வியாழன், 14 ஏப்ரல், 2011

ராசபக்சே வேண்டப்படாத விருந்தாளியாக வலம் வருகிறார்

நம் நாட்டு ஜனாதிபதி அவர்கள் பற்றி "உயிர் மை" எனும்  இந்திய சஞ்சிகை கடந்த ஃபெப்ரவரியில் வெளியிட்டிருந்த விமர்சன ரீதியான செய்தியொன்றை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

Rajapaksa as the Unwanted Guest around the World - Tamil Poltics News Article



 இறைமையுள்ள சுதந்திர நாடே சிறிலங்கா என்று பரப்புரை செய்துவந்த சிங்களத் தலைவர்களுக்கு பிரித்தானியாவில் ஆரம்பித்து அமெரிக்கா வரையில் நடைபெறும் சம்பவங்களே போதும், சிறிலங்கா என்பது ஒரு தோல்வியுற்ற நாடு என்பதைக் காட்டுவதற்கு. கடந்த டிசம்பர் மாதத்தில் லண்டனில் இடம்பெற்ற நிகழ்வுகளிலிருந்து அமெரிக்கா வரை, ராசபக்சேவை விரும்பத்தகாத விருந்தாளியாகக் கருதுமளவுக்கு ஒன்றரை ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

புலம்பெயர் தமிழர்கள் நடத்திவரும் போராட்டங்களினால் பிரித்தானியா மற்றும் அமெரிக்க நாடுகள் திகைத்துப் போயுள்ளன. தப்பினேன் பிழைத்தேன் என்கிற வகையில் லண்டனிலிருந்து தப்பி ஓடிய ராசபக்சே, திடீரென 20 உறுப்பினர்களுடன் ஜனவரி 19-இல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் நகருக்குப் பயணமானார். பயண விபரங்கள் தொடர்ந்தும் இரகசியமாகவே பேணப்பட்ட போதிலும் பல காரணங்கள் கசியத் தொடங்கின. லண்டனில் நடந்த நிகழ்வே அமெரிக்காவிலும் இவருக்கு நடந்துள்ளது.

தனது சகோதரன் டட்லி ராசபக்சேவின் இல்லத்திற்கே ராசபக்சே குழுவினர் வந்தடைந்தனர். ஜனவரி 19-ஆம் திகதி பிற்பகல் இரண்டு மணியளவில் இருபது பேர் அடங்கிய குழுவுடன் துபாய் ஊடாக ஹுஸ்டன் நகரை வந்தடைந்தார்கள். இக்குழுவின் பயணம் தனிப்பட்ட விடயமே என்று கூறியது அமெரிக்க மற்றும் சிறிலங்கா அரசுகள். தனிப்பட்ட பயணமாக ராசபக்சே வந்திருந்தால் எதற்காக இருபது பேர் இவருடன் வரவேண்டும் என்று கேட்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். இக்குழுவின் பயணச் செலவுகளை அரசே ஏற்கும் என்று கூறுகிறார்கள் சிறிலங்கா அரசத் தரப்பினர்.

இக்குழுவினர் நாட்டைவிட்டுப் புறப்படுவதற்கு முதல் நாள் (ஜனவரி 18) அமெரிக்காவின் முன்னாள் பிரதி வெளிவிவகாரச் செயலாளர் ரிச்சாட் ஆர்மிரேஜ் திடீர் பயணமொன்றினை மேற்கொண்டு ராசபக்சேவை சந்தித்து கருத்துப் பரிமாற்றங்கள் செய்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. இச்சந்திப்பில் ராசபக்சேடன், அவரின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளியுறவு அமைச்சின் செயலாளர் ரொமேஸ் ஜெயசிங்க ஆகியோர் உடனிருந்தனர். இச்சந்திப்புக்குப் பின்னர்தான் உடனடியாகவே ராசபக்சே அமெரிக்காவிற்குப் புறப்பட்ட விடயமும், இஸ்ரேலில் தங்கியிருந்த தனது தம்பியும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபய ராசபக்சே திடீரென அங்கிருந்து புறப்பட்ட நிகழ்வும் இடம்பெற்றது.

ராசபக்சேவின் திடீர் பயணத்திற்கான காரணம் என்ன?

கிரகநிலைகள் சரியில்லை என்பதால் நாட்டில் அவர் இருப்பது நல்லதல்ல என்று சோதிடர்கள் கூறிய ஆலோசனைப்படியே அமெரிக்கா சென்றதாக கொழும்பு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. ஏறத்தாழ 12 மணிநேரம் கழித்தே ஜனாதிபதியின் அமெரிக்கப் பயணம் பற்றிய அறிவிப்பை அவரது ஊடகச் செயலாளர் பந்துல ஜெயசேகர வெளியிட்டார். இது தனிப்பட்ட பயணம் என்பதை மட்டும் குறிப்பிட்ட ஜெயசேகர, எத்தனை நாட்கள் அவர் அமெக்காவில் தங்கியிருப்பார் என்றோ எப்போது நாடு திரும்புவார் என்றோ குறிப்பிடவில்லை.

இந்தப் பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றாகத் தெரியவில்லை. திடீரென மேற்கொள்ளப்பட்ட ஒன்று போலவே உள்ளது. ஜனவரி 18-ஆம் நாள் ராசபக்சேவை இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் பிரதீப் வசந்த் நாயக் சந்தித்துப் பேசியிருந்தார். அது போலவே, ஜனவரி 19-ஆம் நாள் கொழும்பை வந்தடைந்த பாகிஸ்தான் இராணுவத் தளபதியையும் ஜனவரி 20-ஆம் நாள் சந்திப்பதற்கு அவர் திட்டமிட்டிருந்தார். பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் கியானியின் நிகழ்ச்சி நிரலில் ஜனாதிபதி ராசபக்சேவை சந்திப்பதும் ஒன்று. அதற்குள் அவர் நாட்டை விட்டுச் சென்று விட்டார். எனவே, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயணமாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. அப்படியான திட்டம் ஏதும் இருந்திருந்தால், பாகிஸ்தான் இராணுவத் தளபதிக்கு சந்திப்பு நேரம் ஒதுக்கப்பட்டிருக்காது.

இது சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகவும் இருக்காது. பெருவெள்ளப் பாதிப்பின் துயரில் இருந்து நாடு மீள்வதற்கிடையில் ஜனாதிபதி சுற்றுலாவில் நேரத்தைக் கழித்தால் அது மோசமான நடவடிக்கையாகவே பார்க்கப்படும். வெள்ளப் பாதிப்பை அடுத்து ஐ.நா. உதவிச்செயலர் ஒருவர் சிறிலங்கா வந்திருக்க, ஜனாதிபதியோ உல்லாசப் பயணம் சென்றிருக்கிறார் என்ற கதை பரவினால் போதும், ஒரு பொறுப்பற்ற ஆட்சித் தலைவர் என்ற பழி தானாக வந்து சேர்ந்து விடும். எனவே நிச்சயம் இது உல்லாசப் பயணம் இல்லை.

ஹுஸ்டன் நகரில் அண்டர்சன் புற்றுநோய் மருத்துவமனையில் ராசபக்சேவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக இன்னொரு தகவல் தெரிவிக்கிறது. ராசபக்சேவின் உடம்பின் கீழ்ப்பாகத்திலேயே நோய் தோன்றியுள்ளதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக அதற்கான சிகிச்சையை சிறிலங்காவில் பெற்றுக்கொண்டிருந்த போதிலும் குணமாகாத நிலையிலேயே அவர் அமெரிக்காவுக்குத் திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ளார் எனக் கூறுகிறது இத் தகவல். சிகிச்சைக்குத்தான் அமெரிக்கா வந்தார் என்று கூறினாலும், எதற்காக நிகழ்ச்சி நிரல்களைக் கொடுத்துவிட்டு திடீரென்று நாட்டை விட்டு வெளியேறினார் என்பது ஐயமாகவே உள்ளது. குறிப்பிட்ட மருத்துவமனை பல நாட்களுக்கு முன்னரே இவரின் அனுமதிக்கான உத்தரவாதத்தைக் கொடுத்திருக்கும் என்பதே உண்மை. அப்படியானால், எதற்காக இத்திடீர் பயணம் மேற்கொள்ளப்பட்டது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

சிறிலங்கா அரசுக்கு இன்னுமொரு பீதி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கிடைக்கப்பெற்றது. இருபது லட்சத்திற்கு அதிகமான மக்களைக் காவு கொண்ட, சூடானின் 22 வருட கால உள்நாட்டுப் போரினால் பாதிப்புற்ற, புலம்பெயர்ந்து வாழும் தென் சூடான் மக்கள், இந்த தனி நாட்டிற்கான வாக்கெடுப்பில் கலந்துகொண்ட விடயமும், தென் சூடானின் சுதந்திர நாள் வைபவங்களில் கலந்துகொள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடப்பட்டுள்ளதும் சிறிலங்கா அரசுக்கு கடுப்பையே உருவாக்கியது. குறிப்பாக, நாடுகடந்த அரசு தனது காரியாலயத்தை இச்சுதந்திர நாட்டில் நிறுவ இருப்பதாகவும், இந்நாட்டின் கட்டுமானங்களுக்குப் புலம்பெயர் தமிழர்கள் அனைத்து உதவிகளையும் வழங்குவார்கள் என்றும் கூறியது சிறிலங்கா அரசுக்குக் கோபத்தையே உண்டாக்கியது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நாடுகடந்த அரசின் செயற்பாட்டை முடக்க சிறிலங்காவின் குழுவினர் முயற்சிகளை மேற்கொள்ளவுமே இப்பயணத்தை மேற்கொண்டார்கள் எனவும் கூறுகிறது மற்றொரு அரசியல் வட்டாரம். எது எப்படியிருந்தாலும், இப்பயணம் என்பது திடீரென்று மேற்கொள்ளப்பட்டதுடன், அமெரிக்க மற்றும் கனடிய தமிழர்களுக்கு இச்செய்தி சென்றுவிடாமல் இருக்கவோ என்னவோ இப்பயண விபரங்களை இறுதிவரை மூடி மறைத்தது சிறிலங்கா அரசென தெரிவிக்கிறது இன்னுமொரு தகவல்.

அப்பாவி மக்களைக் கொன்றவன் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்

அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றி கொன்ற கொடுங்கோலன் ராசபக்சே விமானக் குண்டுவீச்சு நடத்தியவன் - பச்சைக் குழந்தைகளைக் கூட கொன்று குவித்தவன் - பல்லாயிரம் அப்பாவிகளைப் பட்டினி போட்டே சாகடித்தவன் - மிகக்கொடிய நச்சு ஆயுதங்களையும் ரசாயனக் குண்டுகளையும் ஈவிரக்கமில்லாமல் பயன்படுத்தியவன் - தமிழ்ப் பெண்கள் கதறக் கதறப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கு முழுமுதல் காரணகர்த்தா. அந்தக் கொடுமையாளன் செல்கிற இடத்திலெல்லாம், தமிழ் மக்கள் விழிப்போடும் உறுதியோடும் நின்று போராடுவதைப் பார்க்கும்போது உலக நாடுகளையே விழிப்படையச் செய்கிறது.

லண்டனில் கடும் குளிரிலும் மற்றும் பரவலாகக் கொட்டிய பனியிலும் நனைந்தபடி ராசபக்சேவை விரட்ட ஆயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள், உலகெங்குமுள்ள தமிழர்கள் மற்றும் பிற இனத்தவர்களுக்குத் தாம் யார் என்கிற அடையாளத்தை நிறுவி தெளிவான பாதையைக் காட்டினார்கள். ஒன்று சேர்ந்து உறுதியுடன் நின்றால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்ததோடு, ராசபக்சே ஒரு நாட்டின் அதிபரல்ல, ஓர் இனத்தைப் படுகொலை செய்த கொலைவெறியன் என்பதை சர்வதேச அளவில் நிலைநிறுத்தியும் உள்ளார்கள்.

ராசபக்சேவை மட்டுமல்லாமல் இனப்படுகொலைக்குக் காரணமான ஒவ்வொருவரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது. இனப்படுகொலைக் குற்றம் புரிந்தவராக ராசபக்சேவை வகைப்படுத்தி நீதியின் முன்னால் நிறுத்துவதற்குப் போதுமான அளவுக்கு இவரது கரங்கள் குருதி தோய்ந்துள்ளன. 40,000 வரையிலான தமிழ் மக்கள் 2009-ஆம் ஆண்டு மே மாதம் முடிவுற்ற இறுதிக் கட்டப்போரில் கொடிய முறையில் கொல்லப்பட்டனர்.

மருத்துவமனைகள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டதுடன் உணவும் போராயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. பட்டினியால் பல தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமுற்றவர்களுக்கு அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம் சிகிச்சை வழங்குவது தடுக்கப்பட்டதனால், உரிய மருத்துவ சிகிச்சை இன்றியே ஏராளமான பொதுமக்கள் உயிரிழக்கும் அவலம் நிகழ்ந்தது. யுத்தப் பகுதியினை விட்டு இறுதி நேரத்தில் வெளியேறியவர்கள் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். பலர் இம்முகாம்களில் இருந்து வெளியே இழுத்தெடுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். பல பெண்கள் பாலியல்ரீதியான வல்லுறவுக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர். சிறிலங்காவின் அரசத் தலைவர் என்ற நிலையிலும் முப்படைகளதும் தளபதி என்ற பொறுப்பு நிலையிலும் ராசபக்சே இருந்து வருவதனால் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை, போர் மற்றும் மானிடத்துக்கு எதிரான அனைத்துக் குற்றங்களுக்கும் முதன்மைப் பொறுப்பாளி மகிந்த ராசபக்சேதான். இவரும் இக்குற்றங்களில் ஈடுபட்ட ஏனையோரும் மானுட நீதியின் பெயரால் விசாரணைகளுக்கும் தண்டனைக்கும் உள்ளாக்கப்பட்டாக வேண்டும்.

கடந்த டிசம்பர் மாதம் "விக்கிலீக்ஸ்" வெளிக்கொணர்ந்த இரகசிய ஆவணம் ஒன்றின்படி கொழும்பிலிருந்த அமெரிக்கத் தூதுவர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்திருந்த குறிப்பில் சிறிலங்காவில் இழைக்கப்பட்டதாகக் கருதப்படும் குற்றங்களுக்கு அரசத்தலைவர் மகிந்த ராசபக்சே மற்றும் அரவது சகோதரர்கள் உள்ளிட்ட நாட்டின் உயர் அரசியல் மற்றும் இராணுவத் தலைமை பொறுப்பானவர்களென்ற நிலை இருப்பதனால், இக்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளது. இக்குற்றம் புரிந்தவர்கள் தொடர்பான உண்மையான தகவல்கள் அமெரிக்க அரசுக்கு ஏற்கெனவே தெரியும் என்பதனையும் இது வெளிப்படுத்துகிறது.

ஜனவரி 24-இல் கனடிய மற்றும் அமெரிக்க தமிழ் மக்கள் நூற்றுக்கணக்கில் வாசிங்டனில் அமைந்துள்ள வெள்ளை மாளிகை முன்னாள் போராட்டத்தை நடாத்தியுள்ளார்கள். இந்நிகழ்வில் பங்கெடுத்த மக்கள், கிலாரி கிளிண்டன் அவர்களுடைய தேசிய திணைக்களத்துக்கும் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பிலான நீதி விசாரணை திணைக்களத்துக்கும் சென்று தங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் கையளித்தனர். இந்த ஒன்றுகூடலில், ஈழத்தமிழ் மக்களுடன் இணைந்து தமிழகத்து தமிழர்களும் பங்கெடுத்திருந்தனர்.

இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்களின் அமைப்பு அமெரிக்காவில் ராசபக்சேவுக்கு எதிராக வழக்குப் பதிவும் செய்தது. இந்த வழக்கு குற்றவியல் வழக்காக அல்லாமல் சிவில் வழக்காக அமையும் என அறிவித்தார்கள். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களான மூன்று மனுதாரர்கள் இந்த வழக்கைப் பதிவு செய்வதாக அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கை தெரிவித்தது.

ஒரு நாட்டின் அரசத் தலைவர் இன்னொரு நாட்டில் தலைமறைவாக இருந்துவிட்டு தப்பினால் போதும் என்கிற நிலைமையை உருவாக்கியுள்ளார்கள் தமிழர்கள் என்பது மட்டும் உண்மை. கொடுங்கோலன் ராசபக்சே வேண்டப்படாத விருந்தாளியாகவே உலகை வலம் வருகிறார். தமிழர்கள் விழிப்பாக இருக்கும் வரை எக்காலத்திலும் இவரால் சுதந்திரமாக உலகை வலம்வர முடியாது என்பது மட்டும் உண்மை.

நன்றி: உயிர்மை




2 கருத்துகள்:

  1. பிரபாகரன் முஸ்லிம்களுக்கு செய்த அநியாயங்கள் மட்டும் என்ன........ இதைவிடக் குறைந்ததா? மிகச் சிறந்த நியாயவாதிகள் போல் எழுதியுள்ளார்கள். பிரபாகரனின் அட்டகாசங்களுக்கான கூலிதான் ராஜபக்ஷவினால் கொடுக்கப்பட்டது. வினை விதைத்தால் அதையேதான் அறுக்க வேண்டும்.

    ஈழத் தமிழனுக்கு ராஜபக்ஷ மட்டுமே எதிரி........... ஆனால், இலங்கை முஸ்லிமுக்கு பிரபாகரன் ஒரு எதிரி! ராஜபக்ஷ மற்றொன்று!!

    பதிலளிநீக்கு