வியாழன், 19 ஏப்ரல், 2012

கஹட்டோவிட்டாவில் "ஐஸ்" மழை!

கஹட்டோவிட்டாவின் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலை அண்டிய பிரதேசங்களில் நேற்றிரவு (18.04.2012) 'ஐஸ்' மழை பெய்திருக்கிறது. பலத்த இடி, மின்னலுடன் பெய்து கொண்டிருந்த மழையுடனேயே, இரவு சுமார் 8:00 மணியளவில், இந்த அரிய நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மழையுடன், கூரையில் சிறு கற்கள் விழுவது போன்ற சப்தம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பலத்த இடி, மின்னல் காரணமாக பலர் வெளியில் சென்று அவதானிக்கத் தயங்கினாலும், சிறு தொகையினர், நடப்பது என்னவென்று முயன்று பார்த்ததில், 'பயற்றங்கொட்டை' அளவிலான 'ஐஸ்' கட்டிகள் விழுந்திருப்பதை அவதானித்துள்ளனர்.

இன்று காலை இது தொடர்பில் விசாரித்ததில், மேலும் சிலர் இந்த 'ஐஸ்' மழை பற்றி ஊர்ஜிதம் செய்தனர்.

இந்த 'ஐஸ்' மழை தொடங்க சற்று முன்னர், அசாதாரண குளிர் நிலைமை பலராலும் அவதானிக்கப் பட்டிருக்கிறது. அத்துடன், இந்த 'ஐஸ்' மழை சுமார் 2-3 நிமிடங்கள் மாத்திரமே பொழிந்திருக்கிறது.

கஹட்டோவிட்டாவில் இதற்கு முன்னர் இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளதா? என்பது பற்றிய தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், நாம் அறிந்த வரையில், எமது வாழ்நாளில் இதுதான் முதல் தடவை!

1 கருத்து: