ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

தம்புள்ள பள்ளிவாசல் தகர்ப்பு - ஒரு பின் குறிப்பு

'புனித பூமி' என்ற பெயரில் முஸ்லிம்கள் வாழும் இடங்களையும் அவர்களுடைய வழிபாட்டுத் தளங்களையும் அழித்தொழிக்கும் சதி நாடகத்தின் மற்றொரு காட்சிதான் கடந்த வெள்ளிக்கிழமை, 20.04.2012 - தம்புள்ளையில் இடம் பெற்றது.

சுமார் 60 வருடங்கள் பழைமை வாய்ந்த ஒரு பள்ளிவாசலை, நேற்று கொண்டுவரப்பட்ட புனித பூமி பிரகடனத்தின் மூலம் அகற்ற நினைக்கும் இந்தக் காடையர்களின் நடவடிக்கை, ஒரு எழுமாறான தனி நிகழ்வாகத் தென்படவில்லை. "...... இந்த விடயத்தை நாம் தம்புள்ள பகுதியுடன் நிறுத்தப் போவதில்லை; மாறாக முழு இலங்கைக்கும் வியாபிக்கச் செய்வோம்......" என்று காவி உடை தரித்த ஒரு காடையன் முழங்கியதிலிருந்து இது தெளிவாகப் புலப்படுகிறது. 

இந்த மஸ்ஜிதின் பழைமைக்கு, அதன் அருகில் வசித்து வரும் சிங்கள சகோதரர்களே சாட்சி கூற முன் வந்த வேளை, அவர்களை 'நாயக்க ஹாமுதுருவோ' மிரட்டிய தோரணையிலேயே இந்த உண்மை அம்பலமாகிறது. "... அதிகம் பேசினால் உங்களையும் அப்புறப்படுத்துவோம்....." என்ற அவரது மிரட்டல் இதற்குப் போதிய சான்று.

அத்துடன், பள்ளிவாசலின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து, பொலீஸாரினது கண் முன்னேயே எமது மக்கள் ஸுஜூது செய்த தலத்தை துவம்சம் செய்த அந்தக் காடையர்களை, தடுக்க நடவடிக்கை எடுக்காமை, அது ஒரு (அரசாங்கப்) பலத்தின் அனுசரணையுடன் நடந்தது என்பதையும் காட்டுகிறது.

எப்படியோ, கிட்டிய அருகில் பள்ளிவாசல்களே அற்ற தம்புள்ள முஸ்லிம்களுக்கு, அன்றைய ஜும்ஆத் தொழுகை வீணாகி விட்டது; இல்லை.... வீணாக்கப் பட்டுவிட்டது.  

முஸ்லிம்களின் வழிபாட்டுச் சுதந்திரத்தை இல்லாமலாக்க முயற்சிக்கின்ற ஒரு சமூகத்தின் தலைமைக்காகவா நமது ஆன்மீக, அரசியல் தலைமைகள் ஜெனீவா சென்று போராடின? மர்ஹூம் அஷ்ரப் சொன்னது போல், நாம் இன்றும் "கறி வேப்பிலைகளாகவே" இருக்கிறோம்!.

இவ்வாறான காடைத் தனங்கள் எமக்கு சாபக்கேடாக இருந்த போதிலும், எமது சமூகத்துக்கு அருளாகவும் இரண்டு விடயங்கள் இடம் பெற்றுள்ளன.

முதலாவது:
எமக்கென்று ஒரு தேசிய ஊடகம் இல்லாத போதிலும், உள்ளூர் இயக்கங்களினதும் மற்றும் தனி நபர்களினதும் வெப் தளங்கள், ஃபேஸ்புக் தளங்கள் போன்றவற்றினூடாக செய்திகளும் சம்பந்தப்பட்ட காட்சிகளும் உடனுக்குடன் எம்மவர் மத்தியில் பரப்பப்பட்டது மட்டுமன்றி, BBC, அல் ஜஸீரா போன்ற ஊடகங்களில் வெளிவரும் அளவுக்கு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருந்தமை மகிழ்ச்சி தருகிறது.

முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த விழிப்புணர்வும், தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப அறிவும் கணிசமான அளவு முன்னேற்றம் கண்டுள்ளது!

இரண்டாவது:
குறித்த பிரச்சினை தொடர்பாக தனித்தனியாகவோ, இயக்க ரீதியாகவோ, அரசியல் கட்சி சார்பாகவோ தீர்வுகளை முன்வைக்காமல், எல்லோருமாக இணைந்து 'ஜம்இய்யதுல் உலமா'வின் தலைமையில் தீர்வொன்றை நாடியிருப்பதும் மகிழ்ச்சியான செய்திதான். இது தொடர்பாக  ஜம் இய்யாவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் அனைத்து தரப்பினரும் இணைந்திருந்தமை ஒரு சிறந்த முன்மாதிரியும் கூட.

பிரச்சினையின் தன்மை கருதி, தமது சுய வேலைகளைக்கூட விட்டு விட்டு, சமூகத்தின் இருப்புக்காக, அதன் நன்மைக்காக இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். 

இவையிரண்டும் எமது சமூகத்துக்குக் கிடைத்த இரு பெரும் நன்மைகளேயன்றி வேறில்லை!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக