ஞாயிறு, 26 ஜூன், 2011

மிஃறாஜ்


இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் அல்லாஹ் அவர்களுக்கு பல்வேறு அற்புதங்களை வழங்கினான். அவற்றுள் முக்கியமானதே மிஃறாஜ் நிகழ்வு.
ஓர் இரவில்
ஏழு வானங்கள் அர்ஷ், குர்S ஆகியவைகளைக் கடந்து அல்லாஹ்வின் சமூகத்தில் சேர்ந்தார்கள். காலம், இடம் ஆகிய அனைத்துக்கும் அப்பாற்பட்ட நிலையில் சர்வ சக்தியுடைய அல்லாஹ்வை தங்கள் கண்களால் கண்டார்கள். உரையாடினார்கள். மறைவான விஷயங்கள் பலவற்றை அல்லாஹ் அவர்களுக்கு வெளியாக்கினான்.
மனிதர்களின் கண்களால் பார்க்க முடியாதவைகளைப் பார்த்தார்கள். செவிகளால் கேட்க இயலாதவற்றைக் கேட்டார்கள். ஐந்து நேரத் தொழுகை எனும் மேலான பரிசும் மற்றும் பல வாக்குறுதிகளும் அல்லாஹ்வின் சன்னிதானத்தில் இருந்து அவர்களுக்கு வழங்கப்பட்டன. சுவர்க்க நரகங்களைக் கண்டார்கள். மீண்டும் வானங்கள் வழியாக வெகுவிரைவில் மஸ்ஜிதுல் அக்ஸா வந்து அங்கிருந்து மக்காவிற்கு திரும்பி வந்து விடுகிறார்கள். இப்பிரயாணம் முழுவதும் ஓர் இரவின் சொற்ப நேரத்தில் நிகழ்ந்தது. இதுவே மிஃறாஜ் எனும் அற்புதம்.
மிஃறாஜ் பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுகையில்…., அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். அவன் முஹம்மது நபி (ஸல்) அலைஹிவஸல்லம் எனும் தன் அடியாரை (கஃபாவாகிய) சிறப்புற்ற பள்ளியில் இருந்து (வெகு தூரத்தில் இருக்கும்) பைதுல் முகத்தஸ் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான். (அவ்வாறு அழைத்துச் சென்ற) நாம் அதனைச் சூழவுள்ள பூமிகளை ஆசீர்வதித்துள்ளோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அழைத்துச் சென்றோம். நிச்சயமாக (உமதிறைவனாகிய) அவனே செவியுறுவோனாகவும் உற்றுநோக்குபவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் அத்தியாயம் 17 வசனம் 1)
குர்ஆன் வர்ணிக்கும் இந்த மிஃறாஜ் எனும் அற்புத நிகழ்வு உலகில் அதற்கு முன்னர் எந்த ஒரு நபிக்காகவும் நடைபெறவில்லை. அடுத்து உலகம் முடியும் வரை வேறு எவருக்காகவும் இனி நடக்கப்போவதுமில்லை. அல்லாஹ்வின் மகத்தான சக்தியின் தன்மையை மனிதன் உணர்வதற்கு சிறந்த சான்றே மிஃறாஜ்.
மி ஃறாஜ் நிகழ்வு எப்போது நடைபெற்றது என்பதில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் ஹிஜ்ரத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் ரஜப் மாதம் 27ம் திகதியில் தான் என்றே பெரும்பாலான அறிஞர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். (பத்ஹுல் பாரி ஷாஹுல் மவாஹிப்)
நபிகளாரின் அருமைத்துணைவியார் கதீஜா (ரழி) அவர்களின் மரணம், இஸ்லாத்தை தழுவாத குறைஷியர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் சமூகப் பகிஷ்கரிப்பு செய்தமை, தாயிப் ஹிஜ்ரத்தில் ஏற்பட்ட தோல்வி நிலை என்பவற்றால் நலிவடைந்திருந்த முஹம்மது (ஸல்) அவர்களை கண்ணியப்படுத்த அல்லாஹ் அருளிய அற்புதமே மிஃறாஜ் என்று கூறமுடியும்.
அந்த இரவில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹானி (ரழி) அவர்கள் வீட்டில் உறங்கியிருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்களும் மற்றும் சில வானவர்களும் வீட்டினுள் இறங்கி அண்ணலாரை ஹறம் ஷரீபிற்குள் இட்டுச் சென்றார்கள்.
அங்கு சென்ற அண்ணலார் ஹதீம் என்ற இடத்தில் மீண்டும் உறங்க அங்கு வந்த ஜிப்ரயீல் (அலை), மீக்காயீல் (அலை) ஆகிய இரு வானவர்களும் அண்ணலாரை எழுப்பி நெஞ்சைப் பிளந்து இருதயத்தை ஸம்ஸம் நீரால் கழுவி மறுபடியும் பழையபடி பொருத்திவிட்டார்கள். பின்னர் சுவனத்தில் இருந்து கொணரப்பட்ட புராக் வாகனத்தில் ஏற்றி மஸ்ஜிதுல் அக்ஸா நோக்கிப் புறப்பட்டார்கள். இதனையே ‘அல் இஸ்ரா’ என்கிறோம்.
அல் இஸ்ரா என்ற இந்தப் பயணத்தில் நபிகளார் பல இடங்களை தரிசித்தவர்களாகவும் கோள் சொல்பவர்கள், புறம் பேசுபவர்கள், வட்டியில் சம்பந்தப்படுகின்றவர்கள், தொழுகையில் பேணுதலில்லாதவர்கள், விபசாரம் எனும் நாசகார செயலில் ஈடுபடுகின்றவர்கள் அடையப் போகும் வேதனை தரும் காட்சிகள் முதலானவற்றை அவதானித்துக் கொண்டும் சென்றார்கள்.
பைதுல் முகத்தஸ் சென்ற நபியவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களின் வழிகாட்டலில் நபிமார்களில் பலருக்கு இமாமாக நின்று தொழுகை நடத்தினார்கள். பைதுல் முகத்தஸில் இருந்து ஒரு ஏணி முலமாக மிஃறாஜ் பயணத்தை மேற்கொண்டார்கள் (அறிவிப்பவர் அபூ ஸயீதுல் குத்ரி (ரழி) ஏழு வானங்களிலும் நபிமார்களை சந்தித்தார்கள். ஸலாம் சொன்னார்கள்.
அவர்களும் பதில் ஸலாம் கூறி அண்ணலாரை வரவேற்றனர். 7ம் வானில் பைதுல் மஃமூரை அவதானிக்கின்றார்கள். இதற்கு மேலே அல்லாஹ்வின் அர்ஷ¤ நேர் கீழே கஃபதுல்லாவும் காணப்படுகின்றது. பைதுல் மஃமூர் என்பது வானவர்களான மலாயிகாமார்கள் வலம் வரக்கூடிய அமைப்பாகும். பின்னர் முஹ்மத் (ஸல்) அவர்கள் ஸித்ரதுல் முன்தஹாவுக்கு உயர்த்தப்படுகின்றார்கள். அங்குதான் ஜிப்ரீல் (அலை) அவர்களின் உண்மையான தோற்றத்தையும் அல்லாஹ்வின் பேரொளியையும் கண்டார்கள். அங்கு சுவர்க்கம் நரகம் என்பனவும் அவர்களுக்கு காட்டப்பட்டன.
அதற்குப் பிறகு ஸரீஃபுல் அக்லாம் என்ற இடத்திற்கு உயர்த்தப்பட்டார்கள். அல்லாஹ்வின் உத்தரவுகள் பதியப்படும் இடம் இதுவாகும். இதனையும் நபி (ஸல்) அவதானித்த பிறகு ஒரு பச்சைக் கம்பளத்தின் மீது அமர்ந்தவாறு அல்லாஹ்வின் சன்னிதானத்தை அடைந் தார்கள். அல்லாஹ்வுடன் உரையாடினார்கள்.
இந்த சந்தர்ப்பத்தில்தான் அல்லாஹ், அண்ணலாரை பின்தொடரும் உம்மத்தினர்களாகிய எமக்கு ஐம்பது நேரத் தொழுகையையும் அல்குர்ஆன் 2ம் அத்தியாயத்தின் கடைசிப் பிரிவையும் (284 – 286 வரை) அருளி இதில் காணப்படும் துஆவுடைய வசனங்களை ஓதுபவர்களின் துஆ அவசியம் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தான். அண்ணலாரின் உம்மத்துக்களில் இணை வைக்காதவர்களுக்கு நிரந்தர நரக வாழ்வு இல்லை என்றும் அல்லாஹ் அறிவித்தான்.
தொழுகையையும் உறுதிமொழிகளையும் பெற்ற நபியவர்கள் மூஸா (அலை) அவர்களை சந்திக்கிறார்கள். மூஸா (அலை) அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க ஐம்பது நேரத் தொழுகையை ஐந்து நேரமாக அல்லாஹ் குறைத்துப் பெற்றுக் கொண்டார்கள். ஐந்து நேரம் தொழு பவர்களுக்கு ஐம்பது நேரத் தொழுகையின் நன்மை வழங்கப்படும் என்ற சுபச் செய்தியும் வழங்கப்படுகின்றது. பின்னர் பைதுல் முகத்தஸ் வந்த நபியவர்கள் புறாக் வாகனத்தின் மீதேறி விடிவதற்கு முன்னர் மக்கா நகரை அடைந்து விடுகின்றார். இதுவே மிஃறாஜ் எனும் அற்புதப் பயணமாகும். (தேன் துளி)

2 கருத்துகள்:

  1. கஹடோவிட தௌஹீத் ஜமாத்தின் உத்தியோகபூர்வ தளம் உதயம்:

    http://kahatowitathowheed.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. assalamu alaikkum varahmathullah,
    pls publish right story of mi'raaj by hadhees.. see http://onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/mihraj_thokuppu/

    பதிலளிநீக்கு