சனி, 23 ஏப்ரல், 2011

சீரழிக்கும் சீரியலும் சினிமாவும், சீரழியும் முஸ்லிம் சமூகமும்.

‘(நபியே!) தங்களது பார்வையைத் தாழ்த்திக் கொள்ளும் படியும், தங்களது வெட்கஸ்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் படியும் கூறுவீராக!’ (24:31)
மனிதர்களால் உணரப்படாத மற்றும் அதிகமாக புரியப்படுவதுமான பெரும் பாவங்களுள் ஒன்றான இந்த சீரியல், சினிமாவைப் பற்றி
இஸ்லாம் என்ன கூறுகின்றது என்றும் இது எமக்கு கற்றுத் தந்தது எவை என்றும் சற்று இங்கு விளக்கலாம் என்று நினைக்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ்.
இன்று TV இல்லாத வீடுகள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு தொலைக் காட்சிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனால் ஏற்படும் சாதக மற்றும் பாதகங்களை சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய அவசியம் முஸ்லிம் சமுதாயத்திற்கு நிச்சயமாக இருக்கின்றது.
தொலைக்காட்சியைப் பொறுத்தவரை, தொடர்களில் இருந்து நம் முஸ்லிம் சமூக ஆண்களும், பெண்களும் விலகிச் செல்ல முடியாத அளவிற்கு கட்டிப் போடப்பட்டுள்ளனர். இந் நிலையில், இன்றைய இளைய தலைமுறைகளை வீட்டிற்குள்ளேயே கட்டிப் போட்டுவிட இணையதள உபயோகமும், கைத்தொலைபேசிப் பாவனையும் மாறிவிடும் காலம் தொடங்கிக் கொண்டிருக்கின்றது.

ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க விளையும் எவரும் இந்த மூன்று சாதனங்களின் பயன்பாடுகளை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ஆனாலும், அவற்றை பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தாத விடத்து, அதனால் ஏற்படும் தீமைகள் நிரந்தரமான அழிவுக்கு மனிதர்களை இட்டுச் சென்று விடும் என்பதில் ஐயமில்லை.
பொய்களைப் பரப்புவதும், கண்கட்டி வித்தைகளை நம்ப வைப்பதும், செய்வினை செய்வதும், அதனை எடுக்க முற்படுவதும், சூதாட்டம், குறி கேட்பது மற்றும் ஜோஸியம் பார்ப்பதும் போன்ற அனைத்தும் இன்றைய தொலைக்காட்சிகள் வழியே ஒலி, ஒளி பரப்பப்படுவதை நாம் பார்க்கின்றோம்.
இவைகள் எமது ஈமானில் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களாக இருக்கின்றன. இறைவன் மீதும் அவனது வல்லமையின் மீதும் இவை எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி விடுகின்றன. சின்னத் திரைகள் மூலமாக குற்றங்களும், வன்முறைகளும், கொலைகளும், பெண்களை மானபங்கப்படுத்தும் காட்சிகளும், கூட்டாகச் சேர்ந்து குற்றங்களில் ஈடுபடுவது எப்படி, ஒரு வரை ஏமாற்றுவது, ஒரு வரை பழிவாங்குவது, மோசடி செய்வது, லஞ்சம் வாங்குவது இன்னும் இது போன்ற பல காட்சிகளும் கற்பழிப்புக் காட்சிகளும் தாரளமாகக் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

இவை பார்ப்பவர்களின் மனங்களில் வக்கிர எண்ணங்களை உருவாக்குகின்றன. அது மட்டுமல்லாமல் மக்கள் மனதில் குற்றம் செய்யும் உணர்வுக்கு அடித்தளமிடுகின்றன.

இன்றைய இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் மனங்களில் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் கதாநாயக மற்றும் கதாநாயகிகள் போன்று தாமும் வாழவேண்டும், அவர்களது பழக்க வழக்கங்களை தாமும் பின்பற்ற வேண்டும் எனும் நிலை காணப்படுவதை நாம் காண முடிகின்றது.
இந்நிலை தொடர்ந்து செல்லுமாக இருந்தால் எமது இஸ்லாமிய கலாச்சாரத்தை விட்டு முழுமையாக மாறிவிடக்கூடிய ஒரு துர்ப்பாக்கிய நிலையை சந்திக்கக்கூடிய காலம் மிகத்தொலைவில் இல்லை. இறைவன் எம் அனைவரையும் காப்பாற்றவேண்டும்.
இந்த சினிமாவின் பாடல் கலாச்சாரம் எமது சிறுவர்களிடமும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, மிக அண்மையில் என்னால் அவதானிக்கப்பட்ட சம்பவம் ஒன்றை நினைவு கூறலாம் என நினைக்கின்றேன். சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவனை அவனது தகப்பனுடன் நான் கண்டேண். அவன் செல்லும் போது இப்பாடலை பாடிக்கொண்டு செல்வதை என்னால் அவதானிக்க முடிந்தது. ‘கத்தாழ கண்னால குத்தாத, நீ என்னை இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்னை’
அன்பிற்குறிய சகோதர சகோதரிகளே! உங்களுக்கு கொடுக்கப்பட்ட அமானிதங்கள் குழந்தைகள்.
இவர்களை எவ்வாறு வளர்த்தீர்கள் என்கின்ற கேள்வி நிச்சயமாக உங்கள் அனைவருக்கும் மறுமையில் உண்டு. மறுமையை நம்பிய எந்த முஸ்லிமும் தங்களது குழந்தைகளை இந்த கேடுகெட்ட சினிமா கலாச்சாரத்தின்பால் அழைத்துச் செல்லமாட்டான்;.

இஸ்லாமிய சினிமா???
இன்று சிலர் இஸ்லாமிய சினிமா என்ற பெயரில் ‘ஈரானிய படங்களை’ காட்டுகின்றனர். இந்தப்படங்களிலும் இஸ்லாம் தடுத்த இசை, காதல் ஏனைய படங்களை போல காணப்படுகின்றது. இப்படிக் கூறுகின்றவர்களிடம் கேட்டால் எமது சமூகத்தில் படம் பார்த்துப்பழகியவர்களை மாற்றுவதற்காகத்தான் இஸ்லாமிய சினிமாவை காட்டுகின்றோம் எனக் கூறுகின்றார்கள் இவர்களைப் பார்த்து நாம் கேட்க விரும்புவது, எமது சமூகத்தில் சாராயம் குடித்துப் பழகியவர்களை மாற்றுவதற்காக இஸ்லாமிய சாராயக்கடையையும், எமது சமூகத்தில் விபச்சாரம் செய்து பழகியவர்களை மாற்றுவதற்காக இஸ்லாமிய விபச்சார விடுதிகளையும் இவர்கள் உருவாக்க முன்வருவார்களா?
பாவத்தை பாவம் என்றுதான் கூற முடியும். அதை விட்டு விட்டு மாற்று முறை உருவாக்க நினைப்பது முட்டாள் தனமான காரியம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இதைப் போன்றுதான் ‘இஸ்லாமிய பாடல்கள்’ என்ற பெயரில் எமது சமூகத்தில் உலாவிவரும் இசையுடன் கூடிய, இஸ்லாமிய அகீதாவை தகர்க்கின்ற பாடல்கள் தொடர்பில் நாம் விழிப்பாக இருக்கவேண்டும.
இறைவன் தனது அருள் மறையில் ‘இவருக்கு (முஹம்மதுக்கு) கவிதையை நாம் கற்றுத் தரவில்லை (அது) அவருக்குத் தேவையுமில்லை, இது அறிவுரையும், தெளிவான குர்ஆனும் தவிர வேறில்லை’ (36:69).
மேலும் மற்றுமொரு வசனத்தில்; ‘கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள் அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் தட்டழிந்து திரிவதை நீர் அறிய வில்லையா?, அவர்கள் செய்யாததைக் கூறுகின்றனர்’ (26:224-226).
இன்னும் இன்றைய தொலைக்காட்சிகளில் கிறிஸ்தவ பிரச்சாரங்கள் முன்பைக் காட்டிலும் மிக வேகமாக இருக்கின்றன. அதில் குருடர்களுக்கு பார்வை அளிக்கப்படுவதாகவும், மற்றும் தீராத நேய்கலெல்லாம் தீர்ந்து சுகமடைவதாகவும் போலியான முறையில் காண்பிக்கப்படுகின்றன. இதனைப் அவதானிக்கும், ஈமானில் பலவீனமான நமது ஆண்களும், பெண்களும் தாமும் ஏன் அந்த வழியில் சென்று பிரச்சினைகளைத் தீர்த்துக் கௌளக் கூடாது என்று மதம் மாறக்கூடிய நிலையும் காணப்படுகின்றது. (இப்படியான சில சம்பவங்களும் நடந்துள்ளன).
நம்மை நாம் நல் வழியில் கொண்டு செல்வது இக் காலகட்டத்தில் எளிதான காரியமல்ல வெட்கக்கேடு மானக்கேடு, தீச்செயல்கள் மற்றும் இன்னோரன்ன பாவங்களையும் அவைகளின் தூண்டுதல்களிற்கு அடிமைப்படாமலும் நாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும்.
நம்மை நாம் சீர்படுத்திக்கொள்ள அல்குர்ஆன் அஸ்ஸூன்னாவினால் மாத்திரமே முடியும். ஆகவே, நம்மை சீரழிக்கும் இந்த சினிமா மோகத்திலிருந்தும் வழி கெடுக்கும் இந்த சீரியல் கலாச்சாரத்திலிருந்தும் எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனை வரையும் காத்தருள்வானாக.
http://riyaf11.blogspot.com/2010/04/home.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக