வியாழன், 21 ஜூலை, 2011

சூழலால் ஏற்படும் தாக்கம்


ஓர் அரசன் தனது அரண்மனை ஊழியர்களனைவரையும் அழைத்து, சுற்றுப்புறச் சூழல் மனிதனை நிச்சயம் கெடுக்கும் என்று நான் சொல்கிறேன், உங்கள் அபிப்பிராயம் என்ன எனக் கேட்டார். அனைவரும் உங்கள் கருத்தை நாங்கள் ஆமோதிக்கின்றோம் என்றார்கள். மந்திரி எழுந்து சொன்னார் : "அரசே! இந்தக் கருத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஒருக்காலும் மனிதனை சுற்றுச் சூழல் கெடுக்காது. இது எனது வாதம்" என்றார். அரசருக்குக் கடுமையான கோபம் வந்தது. "இவரைக் கொண்டு போய் மாட்டுத் தொழுவத்தில் கட்டி வையுங்கள்" என உத்தரவிட்டார். 


மந்திரி மாட்டுத் தொழுவத்தில் 40 நாட்கள் கட்டப்பட்டிருந்தார். ஏராளமான மாடுகளுக்கிடையில் மந்திரி காலத்தைக் கழித்தார். 40 நாட்கள் முடிந்த பின் மந்திரியை அழைத்து "சுற்றுச் சூழல் மனிதனைப் பாதிக்காது என வாதிட்டீரே இப்போது என்ன சொல்கிறீர்" என்று அரசர் கேட்டார். "இப்பவும் எப்பவும் சொல்வேன் சுற்றுச் சூழல் மனிதனைப் பாதிக்காது. இது எனது அசைக்க முடியாத வாதம்" என்றார் மந்திரி. அப்போது ஓர் ஈ மந்திரியின் கன்னத்தில் உட்கார்ந்தது. ஈயைக் கையால் விரட்டுவதற்குப் பதிலாக கன்னத்தைச் சுளித்தார் மந்திரி. உடனே ஈ அடுத்த கன்னத்தில் உட்கார்ந்தது. அடுத்த கன்னத்தை மட்டும் சுளித்தார். பின்பு அந்த ஈ நெற்றியில் உடகார்ந்தது. நெற்றியை மட்டும் சுளித்தார். இதை அரசரும் அவையோரும் பார்த்து "கொல்" எனச் சிரித்தனர். 

"ஏன் சிரிக்கிறீர்கள், என் வாதத்தை நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டேன்" என்றார். அதற்கு அரசர், "மந்திரியாரே! உமது வாதம் தோற்றுப்போய் விட்டது என்பதற்கு நீரே சாட்சியாக எம் முன் நடந்து கொண்டீர். நாங்கள் சிரிக்காமல் எப்படி இருக்க முடியும், உமது முகத்தில் மூன்று இடங்களில் ஈ பறந்து வந்து உட்கார்ந்ததே. அதை உம் கையால் விரட்டாமல் மாட்டைப் போல, அந்த இடத்தை மட்டும் சுளித்து விட்டீரே, இத்தன்மை உமக்கு எப்படி வந்தது, சொல்லும். மாடுகளுடன் 40 நாட்கள் தங்கியிருந்ததால் ஏற்பட்ட பழக்கமல்லவா இது, சூழ்நிலை உம்மை அந்த அளவுக்கு மாற்றிவிட்டது. இந்த உண்மையை உம்மால் எப்படி மறுக்க முடியும்" என்றார். அதன் பிறகு, சூழ்நிலை மனிதனை நிச்சயம் மாற்றும் என்பதை மந்திரி ஒப்புக்கொண்டார்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக