ஞாயிறு, 3 ஜூலை, 2011

பைத்துல் முகத்தஸ்


நீண்ட பெரும் வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட பலஸ்தீனிலுள்ள ஜெரூஸலம் நகரில் அமைந்துள்ள இறையருள் பெற்ற இறை இல்லமே பைத்துல் முகத்திஸ் மஸ்ஜிதாகும். இதனை பைதுல் மக்திஸ் எனவும் குறிப்பிடுவது வழக்கம். இதன் கருத்து தூய இல்லம், புனித இல்லம் என்பதாகும். இங்கு நபி ஸுலைமான் (அலை), தான் வாழ்ந்த காலத்தில் ஓர் இறையில்லத்தை நிறுவினார்கள். அந்த இறையில்லத்தை அன்றைய  ஹீப்ரு மொழியில் "பெத்ஹம்மிக்தாஷ்" எனப் பெயரிட்டு அழைத்தனர். அப்பெயரே அரபு மொழியில் பைத்துல் முகத்தஸ் என ஆயிற்று. காலப்போக்கில் இந்தப் புனித இல்லம் அமைந்திருந்த முழுப் பிரதேசமும் இப்பெயராலேயே அழைக்கப்படலாயிற்று. பொதுவாக இந்த மஸ்ஜிதை அல் அக்ஸா அல்லது மஸ்ஜிதுல் அக்ஸா எனவும் அழைப்பர்.


அல்குர் ஆனின் 17வது அத்தியாயமான அல் இஸ்ரா நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் இடம் பெற்ற விண்ணுலக யாத்திரை பற்றிப் பிரஸ்தாபிக்கும்போது இந்த மஸ்ஜிதின் பெயரைச் சுட்டிச் செல்வதைக் காணலாம். விண்யாத்திரை பற்றி ஹதீஸ்கள் குறிப்பிடுவது போன்று அல்குர் ஆன் குறிப்பிடவில்லை. மிஃராகஜ் இடம்பெறுவதற்குச் சற்று முன்னர் புனித கஃபாவிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு வருகை தந்த இந்த நிகழ்வையே அல்குர்ஆன் சுட்டிக்காட்டுகின்றது. இவ்வசனம் பிரஸ்தாபிக்கும் பைதுல் மக்திஸ் எனும் கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த  இந்த மஸ்ஜித் தெய்வீகப்படுத்தலுக்கு உட்பட்ட முக்கிய தலங்களுள் ஒன்றாகும்.  அல்குர் ஆன் இத்தலத்தை மட்டுமன்றி அது அமையப் பெற்றிருக்கும் பலஸ்தீனப் பூமியையும் இறையருள் பெற்றதாகும் எனச் சிலாகித்துக்  கூறுவது நோக்கத்தக்கது.

மஸ்ஜிதுல் அக்ஸாவையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளையும் அருள்பாலிக்கப்பட்ட பூமியாக ஆக்கினோம் என்பதனை இவ்வசனத்தில் மட்டுமன்றி அல்-மாஇதா, அல்-அன்பியா முதலாம் ஸூராக்களிலும் அல்லாஹ் குறிப்பிடுவதக் காணலாம்.
(அல்-மாஇதா)
(அல்-அன்பியா)

இந்த அல்குர் ஆன் வசனங்களில் புனித் பூமியென்றும் அருள்பாலிக்கப்பட்ட பூமியென்றும் அடைமொழிகளிட்டு முக்கியத்துவப்படுத்தப்படுவது பலஸ்தீனப் பூமியையே ஆகும் என்பதைத் தப்ஸீர் துறை அறிஞர்களின் விளக்கங்களில் இருந்தும் கண்டுகொள்ளலாம்.

எனவே ஒரு முஃமினின் உள்ளத்தில் புனித மக்காவும் அதிலமைந்துள்ள க்ஃபா, மஸ்ஜிதுன் நபவி என்பன எத்தகைய உயர்ந்த இடத்தையும் கண்ணியத்தையும் பெறுகின்றனவோ அதே ஈமானிய, அகீதா ரீதியான நேசிப்பையும் கண்ணியத்தையும் மஸ்ஜிதுல் அக்ஸாவும் அது அமைந்திருக்கும் பலஸ்தீனப் பூமியும் பெற்றிருக்க வேண்டுமென்பதை இவ்வசனங்கள் உணர்த்துகின்றன எனலாம்.

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைதுல் மக்திஸை நோக்கியே தொழுது வந்தார்கள் என்று ஸஹீஹான ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன. மட்டுமன்றி பின்வரும் ஹதீஸ்களும் இதன் முகியத்துவத்தை எடுத்துரைப்பதாய் அமைந்துள்ளமை நோக்கத்தக்கது.

"நீங்கள் மூன்று மஸ்ஜித்களைத் தவிர வேறு எதற்கும் புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டாம். அவை மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுன் நபவீ, மஸ்ஜிதுல் அக்ஸா" (புகாரீ)

"எனது சமூகத்தில் ஒரு குழுவினர் திமிஷ்க் மற்றும் பைதுல் மக்திஸின் வாயில் அருகிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் மறுமை நாள் தோன்றும் வரையில் போராடிக்கொண்டிருப்பார்கள்; சத்திய மார்க்கத்தைச் சார்ந்து நின்று (மற்றெல்லா கொள்கை, கோட்பாடுகளையும் ) மிகைத்த நிலையில் காணப்படுகின்ற அந்தக் குழுவினருக்கு துரோகம் இழைக்கின்றவர்களினால் அவர்களுக்கு எத்தகைய தீங்கும் ஏற்படப் போவதில்லை." (முஸ்னத் அஹ்மத்/ மஜ்மஉஸ் ஸவாயித்)

"இறுதிக் காலத்தில் ஹழ்ரமௌத் பகுதியிலிருந்து வந்த மக்களை ஒன்றுகூட்டக்கூடியதொரு நெருப்பு தோன்றும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! இந்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?" என ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு, நபியவர்கள் "நீங்கள் ஷாம் தேசத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்" என பதிலளித்தார்கள். (அஹ்மத், திர்மிதி)

ஆரம்ப காலம் முதல்  பைது முகத்தஸ் மஸ்ஜித் அமைந்துள்ள ஜெரூஸலம் நகர் "ஸலேம்" என்றே அழைக்க்ப்பட்டு வந்தது. இங்கு வாழ்ந்து வந்த "கனாஅனைட்"  எனும் பிரிவினர் பலஸ்தீனர்களின் மூதாதையராவர். இவர்களில் தொன்றிய நேர்மை மிக்க அரசனொருவன், அதுவரை ஸலேம் என்ற பெயரில் இருந்த கிராமத்தை ஒரு நகராக்கி அங்கு ஒரு தேவாலயத்தையும் நிறுவி அந் நகருக்கு ஜெரூஸலம் எனவும் பெய்ரிட்டான். கி.மு. 1800களில் வாழ்ந்த இந்த அரசன் "மெல்ஸிஸேடக்" (MELCISEDAK) எனும் பெயர் கொண்ட நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சமகாலத்தவராவான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நகர் கி.மு. 1600 முதல் 1300 வரை எகிப்து நாட்டின் ஆதிக்க்த்தின் கீழ் இருந்தது. இக்காலப் பிரிவில் இந்நகர் "ஹீப்ரு" எனும் பிரிவினரின் தாக்குதலுக்கு உள்ளானது. இப்பிரிவினர்தான் யூதர்களின் மூதாதையர்களாகவும் கருதப்படுகின்றவர்களாவர்.

காலவோட்டத்தில் கனானைட்டுக்களதும் எகிப்தியர்களதும் பண்பாட்டுச் சீர்கேடுகளால் அவர்கல் வீழ்ச்சி கண்ட போது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய ஹீப்ரூக்கள் பல்ஸ்தீனில் (கன்ஆன்) தமது நிலைகளைப் பலப்படுத்திக் கொண்டனர். இக்காலகட்டத்தில் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருந்த ஹீப்ரூக்கள் மத்தியில் மூஸா எனும் எனும் பெயர் கொண்ட ஒரு ப்ரும் தலைவர் தோற்றம் பெற்றார். இறைத் தூதராக வருகை தந்த  நபி மூஸா (அலை) ஹீப்ரூக்களை எகிப்திலிருந்து வெளியேற்றி அவர்களை நெறிப்படுத்தி வந்தார்கள். இவர்களைத் தொடர்ந்து அவர்களது சகோதரர் ஹரூன் (அலை) ஹீப்ரூக்களை கன் ஆனுக்கு அழைத்துச் சென்றார்.  அங்கு முன்பே வாழ்ந்து வந்த ஹீப்ரூ இனத்தாருடன் இவர்களும் இணைந்து அப்பிரதேசத்தில் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வரலாயியினர்.

இதற்குப் பின்னரும் யூதர்கள் இப்பிரதேசத்தில் தொடர்ந்து வாழ்ந்து வந்தனராயினும் அவர்கள் தமக்குள்ளே பல பிரிவுகளாகப் பிரிந்து ஒழுக்கச் சீர்கேட்டோடு வாழ்ந்த போதெல்லாம் அவர்களைச் சீர்திருத்தவென அவ்வப்போது பல சீர்திருத்தவாதிகள் அவர்களிடையே தோன்றினர். இவ்வாறு தோன்றிய சீர்திருத்தவாதிகளுள் மிகப் பெரும் அரசர்களாகத் தோற்றம் பெற்ற நபி தாவூத் (அலை) ஆவர்களும் அவர்களது புத்திரர் நபி ஸுலைமாஅன் அவர்களும் குறிப்பிடத்டக்கவர்களாவர். நபி தாவூதின் ஆட்சியில்தான் ஹீப்ரூக்களுக்கு கன் ஆனில் முதன்முதலாக உறுதி மிக்கதோர் ஆட்சியை நிறுவ முடிந்தது.  மட்டுமன்றி இக்காலப் பிரிவில்தான் (கி.மு. 1000) ஜெரூஸலம் நகரும் முதல் தடவையாக ஹீப்ரூக்கள் வசமாகியதால் நபி தாவூத் (அலை) இந்த நகரை யூத சாம்ராஜ்ஜியத்தின் தலை நகராகப் பிரகடனம் செய்தார்.

நபி தாவூத் (அலை) யைத் தொடர்ந்து அவரது மகன் ஸுலைமான் (அலை) இப்பிரதேசத்தின் ஆட்சியாளரானார். ஏற்கெனவே மெல்ஸி ஸேடக்  அரசனால் நிறுவப்பட்ட தேவாலயம் இருந்த இடத்தில் நபி ஸுலைமான் (அலை) யூதர்களுக்கெனத் தனியான ஓர்  ஆலயத்தை நிறுவினார்.

நபி ஸுலைமான் மரணித்த பின்னரும் யூதர்களின் ஆட்சியானது பல்வேறு சிக்கல்களுக்கும் தடங்கல்களுக்கும் மத்தியில் சுமார் நாங்கு நூற்றாண்டுகள் நிலைத்திருந்தது.இக்காலகட்டத்தில் அஸீரியர், அரேபியர், எகிப்தியர் முதலானோர் இப்பிரதேசத்தின் மீது படையெடுத்தும் முற்றுகையிட்டும்  வந்தனர். கி.மு. 587ல் யூத் சாம்ராஜ்ஜியம் பபிலோனியரின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. இதன்போது யூதர்களுக்கும் பபிலோனியருக்குமிடையில் ஏற்பட்ட கலகத்தில் ஜெரூஸலம் நகர் அழிந்தொழிந்தது. இதன்போது இங்கு நபி ஸுலைமான் (அலை) நிறுவிய ஆலயமும் எரிந்து சாம்பலாகியது.

இந்த நிகழ்வு இடம்பெற்று சுமார் ஐம்பது ஆண்டுகளின் பின்னர் கி.மு. 538ல்  பாரசீக மன்னர் ஸைரஸ் ( CURUS ) பபிலோனியரைத் தோல்வியுறச் செய்து பலஸ்தீனைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தான்.  யூதர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய ஸைரஸ், பபிலோனியரால் துரத்தப்பட்டிருந்த யூதர்களை பலஸ்தீனில் மீள்குடியேற வழி செய்ததோடு  எரிந்து சாம்பலாகிய ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்யவும் வழிவகை செய்தான்.கி.மு. 515ல் நபி ஸுலைமானின் ஆலயம் ஸைரஸினால் கட்டிமுடிக்கப்பட்டது. இதன்பின்னர் இவர்கள் மீண்டும் திருந்தி வளம் மிக்க மக்களாக வாழ்ந்து வரலாயினர்.

கி.மு. 332ல் ஜெரூஸலம் பாரசீகரிடமிருந்து கிரேக்க்ர் வசமாகியது. கிரேக்கர் இங்கிருந்த ஆலயத்தில் சிலைகளை வைத்து வணங்க வழி செய்தனர். கி.மு.164ல் கிரேக்கரிடமிருந்து யூதர்கள் தமது இராச்சியத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். அது முதல் அங்கு 150 ஆண்டுகள் யூதர்களின் ஆட்சி நிலவியது. தொடர்ந்து ரோமர்கள்  இந்நகரைக் கைப்பற்றினர். கிறிஸ்தவர்களான இவர்கள் குலபாஉர் ராசிதூன்களின் இரண்டாவது கலீபாவான கலீபா உமர் (ரழி) அவர்களின் ஆட்சிக் காலம் வரை நிலைத்திருந்தது.

ரோமரின் ஆதிக்கத்தை விரும்பாத யூதர்கள்ரோமரை எதிர்த்துக் கலகங்களை விளைவித்தனர். ரோமரின் ஆதிக்கத்தை வீழ்த்தி அவர்களின் ஆட்சியையும் கைப்பற்றத் துணிந்தனர். இவர்கள் தம்மிடையே தோன்றிய இறைத் தூதர் ஈஸா (அலை) யையும் ஏற்க மறுத்தனர். இதனால் யூதர்கள் பிறிதொரு முறையும் இறைவனின் தண்டனைக்கு ஆளாகினர்.

கி.பி. 33ல் நபி ஈஸா(அலை) அவர்கள் இங்கிருந்து விண்ணகத்துக்கு உயர்த்தப்பட்டார்கள். கி.பி. 69/70ல் ரோமானியப் பேரரசன் டைட்டஸ் (  ) ஜெரூஸலத்தை முற்றுகையிட்டு வெற்றீ பெற்றதோடு அ ந் நகரையும் அங்கிருந்த புனித ஆலயத்தையும் அழித்தொழிக்கும் நாசகார வேலைகளிலும் ஈடுபட்டான். கி.பி. 136ல் ஆட்சி செய்த ரோமானியப் பேரரசர் 'ஹட்ரியன்' இதற்கு "கலோனியா ஈலியா கெபிடோனியா"   எனப் பெயரிட்டான். இப்பெய்ரே காலப் போக்கில் சுருங்கி "ஈலியா" என அழைக்கப்பட்டது. இதனையே கிறிஸ்தவர்களும் ஏனையோரும் ஜெரூஸலம் என அழைத்து வந்தனர். கி.பி. 336களில் இங்கு கிறிஸ்தவக் கோயில்கள் கட்டப்பட்டன. கி.பி. 614ல் பாரசீக மன்னன் 2ம் குஸ்ரூவால்  இந்நகர் வெற்றி கொள்ளப்பட்டுப் பாரசீகர் வசமாகியது.


இஸ்லாத்தின் வருகைக்குப் பின்னர் பைத்துல் முகத்தஸ்


கி.பி. 621ல் அல்குர் ஆனின் 17வது அத்தியாயமான அல்-இஸ்ரா குறிப்பிடும், நபியவர்களது வாழ்வில் இடம்பெற்ற அதிசய நிகழ்வான விண்ணுலக யாத்திரையும் இங்கிருந்துதான் துவங்கியது.ஜெரூஸலம் ஊடாக மேற்கொள்ளப்பட்ட இப்பயணத்தின் போதுதான்  தொழுகை கடமையாக்கப்பட்டது.அது முதல் சுமார் பதினேழு மாதங்கள் வரை  இந்த பைத்துல் முகத்தஸே முஸ்லிம்களின் கிப்லாவாக இருந்து வந்தது.

கி.பி.628ல் ரோமானியப் பேரரசர் ஹிரக்கீலியஸ் வெற்றி முழக்கத்தோடு ஜெரூஸலம் நகரினுள் நுழைந்தார். இந்த நிகழ்வை அல்குர்  ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

"ரோம் தோல்வியடைந்துவிட்டது. அருகிலுள்ள பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தமது தோல்விக்குப் பின்னர் வெகு  சீக்கிரத்தில் வெற்றியடைவர். சில வருடங்களுக்குள்ளேயே! வெற்றியையும் தோல்வியையும் அளிக்கும் அதிகாரம் இதற்கு முன்னரும் பின்னரும் அல்லாஹ்விற்கே உரியது. அவர்கள் வெற்றியடையும் அந்நாளில் விசுவாசிகள் மகிழ்ச்சியடைவர். (அர்-ரூம்:2-4)

ரோமானியரையடுத்து ஜெரூஸலம் முஸ்லிம்களின் ஆளுகைக்குள் வந்தது. 636ல் தள்பதி காலித் பின் வலீத் தலைமையில் நடைபெற்ற யர்மூக் யுத்தத்தில் ரோமர் தோல்வி கண்டதன் மூலம் பலஸ்தீனின் பிரதான வாயிலை அவர்கள் முஸ்லிம்களுக்குத் திறந்து கொடுத்தனர். கலீபா உமரின் படைத்தளபதியாகச் சென்ற நபித் தோழர் அபூ உபைதாவிடம், கலீபா உமரிடம்தான் ஜெரூஸலத்தை ஒப்படைப்பதாக அதன் பாதிரியார் சோப்ரோனியூஸ் ஒரு  நிபந்தனை  விதித்தார். நிபந்தனையை ஏற்றுக் கொண்ட கலீபா ஜெரூஸலத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.

கலீபா உமர் ஜெரூஸலம் நகரைத் தனது கிலாபத்தோடு இணைத்துக் கொண்டபோது அங்கு எவ்விதமான கலகங்களும் இடம்பெறவில்லை. அதுவரை அங்கு வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்களோடு கலீபா ஓர் உடன்படிக்கையும் செய்துகொண்டார். இக்காலப்பிரிவில் ஜெரூஸலத்தில் யூதர்களுக்கெனவும் கிறிஸ்தவர்களுக்கெனவுமென தனித்தனியான ஆலயங்கள் இருந்தன. அப்போது அங்கிருந்த பைத்துல் முகத்தஸ் என்ற இறையில்லத்துக்கு எவரும் உரிமை கோரவில்லை. ஆட்சியை வைத்திருந்த கிறிஸ்தவர்களும் அவர்களின் குடிமக்களாக இருந்த யூதர்களும் கைவிட்ட நிலையில் ஒதுக்கி வைத்திருந்த இடத்தைத்தான் கலீபா உமர் தூய்மைப்படுத்தி அங்கு தொழுகையும் நடாத்தினார். இந்த நிகழ்வை இரு சமூக மக்களும் அப்போது ஆட்சேபிக்கவில்லை என்பது நோக்கத்தக்கது.

ஜெரூஸலம் முஸ்லிம்கள் வசமான பின்னர் அங்கு முஸ்லிம்கள் குடிமக்களாக வாழத் தலைப்பட்டதால் காலகதியில் அது ஒரு முஸ்லிம் நகராகவே பரிணமித்தது. தலை சிறந்த இஸ்லாமிய அறிஞர்கள் பலரும்கூட இந்த நகரில் குடியேறி வாழ்ந்ததால் அது  ஓர் இஸ்லாமிய அறிவு நிலையமாகவும் மாற்றம் பெற்றது. உமையாக்கள் தமதாட்சிக்காலத்தில் இப்பிரதேசம் உள்ளடங்கியிருந்த திமிஷ்கை (டமஸ்கஸ்) தமது தலை நகராக்கியதைத் தொடர்ந்து பைத்துல் முகத்தஸ் பிராந்தியத்தின் புகழ் அரசியல் வானிலும் கொடிகட்டிப் பறந்தது. இவர்களது ஆட்சிக்காலப் பகுதியிலேயே மிகவும் பிரமாண்டமான முறையில் ஜெரூஸலத்திலுள்ள புனித ஆலயத்தில் குப்பதுஸ் ஸக்ராவும் அல் அக்ஸா மஸ்ஜிதும் கட்டிமுடிக்கப்பட்டன.

அப்பாஸியரது ஆட்சியில் அவர்களது ஆட்சியில் முதல் கலீபா அபுல் அப்பாஸ் அஸ்ஸப்பாஹ், பலஸ்ஸ்தீனத்துக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கினார். கி.பி. 771ல் ஏற்பட்ட பூகம்பமொன்றின் போது பாதிப்புக்குள்ளான அல் அக்ஸாவை கலீபா மன்சூர் புனர்நிர்மாணம் செய்தார். கி.பி.969ல் பாதிமிய்ய சிற்றரசின் ஆட்சியாளர் முஇஸ் இதனைக் கைப்பற்றினார். 1070ல் அல்ப் அர்ஸலான் ஜெரூஸலத்தின் மீது படை நடாத்திச் சென்று அப்போது பாதிமிய்யர் வசமிருந்த அந்நகரை தன்வயப்படுத்திக் கொண்டார். ஆயினும், 1098ல் மீண்டும் இது பாதிமியாக்களின் கிலாபத்தின் கீழ் வந்தது.

இக்காலப்  பிரிவில்  மிகப் பெருமளவில் வளர்ச்சி பெற்று வந்த செல்ஜூக்கியப் பேரரசின் எழுச்சி ஐரோப்பியரைக் கதிகலங்க வைத்தது. உண்மையில் இந்த எழுச்சிதான் சிலுவைப் போருக்கும் வித்திட்டது எனலாம். 1099ல் சிலுவைப் படையினர் இதனை வெற்றி கொண்டனர். இதன் போது சுமார் 70,000 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டனர். இதன் காரணமாக பைதுல் முகத்தஸ் மஸ்ஜிதில் மட்டும் குதிரைகளின் முழங்கால் அளவு இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியது. இந்தக் கோரச் சம்பவத்தை பிரித்தானியக் கலைக்களஞ்சியம் பின்வருமாறு வர்ணித்திருப்பது நோக்கத்தக்கது. "ஜெரூஸலத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மிக மிகக் கொடூரமானவை. உமரின் அல் அக்ஸா பள்ளிவாசலை நோக்கிச் சென்ற குதிரைகளின் முழங்கால் அளவுக்கு இரத்த வெள்ளம் பிரவாகித்துப் பாய்ந்தது. பச்சிளம் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டு எதிரே இருந்த சுவர்களில் அறையப்பட்டன/ போர் நடக்கும் இடத்திற்கு மத்தியில் வீசி எறியப்பட்டன. யூதர்களுக்கு அவர்களது கோவில்களிலேயே சமாதி கட்டப்பட்டன. கி.பி.1187ல் சுல்தான் சலாஹுத்தீன் இதனை வெற்றி கொண்டார். 1219ல் 2ம் பிறெடரிக்குடன் செய்து கொண்ட ஒப்பந்தமொன்றின் பிரகாரம் இது கிறிஸ்தவர்களுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. கி.பி.1239ல் முஸ்லிம்கள் இதனை மீண்டும் கைப்பற்றினர். கி.பி.1243ல் இது மீண்டும் கிறிஸ்தவர்கள் வசமானபோதும் 1244ல் முஸ்லிம்கள் இதனை மீண்டும் வெற்றி கொண்டனர். கி.பி.1277ல் பெயரளவில் பைதுல் முகத்தஸும் அதனோடு இணைந்திருந்த பகுதிகளும் சிசிலி அரசோடு இணைக்கப்பட்டன.

இவ்வாறு பைதுல் முகத்தஸும் அதனைச் சூழவுள்ள பகுதிகளும் சுமார் இரண்டு நூற்றாண்டுகள் சிலுவைப் படையினரினாக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்தன. மம்லூக்கியரின் ஆட்சியின்போதுதான் முஸ்லிம் பிரதேசங்கக்ளிலிருந்து சிலுவைப் படையினரின் ஆக்கிரமிப்பை முற்றிலுமாகத் துடைத்தெறிய முடிந்தது. இதனைத் தொடர்ந்து பலஸ்தீனப் பகுதி முழுதும் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் வந்தது. இந்த நிலை முதலாம் உலக மகா யுத்தம் முடிவுற்று 1917 / 22ல் ஆங்கிலேயர் பலஸ்தீனை ஆக்கிரமிக்கும் வரை மட்டுமே தொடர்ந்தது.

1917ல் பலஸ்தீனில் இருந்த  பிரித்தானிய அரசு "பெல்பர்" எனும் ஒரு பிரகடனத்தை வெளியிட்டது. இப்பிரகடனத்தின் மூலம் பலஸ்தீனத்து முஸ்லிம்கள் இரண்டாம் தரப் பிரஜைகள் எனும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். 1922ல் யூதர்களுக்கான ஒரு தனி நாடு பலஸ்தீன மண்ணில் அமைய வேண்டுமென ஒரு கூட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றியது. இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவின் எல்லா வகையான உதவி ஒத்தாசைகளுடனும் அவர்களது படை பலத்துடனும் யூதர்கள் பல நாடுகளிலுமிருந்தும் வந்து இங்கு குடியேறலாயினர். முஸ்லிம்களைப் பலஸ்தீனிலிருந்து விரட்டுவதும் அவர்களது நிலங்களை அபகரிப்பதுமே இதன் அடிப்படை நோக்கமாக அமைந்திருந்தது.

ஐ.நா. சபை அதன் பொதுச் சபையில் நிறைவேற்றிய தீர்மானமொன்றுக்கு ஏற்ப 1947ல் பலஸ்தீன் அதன் பூர்வீகக் குடிகளான பலஸ்தீனர்களுக்கும் வேறு நாடுகளிலிருந்து வந்து குடியேறிய வந்தேறு குடிகளுக்கும் இடையில் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை அங்கீகரித்தது. அத்துடன், ஜெரூஸலம் நகர் சர்வதேச ரீதியாக அமைய வேண்டும் எனவும் அத்தீர்மானம் கூறியது.

1948ல் பலஸ்தீனில் இஸ்ரேல் என்ற ஒரு புது நாடு உருவாக்கப்பட்டது. இந்த அக்கிரமத்தை அன்று 56 நாடுகளின் நலன்களைக் காப்பதற்கென உருவாக்கப்பட்ட ஐ.நா. சபையும் அங்கீகரித்தது. இஸ்ரேல் உருவாகி சில நிமிடங்களிலேயே அதை அமெரிக்காவும் பிரிட்டனும் அங்கீகரித்தன இதனைத் தொடர்ந்து ஏராளமான பொருளாதார அமைப்புக்களில் இஸ்ரேலுக்கு ஐ.நா. சபை; அமெரிக்கா, பிரித்தானியா ஆகியவற்றின்  சிபாரிசுடன் அங்கத்துவம் வழங்கப்பட்டது. அடுத்த பத்து  ஆண்டுகளுக்குள் 63 நாடுகள் அதற்கு  அங்கீகாரம்  வழங்கின. இன்று இஸ்ரேல் உலகின் பலம்வாய்ந்த நாடுகளில் ஒன்றாக உருவாகியுள்ளது.

1949ல் ஐ.நா. சபையின் அங்கீகாரத்துக்கும் மேலதிகமாக இஸ்ரேல் சில பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டது. 1967ல் அயலிலுள்ள அரபு நாடுகள் இஸ்ரேல் மீது போர் தொடுத்தன. ஆறு நாட்கள் மட்டுமே நீடித்த இந்த யுத்தத்தில் சினாய்ப் பாலைவனத்தையும் ஜெரூஸலம் பழைய நகரையும் இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது. எகிப்து, மக்கா, மதீனா, சஊதி அரேபியா, ஸிரியா, யெமன் அடங்கலான பரந்த யூத சாம்ராஜ்யமொன்றைத் தாபிப்பதே இந்த யூதர்களின் இலட்சியமாகும்.  இந்த இலக்கை அடையும் அவர்களது கொலை வெறியாட்டமும்  ஆக்கிரமிப்பும் தொடர்ந்துகொண்டே  இருக்கும் என்பது அவர்களது மனப்பேழைகளில்  மாத்திரம் பதிவாகிப்போன ஒரு சட்ட யாப்பாகும்.

பலஸ்தீனிலுள்ள ஜ்ர்ரூஸலம் பகுதியில் அமைந்துள்ள பைத்துல் முகத்தஸ் என்ற புன்னியம்மிக்க இந்த மஸ்ஜித் 1967ம் ஆண்டு நடைபெற்ற அரபு - இஸ்ரேல் யுத்தத்தைத் தொடர்ந்து இஸ்ரேலிய யூதர்களின் கைகளுக்குள் சென்றுவிட்டது. முஸ்லிம்களின் முதல் கிப்லாவான அல்-அக்ஸா ஆக்கிரமிக்கப்பட்டு 44 ஆண்டுகளாகிவிட்டன. பைத்துல் கைப்பற்றிய யூதர்கள் அதன் புனிதத்துவத்தைக் கெடுக்கும் வகையிலும்; அதன் இருப்பைத் தகர்த்தெறிந்து இல்லாதொழிக்கும் வகையிலும் இந்நாள்வரை பல்வேறு நாசகார வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


"மீண்டுன் ஸலாஹுத்தீன் ஐயூபிகள் தோன்றமாட்டார்களா"? என்று அல் அக்ஸா அங்கலாய்ப்பது உங்கள் செவிகளுக்குக் கேட்கிறதா?

ABOU SHOUKIE        0725461154  / 0718203627  /  0333332604




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக