இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களானகுர்ஆன், ஸுன்னாவின் அடிப்படையில்தோன்றி வளர்ந்தது, ஹதீஸ், தப்ஸீர், பிக்ஹ், இல்முல் கலாம் போன்றஏனைய இஸ்லாமிய கலைகள் போன்று இஸ்லாத்தின் நிழலில் உருவாகிய தஸவ்வுப் பலராலும் தவறாகப்புரியப்பட்ட ஒரு கலையாக விளங்குகின்றது. சிலர் தஸவ்வுப் ஒரு இஸ்லாமியக் கலை என்பதைஏற்க மறுத்து, இஸ்லாமிய நாகரிக வளர்ச்சியில்கிரேக்க தத்துவம் பாரசிகப் பண்பாடு ஆகியவற்றின் தாக்கம் காரணமாகத் தோன்றி வளர்ச்சியடைந்தஒரு கலை எனக் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு தஸவ்வுப் தவறாகப்புரியப்படுவதற்கும், அறிமுகப்படுத்தப்படுவதற்கும்காரணமாக அமைந்த அம்சங்கள் பற்றி ஆராய்வது ஒரு நீண்ட விளக்கமாக அமையும். சுருங்கக் கூறின்தஸவ்வுப் அல்லது ஸுபி என்ற பதம் சிலபோது Myticism என்ற பதப் பிரயோகத்தோடு இணைத்துப் பேசப்படுதல்தஸவ்வுபின் பெயரால் பிரபலப்படுத்தப்படும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணான கருத்துக்கள், ஸுபி தரீக்காக்களின்சில செயல்பாடுகள் ஆகியவற்றை நாம் தஸவ்வுப் தவறாகப் புரியப்படுவதற்கு முக்கிய காரணமாகக்குறிப்பிடலாம்.
தஸவ்வுப் என்ற கலையைக் குறிக்கக் கையாளப்படும் ஸுபித்துவும் போன்ற பதங்கள்உண்மையில் தஸவ்வுப் என்ற பதம் புலப்படுத்தும் கருத்துக்களைக் குறிக்கப் பொருத்தமானவையன்று.
'தஸவ்வுப்' என்ற கலைக்கான அடிப்படைகள் இஸ்லாத்தின் ஆரம்பகாலத்திலேயே காணப்பட்டன.இஸ்லாமிய வணக்கங்கள், கிரியைகள் அனைத்தும்இரண்டு முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளன. ஒன்று மனிதனின் புற உறுப்புக்களோடு தொடர்புடையபுலன்களுக்குப் புலப்படும் வகையில் புரியப்படும் புறக்கிரியைகள். மற்றுது உள்ளத்தோடும்ஆத்மாவோடும் தொடர்புடைய புலன்களுக்குப் புலப்படாத அகக் கிரியைகள் ஆகிய இரண்டுமே இந்தஅம்சங்களாகும். குர்ஆனும் ஸுன்னாவும் இஸ்லாமிய வணக்கங்கள், கிரியைகள் அனைத்தையும்பொறுத்தவரை இந்த இரண்டு அம்சங்கள் பற்றியும் பேசுகின்றன.
உதாரணமாக தொழுகை பற்றிக் குறிப்பிடும்குர்ஆன், ருகூஃ, ஸுஜுது போன்று புறக்கிரியைகள்பற்றி மட்டுமன்றி உள்ளத் தோடு தொடர்புடைய இறையச்சம், பணிவு, உளத்தூய்மை ஆகிய அம்சங்கள் பற்றியும் குறிப்பிடுகின்றது.
நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களோடுதொடர்புடைய கிரியைகள் அனைத்தையும் பற்றிக் குர்ஆன் விளக்கும் போது அவற்றில் உள்ளடங்கியுள்ள, மனிதனின் உள்ளம் ஆத்மாவோடுதொடர்புடைய அம்சங்களையும் விளக்குகின்றது.
இது போன்ற அனைத்து வணக்கங்கள், கிரியைகள் பற்றி விளக்கும்போது அவற்றுடன் தொடர்புடைய உளநிலை பற்றியும் குறிப்பிடுகின்றது. புகஹாக்கள் என்னும்சட்ட அறிஞர்கள் இந்தப் புறக் கிரியைகளோடு தொடர்புடைய சட்டவிதிகளை குர்ஆன் ஸுன்னாவின்அடிப்படையில் விளக்கிய கலையை பிக்ஹ் உள்-ளாஹிர் புறம் சார்ந்த அல்லது வெளிப்படையானபிக்ஹ் என நாம் அழைத்தால் அக்கிரியைகளோடு தொடர்புடைய உள்ளம் அதன் தன்மை, செயல்பாடுகள், உளத்தூய்மை, பரிசுத்தமான எண்ணம்ஆகியவற்றுடன் தொடர்புடைய விதிகளை விளக்கும் கலையை பிக்ஹுல் பாதின் - மறைவான பிக்ஹ்எனக் குறிப்பிடலாம். இந்த பிக்ஹ் பாதினையே நாம் தஸவ்வுப் என அழைக்கின்றோம்.
நபி (ஸல்) அவர்களின் நுபுவ்வத்தின்நோக்கம் பற்றிக் குறிப்பிடும் குர்ஆன், பின்வரும் வகையில் அதனை விளக்குகின்றது. எழுத்தறிவில்லாத மக்களுக்குஅவர்களிலிருந்தே ஒரு தூதரைத் தெரிந்து அவன் அனுப்பி வைத்தான். அவர்கள் அதற்கு முன்னர்பகிரங்கமாக வழிகோட்டிலிருந்தனர். அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காண்பித்துஅவர்களைப் பரிசுத்தமாக்கி வைத்து, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். (அல்குர்ஆன் 62:2)
மக்களுக்கு அல்குர்ஆன் திருவசனங்களைஓதிக் காண்பித்தல், அவர்களுக்கு அறிவையும்ஞானத்தையும் போதித்து நெறிப்படுத்தல், அவர்களது உள்ளங்களின் கறைபோக்கி மாசகற்றித் தூய்மைப்படுத்தல்ஆகிய மூன்று முக்கிய பணிகள் பற்றி இங்கு குறிப்பிடப்படுகின்றது. இவற்றுள் உள்ளத்தைதூய்மைப்படுத்தல் - தஸ்கியதுந் நப்ஸ் என்ற பணியினடியாக வளர்ந்த ஒரு கலையே தஸவ்வுபாகும்.எனவே, தஸவ்வுப் என்பது மக்களின்உள்ளங்களைப் பிடித்துள்ள கறைகள் மாசுகளை அகற்றிப் புனிதப்படுத்தி இறை திருப்தியைப்பெறும் நிலைக்கு அதனை உருவாக்கும் தஸ்கியதுந் நப்ஸின் வழிமுறைகள் பற்றி விளக்கும் கலையாகும்.
நபி (ஸல்) அவர்களது சமூகத்திற்குஹஸ்ரத் ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒரு மனிதரின் உருவில்வந்து, சன்மார்க்கம் பற்றியமூன்று வினாக்களைக் கேட்க,அதற்கு நபிகளார் பதில்பகர்கின்றார்கள். முதலில் இஸ்லாம் பற்றியும், இரண்டாவது ஈமான் என்றால் என்ன என்பது பற்றியும் வினவ நபியவர்கள்அது பற்றி விளக்குகிறார்கள். மூன்றாவதாக இஹ்ஸான் என்றால் என்ன என கேட்க, 'நீர் இறைவனைக் காணுவதுபோன்று அவனை வணங்குவதாகும். ஏனெனில் நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் உம்மைப் பார்க்கின்றான்' இந்த ஹதீஸில் குறிப்பிடப்படும்ஈமானின் அடிப்படையில் அகீதாவும், இஸ்லாமியக் கிரியைகளின் அடிப்படையில் ஷரீஆவும் இஹ்ஸானின் அடிப்படையில்தஸவ்வுப் இஸ்லாமியக் கலைகளின் முக்கிய பிரிவுகளாக வளர்ச்சியடைந்துள்ளன.
பிற்காலத்தில் முஸ்லிம் சமூகத்தில்தோன்றி வளர்ந்த ஹதீஸ், பிக்ஹ், தப்ஸீர் போன்ற கலைகளுக்கானஅடிப்படைகள் அனைத்தும் நபி (ஸல்) அவர்களின் காலப்பிரிவில் காணப்பட்டது போன்று பிற்காலத்தில்ஒரு தனிப்பட்ட பிரிவாக வளர்ச்சியடைந்த தஸவ்வுபின் அடிப்படைகளும் காணப்பட்டன. இஸ்லாம்தீனுல் பித்ரா என்னும் மனிதனின் இயற்கைக்குப் பொருத்தமான ஒரு மார்க்கமாகும். மனிதர்கள்இயற்கையிலே வித்தியாசமான தன்மைகளைப் பெற்றுள்ளனர். இஸ்லாம் வலியுறுத்தும் உலகப் பற்றற்றமனநிலை, இறையச்சம், முற்றிலும் இறைவன்பால் பாரஞ்சாட்டி வாழும் பண்பு ஆகியவற்றை மிக வேட்கைளோடு பின்பற்றிய நபித்தோழர்கள்பலர் காணப்பட்டனர் ஸுஹ்த் என்னும் உலகப் பற்றற்ற வாழ்வை மேற்கொண்ட இந்த நபித்தோழர்எவருமே ஸுபி என அழைக்கப்படவில்லை. இதற்கான காரணத்தையும் தஸவ்வுபின் தோற்றத்தையும் இமாம்குஷைரி தனது ரிஸாலாவில் பின்வருமாறு விளக்குகின்றார்.
நபி (ஸல்) அவர்களின் காலப்பிரிவின்பின்னர் நபித் தோழர்களைக் குறிக்க நபியவர்களுடன் அவர்களது தோழமையைச் சுட்டும் 'ஸஹாபி' என்ற சொல்லைத் தவிரவேறு எந்த ஒரு பதமும் பயன்படுத்தப்படவில்லை. ஏனெனில் நபியவர்களுடனான தோழமையைப் பொறுத்தளவில்இதனை விடச் சிறப்பான அந்தஸ்தையும் படித்தரத்தையும் எவரும் பெறல் முடியாது. ஸஹாபாக்களின்காலப்பிரிவிற்குப் பின்னர் மக்கள் அறிவு வணக்க வழிபாடுகளைப் பொறுத்தளவில் பல தரங்களையுடையோராகப்பிரிந்தனர். அவர்களில் சன்மார்க்க விடயங்களில் மிகத் தீவிரமாக ஈடுபட்ட ஸுஹ்ஹாத் உலகப்பற்றற்ற மனநிலையுடையோன் எனவும் உப்பாத் (ஆபிதீன் பன்மை) வணக்கவாளிகள் எனவும் அழைக்கப்பட்டனர்.
முஸ்லிம்களில் பல பிரிவுகள் தோன்றி நூதன கொள்கைகளை அறிமுகப்படுத்தி அவர்களும் இப்பதங்களைப்பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்ய முனைந்த நிலைமையே அஹலுஸ் ஸுன்னாவைச் சார்ந்த நன்னெறிச்சான்றோர் தங்களை இவர்களிடமிருந்து வித்தியாசம் காட்டிக் கொள்வதற்காக ஸுபி என்ற சொல்லைப்பயன்படுத்தினர். தஸவ்வுப் ஸுபி என்ற பதம் ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னமே பிரபல்யமடைந்தது.(ரிஸாலா குஷைரிய்யா)
இப்னு கல்தூனும் தனது முகத்திமாவில்இதே கருத்தைக் குறிப்பிடுகின்றார்.
தஸவ்வுப் என்பது முஸ்லிம்சமூகத்தில் தோன்றிய ஷரீஆவின் அடிப்படையில் வளர்ந்த ஒரு கலையாகும். ஸுபிகளால் கடைபிடிக்கப்பட்டநெறிமுறைகள் அனைத்தும் புகழ்பெற்ற ஸஹாபாக்கள் தாபிஈன்கள் மத்தியில் காணப்பட்டவையாகும்.இறைவனிடத்தில் ஆழ்ந்த ஈடுபாடு, முற்றிலும் இறைவனைச் சார்ந்திருத்தல், உலகப்பற்றின் கவர்ச்சிகளிலிருந்துஒதுங்கியிருத்தல், செல்வம், பதவி, அந்தஸ்து ஆகியவற்றைப்பொறுத்தளவில் பற்றற்ற மன நிலையைக் கடைப்பிடித்தல் தனிமையை விரும்புதல் ஆகிய இபாதத்கள்நபித் தோழர்களிலும் ஸலபுஸ் ஸாலிஹீன் என அழைக்கப்படும் நன்னெறிகள் முன்னோர்களிலும் காணப்பட்டன.
ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் இஸ்லாம் பிற நாடுகளில் பரவியதைத் தொடர்ந்து சமூகத்தில்ஏற்பட்ட செல்வத்தின் பெருக்கம் காரணமாக பெரும்பான்மையான மக்கள் உலகக் கவர்ச்சி ஆடம்பரவாழ்வை நோக்கித் தீவிர ஈடுபாடு காட்டிய போது அவற்றை விட்டு ஒதுங்கி தங்களது ஆத்மீகதூய்மையைப் பேணுவதற்காக இறை வணக்கத்தில் ஆழமாக ஈடுபட்டோர் ஸுபிய்யா ஸுபிகள் என இனங்காணப்பட்டனர்.இப்னு கல்தூன் முகத்தம்: 329
இப்னு கல்தூன் குறிப்பிடும்அத்தகைய பிரிவினர் எளிய வாழ்வை மேற்கொண்டு (ஸுப்) எனும் கம்பளி ஆடையை அணிந்தனர். காலஓட்டத்தில் தங்களது ஆத்மிக பரிசுத்தம், உளத்தூய்மை, இறையன்பு ஆகியவற்றை அடிப்படை நோக்காகக் கொண்ட இப்பிரிவினர் தங்களுக்குஉரிய நெறிமுறைகள், கோட்பாடுகளின் அடிப்படையில்செயல்பட ஆரம்பித்தனர். இதுவே தஸவ்வுபின் ஆரம்பக்கட்டமாகும்.
ஆரம்பகால ஸுபிகளாக ஹஸனுல்பஸரி, மஃரூப் அல்-கர்கி, ஜுனைத் அல்பக்தாதி, ஸரீஅஸ் ஸிகதி, ஸுன்னூன் அல்மிஸ்ரி, ராபிஅதுல் அதவியா, புலைல் பின் இயாழ், ஹாரிஸ் அல்முஹாபிஸிஆகியோர் குறிப்பிடத்தக்கோராவர். உலக வாழ்வைப் பொறுத்தளவில் பற்றற்ற மனநிலையைக் கடைபிடித்தஇவர்கள், முற்றிலும் உலகப்பற்றிலிருந்து ஒதுங்கி வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து விடுபட்டு நிற்கவில்லை. இவர்கள்பலர் சமூக வாழ்வில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இமாம் ஹஸனுல் பஸரி போன்றோர்தங்களது சொற்பொழிவுகள் மூலம் மக்களினதும், ஆட்சியாளர்களினதும் உள்ளங்களில் இறை பக்தியையும் மறுமையின் பால்பற்றினையும் தோற்றுவித்தனர். புலைல் பின் இயாழ், அப்பாஸிய கலீபா ஹாரூன் ரஷீதைச் சந்தித்து அவரதுஆடம்பர வாழ்வைக் கண்டித்தார். புகழ்பெற்ற ஸுபிகளான ஷகீக் அல் - பல்கி (ஹி. 194) ஹாதிம் அல் - அஸம்(ஹி. 227) ஆகிய இருவரும் ஜிஹாதில்கலந்து கொண்டு பங்களிப்புச் செய்தனர். போர்க்களத்தில் பகைவர்களின் பயங்கர போராயுதங்கள்முட்டி மோதுகின்ற நிலையில் ஹாதிம் அல் அஸம் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
நிச்சயமாக நான் இந்த இடத்தில்எனது மனைவியுடன் கழித்த திருமண நாளின் முதலிரவின் இன்பத்தை அனுபவிக்கின்றேன். அவர்பெற்றிருந்த ஆத்மீக பக்குவம் உயிருக்கே பேராபத்து நிறைந்திருந்த அந்தப் போர்க்களத்தில்இறை நேசத்தின் இன்பத்தில் அவரை மெய்மறக்கச் செய்தது. இப்ராஹிம் இன்பு அத்ஹம் என்ற ஸுபிமகான் பைஸாந்திரியர்களுக்கு எதிரான பல போர்களில் கலந்துகொண்டார். அபுல் ஹஸன் அலி அஷ்ஷாதிலிஹிஜ்ரி 684 இல் மன்லாராவில்நடைபெற்ற கிறிஸ்தவர்களுக்கெதிரான சிலுவைப் போரில் பங்குகொண்டதாக வரலாறு குறிப்பிடுகிறது.
ஷெய்க் அப்துல் காதிர் ஜீலானியின்உருக்கமான உணர்ச்சிபூர்வமான சொற்பொழிவுகள் ஆயிரக்கணக்கான பாவிகளை நன்நெறியின் பால்திருப்பின. அப்பாஸிய ஆட்சியாளர்களையே ஆட்டங்காணச் செய்தன. அவர்களது சொற்பொழிவுகளில்உள்ளடங்கிய 'புதூஹுல் கைப்', 'பத்ஹுல் ரப்பானி' போன்ற நூல்கள் இதனைச்சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன.
எனவே, தஸவ்வுப் என்பது செயலின்மை, அசைவற்ற நிலை, உழைப்பின்மை ஆகியவற்றைப்போதிக்கும் துறவறக் கோட்பாடன்று. தஸவ்வுபின் அடிப்படைக் கோட்பாடுகளுள் ஒன்றான ஷுஹ்த்என்னும் பற்றற்ற துறவு நிலையின் இலட்சியம் உள்ளத்தின் கீழான உணர்ச்சிகளுக்கு எதிராகப்போர் தொடுத்து அதனை அடிமைப்படுத்திய இஸ்லாமிய பணியிலும் போராட்டத்திலும் ஈடுபடும் வகையில்இறைநேசம், மறுமையின் பால் பற்று, உலக வாழ்வைத் துச்சமாகமதிக்கும் மனநிலை ஆகிய பண்புகளை உள்ளத்தில் தோற்றுவித்தலா கும்.
தஸவ்வுபின் வரலாற்று வளர்ச்சியில்ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டளவு ஒரு முக்கிய கால கட்டமாகும். இக்காலப் பகுதியிலே தஸவ்வுப்பற்றிய நூல்கள் முதன் முதலில் தொகுக்கப்பட்டன. இந்நூல்கள் தொகுக்கப்பட முக்கிய காரணியாகஅமைந்தது, இக்காலப்பகுதியில்சூபிகள் என்ற வேடம் தரித்து சமூகத்தில் தோன்றிய பலர் பல வழிகளில் தூய்மையான தஸவ்வுபைமாசுபடுத்த முனைந்ததாகும். தஸவ்வுப் பற்றிய சரியான தெளிவான விளக்கத்தை அளிக்கும் நோக்கோடுஇந்நூல்கள் தொகுக்கப்பட்டன. இந்நூல்களுள் அபூ நஸர் அஸ்ஸர்ராஜ் எழுதிய கிதாபுல் உம்மா, அல்கலாபாதியின் கிதாபுத்தஅர்ருப் லீ மத்ஹபி அஹ்லுத் தஸவ்வுப் அபூதாலிப் அல்மகசியின் கூதுல் குலூப், அல்குஷைரியின் அர்ரிஸாலாஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கனவாகும்.
தஸவ்வுபின் வரலாற்றில் அடுத்தமுக்கிய கட்டம் சூபி தர்ஷாக்களின் தோற்றமாகும். ஷேக் அப்துல் காதர் ஜீலானி (மரணம் 1166) பைஅத் முறையை அறிமுகப்படுத்திமக்களை ஆத்மீக வழியில் நெறிப்படுத்தி, பன்படுத்தி, இறைதிருப்திக்கு இட்டுச் செல்லும் தரீக்கா எனும் மெஞ்ஞான வழியைஅறிமுகப்படுத்தினார்கள். இவர்களால் நிறுவப்பட்ட காதிரிய்யா தரீக்கா சிரியா, துருக்கி, கெமருன், கொங்கோ, மொரிடானியா, தன்ஸானியா போன்ற ஊர்களிலும்மத்திய ஆசியாவில் கோக்கேசிய பிரதேசத்திலும் பரவியது.
மொறோக்கோவில் ஷேக் அபுல் ஹஸன்ஷாதுலியினால் (மரணம் 1258)நிறுவப்பட்ட ஷாதுலியாதரீக்கா வட ஆபிரிக்கா, எகிப்து, கென்யா, தன்ஸானியா மற்றும்ஆசியப் பகுதிகளில் பரவியது. ஷெய்க் பஹாஉத்தீன் நக்ஷபந்தியினால் நிறுவப்பட்ட (மரணம்1390) நக்ஷபந்தியா, மத்திய ஆசியா, இந்தியா, இந்நோநேசியா, துருக்கி ஆகிய பகுதிகளில்பிரபல்யம் பெற்றது. இது தவிர டிஜானியா, நிஸ்தியா, மல்லவியா போன்ற பல தரீக்காக்கள் கால வளர்ச்சயில் தோற்றம் பெற்றன.
இஸ்லாத்தின் பரவலிலும், பிரஞ்சு, இத்தாலிய ஏகாதிபத்தியவாதிகளுக்கெதிரானபோராட்டத்திலும் இத்தரீக்காக்கள் வகித்த பங்கும் கணிசமானதாகும். இந்தோனேசியாவில் முஸ்லிம்களுக்கும்டச்சுக் காரர்களுக்குமிடையில் நடைபெற்ற போர்களில் காதிரிய்யா தரீக்கா மிக முக்கிய இடத்தைவகித்தது. அல்ஜீரியாவில் பிரஞ்சு ஏகாதிபத்தியத்துக்கு எதிரான 1832 – 1837 க்குமிடையில் மாபெரும்ஜிஹாதை மேற்கொண்ட அமீர் அப்துல் காதிர் ஜஸாஇரி காதிரிய்யா தரீக்காவின் ஷெய்குகளில்ஒருவராக விளங்கினார்.
திஜானியா தரீக்காவும் அல்ஜீரியாவில் பிரஞ்சு ஏகாதிபத்தியத்திறகுஎதிரான போரில் சிறப்பான பங்களிப்பை மேற்கொண்டது. மத்திய ஆசியாவில் ரஷ்ய ஏகாதிபத்தியத்திற்கெதிரான ஜிஹாதில் நக்ஷபந்தியா தரீக்கா முக்கிய பங்களிப்பை செலுத்தியது.
தஸவ்வுபின் வரலாற்றில் ஒருமுக்கிய காலகட்டம், குர்ஆன், ஸுன்னாவின் தூய கோட்பாடுகளில்அமைந்த அக்கலை பிற கலாசார,பண்பாட்டுத் தாக்கங்கள்காரணமாக ஒரு தத்துவச் செயலைப் பெற்றதாகும். ஆரம்பகால ஸுபிகள் தங்களது உள, ஆத்மீகப் பண்பாடுகீழான உணர்வுகள், மனோஇச்சைக்கு எதிராகப்போராடி இறை சிந்தனை, இறை தியானம், இறை திருப்தி ஆகியவற்றிலேமுற்றிலும் கரிசனை செலுத்தினர். ஆனால் இந்த தூய தன்மை பெற்ற தஸவ்வுப் பிற்காலத்தின்தத்துவச் சாயலைப் பெற்றது. இறைவன், அவனது தன்மை, பண்புகள் பிரபல்யத்தில் அவனது வெளிப்பாடு போன்ற தத்துவச் சிந்தனையில்சிக்கியது. இக்கால பிரிவிலேயே வஹ்ஜதுல் அஜாத், ஹுலூல் ஹக்கீகதுல் முஹம்மதிய்யா போன்ற கோட்பாடுகள் தோன்ற ஆரம்பித்தன.கிரேக்கத் தத்துவம், பிளட்டனியா நியோ கோட்பாடுவேதாந்த தத்துவம் போன்ற தத்துவங்கள் தஸவ்வுபில் அவற்றின் தாக்கத்தை ஏற்படுத்தின.
தஸவ்வுபின் வரலாறு பற்றி ஆராய்ந்தஅறிஞர்கள் ஆரம்பகால தூய தஸவ்வுபை அத் தஸவ்வுபில் ஸுன்னி எனவும் பிற்கால தஸவ்வுபை அத்தஸவ்வு அல்பல்ஸபீ எனவும் அழைத்தனர். இப்னு தைமிய்யா போன்ற அறிஞர்கள் தஸவ்வுப் அன்ஸுன்னியைஏற்றுக்கொண்ட அதேவேளை தஸவ்வுப் அல் பல்ஸபியை கண்டித்தனர்.
எனவே, தஸவ்வுப் என்பது குர்ஆனின்ஸுன்னாவின் அடிப்படையில் வளர்ந்த ஒரு இஸ்லாமிய கலையாகும். பிற்காலத்தில் தப்ஸீர்களில்இஸ்ராஈலியத் என்னும் யூத மரபுக் கதைகள் நுழைந்தமைக்காக எவ்வாறு தப்ஸீரை நிராகரிக்கமுடியாதது போன்று ஹதீஸ்களில் மெளழூஅத் என்னும் புனைந்துரைக்கப்பட்ட ஹதீஸ்கள் இடம்பெற்றமைக்காக, ஒருவன் ஹதீஸை எவ்வாறுபுறக்கணிக்க முடியாததை போன்று தஸவ்வுபில் அதன் வரலாற்றின் பிற்பட்ட காலகட்டத்தில் கிரேக்க, இந்திய தத்துவச் செயற்பாடுஏற்பட்டு அதன் தூய்மை மாசுபட்டமைக்காக தூய உருவில் அமைந்த குர்ஆன் ஸுன்னாவின் போதனைகளின்அடிப்படையில் அமைந்த தஸவ்வுபை நிராகரித்தல் முடியாது.
எமது சமகால உலகில் மேற்குலகில்ஏற்பட்டுள்ள ஆத்மீக வெறுமையானது மேற்குலகின் புத்தி ஜீவிகள் பலரை தஸவ்வுபின் மூலம்இஸ்லாத்தில் இணையச் செய்தது. அறிவுத் துறையிலும் சிந்தனைத் துறையிலும் மிக ஆழமான புலமைபெற்றிருந்த புத்திஜீவிகள் பலர், தங்கள் வாழ்வில் நிம்மதியும், நிறைவும் பெறுவதற்கு மிக அடிப்படையான ஏதோ ஒன்றைஇழந்திருப்பது போன்ற உணர்வைப் பெற்றனர். இந்த வெற்றிடமே ஆத்மீக வெறுமையாகும்.
இந்தஆத்மீக வெறுமையை ஈடுசெய்ய முற்பட்ட அவர்களது முயற்சி தஸவ்வுபின் பால் ஆர்வம் கொள்ளச்செய்து அதனடியாக இஸ்லாத்தை ஏற்று, இத்துறையில் பெரும் பங்களிப்புச் செய்யும் ஆற்றல் படைத்த முஸ்லிம்அறிஞர்களாக அவர்களை மாற்றியது. இவர்களுள் மாட்டின் லிங்ஸ் (அபூபக்கர் ஸிராஜுதீன்), டைடஸ் பேகாத் (அப்துல்வாஹித் யஹ்யா), விக்டர் டன்னர் (அப்துல்ஜப்பார் டன்னர்) ஆகியோர் குறிப்பிடத்தக்கோராவர்.
மூலாதாரங்கள்:
1. அபுல்ஹஸன் அலி நத்வி– அர்ரப்பானியா லா ரஹ்மானிய்யா– லக்னோ
2. அபுல் காஸிம் அல்குறைஷ் - அர்ரிஸாலதுல் குஷைரிய்யா – காஹிரா 1966
3. இப்னு கல்தூன் - அல்முகந்திம்
4. அப்துல் ஹலீம் - மஹ்மூத்கலியதுத் தஸவ்வுப்
5. ஸகீ முபாரக் - அத்தஸவ்வுபில் இஸ்லாமிய்யில் அக்லாகிய்யா காஹிரா 1938
6. அப்துர் ரஹ்மான் மதனீ, தாரிகுத் தஸவ்வுப்அல் இஸ்லாமி மினல் பிதாயா
7. ஹத்தா நிஹாயதில் கான்- குவைத் 1975
www,drshukri.net
gud work. ungal chaewai naattukkuth thaewai
பதிலளிநீக்கு