சனி, 23 ஜூலை, 2011

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி ( 1137 - மார்ச் 4, 1193)


இவர் மேற்கத்திய நாடுகளில் 'சலாதீன்' (Saladin) என அழைக்கப்படும் பிரபல இசுலாமியப் பேரரசர் ஆவார். இவரது பேரரசு அயூபி பேரரசு என அழைக்கப்படுகின்றது. குர்திய முசுலிமான  சலாவுத்தீன், மூன்றாம் சிலுவைப்போர்களில் ஐரோப்பிய - கிறித்தவப் படைகளுக்கு எதிராக போரிட்டவர். இந்தப் போர்களில் வெற்றி பெற்று எருசலேமில் இசுலாமியப் பேரரசை ஏற்படுத்திய காரணத்தால், இன்றும் இவர் இசுலாமிய சமூகத்தில் பிரபலமாக உள்ளார். மேலும் இவரது சகிப்புத்தன்மை மற்றும் போர் நெறிமுறைகள் காரணமாக மேற்கத்திய நாடுகளிலும் பிரபலமாக உள்ளார்.
இவரது ஆட்சிக்காலத்தில் நடந்த யத்தின் போரைத் தவிர்த்த மற்றைய போர்களில் தோல்வியடைந்தவர்களிடம் இவர் கடுமையாகவோ, கொடூரமாகவோ நடந்ததில்லை. இவரது ஆட்சியின் உச்சத்தில் அயூபி பேரரசு எகிப்து, சிரியா, இராக், ஏமன் மற்றும் மேற்கு கரை அரேபிய தீபகற்பத்தை உள்ளடக்கியதாக இருந்தது.

இளமைக்காலம்

யூசுப் சலாவுத்தீன் இப்னு அயூப் 1137-ம் ஆண்டு இராக்கிலுள்ள திக்ரித் நகரில் பிறந்தார்[2]. குர்திய இசுலாமிய பின்புலத்தை கொண்ட இவரது குடும்பம், அர்மீனியாவிலுள்ள டிவின் நகரில் இருந்து புலம்பெயர்ந்து அங்கு வந்திருந்தது. இவரது தந்தை நசிமுத்தீன் அயூப். இவர் தனது குடும்பத்தை மோசுல் நகருக்கு மாற்றினார். அங்கு இவர் செஞ்சி பேரரசை தோற்றுவித்தவரும், சிலுவைப்போர்களுக்கு தலைமையேற்றவருமான இமானுதீன் செஞ்சி என்பவரை சந்தித்தார். பின்பு 1139-ம் ஆண்டு இமானுதீனின் படைகளுக்கு தளபதியாக நசிமுத்தீன் நியமிக்கப்பட்டார். இமானுதீன் செஞ்சியின் மறைவுக்கு பிறகு, அவரது மகன் நூறுத்தீன் செஞ்சி 1146-ம் ஆண்டு செஞ்சி பேரரசின் அரசராக நியமிக்கப்பட்டார்[3]. இவரது காலத்தில் சலாவுத்தீன் மேற்படிப்புகளுக்காக சிரியாவின் தலைநகரான டமாசுக்கசு நகருக்கு அனுப்பப்பட்டார். இந்த காலக்கட்டத்திலேயே சலாவுத்தீன் இசுலாமிய பேரரசில் அதிக ஆர்வம் கொண்டார். மாறாக, கிறித்தவர்கள் திடீரென செருசலேம் நகரை தாக்கிய முதலாம் சிலுவைப்போராலேயே சலாவுத்தீன் இசுலாமிய பேரரசில் அதிக ஆர்வம் கொண்டார் எனவும் சிலர் கூறுகின்றனர்[4]

சலாவுத்தீன் சிரியப் படைகளில் சேர்ந்தபொழுது செருசலேம் முதலாவது அமல்ரிக் என்ற இலத்தீன் கிறித்தவரால் ஆளப்பட்டது. இவர் தனது கட்டுப்பாட்டின் கீழ் எகிப்தை கொண்டுவரும் பொருட்டு, அதன் மீது பல தடவை படையெடுத்தார். அப்போது எகிப்தை பாத்திம கலிபாக்கள் வழிவந்த ‘சாவார்’ என்ற மன்னர் ஆண்டு வந்தார். சாவாருக்கு ஆதரவாக படையெடுத்து வந்த சிரிய தேசத்து படையை ஆசாத்துல் சீர்க் என்பவர் தலைமை தாங்கினார். இவரே சலாவுத்தீனின் சிறிய தந்தையும், அவரை சிரிய படையில் சேர்த்துவிட்டவரும் ஆவார். இந்நிலையில் சீர்க்கின் மறைவு மற்றும் சாவாரின் அதிகாரக்குறைவு காரணமாக 1169-ம் ஆண்டு சலாவுத்தீன், சிரிய மற்றும் பாத்திம கலிபாக்களின் கூட்டுப்படைக்கு தளபதியாக நியமிக்கப்பட்டார். தனது 31வது வயதில் இந்த நிலைக்கு வந்த சலாவுத்தீன், தனது நிர்வாகத்திறைமை, போர்முறைகள் மற்றும் பயமறியா குணம் ஆகியவற்றின் காரணமாக எகிப்து நாட்டின் தலைவராக மாறினார். இவரே சன்னி இசுலாத்தை எகிப்தில் பரப்பினார். இதன் பிறகு 1171-ம் ஆண்டு ஏற்பட்ட கலிபாவின் மரணத்தை தொடர்ந்து, இவர் எகிப்தின் பேரரசராக முடிசூட்டப்பட்டார். இவரின் ஆட்சியின் கீழ், எகிப்தின் படை பலம் மற்றும் பொருளாதாரம் வேகமாக பெருகியது.

இதன் பிறகு இவர் தனது மனதில் சிரியா, இராக் மற்றும் செருசலேம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு மாபெரும் இசுலாமிய பேரரசை உருவாக்க வேண்டும் என ஆவல் கொண்டார். ஆகினும் தனது தந்தையின் அறிவுரைப்படி, தனது மன்னனான சிரிய சுல்தான் நூறுதீனுக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் இவர் ஈடுபடவில்லை. இறுதியாக நூறுதீனின் மரணத்திற்கு பிறகே சிரியாவை தனது பேரரசுடன் இணைத்தார்.

இவ்வாறு 1174-ம் ஆண்டு நூறுதீனின் மரணத்திற்கு பிறகு, சலாவுத்தீனின் படைகள் டமாசுக்கசு நகருக்குள் நுழைந்தன. அங்கு சிரிய மக்கள் சலாவுத்தீனையும் அவரது படைகளையும் வரவேற்றனர். பின்பு தனது முன்னால் மன்னரான நூறுதீனின் விதவை மனைவியான இசுமத் உல்தீன் காத்துன் என்பவரையும் மறுமணம் புரிந்து கொண்டார். இதன் மூலம் சுலபமாக சிரிய நாட்டை தனது அய்யூபி பேரரசுடன் இணைத்துக்கொண்டார்.இதன் பிறகு சிரிய பேரரசில் இருந்து பிரிந்து போன அலிப்போ மற்றும் மோசுல் நகரங்களையும் முறையே 1176 மற்றும் 1186 ஆகிய ஆண்டுகளில் தனது பேரரசுடன் இணைத்தார். இதற்கு மேற்கொண்ட முயற்சிகளில் இவர் இரண்டு முறைகள் கொலை செய்யப்பட முயற்சிக்கப்பட்டார். குறிப்பாக இரண்டாவது முறை மயிறிழையில் உயிர் தப்பினார்.

இவர் சிரியாவை ஆண்ட காலத்தில் பலமுறை சிலுவைபோர்களை சந்தித்தார். ஒவ்வொரு முறையும் இவர் எதிரி படைகளை முறியடித்து ஐரோப்பாவிற்கு திருப்பி அனுப்பினார். ஆனால் 1177-ம் ஆண்டு நவம்பர் 25-ம் நாள் நடைபெற்ற போரில் மட்டும் இவர் தோல்வியுற்றார். இந்த போரில் செருசலேம் நகரை ஆண்ட நாலாம் பால்டுவின் மற்றும் ரோனால்டு ஆகியோரின் கூட்டுப்படையை எதிர்கொண்ட இவர், இறுதியில் தோல்வியுற்று தனது படையில் பத்தில் ஒரு பகுதி வீரர்களோடு எகிப்து திரும்பினார்.
[தொகு] சிலுவைப்போர்கள்

இதன் பிறகு தனது படைபபலத்தை பலப்படுத்துவதில் ஈடுபட்ட சலாவுத்தீன் 1180-ம் ஆண்டு சிலுவைப்போராளிகளின் நகரங்களை தாக்கினார். இதற்கு பதிலடியாக ரோனால்டு, முசுலிம் வர்த்தகர்களுக்கும், புனித தலங்களுக்கும் தொல்லை கொடுக்க தொடங்கினார். இதனால் முசுலிம் வர்த்தகர்களுக்கான பிரதான பாட்டையில் ஒரு படையை சலாவுத்தீன் நிறுவினார். மேலும் 1182-ம் ஆண்டு மிகப்பெரிய படையுடன் சென்று பெய்ரூட் நகரையும் தாக்கினார். இதற்கு பதிலடியாக ரோனால்டு, இசுலாமியர்களின் புனித தலங்களான மெக்கா மற்றும் மதீனா ஆகியவற்றை தாக்கினார்[5]. இதனால் கோபமுற்ற சலாவுத்தீன், ரோனால்டின் தலைநகரை 1183 மற்றும் 1184ஆகிய ஆண்டுகளில் தாக்கினார். இதன் பின்பும் ரோனால்டு 1185-ம் ஆண்டு புனித கச் (Haj) யாத்திரை சென்றவர்களின் வாகனங்களை தாக்கினார்[6]. இவ்வாறு சலாவுத்தீன் போர் நெறிமுறைகளை பின்பற்றி ரோனால்டின் படைகளை மட்டுமே தாக்கிய பொழுதும் கூட, ரோனால்டு அதற்கு பதிலடியாக அப்பாவி முசுலிம்களை தாக்குவதயே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டார்.

இதன் பிறகு உள்நாட்டு குழப்பங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்த சலாவுத்தீன், மோசுல் நகரை ஆக்கிரமித்திருந்த மசூத் என்பவனையும் அவனுக்கு துணையாக வந்த அசர்பைசான் கவர்னரையும் 1185-ம் ஆண்டு சாக்ரோல் மலைததொடரில் சந்தித்து, அவர்களின் படையை முறியடித்தார். பின்பு தனது பார்வையை மீண்டும் சிலுவைப்போராளிகளின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் செலுத்தியவர், அதில் பெரும்பகுதியை கைப்பற்றினார். தொடர்ந்து 1187-ம் ஆண்டு சூலை 4-ம் நாள் காத்தின் என்ற இடத்தில் லூசிஞ்ன் கை, கிங் கான்சேர்ட் மற்றும் மூன்றாம் ரேமன்ட் ஆகியோரின் கூட்டுப்படையை எதிர்கொண்டார். கடல் போன்ற இந்த கூட்டுப்படையை எதிர்கொண்ட சலாவுத்தீனின் படை அதை முறியடித்து வெற்றிபெற்றது. இந்த வெற்றி சிலுவைப்போர்களில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதை தொடர்ந்து போரில் தோல்வியுற்று பிடிபட்ட லூசிஞ்ன் கை மற்றும் ரோனால்டு ஆகியோர் சலாவுத்தீனின் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டனர். இவர்களில் லூசிஞ்ன் கையை மன்னித்த சலாவுத்தீன், அவரை சிறையில் அடைக்க உத்திரவிட்டார். ஆனால் தொடர்ந்து முசுலிம் மக்களுக்கு தொல்லை கொடுத்ததாலும் இசுலாமிய புனித தலங்களை தாக்கியதாலும் ரோனால்டுக்கு மரண தண்டனை விதித்தார்[7] .

இந்த ஒருவரை தவிர மற்ற எதிரிகள் யாரையும் சலாவுத்தீன் தன் வாழ்நாளில் கொன்றதில்லை. சிறையில் அடைக்கப்பட்ட லூசிஞ்ன் கையின் மனைவி சலாவுத்தீனை கடிதம் மூலம் மன்றாடி கேட்டுக்கொண்டததின் பேரில், 1188-ம் ஆண்டு லூசிஞ்ன் கை விடுதலை செய்யப்பட்டு தனது மனைவியுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன் பிறகு செருசலேம் நகரை முற்றுகையிட்ட சலாவுத்தீனின் படை, அங்கு உள்ள பிரென்சு படைகளை சரணடையும் படி கேட்டுக்கொண்டது. அவர்கள் அதை மறுக்கவே 1187-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் நாள் கோட்டையை முற்றுகையிட்டு கைப்பற்றினர். ஆனபோதிலும் சலாவுத்தீன் அங்கு பிடிபட்ட வீரர்களையும், மக்களையும் துன்புறுத்தாமல் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வழி செய்தார்[8] . இதன் பிறகு சிலுவைப்போராளிகளின் வசம் எஞ்சி இருந்தது டயர் என்ற நகரம் மட்டுமே.இதை காண்ரட் என்பவன் ஆட்சிசெய்துகொண்டு இருந்தார். மேலும் சலாவுத்தீனால் விடுதலை செய்யப்பட்ட லூசிஞ்ன் கையும் தனது மனைவியுடன் இங்குதார் வசித்து வந்தார். இதன் மீது 1188 -ம் ஆண்டு படையெடுத்த சலாவுத்தீன், இதையும் கைப்பற்றினார். இவ்வாறு அனைத்து சிலுவைப்போராளிகளின் பகுதிகளையும் கைப்பற்றிய சலாவுத்தீன், ஒரு முழுமையான பேரரசாக அய்யூபி பேரரசை மாற்றினார். இவ்வாறு ஒரு முழுமையான இசுலாமிய பேரரசின் கீழ் செருசலேம் நகரை கொண்டுவந்தபொழுதும் கூட, அங்கு வாழ்ந்த யூத மக்களை தொடர்ந்து செருசலேம் நகரிலேயே வாழ அனுமதித்தார்

இவ்வாறு செருசலேம் நகர் முழுவதுமாக சலாவுத்தீன் கையில் வந்த பிறகு, அதை மீண்டும் மீட்க மூன்றாம் சிலுவைப்போர்கள் தொடங்கப்பட்டன. இதை இங்கிலாந்து மன்னரான முதலாம் ரிச்சர்ட் தலைமையேற்று நடத்தினார். இந்த போர் 1191-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் நாள் அர்சுப் என்ற இடத்தில் தொடங்கியது. இதில் ரிச்சர்ட்டின் படைகள் எவ்வளவோ முயன்றும் கூட, செருசலேம் நகரை கைப்பற்ற முடியவில்லை. இதிலும் இறுதியில் சலாவுத்தீனே வெற்றிபெற்றார்.

இருப்பினும் சலாவுத்தீன் மற்றும் ரிச்சர்ட் ஆகிய இருவருக்கும் இடையில் இருந்த நட்புறவு தனித்தன்மயானது. இந்த நட்பு சகமனித மரியாதைக்கும், போர் நெறிமுறைகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது. ரிச்சர்ட் ஒரு முறை நோய்வயப்பட்ட பொழுது, சலாவுத்தீன் அவரை குணப்படுத்த தனது அந்தரங்க மருத்துவரை அனுப்பியத்தோடு பழவகைகளையும் கொடுத்து அனுப்பினார்[10]. மேலும் அர்சுப் போர்க்களத்தில் ரிச்சர்ட்டின் குதிரை இறந்தததை கேள்விப்பட்ட சலாவுத்தீன், அவருக்கு உயர் ரக குதிரைகள் இரண்டை கொடுத்தனுப்பினார். இதன் பிறகு ரிச்சர்ட்ட்ன் தங்கை ‘சோன்’ என்பவளை சலாவுத்தீன் தனது தம்பிக்கு மனமுடித்து வைத்தார். இதன் மூலம் முசுலிம் மற்றும் கிறித்தவர்கள் இடையே நட்புறவு ஏற்பட வழிவகுத்தார். இவ்வளவுக்கும் சலாவுத்தீன், ரிச்சர்ட் இருவரும் ஒருவரையொருவர் நேரில் சந்திதததே இல்லை. கடிதம் மற்றும் தூதர்கள் மூலம் மட்டுமே பரிவர்த்தனை நடைபெற்றது.

இதன் பிறகு 1192-ம் ஆண்டு சலாவுத்தீன் மற்றும் ரிச்சர்ட் ஆகிய இருவரும் ஒரு உடன்படிட்கைக்கு வந்தனர். ராம்லா ஒப்பந்தம் என அழைக்கப்படும் இதன் படி செருசலேம் முசுலிம்கள் வசமே தொடர்ந்தது. மேலும் கிறித்தவர்களும் அங்கு உள்ள புனித தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்[11].

இவ்வாறு ராம்லா உடன்படிட்கையை தொடர்ந்து ரிச்சர்ட் அரேபியாவை விட்டு வெளியேறிய பின் 1193-ம் ஆண்டு மார்ச் 4-ம் நாள் டமாசுக்கசு நகரில் நோய்வயப்பட்டு சலாவுத்தீன் இறந்தார். இவ்வாறு இறந்த பிறகு அவரை அடக்கம் செய்ய அவரது குடும்பத்தில் போதிய பணம் இல்லை[12] . காரணம் இவர் தனது செல்வம் முழுவதையும் தானம் செய்வத்திலேயே செலவிட்டதே ஆகும். இவ்வாறு அவரது உடல் டமாசுக்கசு நகரில் உள்ள பிரபலமான உமய்யா மசூதியின் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

ஏழு நூற்றாண்டுகளுக்குப்பிறகு செருமனியை சேர்ந்த பேரரசரான இரண்டாம் வில்லியம் ஒரு மார்பில் சமாதி மேடையை சலாவுத்தீனுக்காக உருவாக்கினார்[13]. இதுவே இன்றளவும் சலாவுத்தீனின் சமாதியாக மக்களால் பார்க்கப்படுகின்றது. ஆனால் உண்மையான சமாதி வேறு இடத்தில் மரத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீதே மார்பில் மேடையை அமைக்காததற்கு காரணம், அவரை தொந்தரவு செய்ய விரும்பாதததே ஆகும். அந்த அளவிற்கு அவர் மக்களிடம் மட்டுமல்லாமல் எதிரிகளிடமும் நன்மதிப்பை பெற்றிருந்தார்.


சலாவுத்தீன் ஒரு மிகப்பெரிய பேரரசை ஏற்படுத்திய பின்பும் கூட ஒரு சாதாரணமான மனிதனாகவே எளிமையாக வாழ்ந்தார். தீவிரமான சன்னி இசுலாம் முறையை பின்பற்றிய இவர், மற்ற மதத்தினறையும் மதித்தார். அவர்களின் புனித தலங்களுக்கு பாதுகாப்பும் கொடுத்தார். இவர் ஆக்கிரமிப்பாளர்களை தவிர மற்ற எவர்களையும் தாக்கியதில்லை. அவ்வாறு அவர்களை தாக்கியப்பொழுதும் கூட, அவர்களுக்கு முதலிலேயே சரணடைய பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுத்தார். மீறி போர் செய்து அவர்கள் பிடிபட்ட பின்பும் கூட அவர்களை துன்புறுத்தவோ, சிறையில் அடைக்கவோ இல்லை. மாறாக அவர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்பி செல்ல அனுமதித்தார். மேலும் செருசலேம் நகரிலேயே அவர்கள் தங்கிக் கொள்ளவும் அனுமதித்தார். மேலும் இவரின் எதிரிகள் இசுலாமியர்களை தாக்கியபொழுதும்கூட, இவர் கிறித்தவர்களை தாக்கியதில்லை.

இவ்வாறு இவரது குணநலன்கள் அரேபியர்கள் மட்டும் அல்லாது ஐரோப்பியர்களையும் ஈர்த்தது. ஐரோப்பிய கிறித்தவர்கள் மத்தியில் ரிச்சர்ட்டை விட சலாவுத்தீன் அதிகம் பிரபலமானார். மேலும் ரிச்சர்ட்டும் சலாவுத்தீனும் தங்களுக்கு இடையே பல பரிசுகளை அனுப்பி மகிழ்ந்தனர். இருப்பினும் இவர்கள் இருவரும் கடைசிவரை ஒருவரையொருவர் நேரில் சந்தித்ததே இல்லை.

சலாவுத்தீன் புகழ் அவரது வாழ்நாளில் மட்டும் அல்லாமல் நவீன உலகிலும் தொடர்கிறது. இன்னும் இவர் இசுலாமிய மக்களால் மிகவும் உயர்வாக போற்றப்படுகின்றார். குறிப்பாக இசுரேல் - பாலசுத்தீனம் பிரட்சணை ஆரம்பமான பிறகு இவர் புகழ் வேகமாக பராவத்தொடங்கியது. இவர் தனது வாழ்நாளில் செருசலேம் நகரை கிறித்தவர்களிடம் இருந்து மீட்டதே இதற்கு காரணம் ஆகும். இவரால் தோற்றுவிக்கப்பட்ட அய்யூபி பேரரசு இவரது மறைவுக்கு பிறகு 57 ஆண்டுகள் தொடர்ந்தது. அது இன்றளவும் மறைமுகமாக நவீன உலகிலும் தொடர்கிறது. இதற்கு சான்றாக, இவரது சின்னமான கழுகு முத்திரையே இன்றும் இராக், எகிப்து, பாலசுத்தீனம் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளின் ராணுவ சின்னமாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக