ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

நோன்பும் சுக வாழ்வும்

நோன்பு முஸ்லிம்களாகிய நமக்கு ஒரு புனித அமல். இறைவனின் கட்டளை என்பதற்காக அதன் நன்மைகளைப் பற்றி அறியாமலேயே நாம் நோன்பு வைக்கிறோம். ஆனால், வல்ல நாயன் நோன்பின் மூலம் நமக்கு தரும் நன்மைகள், ஏராளம், ஏராளம்! அவற்றுள் சில இதோ... 

 நோன்பு என்றவுடன் உடலுக்கு தீங்கு விளைவிக்கும், சத்து குறைந்து போகும், உடல் மெலிவு உண்டாகும் என்று பல வகைகளில் கருதுபவர்கள் உண்டு. இயற்கை மருத்துவத்தில் நம்பிக்கை கொண்ட பலர் நோன்பை சீராக கடைப் பிடித்து, நோயின் தாக்குதலின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருப்பது உண்மை.

நோன்பை சித்தர்கள் உயிரைக் காக்கும் விருந்து என்றே கூறுகின்றனர். சிலர் நோன்பு என்றால் நாள் முழுவதும் பட்டினி கிடப்பது என்று நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறான கருத்தாகும். நோன்பு என்பது வேறு. பட்டினி என்பது வேறு.

உடலில் சக்தியின்றி மெலிந்து ஊட்டச்சத்து தேவையுள்ள நிலையில் இருப்பவர்கள் நோன்பு மேற்கொள்வது தவறு. அதுபோல் குடல்புண் உண்ணவர்களும் நோன்பு மேற்கொள்ளக் கூடாது.

வயிற்றுக்கும், செரிமான உறுப்புகளுக்கும் ஓய்வு கொடுப்பதே நோன்பு ஆகும். உண்ண உணவு இருந்தும் மனிதன் உண்ணாமல் வாரம் ஒருவேளை உணவை தவிர்ப்பதுதான் நோன்பு.

சிலர் நோன்பு என்ற பெயரில் ஒருவேளை உணவைத் தவிர்த்து பின் வயிறு புடைக்க உண்கின்றனர். இதுவும் தவறு.

நோன்பு இருக்கும் நாளன்று உடலில் நோயின் தாக்குதல் இருக்கக்கூடாது. ஓய்வெடுக்கும் நாளாக இருக்க வேண்டும். நோன்பு மேற்கொள்பவர்கள் மற்ற உணவு வேளைகளில் நீர்ச்சத்து நிறைந்த எளிதில் சீரணம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும்.

நோன்பின் பயன்கள்
நோன்பின் போது உடலின் ஒவ்வொரு உறுப்பும் தூய்மையாகின்றது. கண்பார்வை சீரடைகிறது. காது நன்றாக கேட்கும் தன்மையைப் பெறுகிறது. கை கால்கள் நல்ல இயக்கம் பெறுகின்றன.

உள்ளுறுப்புகள் தூய்மையுறுகின்றன. முதலில் கொழுப்புப் பொருட்கள் கரைகின்றன. அதன்பின் கிளைக்கோஜனாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சர்க்கரைப் பொருள்களும், புரதப் பொருள்களும் கரைந்து, உடலில் கலக்கின்றன.

உடலில் நோயுற்ற திசுக்களே முதலில் கரைக்கப்படுகின்றன. கொழுத்த உடல் கொண்டவர்கள், உபவாசம் மேற்கொண்டால் உடலின் உள்ளுறுப்புகளை வீணாகச் சுற்றியிருக்கும் பகுதிகள் கரைக்கப்படும்.

நோன்பு மிகவும் எளிய, ஆனால் சிறப்பான ஊட்டச் செயலாக அமைந்து உடலைக் காக்கிறது.

உடல் ஓய்வடைகிறது. எல்லா உறுப்புகளுக்கும் அமைதி கிட்டுகிறது. நரம்புத் தளர்ச்சி நீங்குகிறது. வெப்பநிலை மாறி தன்மை ஏற்படுகிறது.

இரத்தமும், நிணநீரும் தூய்மையாக்கப் படுகின்றன. காம உணர்வு தணிகிறது.
தூய சிந்தனைகள், நினைவுகள் வளர்கின்றன. மனதின் சக்தி, பகுத்தறிகின்ற ஆய்வு நிலை, நினைவு கூறும் சக்தி அதிகமாகின்றது.

இளையவரும், முதியவரும், புதுப்பிக்கப் படுகிறார்கள்.

நோன்பு மேற்கொள்வதால் முதுமை தடைபடுகிறது. குடலில் ஏற்படும் புளிப்பு, அழுகல் போன்றவை நீக்கப்படுகின்றன.

நோன்பு சில செயல்களை நிறுத்துகிறது. இதனால் ஒரு சமநிலை உண்டாகிறது. இந்த ரசாயனச் செயல்களின் சமநிலை உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதது ஆகும்.

வயிற்றில் புளிப்பு, குடலின் செரிப்பு, திசுக்களின் எரிப்பு ஆகியவற்றில் நடுநிலைமை உருவாக்குகிறது.

நோன்பு அன்று கடினமான வேலைகளை செய்யக்கூடாது. மன இறுக்கமான சூழ்நிலையை தவிர்க்க வேண்டும். இதனால் மனதிலுள்ள மயக்கம், குழப்பங்கள் நீங்கி உடலுக்கும், மனதுக்கும் ஒருசேர புத்துணர்வு கொடுக்கும்.

நீண்ட ஆயுளுடன் வாழ நோன்பு சிறந்த மருந்தாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக