சனி, 23 ஏப்ரல், 2011

இஸ்லாமிய சினிமா

சினிமா என்பது நவீன கதை சொல்லும் வடிவம். மக்கள் கலையாகிப் போன ஒரு தனியான மொழி. கலைகளை நோக்கிய உள்ளீடு, அதன் இயல்புக்கும், உள்ளிடுவோரின் உணர்வுகளுக்கும் ஏற்ப பல்வேறு பண்புகளுடனான வெளியீடுகளாக உலகை அலங்கரிக்கும் சூழலில், சினிமா எனும் பரந்த களத்தில் ஊன்றப்படும் முரண்பட்ட விதைகளிலிருந்தும் வேறுபட்ட இயல்புக் கலவைகள் உயிர்ப்பெடுப்பது இயல்பானதாகும். மாற்றுச் சினிமா தொடர்பான கதையாடல்களில் இஸ்லாமிய சினிமா என்ற எண்ணக்கரு முகிழ்ப்பதும் அது போன்றதே.


"இஸ்லாமிய சினிமா என்று, பொதுக்கலையாகிய சினிமாவைக் கூறு போடாதீர்கள்" என்ற சிலரது வாதம் நியாயத்திற்குப் புறம்பான ஒன்றாகவே கருதப்பட வேண்டியுள்ளது. ஐரோப்பிய சினிமா, இந்திய சினிமா, ஈரானிய சினிமா போன்ற நிலம்சார் பிரிவினைகளுக்கு ஏற்ப சினிமாவைக் கூறுபோட முடியுமென்றால், நவீன சினிமா, மாற்று சினிமா, வர்த்தக சினிமா என கொள்கைப் பிரிவினைகளுக்கு ஏற்ப சினிமாவைக் கூறுபோட முடியுமென்றால், இஸ்லாமிய சினிமா, இந்துத்துவ சினிமா, கிறிஸ்தவ சினிமா என சமயம்சார் பிரிவினைகளுக்கு ஏற்ப ஏன் சினிமாவை வகைப்படுத்த முடியாது?

ஈரானில் சர்வதேச பஜ்ர் திரைப்பட விழா வருடாவருடம் நடத்தப்பட்டு வருகின்றது. 12ஆவது சர்வதேச பஜ்ர் திரைப்பட விழாவில் முஸ்லிம் திரைப்படத் தயாரிப்பாளர்களதும் இயக்குனர்களதும் முதலாவது கூட்டம் இடம்பெற்ற போது, அதில் அதிதியாகக் கலந்து கொண்ட மலேசியாவின் மன்சூர் பென்புத்ரா எனும் தயாரிப்பாளர் ஆற்றிய உரையில், அவர் குறிப்பிட்டிருந்த சில கருத்துக்களை இங்கு பரிமாறிக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.

'முஸ்லிம் தயாரிப்பாளர்கள், உண்மையான இஸ்லாமிய விழுமியங்களையும் கருதுகோள்களையும் பிரதிபலிக்கின்ற இஸ்லாமியத் திரைப்படங்களை, குறிப்பாக முஸ்லிம் நாடுகளிலிருந்து தருவதற்கு முயற்சிக்க வேண்டும். ஹொலிவூட்டானது முற்றிலும் மாறுபட்ட ஒரு கருத்தியலை அறிமுகப்படுத்தியுள்ளது. உணர்வுகளின் தூண்டலுக்கு முக்கியத்துவமளித்தல், போலியான பதட்டத்தை உருவாக்குதல், மோதல்களைத் தூண்டுதல், ஆன்மீக விடயங்களைக் கேலிசெய்தல், தவறான கருத்துக்களைப் புகுத்துதல், இசையினைத் துஷ்பிரயோகம் செய்தல் என்பன, அது அறிமுகப்படுத்தியுள்ள பண்புகளுள் சிலவாகும். இஸ்லாமிய சினிமாவினால் மட்டுமே ஹொலிவூட்டின் ஆரோக்கியமற்ற வளர்ச்சியையும், அது கொண்டுள்ள சமுதாய வீழ்ச்சிக்கான தூண்டல்களையும் தடுக்க முடியும். இஸ்லாமிய சினிமாவானது, ஹொலிவூட் சினிமாவுக்கு மாற்றமானதாக இருக்க முடியும். இஸ்லாமிய சினிமாவினால் இஸ்லாமிய ஒருமைப்பாட்டையும் புரிந்துணர்வையும் அதிகரிக்க முடியும்'.

ஒவ்வொரு விமர்சகனுக்கும் ஒரு தனிப்பட்ட பார்வை இருக்கும். ஈரானிய சினிமாவை சமயம் சார்ந்து நோக்குவதும், கலை சார்ந்து நோக்குவதும் விமர்சகனின் பார்வைப் புலனின் பரப்பைப் பொறுத்த அம்சம். பார்வையின் இயல்புக்கேற்ப காட்சிகள் பதிந்து கருத்துக்கள் துறைசார்ந்து பிறக்கின்றன. ஆனால் கருத்துக்களை கருத்துக்களாகவே அன்றி, நியதியாகவோ தீர்மானிக்கப்பட்டதும் ஏகோபித்ததுமான முடிவாகவோ கூறுவதற்கு விமர்சகனுக்கு உரிமையில்லை. அவ்வாறு கூறுவது தவறான அணுகுமுறையாகும். இத்தகைய தவறின் சடுதியான தோற்றங்களை சில சினிமா விமர்சகர்களின் கருத்துக்களில் அவதானிக்க முடிவது கவலையளிக்கின்றது.

'ஈரானிய சினிமா, மனித வாழ்வு மற்றும் பிரபஞ்சம் பற்றிய இஸ்லாத்தின் கருத்தை அழகாக முன்வைக்கின்றது' என்பது இர்ஷாட் நளீமியின் கூற்று. 'இஸ்லாமிய கருதுகோள்களின் முழுப் பரிமாணத்தையும் வாழ்வின் பல்வேறு தளங்களின் முனைகளிலிருந்து ஆரம்பித்துப் பேசும் தனித்துவப் பண்பு கொண்டது ஈரானிய சினிமா' என்பது முஹம்மத் நௌபரின் கருத்து. 'இஸ்லாமியத்தை கலைகளூடாக வெளிப்படுத்துவதில் வெற்றி கொண்ட ஒரு துறையாக ஈரானிய சினிமாவைக் கருத முடியும்' என்பது பிந்துல் ஹதாவின் முடிவு.
முஸ்லிம் கலைஞர்கள் ஈரானிய சினிமாவை சமயமும் கலையும் சார்ந்து நோக்கும் போது, முஸ்லிமல்லாத கலைஞர்கள் அதனை கலை மட்டும் சார்ந்து நோக்க முனைவது தவறானது எனத் துணிய முடியாதுதான். அதற்காக அதனையே முடிவான கருத்தாக நிறுவ முனைவது அதிகபட்ச இறுமாப்பின் கொடூரம் என்றுதான் கூறவேண்டியுள்ளது.

ஈரானிய சினிமாவை இஸ்லாமிய சினிமா என ஏற்றுக் கொள்வதன் மீது பொதுவான தயக்கங்களும் முரண்கருத்துக்களும் சிலருக்கு இருப்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இஸ்லாமிய சினிமா என்று ஒன்றில்லை எனும் ஒட்டுமொத்தமான புறக்கணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தப் புறக்கணிப்பின் பின்னால் செறிந்திருப்பது குதர்க்கமா? குரூரமா?

இஸ்லாமிய சினிமாவுக்குப் பிரதானமாக இரண்டு வரைவிலக்கணங்களை முன்வைக்க முடியும்.
1. இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள் தயாரிக்கும் சினிமா.
2. இஸ்லாமிய விழுமியங்களைப் பிரதிபலிக்கும் கருத்துகளைக் களமாகக் கொண்ட சினிமா.
முன்னையதில் பலவீனம் இருக்கலாம். பின்னையது ஒரு முழுமையான வரைவிலக்கணமாகக் கொள்ளப்படத்தக்கது. அதிலும் இவ்விரு பண்புகளும் இணையும் போது அது ஐயத்திற்கிடமற்று இஸ்லாமிய சினிமாதான் எனத் துணிந்து கூற முடியும்.

இஸ்லாமிய சினிமா என்பது சினிமாவைக் கூறுபோடும் தப்பர்த்தமல்ல, அது சினிமா எனும் மனிதாயத் தேவையை அதற்கு அனுகூலமான விளைவைத் தரும் பாங்கிலமைந்த கிளையொன்றினூடாக வளர்த்துச் செல்லும் உயிர்ப்பான முயற்சி என்பதை இத்தகைய முரண்பாட்டு விமர்சகர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இத்தகைய உயிர்ப்பான முயற்சிகளுக்கு தம் குறைபாட்டுக் கருத்துக்களால் முட்டுக்கட்டையிடாது விலகிக் கொள்வது சினிமாத்துறை இலங்கையில் வேர்விட்டுச் செழிக்க அவர்களாற்றும் ஆத்மார்த்தமான பணியாய் இருக்கும் என்பது என் உறுதியான நம்பிக்கையாகும்.

Posted by Hafis at Tuesday, June 08, 2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக