வியாழன், 1 நவம்பர், 2012

உலகப் புகழ்பெற்ற லண்டன் நகரம்


டவர் பிரிட்ஜ்
லண்டன் இங்கிலாந்து நாட்டின் தலைநகரம். ஆம்! நம்மை ஆண்ட ஆங்கிலேயர் கப்பலேறிக் கையில் தராசு ஏந்தி வாணிபம் செய்ய இந்தியா புறப்பட்டது இங்கிருந்தான். லண்டன் இன்றும் பழமைமாறாமல் அதே வேளையில் புதுமைச் சிறப்புக்குன்றாமல் இருக்கிறது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தது எப்படி?

கி.பி.43ல் ரோமானியர்கள் கண்டு எடுத்த நகரம். இந்த லண்டன் நகரத்தைத் தலைநகரமாகக் கொண்டுதான் உலகம் முழுவதையும் ஆண்ட ஆங்கிலேயர் - சூரியன் தங்கள் ஆட்சியில் மறையாது என்று பெருமையுடன் கூறிக் கொண்டனர். வரலாற்றுப் புகழ்மிக்க லண்டனின் எல்லைகள் இன்று விரிவடைந்துவிட்டன.
ஆனாலும் மெட்ரோ ரயில், மாடி பஸ், திறந்த பஸ் என்று பல புதுமைகளைக் கண்டாலும் பழமையைத் தன்னுள் அடக்கிய ஒரு பகுதியைக் கொண்டு பழமையைப் பாதுகாக்கிறது.
லண்டன் நகரம், பிரிட்டன் அய்ரோப்பாக் கண்டத்தின் கலை இலக்கியம், பொருளாதாரம், பாரம்பரியச் சிறப்பு ஆகிய-வற்றின் அடையாளமாய்த் திகழ்கிறது. பலப்பல இனம், பண்பாடு, மொழி ஆகியன பேசும் மக்கள் சுமார் ஒன்றரைக் கோடிப்பேர் லண்டனில் வாழ்கிறார்கள்.
அதனால் லண்டன் கிட்டத்தட்ட முந்நூறு மொழிகளைப் பேசக் கேட்டுக்-கொண்டிருக்கிறது. உலகிலே எந்த நகரத்திலும் பாரிசாக இருந்தாலும், நியூயார்க் ஆக இருந்தாலும் இவ்வளவு மொழிகள் கேட்காது.
பல மலைகள் லண்டனைச் சூழ்ந்துள்ளன. லண்டன் நகரம் மற்ற நகரங்களைப் போல் இல்லாமல் வட்டவடிவமாக வளர்ந்துள்ளது. இவ்வளவு மொழி இன மக்கள் வாழும் நாட்டுப் பேருந்தைப் பார்த்தேன். வியப்பாக இருந்தது. குறைந்தது நம் கோயம்பேடு அளவிற்காவது கூட்டம் இருக்க வேண்டுமே, இல்லை.
வடபழனிப் பேருந்து நிலையம்போல் சிறியது. ஆனால் சுத்தமாக இருக்கிறது. சுமார் அறுநூறு சதுர கி.மீ. பரப்பளவு உள்ள நகரம் இது. லண்டனே அமைதியாகத்தானிருக்கிறது. இங்கிலாந்தின் மற்ற நகரங்களோடு ஒப்பிட்டால் லண்டன் மிகவும் அமைதி நிரம்பியது. இந்நகரத்தை அணைத்தபடியே தென்-மேற்கிலிருந்து கிழக்கு நோக்கித் தேம்ஸ் நதி ஓடுகிறது.
உலக அளவில் சிறந்த போக்குவரத்து மய்யமாகும். இலண்டனின் ஹீத்ரு விமான நிலையம் கிழக்கையும், மேற்கையும் இணைக்கும் பாலமாக விளங்குகிறது. உலகிலேயே அதிக அளவில் பன்னாட்டு விமானங்களையும், பயணிகளையும் சந்திக்-கும் இடம் லண்டன். லண்டனில் ஹீத்ரு தவிர இன்னும் ஏழு விமான  நிலையங்கள் இயங்குகின்றன.
லண்டனின் பாதாள ரயில் அய்ரோப்-பாவில் மிகவும் பழமையானது. நீளமானது. லண்டன் பேருந்துகள் நாள்தோறும் அறுபது லட்சம் பயணிகளை ஏற்றி இறக்குபவை.
மே. ஜூன், ஜூலை மாதங்கள் லண்டனில் கோடைக்காலமாகும். குளிர்காலங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது. லண்டனில் சராசரி வெப்பம் 13 முதல் இருபத்திரண்டு டிகிரி வரை.
இங்கிலாந்து நாடாளுமன்றம்
இங்கிலாந்து அரசை அய்க்கிய அரசு (United Kingdom) என்பர். அதன் அலுவலகங்கள் லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பகுதியில் உள்ள நாடாளுமன்றத்தைச் சுற்றி உள்ளன. இந்த நாடாளுமன்றம் உலக நாடாளுமன்றங்களின் தாய் எனச் சிறப்புடன் அழைக்கப்படுகிறது.
எண் பத்து டவுனிங் தெரு எனும் இங்கிலாந்து தலைமை அமைச்சர் இல்லம் இங்குதான் உள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகை எனப்படும் நாடாளுமன்றம் மணிக்கூண்டு கோபுரத்தை-யும், விக்டோரியா கோபுரத்தை-யும் உட்-கொண்டது. 1834ஆம் ஆண்டு லண்டன் தீ விபத்தில் அழிந்தது. முப்பது ஆண்டுகளில் பழைய வடிவத்தில் புதிய பொலிவுடன் உருவாக்கப்-பட்டது.
பிக்பென் கடிகாரம்
பிக் பென் கடிகாரம் லண்டன் நகரின் அடையாளங்களில் ஒன்று. முதலில் ஸ்டீபன் கோபுரம் என்றே அழைக்கப்பட்டது. இங்கு நிறுவப்பெற்ற பெரிய மணியின் அடையாள-மாக இந்தப் பெயர் பெற்றது. இன்றும் பிரிட்டனின் நாடாளுமன்றம் இரவில் நடந்தால் அதைக்குறிக்கும் விதமாகக் கோபுரத்தின் உச்சியில் விளக்கு எரியும்.
லண்டன் கோபுரம்
கி.பி.1070ல் லண்டன் கோபுரம் எதிரிகளிட-மிருந்து நகரத்தைக் காப்பாற்று-வதற்-காகக் கட்டப்பட்டது. இதில் வெள்ளைக் கற்களால் கட்டப்பட்ட வெள்ளைக் கோபுரம் உள்ளது. இதில் இருபது கோபுரங்கள் உள்ளன. இங்கே இங்கிலாந்து அரசர்களின் ஆடை, அணிகலன்கள், ஆயுதங்கள், இங்கிலந்து அரசு பலநாடுகளிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்ட்டுள்ளன.
பக்கிங்காம் அரண்மனை
லண்டன் சுற்றுலாத் தலங்களில் அதிக-மாகப் பயணிகள் வரும இடமிது. இங்கிலாந்து அரச குடும்பதிற்குச் சொந்தமான மாளிகை-களில் ஒன்றான இதன் ஒரு பகுதியில் பிரிட்டன் அரச குடும்பத்தினர் வாழ்கின்றனர். அரசி உள்ளே இருந்தால் இங்குக் கொடி பறக்கும். தினமும் இங்கே படை வீரர்கள் பணிமாற்றம் நிகழ்ச்சி காண்பதற்கு அழகாக இருக்கும். அதைக் காணத் தினமும் சுற்றுலாப் பயணிகள் வந்து குழுமுவார்கள்.
லண்டன் அய்
லண்ட-னின் புதுமைக்குச் சான்று லண்டன் அய் (லண்டனின் கண்) எனப்படும் மாபெரும் சக்கரம். புதிய நூற்றாண்டைச் சிறப்பிக்கும் விதமாக ஜூபிளி தோட்டத்தில் இலண்டன் விமான நிறுவனம் இதனை அமைத்துள்ளது. மூவாயிரம் டன் அடித்தளத்தில் ஆயிரத்து எழுநூறு டன் இரும்பினால் அமைக்கப்பட்ட இந்தச் சக்கரம் கட்டிமுடிக்க ஓர் ஆண்டு ஆகியது.
இதன் ஒவ்வொரு கூண்டிலும் இருபத்தைந்து பயணியர் அமர்ந்து சக்கரத்தில் சுற்றி வரலாம். ஒருமுறை சுற்றிவர முப்பது நிமிடங்கள் ஆகும். இந்தச் சக்கரத்தில் இருந்து லண்டன் மாநகரம் முழுமையும் கண்டு கொள்ளலாம்.
ஆல்பர்ட் நினைவு ஆலயம்
இங்கிலாந்து அரசு விக்-டோரியா ராணி 1876ஆம் ஆண்டு தம் கணவர் ஆல்பர்ட் நினைவாக இதனை அமைத்துள்ளார். நூற்று எழுபத்-தைந்தடி உயரமுள்ளது இந்தக் கட்டடம். இதில் பதினான்கு அடி உயரத்தில் ஆல்பர்ட் சிலை உள்ளது.
கான்வென்ட் தோட்டம்
சுற்றுலாப் பயணிகள் வந்து குவியும் இத்தோட்டத்தில் உணவுச் சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் நிறைந்துள்ளன. இதன் மய்யத்தில் கண்ணாடி மாளிகை உள்ளது. இது முன்னர் காய்-கறிகள், பழ அங்காடியாகும். அருகிலுள்ள தேவாலயத்திற்கு இங்கிருந்து காய்கறிகள், கனிகள் சென்றன.
பச்சைப் பசும்புல் நகரம்
எங்கு நோக்கிலும் விண்ணை-முட்டும் கட்டடங்கள் இருப்பதால் லண்டன் காங்கிரீட் காடு என்று எண்ணிவிடக் கூடாது. ஏனென்-றால் பச்சை நகரம் எனும் பட்டப் பெயரும் லண்டனுக்கு உண்டு. எதனால் எனில் தன்னுள் பலபலப் பச்சைப் பசும்புல் பூங்காக்களைக் கொண்டுள்ளது. அவற்றில் கென்சில்டன் பூங்கா, பச்சைப் பூங்கா, ஜேம்ஸ் பூங்கா, ஹைடே பூங்கா ஆகியன குறிப்பிடத்-தக்கன.
முந்நூற்று அறுபது ஏக்கரில் அமைந்துள்ள அரசப் பூங்கா ஹைடே பூங்கா குறிப்பிடத்தக்கது. நிற்பவர்கள், நடப்பவர்கள்,  ஓடுபவர்கள், நீந்துபவர்கள், குதிரை ஏற்றம் செய்பவர்கள், படகுச் சவாரி செய்பவர்கள் ஆகியோர் அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் பூங்கா இது. இதைச் சுற்றியே பல பூங்காக்களும் அமைந்துள்ளன.
அரசர் பாதை
ஹைடே பூங்காவின் தெற்கு மூலையில் அமைந்து உள்ளது ராட்டன் ரோ. அரசர் பாதை என்று பொருள்படக்கூடியது. அரசர்கள் முன்னர் நடைபயின்றதால் இப்பெயர் இங்கே புகழ்பெற்ற பேச்சாளர்களின் மூலை என்பது உள்ளது. இங்கே பொதுமக்கள் அரசியல், சமயம், பொருளாதாரம், இலக்கியம் என்று எதைப்பற்றியும் கூறலாம்.
டிரஃபால்கர் (ஸ்கொயர்) சதுக்கம்
லண்டனின் மய்யப்பகுதியில் உள்ள மிகப் பெரிய சதுக்கமான இதன் மய்யப்பகுதியில் எழுப்பப்பட்டுள்ள உயரமான தூண் நெல்சன் தூண் ஆகும். பிரெஞ்சு மாவீரர் நெப்போலியனை, இங்கிலந்துத் தளபதி டிரஃபால்கர் சண்டையில் தோல்வியடையச் செய்தார் அல்லவா? அதன் நினைவாகத் தளபதி நெல்சன் தூண் எழுப்பப்பட்டது.
இதன் உயரம் 170 அடி. இதன் உச்சியில் 18 அடி உயரத்தில் நெல்சன் சிலை வடிவமைக்-கப்பட்டுள்ளது. இத்தூணை நான்கு சிங்கங்கள் தாங்கி நிற்கின்றன. இந்த டிரஃபால்கர் சதுக்கம் சிலைகளின் பூங்கா எனும்படி பல சிலைகள் நீர்ச்சுனைகள் உள்ளன. லண்டன் தேசிய அரங்கு டிரஃபால்கர் சதுக்கத்தின் வடக்கில் அமைந்துள்ளதில் 2000க்கும் மேற்பட்ட ஓவியங்கள் உள்ளன.
கோபுரப் பாலம்
இலண்டன் நகரின் அடையாளங்களில் ஒன்று லண்டனில் நாற்பத்து மூன்று மீட்டர் உயரமான மாபெரும் இரண்டு கோபுரங்களுக்கு இடையில் அமைந்துள்ள கோபுரப் பாலம். இப்பாலம் சுமார் 200 அடி நீளமுள்ளது. பெரிய கப்பல்கள் கடக்க வேண்டிய சமயத்தில் உயர்த்தத்தக்கது.
புனித பால் தேவாலயம்
பழமையான இந்தத் தேவாலயத்தின் மாடக்கூண்டு ரோம் தேவாலயத்திற்கு அடுத்ததாக அய்ரோப்பாவின் இரண்டாவது பெரியதாகும். கி.பி.600ல் மரத்தால் கட்டபட்டு, மீண்டும், மீண்டும் புதுப்பிக்கப்பட்டு 1600ல் இன்றைய வடிவம் பெற்றுள்ளது.
லண்டன் நகரில் அருங்காட்சியகங்கள், நினைவாலயங்கள், பூங்காக்கள் எனச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பல அதிசய-மான இடங்கள் உள்ளன.
இங்கு உள்ள மெழுகுப் பொம்மைக்காட்சி சாலையில் உயிருடன் இருக்கும் உருவங்கள் போலவே மெழுகில் பல உருவங்கள் செய்து வைத்துள்ளனர். நம் நாட்டு நடிகை ஐஸ்வர்யா-வின் சிலையும் உள்ளது. நடிகர் அமிதாப்-பச்சன் சிலையும் உள்ளது. அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டால் உயிருடன் இருப்பவர்களுடன் இருப்பது போலிருக்கும்.
லண்டனில் நம் நாட்டு உணவுவிடுதிகள் பல உள்ளன. கடைகள் உள்ளன. முருகன் கோவில், பெருமாள் கோவில் என்று கோவில்களும் அமைத்துள்ளனர். எனவே லண்டனில் இருக்கையில் நம் ஊரில் இருப்பது போன்ற உணர்வுக்குப் பஞ்சமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக