சனி, 18 ஆகஸ்ட், 2012

லாற்று வரைவியலில் முஸ்லிம்களின் பங்கு


வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும் என்பதை உலகிற்கே வழிகாட்டியாக இருந்து முஸ்லிம்கள் விளக்கியுள்ளார்கள்.

 "ஆராயாமல் செய்திகளைப் பரப்பாதீர்கள்" என்ற இறைவனின் கட்டளைக்கு இணங்கியே இவர்கள் வரலாற்றை அணுகியுள்ளனர். வரலாற்றை வரையக்கூடிய கலை தான் "வரலாற்று வரைவியல்"(Historiagraphy). வரலாற்றை எழுதுவதற்கான முறைமையையும் உலகிற்குக் கற்றுத் தந்தவர்கள் முஸ்லிம்களே. இத்தகைய பெருமைக்குரிய முஸ்லிம் வரலாற்று அறிஞர்களில் சிலரை இந்தக் கட்டுரையில் காண்போம். எதிர்காலத் தலைமுறைக்கு வழிகாட்டுவோம்.


முஸ்லிம் வரலாற்று வரைவியலின் தோற்றம் என்பது முஹம்மது நபி(ஸல்) அவர்களின் காலத்திலேயே நிறுவப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தங்களின் கைகளாலேயே வரலாற்றை எழுதத் துவங்கினர். அதாவது, தங்களின் பாரம்பரிய வரலாற்றினைத் தாங்களே தொகுத்து விடுவர். மேலும் முஹம்மத்(ஸல்) அவர்களுடனான தங்களின் பாரம்பர்ய தொடர்புகளைப் பற்றிய வரலாற்றினைப் பதிவு செய்து வந்தார்கள்.(நபிமொழி அறிவிப்பாளர் தொடர் வரிசை)

ஆரம்ப கால முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்கள் தங்களின் மார்க்கம் மற்றும் அரசியல் சார்ந்த வரலாற்றில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வந்தனர்.

இவர்கள் பெரும்பாலும் நபி(ஸல்) அவர்களின் வரலாற்றையும் முஸ்லிம்களின் வெற்றிகளைப் பற்றியும் எழுதி வந்தார்கள்.அத்துடன் இஸ்லாமியக் கலாச்சாரம், அரசியல் வளர்ச்சி, கலீஃபாக்களின் காலத்தில் அவற்றின் நிலை ஆகியவற்றையும் பதிவு செய்தார்கள்.

நபி(ஸல்) அவர்களைப் பற்றி முதலாவதும் முக்கியத்துவமும் வாய்ந்த வரலாற்றை எழுதியவர் இப்னு இஸ்ஹாக். இவர் எழுதிய நூலின் பெயர்: "The Biography of the Prophet" இதில் நபி(ஸல்) அவர்களுடைய பாரம்பரியம், இஸ்லாத்தின் தோற்றம், வளர்ச்சி போன்றவற்றைப் பதிவு செய்துள்ளார். அவருடைய இந்த நூலானது சிறப்பு வாய்ந்ததாகவும் பின்னர் வந்த முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்கள் அந்த நூலில் உள்ள விஷயங்களை சுதந்திரமாக எடுத்தாள்வதற்கும் உரிமை அளிக்கப்பட்டிருந்தது. முஹம்மது(ஸல்) அவர்களைப் பற்றிய மற்றுமொரு வரலாற்று நூல் இப்னு ஹிஷாம் எழுதிய "Biography of Prophet(Sal)". இந்த நூலிலுள்ள பெரும்பாலான விஷயங்கள் இப்னு இஸ்ஹாக் உடைய நூலிலிருந்து எடுத்து ஆளப்பட்டவையே.

பெரும்பாலான முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான போர்களையே பதிவு செய்துள்ளார்கள். அப்பாஸிய கலீஃபாக்களின் ஆஸ்தான வரலாற்றாசிரியர் அல் வாஹிதி(747-823) இது பற்றி நிறைய நூல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் "History of the Wars of the Prophet" எனும் நூல் புகழ் பெற்றது. மற்றுமொரு சிறந்த வரலாற்றாசிரியர் அல்-பலதூரி ஆரம்ப கால முஸ்லிம் வெற்றிகள் பற்றிய ஒரு வரலாற்றுத் தொகுப்பினை "கான்குட்ஸ் ஆப் தி கண்ட்ரீஸ்" எனும் தலைப்பில் எழுதியுள்ளார். இவை தவிர, புகழ் பெற்ற வரலாற்றாசிரியர்களான அல் தினாவரியின் ஹிஸ்டரி ஆப் அரேபியா அண்ட் பர்ஷியா" நூலும் இப்னு அலீ தாஹிரின் "தி ஹிஸ்டரி ஆப் பாக்தாத் அண்ட் இட்ஸ் கலீப்ஸ்" எனும் நூலும் புகழ் பெற்றதாகும்.

இது போல வரலாற்றின் ஒவ்வொரு கால கட்டத்திலும் உலகப் புகழ் பெற்ற முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்களையும் அவர்கள் தம் நூல்களையும் இந்த உலகம் கண்டுள்ளது. அவர்களில் குறிப்பிட்ட சிலரை மட்டும் இங்கு நினைவு கூர்வது நம்முடைய வரலாறுகளை நமக்குத் தந்த முன்னோர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் அவர்கள் இந்த உலகிற்கு ஆற்றிய சேவைகளைத் தெரிந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.

அல்-தபரீ (838-923)

உலகத் தரம் வாய்ந்த முஸ்லிம் வரலாற்றாசிரியர்களில் மிகவும் முதன்மையானவர் இவரே. இவர் எழுதிய "தி அன்னால் ஆப் தி அபோஸ்டல் அண்ட் கிங்ஸ்" எனும் முன்னோர்களைப் பற்றிய வரலாற்று நூல் மிகவும் புகழ் பெற்றதாகும்.

அந்த நூலில் கி.பி. 915 வரை வாழ்ந்த முன்னோர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைப் பதிவு செய்துள்ளார். இதற்காக அவர் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளார்.

மேலும் ஷரீஅத் சட்டத்தில் ஆழ்ந்த அறிவையும் பெற்றுள்ளார். கால அட்டவணையை முறையாகவும் நேர்த்தியாகவும் பயன்படுத்திய முதல் முஸ்லிம் வரலாற்றாசிரியரும் இவரே. அல் தபரீ வரலாற்று ஆய்விற்காகப் பயன்படுத்திய நெறிமுறைகள் இன்றளவிலும் பெரும்பாலான வரலாற்றாசிரியர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.

அல் மஸ்ஊதி

மத்திய காலப்பிரிவில் வாழ்ந்த உலகப் புகழ் பெற்ற முஸ்லிம் வரலாற்றாசிரியர் இவர். மேலும் இவர் சிறந்த Enotclopaedist என்றும் அழைக்கப்படுகிறார். அல் தபரீ பயன்படுத்திய கால அட்டவணையை இவர் மன்னர்கள், ஆட்சி மற்றும் தலைப்புகளின் கீழ் அதனைப் பிரித்து எழுதியுள்ளார்.

இவருடைய நூல்களில் சிறந்தது "Meadow of Gold" ஆகும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் இவர் அரசியல் நடவடிக்கைகளைக் குறிப்பிடும் போது அதனுடன் சேர்த்து மக்களுடைய கலாச்சார மற்றும் சமூக வாழ்வினை இணைத்தே வரலாற்றைத் தந்துள்ளார். இவருடைய வரலாற்று ஆய்வுகளில் அனைவராலும் பொறாமை கொள்ளத்தக்க ஓர் ஆய்வு "Herodotus of the Arabs" எனும் நூலாகும்.

மிஸ்காவைஹி

அரபு வரலாற்று ஆய்வுகள் மிகவும் உச்ச நிலையை அடைந்தது மிஸ் காவைஹியின் எழுத்துகள் மூலமே. ஏனெனில் முன்னர் கூறிய வரலாற்றாசிரியர்களை விட இவர் முதல் தர (நம்பத்தகுந்த) தகவல்களைத் திரட்டுவதில் கைதேர்ந்தவராக இருந்தார்.

தற்போது இதனை Primary Sources என்று கூறுகிறார்கள். குறிப்பாக, நிர்வாகம் மற்றும் இராணுவம் தொடர்பான தகவல்கள். இதனை இவர் எழுதிய "Experiences of the Nations" எனும் நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.

மற்றுமொரு சிறப்பு, இவருடைய பாரபட்சமற்ற தன்மை. மிகச் சிறந்த முஸ்லிம் ஆட்சியாளர்களின் காலத்தில் இவர் வழங்கிய தீர்ப்புகள் மிகவும் நேர்த்தியானவை.

மிக்ரிஷி (1360-1442)

எகிப்தைப் பற்றி எழுதிய முஸ்லிம் வரலாற்றாசிரியர் தான் மிக்ரிஷி. இவர் எகிப்து முஸ்லிம்களின் வரலாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள புவியியல் அமைப்பு போன்றவற்றைத் தந்துள்ளார். இவர் பாதிம்களுடைய மற்றும் மம்லூக் சுல்தான்களுடைய வரலாற்றையும் எழுதியுள்ளார்.

இவருடைய மற்றுமொரு சிறந்த வரலாற்றுப் பங்களிப்பு "Encyclopaedia of Egyptian Biography"  ஆகும். இவர் எழுதிய வரலாற்று நூல்கள் மிகவும் ஆதாரப்பூர்வமானவையாக இருந்த போதிலும் இவர் ஓர் ஆய்வாளர் கிடையாது என்பது தனிச் சிறப்பாகும். ஆயினும் இவர் எழுதிய "இடைக்கால கெய்ரோ" உலகிற்குக் கிடைத்த மிகவும் விரிவான, மதிப்பு வாய்ந்த ஆய்வாகும்.

அல் பிரூனி (973-1048)

முஸ்லிம்களின் பாரம்பர்ய வரலாற்றினை முன்னோர்களின் வரிசைக் கிரமப்படி(chronology) மூலம் ஆய்வு செய்து நூல்கள் வெளியிட்ட மற்றொரு சிறப்புக்குரிய வரலாற்றாசிரியர் தான் அல் பிரூனி. சிலகாலம் இந்தியாவிலும் தங்கியுள்ளார். இந்து கலாச்சாரத்தின் நிலை குறித்து இவர் கி.பி. 1080 -இல் எழுதிய "கிதாபுல் ஹிந்த்" மிகப் புகழ் பெற்றதாகும். இந்துக் கலாச்சாரத்தின் நல்ல - தீய அம்சங்களை அவர் அதில் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இவர் செய்த இந்த ஆய்வு ஆரம்பகால சிலைவணங்கிகளின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள உதவுகிறது.

அலீ அல் தனாகி(969-94)

"Collections of Histories" எனும் நூல் மூலம் சிறப்பு பெற்றவர் தனாகி. முஸ்லிம்களுடைய தொடர்புகளைப் பற்றியும் பின்பற்றப்பட்ட வரலாற்று முறைகள் பற்றியும் இவர் எழுதியுள்ளார். "The History of Damascus" எனும் நூலின் மூலம் புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் அல் ஹஸன்(1121 - 93) ஆவார்.

வரலாறு என்பது மாறக்கூடிய தன்மை கொண்டது. அதற்கென உள்ள தன் சக்தியின் மூலமே அது வளர்ச்சி பெறுகிறது. மேலும் வரலாற்றில் மாற்றம் என்பது சுழற்சி முறையில் ஏற்படும் என்ற கருத்தில் நம்பிக்கை கொண்டவர். சமூகம் மற்றும் உயிரினங்கள் நிர்ணயிக்கப்பட்ட வாழ்க்கையே வாழ்கின்றன. ஒரு சமூகம் இரண்டு நிலைகளைக் கடக்க வேண்டியுள்ளது. ஒன்று ஊரகம்; இரண்டு நகர்ப்புறம். இதில் ஊரகத்திலிருந்து அந்தச் சமூகம் நகரத்திற்கு வரும் போது அதன் உள்ளார்ந்த சக்தி சீரான அளவில் குறைகிறது. இவ்வாறு அதன் சக்தி குறைந்தாலும் கலை, அறிவியல், தொழில்நுட்பம், வாழ்க்கைத் தரம் போன்றவற்றில் அபரிதமான வளர்ச்சியைக் காண்கிறது. அதே நேரத்தில் தனது முரட்டுப் பிடிவாதம் மற்றும் மூர்க்கத்தனத்தை இழக்கிறது. சுருங்கக் கூறின் செல்களின் வளர்ச்சியைப் போல சிலர் பிறப்பதும் பின்னர் இறப்பதும் தத்துவார்த்த முறைகளிலேயே நடைபெறுகிறது என வரலாற்றினை விளக்குகிறார்.

ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு விதத்தில் வேறுபடுகின்றன. அதற்கான காரணத்தை அதன் சுற்றுச்சூழல், வானிலை, அந்த நிலத்தின் தன்மை போன்றவற்றின் மூலம் ஆராய முற்படுகிறார் இப்னு கல்தூன். மதத்தின் முக்கியத்துவத்தை அறிந்து வைத்துள்ளார். தூதுத்துவத்திற்கும் மதரீதியான ஆளுமைகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார். வரலாற்றுக்கான தெய்வீகக் காரணங்களை இவர் ஏற்றுக் கொள்ளவில்லை. மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் தனது "Universal History" எனும் நூலில் தருகிறார். பேராசிரியர் பர்னஸ் இவரைப் பற்றி கூறும் போது, "மத்திய கால வரலாற்று வரைவியலாளர்களில் இப்னு கல்தூன் ரோஜர் பேகனாக இருந்தார்".

பேராசிரியர் ராபர்ட் பிளிண்ட் கூறுகையில், "இப்னு கல்தூன் வரலாற்று வரைவியலுக்கு மிகப் பெரிய பங்களிப்பைச் செய்துள்ளார். வரலாற்றை சிறப்பு அறிவியலாக மாற்றிய பெருமை இப்னு கல்தூனுக்கு உண்டு" என்கிறார்.

இவருடன் மத்திய காலப் பிரிவில் (அ) இடைக் காலத்தில் வாழ்ந்த மற்ற புகழ் பெற்ற முஸ்லிம் வரலாற்றாசிரியர்களில் சுல்தான் ஸலாஹுத்தீன் வரலாற்றை எழுதிய பஹாஅத்தீன், உலகப் புகழ் பெற்ற முஸ்லிம்களின் வரலாற்றை எழுதிய இப்னு சவாது, அறிஞர்களின் அகராதி எழுதிய யாகூத், வரலாற்று அகராதி எழுதிய இப்னு கல்லிக்கன் போன்றோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். இப்னு கல்லிக்கன் சுமார் 865 புகழ்பெற்ற முஸ்லிம்களைப் பற்றிய தகவல்களைத் தொகுத்துள்ளார்.

நவீன கால வரலாற்றாசிரியர்களில் இந்தியாவைச் சேர்ந்த முஹம்மத் இக்பால் குறிப்பிடத்தகுந்தவர். வரலாற்றின் பொருள் மற்றும் தன்மை குறித்து இவர் தனது The Reconstruction of Religious Thought in Islam (1930)எனும் நூலில் விளக்கியுள்ளார். வரலாற்றின் முக்கியத்துவம் கடவுளிடம் மனிதனை இணைப்பது தான் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். தனித்தன்மைக்கு வரலாற்றில் மிக முக்கியத்துவம் கொடுக்கிறார். இறைவன் தான் இந்த உலகைப் படைத்து மனிதன் வாழ்வதற்கான வசதிகளைச் செய்து கொடுத்துள்ளான் என்பதில் உறுதி கொண்டிருந்தார்.

இவரைப் போல இன்னும் பல முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் இந்த உலகிற்குப் பல நன்மைகளைச் செய்துள்ளார்கள். இவர்களைப் போன்ற ஆராய்ச்சியாளர்கள் இந்த முஸ்லிம் உம்மத்தில் இன்றைய இளைஞர்களிலிருந்து உருவாக வல்ல இறைவன் அருள்பாலிப்பானாக.

நன்றி: (16-31 ஆகஸ்ட் 2007 சமரசம் இதழ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக