ஞாயிறு, 11 நவம்பர், 2012

இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' திரைப்படத்தை தயாரித்தவருக்கு சிறை


இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' திரைப்படத்தை தயாரித்தவருக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை வழங்கி அமெரிக்க நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்க நிறுவனமொன்றால் கடந்த செப்டம்பர் மாதம் தயாரித்து வெளியிட்ட 'இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' என்ற திரைப்படத்தில், நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் பதட்டம் ஏற்பட்டது. லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த ரொக்கெட் தாக்குதலில், அமெரிக்க தூதர் உள்ளிட்ட 4 பேர் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு உலகம் முழுவதும் கடும் கொந்தளிப்பு ஏற்பட காரணமாக இருந்த குறும்படத்தை தயாரித்த மார்க் பஸ்ஸல்லி யூசெப் (வயது 55) கைது செய்யப்பட்டார். அவர் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு லொஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

கடந்த வாரம் நடந்த விசாரணையின்போது, தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் யூசெப் மறுத்தார். ஆனால், 4 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் 5 ஆண்டுகள் வரை உரிய அனுமதி பெறாமல் கணனி மற்றும் இணையத்தை பயன்படுத்தக்கூடாது, கற்பனையான பெயர்களை பயன்படுத்தக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஏற்கனவே 5 வாரமாக அமெரிக்க மத்திய சிறைச்சாலையில் இருக்கும் அவர் ஓராண்டு தண்டனைக் காலத்தை சிறையில் கழிக்க வேண்டும். அதன்பின்னர் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக