வெள்ளி, 2 மார்ச், 2012

முஸ்லிம் ஸ்பெய்ன் வரலாறு


முஸ்லிம்களது படையெடுப்பின்போது ஸ்பானியாவின் சமூக, அரசியல் நிலை

ஐபீரியத் தீவகற்பத்தை (ஸ்பெய்ன்) முஸ்லிம்கள் "அந்தலூஸ்' என அழைத்தனர். அத்தீவகற்பத்துக்கு அந்தலூஸ் எனப் பெயர் சூட்டப்படுவதற்கு இரண்டு காரணிகளை வரலாற்றாசிரியர்கள் முன்வைக்கின்றனர்.

1. நபி நூஹ் அவர்களின் வழித்தோன்றல்களில் ஒருவரான அந்தலூஸ் என்பவரின் வாரிசுகள் அங்கு வாழ்ந்தமை.
2. அங்கு வாழ்ந்த மிலேச்சக் குணங்களைக் கொண்ட மக்களைக் குறிக்க "வண்டல்ஸ்" (VANDALS) எனும் பதம் பயன்படுத்தப்பட்டது. இப்பதத்தில் இருந்தே அந்தலூஸ் என்ற பதம் பெற்றுக்கொள்ளப்பட்டது என்று இப்னு கல்தூன் போன்ற வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.


அந்தலூஸ் எனப்பட்ட இந்நாடு மத்திய தரைக் கடலின் வட மேற்கு எல்லையில் அமைந்துள்ளது. அது ஒரு தீவகற்பம். அதன் மேற்கே அத்திலாந்திக் கடலும் வடக்கே பிரான்ஸின் எல்லையாக அமைந்துள்ள பிரனீஸ் மலைத் தொடரும் தெற்கே ஜிப்ரோல்டர் நீரிணையும் அமைந்துள்ளன. 13 மைல்கள் அகலமுடைய இ ந் நீரிணையே அத்திலாந்திக் கடலையும் இணைக்கின்றது. இத்தீவகற்பம் தற்காலத்தில் ஸ்பெய்ன், போர்த்துக்கல் என்ற இரு சுதந்திர நாடுகளைத் தன்னுள் கொடுள்ளது.

முஸ்லிம்கள் ஸ்பெய்னைக் கைப்பற்றுவதற்கப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பல இனக் குழுக்கள் அ ந் நாட்டின் மீது படையெடுத்துள்ளன். ஐரோப்பாவைச் சேர்ந்த பல இனக் குழுக்கள் அங்கு குடியேறியும் இருந்தன. இவர்களுள் 'ஸூவியன்ஸ்"  அல்லது 'ஸவாவியனிஸ்", வண்டல்ஸ் எனப்படும் இனக் குழுவினரும் அடங்குவர்.

மன்னன் நெபுசனிதர் (NEBUCHADNEZZAR)  என்பவர் கி.மு. 586ல் பலஸ்தீனில் இருந்த யூத அரசையும் ஸுலைமான் நபி கட்டிய மஸ்ஜிதையும் தரைமட்டமாக்கிய போது அங்கு வாழ்ந்த முக்கியமான யூதக் குடும்பங்கள் சில பலஸ்தீனை விட்டு வெளியேறி அந்தலூஸில் குடியேறின. அந்தலூஸின் நீர், நில வளத்தாலும் பொன் வெள்ளிச் சுரங்கங்களாலும் கவரப்பட்ட கிரேக்கரும் உரோமரும் அங்கு குடியேறியிருந்தனர்.

ஸ்பெய்ன் நீண்டகாலமாக ரோமரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அவர்களிடமிருந்து கி.பி.414ல் ஸ்பெய்னின் வட கிழக்குப் பகுதியில் இருந்த டரகோனின்ஸிஸ் (Taraconensis)  மாகாணத்தை விஸிகொத் அல்லது வெஸ்ல்கொத் (Visigoth / Westgoth) கோத்திரத்தார் கைப்பற்றிக் கொண்டனர். அதுமுதல் படிப்படியாக ஸ்பெய்ன் முழுவதையும் தமது ஆதிக்கத்தின் கீழ் அவர்கள் கொண்டுவந்தனர். உரோமரின் ஆதிக்கத்தின் கீழ் வட ஆபிரிக்கக் கரையோர நாடுகள் தொடர்ந்து இருந்து வந்தன. அன் நாடுகளை முஸ்லிம்கள் கி.பி. 7ம் நூற்றண்டில் கைப்பற்றிக்கொண்டனர். அதனால் கி.பி. 8ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வட ஆபிரிக்காவின் ஜிப்ரோல்டர் நீரிணையின் அருகே இருந்த ஸியூதா எனும் மாகாணம் மட்டுமே உரோமர் வசம் இருந்தது. இந் நீரிணையின் வடக்கே இருந்த ஸ்பெய்னையும் வட் ஆபிரிக்கக் கரையின் ஏனைய பிரதேசங்களையும் உரோமர் இழந்திருந்ததால் ஸியூதா மாகாணம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. அதனால் அம்மாகாணத்தைப் பராமரிப்பது உரோமருக்குச் சிரமமாகியது. அதனால் ஸியூதா பிரதேச நலங்களைப் பேணிப் பரிபாலிக்கும் பொறுப்பை கிறிஸ்தவ சமயிகளான உரோம ஆட்சியாளர்கள் ஸ்பெய்னில் ஆட்சி செய்த கிறிஸ்தவ ஆட்சியாளர்களான விஸிகொத் பரம்பரையினரிடம் ஒப்படைத்தனர். ஆதலால் மாணப் பரிபாலனமும் கி.பி. 7ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஸ்பெய்ன் வசமாகியது.

ஸ்பெய்னில் குடியேறியிருந்த மக்கள் பல இனக் குழுக்களைச் சேர்ந்தவர்களாவர். அவர்களில் பலர் ரோமன் கத்தோலிக்க  சமயப் பிரிவைப் பின்பற்றினர்.எனினும் விஸிகொத் ஆட்சியாளர்கள் குடிமக்களின் சமய சிந்தனையில் இருந்து வேறுபட்ட சிந்தனைப் பாங்குடைய கிறிஸ்தவ சமயப் பிரிவொன்றைப் பின்பற்றினர். இதனால் சமய ரீதியான ஒற்றுமையோ ஸ்திரமான அரசோ தோன்ற முடியவில்லை. கி,பி. 589ல் ஆளும் கோத்திரத்தவர்கள் குடிமக்களின் சமயமாகிய ரோமன் கத்தோலிக்க சமயத்தை ஏற்றபோது அரச பீடத்துக்கும் கிறிஸ்தவ சமய பீடத்துக்கும் இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டது. இது அரசியல் ரீதியான ஸ்திர நிலை தோன்றவும் வழிவகுத்தது.

இப்புதிய சூழல் அரச குடும்பத்தவர்களையும் சமய குரவர்களையும் பிரபுக்கள் வர்க்கத்தையும் உள்ளடக்கிய உயர் குழாத்தினர் தோன்ற வழிவகுத்தது. சமயபீடத் தலைவர்கள் அரச பரிபாலனத்தில் செல்வாக்குச் செலுத்தினர். அரச திணைக்களங்களில் பல கிறிஸ்தவத் திருச் சபையின் கீழ் விடப்பட்டன. இதன் விளைவாக சமயபீடம் பொது மக்கள் நலனில் கவனம் செலுத்துவதை விட அரச குடும்ப நலனைப் பேணுவதிலேயே அக்கறை செலுத்தியது.

சமயக் குரவர்கள் ஆதரவை அரச பீடம் பெற்றிருந்த போதும் ஆட்சிக்கான தலைவர்களைத் தெரிவு செய்த முறைமை காரணமாக அரசு சதி முயற்சிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியதாகியது. காலியாகும் அரச பீடத்தை நிரப்ப அரச குடும்பப் பிரமுகர்களையும் உள்ளடகிய உயர் குழாத்தினரே அரச குடும்பத்திலிருந்து ஒருவரைத் தெரிவு செய்யும் முறைமை இருந்தது. நிலையானதொரு வாரிசுரிமை முறை பின்பற்றப்படாததால் பலர் அரச பதவியை அடைய விரும்பினர். இதுவே சதி முயற்சிகளும் சூழ்ச்சிகளும் இடம்பெற வழிவகுத்தது. இதனால் மன்னன் தான் உயிர் வாழும்போதே அடுத்த வாரிசாகத் தன் மகனைப்  பதவியில் அமர்த்துவதற்காக உயர் குழாத்தினரின் ஆதரவைத் திரட்டவும் முயற்சித்தான். இதனால் ஆட்சியின் ஸ்திர நிலை பாதிக்கப்பட்டது.

ஸ்பெய்ன் ஆட்சியாளர்கள் நிரந்தரமான ஒரு படையை வைத்திருக்கவில்லை. ஆட்சியாளன் அழைப்பு விடுக்கும்போது போர் புரியும் தகைமை பெற்ற குடிமக்கள் ஆயுதங்களுடன் வரவேண்டும் என்ற கோட்பாடே நீண்ட நாட்களாக நிலவி வந்தது. பொருளாதார ரீதியாகவும் மக்கள் நலிவுற்று ஆட்சியாளருக்கும் குடிமக்களுக்கும் இடையே இருந்த நல்லுறவு கி.பி. 8ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாதிப்புற்றிருந்தது. இதனால் மக்கள் போருக்கான மன்னனின்  அழைப்பை விருப்போடு ஏற்கவில்லை. கூலிப்படை ஒன்றின் மனோ பாவத்தையே அரச படை கொண்டிருந்தது. இதனால் அரச படையின் பொரிடும் ஆற்றல் பலவீனமடைந்திருந்தது.

ஸ்பெய்ன் குடிமக்களில் உயர் குழாத்தைச் சேர்ந்தவர்களே செல்வந்தர்களாக இருந்தனர்.மது, மாது, சூது என்பனவே அவ்ர்களின் வாழ்க்கையாக இருந்தது. கடின உழைப்பாளிகளாக அவர்கள் இராத்தால் சோம்பலும் சுகபோகமுமே அவர்களை ஆட்டிப் படைத்தன. இவர்களின் பணியாளர்களாக வாழ்ந்த குடிமக்கள் கொத்தடிமைகளாக இருந்தனர்.இவ்வடிமைத் தளையில் இருந்து அவ்ர்களால் விடுதலை பெற முடியவில்லை. இவ்வடிமைகளும் பண்ணையின் ஓரங்கமாகக் கருதப்பட்டுப் புதிய எஜ்மானுக்கு நிலத்தோடு சேர்த்து விற்கப்பட்டனர். எஜமானின் அனுமதியின்றி இவ்விவசாயிகள் விவாகம் புரியவும் முடியாதிருந்தது. பிறிதொரு எஜமானுக்குச் சொந்தமான பண்ணையில் இருந்த ஒருத்தியை ஒருவன் விவாகம் புரிந்தால் அவ்விருவருக்கும் பிறக்கும் குழந்தைகள் இரு எஜமான்களுக்கிடையே மந்தைகள் பங்கு போடப்படுவதைப் போல  பங்கு போடப்பட்டனர்.

உயர் குழாத்தினருக்கும் பண்ணை விவசாயிகளுக்கும் இடைப்பட்ட அந்தஸ்துடையவர்களாக ஒரு நடுத்தர வகுப்பினரும் இருந்தனர். இவர்கள் பெயரளவில் சுதந்திரமானவர்கள். பிரபுக்களதும் சமயக் குரவர்களதும் சுகபோக வாழ்க்கைக்கான செல்வத்தை இவர்கள் வரியாகச் செலுத்தவேண்டியிருந்தது. இவர்களிடம் இருந்தே அரசும் சமயத் தலைமைப் பீடமும் தத்தம் தேவைகளுக்காக வெவ்வேறான வரிகளை அறவிட்டன. இவ்வகையில் இவ்விரு வகுப்பினருமே பொருளாதாரச் சுரண்டலுக்கு உட்பட்டனர்.இதனால் தம் உழைப்பின் பயனை இவ்விரு வகுப்பாராலும் அனுபவிக்க முடியவில்லை. பண்ணை விவசாயிகளின் உழைப்பு பண்ணையாளர்களைக் கொழுக்க வைத்தது. சுதந்திரமான விவசாயிகளின் உழைப்பு மன்னர், பிரபுக்கள், சமயக் குரவர்களின் சுகபோக வாழ்க்கைக்காகவே சுரண்டப்பட்டது. சகோதரத்துவத்தைப் போதித்த கிறிஸ்தவ சமயக் குரவர்களும் பெருந்தோட்டச் சொந்தக்காரர்களாயினர். சுகபோகத்தில் மூழ்கியிருந்த ஏனைய பிரபுக்களைப் போலவே அவர்களும் தம் வாழ்வை அமைத்துக் கொண்டிருந்தனர். இதனால் உயர் குழாத்தினரோ விவசாயிகளோ பண்ணை அடிமைகளோ நாட்டைக் காக்கத் தம்மை அர்ப்பணிக்கவேண்டும் என்ற உணர்வு அற்றவர்களாக இருந்தனர்.

இதனால்தான் முஸ்லிம்கள் படையெடுத்து வந்தபோது தம்மை விடுவிக்க வந்த வீரர்களாகக் கருதி முஸ்லிம்களுக்கு அவர்கள் ஆதரவு வழங்கினர்.

விஸிகொத் ஆட்சியாளர்களின் காலப் பிரிவில் நகர்ப்புறக் குடிமக்களும் பல சிரமங்களை அனுபவித்தனர். ரோமரின் ஆட்சியின் கீழ் இருந்தபோது ஸ்பெய்ன் நகரங்கள் வளர்ச்சி கண்டிருந்தன. நகரங்களை விருத்தி செய்து குடிமக்களுக்குப் பல வசதிகளை அவர்கள் செய்து கொடுத்திருந்தனர். அவர்களிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய விஸிகொத் ஆட்சியாளர்கள் முன்னேற்றம் காணாத புராதன நாடோடிக் கோத்திரத்திலிருந்து வந்தவர்களாவர்.அவர்கள் நகர்ப்புற வாசிகள் பற்றி அதிக அக்கறை காட்டவில்லை. உரோமப் பேரரசின் வீழ்ச்சியினால் ஏற்பட்ட பொருளாதார ரீதியான பின்னடைவும் நகர்ப்புறங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கான் மற்றொரு காரணியாக இருக்கலாம். இப்புறக்கணிப்பால் விவசாயிகளைப் போல்வே நகர்ப்புற மக்களும் அரசின் மீது அதிருப்தி அடைந்தனர்.

கிறிஸ்தவ பீடம் அங்கிருந்த யூதர்களை தமது சமய ரீதியான எதிரிகளாகவே கருதினர். கி.பி.693ல் கிறிஸ்தவ திருச்சபை அறிமுகப்படுத்திய சில சட்ட விதிகளால் யூதர்களின் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 694ல் கிறிஸ்தவ திருச்சபை, யூதர்கள் அனைவரும் கிறிஸ்தவ சமயத்தை ஏற்க வேண்டும் அல்லது அடிமையாக்கப்படுவர் என்ற மற்றொரு பிரகடனத்தை வெளியிட்டது. இப்பிரகடனம் தளர்த்தப்பட்ட போதும் ஆட்சியாளர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தியது.

ஸ்பெயின் மீது முஸ்லிம்கள் படை எடுத்த காலப்பகுதியில் அங்கு உள்நாட்டுக் கலவரம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஸ்பெயினை ஆட்சி செய்து கொண்டிருந்த விஸிகொத் கோத்திர மன்னனான வித்ஸா, தன் மகன் அகீலாவை அடுத்த ஆட்சியாளராக்கத் திட்டமிட்டு செயற்பட்டான். அதற்கு முன்னோடியாக் பாஸூ இனத்தவர்கள் வாழ்ந்த வட கிழக்குப் பிரதேசத்திற்கு அவனை கவர்னராக ஆக்கினான். அரசனை நியமிக்கும் உயர குழாத்தவர்களில் சிலரது ஆதரவையும் பெற்றுக் கொண்டான். கி.பி.710ல் அவன் இறந்ததும் அடுத்த ஆட்சியாளனைத் தெரிவு செய்வதற்காக மேன்மக்கள் சபைகூட்டிய  போது, மேற்குறித்த அகீலாவைப் புறந்தள்ளி றொட்றிக் என்பவனைத் தெரிவு செய்தது. அகிலா அவனுக்குக் கீழ்ப்படியாது தனது மேற்பார்வையின் கீழிருந்த பிரதேசத்தை சுதந்திரமாக ஆட்சி செய்தான். இதனை புலப்படுத்தும் நோக்கில் புதிய நாணயங்களையும் வெளியிட்டான். இதனால், அவன் மீது இராணுவ நடவடிக்கை எடுப்பதற்காக றொட்றிக் ஒரு படையுடன் அகிலாவை சந்திக்கச் சென்றான். இதனால், உள்நாட்டில் கலவரம் வெடித்தது.

புது ஆட்சியாளனைத் தெரிவு செய்வதில் உயர் குழாம் பிளவுற்றிருந்தமை, சமூகத்தின் உயர் குழாத்தினர் தவிர்ந்த ஏனைய மக்கள் அரசின் மீது அதிருப்தியடைந்தமை, திருச்சபையைத் திருப்திப்படுத்த யூதர்களுக்குக் கொடுத்த நெருக்குதல், இராணுவத்தின் தேசப்பற்றற்ற தன்மை என்பன ஸ்பெயின் அரசைப் பலவீனப்படுத்தியிருந்த நிலையிலேயே ஸ்பெயின் மீதான முஸ்லிம் படையெடுப்பு நிகழ்ந்தது.


ஸ்பெயின் மீதான முஸ்லிம் படையெடுப்பு

இஸ்லாமியக் குடியரசின் இராச்சிய வியாபகத்தின் முதற் கட்டம் இரண்டாம் கலீபா உமரின் காலத்தில் இடம்பெற்றது. அதன் இரண்டாம் கட்டம் கலீபா வலீதின் காலத்தில் நிகழ்வுற்றது. கிழக்கே இந்திய உபகண்டத்தின் சிந்துப் பிரதேசத்தையும் மேற்கே ஸ்பெய்னையும் உள்ளடக்கிய இவ்விரண்டாம் கட்ட வியாபகம் வரலற்று முக்கியத்துவம் கொண்டதாகும். ஐரோப்பாவில் இஸ்லாமிய சிந்தனையினதும் நாகரிகத்தினதும் ஒளி பாய இவ்விரண்டாம் கட்ட வியாபகம் வாய்ப்பளித்தது.

வட ஆபிரிக்கப் பிரதேசம் முஆவியா (ரழி) காலத்தில் இருந்தே முஸ்லிம்களது ஆட்சிக்கு உட்பட்டிருந்தாலும் மூஸா பின் நுஸைர் வட ஆபிரிக்கப் பிரதேச கவர்னராகக் கடமையேற்றதன் பின்பே அங்கு அமைதி நிலவியது. அதுமுதல் அங்கு வளமும் கொழிக்க ஆரம்பித்தது. இதனால் ஸ்பெய்னின் நிர்வாகத்துக்கு உட்பட்டிருந்த வட ஆபிரிக்காவின் ஸியூட்டாப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள், முஸ்லிம்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த வட ஆபிரிக்கப் பிரதேசங்களில் நிலவிய அமைதியாலும் வளமான வாழ்வினாலும் கவரப்பட்டனர். ஸ்பானியக் கிறிஸ்தவத் திருச்சபையின் கெடுபிடிகளுக்கு உட்பட்டு வெளியேறியிருந்த கத்தோலிக்கத் திருச்சபையைச் சாராத சிலரும் யூதர்களும் ஸ்பானிய மக்கள் படும் அல்லலை வட ஆபிரிக்க முஸ்லிம் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையொடு ஒப்பு நோக்கிப் பார்த்தனர். நீர் வளமும்  நில வளமும் இருந்தும் ஸ்பானிய மக்கள் வறுமையில் வாடித் துன்பமடைவதைக் கண்டனர். ஸ்பானிய ஆட்சியாளர்களின் கொடுமைகளில் இருந்து  தப்பித்து ஸியூட்டாவில் குடியேறியிருந்தவர்கள் ஸ்பெய்னின் நிலவரம் பற்றியும் அந்நாட்டின் பாதுகாப்பற்ற நிலை பற்றியும் எடுத்துக்கூறி ஸ்பெய்ன் பற்றி முஸ்லிம்கள் ஆர்வம் கொள்ளாத் தூண்டினர். படை எடுத்து இலகுவாக அந்த நாட்டைக் கைப்பற்றலாம் என்ற நம்பிக்கையை முஸ்லிம்களிடம் ஏற்படுத்தவும் முயற்சித்தனர்.  இவ்வாறு முஸ்லிம் ஆட்சியாளர்களைத் தூண்டியவர்களில் ஸியூட்டா மாகாண கவனராகக் கடமையாற்றிய ஜூலியன் முக்கியமானவர்.

ஜூலியன் இவ்வாறானதொரு முடிவுக்கு வருவதற்கான முக்கிய காரணியாகப் பின்வரும் சம்பவம் அமைந்தது என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

அரச குடும்பத்தினரும் அவர்களோடு தொடர்புடைய உயர் குழாத்தினரும் தத்தம் பிள்ளைகளைக் கல்வி பயில்வதற்காக தலை-நகரான  தொலதோவில் உள்ள அரச கல்வி நிலையத்துக்கு அனுப்புவது ஒரு மரபாக இருந்து வந்தது. இமரபைப் பின்பற்றி ஜூலியன் பேரழகியான  தனது மகள் புளோரிந்தாவை அக்கல்வி நிலையத்துக்கு அனுப்பி வைத்தான். அவளது அழகில் மயங்கிய அப்போதைய ஸ்பானிய மன்னன் ரொட்ரிக், ஒரு நாள் அவளது கற்பைச் சூறையாடினான். தனது குடிமக்களுக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டிய மன்னனே அறநெறி தவறி ஒழுக்கவீனமக நடந்து தனக்கு அவமானத்தைத் தேடித் தந்துள்ளான் என்று கருதிய ஜூலியன், மன்னனிடம் பழிவாங்க நினைத்தே கவர்னர் மூஸா பின் நுஸைரை ஸ்பெய்ன் மீது போர் தொடுக்கத் தூண்டினான். மூஸா பின் நுஸைரை அவன் நேரடியாகச் சந்தித்துப் போருக்குத் தேவையான உதவிகள் செய்வதாகவும் வாக்களித்தான்.

ஸ்பெய்னில் நிலவிய அதிகாரப் பொராட்டமும் ரொட்ரிக்கிற்கு எதிராக இயங்க ஜூலியனைத் தூண்டியிருக்க முடியும். ஸியூட்டாவின் கவர்னர் என்ற நிலையில் ஸ்பெய்ன் ஆட்சியாளரின் உதவியை நாடவேண்டியிருந்தது. ஆதலால் ஸ்பெய்னின் தலைமைத்திவப் பதவிக்குப் போராடுபவர்களில் ஒருவனை ஆதரிக்க வேண்டிய சூழல் தவிர்க்க முடியாததாகும்.ஜூலியன் ஸ்பெய்னின் முன்னாள் ஆட்சியாளன் விட்ஸாவின் மகளையே திருமணம் செய்திருந்தான். விட்ஸாவின் மகனான அகிலாவுக்குப் போட்டியாகச் செயற்பட்டே ரொட்ரிக் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தான்.  அதனால் ஜூலியன் ரொட்ரிக்குடன் கசப்புணர்வோடு இருந்திருக்கவும் முடியும். இப்பின்னணியில் தனது மகளுக்குக் கொடுமை செய்த ரொட்ரிக்கிடம் எவ்வழியிலேனும் பழிவாங்கவேண்டுமென்று கருதியே மூஸா பின் நுஸைரைத் தூண்டியிருக்க முடியும்

மூஸா பின் நுஸைர்  ஹிஜ்ரி 19ல் (கி.பி. 640), கலீபா உமரின் ஆட்சிக் காலத்தில்  ஹிஜாஸின் வாதி உல் குரா எனுமிடத்தில் பிறந்தார்.அவரது தந்தை நுஸைர், முஆவியா (ரழி) ஆட்சிக்காலத்தில் அரசின் காவல் படையில் சேர்ந்து டமஸ்கஸில் பணி புரிந்தார். ஆதலால் மூஸாவும் டமஸ்கஸில் வாழ்ந்தார். அவர் அறிவு, ஞானம், வீரம், கண்ணியம், தக்வா முதலாம் பண்புகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு "தாஈ" ஆவார்.அவரது உள்ளத்தில் ஆழமான ஈமானிய உணர்வு இருந்தது. கி.பி. 704ல் கலீபா வலீத் அவரை வட ஆபிரிக்காவுக்கு கவர்னராக நியமித்தார். அப் பிரதேசத்தின் தலை-நகரான கைரவானில் இருந்து பரிபாலனப் பொறுப்பை நிறைவேற்றினார். நீண்ட காலமாக டியூனீசியா, மொரோக்கோ பகுதிகளில் இருந்து கலகம் செய்து தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த கிளர்ச்சிக் காரர்களின் பாதுகாப்பு அரண்கள், கோட்டைகள் என்பவற்றைக் கைப்பற்றி வட ஆபிரிக்காவில் அமைதியை நிலைநாட்டினார்.

அப்பகுதி சுதேசிகளான பேர்பர் இனத்தினரிடையே தாஈக்களை அனுப்பி இஸ்லாத்தைப் பரப்புவதிலும் வெற்றி கண்டார். அவர்களுக்கு அல்குர்ஆனைக் கற்பிக்கவும் இஸ்லாமியக் கடமைகளையும் ஒழுக்க விழுமியங்களையும் போதிக்கவும் ஏற்பாடு செய்தார். இதனால் கவரப்பட்ட பேபர்கள் கூட்டம் கூட்டமாக வந்து இஸ்லாத்தினுள் நுழைந்தனர். அவர்களை ஜிஹாதில் பங்கு கொள்ளச் செய்து மத்திய தரைக் கடலில் இருந்து சார்டினியா, ஸிஸிலி தீவுகளையும் கைப்பற்றினார். உரோமரின் கடற்படைத் தாக்குதல்களை எதிர்கொள்வதற்காகக் கடற்படையைக் கட்டியெழுப்பினார். இக்கடற்படையின் உதவி கொண்டே சார்டினியா, ஸிஸிலி, மஜோகா, மைனோகா தீவுகளை அவரால் கைப்பற்ற முடிந்தது.

தூர நோக்கும் ஆழ்ந்த சிந்தனையும் உடையவராக இருந்ததால் ஜூலியனின் கூற்றுக்களை முழுமையாக நம்பாமலும் தட்டிக்கழிக்காமலும் மிகக் கவனமாகச் செயற்பட்டார். ஸ்பெய்ன் மீது போர் தொடுக்க  கலீபா வலீதின் அனுமதியைப் பெற்றுக்கொண்ட அதே வேளை, ஜூலியனின் கூற்று எவ்வளவு தூரம் நம்பகமானது என்பதை அறியவும் முயற்சி செய்தார். தன்னைப் பொறியில் சிக்க வைக்கும் ஒரு சதியாகவும் ஜூலியனின் அழைப்பு இருக்கக் கூடும் என்றும் சந்தேகித்தார். ஆதலால் ஸ்பெய்னின் உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காக ஜூலியன் வழங்கிய நான்கு வள்ளங்களில் 100 குதிரை வீரர்களையும் 400 காலாட்படையினரையும் ஸ்பெய்னின் கரையோரத்துக்கு தளபதி தாரிக் தலைமையில் அனுப்பி வைத்தார்.

 இச்சிறு படை கி.பி.710 ஜூலையில் ஸ்பெயினின் தென் முனையில் உள்ள ஜிப்ரால்டருக்கு மேற்கே தரையிறங்கியது.  அத்தளபதியின் ஞாபகார்த்தமாகவே அவர் இறங்கிய இடம் இன்றும்  தரிபா என்றே அழைக்கப்படுகின்றது. இப்படை வீரர்கள் அத்தளபதியின் ஞாபகார்த்தமாகவே அவர் இறங்கிய இடம் இன்னும் தரிபா என்றே அழைக்கப்படுகிறது. இப்படை வீரர்கள் ஸ்பெயினின் கரையோரம் பாதுகப்பற்றதாக உள்ளது என்ற நற்செய்தியையும் ஏராள்மான கனீமத் பொருட்களையும் கொண்டு வந்தனர். இதனால் மூஸா பின் நுஸைர் கி.பி. 711ல் (ஹி.92 - ஷஃபான்) தாரிக் பின் ஸியாதின் தலைமையில் ஏழாயிரம் பேர் கொண்ட படையை ஸ்பெயினைக் கைப்பற்ற அனுப்பினார். படை செல்லத் தேவையான வளங்களை ஜூலியனே வழங்கினான்.

தளபதி தாரிகின் முழுப் பெயர், தாரிக் பின் ஸியாத் பின் அப்துல்லாஹ் என்பதாகும்.ஹி.50 (கி.பி.670)ல் பிறந்த இவர் ஹி.102ல் (கி.பி.720) மரணித்தார். ஸதம் எனும் கோத்திரத்தைச் சேர்ந்த பர்பர் இனத்தவராவார். ஸஹாரா பாலைவனத்தின் கடின வாழ்வுக்கு முகம் கொடுத்து வளர்ந்தவர். ஓங்கி வளர்ந்த உடற்கட்டுடைய ஒரு குதிரை வீரர். தூர நோக்குடையவர். மூஸாவிடம் இஸ்லாத்தை ஏற்ற தாரிக்கிற்கு தஞ்சிர் பகுதியின் பாதுகாப்புப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. தாரிகின் தலைமையில் ஸ்பெயினுக்குச் சென்ற படைவீரர்களில் பெரும்பான்மையினர் பர்பர்களாவர். ஸ்பெயினின் தெற்கே கடற்கரையோரமாக இருந்த மலையடிவாரத்தில் தாரிக் படையுடன் இறங்கினார். அவ்விடம் இன்றும் தாரிகின் பெயருடன் இணைத்து ஜபல் அத்தாரிக் என்றழைக்கப்பட்டது. அதுவே தற்போது மருவி ஜிப்ரால்டர் என்று அழைக்கப்படுகிறது.

தாரிகின் வீரர்கள் வள்ளங்களில் இருந்து கரை இறங்கியதும் தாரிக் தாம் வந்த வள்ளங்களைத் தீயிட்டுக் கொழுத்தினார். இப்பகுதியில் ரொட்ரிக்கின் பிரதிநிதியாகக் கடமையாற்றிய தியடர் மீர் என்பவன் தாரிக்கை எதிர்த்தபோதும் தாரிக் அவனைத் துரத்திவிட்டுக் கடற்கரையோரம் இருந்த கோட்டையைக் கைப்பற்றிக்கொண்டார். தியடர் மீர்தான் ரொட்ரிக்கிற்கு தாரிக்கைப் பற்றிய தகவலைப் பின்வருமாறு அறிவித்தான்.

"அறிமுகமில்லாத ஒரு நாட்டிலிருந்து எவர் என்று இனம்காண முடியாத சிலர் நமது நாட்டை முற்றுகையிட்டுள்ளனர். அவர்கள் வானத்தில் இருந்து இறங்கியவர்களா அல்லது தரையில் இருந்துதான் வெளிப்பட்டுள்ளார்களா என்று எங்களால் புரிந்துகொள்ள முடியாதுள்ளது."

வடக்கே அகிலாவின் கிளர்ச்சியை அடக்குவதில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரொட்ரிக் இத்தகவல் மூலம் முஸ்லிம் படை தரையிறங்கி இருப்பதை அறிந்து உடனடியாக 100 000 வீரர்களைத் திரட்டிக்கொண்டு தாரிக்கை எதிர்கொள்வதற்காக விரைந்தான். தனது ஒற்றர்கள் மூலம் இதனை அறிந்த தாரிக் மேலும் படை உதவி தருமாறு மூஸா பின் நுஸைரிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கிணங்க மேலும் 5000 வீரர்களை மூஸா உடனே அனுப்பி வைத்தார். போர் தொடங்குவதற்குச் சற்று முன்புதான் இவர்கள் வந்து சேர்ந்தனர்.

ரொட்ரிக்கின் பெரும் படையைக் கண்டு முஸ்லிம் வீரர்கள் அதிர்ந்துவிடாதிருப்பதற்காக  தளபதி தாரிக் வீராவச்மூட்டும் வகையிலான உரையொன்றை நிகழ்த்தினார்.

"குமுறும் கடலின் பொங்கி எழும் அலைகளை நிகர்த்த எண்ணிலடங்கா எதிரிகள் உங்கள் முன்னே உள்ளனர். பின்புறமோ பெருங்க்கடல் உள்ளது. தப்பியோட வழியில்லை. ..அவர்களிடமிருந்து பறித்தெடுப்பதைத் தவிர்த்து உண்பதற்கு வேறு உணவுமில்லை. நீங்கள் இருக்கும் நிலையைச் சிந்தித்துப் பாருங்கள்! உலகில் சிதறியுள்ள அநாதைகள் போன்று நீங்களும் இவ்விடத்தில் அரவணைப்போர் எவரும் இல்லாதோராய் இருக்கின்றீர்கள். அச்சத்தைத் தவிருங்கள்! எதிரியோடு போரிடுங்கள். வெற்றி உங்களுடையதே என்று நம்புங்கள். எதிரிகள் இறை நம்பிக்கை இல்லாதவர்கள். ஆதலால் எமது படையை எதிர்த்து அவர்களால் வெற்றி கொள்ள முடியாது. ரொட்ரிக் இங்கு வந்திருப்பதே அவனது மாளிகைகளையும் நாட்டையும் வளங்களையும் உங்கள் கையில் ஒப்படைப்பதற்கே. மரணத்துக்கு அஞ்சாது போராடி அவ்வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

உங்களைத் தூண்டிவிட்டு நான் ஒதுங்கிவிடமாட்டேன்.  எனது பொறுப்பு உங்களைவிட அதிகமானது. எனது ஆவலோ ரொட்ரிக்கை எனது கையால் கொலை செய்வதுதான். ஆதலால் நான் முன்னே செல்வேன். நீங்கள் என்னைத் தொடருங்கள். நீங்கள் அல்லாஹ்வின் தீனை நிலை நாட்ட முயற்சித்தால் அல்லாஹ்வின் அருள் உங்களுக்குக் கிடைக்கும். அவ்வருள் உங்கள் முயற்சியில்தான் தங்கியுள்ளது.உங்கள் முயற்சிக்கான கூலியை அல்லாஹ் இவ்வுலகிலும் மறுவுலகிலும் தருவான். இம்முயற்சியில் உங்களுக்கு முன்மாதிரியாக நான் போராடுவேன். நீங்கள் என்னைத் தொடருங்கள். நான் ரொட்ரிக்கை இலக்கு வைப்பேன். அவனை நான் கொன்றால் வெற்றி எமதே. அதற்கு முன் நான் கொலை செய்யப்பட்டாலோ அதனைப்பற்றிக் கவலைப்படாது போரைத் தொடருங்கள். ரொட்ரிக்கைக் கொலை செய்தபின் நான் கொலை செய்யப்பட்டால்  தீரமும் துணிவும் அனுபவமும் உள்ள ஒருவரைத் தள்பதியாகத் தெரிவு செய்து போரைத் தொடருங்கள், இவ்வறிவுறுத்தல்களை நீங்கள் பின்பற்றினால் வெற்றி நமதே.

தாரிகின் இவ்வுரையால் உந்தப்பட்ட முஸ்லிம் வீரர்கள் களத்தில் ஷஹீதாஹி சுவர்க்கத்தின் இன்ப சுகத்தை அடைய அன்றேல் வெற்றி வீரர்களாகி  ஸ்பானியாவின் சொந்தக்காரராகத்  துடித்தனர். உயிரோட்டமுள்ள இத்தகு வீரர்கள் முன்னே ரொட்ரிக் பெரும் ஆடம்பரத்துடனும் பெரும் படையுடனும் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் போர்க்களத்தை அடைந்தான். சாதாரண காலங்களில் ஆட்சியாளர்களால் கவனிக்கப்படாது வரிச்சுமையால் அல்லலுற்ற விவசாயிகளையும் கொத்தடிமைகளையும் பெருமளவில் அவனது படை உள்ளடக்கி இருந்தது. ஆட்சிக்கெதிராகச் சதியும் சூழ்ச்சியும் செய்யும் பிரபுக்கள் சிலரும் தளபதிகளாகக் கடமையாற்றினர். போர்க்களத்திலிருந்து பக்கம் மாறி முஸ்லிம் படைகளுக்கு உதவி புரிவதற்காக போர் உச்ச நிலை அடைவது எப்போது என எதிர்பார்த்திருந்த அகிலாவின் ஆதரவாளர்களும் போர் வீரர்களாக ரொட்ரிக்கின் படையில் சேர்ந்திருந்தனர். கூலிப்படையை நிகர்த்த ரொட்ரிக்கின் வீரர்களும் போரில் வீர மரணம் அடையக் காத்திருக்கும்  முஸ்லிம் வீரர்களும் கி.பி. 711 ஜூலை 19ல் (ஹி. 92, ரமழான் பிறை 28) "றியோபர்பாட்டா" என்று தற்காலத்தில் அழைக்கப்படுகின்ற "மதீனாசிடோனியா" பிரதேசத்திலுள்ள "குவாடலேட்" நதிப் பள்ளத்தாக்கில் (வாதீ பெக்கா) சந்தித்தனர்.

போர் ஒருவாரம் தொடந்து நீடித்தது. தன்னிகரற்ற திறமை மிகு தளபதியயும், அல்லாஹ்வின் உதவியில் தளராத நம்பிக்கையையும், பாலைவனத்தின் கடின வாழ்வுக்கு முகம் கொடுத்தும் பழகிய வீரர்களையும் கொண்ட முஸ்லிம் படையை எதிர்த்து நிற்க முடியாது ஸ்பானிய வீரர்கள் திணறினர். அச்சந்தர்ப்பத்தில்  ஸ்பெய்ன் வீரர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தபொதும் கூலிப்படைபோலச் செயற்பட்டதால் ஸ்பானியப் படை தோல்வியைச் சந்திதது. ரொட்ரிக்கிற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவனது உடல் போர்க்களத்தில் கிடைக்கவில்லை. அவனது குதிரையும் அதன் சேணமும் ஆற்றங்கரையில் கண்ண்டெடுக்கப்பட்டதால் அவன் ஆற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

தாரிக் பெற்ற இவ்வெற்றி ஸ்பெய்னின் மத்திய அரசைச் சிதைத்துவிட்டது. உயர் குழாத்தினர் ஒன்று சேர்ந்து புதிய ஆட்சியாளர் ஒருவரைத் தெரிவு செய்யவும் புதிய படையணி ஒன்றை உருவாகவும் முடியாதிருந்தது.ஆதலால் ஸ்பெய்னின் வாயில்முஸ்லிம்களுக்குத் திறந்தே இருந்த்து. விஸிகொத் அரச குடும்பப் பிரமுகர்கள் தலைமை தாங்கிய சில நகர்களில் மட்டும் எதிர்ப்பு ஒரளவு இருந்தது. இந்த வாய்ப்பை நன்கு  பயன்படுத்தக் கருதிய தாரிக், அயல்பாக நகர்களைத் தனது ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவரத் துரித நடவடிக்கை எடுத்தார். தனது படையை நாங்கு பிரிவுகளாக வகுத்தார். "முஇஸ் அர்-ரூமீ" எனும் தளபதியின் தலைமையில் சென்ற 700 குதிரை வீரர்களைக் கொண்ட படைப்பிரிவைக் கொர்டோவா நகரைக் கைப்பற்ற அனுப்பிவைத்தார். தாரிக் ஒரு தொகுதி வீர்ர்களோடு சென்று தலைநகர் தொலதோவைக் கைப்பற்றினார். பிறிதொரு படைப்பிரிவு மலாக்காவையும் அடுத்த படைப்பிரிவு கொர்டோவாவையும் கைப்பற்றின.

ஏராளமான "ஃகனீம்த்" பொருட்கள் கைப்பற்றப்பட்டன. தாவூத் நபியின் மகன் ஸுலைமான் நபிக்குச் சொந்தமானதும் ஜின்களால் செய்யப்பட்டதாக நம்பப்படுவதுமான முத்து-மாணிக்கம் போன்ற பெறுமதி மிக்க ரத்தினங்களால் பதிக்கப்பட்ட மேசை ஒன்று கிறிஸ்தவக் கோயிலில் இருந்து கிடைத்தது. தௌராத் வேதம் எழுதப்பட்ட 21 பிரதிகளும்; ஸ்பானியாவின் முன்னைய ஆட்சியாளர்கள் அணிந்த கிரீடங்கள் 25ம் தாவரங்கள்; கனிப்பொருட்கள், மிருகங்கள் பற்றி எழுதப்பட்ட நூல்களும் தாரிக் வசமாயின. இந்த வெற்றிச் செய்தியை மூஸா பின் நுஸைர் கலீபா வலீதுக்கு உடனடியாக அறிவித்தார்.


ஸ்பெய்னில் மூஸா பின் நுஸைர்

தாரிகின் போர்க்கள வெற்றி மூஸா பின் நுஸைரிடம் பொறாமையைத் தோற்றுவித்ததென்றும், இந்த வெற்றியின் மூலம் தன்னைவிடத் தாரிக் கலீபாவிடம் முதன்மையடையலாம் என்றும் கருதி ஸ்பானிய வெற்றியில் தானும் பங்குகொள்வதாக 18000 போர் வீரர்களுடன் சென்றார் என்றும் முஸ்லிம் ஸ்பெய்னின் வரலாற்றை எழுதிய "ஸ்டான்லி லேன்பூல்" போன்றவர்கள் அவர் மீது ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளனர். இக்குற்றச்சாட்டின் நம்பகத்தன்மை குறித்து  ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது அவசியமானதாகும்.

மூஸா பின் நுஸைர் தக்வாவும் சமய ஈடுபாடும் மக்கள் நலனில் அக்கறை காட்டும் மனப்பாங்கும்   உடைய ஒரு "தாஈ" ஆவார். 70 வயதைத் தாண்டியவர். அல்லாஹ்வுக்கு மட்டுமே பயப்படுகின்ற, அல்லாஹ்வுக்காக மட்டுமே செயல்படுகின்ற எண்ணப்பாங்குடையவர். வட ஆபிரிக்காவில் அவர் கவர்னராகக் கடமையாற்றியபோது வானம் பொய்த்துக் கடும் வரட்சியும் பஞ்சமும் ஏற்பட்டன. அப்பொது தமது தோழர்களிடம் தொழுது நோன்பு நோற்று இறைவனிடம் துஆ கேட்குமாறு கேட்டுக்கொண்டதுடன், மழை தேடித் தொழுவதற்காக ஸஹாராப் பாலை நிலத்துக்கு மக்களை அழைத்தும் சென்றார். அத்தொழுகையை முன்னின்று நடாத்தியபோது உள்ளம் உருகிக் கண்ணீர் வடித்து அல்லாஹ்விடம் மழை வேண்டி துஆக்கேட்டார். அவ்விடத்தில் இருந்த ஒருவர், உங்கள் குத்பாவில் கலீபாவுக்காகப் பிரார்த்திக்கவில்லையே என்று சுட்டிக்காட்டினார். "அல்லாஹ் அல்லாத மற்றெவரையும் நினைவுகூரும் இடமல்ல இது" என்று  கூறுமளவு ஈமானியப் பலம் கொண்டிருந்தார். இத்தகைய ஒருவர் தன் உள்ளத்தில் பொறாமைக்கு இடமளிப்பர் என்று எவ்வாறு கருத முடியும். மட்டுமன்றி தன்னிடம் இஸ்லாத்தை ஏற்ற தன் கீழ் பணியாற்றுகின்ற, தனக்கு மாறு செய்யாத, தன்னை கண்ணியப்படுத்தும் ஒருவர் பற்றி அவர் ஏன் பொறாமைப்பட வேண்டும்.?

தாரிக் தான் எப்போதும் மூஸாவின் தலைமையின் கீழ் இயங்கும் ஒரு மவ்லா என்பதையும், அவரின் கீழ் நின்றேபோர் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றேன் என்றும், தான் அவருக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியவன். கணக்குக்காட்ட வேண்டியவன் என்பதையும் மறந்து ஒரு பொழுதும் செயற்படவில்லை. ஸ்பெயினின் ஆட்சிக்கு உரித்துக் கொண்டாடிய அகிலா ஒருதினம் தாரிக்கைச் சந்தித்த போது "நீங்கள் தான் அமீரா?" என்று கேட்டார். அதற்குப் பதில் கூறும்போது, தனக்கு மேலால் ஓர் அமீர் (கவர்னர்) இருப்பதாகவும் அவருக்கு மேலால் இன்னும் ஓர் அமீர் (கலீஃபா) இருப்பதாகவும் பதில் கூறினார். இது தாரிக், மூஸாவை கௌரவித்து வந்துள்ளார் என்பதையே காண்பிக்கின்றது.

மூஸா பின் நுஸைர் வட ஆபிரிக்காவில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் நாடு பிடிக்கும் நோக்கில் ஒர் முற்றுகையாளன் மேற்கொண்ட படையெடுப்பாக அமைந்திருக்கவில்லை. மாறாக, மக்கள் இஸ்லாத்தை அறிந்து பின்பற்ற ஒரு வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு நடவடிக்கையாகவே அது அமைந்தது. அதனால், தான் பர்பர்களிடையே இஸ்லாமியப் பிரசாரத்துக்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார். உளத் தூய்மையும் இஸ்லாமிய சிந்தனையும் உடைய ஒருவர் தன் கீழ் கடமையாற்றும் ஒருவர் மீது பொறாமை கொள்வாரா என்றும் சிந்திக்க வேண்டும்.

தாரிகின் இராணுவ நடவடிக்கைகள் வெற்றியளித்துக் கொண்டிருக்கும் போது வயோதிபரான மூஸா பின் நுஸைர் படையுடன் ஏன் ஸ்பெயினுக்குச் செல்ல வேண்டும், என்ற வினா எழுவது இயற்கையே. மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட ஸ்பெயின் மீதான படையெடுப்பை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து அங்கு அமைதியை நிலைநாட்டுவது 12000 போர் வீரர்களை மாத்திரம் கொண்ட படையால் சாத்தியமாகுமா என்றும் சிந்திக்க வேண்டும். சமய ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தம்முடன் வேறுபட்டுள்ள ஒரு சமூகத்தில் ஒரு சிறு படையால் அமைதியை நிலைநாட்டுவது சிரமம். இதனைக் கருத்திற் கொண்ட தாரிக், "நாலா புறத்திலிருந்தும் சுதேசிகள் எங்களை எதிர்க்கின்றனர். எனவே, உடன் உதவிப்படை அனுப்புங்கள்" என்று கோரிக்கை விடுத்திருந்தார். அக்கோரிக்கையை செவிமடுத்தே மூஸா படையுடன் சென்றார் என்பதை ஆரம்ப கால முஸ்லிம் வரலாற்றாசிரியர்களுள் ஒருவரான இப்னு குதைபா குறிப்பிட்டுள்ளார். இவை தாரிக்கின் மீது கொண்ட பொறாமையால் அன்றி, ஸ்பெயின் வெற்றியைத் துரிதமாகப் பூரணப்படுத்த வேண்டும் என்ற அவாவினாலேயே மூஸா படையுடன் சென்றார் என்பதைக் காட்டுகின்றன. தாரிக் சென்ற வழியைத் தவிர்த்தே மூஸா தன் படையை நகர்த்தினார். ஜிப்ரால்டரில் படையுடன் இறங்காது தளபதி தாரிக் தரையிறங்கிய இடத்தில் மூஸா தரையிறங்கினார். தாரிக் கைப்பற்றாதிருந்த கைப்பற்றவே இவர் தனது படையை நகர்த்தினார்.

உரோமர் ஆட்சியின் போது தலைநகராகவும், கலை, கலாசார மத்திய நிலையமாகவும் விளங்கிய சீவலி நகரையும் காமோனாஅவர் கைப்பற்றியதுடன் நீண்ட காலப் போராட்டத்தின் பின் கி.பி.713 ஜூன் மாதம் மெரிடா நகரையும் கைப்பற்றினார். மூஸா ஸ்பெயின் சென்று ஒரு வருடத்தின் பின்பே தாரிக்கை தொலேடோவுக்கு அருகில் இருந்த தலவேரா எனுமிடத்தில் சந்தித்தார். இச்சந்திப்பு சுமுகமாக இராத போதும் அதன் பின் இருவரும் இணைந்து போரிட்டு சல்மாங்கா, சரகோஸா, பார்ஸிலோனா எனும் நகரங்களைக் கைப்பற்றினார்.

இதன் பின்னர் மூஸா ஸ்பெய்னில் சென்றிறங்கிய ஒரு வருட காலத்தின் பின் தொலதோவுக்கு அருகில் இருந்த தலவேரா எனுமிடத்தில் வைத்தே தாரிகைச் சந்தித்தார். இச்சந்திப்பு சுமுகமாக இராதபோதும் அதன் பின் இருவரும் கருத்தொருமித்து இணைந்து போரிட்டே "சல்மாங்கா", "சரகோஸா", எனும் நகரங்களைக் கைப்பற்றினார்.

இருவருக்கும் சுமுகமான உறவு நிலவாமைக்கான காரணம் மூஸாவின் கட்டளைகளைத் தாரிக் புறக்கணித்தமையாகும். படைப்பிரிவுக்குத் தாரிகைத் தளபதியாக நியமித்து அனுப்பும்போது அந்தலூஸின் மீது படை எடுத்து களத்தில் வெற்றி கண்டதும் உடன் திரும்பி வரவேண்டும் என்றே மூஸா கட்டளையிட்டிருந்தார். முஸ்லிம் படை வீரர்களின் பாதுகாப்புப் பற்றி மூஸா அதிக கவனம் செலுத்தினார். முற்றிலும் அந்நியமான ஒரு தீவகற்பத்தில் 12000 வீரர்களை மட்டுமே கொண்ட  ஒரு சிறு படையை உள் நாட்டை நோக்கி நகர்த்துவது பேராபத்தைத் தோற்றுவிக்க முடியும். கலீபா வலீதும் இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்தினார். ஸ்பெய்னுக்குப் படை அனுப்ப மூஸா கலீபாவிடம் அனுமதி கோரியபோது பரந்த கடலைத் தாண்டிப் படையை அனுப்புவது ஆபத்தாக அமையலாம் எனப் பயந்து ஆரம்பத்தில் அவரும் அனுமதி கொடுக்க மறுத்தார். அப்போது இந்நீரிணையின் ஒரு கரையில் இருந்து நோக்கினால் மறு கரை தெரிகிறது என்று கூறிய பின்னரே கலீபா படை எடுக்க அனுமதித்தார்.

கலீபா முஸ்லிம் படைகளின் பாதுகாப்பில் அதிக அக்கறை செலுத்தியதாலேயே உள் நாட்டுக்குள் படைகளைக் கொண்டு செல்ல வேண்டாம் என்று மூஸா கட்டளையிட்டிருந்தார். இக்கட்டளையை உதாசீனம் செய்யும் எண்ணம் தரிகிற்கு இல்லாதிருந்தபோதும் நடந்து முடிந்த போரின் பின் முழு  ஸ்பெய்னினதும் வாயில் திறந்துவிடப்பட்டிருந்தது. இந்த வாய்ப்பை நழுவ விடுவது அல்லது அதனைப் பயன்படுத்தக் கால தாமதம் செய்வது முஸ்லிம்களிம் நலன்களுக்கு உகந்ததாக இருக்காது என்று தாரிக் சிந்தித்து, கள நிலைமையை மிகச் சரியாக மதிப்பிட்டு உடனடியாக வெற்றி வாய்ப்புள்ள நகர்களைக் கைப்பற்ற முனைந்தார். தளபதி தாரிகின் இம் முடிவு சரியானதாக இருந்தபோதும் கவர்னரின் கட்டளையை மீறிய செயலாகவே அது அமைந்தது. அதனால்தான் தாரிகைச் சந்தித்ததும் மூஸா அவரைப் பகிரங்கமாகப் பலரின் முன்னிலையில் கண்டித்தார். முஸ்லிம்களின் இராணுவ வரலாற்றில் இந்நிகழ்வு புதிதான ஒன்றல்ல. இரண்டாம் கலீபா டமஸ்கஸை வென்று தந்த தளபதி காலித் பின் வலீதைப் பதவி நீக்கினார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.


கவர்னர் மூஸாவின் கட்டளையை மீறித் தான் எடுத்த போர் நடவடிக்கைகளுகான காரணங்களை எடுத்துக் கூறியதன் பின் இருவரும் சுமுகமாயினர். இருவரும் கூட்டாக இணைந்து ஸ்பெய்னின் வெற்றியைப் பூரணப்படுத்த முயற்சித்தனர். இருவரதும் தலைமையில் இருந்த இரு படைகளும் இணைந்தே சரகோவா, தாகோனா, பார்ஸிலோனா பிரணாய் மலையடிவாரத்தில் இருந்த ஜிரோனா முதலான நகரங்களைக் கைப்பற்றினர். ஸ்பெய்னின் வட மேற்குப் பகுதியில் அட்லாண்டிக் கடற்படைப் பிரதேசத்துக்கு அருகில் இருந்த மலைப்பாங்கான அந்தூரியாய் எனும் பிரதேசம் தவிர்ந்த ஸ்பெய்னின் ஏனைய பிரதேசங்கள் அனைத்தும் முஸ்லிம்கள் வசமாகின. இந்த வெற்றியை அடுத்து பிரணாய் மலையைக் கடந்து பிரான்ஸைத் தாக்குவதற்கு மூஸா திட்ட்மிட்டார். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க முன்பே டமஸ்கஸ் வருமாறு கலீபா வலீத்  மூஸாவுக்குக் கட்டளையிட்டார்.


மூஸா தனது மூத்த மகன் அப்துல் அஸீஸை ஸ்பெய்னின் கவர்னராகவும் இரண்டாவது மகன் அப்துல் மலிக்கை கைரவானின் கவர்னராகவும் மூன்றாவது மகன் அப்துஸ்-ஸாலிஹை ஸியூட்டாவின் தளபதியாகவும் நியமித்துவிட்டு ஏராளமான ஃகனீமத் பொருட்களோடும் போர்க் கைதிகளுடனும் தாரிக் பின் ஸியாதையும் கூட்டிக்கொண்டு கி.பி. 714ன் பிற்பகுதியில் டமஸ்கஸை நோக்கிப் புறப்பட்டார்.

அப்துல் அஸீஸ் தந்தையைப் போலவே திறமை மிக்க தளபதியாவார். ஸ்பெய்னின் எஞ்சியிருந்த பிடனீஸ் மலைத் தொடரின் மேற்கு புற எல்லையில் இருந்த பம்ப்லோனா நகரையும் தரகோனா, நாரிபோன் நகரையும் கைப்பற்றினார். இவர் புதிய கலீபா ஸுலைமானுக்கு விசுவாசமாகவே நடந்து கொண்டார். எனினும் அவர் கி.பி. 715ல் கொலை செய்ய்ப்பட்டார். ஸுலைமானின் கையாட்கள் அவரைக் கொலை செய்ததாகச் சிலர் கூறுவர். அப்துல் அஸீஸ் ரொட்ரிக்கின் விதவை மனைவியை விவாகம் புரிந்திருந்தார் என்றும் அப்பெண்ணைத் திருப்திப்படுத்தும் நோக்கில் அப்துல் அஸீஸ் நடந்துகொண்ட சில வழிமுறைகளைக் கண்டு சகியாத  இராணுவ வீரர் ஒருவர் அவரைக் கொலை செய்தார் என்று மற்றும் சிலர் கூறுவர். எவ்வாறாயினும் அப்துல் அஸீஸின் கொலையுடன் ஸ்பெய்ன் மீதான இராணுவ நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படாது இடைநிறுத்தப்பட்டது. இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணம் என்ற அடிப்படையில் கலீபாவினால் அது பரிபாலிக்கப்பட்டது.

முஸ்லிம் ஆட்சியின் கீழ் ஸ்பெயின்

ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி அந்நாட்டு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தது. இக்காலப் பகுதியில் ஆட்சியாளர்கள் என்ற எல்லையுள் மட்டுப்படாது மக்கள் வாழ்வின் பல்வேறு துறைகளிலும் ஒரு புதிய மாற்றம் பிரதிபலித்தது. ஆட்சியாளர்களதும் சமயக் குரவர்களதும் கொடுங்கோண்மைக்கும் சுரண்டலுக்கும் அது முற்றுப்புள்ளி வைத்தது.

ஆட்சியாளர்கள் முஸ்லிம்களாக இருந்த போதும் கிறிஸ்தவக் குடிமக்கள் தமது தனியார் சட்டங்களைப் பின்பற்றவும் தமது நீதிபதிகளின் கீழ் அச்சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்புக்களைப் பெறவும், தமது கோயில்களையும் மடாலயங்களையும் வைத்திருக்க அனுமதிக்கப்பட்டனர். இதன்படி, அவர்கள் பூரண சமய சுதந்திரத்தை அனுபவித்தனர். கிறிஸ்தவ ஆட்சீன் கீழ் தாம் இழந்திருந்த சமய அனுஷ்டான சுதந்திரங்களையும் சொத்துக்களை வைத்திருக்கும் உரிமைகளையும் யூதர்களும் பெற்றுக் கொண்டனர்.கிறிஸ்தவர்களும் யூதர்களும் அஹ்லுல் கிதாப் என்றழைக்கப்பட்டு முஸ்லிமல்லாத ஏனைட சமயத்தவர்களை வ்விட முஸ்லிம்களால் கண்ணியப்படுத்தப்பட்டனர்.

முஸ்லிம் ஆட்சியாளர்கள், நிர்வாகப் பணிகளின் நடைமுறையில் பெரு மற்றங்களை ஏற்படுத்தவில்லை. நிர்வாகப் பதவிகளிலும், வரி சேகரிப்பிலும் சுதேசிகளே தொடர்ந்தும் ஈடுபட்டனர். அதனால், சுதேசிகளுக்குப் புதிய அரசியல் மாற்றம் பாரிய தாக்கம் எதனையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, அவர்கள் வரிச்சுமையிலிருந்து பெருமளவு விடுவிக்கப்பட்டனர். முன்பு ஆட்சியாளர்களும் சமய பீடத்தவர்களும் தத்தம் நலனுக்காக வெவ்வேறு வரிகளை அறவிட்டனர்.

இவ்வரிகள் நீக்கப்பட்டு ஜிஸ்யா வரியும் நில வரியும் மட்டுமே அறவிடப்பட்டன. போரிடும் ஆற்றல் படைத்தவர்களிடம் இருந்து மட்டுமே ஜிஸ்யா வரியை அறவிட்டனர். மதக்குரவர், வயோதிபர், அங்கவீனர், பெண்கள், சிறுவர்கள் முதலானோரிடம் இவ்வரி அறவிடப்பட்வில்லை. மக்களின் பொருளாதார சக்திக்கு ஏற்ப வருடமொன்றுக்கு 12-48 திர்ஹம் மட்டுமே அறவிடப்பட்டது. அதனையும் 12 கோட்டாக்களாகப் பிரித்துச் செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.

நிலவரி போலல்லாது நிலத்தின் உற்பத்தித் திறனுக்கு ஏற்பவே வரி அறவிடப்பட்டது. நில வரியை நிர்ணயிக்கும்போது சமய வேறுபாடு கருத்தில் கொள்ளப்படவில்லை. இதனால் ஆளும் வர்க்கத்தினரான முஸ்லிம் குடி மக்கள் செலுத்துமளவிலான நில வரியையே ஏனைய சமயத்தைச் சேர்ந்த குடிமக்களும் செலுத்துமாறு கேட்கப்பட்டனர். நிலவுரிமையையும் முஸ்லிம்கள்  சுதேசிகளிடமிருந்து அறவிடவில்லை.  முஸ்லிம்களின் படையெடுப்புக்கு முன்பு சுதேசிகளிடம் இருந்த நிலத்தைத் தொடர்ந்தும் அவர்களே வைத்திருக்க அனுமதிக்கப்பட்டனர். எனினும் நாட்டைவிட்டு வெளியேறிய அரச குடும்பத்தவர்களதும், பிரபுக்களதும் நிலங்களும், கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களும் அரச உடமையாக்கப்பட்டன. முன்பு அந்நிலங்களில் பயிரிட்ட பண்ணை அடிமைகளுக்கே தொடர்ந்தும்  அந்நிலங்களில் உரிமை வழங்கப்பட்டது. பண்ணை அடிமைகள் சுதந்திரமாகத் தான் விரும்பிய பயிர்களைப் பயிரிட அனுமதிக்கப்பட்டனர். உற்பத்தியின் ஒரு பகுதியை அரசுக்கு ஒப்படைக்குமாறு மட்டுமே  அவர்கள் கேட்கப்பட்டனர்.

உரோமர்களதும் விஸிகொத் ஆட்சியாளர்களதும் காலத்தில் அடிமைகள் மனிதர்களாகவே கருதப்படவில்லை. முஸ்லிம்களின் ஆட்சியில் இந்த நிலை மாறியது. எஜமானர்கள் உண்ணும் உணவையும் உடுக்கும் உடையையுமே அடிமைகளுக்கும் வழங்க வேண்டுமென்றும், சுமக்க முடியாத வேலைப் பளுவை அடிமைகள் மீது சுமத்தக் கூடாதென்றும்; அடிமைகளுக்குக் கொடுமை இழைப்போர் சுவர்க்கம் செல்ல முடியாது என்றும் இஸ்லாம் அறிவுறுத்தியது. அடிமைகளை விடுதலை செய்வதனூடாக பாவங்களில் இருந்து மன்னிப்பையும் சுவர்கத்தையும் பெறலாம்  என்று போதித்ததால் முஸ்லிம்கள் அடிமைகளை மனிதர்களாக மதித்தனர். இதனால் முஸ்லிம்களின் பண்ணைகளில் வாழ்ந்த கொத்தடிமைகள் சாதாரண விவசாயிகள் என்ற நிலையை அடைந்தனர். எந்த ஒரு முஸ்லிமும் அடிமையாக இருப்பதை முஸ்லிம் ஆட்சியாளர்கள் அனுமதிக்கவில்லை. கிறிஸ்தவ எஜமானர்களின் தோட்டங்களில் அடிமைகளாக இருந்தவர்கள் இதனைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்தக் கருதி கலிமாக் கூறி முஸ்லிம்களாயினர்.கிறிஸ்தவ பாதிரிமார் இவ்வடிமகளுக்கு கிறிஸ்த்வப் போதனைகள் வழங்கி சமய வாழ்வில் ஈடுபடுத்தா திருந்ததால் கிறிஸ்தவத்தில் இருந்து மாறுவது இவர்களுக்கு எவ்விதக் கவலையையோ சிரமத்தையோ ஏற்படுத்தவில்லை.

முஸ்லிம்களின் ஆட்சியில் மேற்குறித்தவாறு குடிமக்களின் வரிச்சுமை பெருமளவில் குறைக்கப்பட்டது. அதனால் வர்த்தகம் பெருகி வளம் பெற்று பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டது. அத்துடன் சமய வேறுபாடு காட்டாது மனித உரிமைகள் வர்க்க வேறுபாடின்றி வழங்கபட்டு நீதியான ஆட்சி இடம்பெற்றதால் பல்வேறு சமயங்கலிடையே ஒற்றுமை நிலவியது. இத்ன்வழி ஸ்பெய்ன் குடிமக்களிடையே அமைதியும் மகிழ்ச்சியும் நிலவின.

முஸ்லிம்கள் ஸ்பெய்னைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கு அரேபியரும் பேர்பர் இனத்தவரும் குடியேறினர். இக்குடியேற்றங்கள் பெருமளவில் நகர்களையே மையமாகக் கொண்டிருந்தன. எனினும் ஒவ்வொரு குடியேற்றமும் தத்தமது கோத்திர உறுப்பினரை மட்டுமே உள்ளடக்கியிருந்தது. அதாவது கோத்திரங்களை மையமாகக் கொண்ட குடியேற்றங்களாகவே அவை இருந்தன. அதனால் அரபு நாட்டில் நிலவிய கோத்திர வேறுபாட்டுணர்வு இங்கும் நீடித்தது. இதனால் காலாகாலமாக அரபுக் கோத்திரங்களுக்கிடையே நிலவிய போட்டியும் பொறாமையும் பகைமையும் இங்கும் தோன்ற வாய்ப்பாகியது.

 தாரிகின் தலைமையில் சென்ற படை வீரர்களில் 90%க்கும் அதிகமானோர் "பேர்பரி" இனத்தினராவர். இவர்கள் இஸ்லாத்தை ஏற்றிருந்தபோதும் அரசியல் ரீதியாக அரபு முஸ்லிம்கள் பெற்றிருந்த உரிமைகளைப் பெறவில்லை. மக்கள் தொகை மதிப்பீட்டின்போது அரேபியர் அவர்தம் கோத்திரங்களை மையமகவே வைத்தே கணிக்கப்பட்டனர். பேபரிகள் தத்தம் கோத்திர அடிப்படையில் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படவில்லை. மாறாக  அரபுக் கோத்திரங்களைச் சார்ந்தவர்களாக , அக்கோத்திரங்களின் மக்களாகவே கருதப்பட்டுக் கணிப்பிடபட்டனர்.

இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்யத் தகுதி பெற்ற கோத்திர ஒன்றியத்தின் ஓரங்கமாக  பேர்பரி இன மக்கள் கருதப்படவில்லை. அதனால் அரபுகளுக்குக் கிடைத்த சமூக அந்தஸ்தோ மானிய நிதியோ அரபுகள் பெற்ற அளவில் பேபரி இனத்தினருக்குக் கிடைக்கவில்லை. கைப்பற்றப்பட்ட ஸ்பெய்னின் அரச உடைமையாக்கிய நிலங்களைப் பகிர்ந்தளிக்கும் போதும் அரபுகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. இதனால் செழிப்பான நிலங்கள் அரபுகளுக்குக் கிடைத்தன. இதனால் அரபு இன முஸ்லிம்களுக்கும் பேபர் இன முஸ்லிம்களுக்கும் இடையே மனக் கசப்பு தொன்ற வழி பிறந்தது.

முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சமூக உறவு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்த திம்மிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இருந்த உறவை நிகர்த்திருந்தது. எனினும் கி.பி. 713ல் மூஸா பின் நுஸைரின் மகனான தளபதி அப்துல் அஸீஸுக்கும் ஸ்பெய்னின் முர்ஸியாப் பிரதேச பரிபாலகரான தியடமிர் என்பவருக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் நியதிகளின்படி முஸ்லிம்களிடம் சரணடைந்த, கிறிஸ்தவப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. யூதர்கள் ரொட்ரிக்கின் ஆட்சியில் நசுக்கப்பட்டதால் அவர்கள் இஸ்லாமியப் படையெடுப்பின் போதும் அதன் பின்பும் முஸ்லிம்களுடன் நட்புறவு கொண்டிருந்தனர்.

கைப்பற்றப்பட்ட இத்தீவகற்பம் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஒரு பிரதேசமாக இணைத்துக் கொள்ளப்பட்டது. இத்தீவகற்பம் வட ஆபிரிக்காவுக்கு அருகே இருந்ததால் வட ஆபிரிக்காவைப் பரிபாலித்த கவர்னரின் பொறுப்பில் ஸ்பெய்ன் விடப்பட்டது. அதனால்தான் ஸ்பெய்னில் இருந்து கவர்னர் மூஸா திரும்பி வரும்போது தனது மகன் அப்துல் அஸீஸை அவர் ஸ்பெய்னின் கவர்னராக நியமித்தார். கி.பி. 716ல் இருந்து 756 வரியயான 40 வருட காலத்தில் ஸ்பெய்னில் 20 கவர்னர்கள் கடமையாற்றியுள்ளனர். இவர்களில் மூவர் மட்டுமே தலா  ஐந்தாண்டுகளுக்கு மேலாகப் பதவியில் இருந்தனர். வட ஆபிரிக்கத் தலை நகர் கைரவானில் இருந்தும் டமஸ்கஸில் இருந்தும் தூரமான இடத்தில் கடமையாற்றியதாலும், உடனுக்குடன் தொடர்பு கொள்ளும் வெகு சனத் தொடர்பு சாதனங்கள் இல்லாதிருந்ததாலும் இந்த கவர்னர்கள் பெரும்பாலும் சுதந்திரமாகவே செயற்பட்டனர். எனினும் சர்வாதிகாரிகள் போன்று இவர்கள் செயற்படாது முக்கிய அரபுக் கோத்திரத் தலைவர்களுடன் கலந்துரையாடியே முடிவுகளை எடுத்தனர்.

உமையா ஆட்சியின்போது ஸ்பெய்னை - தொலதோ, கிலஸியா, பார்ஸிலோனா, அந்தலூஸ் எனும் நான்கு மாகாணங்களாகப் பிரித்தே பரிபாலித்தனர். ஸ்பெய்னின் முதலாவது கவர்னரான அப்துல் அஸீஸ் இஸ்லாமிய சட்டங்களை அங்கு அமுல் செய்வதற்காகவும், அரபு - பேபர் இன முஸ்லிம்களிடையே சுமுகமான உறவைத் தோற்றுவிக்கும் முயற்சியின் முகமாக ஒரு சபையை நியமித்தார். இந்தவகையில் இஸ்லாத்தை மக்கள் வாழ்க்கையில் கொண்டுவரவும் இனங்களிக்கிடையே நல்லுறவை வளர்க்கவும் அவர் முயற்சித்தார். எனினும் அவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஸ்பெய்னின் கவர்னராக நியமிக்கப்பட்டிருந்த அப்துல் அஸீஸின் கொலையுடன் முஸ்லிம் இராணுவத்தின் போர் நடவடிக்கைகள் இடை நிறுத்தப்படும் வேளையில் ஸ்பெய்னின் வட புறத்திலிருந்த மலைப்பாங்கான ஒரு சிறு பிரதேசம் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பகுதிகளும் முஸ்லிம்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தன. ஸ்பெய்னையும் தென் பிரான்ஸையும் பிரிக்கின்ற பிரினீஸ் மலையைக் கடந்து பிரான்ஸுக்குள் நுழைய மூஸா பின் நுஸைர் விரும்பியிருந்தார் என்பர்.எனினும் அம்முயற்சியில் ஈடுபடக் கால அவகாசம் அவருக்குக் கிடைக்கவில்லை. அப்துல் அஸிஸின் அகால மரணமும் இம்முயற்சியை மேற்கொள்ள இடமளிக்கவில்லை.

ஸ்பெய்னின் கவர்னராகக் கடமையாற்றிய அப்துர்-ரஹ்மான் அல்-ஸகபி என்பவர் கி.பி. 717 - 718 காலப் பகுதியில்பிரனீஸ் மலையைக் கடந்து பிரான்ஸியப் பிரதேசத்துள் நுழைந்து அச்சுறுத்தும் வேலைகளை மேற்கொண்டார். அதன் பின் உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) காலத்தில் ஸ்பெய்னின் கவர்னராகக் கடமையாற்றிய அஸ்ஸ்ம்ஹ் பின் அல் மாலிக் என்பவர் அதனைத் தொடர்ந்தார். அவர் விஸிகொத் ஆட்சியாளைகளுக்குத் திறை செலுத்தி வந்த செப்டிமேனியாப் பிரதேசத்தைக் கைப்பற்றினார். அதைத் தொடர்ந்து கி.பி. 722ல் தென் பிரான்ஸில் "டவ்லோஸ்" (TOULOUSE)  எனுமிடத்தில் "அகுடயினின்" ஆட்சியாளனான "கியுட்ஸ் பிரபு" வுடன் ஏற்பட்ட போரில் தளபதியும் கவனருமான அஸ்ஸம்ஹ் இறையடி எய்தியதால் படை "செப்டிமோனாவை" வந்தடைந்தது. ஐரோப்பிய மண்ணில் முஸ்லிம்கள் கண்ட முதல் தோல்வி இதுவே. இதுமுதல் ஒரு தசாப்தம் வரை முஸ்லிம்கள் படை நடவடிக்கை எதனையும் வடக்கை நோக்கி மேற்கொள்ளவில்லை. இப்பத்து வருட காலப் பகுதியில் ஸ்பெய்னில் குடியறியிருந்த பல்லின மக்களுக்கிடையே கிளர்ச்சிகள் தோன்றின. இதனை மட்ட்டுப்படுத்துவதிலேயே  கவர்னர்களின் காலம் கழிந்தது. இத்தகைய அமைதியற்ற ஒரு சூழலில்தான் அப்துர்-ரஹ்மான் பின் அப்துல்லாஹ் அல்-ஃகாபிகீ என்பவர் கி.பி. 731.ஏப்ரில் மாதத்தில் ஸ்பெய்னுக்கு கவர்னராக நியமிக்கப் பட்டார்.

அல்-ஃகாபிகீ ஒரு "தாபிஈ". யமனியக் கோத்திரஹ்தைச் சேர்ந்தவர். ஒரு சிறந்த வீரர்.; சிறந்த தளபதி; ஒரு சிறந்த நிருவாகி; சமூக சீர்திருத்தத்தை விரும்பிய ஒரும் கவர்னர். பொறுமைக் குணமும் நீதி வழங்கும் பண்பும் தக்வாவும் உடையவர். இதனால் இராணுவ வீரர்களும் ஸ்பானியக் குடிமகளும் அவரது நியமனத்தால் மனமகிழ்ந்தனர். தனது பரிபாலனத்தின் போது வட் -தென் அரபுக் கோத்திரங்களிக்கிடையே (முழரீ - ஹிம்யாரீ)ஓர் இணக்கப்பாட்டைத் தோற்றுவித்தார்.  தகுதி உடைய்வர்களையே பதவியில் அமர்த்தினார். வரிகளை மறுசீரமைத்து திம்மீக்களின் குறைபாடுகளைக் கேட்டறிந்து களைந்தார்.

அப்துர் ரஹ்மான் ஸ்பெய்னின் கவர்னராக நியமிக்கப்பட்டபோது பிரனீஸ் பகுதிக்கும் ஸப்டிமினியா நகருக்கும் பரிபாலகராக உஸ்மான் பின் அபீ நிஸ்ஆ என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் பேபர் இனத்தவர். தாரிக் பின் ஸியதின் படையுடன் வந்த தளபதிகளில் ஒருவர். பேபர் இனத்தவரின் போராட்டத்தால் கைப்பற்றப்பட்ட ஸ்பெய்னின் வளங்களை நியாயமற்ற முறையில் அரபுகள் அனுபவிப்பதாகக் கருதினார். ஸ்பெய்னின் கவர்னர் பதவி தனகுக் கிடைக்கவேண்டுமென்று எதிர்பார்த்த ஒரு சந்தர்ப்பத்தில்தான் அல் ஃகாபிகீ கவர்னராக நியமிகப்பட்டார். அதனால் வெறுப்படைந்து கிளர்ச்சி செய்ய வாய்ப்பொன்றை அவர் எர்திர்பார்த்திருந்தார். பிரான்ஸின் "அகியுவண்டைன்" பிரதேச ஆளுனரான இயூடூ பிரபுவுடன் ஒரு ரகசிய உடன்படிக்கை செய்து கொண்டார். ஸ்பெய்னின் முஸ்லிம் ஆட்சிக்கு எதிராக இப்னு அபீ நிஸ்ஆ கிளர்ச்சி செய்வதற்கு இயூடூ உதவி செய்ய வேண்டும் என்பதே இவ்வுடன்படிக்கையின் சாராம்சமாகும். இயூடூவின் மகளையும் இப்னு அபீ நிஸ்ஆ திருமணம் செய்து உறவை மேலும் வலுப்படுத்திக்கொண்டார். இதனை அறிந்த அல்-ஃகாபிகீ, அபீ நிஸ்ஆவுக்கு எதிராக ஒரு படையை அனுப்பினார். இப்போராட்டத்தில் அபீ நிஸ்ஆ கொலை செய்யப்பட்டார். 

வட பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்திய பின்  அல்-ஃகாபிகீ  பெரும் படையொன்றைத் திரட்டிக்கொண்டு பிரான்ஸின் மத்திய பகுதியான "கோல்" பிரதேசத்துக்கு கி.பி. 732ல்  சென்றார். இப்படை தான் செல்லும் வழியில் பல வெற்றிகளைப் பெற்றுக்கொண்டு ஏராளமான  ஃகனீமத் பொருட்களுடன் "டூவர்ஸ்" எனும் நகரை  அடைந்தது. இப்படையை எதிர்கொள்ள முஸ்லிம் படை வீரர்களை விட பன்மடங்கு அதிகமான போர் வீரர்களுடன் பிரான்ஸிய மன்னன்" கார்ள் மார்டல்" களத்துக்கு வந்தான். பல மாதங்கள் நீடித்த இராணுவப் பிரயாணத்தால் முஸ்லிம் வீரர்கள் களைப்படைந்திருந்தனர். இப்படையில் "பேபர்" இனத்து வீரர்களே அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களிடையே அலுப்புத் தோன்றவே, கைபற்றிய  ஃகனீமத் பொருட்களோடு ஊருக்கு மீள வேண்டுமென்ற எண்ணம் துளிர்த்திருந்தது. அவர்கள் சுமந்து சென்ற இந்த கனீமத் பொருட்கள் அவர்களுக்கு மத்தியில் குழப்பம் தோன்றவும் காரணமாக இருந்தது. இந்நிலையை  ஃகாபிகீ  நன்கு உணர்ந்திருந்தார். ஆதலால்  ஃகனீமத்துப் பொருட்களை கைவிட்டுச் செல்வது நன்மை தரும் என்று கருதினார். எனினும் இராணுவ வீரர்கள் கிளர்ச்சி செய்து படையை விட்டு நீங்கிவிடடக்கூடும் எனும் பயத்தில் அவர் அதனை வலியுறுத்தவில்லை. இப்படையெடுப்பின்போது கைப்பற்றப்பட்ட நகர்களின் பாதுகாப்புக்காக படை வீரர்கள் சிலரை நிறுத்தவேண்டியிருந்ததால் முஸ்லிம் படை வீரர்களின் எண்ணிக்கையும் குறைந்திருந்தது.

இரு தரப்பினரிடையே கி.பி. 732ல் ஆரம்பித்த இப்போர் 9 தினங்கள் வரை நீடித்தது. இறுதி நாளில் பிரான்ஸியப் படை களைப்படைந்து தோல்வியைத் தழுவ கூடிய நிலை தோன்றியது. எனினும் அவர்களில் ஒரு பிரிவினர் முஸ்லிம்கள் பாதுகாப்பாக வைத்திருந்த  ஃகனீமத்துப் பொருட்கள் அடங்கிய பண்டகசாலைப் பகுதியைத் தாக்க முயற்சித்தனர். முஸ்லிம் படை வீரர்களில் ஒருவர் , "எதிரிகள் பண்டகசாலையை நெருங்கிவிட்டனர்" என்று குரல் கொடுத்ததால் முஸ்லிம் படை வீரர்களில் பெரும் பகுதியினர் தளபதியின் கட்டளையில்லாமலேயே  ஃகனீமத்துப் பொருட்களைப் பாதுகாக்க முனைந்தனர். இதனால் முஸ்லிம் படையின் ஒழுங்கு குலைந்தது. இதனை உணர்ந்த தளபதி  ஃகாபிகீ  கள நிலவரத்தைச் சீராக்கக் கருதி முன்புறத்தே ஓடியாடி நடவ்டிக்கை எடுக்கும் போது எதிரிகளின் அம்புகளுக்கு இலக்காகி உயிர் நீத்தார். இதனால் முஸ்லிம் படை பேரிழப்பை எதிர் கொண்டது. இருப்பினும் இரவுவரை  போரைத் தொடர்ந்து நடாத்தி தோல்வியில் இருந்து தன்னைக் காத்துக் கொண்டது. இரவில் கலந்துரையாடிய தலைவர்கள் போரில் வெற்றி கொள்ளும் வாய்ப்பு இல்லை என்று தீர்மானித்தனர். அன்றைய தினம் இரவே, சேமித்த ஃகனீமத்துப் பொருட்களை விட்டுவிட்டு படை செப்டிமேனியாவுக்குப் பின் வாங்கியது. படை பின்வாங்கியதை மறுதினம் காலை அறிந்து கொண்ட போதும் முஸ்லிம் படையைப் பின் தொடர்ந்து துரத்த முன்வரவில்லை. இந்நிலை குறித்து ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடும்போது, இப்படை படுதோல்வியடைந்திருந்தால் இறுதிப் படை அவர்களைத் தொடர்ந்து துறத்தி அழித்திருப்பர் எனக் குறிப்பிடுகின்றனர்.

ஐரோப்பிய வரலாற்றாசிரியர்களால் "டுவரிஸ் யுத்தம்" (Battle of Tours) என்றழைக்கப்படும் இந்த யுத்தத்தை அரபு வரலாற்றாசிரியர்கள் "பிலாதீ அஷ்-ஷுஹதா" என்றழைக்கின்றனர். போர் உச்ச நிலையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது ஃகனீமத்துப் பொருட்களைப் பாதுகாப்பதில் முஸ்லிம் வீரர்களின் கவனம் திருப்பப் பட்டமையே முஸ்லிம்களின் வீழ்ச்சிக்கான உடனடிக் காரணமாய் அமைந்தது. உஹதுப் போரின்போதும் ஃகனீமத்துப் பொருட்கள் மீது முஸ்லிம்களின் கவனம் திரும்பியமையே அப்போரின் தோல்விக்கும் காரணமய் அமைந்தது. பொருள் மீது கொண்ட ஆசை இவ்விரு போரிலும் பொருட்களை மட்டுமல்லாது முஸ்லிம் வீரர்கள் பலரையும் இழக்க வழிகோலியது. டுவரிஸ் யுத்தத்தில் முஸ்லிம்கள் ஏராளமான  வீரர்களை களத்தில் இழந்ததோடு கடந்த பல மாதங்களாகச் சேகரித்து வைத்திருந்த அனைத்து ஃகனீமத்துப் பொருட்களையும்கூட இழந்தனர்.

தற்கால நவீன விமர்சகர்கள் இஸ்லாத்துக்கும் கிறிஸ்தவத்துக்கும் இடையில் ஏற்பட்ட இப்போராட்டத்துக்குபெரு முக்கியத்துவம் கொடுப்பர். வரலாற்றாசிரியரான எட்வட் கிபன், டுவரிஸ் போர்க் களம்பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

"இப்போர் குர்ஆனின் சிவில் சட்டத்தின் ஆதிக்கத்தில் இருந்தும் குர்ஆனிய சமய சிந்தனையின் பிடியில் இருந்தும் எமது பிரித்தானிய முன்னோர்களையும் அவர்களின் அயல் நாட்டவர்களையும்  காப்பாற்றியது. ரோம் நகரின் புகழையும் காத்தது. கொன்ஸ்தாந்தி நோபிளின் வீழ்ச்சியையும் பிற்போட்டது."

ஸேர் எட்வட் கிரேஸி பிவருமாறு குறிப்பிடுகிறார்.
"மேற்கைரோப்பா மீதான அரேபியாவின் முற்றுகையை டுவர்ஸ் யுத்தம் தடுத்து நிறுத்தியது. இஸ்லாத்தின் மேலாதிக்கத்தில்ம் இருந்து கிறிஸ்தவத்தைக் காத்தது. நவீன நாகரிகத்துக்கு வித்திட்ட பண்டைய வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாத்தது. செமித்தியக் குடும்பங்கள் மீதான ஐரோப்பியச்ன் செல்வாக்கை மீண்டும் நிலை நாட்டியது."

"இப்போர் குறிப்பிடத்தக்க எந்த முடிவையும் பெற்றுக் கொடுக்கவில்லை என்றும், முஸ்லிம்களின் படையெடுப்பு உத்வேகத்தை அது மட்டுப்படுத்தியதாயினும் முஸ்லிம்களின் ஊடுருவல் தொடர்ந்தும் பிரனீஸ் மலைத் தொடருக்கு அப்பால் இடப்பெற்றது என்றும், கி.பி. 734ல் முஸ்லிம்கள் "அவிகினன்" எனும் பிரதேசத்தைக் கைப்பற்றினர் என்றும்"  வரலாற்றாசிரியர் ஹிட்டி தனது அரேபியர் வரலாறு எனும் நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தளபதி அப்துர்-ரஹ்மான் ஃகாபிகீயின் மரணம் முஸ்லிம்கள் எதிர்கொண்ட ஒரு பேரிழப்பாகும். அவர் அந்தலூஸில் கடமையாற்றிய மிகச் சிறந்த ஒரு ராஜ தந்திரியும் சிறந்த நிருவாகியுமாவார். நிர்வாகத் துறையில் அதுகாலவரை நிலவிய குறைபாடுகளை இனம் கண்டு அவற்றை நிவிர்த்தி செய்தார். பிரான்ஸின் மீதான படையெடுப்பையும் திட்டமிட்டே மேற்கொண்டார். ஸ்பெய்னில் முஸ்லிம் குடிமக்களிடையே நிலவிய இன, கோத்திர ரீதியான பிளவுகளை நீக்கி ஒன்றுபடுத்தும் ஆற்றலும் திறமையும் அவருக்கு இருந்தன. அத்தகைய ஒருவரைப் போர்க்களத்தில் இழந்தமை பேரிழப்பாகும்.

கி.பி. 732 - 755க்கு இடைப்பட்ட காலப் பகுதியில்  முஸ்லிம் ஸ்பெய்னின் வரலறு இன, கோத்திர ரீதியான சிந்தனையினடியாக எழுந்த செயற்பாட்டின் வெளிப்பாடாகவே இருந்தது. ஏற்கனவே அரேபியாவில் அரேபியர் ; வட அரேபியர் (முழாரிகள்), தென் அரேபியர் (யெமனி - ஹிம்யாரிகள்) எனும் இரு பெரும் கோத்திரங்களாகப் பீந்திருந்தனர். இவ்விரு கோத்திரங்களிலும் மேலும் பல உப கிளைப் பிரிவுகள் இருந்தன. கோத்திர ரீதியான இவ்வேறுபாடு முஸ்லிம் ஆட்சிக்குட்பட்டிருந்த வட ஆபிரிக்கப் பிரதேசத்திலும் செல்வாக்குப் பெற்றிருந்தது. இக்காலப் பகுதியில் தென் அரேபியக் கோத்திரத்தார் ஷீஆ  சிந்தனை சார்பாகவும் வட அரேபியக் கோத்திரங்கள் அஹ்லுஸ்ஸுன்னா சிந்தனை சார்பாகவும் செயற்பட்டனர். வட ஆபிரிக்கப் பிரதேசத்திலும் ஸ்பெய்னிலும் வாழ்ந்த பேபர் இனத்தவர்கள் காரிஜ்களின் கருத்துக்களால் கவரப்பட்டிருந்தனர். இவர்கள் உமையாக்களுகும் அப்பாஸியருக்கும் எதிராகவே செயற்பட்டனர். முஸ்லிம்கள் ஸிரியாவைக் கைப்பற்றுவதற்கு முன்பு அங்கு குடியேறியிருந்தனர். இவர்கள் யமனிகள் என்று அழைக்கப்பட்டனர். கல்பீ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். இஸ்லாமியப் படையெடுப்புடன் ஸிரியாவில் குடியேறிய அரேபியர்கள் தென் அரேபியர் பிரிவில் அடங்கிய கைஸ் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். கைஸ் கோத்திரத்தவர் வட அரேபியர் பிரிவில் அடங்கும் முழாரிகள் வழிவந்தவர்களாவர். இவர்களுக்கிடையே ஏற்பட்ட சமூக பொருளாதார நலங்கள் அவர்களிடையே பகைமையும் போராட்டமும் வளரத் துணையாகின.

வட ஆபிரிக்காவுக்கும் ஸ்பெய்னுக்கும் இடையே பல்வேறு துறைகளில் நெருக்கமான உறவு இருந்தது இதனால் வட ஆபிரிக்காவில் இடம்பெறும் நிகழ்வும், சிந்தனைகளும் ஸ்பெய்னிலும் பிரதிபலித்தன. 

வட ஆபிரிக்காவில் பேபர்கள் கி.பி. 740ல் கிளர்ச்சி செய்தனர். அரபுப் பரிபாலகரிடமிருந்து ஸியூட்டாப் பிரதேசத்தையும் அவர்கள் கைப்பற்றிக்கொண்டனர். வட ஆபிரிக்காவில் எழுந்த இந்த பேர்பரிக் கிளர்ச்சி ஸ்பெய்னிலும் பேபர்கள் கிளர்ச்சி செய்யத் தூண்டியது. தாரிக்கின் தலைமையில் பேர்பர் இனத்தினரின் கடும் போராட்டத்தால் ஸ்பெய்ன் பெற்றுக்கொண்ட பயனை அரேபியரே பெருமளவில் அனுபவித்தனர். அவர்கள் பெற்றுக் கொண்டதன் பின் எஞ்சியவற்றையே தமக்குத் தருகின்றனர். அரேபியருக்கு வழங்கப் பட்டதைப் போன்ற நல்ல விளைச்சல் தரும் நன் செய் நிலங்களை நிகர்த்த நிலங்கள் தமக்கு வழங்கப்படவில்லை; இஸ்லாம் வழங்கிய சமத்துவத்தை அரேபியர் தமக்கு அளிக்கவில்லை என்ற மனக் குறைகள் பேர்பர் இனத்தாரிடையே பரவலாக இருந்ததால் இக்கிளர்ச்சிக்கு பேர்பர்கள் முழு ஆதரவு வழங்கினர். இதனால் வட ஆபிரிக்காவில் போன்று ஸ்பெய்னிலும் உமையா அரசுக்கு எதிரான கிளர்ச்சி வலுவடைந்தது. இதனால் உமையா கலீபா ஸிரியாவைச் சேர்ந்த 21 000 அரபு வீரர்களைக் கொண்ட ஒரு படையை வட ஆபிரிக்காவுக்கு அனுப்பி கிளர்ச்சியைக் கட்டுப்படுத்தினார். இவர்களில் 7000 பேர் கொண்ட ஒரு படைப் பிரிவு பல்ஜீ இப்னு பிஷ்ர் அல் குஷைரீ என்பவரின் தலைமையில் ஸ்பெனுக்கு அனுப்பப்பட்டது.

அந்தலூஸின் அமீராக அக்காலப் ப்குதியில் கடமையாற்றிய அப்துல் மலிக் ஸிரியா வாசிகளான பால்ஜியியின் தலைமையிலான படைப்பிரிவு ஸ்பெய்னுக்கு வருவதற்கு விரும்பவில்லை. ஆயினும் பேர்பரிகளின் கிளர்ச்சியை அடக்க வேறு வழியிருக்கவில்லை என்பதைக் கண்டபோது, தம் பணியை முடித்ததும் திரும்பிச் செல்லவேண்டும் என்ற நிபந்தனையை உட்படுத்தி ஓர் உடன்படிக்கைக்கு வந்த பின்பே பால்ஜியின் தலைமையிலான படை ஸ்பெய்னுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டது.


பால்ஜியின் தலைமையிலான படைப்பிரிவு ஸ்பெய்னில் பேர்பர்களின் கிளர்ச்சியை முற்றாக நசுக்கி அமைதியை நிலை நாட்டியது. ஆயினும் அப்படை ஸ்பெய்னை விட்டு நீங்க மறுத்தது. இதனால் முன்பு குடியேறியிருந்த அரபுகளுக்கும் பால்ஜியின் தலைமையில் இயங்கிய அரபுகளுக்கும் இடையே நிரந்தரப் பகை மூண்டது. இப்போராட்டத்தில் கல்பீ கோத்திரத்தைச் சேர்ந்த அப்துல் மலிக் கொலை செய்யப்பட்டார். கைஸ் கோத்திரத்தவரான பல்ஜி கொர்டோவாவைக் கைப்பற்றித் தனது ஆதிக்கத்தை நிறுவிக்கொண்டார். இதனால் கி.பி. 742ல் இரு அரபுக் கோத்திரங்களுக்குமிடையில் சண்டை மூண்டது. உமையா ஆதரவாளரான பால்ஜியின் ஸிரியப் படை வீரர்கள் இப்போராட்டத்தில் வெற்றி பெற்றபோதும் பால்ஜி களத்தில் இறந்துவிட்டார்.

ஸ்பெய்னில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலையைக் கருத்திற்கொண்டு உமையா ஆட்சியாளரான ஹிசாம் திறமை மிக்க ஒரு கவனரை ஸ்பெய்னுக்கு நியமித்தார். புதிய க்வர்னர் அரபுக் கோத்திரங்களுக்கிடையிலான இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரக் கருதி   ஒவ்வொரு கோத்திரத்தாரையும் மிகத் தூரத்தில் இருக்கக்கூடிய விதமாக வெவ்வேறு இடங்களில் குடியேற்றினார். ஸிரியாவின் படை வீரர்களிடையே இருந்த எகிப்தியர்களை முர்ஸியா நகரிலும, பலஸ்தீன் வீரர்களை ஸிடோன் நகரிலும், டமஸ்கஸ் வீரர்களை கிரானாடாவிலும் குடியேற்றினார். இதனால் அவர்களிடையே இருந்த குழப்ப நிலை ஓரளவு தணிந்தது. எனினும் வட, தென் அரேபியருக்கிடையேயான முறுகல் நிலை தொடர்ந்தும் நீடித்தது. இதனைத் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு வருடத்துக்கு ஒருவராக இரு கோத்திரங்களும் மாறி மாறி கவர்னர் பதவி வகிப்பதற்கான ஓர் உடன்பாடு ஏற்பட்டது. அதற்கிணங்க வட அரபுக் கோத்திரத்தைச் சேர்ந்த யூசுப் பின் அப்துர் ரஹ்மான் அல் பிஹ்ரி கி.பி. 746ல் கலீபா இரண்டாம் மர்வானினால் நியமிக்கப்பட்டார். இவ்வுடடன்பாட்டுக்கு அமைய வருட முடிவில் தென் அரேபியருக்கு இடம்கொடுக்கும் வகையில் யூசுப் அப்துர் ரஹ்மான் பதவியில் இருந்து நீங்கியிருக்கவேண்டும். ஆயினும் அவர் பதவியில் இருந்து நீங்காது கி.பி. 755வரை தன் படைபலத்தின் துணையுடன் கவர்னர் பதவியை வகித்தார்.

 
முஸ்லிம் ஸ்பெய்ன் கலீபாக்களின் சுருக்க வரலாறு

முதலாம் அப்துர் ரஹ்மான் (கி.பி. 756 -788)

இவர் உமையா கலீபா முஆவியாவின் மகனாவார். தனது ஐந்தாம் வயதில் தந்தையை இழந்தார். அதன்பின் தன்னை வளர்த்த கலீபா ஹிஷாமைத் தனது 12வது வயதில் இழந்தார். எனினும் ஆட்சியாளன் ஒருவனுக்கு இருக்கவேண்டிய பண்புகள் பலவற்றை அவர் கொண்டிருந்தார். தீய நடத்தைகளில் இருந்து விலகியிருந்தார். சமய அறிஞ்சர்களுடன் உற்வாடி சமய சிந்தனைகளையும் வளர்த்துக்கொண்டார். இளமையிலேயே போர்ப் பயிற்சியையும் பெற்றுக் கொண்டிருந்தார். அபாஸியர் உமையாக்களிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றும்போது அப்துர் ரஹ்மான் 20 வயது வாலிபராக இருந்தார்.

உமையா அரச குடும்பத்தினரை அப்பாஸிய கலீபா அஸ்ஸப்பாஹ் விருந்துக்கழைத்துப் படுகொலை செய்த தினத்தில் இவர் யூப்பிரடீஸ் நதிக்கருகே இருந்த தனது பண்ணைக்குச் சென்றிருந்ததால் படுகொலையில் இருந்து தப்பினார். அப்பாஸியரின் கொலை முயற்சியில் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தலை மறைவானார். பலஸ்தீன், எகிப்து நகர்களூடாக வட ஆபிரிக்காவின் சியடா பிரதேசத்தைச் சென்றடைந்தார். அப்துர் ரஹ்மானின் தாய் பர்பரி இனத்தைச் சேர்ந்தவராவார். அப்பெண்ணின் கோத்திரமான பனூ நபூசாக் கோத்திரத்தவரே ஸியூட்டாப் பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்தனர். அதனால் தம்மிடம் அபயம் தேடி வந்த அப்துர் ரஹ்மானுக்கு அவர்கள் பூரண ஆதரவு நல்கினர்.

வட ஆபிரிக்கப் பிரதேசத்தின் அரசியல் நிலவரங்களை அங்கு வாழ்ந்த காலப் பகுதியில் நங்கு அறிந்து கொண்டார். வட ஆபிரிக்கப் பிரதேசங்களைப் பரிபாலித்த அப்பாஸிய கவர்னரிடமிருந்து அதிகாரத்தைப் பறித்தெடுப்பது சிரமம் என்பதை விளங்கிக் கொண்டார். அதனால் ஸியூட்டாவுக்கு வடக்கே இருந்த முஸ்லிம் ஸ்பெய்ன் மீது கவனத்தைச் செலுத்தினார்.

உமையா ஆட்சியின்போதே இனரீதியான சிந்தனை ஸ்பெய்ன் அரசியலில் செல்வாக்குச் செலுத்தியது. அரேபியர், பேர்பர், முவல்லதூன்(ஸ்பானிய சுதேச முஸ்லிம்கள்), மொஸராபிய்யூன் ( அரபு மயமான கிறிஸ்தவர்கள்) பொன்ற குழுக்களின் செல்வாக்கு அதன் அரசியலில் நன்கு புலப்பட்டது. இவர்களில் எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருந்தபோதும் அரசியல் ரீதியாகப் ப்ரும் செல்வாக்குச் செலுத்தியவர்கள் அரபுகளாவர். இவர்கள்  வட ( கைஸ் கோத்திரத்தவர்), தென் (கல்பீ கோத்திரத்தவர்) அரேபியர் என இரு பெரும் பிரிவினராகி அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்றப் போராடினர். இவர்களிடையே சமாதானத்தை ஏற்படுத்த உமையா கலீபாவான இரண்டாம் மர்வான் கி.பி. 746ல் ஓர் உடன்பாட்டை ஏற்படுத்தினார். அதன்படி இவ்விரு கோத்திரங்களும் மாற் மாறி வருடத்துக்கொருமுறை கவர்னர் பதவியை வகிக்கவேண்டும்.  கைஸ் கோத்திரத்தவரான யூசுப்  இவ்வுடன்படிகையை மீறித் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்தார். இதனால் வட - தென் அரபுப் போராட்டம் நீடித்தது. அரபு மக்களின் கோத்திர உணர்வு பேர்பர் இனத்தவரைப் பெரிதும் பாதித்தது. எண்ணிக்கையில் கூடியவர்களாக பேர்பர்கள் அரேபியரை வெறுத்தனர்.

இவ்வாறான இன, கோத்திர மையமான அரசியல் சிந்தனை காரண்மாக ஏற்பட்ட கலவரங்களை அடக்குவதிலேயே கவர்னர் யூசுபின் காலம் கழிந்தது. இச்சூழலில்தான் அப்பாஸியர் உமையாக்களை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றினர். 

அப்பாஸியர் முஸ்லிம் ஸ்பெய்னைக் கைப்பற்றுகின்ற காலப் பகுதியில் ஸ்பெய்ன் ஐந்து முக்கிய மாகாணங்களாக - பரிபாலனப் பிரதேசங்களாக ப் பிரிக்கப்பட்டிருந்தது.  அவை அந்தலூஸ், தொலதோ, மேரிடா, ஸாகோஸா, அர்பேர்னியா என்பனவாகும். ஸ்பெய்னின் தென் பகுதியை அந்தலூஸ் மாகாணம் உள்ளடக்கியிருந்தது. கொர்டோவா, ஸெவில்லி, ஸிடோனியா, கர்மோனா, மலாகா, ஜல்பிரா, ஜீன் எனும் முக்கிய நகர்கள் இம்மாகாணத்தைச் சேர்ந்தனவாகும். இத்தென் மாகாணத்தில்தான் ஸிரியாவைச் சேர்ந்த அரேபியர் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்தனர்.

அப்பாஸியர்  ஆட்சியைக் கைப்பற்றியதும் உமையா சார்பான அரேபியர்  ஸ்பெய்னின் எல்லாப் பிரதேசங்களிலும் தொல்லைக்குள்ளாக்கப்பட்டனர். உமையாக்களின் நலன்களைப் பாதுகாப்பவர்களாகச் செயற்பட்ட அபூ உஸ்மான் உபைதுல்லாஹ், அவரது மருமகனான அப்துல்லாஹ் பின் காலித் எனும் இருவரும் அந்தலூஸிய மாகாணத்தின் ஜல்பிரா நகரின் பரிபாலகர்களாக இருந்தனர். ஸிரியா வாசிகளே இந்த நகரின் பெரும்பான்மைக் குடிகளாவர். 

ஸியூட்டாவில் அடைக்கலம் புகுந்திருந்த அப்துர்-ரஹ்மான் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் அரசியல் நிலையை நன்கு விளங்கியிருந்தார். தனது குடும்ப ஆட்சியின் கீழ் இருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யம் பறிபோயிருந்ததையும், மீட்டெடுக்க முடியாதவாறு கிழக்குப் பிரதேசத்தில் அப்பாஸியரிம்  ஆதிக்கம் வேரூன்றி இருப்பதையும், மேற்கேயுள்ள வட ஆபிரிக்கப் பிரதேசத்தில்தானும் அப்பாஸியர் ஆட்சி மேலோங்கி நிற்பதையும் அவதானித்தார். தனக்குச் சாதகமான சூழல் ஸ்பெய்னில் மட்டுமே இருப்பதைக் கண்டுகொண்டார். ஸ்பெய்னில் நீண்டகாலமாக இருந்துவரும்  உள்-நாட்டுக் கலவரத்தால் அதன் பரிபாலகர்கள் பலவீனமடைந்திருப்பதும், கலவரங்களை அடக்கி அமைதியை நிலை நாட்டக்கூடிய ஆளுமை மிக்க தலைவர்கள் எவரும் இல்லாதிருப்பதும், ஸ்பெய்னில் வாழ்ந்த ஸிரியா வாசிகள் அரேபியரதும் உமையாக் கோத்திரப் பிரமுகர்களதும் ஆதரவைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பதும் தனக்கான சாதகங்கள் எனக் கருதினார். தனது ஆதரவாளர்கள் ஜிப்ரோல்டர் நீரிணைக்கு அருகேயுள்ள அந்தலூஸ் மாகாணத்தில் இருப்பது தடையின்றி ஸ்பெய்னைச் சென்றடைய உதவியாக அமையும் என்பதனையும் விளங்கியிருந்தார். அதனால் காலம் தாழ்த்தாது ஸ்பெய்னில் தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளக் கருதித் தனது விசுவாசம் மிக்க அடிமையாகிய பத்ர் என்பவரிடம் கடிதங்களைக் கொடுத்தனுப்பினார். உமையாக் கோத்திரப் பிரமுகர்களுக்கு இக்கடிதத்தைக் கையளிக்குமாறு  பத்ருக்கு ஆலோசனையும் வழங்கியிருந்தார்.  அக்கடிதத்தில், உமையாக் கோத்திரத்தார் படுகொலை செய்யப்பட்டமை, தான் உயிருக்குப் பயந்து ஓடிவந்தபோது எதிர் கொண்ட பயங்கர அனுபவங்கள், ஸ்பெய்னுக்குத் தான் வந்தால் கவர்னர் யூசுபினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களுக்கு தான் அடையும் அச்சம், கலீபா ஹிசாம்மின் பேரர் என்ற வகையில் ஸ்பெய்னின் ஆட்சியில் தனக்குள்ள உரிமை என்பன பற்றியெல்லாம் எழுதிவிட்டு, உங்களிடம் மட்டுமே தான் ஏதேனும் உதவியை எதிர்பார்க்க முடியும் என்றும் அவ்வாறு உதவ முன்வருவதாயின் அதுபற்றித் தனக்கு அறியத்தருமாறும் கேட்டுக்கொண்டிருந்தார்.

பத்ர்  உமையாக் கோத்திரத்தின் முன்னால் மவாலிக்களாகவும் தற்போதைய ஜல்பிரா, ஜீன் பிரதேச பரிபாலகர்களாகவும் இருந்த அபூ உஸ்மான் உபைதுல்லாஹ், அவரது மருமகன் அப்துல்லாஹ் பின் பாலித் எனும் இருவரையும் சந்தித்துக் கடிதங்களை வழங்கினார். அவர்கள் ஸிரியா வாசிகளையும் உமையாக் கோத்திரத்தாரையும் சந்தித்துக் கலந்துரையாடி அவர்களின் ஆதரவையும் திரட்டிக்கொண்டார். இவ்வாதரவாளர்களுள் 11 பேர் இப்னு அல்கமா என்பவரின் தலைமையில் ஸிரியாவுக்குச் சென்று அப்துர்-ரஹ்மானை 755.08.14 ம் திகதி ஸ்பெய்னுக்கு அழைத்து வந்தனர். தென் ஸ்பெய்னில் ஸிரியா வாசிகள் அதிக எண்ணிக்கையில் இருந்ததால் ஸ்பெய்ன் வருகையால் அவர் பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டி ஏற்படவில்லை. அப்துர் ரஹ்மானின் வருகை பற்றி அறிந்த கவர்னர் யூசுப் அவரைத் தனக்குச் சார்பானவனவராகக்கருதி ஸ்பெய்னின் பெருந்தோட்டங்கள் சிலவற்றையும் வழங்கித் தனது மகளையும் விவாகம் செய்து தருவதாக ஆசை காட்டினார். அப்துர் ரஹ்மான் ஒரு செல்வந்தன் என்ற அந்தஸ்திலன்றி ஆட்சியாளன் என்ற நிலையில் வாழவே விரும்பியதால் இவ்வேண்டுகோளை நிராகரித்தார். அதனால் கவர்னர் யூசுப் அப்துர் ரஹ்மானுக்கெதிராகப் படையெடுக்கத் தீர்மானித்தார். இச்சந்தர்பத்தில் கவர்னர் யூசுப் வடக்கே கிளர்ச்சியை அடக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். மழைகாலமாக இருந்ததால் படையைத் தெற்கு நோக்கி அவசரமாக எடுத்துவர முடியவில்லை. யூசுபின் படை தெற்கே எதிரியை  எதிர்கொள்வதற்கு ஏழு மாதங்கள் கழிந்தன. இக்காலப் பகுதியைத் தன்னைப் பலப்படுத்திக்கொள்ள  அப்துர் ரஹ்மான் பயன்படுத்தினார்.  அந்தலூஸ் மாகாணத்தின் முக்கிய நகர்களான ஜீன். ஆர்சிடோனா, சிடோனியா, ஸிவெல்லி முதலாம் நகர்களுக்குச் சென்று ஆதரவாளர்களைத் திரட்டிக்கொண்டார். இருபடைகளும் கி.பி. 756 மே மாதம் 15ம் திகதி சந்தித்தன. கடும் போரின் பின் அப்துர் ரஹ்மான் வெற்றிவாகை சூடி கொர்டோவாவைக் கைப்பற்றினார். கொர்டோவா மஸ்ஜிதில் வைத்து அப்துர் ரஹ்மான் அமீராகப் பிரகடனப்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு வயது 26.

அமீராக அப்துர் ரஹ்மான் பதவியேற்றபோதும் எதிரிகளின் அச்சுறுத்தலில் இருந்து அவர் விடுதலை பெற்றிருக்கவில்ல. முன்னாள் கவர்னர் யூசுப் ஒரு படையைத் திரட்டிக்கொண்டு கொர்டோவாவுக்கு வந்தார். அவரை எதிர்கொள்வதற்காக அப்துர் ரஹ்மான் வெளியே சென்ற சந்தர்ப்பத்தில் யூசுபின் மகன் அபூஸைத் ஒரு படையுடன்  வந்து கொர்டோவாவைத் தாக்கினார். இதனை அறிந்து துரித கதியில் அப்துர் ரஹ்மான் கொர்டோவாவுக்கு வந்தார். இதனால் அபூஸைத் பின்வாங்கி ஓடிவிட்டார். அப்துர் ரஹ்மான் கொர்டோவாவைக் காத்துக்கொண்டதால் கவர்னர் யூசுப் தைரியமிழந்து அப்துர் ரஹ்மானுடன் சமாதானம் செய்துகொண்டார். அதன்படி யூசுபின் கடமைகள் கையளிகப்பட்டதுடன் அவர் கொர்டோவாவில் வாழவும் அனுமதிக்கப்பட்டார். அப்துர் ரஹ்மானின் அனுமதியில்லாது கொர்டோவாவை விட்டு வெளியே செல்லாதிருப்பதற்கும் தனது மகனைப் பணயக் கைதியாகக் கையளிப்பதற்கும் யூசுப் இணங்கினார். இந்நிகழ்வுக்கு இரு வருடங்களின் பின் யூசுப் மெரிடாவுக்குத் தப்பியோடி  ஒரு படையைத் திரட்டிக்கொண்டு கொர்டோவாவை நோக்கி வரும் வழியில் ஸெவில்லியில் வைத்து அப்துர் ரஹ்மானின் ஆதரவாளர்கள் கடுமையாகத் தாக்கியதால் தொலதோவுக்குத் தப்பி ஓடினார்.  அங்கு வாழ்ந்த யெமனிய அரபிகள் அப்துர் ரஹ்மானின் நல்லெண்ணத்தைப் பெற விரும்பி அவரைக் கொலை செய்து அவரது தலையை அப்துர் ரஹ்மானிடம் அனுப்பி வைத்தனர். இதனால் அப்துர் ரஹ்மானின் ஆட்சி ஓரளவு ஸ்திரமாகியது.


ஸ்பெய்னில் உமைய ஆட்சி  ஸ்திரமடைதல்

அப்துர் ரஹ்மான் இதுவரை தன்னை அமீர் என்றழைக்கவே அனுமதித்த்ருந்தார். அப்பாஸியர் தனது குடும்பத்தினரைக் படுகொலை செய்து ஆட்சியை அபகரித்துக்கொண்டிருந்த போதும்  தனது மனசாட்சிக்கு முரணாக வெள்ளிக்கிழமை குத்பாக்களில் அப்பாஸிஸிய கலீபாவை வாழ்த்தி வந்தார். தன்னை ஸ்திரப் படுத்திக் கொள்வதற்கு முன்பு அப்பாஸியரின் படையெடுப்பொன்றை எதிர்கொள்வதற்கு விரும்பாமை இவ்வாறு வாழ்த்தியதற்கான காரணமாக இருந்திருக்க முடியும். எனினும் யூசுபின் கொலையை அடுத்து இந்த நடைமுறையைக் கைவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அப்பாஸிய கலீபா மன்ஸூர் அப்துர் ரஹ்மான் மீது படையெடுக்கத் தீர்மானித்தார்.

படுகொலை செய்யப்பட்ட யூசுபின் உறவினரும் வட ஆபிரிக்காவின் கவர்னருமான அலா பின் முஇஸ்ஸுக்கு ஸ்பெய்ன் மீது படையெடுக்குமாறு கலீபா கட்டளையிட்டார். அதற்கான ஏற்பாடுகளை முஇஸ் செய்துகொண்டிருக்கையில் கொலை செய்யப்பட்ட கவர்னர் யூசுபின் உறவினரான ஹாசிமின் கொலைக்கு பழி வாங்குமுகமாக அலா பின் முஇஸ்ஸை படையுடன் வருமாறு அழைத்துவிட்டு தொலதோவில் கிளர்ச்சி செய்தார். இக்கிளர்ச்சியை அடக்குவதற்காக அப்துர்ரஹ்மான் தொலதோவை முற்றுகையிட்டார். முற்றுகை நீடித்திருக்கும்போது அலா பின் முஇஸ் கி.பி. 763ல் ஸ்பெய்னில் சென்றிறங்கினார். இதனால் அப்துர்ரஹ்மான் முஇஸ்ஸை எதிர்கொள்வதற்காகத் திரும்பி வரும் வழியில்  ஸெவில்லிக்கு அருகேயுள்ள கர்மோனா எனுமிடத்தில் அப்படையை எதிர்கொண்டார். தொலதோவில் இருந்து ஹாஷிமின் படையொன்று பின்னால் துரத்தி வந்தது. இதனால் கர்மோனாவில் இருந்த கோட்டையில் அடைக்கலமானார். முற்றுகையிடப்பட்ட நிலையில் அப்துர்ரஹ்மான் இரு மாதங்கள் கோட்டையுள் அடைக்கலப்பட்டுக் கிடந்தார். கோட்டையுள் பசியால் வாடி மடிவதவிடக் களத்தில் இறங்கிப் போராடி இறப்பதை அப்துர்ரஹ்மாஅன்  பெரிதும் விரும்பினார்.

அவருடன் இருந்த 700 வீரர்களும் இக்கருத்துடன் இணங்கினர். அவர்கள் கோட்டை வாயிலருகில் தீ மூட்டித் தம் வாளுரைகளை அதில் போட்டு எதிர்த்தனர். (இந்நடைமுறை போராடி வெற்றியை அல்லது வீர மரணத்தை அடையும் தம் தீர்மானத்தைப் பிரகடனப் படுத்தும் அக்கால மரபாகும்.) அப்துர்ரஹ்மானின் படையினர் திடீரெனப் பாய்ந்துஎதிரணியில் புகுந்தனர். முற்றுகையாளர்கள் இரு மாதங்களாக முற்றுகையிட்டிருந்தனர். இக்காலப் பகுதியில் போர் நடவடிக்கை ஏதும் இல்லாதிருந்ததால் அவர்கள் கவனயீனமாக இருந்தனர். இதனால் அப்துர்ரஹ்மானின் திடீர்த் தாக்குதலால் அதிர்ந்து போயினர். எதிர்த்தரப்பினரில்  7000 வீரர்கள் மடிந்தனர். அப்துர்ரஹ்மான் வெற்றிவாகை சூடினார். களத்தில் அபூ முஇஸ்ஸும் கொலை செய்யப்பட்டார். அப்துர்ரஹ்மான் முஇஸ்ஸின் தலையைத் துண்டித்து கலீபா மன்ஸூஒருக்கு அனுப்பி வைத்தார். இதுமுதல் அப்துர்ரஹ்மனின் ஆட்சி ஸ்திரமடைந்தபோதும் உள் நாட்டுக் கிளர்ச்சிகள் குறையவில்லை.


உள் நாட்ட்டுக் கிளர்ச்சிகளுக்கான காரணிகள்

அப்துர்ரஹ்மானை ஆட்சியில் அமர்த்தப் பல பகுதியினர் உதவி புரிந்தனர். தத்தமக்குரிய சில அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்கள் இவ்வாறு உதவி புரிந்தனர். அப்துர்ரஹ்மான் தனக்கு உதவி புரிந்த யாருக்கும் சார்பாகச் செயற்படவில்லை. அக்குழுக்களின் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக சில நியமனங்கள் அமைந்திருந்தன. சிலருக்கே தமது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறின. ஆதலால், அவர்களில் பெரும்பான்மையானோர் அப்துர்ரஹ்மான் மீது அதிருப்தியடைந்தனர். நண்பர்கள், உறவினர்களில் சிலரும் இவருக்கு எதிரிகளாக மாறினர். பதவி கவிழ்க்கப்பட்ட யூஸுஃபின் ஆதரவாளர்கள் கடும் எதிரிகளாக விளங்கினர்.

ஸ்பானியக் குடி மக்கள் இன ரீதியாகவும் பிளவுற்றிருந்தனர். அரேபியர், பர்பர், முவல்லத்கள், மொஸராப்கள் என்று பல இனங்களாகப் பிரிந்து காணப்பட்டனர். இதில் எந்தவொரு இனமும் மற்றொரு இனத்தின் தலைமையை ஏற்கத் தயாராக இருக்கவில்லை. சகிப்புத் தன்மையுடன் வாழும் மனப்பாங்கின்றி கிளர்ச்சியில் ஈடுபடும் சுபாவம் கொண்டிருந்தனர். கிழக்கிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட உமையாக் கோத்திரத்தைச் சேர்ந்த அப்துர்ரஹ்மானின் ஆட்சியை, வீழ்த்தப்பட்ட குடும்பத்தின் உறுப்பினன் என்ற காரணத்தால் சகிக்க முடியவில்லை. கிளர்ச்சிகளில் ஈடுபடுவதற்குச் சாதகமான மனப்பாங்கையும் கிளர்ச்சிக்கு சாதகமான சூழலையும் கொண்டிருந்த குடிமக்களை அப்பாஸியர் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி சதி முயற்சிகளைத் தூண்டியமை கிளர்ச்ச்சிக்கான மற்றொரு காரணமாகியது. படைப்பலத்தைப் பிரயோகித்து அப்துர்ரஹ்மானை வெல்ல முடியாது என்பதை அனுபவ ரீதியாகக் கண்டு கொண்ட அப்பாஸியர் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற அரபுகளையும் பர்பர்களையும் தூண்டி அடிக்கடி கிளர்ச்சிகளை செய்வித்தனர். ஸ்பெயினின் வடக்கே இருந்த பிரான்ஸியரும் ஸரகோஸா மாகாணத் தலைவர்களாக செயற்பட்ட ஹுஸைன் பின் ஆஸி, ஸுலைமான் பின் யக்தான் போன்றவர்களோடு சேர்ந்து சூழ்ச்சி செய்தமையும் உள்நாட்டுக் கிளர்ச்சிகளுக்கான பிறிதொரு காரணமாகியது.

நாலா புறத்திலிருந்தும் எழுகின்ற கிளர்ச்சிகளை எதிர்கொள்வதற்குத் தனது உமையாக் கோத்திரத்தவர்களை மையமாகக் கொண்ட படையணியை உருவாக்கவேண்டுண்டும் எனக் கருதினார். உமையா நலனைக் காக்கவும் ஆபத்தில் உதவக்கூடிய நம்பத்தகுந்த சக்தியாகவும் உமையாக்களைக்கொண்ட படையணியே இருக்க முடியும் என நம்பினார். இதனால் அப்பாஸியரின் கெடிபிடிகளில் இருந்து தப்பித்து வாழ்கின்ற உமையாப் பிரமுகர்களை ஒன்று திரட்டினார். அவர்களில் அப்துல் மலிக் பின் உமர் பின் மர்வான் , அவரது மகன் உமர் பின் அப்துல் மலிக் குறிப்பிடத்தக்க இருவராவர். இவர்களில் அப்துல் மலிக் பின் உமரை ஸெவில்லிக்கும் உமர் பின் அப்துல் மலிக்கை மொரூபா நகருக்கும் கவர்னராக நியமித்தார். இவ்வாறு தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களை முக்கியமான நகர்களின் நிர்வாகிகளாக நியமித்துக் கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.


பிரான்ஸிய மன்னன் சாலமேனின் படையெடுப்பு

ஸரகோஸா மகாணத்தின் முக்கிய  நகர்களில் ஒன்றான பார்ஸிலோனாவின் ஆளு நராக இருந்த கல்பீ கோத்திரத்தவரான ஸுலைமான் பின் யக்தான் இப்னுல் அரபி, அம்மாகாணத்தின் மற்றொரு நகரின் ஆளுநராகக் கடமையாற்றிய ஹுஸைன் பின் ஆஸி எனும் இருவரும் அப்பாஸியரின் கையாட்களாகச் செயற்பட்டனர். இவ்விருவருடன் கிளர்ச்சித் தலைவர்களில் ஒருவரான அப்துர்ரஹ்மான் இப்னு ஹபீப் என்பவரும் பிரான்ஸிய மன்னன் சர்லமேனைச் சந்தித்து அப்துர்ரஹ்மான் மீது படையெடுக்குமாறும் தாம் உதவியாக இருப்பதாகவும் வாக்களித்தனர். தனது புகழை நிலை நாட்ட இது ஓர் அரிய வாய்ப்பு என்று சார்லமேன் கருதினான். ஆதலால் கிளர்ச்சிக்காரர்களின் வேண்டுகோளை ஏற்க மன்னன் முன்வந்தான். இவ்வேண்டுகோளை ஏற்பதன் மூலம் பின்வரும் இரண்டு இலக்குகளைய் அடையத் திட்டமிட்டான்.

1. ஸ்பெய்ன் அரசியல் களத்தில் இருந்து  அப்துர்ரஹ்மானை ஒழித்துக்கட்டுதல்.
2. ஸ்பெய்னிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி ஸ்பெய்னைக் கிறிஸ்தவ ஆட்சியின் கீழ் கொண்டுவருதல்.

இவ்விலட்சியங்களை நிறைவு செய்வதற்கான செயற்றிட்டம் ஒன்றை மன்னன் வகுத்தான். அதன்படி சார்லமேன் படையோடு வரும்போது இப்னுல் அரபி தன்படையோடு சார்லமேனுடன் சேர்ந்துகொள்ளவேண்டும். இவ்விரு படைகளும் வடக்கிலிருந்து முஸ்லிம்களை எதிர்க்கும்பொது அப்துர்ரஹ்மான் இப்னு ஹபீப் ஆபிரிக்க பேர்பர்களுடன் ஸ்பெய்னின் கிழக்குக் கரையில் தரையிரங்க வேண்டும். சார்லமேன் படையுடன் வருவதற்கு முன்பே இப்னு ஹபீப் தனது கூலிப்படையுடன் ஸ்பெய்னில் தரையயிறங்கினார். அச்சந்தர்ப்பத்தில் இப்னுல் அரபி போருக்குப் புறப்பட்டிராததால் அவர் மீது சந்தேகம் கொண்ட இப்னு ஹபீப், இப்னுல் அரபியைத் தாக்கினார். இப்போராட்டத்தில் இப்னுல் அரபி கொலையுண்டார்.

திட்டமிட்டபடி சார்லமேன் பெரும் எண்ணிக்கையிலான வீரர்களுடன் ஸரகோஸாவை நோக்கி வந்தான். முஸ்லிம்களைத் துரத்தி, ஸ்பெய்னைக் கிறிஸ்த்தவர்களின் ஆதிக்கத்துக்குட்படுத்தப் பல்லாயிரக்கணக்கான வீரர்களுடன் சர்லமேன் வருகின்றான் என்ற செய்தி பொது மக்களிடையே ஓர் அதிர்ச்சி அலையைத் தோற்றுவித்தது. அவர்கள் ஸுலைமான் யக்ஸான் அல்-அரபியைச் சந்தித்து மிகக் காராசாரமாகக் கடிந்துகொண்டனர். இதனால்தான் வாக்களித்தபடி உதவிப்படையைக் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் இப்னுல் அரபி தன்னைக் கைவிட்டுவிட்டார் என்று கோபப்பட்டு ஸரகோவாவைத் தரைமட்டமாக்க நினைத்து  அத்திசையில் படையை நகர்த்தினான். இச்சந்தர்ப்பத்தில் றைன் நதிப் பள்ளத்தாக்கினரை சாக்ஸன் வீரர்கள் தாகுகின்றனர் என்ற செய்தி எட்டியதால் உடனடியாக சார்லமேன் நாடு திரும்பினான்.

சார்லமேன் ஸரகோஸாவை நோக்கிப் படையோடு வருகின்றபோது வரும் வழியில் இருந்த கிறிஸ்தவர்கள் ஊக்கமளித்து உதவியாக நின்றனர். திரும்பிச் செல்லும் வழியில் அக்கிறிஸ்தவர்கள், சார்லமேன் முஸ்லிகளுக்குப் பயந்து வருகிறான் எனக் கருதி சார்லமேனின் படையைப் பின்புறமாக இருந்து இருந்து தாக்கியதால் பெரும் எண்ணிக்கையிலான வீரர்கள் மடிந்தனர்.

ஸரகோஸாவைத் தாக்க வரும் சார்லமேனை எதிர்கொள்வதற்காக அப்துர்ரஹ்மானும் தன் படையுடன் கொர்டோவாவில் இருந்து ஸரகோஸா சென்றார். சார்லமேனுக்கு ஒரு பாடம் கற்பிகக் கருதித் தன் படையுடன் சென்று பிரான்ஸின் தென்பகுதி நகர்களை த் தாக்கினார். ஆயினும் தன் நாட்டில் அடிகடி ஏற்படும் கிளர்ச்சிகளைக் கருத்திற்கொண்டுபிரான்ஸிலிருந்து கொர்டோவாவுக்கு மீண்டார்.  இவ்வாறு தனதாட்சிக் காலமெல்லாம் உள் நாட்டுக் கிளர்ச்சிகளுடனும், அப்பாஸியப் படைகளுடனும் சார்லமேனுடனும் போராடி தனதாட்சியை ஸ்திரப்படுத்தினார்.அரச குடும்பத்தில் பிறந்துன் நாட்டை இழந்து காட்டிலும் மேட்டிலும் பாலைவனத்திலும் ஐந்து வருடங்களாக அலைந்து திரிந்து ஸ்பெய்னில் புகுந்து உமையா ட்சியைத் தோற்றுவித்து அதனை ஸ்திரப்படுத்திய பின் கி.பி. 788ல் காலமானார். மூத்த மகன் ஸுலைமானைவிடவும் அடுத்தவரான ஹிஷாம் ஆட்சி பீடத்துக்குத் தகுதியானவர் எனக் கருதி ஹிஷாமை அடுத்த வாரிசாக நியமித்திருந்தார்.

மதிப்பீடு

காடுகளிலும் மேடுகளிலும் பாலைவனத்திலும் தன் உயிரைக் காத்துக் கொள்வதற்காக அபயம் தேடி அலைந்த அப்துர் ரஹ்மான், கடல் கடந்து ஸ்பெய்னில் அகதியாக நுழைந்து புகழ் மிக்கதோர் ஆட்சியை அமைத்தமை அவரது ஒரு சாதனையே.  தன் வாழ் நாளில் ஒரு போர் வீரனாகவோ எவ்வித அனுபவங்களையும் பெற்றிராத ஒருவர் திறமை மிக்க  அவரது தளபதிகளால் தானும் சாதிக்க முடியாதவற்றைத் தானே தலைம தாங்கிச் சாதித்த போர்க்கள் நிகழ்வுகள் அவரது துணிவுக்கும் தைரியத்துக்கும் எடுத்துக்காட்டுக்களாகும். தனது 32 வருட ஆட்சிக்காலத்திலும்  உள் நாட்டுக் கிளர்ச்சிகளையும் வெளி நாட்டுப் படையெடுப்புக்களையும் எதிர் கோள்வதில் முழுமையாக ஈடுபட்டிருந்தபோதும் நிர்வாகத்தை மேற்பார்வை செய்வதையும் கலை-கலாசாரங்களை வளர்ப்பதையும் அவர் மறக்கவில்லை.

அப்துர்ரஹ்மான் தனது நாட்டை 6 மாகாணங்களாகப் பிரித்து ஒ வ்வொரு மாகாணாத்துக்கும் ஒ வ்வொரு தளபதியை அவற்றின் பரிபாலகராக்கினார். அவர்களுக்குத் துணையாக ஒ வ்வொரு மாகாணத்துக்குமான பிரதான நிருவாகிகள் இருவரையும் ஆறு அமைச்சர்களையும் ஒரு காழியையும் நிர்வாக உத்தியோகத்தர்களையும் நியமித்தார். மக்கள் நலனைப் பேணுவதே  அவரது நிர்வாகத்தின் இலட்சியமாக இருந்தது. அதற்குத் தேவையான சட்டங்களையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

நாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவித்த உள் நாட்டுக் கிளர்ச்சிக் காரர்களையும் கொள்ளைக் கூட்டங்களையும் இராணுவ பலத்தைப் பிரயோகித்து முடக்கிவிட்டார்.  நாட்டின் நாலா புறங்களுக்கும் சென்று மக்கள் பிரச்சினைகளை கேட்டும் நேரடியாகச் சென்றும் அறிந்து கொண்டார். அப்பிரயாணங்களின் போது அங்கு கடமையாற்றிய நிர்வாகிகளின் திறன்களையும் பலவீனங்களையும் அவதானித்தார்.

கைப்பற்றிய முக்கிய நகர்களிலெல்லாம் காவல் அரண்களை ஏற்படுத்தினார். அந்நகர்களைப் பரிபாலிக்கவும் அழகு படுத்தவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார். தேவைப்படும் இடங்களில் எல்லாம் மஸ்ஜித்களையும், பரிபாலனத்துக்கு அவசியமான கட்டடங்களையும் நினிர்மாணித்தார். அவர் நிர்மாணித்த கொர்டோவா மஸ்ஜித் புகழ் வாய்ந்ததாகும். அதன் நிர்மாணத்தைப் பூர்த்தி செய்ய முன்னதாகவே அவர் இறந்தபோதும் அவர் இட்ட அடித்தளத்தில் அவரது மகன் அதன் வேலைப்பாடுகளைப் பூரணப்படுத்தினார். கொர்டோவ்வா நகரை உலகின் அழகு மிகு நகர்களில் ஒன்றாக மாற்றியமைத்தார். கொர்டோவா மஸ்ஜிதுக்கு மேற்குத் திசையில் அரச மாளிகையை நிர்மாணித்தார். கட்டட நிர்மாணத்தில் ஸிரியாவின் கட்டடக் கலை அம்சங்களைப் பாவித்து அழகுபடுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும். யூப்ரடீஸ் நதிக்கரையில் தனது ஓய்வு காலத்தைக் கழிப்பதற்காக அழகிய நகரொன்றை நிர்மாணித்தார். அந்த நகருக்கு அவர் "றுசபா" என்று பெயரிட்டிருந்தார். ஸிரியாவில் வளர்ந்த ஈத்தமரக் கன்றுகளையும் அழகிய தாவரங்ககையும் அங்கு நட்டி அழகுபடுத்தினார்.

நாடளாவிய ரீதியில் கல்வியை வளர்ப்பதற்குத் தேவையான கல்விக்கூடங்களை ஏற்படுத்தினார். அறிஞர்களுக்கும் ஆதரவு வழங்கினார். கவிஞர்கள் நடாத்திய கலையரங்குகளில் கலந்துகொண்டார். முக்கிய நகர்களை இணைக்கக்கூடியதான பாதைகளையும் பாலங்களையும் நிர்மாணித்தார். வழக்கில் இருந்த தபால் கொண்டு செல்லும் "தாவள" முறையை விருத்தி செய்தார்.

அப்பாஸ்யரின் கொடுமைகளுக்கும் கொலைகளுக்கும் பயந்து தலைமறைவாகியும் சமூகப் பணிகளில் இருந்து ஒதுங்கியும் வாழ்ந்த உமையாப் பிரமுகர்களுக்கு நிலங்களையும் மானியங்களையும் வழங்கி ஸ்பெய்னில் குடியேற்றினார். இதனால் ஆதரவற்ற உமையாக்கள் தமக்கு ஒரு போசகனைப் பெற்றுக்கொண்டனர். மறுபுறம் அப்துர் ரஹ்மான் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தன்னைத், தொடர்ந்து நிலையாக ஆதரிக்கக்கூடிய ஒரு குழிவினரைப் பெற்றுக்கொண்டார். தன்னை முழுமையாக ஆதரிக்கக்கூடிய ஓர் இராணுவப் பிரிவை அமைக்கவும் இக்குடியேற்றம் அவருக்கு உதவியது. கோத்திர ரீதியாகவும் இன ரீதியாகவும் குழுக்களாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த மக்களால் உருவான இராணுவத்தை முழுமையாக நம்பியிருப்பது நல்லதல்ல எனக் கருதி, மாதாமாதம் சம்பளம் பெறும் ஒரு படையை உருவாக்கினார்.

முஸ்லிமல்லாத குடிமக்களுடன் சுமுகமாக உறவாடி அவர்களது நலனையும் பேணினார். கொர்டோவா மஸ்ஜிதை நிர்மாணிக்கத் தெரிவு  செய்த இடம், கிறிஸ்தவக் குடிமகன் ஒருவனுக்கு சொந்தமானதாக இருந்தது. அந்த நிலத்தை அரச உடைமையாக்க முடியுமாக இருந்த போதிலும் அவ்வாறு செய்யாது அந்த நிலத்தை விலை கொடுத்து வாங்கினார். அதற்கு மேலதிகமாக வேறோர் இடத்தில் நிலத்துண்டு ஒன்றை அன்பளிப்புச் செய்தார்.

கேட்போர் மனதைக் கவரக்கூடிய சிறந்த பேச்சாளர். ஆதரவாளர்கள் மீது கருணை காட்டுபவர். எதிரிகளைக் கடுமையாகத் தண்டிக்கும் சுபாவம் உடையவர். இருப்பினும் சமாதான வழி முறையில் அவர்களை எதிர்கொள்ள முடியாதவிடத்து மட்டுமே தண்டிக்கும் வழிமுறையைக் கையாண்டார். அப்துர் ரஹ்மானின் இன்பத்தில் பங்கு கொண்டிருந்த முன்னாள் அடிமை பத்ர், அப்துர்ரஹ்மானின் இறுதிக் காலத்தில் எதிரிகளுடன் சேர்ந்து சூழ்ச்சி செய்தமை கண்டிபிடிக்கப்பட்டபோது, அவருக்கு மரண தண்டனை வழங்குமாறு அரசவையினர் ஆலோசனை கூறினர். தான் மரண தண்டனையை விடக் கொடிய தண்டனையொன்றை வழங்கப் போவதாக அவர் கூறினார். அத்தகைய தண்டனை எதுவென்று கேட்கப்பட்டபோது,  தான் அவரை முற்றாகப் புறக்கணிக்கப் போவதாகக் குறிப்பிட்டார்.

பொருளாதார வசதிகள்  இருந்தபோதும் சுகபோக வாழ்க்கையில் அவர் மூழ்கவில்லை.வீணாகப் பொழுதைக் கழிக்கவுமில்லை.போர் வீரன் ஒருவனுக்கு இருக்கவேண்டிய பண்புகளை அவர் இழக்கவுமில்லை. மஸ்ஜித்களை விட்டும் ஒதுங்கி வாழவுமில்லை. ஜும் ஆ குத்பாவை,  அவரே நடாத்தி வந்தார். வெண்ணிற ஆடையணிந்து அழகாகக் காட்சி தந்தார்.


சுல்தான் முதலாம் ஹிஷாம் பின் அப்துர்ரஹ்மான் (கி.பி. 788 - 796 / ஹிஜ்ரி. 173 -           )

முதலாம் அப்துர்ரஹ்மான் இறப்பதற்கு முன்பே தனது இரண்டாவது மகன் ஹிஷாமை அடுத்த வாரிசாக நியமித்திருந்தார். இவர் அப்துர்ரஹ்மான் ஸ்பெய்னில் குடியேறிய பின்பு விவாகம் புரிந்த ஸ்பானியப் பெண்ணான ஹலாலா என்பவளின் மகனாவார். கிபி.788ல் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட ஹிஷாம் ஆரம்பத்திலேயே தனது இரு சகோதரர்களால் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகளை முறியடித்து வெற்றி கண்டார். மேலும் ஆங்காங்கே தோன்றிய கிளர்ச்சிகளையும் அடக்கினார். மார்க்க பக்தி மிக்க இவர் மாலிக் மத்ஹபை அரச மத்ஹபாகப் பிரகடனம் செய்தார். 2ம் உமர் எனப்படும் உமரிப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களைப் போன்ற நற்பண்பு மிக்கவராக இவர் திகழ்ந்தார். தந்தையின் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டார். சுமார் எட்டு ஆண்டு கால ஆட்சியின் பின்னர் ஹிஜ்ரி 180ல் மரணமானார்.


ஹகம் இப்னு ஹிஷாம் - 1ம் ஹகம் (796 - 822 / ஹிஜ்ரி. 180 - 206)

அமீர் ஹிஷாமைத் தொடர்ந்து அவரது மகன் ஹகம் கி.பி. 796ல் ஆட்சியைப் பொறுப்பேற்றார். இவரது ட்சியில் உள் நாட்டுக் குழப்பங்களும் புரட்சிகளும் இடம் பெற்றன. இவர் ஹிஜ்ரி 206ல் தனது 26வது வயதில் மரணமானார்.


இரண்டாம் அப்துர்ரஹ்மான் ( 822 - 852 / 206 - 238 )

1ம் ஹகமைத் தொடர்ந்து அவரது மகன் அப்துர்ரஹ்மான் கி.பி. 822ல் ஆட்சியைப் பொறுப்பேற்றுக்கொண்டார். ஆட்சியில் அமரும்போது இயவருக்கு வயது 31.

ஆட்சியைப் பொறுப்பேற்றதும் வட ஸ்ப்ய்ன் கிறிஸ்தவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். எனினும் திறமையான தளபதிகளைக் கொண்டு அதனை அவர் அடக்கினார். இவ்வாறே பிராங்கியரது புரட்சியும் அடக்கப்பட்டது. ஸ்பெய்னை ஆண்ட உமையா கலீபாக்களின் ஆட்சியில் இவரது ஆட்சிக் காலம் மிகச் சிறப்பு வாய்ந்ததாகும். இக்காலத்திலேயே உமையா ஆட்சி ஸ்பெய்னில் ஸ்திரமடைந்தது. நாட்டில் அமைதியும் செழிப்பும் நிலவின. எல்லைப் புறக் கிளர்ச்சிகள் அடக்கப்பட்டன. கலை, இலக்கியம், கலாசரம், நிர்வாகம் , கட்டடம், பாதுகாப்பு, நகராக்கம் என்பன அபிவிருத்தியடைந்தன. அறிவியல் துறை வளர்ச்சிக்கெனப் பாடசாலைகள், கல்லூரிகள், நூலகங்கள் மற்றும் மஸ்ஜித்கள் என்பன நிறுவப்பட்டன. இவர் நிர்மாணித்த கட்டடங்களும் பூங்காக்களும் அழகிய கலை வண்ணம் பொதிந்து காணப்பட்டன. அந்நிய மொழி நூல்கள் அரபு மொழிக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டன. இதனால் குர்துபா - கொர்டோவா நகர் கலை, இலக்கிய, கலாசார வளர்ச்சியில் புகழ் பெற்று விளங்கியது. தலை நகருக்குத் தேவையான நீரை ஸியெரா மொரீனா (Sierra Morena) மலையில் இருந்து நீண்ட நீர்க் குழாய்களூடாக எடுத்து வர ஏற்பாடுகள் செய்தார்.

இவ்வாறாகச் சிறந்த ஆட்சியொன்றை ஏறக்குறைய 30 வருடங்களாக மேற்கொண்ட அமீர் இரண்டாம் அப்துர்ரஹ்மான் ஹிஜ்ரி 238ல் மரண்மானார்.


முதலாம் முஹம்மத் ( 852 - 886 / 238 - 273 )

தந்தைக்குப் பின் தனயன் என்ற மரபின் படி  முதலாம் முஹம்மத் கி.பி. 852ல் ஸ்பெய்னின் அடுத்த அமீராகப் பதவியேற்றார். இவரது ஆட்சியில் உள் நாட்டுக் குழப்பங்கள் அதிகளவில் இடம் பெற்றன.  தொலதோ வாசிகள், கிறிஸ்தவத் தீவிரவாதிகள்,  பிராங்கியர்,  தனியாட்சி பிரகடனப்படுத்திய முஸ்லிம்கள் முதலான அனைவரது கிளர்ச்சிகளையும் அடக்கினார்.  இவர் உமையாக் கலீபா முதலாம் வலீதோடு ஒப்பிடக்கூடியவராவார். 34 ஆண்டுகால நீண்ட ஆட்சியின் பின்னர் இவர் கி.பி. 886ல் காலமானார்.


முன்ஸிர் ( 886 - 888 / 273 - 275 )

முதலாம் முஹம்மதைத் தொடர்ந்து அவரது மன் முன்ஸிர் கி.பி. 886ல், தனது 44வது வயதில்  ஸ்பானியாவின் அடுத்த அமீராகப் பதவிப்பிரமானம் செய்து கொண்டார். இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செத முன்ஸிர் கி.பி.888ல் மரணமானார்.


அப்துல்லாஹ் ( 888 - 912 / 275 - 300 )

இவர் பதவிக்கு வந்த போது குழப்பங்களும் சதி முயற்சிகளுமே தலைவிரித்தாடின. முஸ்லிம்களுக்கு நத்தியில் வர்க்கப் போராட்டங்கள் இடம் பெற்றமையால் அவற்றை அடக்குவது அமீர் அப்துல்லாஹ்வைப் பொறுத்தவரை சிரமமான விடயமாகவே அமைந்திருந்தது. பல புரட்சிகள், குழப்பங்களால் அமீர்  அப்துல்லாஹ்வின் நிலை தர்மசங்கடமாயிற்று. திறியசேரியும் காலியானது. அவர் மேர்கொண்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள் யாவும் பயனற்றுப் போயின. இவ்வாறாக ஏறக்குறைய 24 வருட கால ஆட்ச்யின் பின் கி.பி. 912ல் அமீர் அப்துல்லாஹ் மரணமானார். நட்டுக்காக எந்தவொரு புண்ணியத்தையும் செய்யாத இவரைப் பற்றி Stanely Lanepole பின்வருமாறு குறிப்பிடுவது நோக்கத்தக்கது. "The only good that he did for the country was to have died."

இவரது மரணத்துடன் ஸ்பானியாவை அமீர் எனும் பதவிப் பெயருடன் ஆட்சி செய்த உமையா மரபினரின் ஆட்சி முடிவுற்றது.


ஸ்பெய்னை ஆண்ட உமையாக்களின் முதற்கட்ட ஆட்சி இமாரத் (அமீர் ஆட்சி) என அழைக்கப்படுகின்றது. இவ்வாட்சி ஏறக்குறைய 179 ஆண்டுகள் நடைபெற்றது. அமீர் அப்துல்லாஹ்வின் மறைவைத் தொடர்ந்து ஆட்சிபீடமேறிய உமையா ஆட்சியாளரான 3ம் அப்துர் ரஹ்மான் கலீபா எனும் பதவிப் பெயருடனும்,அமீருல் முஃமினீன் எனும் சிறப்புப் பெயருடனௌம் தனது கிலாபத்தை ஆரம்பித்தார். இதற்குப் பின்னர் ஆட்சி செய்தோர் தம்மை கலீபா என்றே அழைத்துக் கொள்ளலாயினர். இதனால் ஸ்பெய்னில் இமாரத் யுகம் முடிந்து கிலாபத் யுகம் ஆரம்பமானது. இவ்வைரண்டாம் கட்ட ஆட்சி ஏறக்குறைய 100 வருடங்கள் வரை தொடர்ந்தது.


மூன்றாம் அப்துர்ரஹ்மான் ( 812 - 961 / 275 - 350 )

ஸ்பெய்னின் முதல் உமையா கலீபா என்ற பெருமை 3ம் அப்துர் ரஹ்மானைச் சாரும். இவர் உள் நாட்டுக் குழப்பங்கள், வெளி நாட்டுச் சதி முயற்சிகள் என்பவற்றை அடக்கி ஏறக்குறைய 50 வருடங்கள் ஆட்சி ச்ய்தார். ஸ்பெய்னின் வரலாற்றில் மிகச் சிறப்புவாய்ந்த காலமாக இக்காலம் கருதப்படுகின்றது. இவர் இராணுவத்தைச் சீரமைத்துச் சமகால இராணுவங்களில் மிகச் சிறந்த இரணுவமாக அதனை மாற்றியமைத்தார். சிறந்த வரியமைப்பொன்றை ஏற்படுத்தி அரச வருமானத்தை ஸ்திரப்படுத்தினார். பாதைகள், பாலங்கள், கோட்டைகள் கால்வாய்கள், மருத்துவமனைகள் அநாதை இல்லங்கள்,வயோதிபர் மடங்கள் முதலானவற்றையும் அமைத்தார். வெளி நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தினார். குறிப்பாக ஜேர்மனி, பிரான்ஸ்,  வட ஸ்பெய்ன் , ரோம் முதலான நாடுகளுடன் நற்புறவை ஏற்படுத்தினார். ஓர் அங்குல நிலத்தைக்கூட வீணாக்கக்கூடாது என்ற வகையில் விவசாயம், வர்த்தகம், கைத்தொழில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீர்ப்பாசனத்திட்டத்தை அறிமுமுகப்படுத்தி ஏறாளமான நிலங்களை பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்தினார்.  பிடவைக் கைத்தொழில் வளர்ச்சி எந்தளவுக்கு இருந்ததெனில், இவரது காலத்தில் குர்துபாவில் மாத்திரம்  30 000க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் காணப்பட்டனர்.அறிவு, கலை, கலாசார அபிவிருத்திகளில் அதிக கவனம் செலுத்தினார். அறிஞர்கள், தத்துவ ஞானிககள், வைத்தியர்கள் போன்றோர் இவரால் கௌரவிக்கப்பட்டனர். பிற மொழிகளில் இருந்த அறிவியல் நூல்கள் அரபு மொழிக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டன. இலக்கிய வளர்ச்சியும் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி கண்டது.. இவர் " அல்-ஸஹ்ரா" என்ற பெயரில் ஒரு புது நகரையும் நிர்மாணித்தார். 40 ஆண்டு கால இடைவெளிக்குள் நிர்மாணிக்கப்பட்ட இந்த நகர் அன்றைய காலப்பிரிவின் அதிசயமாகவே கருதப்பட்டது.
 
3ம் அப்துர் ரஹ்மானின் ஆட்சியில் ஸ்பெய்னில் நிலவி வந்த வர்க்க, இன வேறுபாடுகள் நீக்கப்பட்டு தேசிய ஒருமைப்பாடு பேணப்பட்டது. ஸ்பெய்னில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் முஸராபிகள் என அழைக்கப்பட்டனர். இவரது நல்லாட்சியினால் சுதேசிகளுள் பலர் இஸ்லாத்தைத் தழுவினர். இவர்கள் முவல்லதூன்கள் என்றழைக்கப்பட்டனர். இவ்வாறாகத் தனதாட்சியில் பல சீர்திருத்தங்களை மேற்கொண்ட கலீபா 3ம் அப்துர்ரஹ்மான், சுமார் அரை நூற்றாண்டுகால ஆட்சியின் பின்  கி.பி. 961ல் காலமானார்.



இரண்டாம் ஹகம் ( 961 - 976 / 350 - 366 )

தந்தை அப்துர்ரஹ்மானைத் தொடர்ந்து அவரது புதல்வர் 2ம் ஹகம்  தனது 46வ்து வயதில், "அல்- முஸ்தன்ஸிர் பில்லாஹ்" எனும் பட்டப்பெயருடன்  ஸ்பெய்னின் அடுத்த கலீபாவாக கி.பி. 961ல் ஆட்சியில் அமர்ந்தார். இவரது ஆட்சியின்போது கலீபா அப்துர்ரஹ்மானின் கால்த்தில் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டிருந்தோர் அவற்றை முறித்துவிட்டிருந்தனர். குறிப்பாகக் கிறிஸ்தவர்கள் குழப்பம் விளைவித்தனர். தனது இராணுவத் திறனால் அவற்றை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தினார்.

 கலீபா ஹகம் சிறந்ததொரு கல்விமானாக இருந்தது மட்டுமன்றி நூலகளை அதிகம் நேசிப்பவராகவும் பரந்த வாசிப்பாளராகவும் திகழ்ந்தார். அறிவியல் நாகரிக வளர்ச்சி உந்நத நிலையை அடைந்தது. எனவேதான் முஸ்லிம் ஸ்பெய்னின் வரலாற்றில் 2ம் ஹகமின் ஆட்சிக்காலம் அற்வியல் துறையின் பொற்காலம் எனக் குறிப்பிடப்படுகிறது. நாடெங்கிலும் பாடசாலைகள், கல்லூரிகளை நிறுவுனார். இலவசக் கல்வி முறை பின்பற்றப்பட்டது. பாடசாலைகளில்லாத உயர் கல்லொரிகளில்லாத மா நகரங்களையோ அன்றைய ஸ்பெய்னில் காண முடியாதிருந்தது. இவரது முயற்சியால் குர்துபாப் பல்கலைக் கழகம் மிகச் சிறந்த வளர்ச்சி கண்டது. முஸ்லிம் நாடுகளில் இருந்து மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் கிறிஸ்தவ, யூத மாணவர்கள் இங்கு வந்து கல்வி கற்றனர். அன்றைய உலகின் மிகப் பெரும் பல்கலைக் கழகமாக குர்துபாப் பல்கலைக்கழகம் திகழ்ந்தது.

புத்தகப் பிரியரான கலீபா இங்கு மிகச் சிறந்த நூலகம் ஒன்று அமைய வழி செய்தார். இந்த நூலகம் சுமார் 4முதல் 6 இலட்சம் நூல்களைக் கொண்டிருந்ததோடு கிடைத்தற்கரிய கையெழுத்துப் பிரதிகளும் அங்கு காணப்பட்டன. கிழக்குலகின் எல்லாப் பாகங்களில் இருந்தும் அறிவியல் கருவூலங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகளையும் கலீபா செய்தார். இதனால் அன்றைய யுகத்தின் மிச் சிறந்ததும் பெரியதுமான நூலகமாக குர்துபாப் பல்கலைககழக நூலகம் திகழ்ந்தது.  இத்தோடு நின்றுவிடாது நடெங்கிலும் நூலகங்களை நிறுவினார். கலீபா ஹகம் குர்துபா நகரை மா பெரும் புத்தகச் சந்தை ஒன்றாகவே மாற்றியமைத்தார். இங்கு சுமார் 20 000 புத்தகக் கடைகள் காணப்பட்டன.

கலீபா ஹகம் 15 வருட ஆட்சியின் பின் தனது 61ம் வயதில்,  கி.பி. 975ல் மரணமானார். மார்க்கப்பறு மிக்க இவர் சிறந்ததொரு கல்விமானாக விளங்கிய போதும் இராணுவ நடவடிக்கைகளையும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றார். குர்துபா மஸ்ஜிதை விசாலப்படுத்தியதொடு நில்லாது  தலை நகரை அழகிய கட்டங்களால் நிரம்பி வழியச் செய்தார். இவரது ஆட்சிக் காலத்தில் ஸ்பெய்ன் எல்லாத் துறைகளிலும் தன்னிறைவு கண்டது. ஸ்பானியாவை ஆண்ட மிக்ச்சிறந்த உமையா கலீபாக்கள் வரிசையில் இறுதியானவராகக் கருதப்படுகின்ற இவரது மறைவோடு புகழ் பூத்த உமையா ஆட்சியும் ஸ்பெய்னில் அஸ்தமித்தது.


இரண்டாம் ஹிஷாம்

இரண்டாம் ஹகமுக்குப் பின்னர் பலம் பொருந்திய ஆட்சியாளர் எவரும் இல்லாது போயினர். கலீபா ஹகம், தான் உயிருடன் இருக்கும்போதே  தனது ஒரேயொரு மகனான ஹிஷாமை அடுத்த வாரிசாக நியமித்தார். தந்தையின் மரணத்தின் பின் மகன் ஹிஷாம் "முஅய்யத் பில்லாஹ்" எனும் பட்டத்தொடு பதவியேற்றார். கலீபா 2ம் ஹிஷாம் 12 வயதுச் சிறுவராக இருந்தமையால் நிர்வாகத்தை அவரால் திறம்பட நடாத்த முடியவில்லை. எனவே ஏனைய நிர்வாகிகள் ஆட்சியில் ஈடுபடவேண்டிய நிர்ப்பந்த நிலை உருவாகியது.  உண்மையில் இதுவே ஸ்பெய்னில் உமையா ஆட்சி ம்ற்றுப்பெறக் காரணமாக அமைந்தது.

ஸ்பெய்னில் உமையா ஆட்சிக்குப் பின்னர் சிற்றரசுகளின் காலம் ஆரம்பமானது. இக்காலப்பிரிவில் ஸ்பெய்னில் 23 சிற்றரசுகள் தோற்றம் பெற்றன. இப்னு அஹ்மரின் கலைத் திறனை வெளிக்காட்டக்கூடிய புகழ் மிக்க அல்ஹம்ரா மளிகையும் இக்காலப்பிரிவிலேயே  நிறுவப்பட்டது. சுற்றியிருந்த கிறிஸ்தவர்களின் தொடரான படையெடுப்புக்களும்  தூண்டிவிடப்பட்ட உள் நாட்டுக் குழப்பங்களும் முஸ்லிம்களை ஸ்பெய்னில் வாழவிடாமல் தொல்லைகள் கொடுத்தன. எனவே ஒரு பக்கமாக முஸ்லிம்கள் வெளியேற பிறிதொரு பக்கமாக முஸ்லிம்கள் அங்கிருந்து துறத்தப்பட்டனர். கடைசியாக கி.பி. 1492ம் ஆண்டோடு ஸ்பெய்னுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவு முற்றாகவே அறுந்துபோனது.


முஸ்லிம் ஸ்பெனின் வீழ்ச்சிக்கான காரணங்கள்

1. கலீபாக்களின் பலவீனம்
2ம் ஹ்கமுக்குப் பின்னர் ஆட்சிபீடமேறிய 2ம் ஹிஷாமும் அவரைத் தொடர்ந்து  உமையாப் பரபரையுடன் நேரடித் தொடர்பற்ற ஆட்சியாளர்களும் ஆட்சி செய்வதற்குப் போதுமான தகுதியைப் பெற்றிருக்கவில்லை.


2. அதிகாரம் கைமாறியமை
2ம் ஹிஷாம் சிறுவராக இருந்த்மையால், முன்பு பாதுகாவலராகக் கடமையாற்றிய ஹாஜிப் அல் மன்ஸூருக்கு அதிகாரம் கை மாறியது. இதனால் அரச்வைப் பிரபுக்களிடையே பொறாமை தொன்றியது. ஒ வ்வொருவரும் பதவிக்கு வர முயன்றனர்.


3. வெளியாரின் தலையீடுகள்
கிறிஸ்தவர்கள் அடிக்கடி தலையிட்டனர்.இதனால் உமையா ஆட்சி பலவீனமடைந்தது.


4. கோத்திரச் சண்டை
ஸ்பெய்னில் குடியேறியிருந்த அரபுக் கோத்திரங்களிக்கிடையே ஏற்பட்ட பகைமையும் போராட்டங்களும்.

இவ்வாறான காரணங்களால் முஸ்லிம் ஸ்பெய்னில் உமையாக்களின் ஆதிக்கம் வீழ்ச்சியுற்று அவர்களுக்குள்ளேயே சில சிற்றரசுகள் தோற்றம் பெற்றன.













































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக