இமாம் ஹஸனுல் பஸரீ (ரஹிமஹுல்லாஹ) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்: “மனிதா! நீ சில நாட்களின் தொகுதி என்பதை அறிந்து கொள். உனக்கென்று சில நாட்கள் இருக்கின்றன. அவற்றின் தொகுதியாகவே நீ இருக்கின்றாய். ஒவ்வொரு நாளும் முடிவடைய நீயும் முடிந்து உனக்குரிய நாட்களின் தொகுதியும் முடிவடைந்து உனது வாழ்க்கை நிறைவு பெற்று இவ்வுலகை விட்டுப் பிரிகின்றாய்.”
அல்லாஹ் எமக்கருளிய நாட்தொகுதியில் எத்தனை நாட்கள் முடிவடைந்து விட்டன என்பது எமக்குத் தெரியாது. எனினும், எஞ்சியிருக்கும் மிகப் பெறுமதி வாய்ந்த காலத்தை எந்த வகையில் பயன்படுத்துவது என்பது பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் சிந்திக்க வேண்டும்.
இந்தவேளையிலே முஹர்ரம் புத்தாண்டிற்கு அடிப்படையாக அமைந்த ஹிஜ்ரத் நினைவுகூரத்தக்கது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கையில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. நபியவர்களின் பிறப்பு, அவரின் மரணம், பத்ர் யுத்தம் மக்கா வெற்றி முதலான முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நபியவர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கின்றபோது, மனித சமுதாயத்தின் தலைவிதியை தீர்மானித்த நிகழ்வுகள் அவரின் வாழ்க்கையில் இருக்கின்றபோது, ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களுடைய ஆண்டு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது தீர்மானத்தின் பின்னணியில் ஏராளமான நியாயங்கள் உள்ளன.