.• கருத்து மோதலுக்குள் சர்வதேச சமூகம்,
• வாழ்க்கை நெருக்கடிகளுக்குள் பலஸ்தீன மக்கள்.
குறித்த வழக்கில் இஸ்ரேலிய அரசாங்கத்தை பிரதிவாதிகளாகவும், பலஸ்தீன அதிகாரசபையை பிரதிவாதிகளாகவும் மேம்போக்காகக் கூறிவிடலாம். இந்தக் கூற்று பிரச்சனையின் யதார்த்ததை பரிபூரணமாக விளங்கிக் கொள்வதற்கு தடையாக அமைவதுடன், அதன் ஆழத்தை குறைத்து மதிப்பிடுவதாக அமைந்து விடும் என்பதில் சந்தேகமில்லை.
சர்ச்சைக்குரியதாகியிருக்கும் விவகாரம், இஸ்ரேல் மேற்குக் கரையில் அமைத்துவரும் தடுப்புச் சுவராகும். கொங்கிரீட் சுவர்களையும், உடலில் பட்டால் காயங்களை ஏற்படுத்தக் கூடிய ஒரு வகை முட்கம்பிகளையும் கொண்டதாக தடுப்புச்சுவர் அமைக்கப்படுகிறது. இது முழுமைபெறும் பட்சத்தில் 700 கிலோமீற்றர் நீளமுடையதாக அமையும்.
இந்தத் தடுப்புச்சுவர் சர்வதேச சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது தானா என்பது நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் சாராம்சம். கடந்த 23 ஆம் திகதி ஆரம்பித்த விசாரணைகள் தொடர்ந்து மூன்று நாட்கள் நீடித்தன. இந்த விசாரணையில் 44 நாடுகள் பங்கேற்றன. உலக சனத்தொகையின் 20 சதவீத மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இஸ்லாமிய மாநாட்டு ஸ்தாபனம், அரேபிய லீக் என்பன தமது கண்டனக் குரல்களை வெளிப்படுத்தின. ஐக்கிய நாடுகள் சபையும் தமது கருத்துக்களை எழுத்துவடிவில் அனுப்பி வைத்திருந்தது. பிரச்சனையின் மூலகர்த்தாவான இஸ்ரேல், விசாரணைகளைப் பகிஷ்கரித்தது. எழுத்துமூல சமர்ப்பணங்களை மேற்கொண்டிருந்த இஸ்ரேலிய அரசாங்கம் இதுவொரு பிரசார தந்திரமாகும் என்று குற்றம்சாட்டியிருந்தது. தடுப்புச்சுவர் தொடர்பாக கண்டனக் குரல்களை எழுப்பிய அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் கூட விசாரணைகளில் பங்கேற்பதைத் தவிர்த்தன.
மேற்குக்கரை தடுப்புச்சுவர் பற்றி மூன்று வகையான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. குடியிருப்புப் பிரதேசங்களை ஊடறுத்துச் செல்லும் இந்த அமைப்பு சட்டவிரோதமானது என்று பிரகடனப்படுத்த வேண்டுமென்பது பலஸ்தீனர்களின் வாதமாகும். தடுப்புச்சுவர் சுயபாதுகாப்புக்கு முக்கியமானதென்பது இஸ்ரேலின் தரப்பில் முன்வைக்கப்படும் நியாயமாக இருக்கின்றது. தடுப்புச்சுவர் அமையும் விதம் எவ்வாறானதாக இருந்தாலும், இது போன்ற அரசியல் விவகாரங்களில் மூக்கை நுழைப்பது சர்வதேச நீதிமன்றத்திற்கு பொறுத்தமான நடவடிக்கையல்ல என்று மேற்குலக நாடுகள் வாதிடுகின்றன.
1967 ஆம் நடந்த யுத்தத்தில் இஸ்ரேல் கைப்பற்றிய நிலப்பரப்பு, குடியிருப்புப் பிரதேசமாகமாகவே கருதப்பட வேண்டுமென பலஸ்தீனர்கள் வாதிடுகிறார்கள். சர்வதேச சட்டங்களுக்கு அமைய, தமது நிலப்பரப்புடன் அதனை இணைத்துக் கொள்ள எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இஸ்ரேலுக்கு இடமளிக்கக் கூடாதென பலஸ்தீன பிரஜைகள் வலியுறுத்துகிறார்கள். மேற்குக்கரை பிராந்தியத்திற்குள் தடுப்புச்சுவர் அமைக்கப்படும்போது, அதன் மூலம் சுற்றிவளைக்கப்படும் பிரதேசம் இஸ்ரேலுக்கு சொந்தமானதாகிவிடும். எதிர்கால பலஸ்தீன இராச்சியத்தின் தலைநகராக இருக்க வேண்டுமென தாம்; விரும்புகின்ற கிழக்கு ஜெருசலேம் பகுதியும், இஸ்ரேலுக்குள் விழுங்கப்பட்டுவிடும் என்று பலஸ்தீன பிரஜைகள் அஞ்சுகிறார்கள்.
ஆனால், தாம் கைப்பற்றிய நிலப்பரப்பை குடியிருப்புப் பகுதியாக கருதுவதற்கு இஸ்ரேல் மறுக்கிறது. 1967 ஆம் ஆண்டு காலப்பகுதியில், இந்தப் பகுதி ஜோர்தானின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், அந்நாட்டு அரசாங்கம் அதற்கான உரிமையை பின்னர் கைவிட்டதாகவும்; இஸ்ரேல் கூறுகிறது. இத்தகைய பின்னணியில், குறித்த பிரதேசம் யாருக்கு சொந்தமானது என்பது தீர்மானிக்கப்படாத விடயமாகவே இருப்பதால், ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனங்களை கடுமையாக அமுல்படுத்த முடியாது எனவும் இஸ்ரேல் வாதிடுகிறது. தடுப்புச்சுவர், ஒரு சில இடங்களில், 1967 இல் வரையறுக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டிச் செல்வதை ஏற்றுக் கொள்ளும் இஸ்ரேலிய அரசாங்கம், தமது சொந்தத் தேவைகளுக்காகவே, அவ்வாறு நிர்மாணிக்க நேர்ந்தாக வலியுறுத்தியிருக்கிறது. சுயபாதுகாப்புக்காக நிர்மாணிக்கப்படும் அமைப்பொன்றை அரசியல் விவகாரமாக மாற்றி பிரச்சனையைக் கிளப்புவதாகவும் இஸ்ரேலிய அரசாங்கம் பலஸ்தீனர்களைக் குற்றம் சாட்டுகிறது. சர்வதேச நீதிமன்றத்திற்கு இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டு இடம்பெற்றிருக்கிறது.
இரண்டு நாடுகள் சம்பந்தப்பட்ட அரசியல் பிரச்சனையை சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வது தவறான விடயமாகும் ஐரோப்பிய ஒன்றியம் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்கிறது. இந்தத் தவறினைக் கண்டிக்கும் விதமாக கடந்த ஒக்டோபர் மாதம் பாதுகாப்புச் சபையில் ஒரு தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்ட சமயம், அதனை ஆதரித்து வாக்களித்த விடயத்தையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஜக் ஸ்ட்ரோ வலியுறுத்தியிருக்கிறார். இருதரப்புக்களும் சம்மதம் தெரிவிக்காத நிலையில் நடத்தப்படும் விசாரணைகளில் நியாயமில்லையெனவும் அவர் கூறியிருக்கிறார். அமெரிக்கா அதனைவிட கடுமையான அறிவித்தலை மேற்கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்திற்கு சம்பந்தமே இல்லையென ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.
சர்வதேச நீதிமன்றத்தின் பணிகள் இரண்டு வகைப்பட்டவை. சர்ச்சைகளை விசாரித்து தீர்ப்பளிப்பது அவற்றில் ஒன்று. ஆனால், சம்பந்தப்பட்ட நாடுகள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் கேட்டுக் கொள்ளும் பட்சத்தில் ஆலோசனை ரீதியான கருத்துக்களை வழங்குவது அதன் இரண்டாவது பணியாகும். ஆனால், சர்வதேச நீதிமன்றத்தின் கடந்த கால வரலாற்றைப் பார்க்கும்போது, அதன் தீர்ப்புகள் செல்வாக்கு உடையவை தானா என்ற கேள்வி எழுகிறது. 1984 ஆம் ஆண்டு, நிக்கரகுவா சம்பந்தப்பட்ட விசாரணையில் வழங்கப்பட்ட தீர்ப்பை உதாரணமாகக் கொள்ளலாம். அப்போதைய நிக்கரகுவா ஆட்சியாளர்கள், தமது நாட்டின் கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆதரவு தருவதாகக் கூறி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். ஆனால், அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரேகனின் பிரதிநிதிகள் விசாரணைகளில் இருந்து வெளிநடப்புச் செய்தார்கள். 1977 ஆம் ஆண்டு, பீகல் கால்வாய் சிலி நாட்டுக்கே சொந்தமானதென சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, ஆர்ஜென்ரினா அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாக சில மாதங்கள் செல்லலாம். அதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அவசியம் இஸ்ரேலுக்குக் கிடையாது. இருந்தபோதிலும், இந்தத் தீர்ப்பு சர்வதேச சமூகத்தின் கருத்தில் ஆதிக்கம் செலுத்தக் கூடியதாக அமையலாம். அதனூடாக இஸ்ரேலிய அரசாங்கத்தின் மீது தடைகளை விதிக்கக்கூடிய சூழல் உருவாகலாம்.
இத்தகைய பின்னணி தொடர்பாக இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு ஓரளவு அச்சம் தோன்றியிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. பெருமளவு பணத்தை கடனாக வழங்கப் போவதாக உறுதியளித்த அமெரிக்க அரசாங்கம், தமது உத்தரவாதங்களை வாபஸ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பின்னர் இஸ்ரேல் மேற்கொண்ட தீர்மானங்களும் முக்கியமானவை. ஆரம்ப திட்டத்தை மாற்றியமைத்து, தடுப்புச் சுவரின் நீளத்தைக் குறைக்கப் போவதாக இஸ்ரேலிய இராணுவ அதிகாரியொருவர் கூறியிருக்கிறார். ஜோர்தான் பள்ளத்தாக்கை ஊடறுத்துச் செல்லும் சுவரின் 20 கிலோமீற்றர் நீளமான பகுதியை நிர்மாணிக்கப் போவதில்லையெனவும், கல்கில்யா நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள 900 மீற்றர் நீளமான பகுதி அப்புறப்படுத்தப்படுமெனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்திருக்கிறார்.
சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணைகள் ப+ர்த்தியான தினத்தன்று பலஸ்தீனத் தரப்பிலும் முக்கியமான மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. பலஸ்தீனத் தலைவர் யசர் அரபாத் தமது பத்தா இயக்கத்தைச் சேர்ந்த அல்-அக்ஸா மாவீரர் படையணியின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தும் பிரிவுகளை கலைத்துவிடுவது பற்றி அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. இத்தகைய அமைப்புக்களைச் சேர்ந்தவர்களே மேற்குக் கரை பிரதேசத்தில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். மூன்றாண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய பலஸ்தீன எழுச்சியில் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 450 ஐத் தாண்டுவதும் குறிப்பிடத்தக்கது. குண்டுதாரிகளிடம் இருந்து தமது மக்களைப் பாதுகாப்பதற்கு தடுப்புச்சுவர் அவசியம் என்று இஸ்ரேலிய அரசாங்கம் கூறுகிறது.
பாதுகாப்புத் தடுப்புச் சுவர், அரசியல் நெருக்கடியாக இருக்கலாம். பல தசாப்தங்களாக பகைமை பூண்டிருக்கும் இரண்டு தரப்புக்களின் எதிர்கால இராச்சியங்களின் எல்லைகள் சம்பந்தப்பட்ட விடயமாகவும் இருக்கலாம். பலஸ்தீன கோரிக்கைகளை ஆதரிக்கும் முஸ்லிம் நாடுகள், வெளிப்படையாக கண்டித்தாலும் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு உதவி செய்யும் மேற்குலக நாடுகள் என்பவற்றுக்கு இடையிலான கௌரவப் பிரச்சனையாகக் கூட இருக்கலாம்.
ஆனால், குறித்த தடுப்புச்சுவர் சுமார் எட்டு இலட்சம் பலஸ்தீனர்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்திருக்கிறது. பாடசாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. வர்த்தக நிலையங்களை நடத்துவோர் வருவாயை இழந்திருக்கிறார்கள். ஒரு சில சமூகங்கள் இரண்டாக பிளவுபட்டிருக்கின்றன.
இந்த மக்களின் மனிதாபிமான நெருக்கடிகளை எந்த பஞ்சாயத்தில் தீர்க்க முடியும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக