குலபாஉர் ராஷிதூன்களுக்குப் பிறகு, இஸ்லாமிய ஆட்சியின் போக்கு முற்றிலும் மாற்றம் கண்டது. இஸ்லாமிய ஆட்சி நடைமுறைகளில் உரோம, பாரசீக ஆடம்பர மரபுகள் பெருமளவு குடிபுகுந்தன. உமையாக்களும் அதன் பின் அப்பாஸியரும் அதன்பின் உஸ்மானியரும் என மாறி மாறி முஸ்லிம்களே இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்த போதிலும்,
அவ்வாட்சி முறைகளில் காணப்பட்ட இஸ்லாமிய ரீதியான குறைபாடுகளே அவ்வாட்சிகளுக்கு பலவீனத்தையும், முறியடித்து வெற்றி கொள்ள முடியா எதிர்ப்புகளையும் தேடிக் கொடுத்தன. இவ்வகையில் கி.பி. 1258இல் இடம்பெற்ற மங்கோலியர் படையெடுப்பு முஸ்லிம்களின் வரலாற்றில் மறக்க முடியாத பேரிழப்புகளை ஏற்படுத்திய கோர நிகழ்வாக நிலையாகப் பதிவு பெற்றுள்ளது.
மங்கோலியாவும் மங்கோலியர் வரலாறும்
மங்கோலியா என்பது மத்திய கிழக்காசியாவில் அமைந்துள்ள பழம் பெரும் நாடு. இதன் வடக்கே ரஷ்யாவும், கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கே சீனாவும் அமைந்துள்ளன. புத்தம், லாமாயிசம் எனும் சமயங்கள் பின்பற்றப்படுவதுடன், மங்கோலியன் மொழி பேச்சுவழக்கில் உள்ளது. மங்கோலியர் சீனா, மங்கோலியா, ரஷ்யா போன்ற நாடுகளில் வாழுகின்ற போதிலும், அவர்களது பரம்பரையில் வந்தவர்களாகக் கருதப்படும் மொகலாயர், ஹஸரர், அய்மக் போன்ற இனக் குழுக்கள் மத்திய ஆசியாவில் குறிப்பாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் தற்போது வசித்து வருகின்றனர்.
கி.பி. எட்டாம் நூற்றாண்டில், சீனாவில் டெங் ஆட்சி நிலவிய காலப்பகுதியிலேயே மங்கோலியர் எனும் பெயர் தோன்றிய போதும், 11ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற கிதான் என்பவனின் ஆட்சியின் போதே அது பிரபல்யமடைந்தது. ஆரம்பத்தில் ஒனொன் ஆற்றுப் பகுதிகளில் வாழ்ந்த முக்கியத்துவமற்ற சிறு குழுக்களின் மீதே இது பிரயோகிக்கப்பட்டது. 13ஆம் நூற்றாண்டிலேயே, ஜெங்கிஸ்கானின் தலைமையில் மங்கோலிக், துர்கிக் இனக் குழுக்கள் முழுமையாக ஒன்றிணைக்கப்பட்டு அதே கலாசாரத்துடன் ஒரு தலைமையின் கீழ் கொணரப்பட்டு மங்கோலியர் எழுச்சி பெற்றனர்.
நாகரிக வாடை சிறிதும் இல்லாமலிருந்த ஒரு வறண்ட நாட்டில், கல்வியறிவில்லாத குடியினர் செறிந்து வாழ்ந்த மங்கோலியப் பழங்குடியொன்றில் பிறந்த தெமுஜின் (வுநஅதைin) போட்டிப் பழங்குடியொன்றினால் கொலை செய்யப்பட்ட தனது தந்தையை தன் 9ஆவது வயதில் இழந்தான். மற்றொரு பழங்குடியினரால் கைது செய்யப்பட்டு அடிமையாக்கப்பட்டு சோகத்திலும் கொடுமையிலும் வாடினான். எனினும் அவர்களிடமிருந்து தப்பி, பலவாறு முயன்று, ஒரு மங்கோலியப் பழங்குடியை தனது தலைமையின் கீழ் ஒன்று சேர்த்து, ஏனைய குடியினரை ஒவ்வொன்றாக வென்றான். திறமை வாய்ந்த குதிரை வீரர்களாகவும், கொடூரமாகப் போர் புரிபவர்களாகவும் இருந்த அப்பழங்குடியினர் அனைவரையும் படிப்படியாக தனது தலைமையின் கீழ் ஒன்று திரட்டி ஒரே கொடியின் கீழ் ஒற்றுமைப்படுத்தினான். 1206ஆம் ஆண்டில் மங்கோலியப் பழங்குடிகளின் தலைவர்கள் அனைவரும் ஒருங்குகூடி, தெமுஜினை 'ஜெங்கிஸ்கான்' எனப் பிரகடனப்படுத்தினர். ஜெங்கிஸ்கான் என்றால் மங்கோலி மொழியில் 'அகிலப் பேரரசன்' (ருniஎநசளயட நுஅpநசழச) என்று பொருள். இதுவே மங்கோலியர்களின் வரலாற்றில் எழுச்சியாக அமைந்தது. மாபெரும் வல்லமை பொருந்தியதாக ஜெங்கிஸ்கான் உருவாக்கிய இராணுவம் அண்டை நாடுகளை நோக்கித் திரும்பியது. சீனாவைத் தாக்கியது. மத்திய ஆசியாவையும், பாரசீகத்தையும் தாக்கி அவற்றைக் கைப்பற்றியது. ஒரு புறத்தில் ரஷ்யாவையும், அதேசமயம் ஆப்கானிஸ்தான், இந்தியா போன்ற பிரதேசங்களையும் அப்படை தாக்கியது. பெருமளவு நாசங்களை அங்கு விளைவித்த போதும், அவற்றை வெற்றி கொள்ள முடியவில்லை. 1206இல் ஜெங்கிஸ்கான் மரணித்த பின், அவனது நியமனத்தின் பேரில் அவனது மூன்றாம் புதல்வனான ஒகடாய் (ழுபயனயi) ஆட்சிக்கு வந்தான்.
ஒகடாயின் தலைமையில் மங்கோலியர் ரஷ்யாவை முழுமையாக வெற்றி கொண்டனர். ஐரோப்பாவுக்குள் நுழைந்து முன்னேறினர். ஜெர்மனி, ஹங்கேரியையும் கைப்பற்றினர். 1241இல் இறந்த ஒகடாய்க்குப் பிறகு, ஜெங்கிஸ்கானின் பேரர்கள் சீனா, ரஷ்யா, மத்திய ஆசியா, பாரசீகம், தென்மேற்கு ஆசியா, கொரியா, திபெத், தென் கிழக்கு ஆசியாவின் சில பகுதிகள் என மிகப் பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்தனர். எனினும் 14ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து படிப்படியாக தாம் கைப்பற்றிய நிலப்பிரதேசங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு செல்வாக்கிழந்து 18ஆம் நூற்றாண்டுடன் மங்கோலியா எனும் தமது நாட்டுக்குள் சுருங்கிக் கொண்டனர். இதே காலப்பகுதியில் இந்நாடு சீனாவின் மாநிலமானது. 1911இல் நடந்த சீனப் புரட்சிக்குப் பின், ரஷ்யாவின் உதவியோடு இந்நாடு தனி நாடானது.
1258இல் இடம்பெற்ற மங்கோலியரின் பக்தாத் மீதான தாக்குதல்
மங்கோலியரின் தொடர் போர் நடவடிக்கைகளுள் 1258ல் இடம்பெற்ற பக்தாத் யுத்தம் முக்கியமானதும் மங்கோலியரின் கொடூரமான வெறித்தனத்தை உலகுக்கு அம்பலப்படுத்தியதுமாகும். 1258இன் ஜனவரி 29 இலிருந்து பெப்ரவரி 10 வரைக்குமான காலப்பகுதியில், இன்றைய ஈராக்கில் அமைந்துள்ள பக்தாத் நகரில் இவ் யுத்தம் இடம்பெற்றது. மங்கோலியரின் ஸ்தாபகராகக் கருதப்படும் ஜெங்கிஸ்கானுக்குப் பின் இரண்டாவது தலைமுறையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அவனது பேரனான ஹுலகூகானின் தலைமையில் இவ் யுத்தத்துக்காக படையினர் ஒன்று திரட்டப்பட்டனர். இப்படையில் 120இ000க்கும் 150இ000க்கும் இடைப்பட்ட வீரர்கள் பங்கு கொண்டிருந்தனர். இவர்களுள் 40இ000 ஆர்மீனிய காலாட்படையினரும், 12இ000 ஆர்மீனிய குதிரைப்படையினரும், மங்கோலிய, துருக்கிய, பாரசீக மற்றும் ஜோர்ஜியப் படைவீரர்களும் இடம்பெற்றிருந்தனர். அப்பாஸிய கலீபா அல்முஸ்தஃஸிமின் இராணுவத்தில் மொத்தமாக 50இ000 வீரர்கள் மட்டுமே இருந்தனர்.
பின்னணி
கி.பி. 661ல் ஹஸ்ரத் அலீ (ரழி) அவர்களின் மறைவைத் தொடர்ந்து, இஸ்லாமிய உலகை, கி.பி 751 வரை ஆட்சி செய்த உமையா ஆட்சியாளர்களை வீழ்த்தி, இரண்டாவது இஸ்லாமிய முடியாட்சியை மேற்கொண்டவர்களே அப்பாஸியராவர். அல்முஸ்தஃஸிமின் காலத்தில், பக்தாத் மிகப் பிரபல்யம் பெற்ற சனநெரிசல் மிக்க நகராகக் காணப்பட்டது. உத்தேசமாக ஒரு மில்லியன் நிரந்தரக் குடியிருப்பாளர்களும் சுமார் 60இ000 இராணுவ வீரர்களும் அங்கு காணப்பட்ட போதும் 1200களிலிருந்து அதன் பலம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. ஒரு புறத்தில், அப்பாஸிய ஆட்சிக்குட்பட்டிருந்த நிலப்பகுதிகளில் இருந்தவர்கள் சிலர் சிற்றரசுகளைப் பிரகடனம் செய்து கொண்டதனால், அவர்களைக் கட்டுப்படுத்தும் பலத்தை அப்பாஸியர் இழந்தனர். எனினும் பெயரளவில் தலைவராக இருந்த அப்பாஸிய கலீபாவை மம்லூக்கர்களும் துருக்கியர்களும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். அவ்வாறிருந்தும், அவர் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் மிக முக்கியமான ஒருவராக மதிக்ககப்பட்டதுடன், அப்பாஸியரின் ஆட்சித் தலைநகரான பக்தாத் முக்கிய கலாசாரச் செழுமை மிக்க நகராக விளங்கிற்று.
அப்பாஸிய கலீபா அந்நாஸிர் 1225ல் மரணிக்கும் போது ஜெங்கிஸ்கானின் தலைமையிலான மங்கோலியர் குவாரெஸ்ம் ஷாஹ்வினுடைய ஆட்சியை வீழ்த்தி, தென் ஈரானின் பெரும்பாலான பகுதிகளைத் தம் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். அந்நாஸிரின் பேரரான அப்பாஸிய கலீபா அல் முஸ்தன்ஸிரின் (1225-42) இராணுவம், அரபு ஈராக் மீதான மங்கோலியரின் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்தது. அவருடைய புதல்வரான கலீபா அல்முஸ்தஃஸிம் (1242-1258) உடைய காலத்திலும், மங்கோலியர் பக்தாதை நோக்கிப் படையெடுத்த போதும், அப்பாஸியருடைய இராணுவ பலத்தின் முன் தோல்வியுற்றுப் பின்வாங்கி ஓடினர். எனினும், 1243, 1253, 1255 மற்றும் 1256 ஆண்டுக் காலப் பகுதிகளில் ஏற்பட்ட பெருவெள்ளப் பெருக்குகள் நாட்டின் பாதுகாப்பு, பிராந்திய செழிப்பு மற்றும் நாட்டு மக்களின் தன்னம்பிக்கை என்பனவற்றைக் கடுமையாகப் பாதித்ததனால், இராணுவம் பலவீனப்பட்டிருந்தது.
இந்நிலையில், 1258ல் ஜெங்கிஸ்கானின் பேரனான ஹுலகூகான் (ர்ரடயபர முhயn) என்பவனின் தலைமையிலான பெரும் மங்கோலியப் படை பக்தாதை முற்றுகையிட்டது. கலீபா சரணடைய வேண்டுமென்று ஹுலகூகான் இறுமாப்புடன் கொக்கரித்தான், கலீபாவோ அதனை நிராகரித்தார். எனினும், முஸ்லிம்கள் யுத்தத்திற்குத் தயாரில்லாத பொடுபோக்கு நிலையிலிருந்தமையால், மங்கோலியரின் தாக்குதலைச் சமாளிப்பதற்காகப் படைதிரட்டும் கலீபாவின் முயற்சிகள் தோல்வியுற்றன. கோட்டையின் பாதுகாப்பு அரணைப் பலப்படுத்தவும் அவரால் முடியவில்லை.
ஹுலகூகான், பக்தாதை முற்றுகையிடு முன், அதனைச் சூழ வாழ்ந்த லூர் (டுரசள) எனும் இனத்தினரை அழித்து அச்சுறுத்தியதால், அடுத்திருந்த அசசின் (யுளளயளளiளெ) எனும் இனத்தினர் வலுவான தமது கோட்டையுடன் ஹுலகூவிடம் சரணடைந்தனர். இதனால், 1256 காலப்பகுதியிலேயே ஹுலகூகான் அப்பிராந்தியத்தில் வலுவான நிலையை ஏற்படுத்திக் கொண்டான்.
பக்தாதைக் கைப்பற்று முன், அவன் தனது படையை இரண்டாகப் பிரித்து ஒரு படையை பக்தாதின் மேற்குப் பக்கமாகவும், மற்றொன்றை கிழக்குப் பக்கமாகவும் வந்து தாக்க உத்தரவிட்டான். மேற்குப் பக்கமாக முன்னேறிய மங்கோலியப் படையை கலீபாவின் இராணுவம் தாக்கித் துரத்திய போதும், அதே சமயத்தில் கிழக்குப் பக்கமிருந்து வந்த படையை அவர்கள் எதிர்க்க முடியாமற் போயினர். கிழக்கே முன்னேறிய மங்கோலியர் நகருக்கு வெளியே இருந்த அணைக்கட்டுகளைத் தகர்த்தனர். இதனால் நகருக்குள் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கலீபாவின் படையினர், மங்கோலியரால் படுகொலை செய்யப்பட்டனர், அல்லது நீரில் மூச்சுத் திணறி இறந்தனர். மங்கோலியத் தளபதி கூகானின் கட்டளைப்படி, மங்கோலியப் படையினர் கம்பி வேலிகளையும் அகழிகளையும் ஏற்படுத்தி பக்தாதை முற்றுகையிட்டனர். அங்கிருந்தவாறே பீரங்கிகளினால் தாக்குதல் மேற்கொண்டனர். இந்த முற்றுகை ஜனவரி 29இல் ஆரம்பமாயிற்று. படிப்படியாக முன்னேறிய மங்கோலியர், ஜனவரி 5இல் கோட்டையின் பாதுகாப்பு மதிலைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தனர். இந்நிலையில், கலீபா அல்முஸ்தஃஸிம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த போதும், மங்கோலியர் அதனை நிராகரித்தனர்.
பெப்ரவரி 10இல் பக்தாத் மங்கோலியரிடம் வீழ்ந்தது. பெப்ரவரி 13இல் நகருக்குள் நுழைந்த மங்கோலியர், வரலாறு காணாத மாபெரும் அக்கிரமங்களையும் அட்டூழியங்களையும் அநியாயங்களையும் அங்கு வாரியிறைத்தனர். அங்கிருந்த அப்பாவி மக்களை பாகுபாடின்றிக் கொன்று குவித்தனர், சொத்துகளைக் கொள்ளையடித்தனர், பெண்களை மானபங்கப்படுத்திக் கற்பழித்தனர், பக்தாதின் வரலாற்று, அறிவியல் சின்னங்கள் நாகரிக அடையாளங்கள் அனைத்தையும் அழித்து நகரைத் தீயிட்டு எரித்தனர். சிறைப்பிடிக்கப்பட்ட கலீபா அல்முஸ்தஃஸிம் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இதன் பின் பக்தாதில் மங்கோலியரின் கொடூர ஆட்சி அறிமுகமாயிற்று.
மங்கோலியர் படையெடுப்பின் விளைவுகள்
1258இல் மங்கோலியர் பக்தாதில் மேற்கொண்ட படையெடுப்பானது இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பெரும் விளைவுகளைத் தோற்றுவித்தது. அவ்விளைவுகள் அனைத்தும், முஸ்லிம் சமூகத்தை பல நூற்றாண்டுகள் பாதிப்புக்குள்ளாக்குமளவு, அல்லது எழ விடாது தடுக்குமளவு பெரும் கொடூரமானவையாக அமைந்தமையை வரலாறு உணர்த்துகின்றது. இவ்வகையில், மங்கோலியரின் படையெடுப்பின் விளைவுகளைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
1. சர்வதேச இஸ்லாமியத் தலைமைத்துவமாயிருந்த கிலாபத் வீழ்ச்சி கண்டமை
1258ல் பக்தாதின் மீது படையெடுத்ததன் மூலம் மங்கோலியச் சர்வாதிகாரி ஹுலகூகான், இஸ்லாமிய ஆட்சியான கிலாபத் முறையை ஒழித்துக் கட்டினான். இதன் விளைவாக, இஸ்லாமிய நாகரிகத்தில் ஆரோக்கியமற்ற புதிய சகாப்தம் ஏற்பட்டது. ஒரே முஸ்லிம் சமுதாயம், அதற்கு ஒரே தலைமை என்கிற முறை மறைந்தது.
நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு, அவர்கள் சூசகமாகக் குறிப்பிட்டிருந்த கருத்துகளின் அடிப்படையில், கலீபா அபூபக்கர் (ரழி) அவர்களைத் தலைவராகக் கொண்டு கிலாபத் ஆட்சியமைப்பு அறிமுகமாயிற்று. உலகெங்குமுள்ள முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் மிகப் பெரும் வலையமைப்பாக இந்த கிலாபத் கோட்பாடு விளங்கியமை பின்னாளில் ஏற்பட்ட முஸ்லிம்களது வெற்றிகள் பலவற்றுக்கும் அடிப்படைக் காரணமாக அமைந்திருந்தது. முஸ்லிம் சமூகத்திற்குள் பிளவுகள், கருத்து முரண்பாடுகள் பல ஏற்பட்டிருந்த போதிலும், ஒரே தலைமை இருந்தமையால், முஸ்லிம்கள் சமூக ஐக்கியத்தைக் காப்பாற்றுவது சாத்தியமாயிருந்தது. உமையாக்களும், அப்பாஸியர்களும் இஸ்லாத்தின் அடிப்படையிலல்லாத முடியாட்சியையே பிரதிபலித்தார்களெனினும், கிலாபத் ஆட்சி முறையே அவர்களது நிருவாகத்தில் முதன்மை பெற்றிருந்தமையால், சர்வதேச ரீதியாக உலகெங்குமுள்ள முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் முக்கிய ஊடகமாக அது இருந்தது. எனினும், மங்கோலியரின் பக்தாத் மீதான படையெடுப்பு கலீபாவைப் படுகொலை செய்ததன் மூலம் இந்த கிலாபத் முறையை ஒழித்து விட்டது. இதற்குப் பிறகு எகிப்தில் அப்பாஸியரின் அடுத்த கட்ட கிலாபத் மீள ஆரம்பிக்கப்பட்ட போதும், பக்தாதில் கலீபா படுகொலை செய்யப்பட்டமையானது இஸ்லாமிய கிலாபத்தின் பலவீனத்தையும், அது எதிர்கொண்டுள்ள உறுதியற்ற எதிர்காலத்துடனான அச்சுறுத்தலையும் உலகுக்கு உணர்த்திற்று. பின்னாளில் இஸ்லாமிய கிலாபத் வீழ்ச்சியடைவதற்கும், சிற்றரசுகளின் ஆதிக்கம் வலுப்பெறுவதற்கும் மங்கோலியரின் படையெடுப்பு காரணமாகியது.
மங்கோலியர், கலீபா அல்முஸ்தஃஸிமைக் கைது செய்து, அவரது வளமான செல்வச் செழிப்புகளையெல்லாம் சூறையாடிய பின், அவரை மிகக் கொடூரமாகக் கொன்றனர். வரலாற்றாய்வாளர்களின் கூற்றுப்படி, மங்கோலியர் கலீபாவை ஒரு போர்வைக்குள் இறுகச் சுற்றித் தரையில் உருட்டி விட்டனர். பின், குதிரைகளை அப்போர்வை மீது ஒன்றன் பின் ஒன்றாக ஓட்டினர். இதனால், உயிருடன் எரிக்கப்படுவது போல், உயிருடன் நசுக்கப்பட்ட நிலையில் கலீபா மிகப் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது இரத்தம் அந்த நிலப்பகுதியெங்கும் கசிந்து பரவிற்று. அரச இரத்தம் சிந்தப்பட்டால், பூமி செழிப்படையும் என்ற தமது நம்பிக்கையின் அடிப்படையிலேயே மங்கோலியர் இக்கொடூரத்தை மேற்கொண்டனர். கலீபாவுக்கு நேர்ந்த இந்தக் கதியும், அவரது ஒரே மகன் மங்கோலியர்களால் மங்கோலியாவுக்கு அடிமையாக அழைத்துச் செல்லப்பட்டமையும் முஸ்லிம்களது மனதைப் பெரிதும் புண்படுத்தியதுடன், தமது எழுச்சி குறித்து இனிச் சிந்திக்கவே முடியாத மிகக் கடினமான நிலையைத் தாம் எதிர்கொண்டுள்ளதாக அவர்கள் அஞ்சும் நிலையையும் ஏற்படுத்திற்று.
இப்படையெடுப்பு இடம்பெற்ற காலத்திலேயே, முஸ்லிம்கள் தங்களுக்குள் முரண்பட்டும், போரிடத் தயார் இல்லாத நிலையிலும், அல்லது போர் செய்வதில் ஆர்வமற்றவர்களாகவும் இருந்தனர். கலீபாவையோ, கிலாபத்தையோ பாதுகாக்க வேண்டுமென்பதில் பொறுப்புணர்ச்சி அற்றவர்காளகவும் பெருமளவானோர் இருந்தனர். மங்கோலியரின் படையெடுப்பின் பின் இந்நிலை மேலும் அதிகரித்தது. இஸ்லாமிய கிலாபத்தின் மீதிருந்த நம்பிக்கையும் மரியாதையும் முஸ்லிம்களிடையே பெருமளவு குறையத் தொடங்கின. கிலாபத் என்பது இஸ்லாத்திற்குப் புறம்பானது என்ற சிந்தனைகள் தோன்றலாயின. கிலாபத்தை ஆதரிப்பது எவ்வாறு அவசியமில்லையோ, அவ்வாறே அதைப் பாதுகாக்கப் போராடுவதும் அவசியமில்லை, அது ஜிஹாத் ஆகவுமாட்டாது என்ற எண்ணப்பாங்குகள் அவர்களிடையே ஏற்பட்டன. இது முஸ்லிம்களின் சர்வதேசத் தலைமைத்துவத்திற்கு விழுந்த மிகப் பெரும் அடியாகும்.
மங்கோலியரின் இப்படையெடுப்பு முஸ்லிம்களின் சர்வதேச தலைமைத்துவத்தை இல்லாதொழித்தது போலவே அதற்கான முயற்சிகளையும் இல்லாதொழிக்கப் பாடுபட்டது. மீண்டுமொரு கிலாபத் ஆட்சி அமைப்பு வந்து விடக் கூடாது என்பதில் மிக அவதானமாகவிருந்த மங்கோலியர், அதற்கான முயற்சிகளை முளையிலேயே கிள்ளயெறிவதிலும் தயவுதாட்சண்யமின்றி நடந்து கொண்டனர். இதனாலேயே பக்தாதில் மீண்டும் கிலாபத் ஆட்சியமைப்பு தோன்றுவதற்கான சாத்தியப்பாடுகள் உஸ்மானியரின் எழுச்சி வரை ஏற்படவில்லை.
2. அறிவியல், பொருளாதார, கலாசார, நாகரிகப் பின்னடைவும் இழப்பும்
அப்பாஸிய ஆட்சியின் இரண்டாவது கலீபாவான அல்மன்ஸூர் கி.பி. 762ஆம் ஆண்டு சிரியா, மொஸப்படேமியா போன்ற பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த சுமார் ஓர் இலட்சம் கட்டடக்கலைஞர்கள், கைவினைஞர்கள், தொழிலாளர்களைக் கொண்டு தைகிரிஸ் நதியின் மேற்குத் தீரத்தில் மதீனதுஸ்ஸலாம் எனும் நகரை நிர்மாணித்தார். இதுவே பின்னாளில் பக்தாத் என அழைக்கப்பட்டது. கி.பி 1258ல் இடம்பெற்ற மங்கோலியர் படையெடுப்பின் பின்பே பக்தாத் எனும் பெயர் அதற்கு வழங்கப்படலாயிற்று. அதன் கேந்திர நிலையினால், அது வணிக, கலாசார, பண்பாட்டு மத்திய தலங்களுள் ஒன்றாக மிகத் துரித வளர்ச்சியைக் காணும் வாய்ப்பைப் பெற்றது.
அப்பாஸிய ஆட்சியில் அறிவினதும் பண்பாட்டினதும் நாகரிகத்தினதும் மத்திய நிலையமாக பக்தாத் விளங்கியது. பாரசீகம், மத்திய ஆசியப் பகுதி உள்ளிட்ட உலகின் பல பாகங்களிலிருந்தும் பெரும் அறிஞர்கள், சிந்தனையாளர்கள் பக்தாதை நாடி வந்தனர். கலீபா மன்ஸூருக்குப் பின், கட்டடக்கலை, வணிகம், செல்வ வளம், சனத்தொகை ஆகிய துறைகளில் பக்தாத் துரித வளர்ச்சி கண்டது. பைதுல் ஹிக்மா நிறுவப்பட்டு அறிவியற்கலை வளர்ச்சிக்கும் வழிகாட்டப்பட்டது. காலப்போக்கில் அங்கு ஏற்பட்ட வணிக வளர்ச்சி காரணமாக வியாபாரப் பாவனைப் பொருட்களுக்கான சந்தைகள் பக்தாதில் பரவலாக ஏற்படுத்தப்பட்டன. வணிகத்துடன் இணைந்து கைத்தொழிலும் வளர்ச்சியடைந்ததால், ஏற்றுமதி இறக்குமதி முயற்சிகளும் அதிகரித்தன. வங்கி முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகள் அங்கு புகழ் பெற்று விளங்கின. அது மட்டுமன்றி, பக்தாதில் செழிப்புற்றிருந்த விவசாய நீர்ப்பாசனத் துறையையும் மங்கோலியரின் படையெடுப்பு பாதித்தது. மொசபதேமியாவுடன் இணைந்ததாக அமைக்கப்பட்டிருந்த பல நீர்ப்பாசனக் கால்வாய்களையும் அவர்கள் தகர்த்தெறிந்தனர். இராணுவ முன்னெடுப்பு நோக்கங்களுக்காக வெட்டப்பட்ட அகழிகள் பின்னர் திருத்தியமைக்கப்படாமையால் பெருந்தொகையான உயிரிழப்புகளும் விபத்துகளும் அவற்றினால் ஏற்பட்டன.
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து வெள்ளம் போன்ற இயற்கை அழிவுகள் அடிக்கடி பக்தாதைப் பாதிக்க ஆரம்பித்தன. இவ்வெள்ளப் பெருக்குகள் அங்கிருந்த வீடுகள், உயிர்களை அழித்ததுடன், பஞ்சம், தொற்று நோய் போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தியது. தீவிபத்துகளும் ஏற்பட்டன. குறிப்பாக, புவைஹித் ஆட்சியாளர்களின் காலப்பிரிவு பக்தாதில் மிகப் பிரச்சினைக்குரிய காலகட்டமாக அமைந்தது. கி.பி. 1055ல் துக்ரில்பேக் பக்தாதிற்குள் நுழைந்தார். அவரால் தோற்றுவிக்கப்பட்ட செல்ஜூக்கியரின் ஆட்சியில் ஷீஆக்கள் பலமிழந்தனர். செல்ஜூக்கியரின் ஆட்சியில் கல்வித் துறை சார்ந்த முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டன. அறிவு வளர்ச்சிக்காக பல மத்ரஸாக்களை அவர்கள் நிறுவினர். புகழ்பெற்ற நிஸாமியா பல்கலைக்கழகமும் அவற்றுள் ஒன்றாகும்.
இக்காலப் பிரிவில் பக்தாத் நெருப்பாலும் வெள்ளத்தாலும் உள்நாட்டுக் குழப்பங்களாலும் பாதிப்புக்குள்ளாகியது. நாட்டில் அமைதி, ஸ்திரம், உறுதிப்பாட்டை நிலைநாட்ட முடியாத அளவுக்கு ஆட்சி பலவீனமடைந்திருந்தது. 1243, 1253, 1255ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற பெருவெள்ளப் பெருக்குகள் நிஸாமியா பல்கலைக்கழகத்தை மூழ்கடித்ததுடன், மற்றும் பல பாதிப்புகளையும் ஏற்படுத்தின. இவ்வாறான இயற்கை அனர்த்தங்களால் பக்தாத் பலவீனப்பட்டிருந்த நிலையிலேயே 1258, பெப்ரவரி 10ல் மங்கோலியர் பக்தாதின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றி, அங்கிருந்த அப்பாஸிய ஆட்சியாளர் கலீபா முஃதஸிமையும் சிறைப்பிடித்துக் கொன்றனர்.
இப்படையெடுப்பில், இலட்சக் கணக்கான மக்கள் மங்கோலியரின் இரத்த வெறிக்குப் பலியாகினர். அறிவு வாசனையற்ற, கலாசார உணர்வற்ற மங்கோலியர் ஆயிரமாயிரம் ஆண்டுகளின் உழைப்பின் கலாசார சின்னங்களான நூல் நிலையங்களைச் சுட்டெரித்தனர். பல்கலை வளர்த்த பண்பாட்டுத் தலைநகரான பக்தாத் மங்கோலியரின் வெறியாட்டத்தின் முன் அதன் ஆயிரமாயிரம் ஆண்டுகளின் பண்பாட்டுச் செல்வங்களை இழந்து அனாதையாய்க் காட்சியளித்தது.
இவ்வகையில், மங்கோலியரின் படையெடுப்பு ஒரு நகர் என்ற ரீதியில் பக்தாதில் மட்டும் ஏற்படுத்திய அழிவுகளையும் இழப்புகளையும் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. அறிஞர்கள், கல்விமான்கள் உட்பட்ட மனித வளங்கள் குறைக்கப்பட்டமையும் அழிக்கப்பட்டமையும்
2. பெருந்தொகையான சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டமையும், எரித்து நாசமாக்கப்பட்டமையும்
3. எண்ணற்ற அறிவுப் பொக்கிஷங்களைக் கொண்டிருந்த பக்தாதின் மிகப் பெரும் நூல் நிலையம் (பைதுல் ஹிக்மா) முற்றாக எரிக்கப்பட்டமை
4. கட்டடக்கலை மற்றும் அறிவியற் கலை என்பவற்றின் வளர்ச்சி பாதிக்கப்பட்டமையும், அவற்றின் பிரதிபலிப்புகள் நாசமாக்கப்பட்டமையும்
5. ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வந்த வணிக முயற்சிகள் தேக்க நிலையை அடைந்தமையும் அதன் மூலம் பக்தாதின் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டமையும்
6. கைத்தொழில் முயற்சிகள் இடைநிறுத்தப்பட்டமையும், ஏற்கனவே உருவாக்கப்பட்ட உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டமையும், புதிய ஏற்றுமதி முகவர்களை அடையாளங் காண முடியாமற் போனமையும்
7. பிற பிரதேசங்களிலிருந்து அறிஞர்களின் வருகை தடைப்பட்டமையும் அதன் விளைவாகத் தோன்றிய கல்வியின்மைப் பிரச்சினைகளும்
8. பொருளாதாரத்தையும் பொருளாதார மூலங்களையும் பறிகொடுத்து விட்ட முஸ்லிம்களிடையே தோன்றிய பசி, பட்டினி, பஞ்சமும், அவற்றின் அடியாகத் தோன்றிய உயிரிழப்புகளும்
இவ்வாறு பக்தாதில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைகள், பாதிப்புகள் கூட்டாக இணைந்து சர்வதேச முஸ்லிம் சமூகத்தை முற்றிலும் பாதித்து, இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பெரும் விளைவுகளைத் தோற்றுவிக்கும் படியாயும் முஸ்லிம்களையும் முஸ்லிம் அரசையும் எல்லா வழிகளிலும் பலவீனப்படுத்தும் படியாயும் எழுந்து நின்றன.
அறிவியல், பொருளாதார ரீதியாக மட்டுமன்றி, கலாசார, நாகரிக ரீதியாகவும் இப்படையெடுப்பு பல்வேறு விளைவுகளை எற்படுத்தியது. மஸ்ஜித்கள், மாளிகைகள், நூல் நிலையங்கள், வைத்தியசாலைகள் என்பவற்றுடன், எண்ணற்ற நூலாக்கப் பணிகளும் மொழிபெயர்ப்புப் பணிகளும் இடம்பெற்று வந்த பைதுல் ஹிக்மாவையும் மற்றும் எண்ணற்ற பல அறிவியல் கலாசாரச் சின்னங்களையும், அவற்றின் அடியாகத் தோன்றிய நாகரிகப் பண்பாட்டு முதிர்ச்சியின் வடிவங்களையும் மங்கோலியர் அழித்து நாசம் செய்தனர். சிறந்த கலாசார அடையாளங்களைக் கொண்டிருந்த பக்தாத் மிகக் குறுகிய நேரத்தில் அவை எல்லாவற்றையும் இழந்து, பன்னெடுங் காலமாகப் பேணிப் பாதுகாத்து வந்த தன் எழுச்சியைப் பறிகொடுத்துச் சோபையிழந்து போயிற்று. தலைமுறை தலைமுறையாக மக்களுடைய கலாசார, நாகரிக வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்த மிகப் பெரிய கட்டடங்களெல்லாம் மண்ணோடு மண்ணாக்கப்பட்டன. அங்கிருந்த மற்றும் பல இஸ்லாமிய கலாசார சின்னங்களையெல்லாம் மங்கோலியர் தேடித்தேடி அழித்ததனால், எதிர்காலத்தில் தமது கலாசாரத்தை நிரூபிக்க முடியாத ஒரு வறுமை நிலையை முஸ்லிம்கள் எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது.
மங்கோலியரின் இத்தகைய நாச வேலைகளுள் மிகக் கோரமானதாகவும் காட்டுமிராண்டித்தனமானதாகவும் கொள்ளப்படுவது அவர்கள் பைதுல் ஹிக்மா எனும் பக்தாத் நூல் நிலையத்தை எரித்தமையாகும். இந்நூல் நிலையம் எண்ணற்ற வரலாற்று ஆவணங்களையும், மருத்துவம் தொடக்கம் வான சாஸ்திரம் வரையான சகல அறிவியற் கலை நூல்களையும் பெருமளவில் கொண்டிருந்தது. வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, மிகப் பிரமாண்டமான அளவிலான கையெழுத்து நூல்கள் அந்நூல் நிலையத்திலிருந்து கைப்பற்றப்பட்டு, அருகிலிருந்த தைகிரிஸ் நதிக்குள் வீசியெறியப்பட்டமையால், அந்நூல்களிலிருந்த மை நதியுடன் கரைந்து, தைகிரிஸ் நதியின் மேற்புறம் கறுப்பு நிறமாக ஓடியதாகவும், இவ்வாறு ஆறு மாதங்கள் தைகிரிஸ் நதி கறுப்பு நிறமாகக் காட்சியளித்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. இன்னும் சில வரலாற்றாசிரியர்கள், அந்நூல் நிலையத்திலிருந்த நூல்களையெடுத்து மங்கோலியர் தைகிரிஸ் நதியின் மேல் வீசியெறிந்து அவற்றைக் கொண்டு நீண்ட பாலமொன்றை அமைத்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.
3. உயிரிழப்புகளும் உளவியல் பலவீனமும்
மங்கோலியரின் கொடுமைகளும் காட்டுமிராண்டித்தனங்களும் பக்தாதில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த மக்களை பெரும் அச்சத்திற்கும் திகிலுக்கும் உள்ளாக்கின. அதுவரை, இத்தகையதொரு கொடுமையை அவர்கள் நேரிடையாகவோ கதையாகவோ கூட அறிந்திருக்கவில்லை. எனவே, மங்கோலியரின் இக்கொடுமைகளிலிருந்து தப்பிக்க வேண்டுமானால், நகரிலிருந்து வெளியேற வேண்டுமென அவர்கள் கருதினர். தமது சொத்துகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேற அவர்கள் முயன்றனர். எனினும், இதனைக் கண்டுபிடித்த மங்கோலியர், அம்மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தனர். தமது கண்ணுக்குத் தெரியும் அனைவரையும் படுகொலை செய்தனர். மார்ட்டின் சிக்கர் என்பவரின் கருத்துப்படி, 'இப்படையெடுப்பின் போது மங்கோலியர்களால் படுகொலை செய்யப்பட்ட சிவிலியன்களின் மொத்த எண்ணிக்;கை 90இ000 விடவும் அதிகமாகும்' எனப்படுகின்றது. எனினும், இது மிகக் குறைவான கணிப்பீடாகும். வஸ்ஸாப் என்பவர், 'எண்ணற்ற பல நூறாயிரம் பேர் மங்கோலியரின் இப்படையெடுப்பின் போது படுகொலை செய்யப்பட்டனர்' எனக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இயன் பிரேசியர் என்பவர், '200இ000க்கும் ஒரு மில்லியனுக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான மக்கள் தொகை இப்படையெடுப்பின் போது மங்கோலியர்களால் பலியிடப்பட்டது' எனக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், பக்தாதில் வாழ்ந்த பெருந்தொகையான முஸ்லிம்கள் மங்கோலியரின் இப்படையெடுப்பில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாகின்றது.
நகர் முழுக்கப் பரவிக் கிடந்த சடலங்கள் அழுகித் துர்நாற்றம் வீச ஆரம்பித்து விட்டமையால், அந்நாற்றத்தைப் பொறுக்க முடியாமல், ஹுலகூகான், காற்று வீசும் திசைக்கு எதிர்த்திசையில் தன் முகாமை நகர்த்தியதாகக் கூறும் வரலாற்றுத் தரவிலிருந்து, அந்நகரில் அவன் ஏற்படுத்திய பெரும் உயிரழிவுகளை விளங்கிக் கொள்ள முடியும்.
மங்கோலியரின் இப்படையெடுப்பு நிகழ்ந்த காலத்தில் பக்தாத் கலாசார, நாகரிகத் துறைகளில் மிகச் சிறந்து விளங்கிய ஒரு நகரமாயிருந்தது. பல அறிஞர்கள், கல்வி கற்பதற்காகவும் கற்றுக் கொடுப்பதற்காகவும் அங்கு கூடியிருந்தனர். எனவே, இப்படையெடுப்பின் போது பலியாக்கப்பட்ட முஸ்லிம்களுள் இத்தகைய அறிஞர்கள், கல்விமான்கள் பலரும் உள்ளடங்கியிருந்தனர் என்பது இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பெரும் விளைவாகக் கருதப்படக் கூடியது. இவ்வறிஞர்கள் தொடர்ந்தும் இருந்திருந்தால், அவர்கள் மூலமாக முஸ்லிம் சமூகம் எதிர்காலத்தில் பல நன்மைகளையும் முன்னேற்றங்களையும் கண்டிருக்கக் கூடும். அத்தகைய எதிர்கால கல்வி அபிவிருத்திக்கும், சமூக மேம்பாட்டுக்கும் மிகக் கொடூரமான முற்றுப் புள்ளியொன்று அல்லது தடைக்கல்லொன்று விழுந்தமை இப்படையெடுப்பின் முக்கிய விளைவெனலாம்.
அது மட்டுமன்றி, இவ்வாறு வகைதொகையற்ற எண்ணிக்கையில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமை, முஸ்லிம்களை உள ரீதியாகப் பெருமளவு பாதித்தது. முஸ்லிம் தலைமைகளினதும், இராணுவத்தினதும் உற்சாகமின்மையும், அந்நியரின் காட்டுமிராண்டித்தனமும் இணைந்து மக்களைப் பெரிதும் பாதித்தன. தமது எதிர்காலம் கேள்விக் குறியாய் ஆகிவிட்டதையும், தமது பல்துறை சார்ந்த முயற்சிகள் முற்றாக வீணடிக்கப்பட்டு விட்டதையும் நேரிடையாகவே கண்ட மக்கள், உளவியல் ரீதியாக மிகப் பெரும் பலவீனத்துக்கு ஆட்பட்டு, தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இவ்வாறு மக்கள் உளவியல் ரீதியாகப் பெரும் பலவீனத்துக்கு ஆட்பட்டமை மங்கோலியரின் இப்படையெடுப்பின் முக்கிய விளைவொன்றாகக் கொள்ளப்படக் கூடியது.
4. சிலுவை யுத்தங்கள்
மங்கோலியப் படையெடுப்பின் மற்றொரு விளைவாகக் கொள்ளப்படத்தக்கது சிலுவை யுத்தங்கள் முனைப்புப் பெற்றமையையாகும். பொதுவாக சிலுவை யுத்தங்கள் என்பவை கிஸ்தவ நலனையும் முஸ்லிம்களை அடிமைப்படுத்துவதையும் நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டவை. அவை மங்கோலியரின் எழுச்சிக்கு முன்பே தொடங்கி விட்ட ஒன்றெனினும், எட்டாவதாக இடம்பெற்ற சிலுவைப் போர் மங்கோலியர் பக்தாதின் மீது மேற்கொண்ட படையெடுப்பினதும் அங்கு புரிந்த கொடுமைகளினதும் விளைவாகத் தோன்றிய ஒன்றாகும். ஏனெனில், எட்டாவது சிலுவை யுத்தத்தை தொடங்கிய ஒன்பதாம் லூயிஸ் (டுழரளை ஐஓ) சிரியாவையே இதன் போது இலக்காகக் கொண்டு அங்கே பல கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டான். மங்கோலியர் பக்தாதை வெற்றி கொண்ட பின், அவ்வெற்றியின் தொடராக சிரியாவையே கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. இது பக்தாத் கைப்பற்றப்பட்ட அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1260இல் இடம்பெற்றது.
6. இராணுவ அச்சுறுத்தல் முறைமை (Military Tactic)
பக்தாதில் மங்கோலியர் பெற்ற வெற்றியானது, அவர்கள் தொடர்பான ஓர் அச்சுறுத்தலாக முஸ்லிம் நாடுகளுக்கு அமைந்தது. மங்கோலியரை எதிர்த்து வெல்ல முடியாது என்ற உணர்வும், சண்டையிடாது சரணடைந்து விடுவதே உத்தமம் என்று நினைக்கும் நிலையும் தோன்றியது. மங்கோலியரின் இந்த இராணுவ முறைமையை 1960இல் அவர்களால் கைப்பற்றப்பட்ட சிரியாவில் அவதானிக்க முடியுமாக இருந்தது. சிரியாவில் இது அவர்களுக்கு வெற்றியளித்த போதிலும், அதே ஆண்டில் எகிப்தை நோக்கி அவர்கள் மேற்கொண்ட படையெடுப்புகள் அவர்களுக்குப் பெரும் தோல்வியாக அமைந்தது. அதே ஆண்டில் அய்ன் ஜாலூட் எனும் போரில் அடைந்த தோல்வியும் மங்கோலியப் பேரரசின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியது.
முடிவுரை
இவ்வகையில், மங்கோலியர் 1258இல் பக்தாதில் மேற்கொண்ட படையெடுப்பானது இஸ்லாமிய வரலாற்றில் மிகத் துயரமான ஒரு நிகழ்வாகும். அது முஸ்லிம்களது உயிர்களை மட்டுமன்றி அவர்களது வாழ்வியல் மூலங்களையும் கூட மண்ணோடு மண்ணாக்கி அழித்து விட்டது. முஸ்லிம்கள் மீள எழுச்சி பெறுவதற்கான எல்லாக் கதவுகளையும் இழுத்து மூடிய மிகப் பெரும் கொடுமையாக வரலாற்றில் இப்படையெடுப்பை நோக்க முடியும். இஸ்லாமிய வரலாற்றில், இப்படையெடுப்பு ஏற்படுத்தியுள்ள விளைவுகள் மிகக் கணிசமானவையும் கொடுமையானவையுமாகும். நாகரிக வாடையற்ற காட்டுமிராண்டித்தனமான போக்குடைய மங்கோலியரின் முரட்டுக் கைகளுக்குள் பக்தாத் எனும் அறிவுக் கருவூலம் அழித்து நசுக்கப்பட்ட இம்மோசமான வரலாறு, முஸ்லிம்களது அரசியல், பொருளாதார, சமூக, கலாசார, நாகரிகத் துறைகளில் மிகப்பெரும் தாக்கத்தையும் பாரதூரமான விளைவுகளையும் ஏற்படுத்தின. அவ்விளைவுகளின் தாக்கத்தை இன்றும் கூட பல வடிவங்களில் முஸ்லிம் உலகில் அவதானிக்க முடியுமாக இருக்கின்றது.
மங்கோலியரின் இப்படையெடுப்புப் பற்றி கிறிஸ்தவ அறிஞர்கள் இருவரின் கருத்து இங்கு நோக்கத்தக்கது. ஸ்டீவன் டச் என்பார் கூறுகின்றார்: '1258ல் இருந்த ஈராக் தற்போதைய ஈராக்கிற்கு முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக பழமை வாய்ந்த கால்வாய்த் தொகுதிகள் அதன் விவசாய வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிந்தன. பக்தாத், உலகிலேயே அதி திறமையும் நுண்ணறிவும் மிக்க அறிஞர்களைக் கொண்ட மத்திய நிலையமாக விளங்கியது. அங்கு மங்கோலியர் ஏற்படுத்திய நாசகார அழிவுகள், இஸ்லாம் மீள எழுச்சி பெறவே முடியாதளவு உளவியல் ரீதியான பெரும் பாதிப்பை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தியது. ஏற்கனவே இஸ்லாம், பல்வேறு குழப்பங்கள் சந்தேகங்கள், முரண்பாடுகள் என்பவற்றின் பக்கம் திரும்பி விட்டிருந்தது. பக்தாதில் மேற்கொள்ளப்பட்ட கொலை, கொள்ளை, வன்முறைகள் இஸ்லாமிய அறிவுத் திறனுடையோரின் தோன்றலையும் பாதித்தது'
டேவிட் மார்கன் என்பவரை மேற்கோள் காட்டி அப்துல்லாஹ் வஸ்ஸாப் என்பவர் குறிப்பிடுகின்றார்: 'மங்கோலியர் பக்தாத் மீது படையெடுத்த முறைமையானது, அழகிய புறாவை நோக்கி கடும் பசியுள்ள வல்லூறு ஒன்று தாக்குதல் நடத்தியதை, அல்லது மென்மையான செம்மறியாட்டின் மீது கொடூரமான ஓநாயொன்று பாய்ந்து தாக்குதல் நடத்தியதை ஒத்திருந்தது. பெருந்தொகையான போர் வீரர்களையும், நாணமுள்ள முகங்களையும் பெரும் அழிவுக்குள்ளாக்கிய மங்கோலியர், மனிதாபிமானமற்ற கொலைகளையும் தீவிரவாதத்தையும் அங்கு பரப்பினர். தங்க நகைகளையும் ஆபரணங்களையும் கொள்ளையடிப்பதற்காக மோதிரங்களணிந்த விரல்களைக் கத்தியினால் வெட்டும் கொடுஞ்செயலையும் அவர்கள் புரிந்தனர். பெரிய ஹரம் பள்ளியின் திரைக்குப் பின்னால் மறைந்து கொண்டவர்கள் வெளியே இழுத்துக் கொண்டு வரப்பட்டு, வீதிகளிலும் ஒற்றையடிப் பாதைகளிலும் விளையாட்டுப் பொருளாகப் பந்தாடப்பட்டனர். அந்த ஆக்கிரமிப்பாளர்களின் கொடுங்கைகளில், பெருந்தொகையான மக்கள் அழிந்து போயினர்'
more thanks for your help.i got lot of nots to my a\l examination.
பதிலளிநீக்கு