கவிதை மூலம் விடை சொல்லும்படி கூறிய ஹதீது புகாரியில் பதிவாகியுள்ளது. அதே போன்று, அகழ் போரில் நபித்தோழர்கள், பசியோடு வயிற்றிலே கற்களை கட்டியவாறு சில கவிதைகளை பாடினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் அகழ் தோண்டப்படும் இடத்திற்கு சென்றபோது, முஹாஜிரீன்களும் அன்சாரிகளும் குளிரான காலை நேரத்தில் அகழ் தோண்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். அவர்களின் கஷ்டத்தையும் பசியையும் பார்த்த நபி(ஸல்) அவர்கள் (பின்வரும் கவிதைகளை பாடினார்கள்)
இறைவா! உண்மையான வாழ்க்கையென்பது, மறுமை வாழ்க்கையாகும் அன்சாரிகளுக்கும் முஹாஜிரீன்களுக்கும் நீ மன்னிப்பு வழங்குவாயாக!
நபி(ஸல்) அவர்களுக்கு விடை கொடுக்கும் முகமாக நபித்தோழர்கள் பின்வரும் கவிதைகளை பாடினார்கள்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் உடன்படிக்கை செய்திருக்கின்றோம்
உயிர்வாழும் வரை ஜிஹாத் செய்வதற்கு. (புகாரி)
(பின்வரும் கவிதைகளை) கூறிய நிலையில், அகழ்போர்களத்தில் நபி(ஸல்) அவர்கள் மண்ணை சுமந்து கொண்டு செல்வதை நான் பார்த்தேன், மண், அவர்களின் வயிற்றின் வெண்மை நிறத்தை மூடியிருந்தது,
நீ இல்லையென்றால், நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம். இன்னும் தர்மம் செய்திருக்கவும் மாட்டோம் தொழுதிருக்கவும் மாட்டோம். ஆகவே எங்கள் மீது அமைதியை இறக்கி வைப்பாயாக!
நாங்கள் எதிரிகளை சந்தித்தால் (எங்களின்) கால் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! …. என சில வரிகளை நபி(ஸல்) பாடினார்கள்.
அறிவிப்பவர் : பராஉ (ரலி), ஆதாரம் : புகாரி
மேல் கூறப்பட்ட ஹதீதுகளின் மூலம், நல்ல கருத்துக்களுள்ள பாடல்களை படிப்பதும் கேட்பதும் ஆகுமென்றும், தவறான கருத்துள்ள பாடல்லகளை படிப்பதும் கேட்பதும்தான் தவறு என்பதும் தெளிவாகின்றது.
ஷிர்க்கான கருத்துள்ள பாடல்களை படிக்கவும் கூடாது, கேட்கவும் கூடாது என்று, நான்  குறிப்பிட்டதைப்பற்றி உங்களில் சிலர் ஆச்சரியப்படலாம். ஆம், நமது பாடகர்கள் பாடும் பல பாடல்களில் ஷிர்க்கியத்தான வார்த்தைகள் மிகத் தெளிவாகவே இருக்கின்றது. உதாரணத்திற்கு ஒரு சிலவற்றை பார்ப்போம்.
பாடகர் நாகூர் E.M. ஹனீபா அவர்கள் பாடும் ஒரு பாடலில், தெளிவாக கூறப்படும் ஷிர்க்கான ஒரு வார்த்தை பின்வருமாறு:
நமனை விரட்ட மருந்தொன்று விற்குது நாகூர் தர்காவிலே.. .. ..
என்று பாடுகின்றார்.
நாகூர் தர்ஹாவில் நமனை விரட்ட மருந்து விற்குதாம். அன்பு நாணயம் கொண்டு சென்றால் பெறலாம் குரு நாதர் பதப் பூவிலே என்று பாடகர் பாடியுள்ளார்.
நமன் என்றால் எமன் என்று பொருள். இவ்வாறு தமிழ் அகராதி நூற்களில் காணப்படுகிறது. எமன் என்றால் உயிரை பறிப்பவன். உயிரை பறிப்பவர்கள், மலக்குகள் வானவர்கள். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்யமாட்டார்கள். உயிர் பறிக்க வரும் மலக்குகளைக் கூட விரட்டிவிட அங்கு மருந்து விற்கிறது என்றால், அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக அங்கே நிகழ்ச்சி நடக்கிறது என்பது தானே பொருள்.
உண்மையில் நாகூர் மீரானே நமனால் கைப்பற்றப்பட்டு இறந்தபின் தானே நாகூரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்? அவரிடம் போய் நமனை விரட்ட மருந்து கிடைக்கும் என்றால் எப்படிபட்ட பொய்? ஆனால் அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்.
ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும் வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள், முந்தவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 7: 34)
ஒருவரின் உயிர் கைப்பற்றப்படும் நேரம் வந்துவிட்டால், கொஞ்ச நேரம் முற்படுத்தப்படவுமாட்டாது, கொஞ்ச நேரம் பிற்படுத்தப்படவுமாட்டாது என திருமறை குர்ஆன் தெளிவாக கூறும் போது, இந்தப்பாடல் அதற்கு முற்றிலும் மாற்றமாக கூறுகின்றது. இவ்வாறு அல்லாஹ்வால் ஏற்கனவே நாள் குறிக்கப்பட்டு விட்ட மரணத்தை யாரும் தள்ளி வைக்கவோ அல்லது நீக்கிவிடவோ முடியுமா? இது குர்ஆனுடன் நேரடியாக மோதவில்லையா? அல்லாஹ்வின் ஆதிக்கத்தில் இன்னுமொரு அல்லாஹ்வின் படைப்புக்கு பங்கு வைத்துக் கொடுக்கும் இணைவைப்பில்லையா? இதை ஒரு முஸ்லிம் இஸ்லாமிய பாடல் என்று கூறி கேட்கலாமா? சிந்தியுங்கள்..
நமன் என்றால் எமன் என்ற பொருளல்ல. மாறாக நோய் என்று தான் பொருள் எனவும் சிலர் கூறுகின்றனர். நோய் என்று பொருள் கொண்டாலும் கூட தவறு தான்.
நோயை விரட்ட மருந்து நாகூர் தர்ஹாவில் விற்கிறது என்றால் தமிழகத்திலுள்ள எல்லா மருத்துவமனைகளையும் மூடிவிடலாமே! ஏன் அரசாங்கத்திற்கு வீண் செலவு. மக்களுக்கு வீண் செலவு. பேசாமல் நாகூர் தர்ஹாவிற்குப் போய் மருந்தையாவது அல்லது நோயையாவது வாங்கிக் கொண்டு வரலாமே?
அல்லாஹ் தான் நோய் நிவாரணம் அளிப்பவன் என்பது தான் இஸ்லாத்தின் அசைக்க முடியாத அடிப்படை.
‘நான் நோயுற்றால் அவனே எனக்கு சுகமளிக்கிறான்’ (அல்குர்ஆன் 26: 80)
என்று இப்ராஹிம்(அலை) அவர்கள் கூறியதாக அல்லாஹ் கூறுகிறான். எனவே நமன் என்பதற்கு எமன் என்று பொருள் கொண்டாலும் நோய் என்று பொருள் கொண்டாலும் தவறு தான் என அறிந்து கொள்ள முடிகிறது.
இன்னும் ஒரு பாடலையும் கேளுங்கள்.
‘எங்கே எங்கே எங்கள் நாகூர் மீரானே உம் வாசல் தேடி வந்தோம் ஷாஹ் மீரானே’
என்று துவங்கும் பாடலை மற்றொரு முறை ஆழ்ந்து சிந்தனையுடன் கேட்டுப் பாருங்கள். இந்த அடிகளுக்குப் பின்னால் நாகூராரிடம் பலவிதமான உதவிகளைக் கேட்டு பாடகர் பாடியுள்ளார்.
என்றோ இறந்து போனவரிடம் நம் தேவைகளைக் கேட்கலாமா? கூடாதன்றோ? நாகூர் வலி (அவர் வலியுல்லாஹ்தானா என்பதை அல்லாஹ்வே மிக நன்கறிந்தவன்) உயிரோடு உள்ள போதே நாம் கேட்பதை எல்லாம் தர முடியாது. அல்லாஹ் மட்டுமே அனைத்தையும் தர வல்லவன். அவர் இறந்து போன பின்பு எப்படி நம் தேவைகளை நிறைவேற்றி வைக்க முடியும்? பிரார்த்தனையை அல்லாஹ்விடத்தில் மாத்திரமே பிரார்த்திக்க வேண்டும், அவனைத்தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது என்று திருமறை கூறுகின்றது. அல்லாஹ் தனக்கு மாத்திரம் செய்யும்படி கட்டளையிடும் ஒரு வணக்கத்தில் அல்லாஹ்வின் படைப்பை சேர்த்துக் கொள்வது அல்லாஹ்விற்கு இணையில்லையா? (ஷிர்க்கில்லையா) பின்வரும் வசனங்கள் அதை தெளிவுபடுத்துகின்றது.
அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்.
1. உங்கள் இறைவன் கூறுகிறான்; ‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன். எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.’ 40: 60
2. (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னையே நம்பட்டும். அப்பொழுதவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக. அல்குர்ஆன் 2: 186
நபிமொழிகள்
நீ கேட்டால் அல்லாஹ்விடத்திலேயே கேள், இன்னும் நீ உதவி தேடினால் அல்லாஹ்விடத்திலேயே உதவி தேடு என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி
விளக்கம்: எல்லாத் தேவைகளையும் அல்லாஹ்விடத்தில் மாத்திரம் கேட்கும்படி  அல்லாஹுவும் அவனுடைய தூதர் முஹம்மது(ஸல்) அவர்களும் கூறுவது ஒருபுறமிருக்க, மேல்கூறும் பாடல், ஷாஹுல் ஹமிது வலியுல்லாவிடம் (அல்லாஹ் மிக நன்கறிந்தவன்) தேவையை கேட்டு போகச் சொல்லுகின்றது, அல்லாஹுவிற்கு மாத்திரம் பிரார்த்திக்கும்படி சொல்லப்பட்ட வணக்கத்தை, அல்லாஹுவின் படைப்புக்கும் செலுத்தும்படி கூறுவது, அல்லாஹுவிற்கு இணைவைக்கும் செயலில்லாமல் வேறு என்ன?
அல்லாஹ்  அல்லாதவர்களால்  எதையும்  கொடுக்க  முடியாது. அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்
1. அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன, அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சிகளெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியேற்கமாட்டார்கள், செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள், கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள். 35: 13,14
2. மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது. இன்னும் அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே. 22: 73
3. நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! 7: 194
4. ”நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன, அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்று (நபியே!) நீர் கூறுவீராக. கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத – அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது. 46:4,5
5. மேலும், அல்லாஹ் உண்மையைக் கொண்டே தீர்ப்பளிப்பவன். அன்றியும், அவனையன்றி அவர்கள் (வேறு) எவர்களை அழைத்(துப் பிரார்த்தித்)தார்களோ, அவர்கள் யாதொரு விஷயத்தைப் பற்றியும் தீர்ப்புச் செய்ய மாட்டார்கள் – நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், தீர்க்கமாகப் பார்ப்பவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் 40: 20
விளக்கம்: அல்லாஹ் அல்லாதவர்களிடம் நாம் ஏதாவது ஒரு தேவையைக் கேட்டு பிரார்த்தித்தால் அல்லது ஒரு ஆபத்திலிருந்து பாதுகாப்புத் தேடினால், நாம் அவர்களிடம் கேட்கும் எந்த விஷயத்தையும் அவர்களால் செவிமடுக்கவோ, உணரவோ முடியாது என்பதே ஒரு முஸ்லிமின் நம்பிக்கையாக இருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக நாம் கப்ரில் உள்ளவர்களிடம் பிராத்தித்தால் அதை அவர்களால் செவிமடுக்கவும் உணரவும் முடியும் என்று மேற்கூறும் பாடல் கூறுகின்றது,
மனமுறண்டாக சொல்லப்படுவதை ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொண்டாலும், அவர்களால் நமக்கு எந்த உதவியையும் கியாம நாள் வரை செய்ய முடியாது. அவர்களால் அல்லாஹ்வின் அற்ப படைப்பாகிய ஒரு ஈயைக்கூட படைக்க முடியாது, அவர்களிடமிருந்து “ஈ” எதையாவது எடுத்துச் சென்றால் அதை அவர்களால் மீட்டவும் முடியாது, இப்படிப்பட்ட இயலாதவர்களிடம் கேட்பவர்களைவிட முட்டாள் யாரும் இருக்க முடியமா? போன்ற பல உதாரணங்களைக்கூறி சிறுவர்களும் விளங்குமளவிற்கு அல்லாஹ் திருமறையில் தெளிவுபடுத்தியிருக்கின்றான். அல்லாஹ்வின் நல்லடியார்களிடம் பிரார்த்தித்து அல்லாஹ்விற்கு ஷிர்க் வைத்ததையும் அந்த நல்லடியார்கள் நாளை மறுமையில் மறுத்துவிடுவார்கள் என்ற கருத்துக்களை பொதிந்துள்ள எத்தனையோ இறை வசனங்களுக்கு இந்தப் பாடல் முரண்படவில்லையா?
அல்லாஹ் அல்லாதவர்களால் எதையும் தடுக்கவும் முடியாது அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்
1.    வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்; ”அல்லாஹ் தான்!” என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்; (நபியே!) நீர் சொல்வீராக ”அல்லாஹ் எனக்கு ஏதேனும் ஒரு கெடுதி செய்ய நாடினால் நீங்கள் (பிரார்த்தித்து) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவை அக்கெடுதியை நீக்கிவிட முடியுமா? அல்லது அவன் எனக்கு ரஹ்மத் செய்ய நாடினால்; அவனுடைய (அந்த) ரஹ்மத்தை அவை தடுத்துவிட முடியுமா? என்பதை நீங்கள் கவனித்தீர்களா?” (நபியே!) மேலும் நீர் கூறுவீராக ”அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; உறுதியாக நம்பிக்கை வைப்போரெல்லாம், அவன் மீதே உறுதியாக நம்பிக்கை கொள்ளல் வேண்டும்.” 39: 38
2. கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிக்க குறைவே யாகும். 27:62
3. அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது. அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் – அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான். 10:107
4. ”(நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தை ஏற்படுத்திவிட்டால் அவனைத் தவிர (வேறு யாரும்) அதை நீக்க முடியாது. இன்னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கிவிட்டால், (அதை எவரும் தடுக்க முடியாது.) அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். 6:17
5. அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது. அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் – அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான். 10:107
விளக்கம்: அல்லாஹ் அல்லாதவர்களால் நாம் கேட்கும் ஒன்றை கொடுக்கவும் முடியாது அல்லது நமக்கு வரும் எந்த ஆபத்தையும் அவர்களால் தடுக்கவும் முடியாது என்பதை மேற்கூறப்பட்ட இறைவசனம் தெளிவுபடுத்துகின்றது. இதற்கு மாறாக நமது சமுதாயத்திடம் அதுவும் பல பெண்களிடம் மொழியப்படக்கூடிய ஒரு வார்த்தைதான்  ‘யா முஹ்யித்தீன்’ என்னும் வார்த்தை. அதாவது தன் கையில் இருக்கும் ஒரு பொருள் விழும்போது அல்லது கால்வழுக்கி கீழே விழப்போகும் போது அல்லது தனது பிள்ளை விழப்போகும் போது அல்லது இது போன்ற நிலைகள் ஏற்படும் போது திடீரென்று ‘யா முஹ்யித்தீன்’ என்று கூறிவிடுவார்கள். இந்த வார்த்தையின் கருத்து என்னவென்றால், எங்களுக்கு நிகழப்போகும் இந்த ஆபத்திலிருந்து முஹ்யித்தீன் என்றழைக்கப்படும் பக்தாதில் அடங்கப்பட்டிருக்கும் அப்துல் காதிர் ஜைலானி அவர்களே! எங்களை பாதுகாத்திடுங்கள் என்பதாகும். பக்தாதில் அடங்கப்பட்டிருக்கும் அல்லாஹ்வின் நல்லடியாரான அப்துல் காதிர் ஜெய்லானி(ரஹ்) அவர்கள் நாம் இவ்வளவு தூரத்திலிருந்து பலர் பல மொழிகளில் அழைப்பதை அவர்களால் கேட்க முடியுமா?
இப்படி அல்லாஹ்விடத்தில் மாத்திரமே பிரார்த்திக்க வேண்டும், அவன் அல்லாதவர்களிடம் பிரார்த்திக்கக்கூடாது, அல்லாஹ் அல்லாதவர்களிடம் நாம் பிரார்த்தித்து கேட்டாலும், அவர்களால் எந்த நன்மையையும் நமக்குச் செய்யவும் முடியாது, ஒரு ஆபத்திலிருந்து நம்மை அவர்களால் தடுக்கவும் முடியாது என்ற தெளிவான இறைவசனங்களையும் நபிமொழிகளையும் நாம் கேட்டபின்பும் முற்றிலும் இத்தனை வசனங்களுடனும் நபிமொழிகளுடனும் மோதக்கூடிய பாடல்களை, எப்படி இஸ்லாமிய பாடல் என்று கேட்பது?
இப்படியான நம்பிக்கை ஒரு முஸ்லிமிடம் இருக்கத்தான் முடியுமா? அப்படி இருந்தால் அவருடைய ஈமானின் நிலை என்ன? இந்த நம்பிக்கை மேற்கூறப்பட்ட இறைவசனங்களுடன் மோதுகின்றதே? இன்னும் இதுபோன்றே பல கேள்விகளுக்கு உள்ளாகின்றதே? மேற்கூறப்பட்ட இறைவசனங்களும் நபிமொழிகளும் இப்படிப்பட்டவர்களுக்கு விடை தருகின்றது.
மிகப் பழைய பாடல்கள் தான் இவ்வாறு இருக்கிறதென்றால், சமீப காலத்தில் பாடப்பட்ட பாடல்களிலும் கூட இணைவைக்கும் கருத்துக்கள் காணப்படுவதை உணரலாம்.
உதாரணமாக.  ‘சஞ்சலம் தீர்க்கும் எங்கள் கஞ்சஷவாயி நாகூரா’  என்றொரு பாடல் பாடப்படுகிறது. சஞ்சலம் என்றால் துன்பம் துயரம் என்று பொருள். சஞ்சலம் தீர்ப்பவன் அல்லாஹ்வை   தவிர வேறெவராலும் முடியாது.
கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவேயாகும். (அல்குர்ஆன் 27:62)
உயிரோடு உள்ள போது கூறினாலும் மனிதர் என்ற ரீதியில் தம்மால் இயன்ற அளவுக்கு சஞ்சலம் தீர்த்து வைக்க சாத்தியமுண்டு. அவர் இறந்து போன பின் எப்படி சஞ்சலம் தீர்த்து வைப்பார். அவர் இப்போதும் சஞ்சலம் தீர்த்து வைப்பார் என்று எண்ணிப் பாடினால், அல்லது பாடக் கேட்டால் அவருக்கு இறந்த பின்பும் அந்த ஆற்றல் உள்ளது என்ற நம்பிக்கை நமக்கு இருப்பதாகப் பொருள்.
அவ்வாறு என்றும் சஞ்சலம் தீர்ப்பவன் எப்போதும் உயிரோடுள்ள எல்லா ஆற்றலும் பெற்ற அல்லாஹ்வின், அந்தத் தன்மை நாகூராருக்கு இருப்பதாக நம்புவது இறைவனுக்கு இணை வைக்கும் மாபாதகச் செயலன்றி வேறென்ன?
இன்னும் இது போன்ற பல ஷிர்க்கான வார்த்தைகள் உள்ள பாடல்களை, இஸ்லாமிய பாடல்கள் என்கிற பேரில் நாம் கேட்டுக் கொண்டும், பாடிக் கொண்டும் தான் இருக்கின்றோம்.
இவ்வாறு இஸ்லாம் தடுக்கும் சமாதி வழிபாட்டை ஆதரித்து, தமிழகத்தில் உள்ள அனைத்து சமாதிகளையும் பெரிய ஒரு பட்டியலிட்டு, அவைகளை தரிசிக்கச் சொல்லி படிக்கின்றார், இன்னுமொரு ஷேக் அப்துல்லாஹ் என்னும் பாடகர்,  இஸ்லாம் தடுக்கும் சமாதி வழிபாட்டை ஆர்வமூட்டக்கூடிய பாடல்,  இஸ்லாமிய கீதமாகுமா? சிந்தியுங்கள், இஸ்லாமிய நெஞ்சங்களே!
இதே போன்று நூறு மஸ்அலா என்றும் விறகு வெட்டியார் கதை சூபித்துவத்தையும் இந்து மதக் கொள்கையாகிய ஹமோ வஸ்து – எல்லாம் அவனே என்ற -  மஸ்தான்மார்களின் பாடல்களையும் நாம் இஸ்லாமிய லேபில்களில் கேட்டுக் கொண்டிருக்கின்றோம், ஆகவே இனிமேலாவது இப்படிப்பட்ட விஷயங்களில் நாம் விழிப்பாக இருப்போமாக.!
தமிழில் இப்பாடல்கள் இருப்பதால் அதிலுள்ள தவறுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. அரபியில் சில பாடல்கள் நம்மவர்களால் மௌவிது என்ற பெயரில் இயற்றப்பட்டு பாடப்படுகின்றன. அவற்றில் இதை விட படுபயங்கரமான நச்சுக்கருத்துக்கள் இருக்கின்றன என்பதை நம் யாருக்கும் தெரியாத ஒன்றல்ல. அதாவது அல்லாஹ்வின் தன்மைகளை    நபி(ஸல்) அவர்களுக்கும், வலிமார்களுக்கும் பங்கு வைத்துக் கொடுக்கும் பாடல்களாகும். இவைகள் நமது வீடுகளில் வணக்கம்? என்கிற பெயரில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. அவைகளில் சில வரிகளை உங்கள் முன் தருகின்றோம்.
நாம் கூறப்போகும் மவ்லிதுப் பாடல்கள் எத்தனை  குர்ஆன் வசனங்களுடனும் ஹதீதுகளுடனும் மோதுகின்றது என்பதைப் பாருங்கள்.
شرف الأنام مولد – المخاطب هو النبي صلى الله عليه وسلم
ஷரஃபுல் அனாம் மவ்லிது – இதில் அழைக்கப்படுபவர்கள் நபி(ஸல்) அவர்கள்.
عَبْدُكَ الْمِسْكِيْنُ يَرْجُو فَضْلَكَ الْجَمَّ الْغَفِيْرَ
فِيْكَ قَدْ أَحْسَنْتُ ظَنِّيْ بَشِيْرٌ ياَ نَذِيْرُ
(நான்) உங்களின் ஏழ்மையான அடியான் உங்களின் அருளையும் பெரும் பாவ மன்னிப்பையும் நாடி உங்களிடம் வந்திருக்கின்றேன். சுவர்க்கத்தை கொண்டு நன்மாராயம் சொல்பவரே! நரகத்தை விட்டும் எச்சரிக்கை செய்பவரே! உங்களைப்பற்றி நான் நல் எண்ணம் வைத்திருக்கின்றேன்.
فَأَغِثْنِيْ وَآجِرْنِيْ يَا مُجِيْرُ مِنَ السَّعِيْرِ
يَاغَيْثِيْ يَا مَلاَذِيْ فِيْ مُلِمَّاتِ الْأُمُوْرِ
நரகத்திலிருந்து பாதுகாப்பவரே? கஷ்டமான சூழ்நிலைகளில் எனக்கு உதவுவரே? என் உறைவிடமே? எனக்கு உதவிடுங்கள், என்னை நரகத்திலிருந்து பாதுகாத்திடுங்கள்.
منقوص مولد – المخاطب هو النبي صلى الله عليه وسلم
மன்கூசு மவ்லிது – இதில் அழைக்கப்படுபவர்கள் நபி(ஸல்) அவர்கள்.
إِرْتَكَبْتُ عَلَى الْخَطَا غَيْرَ حَصْرٍ وَعَدَدٍ
لَكَ أَشْكُوْ فِيْهِ يَا سَيِّدِيْ خَيْرَ النَّبِيِّ
அளவிடமுடியாத, கணக்கின்றி நான் பெரும் பாவம் செய்திருக்கின்றேன். நபிமார்களில் சிறந்த என் தலைவரே! அதுபற்றி உங்களிடம் நான் முறையிட வந்திருக்கின்றேன்.
இந்தப் பாடல்களுடன் முறன்படக்கூடிய திருமறை குர்ஆன் வசனங்கள்.
1. மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்களேயானால், அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள். 3:135
2. ”என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. 39:53
3. (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ”நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. 2:186
விளக்கம்: நமது நாடுகளில் தர்ஹாவின் பக்கம் படையெடுக்கும் கூட்டங்கள் முந்தைய காலத்தை விட குறைந்திருந்தாலும் இன்னமும் அப்படிப்பட்ட மக்கள் அதிகமாக இருக்கத்தான் செய்கின்றார்கள். இவர்கள் தர்ஹாக்களுக்குச் செல்வதின் நோக்கங்களில் ஒன்று தங்களின் பாவமன்னிப்பை அந்த நல்லடியார்கள் மூலம் கேட்டுக் கொள்வதற்காகத்தான். குர்ஆனிலோ அல்லது ஹதீதிலோ இப்படி இடைத்தரகர்களை வைத்து தங்களின் பாவங்களுக்கு பிழை பொறுப்பு கேட்கும்படி கூறப்படவில்லை. மாறாக எப்படிப்பட்ட தவறுகள் செய்திருந்தாலும், அல்லாஹ்விடத்தில் மாத்திரம்தான், எவ்வித தரகர்களின்றி கேட்கும் படி, திருமறைக் குர்ஆனும் ஹதீதும் தெளிவு படுத்துகின்றது. நமக்கு மிகவும் சமீபத்தில் இருக்கக்கூடிய நித்திய ஜீவனை விட்டுவிட்டு, மரணித்த, பல மைல்கள் தூரத்தில், மண்ணறைக்குள் அடங்கப்பட்டிருக்கும் ஒரு நல்லடியாரை அழைத்து, பிழை பொறுப்பு தேடுவது புத்திசாலித் தனமாகுமா? கப்ரில் அடங்கப்பட்டிருப்பவர் நல்லடியாராக இருந்தாலே இந்த நிலையென்றால், அங்கு அடங்கப்பட்டிருப்பவர் யாரென்றே தெரியாமல் பிரார்த்திப்பது எவ்வளவு அறியாமை! ஆனால் மேல் கூறப்பட்ட பாடல்களில் நபி(ஸல்) அவர்களிடத்தில் பாவ மன்னிப்பு கேட்கும்படி ஆர்வமூட்டப்படுகின்றது. இந்தப்பாடல்கள் மேல் கூறப்பட்ட எத்தனை வசனங்களுடன் மோதுகின்றது? சிந்தித்துப் பாருங்கள்.
القائل محي الدين الشيخ عبد القادر جيلاني رحمه الله حسب زعمهم
இந்த பைத்தை எழுதியவர்களின் நம்பிக்கையின் அடிப்படையில், இங்கு கூறப்படுபவர், முஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜெய்லானி(ரஹ்) அவர்கள்.
وَأَعْلَمُ عِلْمَ اللهِ أُحْصِيْ حُرُوْفَهُ     وَأَعْلَمُ مَوْجَ الْبَحْرِ كَمْ هُوَ مَوْجَةً
அல்லாஹ்வின் அறிவையும் அவனுடைய அறிவின் எழுத்துக்களையும் நான் அறிவேன், கடலில் எழும் அலைகள் எத்தனை அலைகள் என்பதும் எனக்குத் தெரியும்.
இந்தப்பாடலுக்கு முறன்படும் குர்ஆன் வசனங்கள்.
(இன்னும்) நீர் கூறுவீராக ”அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்; (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.” 27:65
(நபியே!) நீர் கூறும்; ”அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நம்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது – நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.” 7:188
‘அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை; மறைவானவற்றை நான் அறிந்தவனுமல்லன், நிச்சயமாக நான் ஒரு மலக்கு என்றும் நான் கூறவில்லை; எவர்களை உங்களுடைய கண்கள் இழிவாக நோக்குகின்றனவோ, அவர்களுக்கு அல்லாஹ் யாதொரு நன்மையும் அளிக்கமாட்டான் என்றும் நான் கூறவில்லை; அவர்களின் இதயங்களில் உள்ளதை அல்லாஹ்வே நன்கு அறிந்தவன் (இவ்வுண்மைகளுக்கு மாறாக நான் எதுவும் செய்தால்) நிச்சயமாக நானும் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விடுவேன்’ (என்றும் கூறினார்). 11:31
விளக்கம்: மறைவான அறிவு அல்லாஹுவிற்கு மாத்திரம்தான் உரியது, நபி(ஸல்) அவர்களுக்குக்கூட அது கிடையாது என்று திருமறை குர்ஆன் கூறும்போது, உலகத்திலுள்ள மற்ற யாருக்காவது அந்த அல்லாஹுவின் பண்பு இருக்க முடியுமா? இது அப்பட்டமான பொய்யும், அல்லாஹுவிற்கு இணைவைக்கும் செயலுமாகும்..
இன்னும் கேளுங்கள் அபத்தங்களை:
يَا سَيِّدَ السَّادَاتِ جِئْتُكَ قَاصِدًا أَرْجُوْ حِمَاكَ فَلاَ تُخَيِّبْ مَقْصَدِيْ
தலைவர்களுக்கெல்லாம் தலைவரே! உங்களின் பாதுகாப்பை எதிர்பார்த்தவனாக உங்களை நாடி நான் வந்திருக்கின்றேன். என் நோக்கத்தை (நிறைவேற்றாமல்) என்னை  நஷ்டவாளியாக்கிவிட வேண்டாம்.
قَدْ حَلَّ بِيْ مَا قَدْ عَلِمْتَ مِنَ الْأَذَى وَالظُّلْمِ وَالضُّعْفِ الشَّدِيْدِ فَاسْعَدْ
எனக்கு ஏற்பட்டிருக்கும் கடுமையான பலவீனம், அநியாயம், நோவினை (இவைகள் அனைத்தையும்) நிச்சயம் நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள், ஆகவே என்னை சந்தோஷப்படுத்துங்கள்.
وَمَنْ يُنَادِيْ إِسْمِيْ أَلْفًا بِخَلْوَتِهِ عَزْمًا بِهِمَّتِهِ   صَرْمًا لِعَفْوَتِهِ أَجَبْتُهُ مُسْرِعًا مِنْ أَجْلِ دَعْوَتِهِ
மன உறுதியுடன் என் பாவமன்னிப்பை நம்பியவராக தனிமையில் இருந்து  என் பெயரை யார் ஆயிரம் முறை அழைக்கின்றாரோ, அவரின் அழைப்பால் நான் வேகமாக வந்து அவருக்கு விடையளிப்பேன்.
فَلْيَدْعُ يَا عَبْدَ الْقَادِرِ مُحْيُ الدِّيْنِ بَعْدَ الصَّلاَةِ اثْنَتَيْ عَشْرَةَ مِنْ رَكْعَةٍ
பனிரெண்டு ரக்அத் தொழுத பின் அப்துல் காதிர் முஹ்யுத்தீன் என்று அழைக்கட்டும்.
مَعَ الْفَوَائِدِ وَالْإِخْلاَصِ مَعَ خُضْعَةٍ يَا غَوْثَ الْأَعْظَمِ عَبْدَ الْقَادِرِ السُّرْعَةَ
பயபக்தியோடு சூரத்துல் ஃபாத்திஹாவுடன் சூரத்துல் இக்லாஸையும் ஓதி    கண்ணியத்திற்குரிய அப்துல் காதிர் என்னும் உதவியாளரே! வேகமாக வாருங்கள்.
يَا سَيِّدِيْ أُحْضُرْنِيْ يَامُحْيُ الدِّيْنِ
என் தலைவரே! மார்கத்தை உயிர்பிப்பவரே! என்னிடம் சமூகம் அளியுங்கள்.
يَا سَيِّدِيْ عَبْدُ الْقَادِرِ يَا جَيْلاَنِيْ بِمَدَدِكَ وَغِيَاثِكَ أَدْرِكْنِيْ
என் தலைவரே! அப்துல் காதிர் ஜெய்லானியே! உங்களின் உதவியாலும் ஒத்தாசையாலும் என்னை அடைந்து விடுங்கள்.
يا غوث الأعظم عبد القادر السرعة
அப்துல் காதிரு என்னும் பெரும் உதவியாளரே வேகமாக வாருங்கள்.
இந்தப் பாடல்களுக்கு முறன்படும் திருமறை வசனங்கள்:
கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிக்க குறைவே யாகும். 27:62
விளக்கம் : கஷ்டத்தில் அகப்பட்டவர்கள் அந்த கஷ்டத்திலிருந்து விடுவிப்பு பெறுவதற்காக அல்லாஹுவைத் தவிர வேறு யாரையும் நாம் அழைக்கக்கூடாது, அப்படி அழைத்தால் அவர்களால் அந்த உதவியை செய்யவும் முடியாது, அல்லாஹுவைத் தவிர அப்படி எந்த ஒரு சக்தியாவது இந்த உலகத்தில் உண்டா? இல்லை என்று திட்டமாக அல்லாஹ் கூறியிருக்கும் போது, இந்தப் பாடல் ஒரு வலியுள்ளாவின் பெயரைச் சொல்லி, அவரும் இருக்கின்றார், அவரிடமும் கேட்கலாம் அவரும் நமது தேவையை நிறைவேற்றி கொடுப்பார் என்று கூறி, திருமறை குர்ஆனுக்கு முறன்படவில்லையா? இது அல்லாஹுவிற்கு இணைவைக்கும் செயல் இல்லையா?
இன்னும் இது போன்ற பாடல்கள் மவ்லிது என்கிற பேரில் நமது வீடுகளிலும் இறை இல்லங்களிலும் கொஞ்சம்கூட அல்லாஹுவின் பயம் இல்லாமல் பாடப்படுகின்றது, அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹுவை அஞ்சுவீர்களாக! இப்படிப்பட்ட அல்லாஹ்விற்கு இணையான வார்த்தைகளை கூறக்கூடிய பாடல்களை முற்றிலும் தவிர்ப்பீர்களாக? நீங்கள் இதற்கு முன்பு, இந்தப்பாடல்களை கேட்டு அல்லாஹ்விற்கு செய்த இணைவைப்பிற்காக பாவமன்னிப்புத் தேடுங்கள். அல்லாஹ் உங்களின் பாவங்களை மன்னிப்பான்.
இன்னும் ஒரு சில பாடலைக் எடுத்துக்காட்டி, மவ்லிதுகள் இஸ்லாதிற்கு எவ்வளவு முறன்பட்டிருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
مَلَكْتُ بِلاَدَ اللهِ شَرْقًا وَمَغْرِبًا وَإِنْ شِئْتُ أَفْنَيْتُ الْأَنَامَ بِلَحْظَةٍ
கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் உள்ள அல்லாஹ்வின் ஊர்கள் என் ஆதிக்கத்தில் இருக்கின்றது. நான் நாடினால் ஒரு நிமிடத்திலேயே உலகத்தையே அழித்து விடுவேன்.
وَلَوْلاَ رَسُوْلُ اللهِ بِالْعَهْدِ سَابِقًا لَأَغْلَقْتُ بُنْيَانَ الْجَحِيْمِ بِعَظْمَتِيْ
அல்லாஹ்வின் தூதரின் உடன்படிக்கை முந்தவில்லையென்றால் என் வல்லமையால் நரகத்தின் கட்டிடத்தையே நான் மூடியிருப்பேன்.
أَنَا الْوَاجِدُ الْفَرْدُ الْكَبِيْرُ لِذَاتِهِ أَنَا الْوَاصِفُ الْمَوْصُوْفُ سَيِّدُ الطَّرِيْقَةِ
நான்தான் பெரும் படைப்பாகிய ஒரே ஒரு படைப்பாகும், நான்தான் தரீக்காக்களின் தலைவராகிய வர்ணிக்கக்கூடியவரும் வர்ணிக்கப்பட்டவருமாகும்.
ضَرِيْحِيْ بَيْتُ اللهِ مَنْ جَاءَ زَارَهُ بِهَرْوَلَةٍ تُحْظَى بِعِزٍّ وَرِفْعَةٍ
என்னுடைய சமாதி அல்லாஹ்வின் வீடாகும், அதை சந்திக்க வேகமாக யார் வருகின்றாரோ, அவருக்கு கண்ணியமும் உயர்வும் வழங்கப்படும்.
وَكُلُّ بِلاَدُ اللهِ مُلْكِيْ حَقِيْقَةً وَأَقْطَابُهَا مِنْ تَحْتِ حُكْمِيْ وَطَاعَتِيْ
அல்லாஹ் படைத்த எல்லா தேசமும் உண்மையில் என் ஆதிக்கத்தில்தான் இருக்கின்றது. உலகத்தின் அச்சாணி என் ஆதிக்கத்திலும் எனக்கு அடிபணிந்துதான் இருக்கின்றது.
وَقَالُوْا لِيْ يَا هَذَا تَرَكْتَ صَلاَتَكَ وَلَمْ يَعْلَمُوْا أَنِّيْ أُصَلِّيْ بِمَكَّةَ
ஓ இன்னவரே! ஏன் தொழுகையை விட்டீர் என என்னை அவர்கள் கேட்கின்றார்கள். ஆனால் நான் மக்காவில் தொழுதேன் என்பது அவர்களுக்கு தெரியாதோ!
حُجُّوْا إِلَيَّ فَدَارِيْ كَعْبَةٌ نُصِبَتْ وَصَاحِبُ الْبَيْتِ عِنْدِيْ وَالْحِمَى حَرَمِيْ
என்னிடம் வந்து ஹஜ் கடமையை நிறைவேற்றுங்கள். என் சமாதியே நஷ்டப்பட்ட கஃபாவாகும், வீட்டுக்குரியவன் (இறைவன்) என்னிடத்தில் இருக்கின்றான்.
மேலே சொல்லப்பட்ட பாடல்கள் எவ்வளவு பொய்யையும், தெட்டத்தெளிவாக இஸ்லாத்திற்கு மாற்றமான கருத்துக்களையும் கூறியிருக்கின்றது என்பதை மேலதிக விளக்கம் கொடுக்காமலேயே நீங்கள் விளங்கியிருப்பீர்கள் என்பதால் உங்களிடத்திலேயே அதை விட்டுவிடுகின்றேன்,. அல்லாஹ் மிக நன்கறிந்தவன்.
இஸ்லாத்தில் இசை கேட்பது தடுக்கப்பட்டிருக்கின்றது என்பதற்குரிய ஆதாரத்தை மாத்திரம் கூறி இந்த ஆய்வை முடித்துக் கொள்கின்றேன்.
(இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் – அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு. 31:6
இந்த திருவசனத்தில் வந்திருக்கும், வீணான பேச்சுக்கள் என்பதற்கு, அது இசைக்கருவிகள்தான் என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
என்னுடைய உம்மத்தில் சில கூட்டத்தினர் தோன்றுவார்கள், அவர்கள் விபச்சாரத்தையும் பாட்டையும் மதுவையும் இசைக்கருவிகளையும் ஹலால் (ஆகுமானதாக) ஆக்குவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
மேல் கூறப்பட்ட ஆதாரத்தின் அடிப்படையில், இசை கேட்பது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது என்பது தெளிவாகின்றது. ஆகவே மேல் கூறப்பட்ட நிபந்தனைகளுக்குட்பட்ட (தவறான கருத்தில்லாத, ஷிர்க்கில்லாத, இசை இல்லாத) பாடல்களை கேட்கலாம், அது அல்லாத பாடல்களை கேட்பது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதாகும். அல்லாஹ் மிக நன்கறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக