வியாழன், 1 மார்ச், 2012

நேரம் நெருங்கிவிட்டது

இன்று நாம் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொண்டிருக்கலாம், ஆனால் நாளை நல்ல எதிர்காலம் அமைய வேண்டும். மக்கள் போற்றும் நல்ல அங்கீகாரத்தோடு வாழ வேண்டும். யாரும் பிடிக்காத நமக்கான ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இப்படிதான் எதிர்காலத்தைப் பற்றி பலர் சிந்திக்கிறார்கள். அப்படியானால் அதற்கான நேரம் இப்போதே நெருங்கி விட்டது என்பது அவர்களுக்கு தெரியுமா?

நாம் அனைவருமே நெருங்கிய நேரத்திலேயே உட்கார்ந்து வெறுமனே களித்துக் கொண்டிருக்கிறோம். ஊரைப்பற்றி எதாவது ஒரு புதிய சப்ஜெக்ட் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறோம். யாரைப் பற்றியாவது புதிய கிசுகிசுக்கள் வந்துள்ளதா என்றே தேடிக் கொண்டிருக்கிறோம். அதைப்பற்றி பேசி பேசி விவாதித்து களித்திருக்கவே விரும்புகிறோம். அவன் அவள் பின்னாடி திரிகிறானாம், இவன் ஒண்ணுமில்லாமல் நஷ்டமடைந்து கிடக்கிறானாம் என்று பிறரைப் பற்றி பேசியே தன் நேரத்தை இழந்து கொண்டிருக்கிறோம்.

இவையெல்லாம் இரண்டு மூன்று பேர் சேர்ந்து களிப்படைய வேண்டும் என்பதற்காக பேசப்படும் விவாதங்களாகும், இப்படி கூட்டம் கூடினாலே மனதில் களிப்பு ஏற்படுகிறது. தனியாக உட்கார்ந்து உருப்படியாக எதையாவது செய்தால் போரடிக்க ஆரம்பிக்கிறது. ஒருவனுக்கு எழுத்தில் ஆர்வம் இருக்கலாம், அவன் எழுத ஆரம்பித்து விட்டால் அவன் அருகே யாரும் இருக்க மாட்டார்கள்.  அவன் மட்டும் தான் தனியாக உட்கார்ந்து எழுதிக் கொண்டிருக்க வேண்டும்.

ஒரு புதுமையை செய்யும் ஆவல் ஒருவனிடம் இருக்கலாம் அதை செய்யும் போது,   பக்கத்தில் யாரும் வர மாட்டார்கள். அதற்காக அதை விட்டுவிட்டு மீண்டும் தேவையற்ற விவாதத்தில் இறங்கி விட்டால், மனதுக்கு சந்தோசமாகத்தான் இருக்கும். ஆனால் எதிர்காலம் இன்றைய மகிழ்ச்சியிலேயே கரைந்து விடும். இன்றைய களிப்பு நாளைய இழப்பு, இன்று பிறரை இழித்து, பழித்து வாழ்ந்தோமானால் நாளை காலம் நம்மை பார்த்து பல்லிளிக்கும். எனவே தேவையற்ற துணையை விட்டு தனிமையாக அமர்ந்து தேவையானதை செய்யுங்கள்.

ஆம்.. நீங்கள் எதையாவது செய்கிறீர்களா? உங்கள் அருகே யாரும் வர வேண்டாம். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். செய்வதை நிறுத்தாமல் செய்து கொண்டிருங்கள். விரைவிலேயே நீங்கள் நினைக்கும், உங்கள் நினைவிலிருக்கும் அழகான எதிர்காலம் உங்களை எதிர்நோக்கி வருவதை காண்பீர்கள். எதையும் செய்யும் போது யாரும் திரும்பி பார்க்க மாட்டார்கள். செய்து முடித்த பின்னரே பார்க்க ஆரம்பிப்பார்கள், அதுவரையிலும் நீங்களும் யாரையும் திரும்பிப் பார்க்க வேண்டாம்.

சாதாரணமாக ஊரில் அல்லது கல்லூரிகளில் நடக்கும் ஒரு விழாவை எடுத்துக் கொள்ளுங்கள். விழா நடக்கும் நாள் வரையிலும் எதையும் யோசிக்காமல் வீணாக களித்திருந்து விட்டு, விழா நடக்கும் போது 'ஐயோ' நானும் மேடையில் எதாவது செய்து காட்ட வேண்டுமே 'என்ன செய்யலாம்' என்று வழி தெரியாமல் பிறரின் திறமைகளை மட்டும் பார்த்து வெதும்பி இருப்பார்கள். அப்படியே எதாவது செய்வோம் என்று மேடை ஏறினாலும் வரவேற்பு கிடைக்காமல் ஏமாற்றமடைவார்கள்.

அதுவே முன் கூட்டியே திட்டமிட்டு ஒரு நாடகம், பேச்சு, பாடல், டான்ஸ், கம்ப்யூட்டர், தொழில் நுட்பக் கலை அல்லது பிறர் செய்யாத வித்தியாசமான ஒரு நிகழ்ச்சியை திட்டமிட்டு, ஓயாமல் பயிற்சி செய்து மேடை ஏறினால் அவன் அங்கே மிகவும் பிரகாசிப்பான். பிறரோடு களித்திருந்து விட்டு இறுதியில் மேடை ஏறினால் அவன் தவற விட்ட நேரம் அவனுக்கான வாய்ப்பை மறுத்து விடும். இன்று பலரது வாழ்க்கையின் வசந்தங்களை தடுத்துக் கொண்டிருப்பது, கடவுளோ, கிரகங்களோ இல்லை அவர்கள் தவற விட்ட நேரங்களே.

நாம் படிக்கும் போதும் சரி, பயிற்சி செய்யும் போதும் சரி, அல்லது நாளைய கனவை செதுக்கிக் கொண்டிருக்கும் போதும் சரி பக்கத்தில் யாரும் வர மாட்டார்கள், யாரும் வர வேண்டாம். நீங்கள் இருட்டில் இருந்து கொண்டு தனியாகத்தான் எதையாவது செய்ய வேண்டிய நிலை என்றாலும் அப்படியே செய்யுங்கள். மனம் களிப்படைய வேண்டுமே என்று பிறரோடு சாய்ந்து பயிற்சியை, முயற்சியை விட்டு விட்டால் பிற்காலம் உங்களைப் பார்த்து நிச்சயம் சிரிக்கும்.

நாலு நண்பர்களை இழந்தால்தான் உங்கள் நேரத்தை நீங்கள் பயன்படுத்த முடியுமென்றால் அந்த இழப்பிற்கு இப்போதே உங்களைத் தயார் படுத்துங்கள். நாலு நண்பர்களோடு சேர்ந்தால் தான் உங்கள் நேரத்தை பயன்படுத்த முடியுமென்றால், அந்த நண்பர்களை இப்போதே சேர்த்துக் கொள்ளுங்கள்.

காலம் என்பது ஒரு கடல்! அதிலுள்ள ஒருபிடி நீர் மட்டுமே நம் கையில் உள்ளது, கடல் என்றும் கரைவதில்லை ஆனால் நம் கையிலிருக்கும் நீர் நுரையாகி சீக்கிரமே கரைந்து போகும். அது கரைவதற்குள் அதை உப்பாக மாற்றுவதும், இல்லை தப்பாக கரைய விடுவதும் நாம் செய்யும் செயலில்தான் இருக்கிறது.

காலம் இன்னும் கோடி கோடி ஆண்டுகள் சென்று கொண்டே இருக்கும். ஆனால் அவை எதுவும் நமக்கு சொந்தமில்லை நமக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒருபிடி காலமே நமக்கு சொந்தமானது. அந்த ஒரு பிடி காலத்தில், ஒரு நொடி காலத்தையும் தொலைக்க விடாமல் இருப்பவனே நல்ல எதிர்காலத்திற்கு சொந்தக்காரனாவான்.

நாளை என்ன வேணுமானாலும் நடக்கலாம், பூகம்பம் வரலாம், எரிமலை வெடிக்கலாம், கடல் சீறலாம், வாகனம் மோதலாம், நோய்கள் தாக்கலாம், நடந்து போகும் போது மரம் முறிந்து நம் தலையில் விழலாம் அவற்றைப்பற்றி யோசிக்க நாம் கடவுளில்லை, அது நல்லதோ, கெட்டதோ அதை கடவுள் வசமே விட்டு விடுங்கள், அவைகளை சிந்தித்து நேரத்தை சாகடிக்கும் உரிமை மனிதனுக்கு இல்லை, அதை உபயோகப் படுத்தும் உரிமைதான் நம்மிடம் உள்ளது.

நேரம் என்பது ஓடிக்கொண்டிருக்கும் ஒரு வாகனம் அதை தாவிப்பிடித்தாலும், தரையில் நின்றாலும் அது ஓடிக்கொண்டுதான் இருக்கும், நமக்கு நேரம் நெருங்கி விட்டது. நேரம் என்னும் வாகனமும் வந்து விட்டது.  அதை கோட்டை விடாமல் இப்போதே தாவிப்பிடித்துக் கொள்வோம். நாம் சேர வேண்டிய இடத்தில் நிச்சயம் நம்மை சேர்த்து விடும்.
 
னன்றி இர்பான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக