வெள்ளி, 16 மார்ச், 2012

பாலிகாவின் புதிய அதிபருக்கு..........

கம்பஹா மாவட்டத்தின் ஒரே முஸ்லிம் பெண்கள் பாடசாலையான 'கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தின்' அதிபராக நீங்கள் நியமனம் பெற்று வந்துள்ளீர்கள். உங்களுக்கு எமது வாழ்த்துக்கள்.......


இதுதான் உங்களது முதலாவது அதிபர் நியமனம். இதற்காகவும் உங்களுக்கு எமது வாழ்த்துக்கள்..............

நீங்கள் ஆரம்பக் கல்வி கற்ற பாடசாலைக்கு அதிபராக நியமனம் பெற்றுள்ளீர்கள். மீண்டும் பல வாழ்த்துக்கள்............

தகுதி பெற்ற அதிபராக நியமனம் பெறும், எமது கிராமத்தின் முதலாவது பெண்ணும் நீங்கள்தான். மேலும் பல வாழ்த்துக்கள்............

இப்படி பல சிறப்புகளைப் பெற்றுள்ள உங்களை, மலர்ச்செண்டுகள் தந்து வரவேற்றிருக்க வேண்டும். ஆனால், எமது ஊரில், அவ்வாறான பண்புகள் வழமைகள் ஆக்கப்படவில்லை. அதையிட்டு நீங்கள் அலட்டிக்கொள்ள மாட்டீர்கள், சலித்துவிட மாட்டீர்கள் என்பது எமது எண்ணம்.

நீங்கள் ஆரம்பக் கல்விக்காக இந்தப் பாடசாலைக்கு வந்த போது வெறும் ஐந்து வகுப்புக்கள் மாத்திரமே இருந்தன. ஆனால், நீங்கள் அதிபராக வரும் போது, சாதாரண தரம் வரை வகுப்புகள் கொண்ட ஒரு பாடசாலையாக அது ஆமை வேக வளர்ச்சி கண்டிருக்கிறது. உங்கள் நிருவாகம் இந்த வேகத்தை ரொக்கட் வேகமாக மாற்ற வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால், ஒரு சாதாரண மனிதனின் நடை வேகமாவது இருக்க வேண்டும். அப்போதுதான், இந்தப் பாடசாலைக்கு எதிரான சவால்களுக்கு ஓரளவேனும் முகம் கொடுக்க முடியும்.

ஒன்றரை மாத உங்களது நிருவாகம், நம்பிக்கையூட்டுவதாகவே இருக்கிறது. இதன் பிரதிபலிப்பு, இன்ஷா அல்லாஹ், வருட இறுதியில் மற்றும் சா/த பரீட்சைப் பெறுபேறுகளின் போது பிரகாசமாக அமைய எமது வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக