புதன், 8 ஆகஸ்ட், 2012

ஏற்றமிகு வாழ்விற்கு இறைமறை


(மலேசியாவில் கடந்த ஜூலை 7- 8 ஆகிய தினங்களில் நடைபெற்ற தேசிய திருக்குர்ஆன் மாநாட்டில் அஷ்- ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள் ஆற்றிய கருப்பொருளுரையின் சுருக்கம்)

மனிதன் தனது வாழ்வில் இருவகைப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றான். உடனடிப் பிரச்சினைகள் (Immediate Problems)  ஒரு வகை; நித்திய பிரச்சினைகள்  (Ultimate Problems) இரண்டாம் வகை. மனித வாழ்வின் உடனடிப் பிரச்சினைகளுக்கு உதாரணங்களாக உணவு, உடை, உறையுள், சுகாதாரம் முதலான தேவைகளைக் குறிப்பிடலாம். இந்த வகைப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு இறைவன் மனிதனுக்கு பகுத்தறிவை (Intellect) வழங்கியுள்ளான். மனிதன் பகுத்தறிவை வைத்து இயற்கையின் சட்டங்களை (Laws Of Nature) கண்டறிகின்றான். இயற்கையின் சட்டங்கள் பற்றி மனிதன் பெற்றுக் கொள்ளும் அறிவே அறிவியல் (Science) என அழைக்கப்படுகின்றது. இவ்வறிவை அவன் பிரயோகிக்கின்ற போது உருவாவதே தொழில்நுட்பம் (Technology) ஆகும். இத்தொழில்நுட்பம் மனிதன் தனது உலக வாழ்வில் எதிர் கொள்ளும் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் துணை புரிகின்றது.


நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? இறுதியாக எங்கு செல்வேன்? எனது முடிவு என்ன? இவ்வுலக வாழ்வில் நான் என்ன செய்தல் வேண்டும்? இவை மனித வாழ்வுடன் தொடர்பான நித்திய பிரச்சி;னைகள். இவற்றுக்கு மனிதன் பெற்றுள்ள பகுத்தறிவினால் மாத்திரம் தீர்வு காண முடியாது. ஏனெனில், பகுத்தறிவானது காலம்(Time), இடம்( Space) ஆகிய இரண்டினாலும் வரையறுக்கப் பட்டிருக்கிறது. எனவே, இங்கு மனிதனுக்கு மற்றொரு வழிகாட்டல் தேவைப்படுகிறது. அதனைத் தரும் தகுதி காலம், இடம் என்ற வரையறைகளைக் கடந்த, முக்காலங்களையும் அறிந்த, மனிதப் பலயீனங்களிலிருந்தும் விடுபட்ட, குறைகள் குற்றங்கள் இல்லாத ஒருவனுக்கே இருக்க முடியும். இறைவன் மட்டுமே இத்தகுதிகளையும், தன்மைகளையும் பெற்றவன். எனவே, அவனால் மாத்திரமே மனிதனது நித்தியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தர முடியும். இந்த வகையில் தான் இறைவன் மனிதன் தனது உடனடிப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள அவனுக்கு பகுத்தறிவை வழங்கியது போல நித்திய பிரச்ச்pனைகளுக்கு தெளிவான தீர்வுகளைத் தரும் வகையில் காலத்துக்குக் காலம் இறைத்தூதர்களைத் தெரிவு செய்து அவர்கள் மூலம் தனது வஹி எனும் வழி காட்டலை (Revelation) மனிதனுக்கு வழங்கினான். இறைவனால் வஹியாக இறக்கியருளப்பட்ட வேதங்களின் வரிசையில் இறுதி வேதமாக அமைந்ததே அல்-குர்ஆனாகும்.

இன்றைய உலகு வாழ்வின் அனைத்துத் துறைகளுக்குமான வழிகாட்டியாக பகுத்தறிவையும், அதனடியாகப் பிறந்த அறிவியலையுமே ஏற்று நம்புகின்றது. இறைவழிகாட்டலையும், அதனடியாகப் பிறந்த மதத்தையும் அது நிராகரிக்கிறது. இது அறிவியல் யுகம்; மதத்துக்குரிய காலமல்ல; மதமானது அதன் பங்களிப்பை வரலாற்றில் செய்து முடித்துவிட்டது; நவீன வாழ்க்கை அமைப்பில் அதற்கு இடமில்லை என்ற வாதம் முன்வைக்கப்படுகின்றது. மேலும், அறிவியலின்றி ஒரு நாகரிகம் தோன்ற முடியாது. மதமோ அறிவியலுக்கு எதிரானதாகும். சமகால மேற்குலகின் அனைத்துத் துறைசார்ந்த முன்னேற்றதிற்கும் அது மதத்தை நிராகரித்து அறிவியலை ஏற்று விசுவாசித்தமையே காரணமாகும் என்றும் சொல்லப்படுகின்றது. மனித வாழ்வு வரலாற்று நோக்கில் மூன்று கட்டங்களைக் கொண்டது என்றும் சமயம், தத்துவம், அறிவியல் ஆகியனவே அம்மூன்று கட்டங்களுமாகும் என்றும் இந்தவகையில் இறுதிக் கட்டமான அறிவியல் யுகத்தில் இருக்கும் மனிதர்கள் சமய நம்பிக்கைகளைப் பற்றிப் பேசுவது பேதமையாகும் என்றும் வாதிக்கப்படுகின்றது.

இவ்வாறு இன்றைய உலகு முழுக்க முழுக்க அறிவியலை முதன்மைப்படுத்தி இறைவழிகாட்டலையும் அதனடியாகப் பிறந்த மதத்தையும், ஆன்மீகத்தையும் புறக்கணிக்;கின்றது. இதனால் இன்றைய அறிவியல் சடவாதம் (Materialism)> சமய சார்பற்ற உலோகாயுத வாதம் (Secularism)> தாராண்மை வாதம் (Liberalism) முதலான கொள்கைகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதன் விளைவாக சமகால அறிவியலின் அடியாகப் பிறந்த நவயுக நாகரிகம் புறத்தைப் பார்க்கிறது.அகத்தைப் பார்ப்பதில்லை. உடலை முக்கியத்துவப் படுத்துகின்றது; உள்ளத்தை ஊணப்படுத்துகிறது. புறத்தேவைகளைப் பூர்த்தி செய்கிறது; அகத் தேவைகளை உதாசீனம் செய்கிறது.
மனிதனது அறிவுக்கும், ஆன்மீகத்துக்கும் இடையில், உடலுக்கும், உள்ளத்துக்கும் இடையில், புறத்துக்கும், அகத்துக்கும் இடையில் பேணப்பட வேண்டிய சமநிலையை இன்றைய அறிவியல் யுகம் பேணத் தவறியதன் கோர விளைவுகளை சமகால மனிதன் மிக மோசமாக அனுபவிக்கத் துவங்கியுள்ளான். உலகம் கண்டு கொண்டிருக்கும் அரசியல் நெருக்கடிகள், பொருளாதார மந்தநிலை, சூழல் சுற்றாடல் பிரச்சினைகள், நோய்கள் உட்பட ஒழுக்க வீழ்ச்சி, சமூகத் தீமைகள், அனாச்சாரங்கள் முதலான அனைத்துப் பிரச்சினைகளுக்குமான மூல காரணம் குறித்த சமநிலையைப் பேணத் தவறியமையாகும். இந்நிலையில் இன்றைய உலகு மனநிறைவான, மகிழ்ச்சிகரமான, அமைதியான மனித வாழ்வுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு மாற்று நாகரிகத்தை, கொள்கையை ஏக்கத்தோடு எதிர்பார்த்து நிற்கின்றது. இறுதி வேதம் இறைமறை  அல்-குர்ஆன் இன்றைய உலகின் இன்றியமையாத இத்தேவையை நிறைவு செய்யும் முழுமையான வல்லமையையும், தகுதியையும் பெற்றிருக்கிறது.

அல்-குர்ஆன் வெறுமனே கிரேக்கர்கள் செய்தது போன்று மனிதனது மூளையைத் தத்துவக் கருத்துக்களால் நிரப்ப விரும்புவதில்லை; அல்லது இந்தியர்கள் செய்தது போன்று வெறும் ஆன்மீக அனுபவங்களை மாத்திரம் மனிதனுக்கு வழங்க விரும்புவதில்லை. அல்லது ரோமர் களைப் போன்று மனிதனின் வெறும் உடல் வளர்ச்சியை மாத்திரம் கருத்திற் கொள்வதில்லை; அல்லது இன்றைய உலகம் நோக்குவது போன்று மனிதனது சடரீதியான வளர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதுமில்லை.

மாறாக, அல்-குர்ஆன் மனிதனை உடல், உள்ளம், சிந்கனை ஆகிய மூன்று கூறுகளினால் உருவானவன் எனக் காண்கிறது. இவ்வடிப்படையிலேயே அவனது ஆளுமையை வளர்ப் பதற்கான திட்டத்தையும் வழங்கியுள்ளது. இக்கூறுகளில் ஒன்று மற்றையதை மிகைத்து விடாதவாறு மூன்றுக்கும் சம அளவான முக்கியத்துவத்தை அது வழங்குகின்றது. அறிவுப் பலம், ஆன்மீகப் பலம், உடற் பலம், பண்பாட்டுப் பலம் ஆகிய அனைத்துச் சக்திகளையும் ஒருங்கே பெற்றவனே அல்-குர்ஆனிய ஆளுமையை முழுமையாகப் பெற்றவனாகக் கொள்ளப் படுகின்றான்.

அடிப்படையாக அல்-குர்ஆன் மனிதனின் ஆளுமையை ஆன்மீக ரீதியாகக் கட்டியெழுப்ப விரும்புகின்றது. இந்த வகையில் முதலாவதாக ஆன்மீக வளர்ச்சியின் முக்கியத்துவத்தை அது வலியுறுத்துகிறது.


'நிச்சயமாக அதனை (ஆன்மாவை) தூய்மைப்படுத்தியவன் வெற்றி பெற்றான். அதனை மாசு படுத்தியவன் தோல்வியடைந்தான்' ( 91:9,10)எனக் கூறுகிறது. அதற்கான வழிமுறைகளையும் அது விளக்குகிறது. தொழுகை, திக்ர் போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

ஆன்மீகத்தைப் பொறுத்த வரையில், அல்-குர்ஆன் காண விரும்பும் மனிதர்கள் எத்தகையோரென்றால்............

'அவர்கள் நின்ற நிலையிலும், இருந்த நிலையிலும், சாய்ந்த நிலையிலும் அல்லாஹ்வை திக்ர் செய்பவர்கள்' ( 3:191)
மேலும்,'(இரவிலே) தங்களது படுக்கையிலிருந்து தங்கள் விலாக்களை உயர்த்தி( எழுந்து அப்புறப்பட்டு) தங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைத்தும் பயந்தும் (அவனைப்) பிரார்த் தனை செய்வார்கள்.' ( 32: 16)

மேலும் அவர்கள்,'தங்கள் இறைவனை நின்றவர்களாகவும், சிரம் பணிந்தவர்களாகவும், இரவெல்லாம் வணங்கிக் கொண்டிருப்பார்கள்.' ( 25: 64)
மேலும்,'இரவு வேளையிலே (நடுநிசியிலே) அவர்கள் பாவமன்னிப்புக் கோருவோராய் இருப்பர்.' (3:17)
அடுத்து, அல்-குர்ஆன் மனிதனை அவனது ஆளுமையை அறிவு, சிந்தனை ரீதியாகக் கட்டியெழுப்ப விரும்புகின்றது. அந்த வகையில் முதலில் அறிவின் முக்கியத்துவம் அல்- குர்ஆனில் விளக்கப்படுகின்றது. அதன் ஆரம்ப வசனமே அறிவைப் பற்றியும், அறிவிற்குத் துணை     புரிகின்ற வாசிப்பு, எழுத்து, எழுதுகோல் பற்றியும் பேசுவதைக் காண முடிகின்றது.

தொடர்ந்து இறங்கிய வசனமும் எழுத்தினதும்,பேனாவினதும், நூல்களினதும் முக்கியத் துவத்தை வலியுறுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. 'நூன், பேனாவின் மீது சத்தியமாக! ஆதனைக் கொண்டு அவர்கள் எழுதியவை மீது சத்தியமாக' (60:1)

முதல் மனிதன் ஆதம் (அலை) அவர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களுக்கு முதலில் வழங்கிய அருட்கொடை அறிவாகும் என்பதை அல்-குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றுது: 'மேலும், ஆதமுக்கு அவன் (பொருட்களின்) பெயர்கள் அனைத்தையும் கற்றுக் கொடுத்தான்'(1:31)


ஆதம் (அலை) அவர்கள் இவ்வறிவின் காரணமாகவே மலக்குகளை விட உயர்ந்தவராக மாறினார் என்பதை தொடர்ந்து வரும் வசனம் கீழ்வருமாறு விளக்குகிறது:

' பின்னர் அவற்றை (அல்லாஹ்) வானவர்கள் முன் வைத்து 'நீங்கள் கூறுவது உண்மையாயின் இவற்றின் பெயர்களை நீங்கள் தெரிவியுங்கள்' எனக் கூறினான். அவர்கள் (அதற்கு) ' நீ மிகத் தூய்மையானவன்; நீ எங்களுக்குக் கற்பித்தவற்றைத் தவிர எதைப் பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை; நிச்சயமாக நீயே நன்கறிந்தவன்; தீர்க்கமான அறிவுடையவன்' எனக் கூறினார்கள்'( 1:32)

ஆதம் (அலை) அவர்கள் மலக்குகளை விட அறிவில் உயர்ந்தவர்களாக விளங்கிய காரணத் தினாலேயே அன்னாருக்கு 'சுஜூது' செய்யுமாறு அல்லாஹ் அவர்களைப் பணித்தான். ஸூரதுல் பகராவில் தொடர்ந்து வரும் வசனம் இவ்வுண்மையை விளக்குகின்றது.


' மேலும் நாம் மலக்குகளிடம்,'ஆதமுக்கு நீங்கள் சுஜூது செய்யுங்கள் எனக் கூறிய போது இப்லீஸைத் தவிர இவர்கள் (அனைவரும்) சுஜூது செய்தார்கள்.....' (1:34)

நபி மூஸா (அலை) அவர்கள் 'உலுல் அஸ்ம்' என்றழைக்கப்படும் ஆறு பெரும் திட உறுதி பூண்ட இறைத் தூதர்களில் ஒருவராவார். அத்தகைய உயர் அந்தஸ்தைப் பெற்றிருந்த அவர்கள் அறிவு ஞானத்தைப் பெற்றிருந்த ஓர் இறையடியாரை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கண்டு பிடித்து பொறுமையுடன் அவரிடம் அறிவைப் பெற்ற கதையை அல்-குர்ஆனின் அல்-கஹ்ப் எனும் அத்தியாயம் குறிப்பிடுகின்றது.

அறிவு எனும் பொருள்படும் 'இல்ம்'  என்ற பதம் அல்-குர்ஆனில் 80 இடங்களில் இடம் பெற்றுள்ளது. இப்பதத்தில் இருந்து பிறந்த சொற்களோ அல்-குர்ஆனில் பல நூறு தடவைகள் வந்துள்ளன. அறிவு என்னும் கருத்தைக் கொடுக்கும் அல்-அல்பாப்  எனும் சொல் அல்- குர்ஆனில் 16 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பொருளைத் தரும் அந்-நுஹா  என்ற சொல் இரு தடவைகள் வந்துள்ளன. அல்-குர்ஆனில் இடம்பெற்றுள்ள பகுத்தறிவு என்ற பொருளைக் கொடுக்கின்ற அல்-அக்ல்  என்ற வினையடியிலிருந்து பிறந்த சொற்களின் எண்ணிக்கை 49 ஆகும். சிந்தனை என்ற கருத்தில் பயன்படுத்தப்படும் அல்- பிக்ர்  என்ற சொல்லிலிருந்து பிறந்த 18 சொற்களும் இடம் பெற்றுள்ளன; அல்- பிக்ஹ் (விளக்கம்) என்ற பதத்திலிருந்து பிறந்த 21 சொற்களும் காணப்படுகின்றன. அல்- ஹிக்மா (ஞானம்) என்ற பதம் 20 தடவைகள் வந்துள்ளதுடன், ஆதாரம் என்னும் பொருள்படும் அல்- புர்ஹான்    என்னும் சொல் 7 தடவைகளும் அல்-குர்ஆனில் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் 'ஆராய்தல்','நோக்குதல்','சிந்தித்தல்' போன்ற கருத்துக்களைத் தரும் பல சொற்களும் அல்-குர்ஆனில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன.

சிந்திக்கவும் ஆராயவும் மனிதனைத் தூண்டுகின்ற பல வசனங்களை அல்- குர்ஆனில் காண முடிகின்றது.
'அவர்கள் சிந்திக்க மாட்டார்களா?'
'நீங்கள் யோசனை செய்வதில்லையா?'
'அறிவுள்ள, சிந்திக்கின்ற மனிதர்களுக்கே இதில் அத்தாட்சி உண்டு'
'இது அறிவுள்ளவர்களுக்கே'
'இது சிந்தனைத் தெளிவுள்ளவர்களுக்கே'
போன்ற அமைப்பில் முடிவடைகின்ற அதிகமான வசனங்களை அல்-குர்ஆனில் பரவலாகக் காண முடியும்.
ஆன்மீகமும், அறிவும் ஒன்றோடொன்று இணைந்தவைகளாகும். ஆளுமையை உருவாக்கும் இரு அடிப்படைக் கூறுகளாக இவை காணப்படுகின்றன. இவையிரண்டையும் பிரிப்பது பிழையானதாகும். ஏனெனில், மனிதனது நடத்தை என்பது அவனது சிந்தனையின் வாழ்வு- பிரபஞ்சம்-மனிதன் ஆகியவற்றைப் பற்றிய அவனது கருத்தின் வெளிப்பாடாகும்.

இதனால் தான் அல்-குர்ஆன் இவையிரண்டையும் பல இடங்களில் இணைத்துள்ளதுடன் சில போது அறிவை,ஈமானிலும் முற்படுத்திக் கூறியிருப்பதனை அவதானிக்க முடிகின்றது.

'எவர்களுக்குக் கல்வியறிவு கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவர்கள் நிச்சயமாக இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மை என்று உறுதியாக அறிந்து, விசுவாசித்து, மனப்பூர்வமாகவே அவனுக்கு வழிப்படுகின்றனர்.'  (22:54)

ஆளுமையின் மேலுமொரு கூறான பண்பாடு பற்றியும் அல்-குர்ஆன் பேசுகின்றது. பண்பாட்டு ரீதியில் மனிதனது ஆளுமை கட்டியெளுப்பப்பட வேண்டியதன் அவசியத்தையும் அது வலியுறுத்துகிறது. நெஞ்சுரம், வாய்மை, துணிச்சல், நேர்மை, உறுதி, நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல், சுத்தம் பேணல்,சட்டத்தையும் ஒழுங்கையும் பேணல் போன்ற பல பண்புகளைப் பற்றி அல்-குர்ஆன் பேசுகிறது. குறிப்பாக அல்-குர்ஆனிய மனிதனின் ஆளுமைக் கு உரமூட்டும் 4 பண்புகளைக் குறிப்பிட முடியும்.

'ஸப்ர்' எனும் பொறுமையும், சகிப்புத் தன்மையும்
'ஸபாத்' எனும் உறுதியும், ஸ்திரத் தன்மையும்
'அமல்' எனும் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும்
'பத்ல்' எனும் தியாகமும், உழைப்பும்
அல்-குர்ஆன் 'ஸப்ரை' வெற்றியாளர்களின் ஓர் அடிப்படைப் பண்பாகக் குறிப்பிடுகின்றது. லுக்மான் (அலை) அவர்கள் தனது மகனுக்குச் செய்த உபதேசங்களில் ;ஸப்ரும்' இடம் பெற்றுள்ளமையைக் காண முடிகின்றது.

'அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு. நன்னையை ஏவித் தீமையை விலக்கு. உனக்கேற்பட்ட துன்பங்களைச் சகித்துக் கொள். இவை உறுதியான விடயங்களில் உள்ளவையாகும்.'     (31:17)

மேலும், போராளிகள் பிரார்த்தனையாக 'ஸப்ர்' அமைவதனை அல்-குர்ஆன் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றது,
' எங்கள் இறைவனே! நீ எங்கள் மீது பொறுமையைச் சொரிவாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! நிராகரிக்கும் இம்மக்கள் மீது (வெற்றி பெற) நீ எங்களுக்கு உதவி செய்வாயாக!'(2: 250)

இரண்டாவது பண்பான 'ஸபாத்தை' தனது இலட்சியப் பாதையில், அது எவ்வளவு நீண்டதாக இருப்பினும் ஸ்திரமாக நிலைத்து நிற்பதைப் பற்றி அல்-குர்ஆன் விளக்குகின்றது. ஆரம்பகால நபித்தோழர்களிடத்தில் காணப்பட்ட இப்பண்பை அது சிலாகித்துப் கூறுகின்றது.

'விசுவாசிகளில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்விடம் தாம் செய்த உடன் படிக்கையை உண்மையாக்கி வைத்தார்கள். அவர்களில் சிலர் (வீரமரணமடைந்து) தமது இலக்கை அடைந்து விட்டனர். வேறு சிலர் அதனை எதிர்பார்த்து நிற்கின்றனர். அவர்கள் (தமது) வாக்கை ஒரு சிறிதும் மாற்றவில்லை.'  (33:23)

அடுத்த பண்பான 'அமல்' எனும் இறுதி வெற்றி அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கே கிட்டும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் அது விளக்குகின்றது.
'வழி தவறியோரைத் தவிர வேறு எவர்தான் இறைவனது அருளில் நம்பிக்கை இழக்க முடியும்!'( 15:56)


இறுதிப் பண்பான 'பத்ல்' தியாகம் பற்றி விளக்குகின்ற பல வசனங்களை அல்-குர்ஆனில் காண முடியும். காலம், நேரம், பணம், சக்தி ஆகியவற்றை இறைபாதையில் செலவு செய்ய வேண்டியதன் அவசியத்தை அல்-குர்ஆன் ஆங்காங்கே வலியுறுத்தி நிற்கின்றது.

மனிதனது ஆளுமை முழுமை பெற உடலாரோக்கியமும் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்காமலில்லை. இதனாலேயே அல்-குர்ஆன் உடலாரோக்கியம் பேணல், அதன் தேவைகளைக் கவனித்தல், அதற்கு வலுவூட்டல் போன்றவற்றின் அவசியத்தைப் பற்றிப் பேசுகின்றது. உதாரணமாகக் கீழ்வரும் அல்-குர்ஆன் வசனத்தைக் கவனிப்போம்.

'(நபியே!) கூறும்: அடியார்களுக்காக அல்லாஹ் நெறிப்படுத்தியுள்ள அலங்காரங்களையும் நல்ல ஆகாரங்களையும் ( கூடாதவையென) விலக்குவோர் யார்' (7:32)

உடம்புக்குத் தீங்கையும், கேட்டையும் ஏற்படுத்தக் கூடியவற்றைத் தவிர்க்குமாறு அல்-குர்ஆன் பணிக்கின்றது.
' மேலும், நீங்கள் விபச்சாரத்தை நெருங்கவும் வேண்டாம்' ( 17:32)

இவ்வாறு அல்-குர்ஆன் தான் காண விரும்பும் முழுமையான ஆளுமை பெற்ற மனிதனுக்குத் தேவையான அனைத்து அடிப்படைகளையும் அழகுற விளக்கியுள்ளதைக் காணலாம்.
இறைவழிகாட்டலின் துணையற்ற உலோகாயுதக் கோட்பாடுகளின் அடிப்படையில் எழுப்பப்பட்ட அறிவியலினதும், நாகரிகத்தினதும் மோசமான விளைவுகள் மனித வாழ்வை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் மனித சமூகம் தான் அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைத்து அவலங்களிலிருந்தும் விடுபட்டு ஏற்றமிகு வாழ்வைப் பெற விரும்பினால் இறைமறை அல்-குர்ஆனை ஏகவழிகாட்டியாக ஏற்று, நம்பி கடைபிடிப்பதைத் தவிர அதற்கு மாற்று வழியில்லை.

sheikhagar.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக