புதன், 7 நவம்பர், 2012

மௌலானா மௌதூதி(ரஹ்) அவர்கள்.

மௌலானா மௌதூதி(ரஹ்) அவர்கள் இந்தியாவிலுள்ள அவ்ரங்கபாத் எனும் இடத்தில் 1903.செப்டம்பர்.25ஆந் திகதி பிறந்தார்கள்.

வழக்கறிஞரான இவரது தந்தை சிறந்த அறிஞராகத் திகழ்ந்தமையினால் அவரிடமே மௌலானா மௌதூதி(ரஹ்) அவர்கள் ஆரம்பத்தில் அரபு, பாரசீகம் போன்ற மொழிக்ளைக் கற்றுக் கொண்டார். அதன் பின்னர் பாகிஸ்தான் அறபுக் கல்லூரிகளில் இஸ்லாமியக் கொள்கைகளையும் சட்டங்களையும் மிகக் குறுகிய காலத்திலேயே கற்றுத் தேர்ந்தார்.

சமய ஞானக் கல்வியிலும் பொதுக் கல்வியும் அரபு, உர்து, பாரசீகம், ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் சிறந்த பாண்டித்தியம் பெற்றிருந்த மௌலானா மௌதூதி(ரஹ்) அவர்கள் ஈமானிய வேட்கையினால் இஸ்லாமிய உம்மத்தை தட்டியெழுப்புவதற்கான முறைமையை பல அமைப்புகளிலும் தேடியலைந்தார்கள்.

1920இல் சஞ்சிகையாளராக எழுத்துத்துறையில் தடம் பதித்த மௌலானா அவர்கள் ஜபல்பூரில் சிறிது காலம் பத்திரிகை நிருபராகவும் செயற்பட்டார்கள். பின்னர் 'தாஜ்' என்ற உள்ளூர் பத்திரிகையின் ஆசிரியரானார். அதன் பின்னர் டில்லிக்குச் சென்று "ஜாமியதுல் உலமா-ஈ-ஹிந்த்" எனும் நிறுவனத்தில் 'அல் ஜமியத்' எனும் பத்திரிகையின் உதவி ஆசிரியராக இணைந்து 1927ஆம் ஆண்டு வரை கடமையாற்றினார்கள்.
"இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது" என்ற கருத்து காந்தியால் முன்வைக்கப்பட்டு நாடு முழுதும் பேசப்பட்டு வந்தபோது இத்தவறான கருத்தை முறியடித்து ஜிஹாத் பற்றிய சரியான விளக்கதை முன்வைப்பதற்காக "ஜிஹாத் பில் இஸ்லாம்" எனும் நூலை தமது 25ஆம் வயதில் எழுதிப் பிரபலமடைந்தார்கள்.
1932ஆம் ஆண்டு ஹைதரபாத் சென்று "தர்ஜுமானுல் குர் ஆன்" என்ற மாதப் பத்திரிகையைஆரம்பித்தார். இதில் இஸ்லாம் பற்றியும் தற்கால முஸ்லிம் உலகின் நிலை குறித்தும் அரிய பல கட்டுரைகளை எழுதினார். இதேகால கட்டத்தில் புகழ்பெற்ற " Towards under Standing Islam" என்ற நூலையும் எழுதினார்.
இந்திய உப கண்டத்தில் முஸ்லிம்களிடையே இஸ்லாமிய உணர்வையும் அரசியல் விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்துவதில் தர்ஜுமனுல் குர் ஆனின் பங்கு அளப்பரியது. பிரபல கவிஞரும் தத்துவ ஞானியுமான அல்லாமா இக்பால் (ரஹ்) அவர்கள் தர்ஜுமானுல் குர் ஆனில் மொளலானா எழுதிவந்த கருத்தாழமிக்க கட்டுரைகளைப் படித்து தம்மிருவரிடையே நெருங்கிய கருத் தொற்றுமை நிலவுவதை உணர்ந்தார். ஆகவே தம்மோடு சேர்ந்து இஸ்லாமிய சட்ட,சமூக நிர்மாணப் பனிகளில் உழைக்க வருமாறு மொளலானாவை அழைத்தார். அவர் உழைப்பை ஏற்று 1938ல் செயற்படத் தொடங்கிய சில மாதங்களிலேயே அல்லாமா இக்பால்(ரஹ்) அவர்கள் வபாத்தாகி விட்டார்கள். இதனால் பெரிதும் கவலையடைந்த மொளலானா லாகூர் சென்று இஸ்லாமியக் கல்லூரியில் சம்பளம் எதுவும் பெறாமலேயே சமயத்துறை ஆசிரியராகப் பணிபுரிந்தார். ஓராண்டின் பின் தாருஸ்ஸலாம் நகருக்குச் சென்று அங்கு தமது எழுத்துப் பணிகளையும் பிரச்சாரப் பணியையும் மேற் கொண்டார்.
1941 ஆகஸ்ட் மாதம் அவரது கருத்துக்களால் கவரப்பட்ட 75 பிரமுகர்களைக் கொண்டதொரு மாநாடு கூட்டப்பட்டது. இஸ்லாமிய மறுமலர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஜமா அதே இஸ்லாமியின் ஆரம்பக் கூட்டமாகவே அது அமைந்தது. மொளலானா அவர்கள் அதன் அமீராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
1947ல் பாகிஸ்தான் பிரிந்தபோது மொளலானா அவர்களும் அங்கு இடம் பெயர்ந்தார். பாகிஸ்தானில் மொளலானா தனது பிரசாரத்தை முக்கிய நான்கு அடிப்படைகளில் ஆரம்பித்தார்.
1. இஸ்லாத்துக்கு முரணான கருத்துக்களின் செல்வாக்கிலிருந்து மக்களின் சிந்தனைளைத் தூய்மை படுத்துதல்.
2. தனி மனிதர்களை இஸ்லாமிய வாழ்க்கையில் பயிற்றுவித்தல்.
3. சமூக புனரமைப்பு.
4. ஆட்சி முறையை ஷரிஆவின் அடிப்படையில் மாற்றியமைத்தல்.
பாகிஸ்தான் உண்மையானதொரு இஸ்லாமிய நாடாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என அரசங்கத்தைக் கோரினார். மக்களிடையே இவ்வுணர்வை ஏற்படுத்தும் முகமாக நூற்றுக் கணக்கான கட்டுரைகளையும் பல நூல்களையும் எழுதி வெளியிட்டதுடன் நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்தார். இதனால் நாலா பக்கங்களிலிருந்தும் இஸ்லாமிய அரசு பற்றிய கோஷம் எழும்பவே இதனை அடக்கும் நோக்குடன் 1948.ஒக்டோபரில் மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களும் அவரது முக்கிய சகாக்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். எனினும் 1950.மே யில் விடுதலை செய்யப்பட்டனர்.
1948ல் தூய இஸ்லாமிய வாழ்க்கை நெறி பற்றி வானொலியில் ஐந்து தொடர்களைக் கொண்ட சொற்பொழிவொன்றை நிகழ்த்தினார். இத் தொடர் 'Islamic way of Life' என்ற பெயரில் ஒரு நூலாக வெளி வந்தது.
1951ல் பாகிஸ்தானில் உள்ள சகல பிரிவுகளையும் கொண்ட உலமாக்கள் மாநாடொன்றைக் கூட்டி அரசியல் திட்டத்தில் புகுத்தப்பட வேண்டிய 22 அம்சங்களைக் கொண்டதான தூய இஸ்லாமிய ஷரத்துகளைக் கொண்ட தீர்மானம் ஒன்றை உலமாக்கள் ஆதரவோடு நிறைவேற்றினார்.
1952 - 53களில் காதியானிகள் பிரச்சினை ஏற்பட்டபோது அவர்கள் இஸ்லாத்திற்கு விரோதமானவர்கள் என மௌதூதி(ரஹ்) அவர்கள் மிகக் கடுமையாகஸ் சாடினார்கள். பாகிஸ்தான் அரசு இராணுவச் சட்டத்தைப் பிரகடனப்படுதியது. எனினும் மௌதூதி(ரஹ்) அவர்கள் அரசாங்கக் கொள்கைகளைக் கண்டித்ததுடன் "காதியானிகள் பிரச்சினை" எனும் நூலை எழுதினார். இதன் விளைவாக 1953.மார்ச்சில் சிறையிலடைக்கப்பட்டு இராணுவ நீதீ மன்றம் மரண தண்டனை விதித்தது. ஆனால் உலக முஸ்லிம்களின் எதிர்ப்புக் காரணமாக அத்தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட போதிலும் 1955ல் பாகிஸ்தான் உயர் நீதீ மன்றம் இத் தண்டனையை இரத்துஸ் செய்து விடுவித்தது.
1964ல் ஜமா அதே இஸ்லாமிய இயக்கம் சட்டவிரோதமானதாக அரசினால் பிரகடனம் செய்யப்பட்டது. எனினும் மொளலானாவின் பணி தொடர்ந்தது.
மேற்காசியாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு எல்லாம் பிரயாணம் செய்தார். சஊதி மன்னர் இப்னு சுஊதின் வேண்டு கோளுக்கினங்க மதீனா பல்கலைக் கழகத்தை அமைப்பதற்கான விரிவான திட்டம் ஒன்றை தயாரித்துக் கொடுத்து உதவினார்.
1966ல் ஏற்பட்ட தாஷ்கண்ட் ஒப்பந்தத்தைக் கண்டிதார். ராபிதத்துல் ஆலமுல் இஸ்லாம் எனும் உலக முஸ்லிம் காங்கிரஸ் நிறுவப்பாடுபட்டவர்களுள் மொளலானாவும் ஒருவர்.
குர் ஆன் ஹதீஸ், இஸ்லாமியப் பேரறிஞர்களின் கருத்துக்கள் என்பவற்றின் அடிப்படையில் மிகவும் சிக்கலான மார்க்கப் பிரச்சினைகளுக்கு பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவும் விளக்கமும் கொண்ட பத்வாக்களை வழங்கிய மொளலான அவர்கள் சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகள் பற்றியும் தெளிவான விளக்கங்களைத் தந்துள்ளார். அரபு மொழியாகக் கொண்ட மார்க்க மேதைகள் கூட தங்கள் பத்வாக்களுக்கு மேற்கோளாகக் கைக் கொண்டுள்ளனர்.
பல்வேறு துறைகள் பற்றி அன்னார் நூற்றுக்கும் மேற்பட்ட நூற்கள் எழுதியுள்ளார்கள். அவர்களின் நூற்களில் பெரும்பாலானவை 50 மொழிகளுக்கும் மேல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் சில நூற்கள் உயர் கலா பீடங்களிலும் பாட நூல்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த மக்கீகல் பல்கலைக் கழகம் மொளலானாவின் கருத்துக்களை ஆராய புலமைப் பரிசில் வழங்கியுள்ளது.
மொளலானாவின் உர்து மொழியில் குர் ஆனுக்கு எழுதப்பட்ட விரிவுரையான தப்ஹீமுல் குர்ஆன் தற்காலத்தவர்களின் சிந்தனைக்கும் அறிவிற்கும் ஏற்றவகையில் இருப்பதுடன் பலராலும் பாராட்டப் படுகிறது. இவர் 20ம் நூற்றாண்டின் இஸ்லாமிய அறிஞர்களுள் தலை சிறந்தவர் என மதிக்கப்படுகின்றார்.
அன்னாரின் பணியை கொளரவிக்கும் முகமாக 1978க்கான மன்னர் பைஸல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. 76 வருடங்கள் வாழ்ந்து அளப்பரிய சேவைகள் புரிந்த மொளலானாமௌதூதி(ரஹ்) அவர்கள் 1979 செப்டம்ப்ர் 23ல் மரணமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக