நேர்காணல்: ஜெம்ஸித்
அல்ஹுதா: சமூகவியல் கண்ணோட்டத்தில் குடும்பம் என்ற நிறுவனத்தின் முக்கியத்துவம் குறித்து சிறிது விளக்க முடியுமா?
ஷெய்க் அகார்: சமூகவியல் கண்ணோட்டத்தில் குடும்பத்தை ஒரு சிறிய சமூகம் (Micro Society) என்று வர்ணிப்பார்கள். இந்த வகையில் ஒரு சீரிய சமூகம் உருவாவதற்கு முன்னோடியாக சிறந்த குடும்பங்கள் உருவாக்கப்பட வேண்டும். சிறந்த குடும்பங்கள் உருவாகாத நிலையில் சீரிய ஒரு சமூகம் உருவாக முடியாது.
எனவே, சமூகத்தின் ஆரம்ப விதையாக விளங்குவது குடும்பம்தான். குடும்பம் சீராக அமைகின்றபோதுதான் ஓர் இலட்சியவாத சமூகத்தை உருவாக்குவது சாத்தியமாகும்.
குடும்பம் என்ற நிறுவனத்தை ஒரு கோட்டைக்கு ஒப்பிடலாம். அந்தக் கோட்டையில் ஓர் ஓட்டை கூட ஏற்படாத வகையில் அதனைப் பாதுகாக்கின்ற காவலர்களாக திகழ்பவர்கள் குடும்ப அங்கத்தவர்கள். குடும்பம் எனும் கோட்டை மிகப் பலமாக இருக்க வேண்டும். அதில் எத்தகைய ஓட்டையும் ஏற்பட்டுவிடக் கூடாது. அப்போதுதான் குடும்பம் பலமான ஒரு நிறுவனமாகத் திகழும். இதன் விளைவாகவே முன்மாதிரிமிக்க ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும்.
எனவே, எந்த ஒரு சமூகத்தினதும் வெற்றி அந்த சமூகத்தில் வாழ்கின்ற குடும்பங்களது வெற்றியில்தான் தங்கியிருக்கிறது.
அல்ஹுதா: இஸ்லாமிய நோக்கில் குடும்ப அமைப்பின் முக்கியத்துவம் குறித்து சுருக்கமாகச் சொல்ல முடியுமா?
ஷெய்க் அகார்: இஸ்லாமிய நோக்கில் குடும்ப அமைப்பானது மிக முக்கியமான ஓர் அங்கம். இஸ்லாத்தின் இலக்குகள் மூன்று.
1. தன்வழி தனிமனிதர்களை உருவாக்குதல்
2. தன்வழி குடும்பங்களை உருவாக்குதல்
3. தன்வழி சமூகத்தை உருவாக்குதல்
இஸ்லாம் இம் முப்பெரும் இலக்குகளுள் குடும்பங்களை உருவாக்குதல் எனும் இலக்குக்கு ஒப்பீட்டு ரீதியில் கூடுதலான முக்கியத்துவத்தை வழங்குகிறது. எனவேதான் இஸ்லாம் “குடும்பம் சார்ந்த அல்லது குடும்பத்தை இலக்காகக் கொண்ட மார்க்கம்” (Family Oriented Religion) என அழைக்கப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் ஒரு விடயத்தைச் சொல்லியாக வேண்டும். பொதுவாக மதம் தனிமனிதனுக்கும் இறைவனுக்குமிடையிலான உறவு பற்றியே பேசுகிறது. அதற்கு அப்பால் செல்வதில்லை. ஆனால், இஸ்லாத்தைப் பொறுத்தவரை அது தனிமனிதன்,குடும்பம்,சமூகம் என்ற அம்சங்களை இலக்காக் கொண்டது. எனவே, இஸ்லாத்தை ஒரு மதம் என்று அழைக்கலாகாது. அப்படிச் சொல்வதாயின் அதனோடு சேர்த்து Family Oriented, Community Oriented ஆகிய இரு அடைமொழிகளை இணைத்துக் கொள்ள வேண்டும்.
இஸ்லாத்தில் குடும்பம் என்ற நிறுவனமும் குடும்ப வாழ்வும் கூடுதலான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இஸ்லாமிய சட்டத்துறையில் முனாகஹாத் என்பது தனியான ஒரு பகுதி. தற்போது இஸ்லாமிய சட்டத்துறையில் இது பிக்ஹுல் உஸ்ரா (Family Law) எனும் பெயரில் தனியான ஒரு துறையாக விளங்குகிறது. அதில் ஒரு சிறிய அங்கம்தான் முஸ்லிம் தனியார் சட்டத்தில் இடம்பெற்றுள்ள விவாகம், விவாகரத்து தொடர்பான பகுதி.
மட்டுமன்றி, அல்குர்ஆன் பல இடங்களில் பலரது குடும்பங்களைப் பற்றி பேசியிருக்கிறது. பல நபிமார்களின் குடும்பங்களைப் பற்றி எடுத்தியம்பும் அல்குர்ஆன், குறிப்பாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் குடும்பத்தைப் பற்றி நிறையவே பேசியிருக்கிறது. அல்லாஹுத் தஆலா ஸூரதுத் தஹ்ரீமில் குடும்பம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை அழகாக எடுத்துச் சொல்கிறான்.
“ஈமான் கொண்டவர்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமேயாகும்.” (அத்தஃரீம்: 6)
இஸ்லாம் குடும்பத்துக்கு கொடுத்துள்ள முக்கியத்துவத்தை விளக்க இந்த அல்குர்ஆன் வசனமே போதும் என நினைக்கிறேன்.
அல்ஹுதா: முன்னமாதிரி மிக்க ஒரு குடும்பம் அமைவதற்கு இஸ்லாம் சொல்லும் வழிகாட்டல்கள் குறித்து...
ஷெய்க் அகார்: ஓர் இலட்சியவாத, முன்மாதிரியான குடும்பம் உருவாவதற்கு அற்புதமான வழிகாட்டல்களை இஸ்லாம் வழங்கியிருக்கிறது. குடும்ப வாழ்வின் நுழைவாயில் திருமணம். வாழ்க்கைத் துணைத் தெரிவு மிகச் சரியாக அமைந்தால்தான் முன்மாதிரிமிக்க குடும்பம் உருவாகும். அந்த வகையில் குடும்ப உருவாக்கத்தின் அத்திபாரம் ஆண், பெண் உறவு. ஆணும் பெண்ணும் இணையும் வகையில் அல்லாஹுத் தஆலா இனக் கவர்ச்சியை (Sex Appeal), பாலுணர்ச்சியை (Sexual Feelings) ஏற்படுத்தி வைத்துள்ளான். ஆணும் பெண்ணும் திருமணம் என்ற பந்தத்தில் இணையும்போதுதான் குடும்பம் உருவாகிறது.
ஒரு முன்மாதிரிமிக்க, சீரிய குடும்பம் அமைவதற்கான முதலாவது வழிகாட்டல் பொருத்தமான, சரியான வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்தலாகும்.
பொதுவாக இன்று சீரிய குடும்பம் உருவாகாமலிருப்பதற்குப் பிரதான காரணமாக விளங்குவது வாழ்க்கைத்துணைத் தெரிவில் இழைக்கப்படுகின்ற தவறுகளே. பொதுவாக இன்று வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்வதில் கவனத்திற் கொள்ளப்படுகின்ற சில அளவுகோல்கள் இருக்கின்றன. அழகு, உடல் ஆரோக்கியம், மனப் பொருத்தம், உளப் பொருத்தம், பொருளாதார நிலை, குடும்ப அந்தஸ்து, குடும்பப் பின்னணி என்பவையே அவை.
இவ் அளவுகோல்கள் கருத்திற் கொள்ளப்படுவதில் தவறில்லை. எனினும், இவற்றைவிட முன்னுரிமைப்படுத்த வேண்டிய, முக்கியத்துவம் பெற வேண்டிய ஒரு விடயத்தை மார்க்கம் எமக்கு கற்றுத் தருகிறது. அதுதான் மார்க்கப்பற்றுள்ள வாழ்க்கைத் துணையா என்பதை உறுதி செய்தல்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்.
“ஒரு பெண் நான்கு விடயங்களுக்காக திருமணம் முடித்துக் கொடுக்கப்படுகிறாள். அவளது பொருளாதார வளம், அவளது அழகு, அவளது குடும்பப் பின்னணி, அவளது மார்க்கம். நீ மார்க்கப் பற்றுள்ள பெண்ணை கரம்பற்றிக்கொள். அல்லாதபோது அழிந்து நாசமாகி விடுவாய்.” (அல்புகாரி, முஸ்லிம்)
மற்றொரு சந்தர்ப்பத்தில் நபியவர்கள் “மூக்கறுபட்ட கறுப்பின அடிமைப் பெண்ணாக இருந்தும் அவளிடம் மார்க்கப்பற்று இருந்தால் அவளே சிறந்தவள்” எனப் பகர்ந்தார்கள்.
எனவே, வாழ்க்கைத் துணைத் தெரிவில் மார்க்கப்பற்று முக்கியத்துவம் பெற வேண்டும். அதனோடு அழகு, பொருளாதார நிலை, குடும்பப் பின்னணி என்பவை கவனத்திற் கொள்ளப்படுவதில் தவறில்லை. குழந்தைகளைப் பெற்றெடுக்கக்கூடிய பெண்களா என்பதைப் பார்க்குமாறு நபியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். கன்னிப் பெண்ணாக இருப்பதை வரவேற்றிருக்கிறார்கள். இவையெல்லாம் வாழ்க்கைத் துணைத் தெரிவில் கவனிக்கப்படவேண்டிய இரண்டாம்பட்ச அம்சங்கள்.
அடிப்படையில் மார்க்கம் என்ற இந்த அம்சமே முதன்மைப்படுத்தப்பட வேண்டும். மார்க்கம் இருக்கும் இடத்தில்தான் ஒழுக்கம், பண்பாடு, நன்நடத்தை, அடக்கம், இறையச்சம், பேணுதல், கணவன்,மனைவிக்கிடையேயுள்ள கடமைகளை நிறைவேற்ற வேண்டுமென்ற உணர்வு முதலான பண்புகள் குடிகொண்டிருக்கும்.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் “பெண்களில் மிகச் சிறந்தவள் யார்?” என வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள், “கணவன் அவளைப் பார்த்தால் மகிழ்விப்பாள். அவர் அவளுக்கு கட்டளையிட்டால் அதற்கு கட்டுப்படுவாள். அவரது பொருளிலும் அவளது ஆன்மாவிலும் அவர் வெறுக்கும் காரியங்களிலும் அவருக்கு மாறு செய்ய மாட்டாள்” (முஸ்னத் அஹ்மத்) என்று சொன்னார்கள்.
இத்தகைய பண்புகள் இறையச்சமுள்ள, ஸாலிஹான ஒரு பெண்ணிடமே குடிகொண்டிருக்கும். ஆகவே, ஒரு சிறந்த குடும்பம் உருவாவதற்கு வாழ்க்கைத்துணை தெரிவு சரியாக அமைய வேண்டும்.
இதுபோன்றே பெண்களும் தமது வாழ்க்கைத் துணைவர்களைத் தெரிவு செய்யும்போதும் கவனத்திற் கொள்ள வேண்டிய அம்சங்களை இஸ்லாம் சொல்கிறது. முதலாவது மார்க்கப்பற்று, இரண்டாவது நன்னடத்தை. மூன்றாவது குடும்பப் பின்னணி. இவை தவிர, ஏற்கனவே திருமணம் முடிக்காத ஒரு மணமகனை எதிர்பார்ப்பது வரவேற்கத்தக்கது. கௌரவமான தொழில், பொருளாதார வசதி என்பவற்றையும் கவனத்திற் கொள்ளலாம்.
ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு மனிதர் ஹஸன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் வந்து “எனக்கொரு மகள் இருக்கிறார். அவரை யாருக்கு திருமணம் முடித்துக் கொடுக்கலாம் என ஆலோசனை சொல்லுங்கள்” எனக் கேட்டார். அதற்கு இமாமவர்கள், “உனது மகளை இறையச்சமுள்ள ஓர் ஆண்மகனுக்கு மணமுடித்துக் கொடுப்பாயாக. ஏனெனில், இறையச்சமுள்ள ஆண்மகன் உனது மகளை உள்ளத்தால் விரும்பினால் கௌரவமாக நடத்துவான். ஏதாவது ஒரு காரணத்தினால் உள்ளத்தால் அவளை நேசிக்கா விட்டால் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வான். அவளுக்கு ஒருபோதும் அநியாயமிழைக்க மாட்டான்” என மறுமொழி பகர்ந்தார்கள்.
எனவே, இன்று இந்த அளவுகோல்கள் எந்தளவு தூரம் பின்பற்றப்படுகின்றன என்பது பற்றி நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். இன்று பொதுவாக வாழ்க்கைத்துணைத் தெரிவில் மார்க்கப்பற்றும் நன்னடத்தையும் இரண்டாம் பட்சமாகவே கவனத்திற் கொள்ளப்படுகின்றன. மார்க்கப்பற்றும் நல்லொழுக்கமும் முன்னுரிமை பெறாதவரை நாம் எதிர்பார்க்கின்ற முன்மாதிரிமிக்க குடும்பங்களை உருவாக்குவது சிரமசாத்தியமானது.
அல்ஹுதா: குடும்ப வாழ்வின் நுழைவாயில் திருமணம் என்ற வகையில் திருமணத்தின் நோக்கம் குறித்து சுருக்கமாக விளக்க முடியுமா?
ஷெய்க் அகார்: ஓர் ஆணும் பெண்ணும் தத்தமது பாலுணர்வை, உடல் இச்சையைத் தீர்த்துக் கொள்வதே திருமணத்தின் நோக்கம் என்ற பிழையான ஒரு கருத்து சமூகத்தில் பொதுவாக இருக்கிறது. உண்மையில் திருமணத்தின் பிரதான நோக்கங்களுள் ஒன்றுதான் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்தல். ஆனால், அது மாத்திரம்தான் திருமணத்தின் ஏக இலக்கு அல்ல. அதற்கப்பால் பல்வேறு நோக்கங்கள் உள்ளன.
சந்ததியினரைப் பெருக்குவது ஒரு பிரதான நோக்கம். ஷரீஆவில் திருமணத்தின் மூலமே மனித இனத்தின் இருப்பு உத்தரவாதப்படுத்தப்படுகிறது. திருமணம் நிகழாவிட்டால் மனித இனம் நிலைக்காது. ஆணும் பெண்ணும் இணையும்போதுதான் சந்ததி விருத்தி செய்யப்படுகிறது.
எனவே, மனித இனத்தின் இருப்பைப் பாதுகாப்பது திருமணத்தின் ஒரு பிரதான குறிக்கோளாக அமைந்திருக்கிறது.
திருமணத்தின் மற்றொரு நோக்கம்தான் ஒவ்வொருவரும் தாய், தந்தை என்ற அந்தஸ்த்தைப் பெற்றுக் கொள்ளுதல். அதாவது, திருமண பந்தம் ஏற்படுத்தப்படாதபோது தாய்மை (Motherhood), தந்தையாதல் (Fatherhood) , சகோதரத்துவம் (Brother hood/Sister hood)) மற்றும் மனித வாழ்க்கைக்கு வளம் சேர்த்துக் கொண்டிருக்கும் திருமண வழி உறவுகள், இரத்த உறவுகள் அனைத்தையும் இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.
திருமணம் என்ற பந்தம் இல்லாமல் வெறுமனே ஆண்களும் பெண்களும் இணைய ஆரம்பித்தால் தாய், தந்தை, இரத்த உறவுகள், திருமண வழி உறவுகளுக்கு என்ன நடக்கும்? அதன் மோசமான விளைவுகள் எத்தகைய பாதிப்புக்களைச் செலுத்தும்? திருமணம் புறக்கணிக்கப்டுகின்றபோது குடும்ப உறவுகள் அற்ற காய்ந்த, வரண்ட ஒரு சமூகம் உருவாவதை யாராலும் தடுத்த நிறுத்த முடியாது. துரதிஷ்டவசமாக அத்தகைய ஒரு சமூகம்தான் இன்று உலகில் உருவாகி வருகிறது.
அடுத்தது ஒரு பெண் தாய்மை நிலையை அடையாதவரை அந்தப் பெண்ணின் வாழ்க்கை பூர்த்தியடையாது. ஒரு பெண் குழந்தை,சிறுமி,யுவதி,தாய்,பாட்டி என்ற அந்தஸ்துகளை அடைய வேண்டும். அப்போதுதான் அது நிறைவான ஒரு குடும்ப வாழ்வாக அமையும். நிம்மதியும் சந்தோஷமும் அதனூடாகத்தான் ஏற்படும்.
மட்டுமன்றி, திருமணத்திற்கூடாகத்தான் மனிதன் உற்சாகமடைகிறான். வாழ்க்கையில் சுறுசுறுப்பு ஏற்படுகிறது. திருமணம் முடிக்காதவனுக்கு பொறுப்புணர்ச்சி கிடையாது. இதனால் அவன் பொடுபோக்காகவே வாழ்வான். மனைவிக்குரிய கடமைகளைச் செய்ய வேண்டும்;;ளூ பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டும் என்ற உணர்வைப் பெறுகின்றான். அப்போதுதான் அவனுக்கு பொறுப்புணர்ச்சியும் கடமையுணர்வும் அதிகரிக்கிறது.
மற்றும் திருமணத்தின் மூலம் கணவன்,மனைவி,பிள்ளைகளுக்கு மத்தியில் தொழிற்பிரிப்பு நடைபெறகிறது. இதன் மூலம் குடும்ப அங்கத்தவர்கள் ஒருவருக்கொருவர் துணையாகவும் உதவியாகவும் இருப்பர். திருமண பந்தத்தில் இணையாது பிரமச்சாரியாக வாழும் ஒருவர் தனித்து நின்று அவரது நாளாந்தக் கடமைகளை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. குளியலறையைச் சுத்தம் செய்தல், தேநீர் தயாரித்தல், துணிமணிகளைத் துவைத்தல், உணவு சமைத்தல், வீட்டைக் கூட்டிப் பெருக்குதல், விருந்தினர்களைக் கவனித்தல், தொழிலுக்குச் செல்லல் என்று அனைத்துக் காரியங்களையும் தன்னந்தனியாக நின்று செய்யக்கூடிய நிலை ஏற்படுகிறது.
ஆனால், ஒரு குடும்ப அமைப்பில் பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. கணவன்,மனைவி, சகோதரன், சகோதரி, தாய்,தந்தை, பெற்றரோர்,பிள்ளை என்று குடும்ப அங்கத்தவர்களிடையே பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்படுவதன் மூலம் குடும்ப வாழ்வு வளம் பெறுகிறது.
அடுத்ததாக குடும்ப உறவுகளின் மூலம் பரஸ்பர அன்பும் ஒத்துழைப்பும் கொண்ட ஒரு சமூகம் உருவாக வழியேற்படுகிறது.
மட்டுமன்றி, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே அமைந்த இந்த இயற்கையான தொடர்பை மிகத் துல்லியமாக வர்ணிக்கும் அல்குர்ஆன் அன்பு, அரவணைப்பு, அமைதி ஆகிய மூன்றும் திருமணத்தின் மூலம் கிடைப்பதாகவும் சொல்கிறது.
“இன்னும் நீங்கள் ஆறுதல் பெறுவதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும் உங்களுக்கிடையே அன்பையும் கிருபையையும் உண்டாக்கி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்திக்கக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் அத்தாட்சி இருக்கிறது.” (ஸூரா அர்ரூம்: 21)
திருமணம் என்பது ஆன்மாவை ஆன்மாவுடன் இணைக்கும் உறுதிமிக்க ஓர் ஒப்பந்தமாகும். இதில் பாசத்துடன் கூடிய கருணை மற்றும் தூய்மையான அன்பு செழிப்புற்று விளங்குகின்றன. நேசமும் இதமும் மிக்க இந்த இல்லறத்தில் ஆண், பெண் இருவரும் மன நிம்மதி, மகிழ்ச்சி, அமைதி, பாதுகாப்பு எனும் அருட்கொடைகளைப் பெறுகிறார்கள். இதற்காகத்தான் அல்லாஹ் இரு ஆன்மாக்களுக்குமிடையே திருமண பந்தத்தை ஏற்படுத்துகிறான்.
ஆனால், இன்று திருமணம் முடித்த பெரும்பாலானோர் வாழ்க்கைத் துணைத் தெரிவில் இழைத்த தவறின் காரணமாக இம்மூன்றையும் (அன்பு, அரவணைப்பு, அமைதி) இழந்து தவிக்கிறார்கள்.
தவிரவும் திருமணம் முடிக்காதவர்களின் ஆயுட் காலத்தை விட திருமணம் முடித்தவர்களின் ஆயுள் அதிகம் என்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காரணம், திருமணம் முடிக்காதவர்களின் வாழ்க்கையில் சமநிலை பேணப்படுவதில்லை. திருமணத்திற்குப் பின்னர்தான் மனித வாழ்வில் சமநிலை ஏற்படுகிறது.
அல்ஹுதா: ஒரு சீரிய இஸ்லாமிய குடும்ப உருவாக்கத்திற்குத் தடையாகவுள்ள அச்சுறுத்தல்கள் பற்றி சொல்ல முடியுமா?
ஷெய்க் அகார்: உண்மையில் இது மிக விரிவாக பேசப்பட வேண்டிய ஓர் அம்சம். இஸ்லாமிய குடும்ப உருவாக்கத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் பல அம்சங்களில் முதன்மை பெறுவது சீதனக் கொடுமை.
அந்நிய கலாசார தாக்கத்தின் விளைவாக குறிப்பாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இந்த சீதனப் பிரச்சினை நெடுங்காலமாக இருந்துவருகிறது. இந்த சீதனப் பிரச்சினைக்கு சரியான தீர்வு காணப்படாதவரை நாம் எதிர்பார்கின்ற முன்மாதிரிமிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புவது சிரமசாத்தியமானது.
தற்போது சீதனப் பிரச்சினை ஓரளவு தீர்ந்து விட்டது என பலர் கருதுகின்றனர். ஆனால், அவ்வாறல்ல. சீதனத்துக்கு பன்முகங்கள் உண்டு. ஒரு காலத்தில் சீதனம் என்ற பெயரில் அல்லது கைக்கூலி என்ற பெயரில் நேரடியாகவே பெண் வீட்டாரிடமிருந்து பணம் பெறப்பட்டது. இப்போது பல்வேறு வியூகங்கள் கையாளப்பட்டு வேறு பெயர்களில் சீதனக் கொடுமை தலைவிரித்தாடுகிறது. வாகனமாக, இலங்கையைப் பொறுத்தவரை தலைநகரத்தில் வீடாக, காணி பூமியாக, திருமணச் செலவை பெண் வீட்டார் பொறுப்பேற்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கூடாக என்று வௌ;வேறு வழிமுறைகளில் இந்தக் கொடுமை அரங்கேற்றப்பட்ட வண்ணமுள்ளது.
சீதனத்தை வைத்து வாழ்க்கைத் துணையைத் தீர்மானிக்கின்ற நிலை வந்துவிட்டாலே இஸ்லாமிய குடும்ப உருவாக்கத்துக்கான ஏராளமான தடைகள் உருவாகி விடுகின்றன. இங்கு மனப் பொருத்தத்தைவிட பணப் பொருத்தம் மேலாகக் கருதப்படுகிறது. இதனால் பொருத்தமற்ற துணை தெரிவு செய்யப்படுகிறது. சீதனம் பெற்று திருமணம் முடித்த மணமகனுக்கு பெண் வீட்டாரிடமிருந்து எத்தகைய கௌரவமும் மரியாதையும் கிடைப்பதில்லை.
விளைவாக குடும்ப வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் சீர்குலைந்து விடுகிறது.
மட்டுமன்றி, தமது சகோதரிகளுக்கு சீதனம் கொடுத்து திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதால் இளைஞர்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு உழைப்பதற்காக வெளிநாடு செல்கிறார்கள். இதனால் ஆண்களின் கல்வி பாதிப்படைகிறது. தமது பெண் பிள்ளைகளைக் கரை சேர்ப்பதற்காக தாய்மார் பிள்ளைகளை, குடும்பத்தாரைப் பிரிந்து மத்திய கிழக்கில் எதிர்கொள்ளும் அவலத்தை யாரிடம் முறையிடுவது? மறுபக்கம் பெண்கள் மட்டத்தில் கருக்கலைப்பு அதிகரித்திருப்பதற்கும் சீதனக் கொடுமை ஒரு காரணமாக கண்டறியப்பட்டுள்ளது.
யுவதிகள் மத்தியில் ஒழுக்க வீழ்ச்சி ஏற்படுவதற்கும் முதிர் கன்னிகள் அதிகரிப்பதற்கும் தலாக் இரட்டிப்படைந்திருப்பதற்கும் சீதனப் பிரச்சினை பிரதான காரணமாக உள்ளது.
இஸ்லாமிய குடும்ப உருவாக்கத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் இரண்டாவது அம்சம் ஆடம்பரத் திருமணம் அல்லது வீண்விரையம். இன்று சீதனம் வாங்காதவர்கள்கூட இந்த விடயத்தில் பொடுபோக்காக இருக்கிறார்கள். திருமணத்திற்கு முன்பு நிச்சயதார்த்தம் என்ற பெயரில் திருமணத்தின்போது Home Comming, Wedding என்ற பெயர்களில் திருமணத்திற்குப் பின்னர், முதற்பிள்ளை பிறந்ததற்காக... என்று பல்வேறு விழாக்களை ஏற்பாடு செய்து பெருந்தொகைப் பணத்தை அள்ளி இறைக்கிறார்கள்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது வழிமுறைகளில் மிக உயர்ந்த ஒரு ஸுன்னாதான் எளிமை. இஸ்லாமிய குடும்பத்தின் பிரதான அடையாளங்களில் ஒன்று எளிமை பேணுதல். இஸ்லாம் வறுமையை, ஏழ்மையை வரவேற்பதில்லை. ஆனால், எளிமையை (Simplicity) வலியுறுத்துகின்ற மார்க்கம் இஸ்லாம். நபி (ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம்) அவர்களது முழு வாழ்விலும் எளிமை பிரதிபலித்திருப்பதைக் காணலாம். அவர்கள் ஒருபோதும் ஆடம்பரமாக வாழவில்லை. வீண்விரயம் செய்யவுமில்லை.
நபி (ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அடிக்கடி இவ்வாறு பிரார்த்திப்பார்கள்.
“யா அல்லாஹ் என்னை நீ எளிமையானவனாக வாழ வைத்து எளிமையான நிலையில் மரணிக்கச் செய்து மறுமையில் இந்த உலகில் எளிமையாக வாழ்ந்தோர்களுடன் எழுப்புவாயாக!”
ஆனால், இன்று பெரும்பாலான முஸ்லிம்கள் மத்தியில் எல்லா விடயங்களிலும் ஆடம்பர மோகம் தலைதூக்கியிருக்கிறது. ஆடம்பர மோகம் அழிவுக்கான அடையாளம். மனித இன வரலாற்றில் தோன்றிய சமூகங்களின், நாகரிகங்களின் வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக விளங்கியது ஆடம்பர மோகமே. ஆடம்பரப் பிரியர்கள் இருக்கின்ற சமூகம் அழியும் என்பது பிரபஞ்ச நியதியும்கூட. துரதிஷ்டவசமாக இன்றைய முஸ்லிம் சமூகத்தை ஆடம்பர மோகமும் வீண்விரயமும் ஆட்கெண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
“உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்கள் ஷைத்தானுடைய சகோதரர்கள்” என அல்குர்ஆன் எச்சரிக்கிறது.
நபி (ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள். “விரும்பியதை சாப்பிடுளூவிரும்பியதை அணி. ஆனால், இரண்டு விடயங்கள் பாவமானவை. ஒன்று வீண்விரயம். மற்றையது அகங்காரம்.”
ஆணவமும் அகங்காரமும் இருக்குமிடத்தில்தான் வீண்விரயமும் இருக்கிறது. வீண்விரயம் செய்பவரிடம் ஆணவமும் அகங்காரமும் குடிகொண்டிருக்கும்.
இலட்சியவாத இஸ்லாமிய குடும்ப வாழ்வைத் துவங்குவதற்குத் தடையாகவுள்ள மூன்றாவது அம்சம் வாழ்க்கைத் துணைத் தெரிவில் ஏற்படும் தவறுகள், பிழையான அளவுகோல்கள். மார்க்கத்துக்கும் ஒழுக்கத்துக்கும் கொடுக்கப்படாத முக்கியத்துவம் ஏனையவற்றுக்கு வழங்கப்படுவதன் மூலம் சீரிய குடும்ப அமைப்பை ஏற்படுத்த முடியாது.
இலட்சியவாத இஸ்லாமிய குடும்ப வாழ்வைத் துவங்குவதற்கு பிரதான தடையாகவுள்ள இம்மூன்று அம்சங்களும் தவிர்க்கப்படுவதன் மூலம் நாம் எதிர்பார்க்கும் சீரிய இஸ்லாமிய குடும்பத்தைக் கட்டியெழுப்ப முடியும், இன்ஷா அல்லாஹ்.
அல்ஹுதா: இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் சீதனம் எவ்வாறு நோக்கப்படுகிறது?
ஷெய்க் அகார்: இஸ்லாமிய நோக்கில் சீதனம் என்பது யாசகம் கேட்பதற்குச் சமமானது. பேராசையின் வெளிப்பாடே சீதனம். சீதனம் வாங்குவதானது பிறர் பொருளை அத்துமீறி உண்ணுதல், கொள்ளையடித்தல், இலஞ்சம் வாங்குதல் போன்ற பாதகச் செயல்களைச் செய்வதற்கு சமமானது என இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே, சீதனம் வாங்குவது இஸ்லாத்துக்கு அந்நியமான வெறுக்கத்தக்க ஒரு பித்அத்ளூ இக்கொடுமைக்கு எதிராகப் போராடுவது சன்மார்க்க கடமை என சர்வதேச இஸ்லாமிய சட்ட மன்றம் மார்க்கத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஏனெனில், இஸ்லாமிய குடும்பம் உருவாவதற்கு மிகப் பெரிய தடையாக விளங்குவது இந்த சீதனக் கொடுமை.
அல்ஹுதா: திருமண வாழ்வில் கணவன்,மனைவி உறவு, அவர்களுக்கிடையிலான கடமைகள், உரிமைகள் பற்றி சுருக்கமாகச் சொல்ல முடியுமா?
ஷெய்க் அகார்: இஸ்லாமிய பின்புலத்தோடு குடும்ப வாழ்வை ஆரம்பித்தால் அது ஒரு சுவன வாழ்வாக இருக்கும். நாம் மேற்சொன்ன இஸ்லாமிய நோக்கில் குடும்ப வாழ்வு கட்டியெழுப்பப் படாதபோது அது கசப்பான ஒரு வாழ்வாகத்தான் அமையும். ஆயுட் காலம் அதிகரிப்பதற்குப் பதிலாக குறைவடையும். சந்தோஷத்தையும் நிம்மதியையும் இழந்து கவலையையும் துக்கத்தையும் சுமக்க வேண்டிய நிலை ஏற்படும்.
நாம் மேற்சொன்ன பின்புலத்தில் குடும்ப வாழ்வைப் பார்க்கும் ஒவ்வொருவரும் தத்தமது கடமைகள், பொறுப்புக்களை சரியாக நிறைவேற்ற முயற்சிப்பார்கள். இஸ்லாம் வாழ்க்கைத் துணைத் தெரிவின்போது மாத்திரம் வழிகாட்டல்களை வழங்கவில்லை. கணவன்,மனைவி கடமைகள், பெற்றரோர்,பிள்ளை உரிமைகள், உறவினர்கள், இனபந்துக்கள் மீதான உரிமைகள், அண்டை அயலவரின் உரிமைகள் தொடர்பாக மிக விரிவாகப் பேசும் மார்க்கம் என்றால் அது இஸ்லாம்தான்.
அந்த வகையில் கணவன், மனைவிக்கிடையிலான பரஸ்பர உரிமைகள் பற்றி சுருக்கமாகச் சொல்லவது பொருத்தம் என நினைக்கிறேன்.
1. கணவன் மனைவியோடும் மனைவி கணவனோடும் நல்லுறவு பேண வேண்டும்.
2. இருவரும் பரஸ்பரம் உடலியல் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
அதாவது, ஒரு கணவன் எவ்வளவு காலம் தனது மனைவியைப் பிரிந்து இருக்கலாம் என்பது பற்றியெல்லாம் குடும்பவியல் சட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. சில இஸ்லாமிய அறிஞர்கள் ஒரு கணவன் தனது மனைவியை விட்டும் 4 மாதங்களுக்கு மேல் பிரிந்திருக்கக் கூடாது எனத் தெரிவிக்கின்றனர். மற்றும் சில அறிஞர்கள் ஒரு கணவன் கூடியபட்சம் 6 மாதங்களுக்கு மேல் தனது மனைவியைப் பிரிந்திருக்கக் கூடாது என்ற கருத்தை முன்வைக்கும் அளவுக்கு இந்த விடயத்திலும் இஸ்லாமிய சட்டம் கூடிய கவனம் செலுத்தியிருக்கிறது.
3. கணவனது வாரிசுரிமைச் சொத்தில் மனைவிக்ககும் மனைவியின் வாரிசுரிமைச் சொத்தில் கணவனுக்கும் பங்குண்டு.
4. இருவரும் தூய்மை பேண வேண்டும். கணவனுக்காக மனைவியும் மனைவிக்காகக் கணவனும் சுத்தம் பேணி தங்களை அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.
ஆனால், இன்று நிலைமை மாறியிருக்கிறது. கணவனும் மனைவியும் வீட்டில் இருக்கும்போது அசுத்தமாக இருந்துவிட்டு வெளியில் செல்லும்போது தம்மை அலங்கரித்துக் கொள்கிறார்கள். இதன் விளைவு பயங்கரமானது பாரதூரமானது.
இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் வீட்டில் இருக்கும்போது தன்னை நல்ல முறையில் அலங்கரித்துக் கொள்வார்கள். அதுபற்றி அவரிடம் வினவப்பட்டபோது “எனது மனைவி அழகாக, சுத்தமாக இருக்க வேண்டும் என நான் விரும்புவதைப் போல நானும் அழகாக, நேர்த்தியாக இருக்க வேண்டும் என எனது மனைவி விரும்புவாள். அதற்காகவே என்னை அலங்கரித்துக் கொள்கிறேன்” என்றார்கள்.
5. இரகசியம் பேணல். கணவனது இரகசியத்தை மனைவியும் மனைவியுடைய இரகசியத்தைக் கணவனும் பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் நடக்கும் இரகசியமான விடயங்களை, மனைவியோடு தொடர்பான விடயங்களை, கணவனும் கணவனோடு தொடர்பான இரகசியங்களை மனைவியும் வேறு ஒருவருடன் பகிர்ந்து கொள்வது பெரும் துரோகமும் பாவமுமாகும்.
6. கணவனின் பெற்றோரை, குடும்பத்தினரை மதிக்கின்ற, அவர்களுக்குப் பணிவிடை செய்கின்ற கடப்பாடு மனைவிக்கு உண்டு. அவ்வாறே மனைவியின் பெற்றோரை, குடும்பத்தினரை மதிக்கின்ற, அவர்களுக்கு உதவி செய்கின்ற பொறுப்பு கணவனைச் சாரும்.
பெரும்பாலான குடும்பங்களில் பிணக்குகள் ஏற்படுவதற்குக் காரணம், மனைவி தன்னை மதிப்பதைப் போல் தன் குடும்பத்தினரை மதிப்பதில்லை என்று கணவன் உணர்வது. மறுபக்கம் கணவன் தன்னை மதித்தாலும் தன் குடும்பத்தைக் கவனிப்பதில்லை என்று மனைவி உணர்வது.
எனவே, இந்த விடயத்தில் ஒவ்வொரு கணவனும் மனைவியும் நிதானமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும்.
அவ்வாறே கணவன், மனைவிக்கென்று தனியான கடமைகள், உரிமைகள் பற்றியும் இஸ்லாம் விரிவாகப் பேசியிருக்கிறது. கணவனின் கடமைகள், உரிமைகளைப் பொறுத்தவரை,
- கணவன் குடும்பச் செலவினங்களைப் பொறுப்பேற்க வேண்டும்.
அதாவது, குடும்பச் செலவினங்களைப் பொறுப்பேற்க மாட்டேன்,சம்பாதிக்க மாட்டேன் என்று சொல்லும் உரிமை மனைவிக்கு உண்டு எனச் சொல்கின்ற மார்க்கம் இஸ்லாம்.
- உடல், உள ரீதியாக மனைவியை மகிழ்விக்க வேண்டும்.மனைவிக்கு அறிவூட்ட வேண்டும்.
- மனைவியை நீதியாக நடத்த வேண்டும்.
- மனைவியின் குடும்பத்தினருக்கு உபகாரம் செய்ய வேண்டும்.
- மனைவியினால் ஏற்படும் அசௌகரியங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். அவளை மன்னிக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் பெண்ணின் மன நிலையையும் இயற்கைப் பண்புகளையும் ஆழமாக விளங்கி விவரித்திருக்கிறார்கள். இந்த வழிகாட்டலை ஏற்றுள்ள ஒருவர் தனது மனைவியின் குறைகளை சகித்துக் கொள்வார். அவளது சிணுங்கல்களைப் பொருட்படுத்த மாட்டார். அதன் மூலம் அவரது இல்லறம் சண்டை, சச்சரவு, வாக்குவாதம் இல்லாத மகிழ்ச்சி, அமைதி, நிம்மதி நிறைந்த இன்பப் பூங்காவாகத் திகழும்.
மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள், உரிமைகளைப் பொறுத்தவரை,
- கணவனுக்கு முற்றுமுழுதாகக் கட்டுப்பட வேண்டும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
“ஒரு பெண் அல்லாஹ் அல்லாத ஒருவருக்கு சாஷ்டாங்கம் செய்யலாம் என்றிருந்தால் ஒவ்வொரு பெண்ணும் தத்தமது கணவனுக்கு ஸுஜூது செய்யுமாறு நான் பணித்திருப்பேன்.”
மனைவி கணவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை விளக்குவதற்கு இந்த ஹதீஸ் ஒன்றே போதும் என நினைக்கிறேன். எந்த ஒரு விடயத்தைச் சொய்வதாயினும் கணவனின் அனுமதியைப் பெற வேண்டும். கணவனின் அனுமதியின்றி ஸுன்னத்தான நோன்புகளைக் கூட நோற்க முடியாது. அவ்வாறு அனுமதியின்றி ஸுன்னத்தான நோன்பை நோற்றிருக்கும் நிலையில் நோன்பை விட்டுவிடுமாறு கணவன் வேண்டினால் அதற்கும் கட்டுப்பட வேண்டும்.
- கணவனுக்கு உதவி, ஒத்தாசைகளைச் செய்ய வேண்டும்.
- கணவருடன் விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும்.
- கணவரின் குடும்பத்தினரை மதிக்க வேண்டும். அவர்களைக் கவனிக்க வேண்டும்... என்று ஏராளமான விடயங்களைச் சொல்லலாம்.
அல்ஹுதா: இரத்த உறவுகள் மீதான கடமைகள், உரிமைகள் பற்றி...
ஷெய்க் அகார்: இன்று மேற்குலக சிந்தனைகளின் தாக்கத்தினால் கணவன், மனைவி, பிள்ளைகள் என்ற வரையறையோடு மாத்திரம் குடும்ப உறவுகள் சுருக்கப்பட்டுள்ளன. ஆனால், இஸ்லாமிய நோக்கில் குடும்பத்தின் எல்லை விசாலமானது.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “உங்களது ஆயுட் காலம் அதிகரிப்பதற்கும் உங்களது வருமானம் அதிகரிப்பதற்குமான ஒரே வழி குடும்ப உறவைப் பேணுவதாகும்.”
மற்றொரு சந்தர்ப்பத்தில் நபியவர்கள் இப்படிச் சொன்னார்கள்: “குடும்ப உறவை முறித்துக் கொண்டு வாழ்பவர்கள் சுவனம் நுழைய மாட்டார்கள்.”
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் குடும்ப உறவைப் பேணுவது தொடர்பில் மூன்று வகையினரை அடையாளப்படுத்தியுள்ளார்கள். அல்வாஸில், அல்காதிஉ, அல்முகாபிஉ ஆகியோரே அவ்மூவகையினர்.
ஷஅல்வாஸில்| என்பவர், மற்N;றார் இவருடன் குடும்ப உறவைப் பேணாத நிலையிலும் இவர் அவர்களுடன் நல்லுறவைப் பேணுவார்.
‘அல்காதிஉ’ என்பவர், குடும்ப உறவைத் துண்டித்து வாழ்பவர்.
‘அல்முகாபிஉ’ என்பவர் மற்றோர் இவருடன் குடும்ப உறவைப் பேணினால் அவரும் பேணுவார். அவர்கள் பேணி நடக்கா விட்டால் இவரும் பேண மாட்டார்.
இம்மூவரில் பிறர் குடும்ப உறவைப் பேணாத நிலையிலும் அவர்களுடன் குடும்ப உறவைப் பேணும் ‘அல்வாஸில்’ என்பவரே மேலானவர் என நபியவர்கள் சொல்லிக் காட்டினார்கள்.
அல்ஹுதா: அண்டை அயலவர் உறவுகள், உரிமைகள் தொடர்பாக...
ஷெய்க் அகார்: வாரிசுச் சொத்தில் அண்டை அயலவருக்கும் பங்கு கொடுக்க வேண்டி வருமோ என அஞ்சும் அளவுக்கு ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அயலவர் பற்றி தனக்கு வஸிய்யத் செய்து வலியுறுத்தியதாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அயல் வீட்டாருடனான உறவுகள், கடமைகளை விளக்க இந்த ஒரு நபி மொழி மாத்திரமே போதும் என நினைக்கிறேன். ஒரு வீட்டைச் சூழ்ந்திருக்கும் 40 வீடுகள் அயல் வீடுகள் என ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறினார்கள். இன்று 40 வீடுகள் என்றால் கிட்டத்தட்ட ஓர் ஊருக்குச் சமம். அண்டை வீடு என்பது அடுத்த வீடு மாத்திரமல்ல. அக்கம் பக்கத்திலுள்ள 40 வீடுகளும் அயல் வீடுகளே.
எனவே, ஒவ்வொரு குடும்பமும் அண்டை அயலவர் பாலுள்ள கடமைகள், உரிமைகளை உரிய முறையில் நிறைவேற்றி இறை திருப்தியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அல்ஹுதா: மனிதனின் பாலுணர்வுக்கு குடும்பம் என்ற கட்டுப்பாடு அவசியம் இல்லை என்பது மேற்கத்தேய உலகின் கருத்து. இது பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
அஷ்ஷெய்க் அகார்: இது சமகால உலகில் சூடாகப் பேசப்படும் ஒரு விடயம். அதாவது, ஆண்பெண் உறவுக்கு, மனிதன் தன் இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்கு கட்டுப்பாடு அவசியமில்லை என மேற்குலகு வலியுறுத்தி வருகிறது. இந்தக் கோட்பாட்டின் பின்னணியில் மதச்சார்பின்மை, சடவாதம் ஆகிய இரு கோட்பாடுகளுமே உள்ளன. இவ்விரு கோட்பாடுகளும் உலகமயமாக்கல் என்ற கொள்கையின் மூலம் உலகமயப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதன் காரணமாக மனிதனின் பாலுணர்வைத் தீர்த்துக் கொள்வதற்கு கட்டுப்பாடுகள் அவசியமில்லை எனும் வாதம் வலுப்பெற்றிருக்கிறது. மனிதனுக்கு பசி, தாகம் ஏற்படும்போது அதனைத் தீர்க்க அவன் விரும்பிய உணவை, பானத்தை அருந்துவது போன்றே உடலியல் இச்சையையும் அவன் விரும்பியபடி சுதந்திரமாகத் தீர்த்துக் கொள்ள வேண்டும். இதற்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது பிற்போக்குவாதம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
மறுபக்கம் மற்றொரு சாரார் மனிதனின் பாலுணர்ச்சியை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும். உடல் இச்சையை கட்டுப்படுத்தி துறவிபோல் வாழ்கின்றபோதே அவனுக்கு நித்திய விமோஷனம் கிடைக்கிறதுளூ ஆன்மிகப் பரிபக்குவம் ஏற்படுகிறது என வாதிடுகின்றனர்ளூ துறவறத்தை ஊக்குவிக்கின்றனர்.
ஆனால், இஸ்லாம் இவ்விரு கோட்பாடுகளையும் முற்றாக எதிர்த்து மூன்றாவது ஒரு நிலைப்பாட்டை முன்வைக்கிறது. அதாவது, மனிதனின் பாலுணர்ச்சி என்பது இயற்கையானது. இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட ஓர் உணர்வுதான் அது. ஆணும் பெண்ணும் இணைவதன் மூலமே இவ்வுணர்ச்சியைத் தீர்த்துக் கொள்ளலாம். கட்டுப்பாடில்லாத முறையில் அவ்வுணர்ச்சிகள் தீர்க்கப்படலாகாது. வரையறைகளுடன் கூடிய நிலையிலும் கௌரவமான முறையிலும் அது அமைய வேண்டும். மிருக உலகம், தவார உலகத்தைப் போன்று மனிதனது பாலுணர்வு தீர்க்கப்படக் கூடாது. திருமணம் என்ற ஒழுங்குக்கு ஊடாக, ஈஜாப், கபூல் ஷாஹித், வலி என்ற ஒழுங்கு பேணப்பட்ட நிலையில் ஆண் பெண் உறவு அமைய வேண்டும். அவ்வாறு அமையும்போதுதான் குடும்பம் என்ற மாளிகையும் சீரான முறையில் கட்டியெழுப்பப்படும்.
அல்ஹுதா: நீங்கள் ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா போன்ற மேற்கத்தேய நாடுகளுக்கு தஃவா நோக்கில் அடிக்கடி சென்று வருபவர் என்ற வகையில் அங்கு குடும்ப நிறுவனத்தின் நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றி சுருக்கமாகச் சொல்ல முடியுமா?
ஷெய்க் அகார்: மேற்குலகில் சடவாத சிந்தனை மற்றும் மதச்சார்பற்ற கொள்கையின் தாக்கத்தினால் ஆன்மிகப் பெறுமானங்கள் கொச்சைப்படுத்தப்பட்டு சுதந்திரம், நவீனத்துவம், தாராண்மைவாதம், கட்டுடைப்புச் செய்தல் என்ற பெயர்களில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மிகப் பயங்கரமானவைளூ பாரதூரமானவை.
ஜேர்மனின் ஜனநாயகக் கட்சியின் தலைவராக இருந்த ஒகஸ்ட் பெல் என்பவர் மிருகங்களுக்கு மத்தியில் திருமண உறவு இல்லாதபோது மனிதர்களுக்கு மத்தியில் மாத்திரம் ஏன் இந்த திருமண உறவு பேணப்பட வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியது மட்டுமன்றி, கணவன்மனைவி கலாசாரம் 1950உடன் முற்றுப் பெற்று விட்டது 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு கணவன் மனைவி என்ற உறவு இல்லை People who Live together and love each other ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி ஒன்றாக இணைந்து வாழ்கின்றார்களோ அவர்கள்தான் ஜோடிகள். அது ஆணும் ஆணுமாக இருந்தாலும் பெண்ணும் பெண்ணுமாக இருந்தாலும் சரியே என்ற கருத்தை முன்வைக்கிறார்.
இத்தகைய சிந்தனைகளின் விளைவாகவே மேற்குலகில் ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகரித்திருக்கிறார்கள். அங்கு அவர்களுக்கு சட்ட அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்குலகில் குடும்பம் என்ற நிறுவனம் பயங்கரமாகத் தகர்க்கப்பட்டு வருகிறது. சுருக்கமாகச் சொல்லவதாக இருந்தால் திருமணம் முடிக்காத பெரும்பாலான யுவதிகள் முறைகேடான உறவின் மூலம் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள்.
குடும்ப நிறுவனம் பாதிக்கப்பட்டதனால் 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் குடும்பத்தில் இருப்பதில்லை. ஒரு பெண்ணுக்கு கணவன் இருக்கும் அதே நேரம் Boy Friend உம் இருப்பார். ஓர் ஆணுக்கு மனைவியும் இருப்பாள் Girl Friend உம் இருப்பாள்.
மேற்குலகில் முறைகேடான கருத்தரிப்பபு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுவீடனில் 54% பிரான்ஸில் 40%, ஐக்கிய இராச்சியத்தில் 38% என்ற விகிதத்தில் முறைகேடான கருத்தரிப்பு நிகழ்கிறது.
மட்டுமன்றி, மேற்குலகின் பெரும்பாலான குழந்தைகளுக்கு தந்தை யார் என்று தெரியாத நிலை. அமெரிக்காவில் Single Perants உடைய குழந்தைகளின் எண்ணிக்கை 35% ஐக்கிய இராச்சியத்தில் 45% பிரான்ஸில் 50% க்கும் மேல் என புள்ளி விபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
மறுபக்கம் குடும்ப அமைப்பு அவசியம் இல்லை என்ற கருத்து பரவலடைந்ததன் விளைவாக, திருமணம் முடித்தவர்களும் விவாகரத்துச் செய்து கொண்டு சுதந்திரமாக தத்தமது பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் விவாகரத்துச் செய்து கொள்வோரின் எண்ணிக்கை பெல்ஜியத்தில் 69%, சுவீடனில் 60%, சுவிஸில் 59%, பின்லாந்தில் 54%, ஜேர்மனில் 51%, ஐக்கிய இராச்சியத்தில் 51%, அமெரிக்காவில் 48%, பிரான்ஸில் 39% என்ற விகிதத்தில் காணப்படுகின்றமை மேற்குலகின் சீரழிந்த குடும்ப அமைப்பை எடுத்துக் காட்டப் போதுமான சான்று.
இதற்கு அப்பால் அமெரிக்காவில் திருமணம் முடிப்பவர்கள் 15% வீதத்தினர் மாத்திரமே. மிகுதி 85% ஆனோர் திருமணம் செய்து கொள்வதில்லை. மணமுடிக்கும் 15% வீதத்தினரில் 48ஆனோர் விவாகரத்துப் பெறுகின்றார்கள். எனவே, அமெரிக்காவின் மொத்த சனத்தொகையில் 7.5% ஆனோரே குடும்பமாக வாழ்கின்றனர். அதிலும் 85% ஆனோர் உடைந்த குடும்பங்கள் (Broken Families) என்றால் மேற்கத்தேயத்தின் குடும்ப நிலையை என்னவென்று சொல்வது?
ஆனால் துரதிஷ்டவசமாக இந்த மேலைநாட்டுக் கலாசாரத்தின் விளைவு அரபு நாடுகளிலும் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலும் தாக்கம் செலுத்தத் துவங்கியிருக்கிறது. திருமணம் செய்து கொள்ளாதவர்களின் விகிதாசாரம் ஸஊதியில் 33% ஆகவும் எகிப்தில் 30% ஆகவும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் 20% ஆகவும் காணப்படுகிறது.
மேற்குலக சக்திகள் அரபு நாடுகளின் கலாசாரத்தை சீரழிப்பதெற்கென்றே திட்டமிட்ட வகையில் இத்தகைய சீரழிந்த கலாசாரத்தை அங்கு திணிப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.
எனவே, இந்த நிலையிலிருந்து உலகத்தை மீட்டெடுக்க வேண்டுமாயின் முதலாவதாக, தனிமனிதர்களையும் குடும்பங்களையும் காப்பாற்ற வேண்டும். குடும்பங்களைக் காப்பாற்றாத வரை தனிமனிதர்களைக் காப்பாற்றவும் இயலாது சமூகத்தைக் காப்பாற்றவும் முடியாது.
எனவே, குடும்பம் என்ற நிறுவனத்திற்கு பயங்கர அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்ற காலம் இது. குடும்பம் என்ற மாளிகையின் அத்திபாரமே ஆட்டங்கண்டு கொண்டிருக்கும் தருணம் இது. எனவே, அனைவரது கவனமும் குடும்பம் என்ற நிறுவனத்தில் குவிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் இஸ்லாமிய அச்சில் வார்க்கப்பட வேண்டும்.
அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி), பிரதிப் பணிப்பாளர், ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம், இலங்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக