செவ்வாய், 3 மே, 2011

நல்ல கணவன்


குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவியரிடையே ஆயிரம் பிரச்சினைகள் தோன்றலாம் இது இயல்பானதே. பிரச்சினைகளே இல்லாது வழ்வதும் அசாத்தியமானதே. அப்படியானால்
பிரச்சினைகள் இயல்பானவை. இந்தப் பிரச்சினகளுக்கு  மத்தியில் சம நிலையில் நின்று வாழ்க்கையை ஓட்டிச் செல்பவனே ஒரு நல்ல கணவனாவான். பெண்ணைப் பெண்ணாகப் பார்க்கத் தவறுவதன் விளைவுதான் இவ்வாறான சர்ச்சைகளுக்கான மூல காரணமாகும்.  பெண்ணின் இயல்புக்கு முக்கியத்துவம் கொடுத்துத்தான் அவளோடு வாழ்க்கையை நடாத்த வேண்டுமேன இஸ்லாமும் பணிக்கின்றது. இந்தவகையில் ஒரு கணவன் பெற்றிருக்கவேண்டிய பண்புகளில் சிலவற்றைப் பின்வருமாறு நோக்கலாம்.

''உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!''
கணவன் திருமணத்திற்குப் பிறகு தம் மனைவியுடன் பழகுவதிலும் அவளை நடத்துவதிலும் இஸ்லாம் கற்பிக்கும் நெறி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள், அவளுடன் அழகிய முறையில் பழகுவது, அவளைக் கண்ணியமாக நடத்துவது ஆகியவை குறித்து இஸ்லாம் போதிக்கும் நல்லுரைகளை நாம் ஆராய்ந்தால் அவை நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன. இஸ்லாம், பெண்ணின் உரிமைகளைப் பற்றி மிக ஆழமாக உபதேசித்துள்ளது. அவளுக்கு உலகின் எந்த மார்க்கமும் அளித்திராத உயரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது.

இதோ, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆண்களை எச்சரிக்கிறார்கள்:

"பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில், பெண், (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல் பகுதியாகும். அதை நீ நிமிர்த்திக் கொண்டே போனால், ஒடித்து விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணல் உள்ளதாகவே நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.'' (நூல்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

"பெண், விலா எலும்பைப் போன்றவள். அவளை நீ நிமிர்த்தினால் ஒடித்து விடுவாய். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால், அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்.'' (நூல்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

"பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள். ஒரே நிலையில் உனக்கு நிலையாக இருக்கமாட்டாள். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால் அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்! அவளை நீ நேராக்க முயன்றால் ஒடித்து விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளைத் 'தலாக்' விடுவதாகும்.'' (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)

இலக்கிய நயமான இந்த உதாரணத்தில் பெண்ணின் இயற்கைத் தன்மைகளையும் பண்புகளையும் மிகத் துல்லியமாக நபி அவர்கள் விவரித்துள்ளார்கள். மனைவி என்பவள் கணவர் விரும்புவது போன்று ஒரே நிலையில் சீராக இருக்கமாட்டாள். அவளிடம் சில கோணலான பண்புகளும் இயல்பாகவே அமைந்திருக்கும். இதைக் கணவர் விளங்கிக் கொள்ள வேண்டும். பூரணமானது அல்லது சரியானது என, தாம் நினைக்கும் முறையில் அவளைத் திருத்திவிட முயலக் கூடாது. பெண்மைக்கென்று அமைந்துள்ள இயற்கைப் பண்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவளை, அல்லாஹ் எந்த இயல்புடன் படைத்தானோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மனைவியின் சில குணங்கள் தமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, தாம் விரும்புவது போலவே அவளை மாற்றிட நினைப்பது, 'விலா எலும்புகள் எதுவும் வளைந்திருக்கக் கூடாது அவற்றை நேராக்கியே தீருவேன்' என்று நினைப்பது போலாகும். அப்படி நினைத்துச் செயல் பட்டால் அது அந்த எலும்புகளை முறித்து விடுவதில்தான் போய் நிற்கும். அதுபோன்றே ஒரு கணவர் தம் மனைவியை தாம் விரும்பியவாறு சீராக்க நினைப்பதும் விவாகரத்தில்தான் கொண்டுபோய் சேர்த்துவிடும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்ணின் மன நிலைiயும் இயற்கைப் பண்புகளையும் ஆழமாக விளங்கி விவரித்திருக்கிறார்கள். இந்த வழிகாட்டுதலை உள்ளத்தில் ஏற்றுள்ள உண்மை முஸ்லிம், தமது மனைவியின் குறைகளை சகித்துக்கொள்வார். அவளது சிணுங்கல்களைப் பொருட்படுத்த மாட்டார். அதன் மூலம் அவரது இல்லறம் சண்டை, சச்சரவு, வாக்குவாதம், கூச்சல் இல்லாத மகிழ்ச்சி, அமைதி, நிம்மதி நிறைந்த இன்பப் பூங்காவாகத் திகழும்.

சற்றுமுன் கூறப்பட்ட நபிமொழியை ஆய்வு செய்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது நபி அவர்கள், 'பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்' என்று ஆரம்பித்து, பிறகு அவளது இயல்புகளை விவரிக்கிறார்கள். அதன் பின், மீண்டும் தாம் ஆரம்பித்த முந்தைய வார்த்தையைக் கூறியே முடிக்கிறார்கள். ஆகவே, நபி அவர்கள் பெண்ணுக்கு எந்தளவு முக்கியத்துவம் அளித்துள்ளார்கள் அவளது இயல்பைப் பற்றி எந்தளவு ஆழமாக விளங்கி இருக்கிறார்கள் அவள் மீது எந்தளவு இரக்கம் கொண்டுள்ளார்கள் என்பதைக் கவனியுங்கள்! நபி அவர்களின் இந்த மேலான வழிகாட்டுதல்களை எல்லா நிலைகளிலும் முன்மாதியாக அமைத்து செயல்படுவதைத் தவிர ஓர் உண்மை முஸ்லிமுக்கு வேறு ஏதேனும் வழியுண்டோ!

பெண்களுக்கு மிக முக்கியத்துவம் அளித்ததால்தான் தமது இறுதி ஹஜ்ஜின் பேருரையிலும் பெண்களைப்பற்றி நபி அவர்கள் உபதேசிக்க மறந்துவிடவில்லை. முஸ்லிம்களுக்கு எவற்றையெல்லாம் சொல்ல வேண்டுமோ அவை அனைத்தையும் கூறுவதற்கான கடைசி வாய்ப்பாக இறுதி ஹஜ்ஜுப் பேருரையைப் பயன்படுத்தினார்கள். அந்த உரையின் ஆரம்பமே பெண்களைப் பற்றியதாக அமைந்திருப்பது, அதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "அறிந்து கொள்ளுங்கள்! பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் உங்களிடத்திலே உதவியாளர்களாகவே இருக்கிறார்கள். அதைத்தவிர வேறெதையும் நீங்கள் உரிமையாக்கிக் கொள்ள முடியாது அவர்கள் பகிரங்கமான மானக்கேடான விஷயங்களில் ஈடுபட்டாலே தவிர! அவ்வாறு அவர்கள் ஈடுபட்டால் படுக்கையிலிருந்து அவர்களை ஒதுக்கி வையுங்கள். அவர்களை காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவர்கள் மீது எந்த மாற்று வழியையும் தேடாதீர்கள். அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு உங்கள் மனைவியர் மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமை என்பது, உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது விரிப்பை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீதான அவர்களுடைய உரிமை என்பது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.'' (நூல்: ஜாமிவுத் திர்மிதி)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த உபதேசத்தை ஒவ்வொரு உண்மை முஸ்லிமும் நிச்சயமாக செவிமடுப்பார். கணவன், மனைவி இருவரின் உரிமைகள், கடமைகள் குறித்து நபி அவர்கள் எத்துணை நுட்பமாக வழிகாட்டியுள்ளார்கள் என்பதைக் கவனத்தில் கொள்வார். இதில் குறிப்பாக பெண்கள் மீது கருணை, அன்பு காட்டுவது, அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்வது பற்றி நபி வலியுறுத்தியுள்ளார்கள். ஆகையால், முஸ்லிம்களின் வீடுகளில் பெண்கள் மீது அநீதி இழைக்கப்படுவது அல்லது அவர்களுக்கு இடையூறு செய்யப்படுவதற்கான எவ்வித வாய்ப்பும் அறவே இருக்காது.
பெண்ணைப் பேணுவதைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய உபதேசங்கள் ஏராளமானவை. தமது மனைவியிடத்தில் அழகிய முறையில் நடந்து கொள்பவர்தான் இச்சமுதாயத்தின் சிறந்தோர்் ஆக முடியும் என்கிற அளவிற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "நம்பிக்கையாளர்களில் நம்பிக்கையில் (ஈமானில்) பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே! உங்களில் சிறந்தோர் உங்கள் மனைவியடத்தில் சிறந்தோரே!'' (நூல்: ஜாமிவுத் திர்மிதி)

இந்த நபிமொழி, நம்பிக்கையாளர் மிக நேர்த்தியான குணத்தைக் கொண்டிருக்க வேண்டும் அந்த குணமில்லாமல் பரிப10ரண நம்பிக்கையை அடைய முடியாது நாம் யாரை நம்மில் சிறந்தவராக கருதுகிறோமோ அவர், தம் மனைவிக்கும் சிறந்தவராக விளங்க வேண்டும் நம்மிடத்தில் சிறந்தவராக இருந்து மனைவியிடத்தில் சிறந்தவராக இல்லையென்றால் உண்மையில் அவர் நம்மில் சிறந்தவரல்லர்' என்று வலியுறுத்துகிறது.

சில பெண்கள் தங்களுடைய கணவர்களைப்பற்றி முறையிடுவதற்காக நபி அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆண்களின் காதுகளுக்கு எட்டும் விதமாக "முஹம்மதின் குடும்பத்தாரிடம் சில பெண்கள் தங்களது கணவன்மாரைப்பற்றி முறையிட வருகிறார்கள். அந்தக் கணவர்கள் உங்களில் சிறந்தவர்கள் அல்லர்'' என்று கூறினார்கள். (நூல்: ஸுனன்் அபூதாவூத்)

நேரிய மார்க்கமான இஸ்லாம், பெண்ணுக்கு நீதி வழங்குவதிலும் அவளைக் கண்ணியப் படுத்துவதிலும் ஏனைய மார்க்கங்களைப் பார்க்கிலும் மிக உயர்ந்தே நிற்கிறது. அவளைக் கணவன் வெறுத்தாலும் அவளுடன் நல்ல முறையிலேயே நடந்து கொள்ள வேண்டும் என உபதேசிக்கிறது. பெண்கள், தங்களது வரலாற்றில் இஸ்லாமைத் தவிர வேறெங்கும் இந்தக் கண்ணியத்தை அடைந்து கொண்டதே கிடையாது.

மேலும், "அவர்களுடன் (பெண்களுடன்) சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திருக்கலாம்.'' (அல்குர்ஆன்: அன்னிஸா 4:19)

இந்த இறைவசனம் உண்மை முஸ்லிமின் உள்ளுணர்வைத் தொட்டுப் பேசுகிறது. அவரது கோபத்தின் கொதிப்பைத் தணிக்கிறது தம் மனைவி மீதான வெறுப்பின் வேகத்தைக் குறைக்கிறது. ஆகவே, இதன் மூலம் மண வளையம் துண்டிக்கப்படுவதிலிருந்து இஸ்லாம் அதைப் பாதுகாக்கிறது. இங்குமங்கும் அலைபாயும் மடத்தனமான எண்ணங்களாலும், மாறிக் கொண்டே இருக்கும் சுபாவத்தினாலும் தூய்மையானத் திருமண உறவில் பங்கம் ஏற்படுவதை விட்டும் கட்டிக்காக்கிறது. தம் மனைவியின் மீது வெறுப்பு ஏற்பட்டு விட்டதால் அவளை விவாகரத்துச் செய்யப் போவதாக கூறிய மனிதருக்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் "உனக்கென்ன கேடு! இல்லறம் அன்பின் மீதுதானே அமைக்கப்படுகிறது. அதில், பராமரிப்பும் புறக்கணிப்பும் எப்படி ஒன்று சேர முடியும்?'' என்று அறிவுரை கூறினார்கள்.
இஸ்லாமில் திருமண ஒப்பந்தம் என்பது அற்பமான உணர்வுகளின் வெளிப்பாடோ அல்லது இயற்கை ஆசையைத் தணித்து விட்டுப் போவதற்கான வழியோ அல்ல. மாறாக, இதற்கெல்லாம் மேலாகத் தூய்மையானதும் மிகக் கண்ணியமானதுமாகும். உண்மை முஸ்லிமிடம் மனித நேயமும், அறிவும், நற்குணமும், சகிப்புத் தன்மையும், விசாலமான இதயமும் அமைந்திருக்கும். அந்தப் பண்புகள் தமது மனைவியிடம் காணப்படும் வெறுக்கத்தகுந்த குணங்களைச் சகித்துக் கொள்ளும் பக்குவத்தை அவருக்கு அளிக்கும். உண்மை முஸ்லிம் தமது இறைவனின் கட்டளையைப் பின்பற்றுவார். மனைவியின் மீது வெறுப்புள்ளவராக இருந்தாலும் நல்லுறவையே கடைப்பிடிப்பார். தமது இறைவனின் கூற்றுக்கிணங்க தம்மை அமைத்துக் கொள்வார். ஏனென்றால், மனிதன் சில விஷயங்களை வெறுத்து அதிலிருந்து விலகியிருக்க விரும்புகிறான். ஆனால், உண்மையில் அவை நன்மைகளால் சூழப்பட்டதாகவும், நல்லதை உள்ளடக் கியதாகவும் அமைந்திருக்கும்.

எனவே உண்மை முஸ்லிம், எப்படி நேசிக்க வேண்டும், எப்படி வெறுக்க வேண்டும் என்பதையெல்லாம் அறிந்திருப்பார். நேசிப்பவர் மீது குருட்டுத்தனமான நேசத்தைக் கொண்டிருக்கவும் மாட்டார். அதே சமயம், வெறுப்பவர் மீது கல்நெஞ்சம் கொண்ட, பிடிவாதமான, அடிப்படையற்ற கோபத்தையும் வெளிப்படுத்த மாட்டார். நேசிப்பிலும் வெறுப்பிலும் நீதமான நடுநிலையைக் கொண்டிருப்பார்.

"முஸ்லிமான பெண்ணை அவளது கணவர் எவ்வளவுதான் வெறுத்தாலும் அவளிடம் விரும்பத்தகுந்த பல நற்குணங்கள் இருந்தே தீரும். எனவே, அந்தக் கணவர் தமது மனைவியிடம் தமக்கு திருப்தி அளிக்கும் நற்குணங்கள் இருப்பதை மறந்துவிடக் கூடாது. அவளிடம் உள்ள வெறுக்கத்தக்க குணங்களைச் சுட்டிக் காட்டித் திருத்தவும் தவறக்கூடாது'' என மகத்தான இறைத்தூதர் அவர்கள் தெளிவு படுத்தினார்கள்.

நபி அவர்கள் கூறினார்கள்: "எந்த ஒரு முஃமினும் (நம்பிக்கையாளரும்) முஃமினான பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை அவர் வெறுத்தால் மற்றொரு குணத்தைப் பொருந்திக் கொள்வார்.'' (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)

''இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்'' என நபி அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2915)

உண்ணும் போதும், உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள். (அறிவிப்பாளர்: முஆவியா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத் 19160)

''அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட'' என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். 9அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 56)

ஒரு மனிதர் நபியவர்களிடம் ''மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?'' என்று கேட்டார் அதற்கு நபி அவர்கள், ''நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அபூதாவூத் 1830, அஹ்மத் 19162)

''இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று நபி அவரகள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மதி 1082)

என்ன! உங்களது கணவன்மாரும் இப்பdiயான பண்புகளைப் பெற்றவரா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக