முஃதஸிலாக்கள் பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து தத்துவ விசாரணையில் ஈடுபட்டதனால் மார்க்க விடயங்களில் பல தவறான விடயங்கள் இடம் பெறலாயின. அவர்களது கருத்துக்கள் மக்களது சிந்தனையைக் குழப்பக் கூடியதாக அமைந்திருந்தன. இதனால் மார்க்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்து விடுவார்கள் என சில அறிஞர்கள் கருதினர். முஃதஸிலாக்கள் அரச ஆதரவுடன் பலாத்கார முறையில் தமது கருத்துக்களை பரப்பி வந்ததனால் பொது மக்களும் அவர்களை வெறுத்தனர். இச்சந்தர்ப்பத்தில் முஃதஸிலாக்களின் சிந்தனைப் போக்கை புகஹாக்கள் தீவிரமாக எதிர்க்க முற்பட்டனர். இவ்விருசாராரும் தமது போக்கில் தீவிரமாக நடந்து கொண்டதனால் மற்றொரு கொள்கை உருவாகலாயிற்று. இதை உணர்ந்த மற்றொரு பிரிவினர் இவ்விரு சாராருக்குமிடையில் சமரசம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர். இவர்களே இஹ்வானுஸ் ஸபா என அழைக்கப்பட்டனர். இவர்களது முயற்சி சில அறிஞர்களை சிந்திக்கத் தூண்டியது. இவ்வாறான சமூகப் பணியில் தான் அஷ்அரிய்யா இயக்கம் தோன்றியது.
இவ்வியக்கத்தின் ஸ்தாபகரான அபுல் ஹஸன் அஷ்அரி காணப்படுகிறார். ஹி. 260 ல் பஸராவில் பிறந்த இவர் இளம் வயதிலே தந்தை இஸ்மாயிலை இழந்து விட்டார். பின் அவரது தாயார் முஃதஸிலாக்களின் பிரதான அறிஞர்களில் ஒருவரான அபுல் அலா ஜுபாலியை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஜுபாலியின் வீட்டில் இமாமவர்கள் வாழ நேர்ந்தது. மேலும் ஆரம்பத்தில் ஜபாலியிடம் கல்வி கற்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. ஜுபாலியின் நம்பிக்கைக்குரிய மாணவராக காணப்பட்ட இமாமவர்கள் அபூ இஸ்ஹாக் அல் முர்ஸி என்பவர் நிகழ்த்திய பாட வகுப்புக்களிலும் கலந்து கொண்டார். பின் பக்தாதில் குடியேறி முர்ஸியின் முக்கிய மாணவர்களில் ஒருவராக மாறினார்.
முஃதஸிலாக் கொள்கையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்த மாணவர்கள் தர்க்கம் போன்ற துறைகளிலும் மிகுந்த புலமை பெற்றிருந்தார். இதனால் ஜுபாலி அவரிடம் விவாதம் புரிய வருபவர்களை அஷ்அரியிடம் காட்டி விடும் வழக்கமுடையவராக இருந்தார். இதனால் முஃதஸிலாக் கொள்கை பற்றிய தெளிவான விடயங்களை மென் மேலும் பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது. தமது 40 வயதை அடையும் வரை முஃதஸிலாக் கொள்கையை ஏற்றிருந்த இமாமவர்கள் அதன் வளர்ச்சிக்காக உழைத்து வந்தார்கள். 40 வயதைத் தொடர்ந்து சுமார் 02 வருடங்கள் வீட்டை விட்டு வெளிச் செல்லாது தாம் விசுவாசித்திருக்கும் கொள்கை குறித்து ஆழமாகச் சிந்தித்தார். பின் தன் கொள்கை பிழையானது என விளங்கி தமது ஆசான் ஜுபாலியுடன் விவாதம் புரிந்து நிறுவினார்கள். விவாதத்தில் ஜுபாலி தோல்வியடையவே பொது மக்களுக்கு தமது நிலைப்பாட்டை விளக்கவும் முஃதஸிலாக் கொள்கை பிழையானது என விளக்கவும் முற்பட்டார்கள். இது வரை தான் குர்ஆன் படைக்கப்பட்டது என்றும் எனது செயல்களுக்கு நானே பொறுப்பாளி எனவும் நம்பி வந்தேன், ஆனால் இப்பொழுது அது பிழையானது என்று உணர்ந்து கொண்டேன் . முஃதஸிலாக்களிடம் சென்று அவர்களது கொள்கை பிழையான நம்பிக்கைகளைக் கொண்டது என சுட்டிக் காட்ட துணிந்து விட்டேன் என பிரச்சாரம் செய்தார்கள். இதனைத் தொடர்ந்து முஃதஸிலாக்கள் கூடியிருக்கும் இடங்களுக்குச் சென்று அவர்களது பிழையான கருத்துக்களை கண்டித்ததோடு , ஸஹாபாக்கள் சென்ற வழி நேரான வழி என்றும் பகுத்தறிவு வஹிக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும் எனவும் விளக்கினார்கள்.
பகுத்தறிவுக்கும் வஹிக்குமிடையில் சமரசம் காணுவதன் முலம் தான் விமோசனம் அடைய முடியும் என்ற கருத்தினடிப்படையில் வஹியையும் பகுத்தறிவையும் துணையாக கொண்டு வஹியை நம்ப் வேண்டும் என்றும் பின்னர் பகுத்தறிவினூடாக அதற்கு ஆதாரம் காட்ட வேண்டும் எனவும் கூறினார்கள்.
இமாமவர்கள் முஃதஸிலாக்கள்,பாதினீக்கள், சீயாக்கள் ,சிந்தீக்கள் போன்ற பல்வேறு பிரிவினர் இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாட்டுக்கு கொடுத்த பிழையான விளக்கத்தை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்கள். ஏற்கனவே முஃதஸிலாக்களிடம் இருந்து தமது வழியில் வெற்றி பெறுவது சிரமமாகத் தெரியவில்லை . பிரச்சாரத்தின் மூலம் , நூல்கள் எழுதுவதன் மூலம் தமது கருத்தை இமாமவர்கள் பரப்பி வந்தார்கள். இந்த வகையில் சுமார் 300 நூல்களை எழுதியதாக இப்னு புராத் என்ற அறிஞர் குறிப்பிடுகின்றார். இவரது நூற்களில் 99 நூற்களின் பெயர்களை இப்னு ஹிஸான் குறிப்பிடுகின்றார். இவர் மரணிப்பதற்கு 04 வருடங்களுக்கு முன் எழுதி முடித்த அல் அமல் என்ற நூலில் 68 நூற்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். அல்குர்ஆனுக்கு 30 பாகங்களைக் கொண்ட ஒரு விரிவுரையையும் எழுதி வெளியிட்டார்.
மத்ஹப்களின் செல்வாக்கு வளர்ந்த காலத்தில் வாழ்ந்த இமாமவர்கள் ஷாபீஈ மத்ஹபைப் பின்பற்றுபவராக காணப்பட்டார். இதனால் சாபீஈ மத்ஹபைச் சேர்ந்தவர்கள் மத்தியில் அதிக வரவேற்புக் கிடைத்தது. ஹன்பலி மத்ஹபைச் சேர்ந்தோர் இவரது கருத்துக்களை புறக்கணித்ததுடன் அக்காலத்தில் சமர்கந்தில் வாழ்ந்த அல் மாதுரியின் கருத்துக்களை ஆதரித்து வந்தனர். இமாம் மாதுரி, அபுல் ஹஸன் ஆகியோர் சம காலத்தவர்களாவர். முன்னையவர் ஒரு மிதவாதியாகவும் அடுத்தவர் ஒரு தீவிரவாதியாகவும் காணப்பட்டனர். அவ்விருவருக்குமிடையே ஒரு சில விடயங்களில் தவிர ஏனைய விடயஙக்ளில் கருத்து வேற்றுமை நிலவின. இவ்விருவரையும் போன்று ஸ்பெய்னில் ழாஹிரீக்களும் எகிப்தில் தஹாவீக்களும் இவ்வாறான கருத்துக்களைப் பரப்பி வந்தனர். எனினும் இமாம் அஷ்அரியின் கருத்தே எல்லா வகையிலும் சிறப்புற்று விளங்கியது. பொது மக்களின் பரவலான ஆதரவும் இமாமவர்களுக்கே கிடைத்தது.
இமாம் அஷ்அரி தமது காலத்தில் சொற் பொழிவுகளின் மூலமும் நூல்களின் மூலமும் தமது கொள்கையைப் பரப்பி அதனை வலியுறுத்தி வந்ததைப் போன்றே அவரைப் பின்பற்றி அறிஞர்களான அபூ பக்கர், அல் பாகிர்லானி , அர்ராஸி, அல் கஸ்ஸாலி, முஹம்மத் , அஷ்ஷரஹ் புஸ்தானி போன்றோரும் அக்கொள்கையைப் பரப்பி அதனை வலியுறுத்தி வந்தனர். என்றாலும் ஹி .302 வரையில் முஃதஸிலாக் கொள்கையுடன் போட்டியிட வேண்டியிருந்தமையால் அவ்வளவு விரைவாக இமாம் அவர்களின் கொள்கை பரவவில்லை. அவ்வேளையில் முஃதஸிலாக்களின் கொள்கையை தீவிரமாக எதிர்த்து வந்த அறிஞர்களும் புகஹாக்களும் இமாம் அஷ்அரியின் கருத்துக்களை வரவேற்று அவற்றின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளித்தனர். என்றாலும் சுல்தான் அஸதுத் தெளலா அக்கொள்கையை அங்கீகரித்து அரச கொள்கையாக ஏற்ற போது அது துரிதமாக வளர ஆரம்பித்தது.
ஹி. 03 ம் நூற்றாண்டின் மத்திய பகுதி வரை எல்லா வகுப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இக்கொள்கை பின்னர் அரச செல்வாக்குடன் வளர்ச்சி கண்டது. இமாம் சஹ்ரஸ்தானி தத்துவப் போக்கில் வாதாடி இதனை நிறுவினார். இப்னு அஸாகிர் பிடிவாதமாயிருந்து பலாத்காரப் போக்கில் இதனை மக்கள் மத்தியில் திணிக்க முற்பட்டார் எனக் கலாநிதி அமீர் அலி குறிப்பிடுகின்றார். ஏன் ? எப்படி ? என்ற விசாரணையின்றி சில வேண்டுகோள்களை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையை இப்னு அஸாகிர் கொண்டிருந்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.
சல்ஜூக்கிய ஆட்சியின் ஸ்தாபகரான கஃரல் பெக்கின் இக்கொள்கை பாதிக்கப்பட்டது. இக்கொள்கையின் ஆதவரவாளர்கள் சந்தேகிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். அறிஞர்கள் பலர் கொடுமைப்படுத்தப்பட்டனர். சிலர் நாடு கடத்தப்பட்டனர். ஆனால் பின் வந்த சல்ஜூக்கிய அரசரான அர்ஸலானின் காலத்தில் இக்கொள்கை மீண்டும் வளர்ச்சி பெற ஆரம்பித்தது. நாடு கடத்தப்பட்ட அறிஞர்கள் திருப்பி அழைக்கப்பட்டனர். கல்வியை வரவேற்ற இவ்வரசனின் காலப் பகுதியில் அறிஞர்களது பெயர்களால் கல்லூரிகளும் பாடசாலைகளும் ஸ்தாபிக்கப்பட்டன. அல்ப் அர்ஸலானின் அமைச்சராக இருந்த நிஸாமுல் முல்க் என்பவர் நிஸாமிய்யாப் பல்கலைக்கழகத்தை நிறுவி இக்கொள்கையின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்தார். இதே போல் ஐய்யூப்பிக்களதும் மம்லூக்கியர்களதும் காலப் பகுதியில் அஷ்அரிய்யாக் கொள்கை தீவிர வளர்ச்சி கண்டது. குறிப்பாக, எகிப்து, ஸிரியா, ஈராக் போன்ற பகுதிகளில் அக்கொள்கை ஆதிக்கம் பெற்று விளங்கியது. இப்னு கல்தூனின் காலத்தில் மேற்காபிரிக்காவில் செல்வாக்குப் பெற்ற இக்கொள்கை மொறோக்கோ வரை பரவியது.
இமாம் அஷ்அரியைப் பற்றிக் கருத்து வெளியிடும் அறிஞர்கள் அவரது திறமையும் இஸ்லாத்தின் தூய்மையைப் பாதுகாக்க அவர் மேற் கொண்ட நடவடிக்கைகளையும் புகழ்ந்து உரைத்துள்ளார்கள்.
பேராசிரியர் ஹிட்டி அவர் பற்றிக் குறிப்பிடும் போது இல்முல் கலாமின் ஸ்தாபகராக இவரே காணப்படுகின்றார். இதன் மூலம் எத்தனையோ பல சாதனைகளை இவர் நிலை நிறுத்தியுள்ளார் எனப் பாராட்டினார். அபூ பக்கர் அஷ் ஷெய்ராபி குறிப்பிடும் போது ” அல்லாஹ் இமாம் அஷ்அரியை உலகிற்கு அனுப்பும் வரை முஃதஸிலாக்கள் தலை நிமிர்ந்து நின்றனர். அல்லாஹ் இமாம் அவர்களை அனுப்பி முஃதஸிலாக்களின் ஆதிக்கத்தை நிர்மூலமாக்கினான்” என்கிறார்.
இப்னு அஸாகிர் குறிப்பிடும் போது இமாமவர்கள் வரலாற்றில் தோன்றிய முதலாவது வைதீக, தர்க்கவியலாளர் எனப் பாராட்டுகின்றார்.
பொதுவாக அஷ்அரிய்யாக் கோட்பாடுகளில் மிக முக்கியமானவைகளாகபின்வரும் அம்சங்களை இப்னு அஸாகிர் சுட்டிக் கோட்பாடு
1) அல்லாஹ் அவனது அர்ஷில் இருக்கின்றான்.
2) அவனுக்கு அறிவு, பார்வை, கேள்வி, சக்தி போன்ற பண்புகளுண்டு.
3) அவனது கலாம் படைக்கப்பட்டதென்று, எனவே அவனது கலாமான அல்குர்ஆனும் படைக்கப்பட்டதன்று.
4) அவன் மனிதர்கள் நேர்வழியில் செயற்படவே வழி காட்டுகின்றான்.
5) அவனது மெய்மைகளும் பண்புகளும் ஒன்றல்ல. அவை இரண்டும் வித்தியாசமானவைகளாகும்.
6) அவன் பிரபஞ்சத்தை ஆகுக என்ற வார்த்தை மூலம் சிருஷ்டித்தான்.
7) விசுவாசிகள் மறுமையில் அல்லாஹ்வை தமது வெற்றுக் கண்களால் பார்ப்பார்கள். காபிர்களுக்கு அவ்வாறு பார்ப்பதற்கு முடியாது.
8) ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்பவர்கள் முஸ்லிம்களாவர். அவர்கள் பாவம் செய்தால் இஸ்லாமிய சட்ட வரம்பை மீறிய பாவிகளாகவே இருப்பார்களே தவிர மதம் மாறிய காபிர்களாக மாட்டார்கள்.
9) மறுமை நாளில் ஸபாஅத்தால் நரகவாசிகள் சிலர் விடுவிக்கப்படுவார்கள்.
10) சுவர்க்கமும் நரகமும் படைக்கப்பட்டுள்ளன.
11) ஷைத்தான் மனிதனின் பரம விரோதி. அவன் மனிதனை எப்போதும் வழிகெடுப்பான்.
12) அல்லாஹ்வின் உதவி இன்றி மனிதன் சுயமாக செயலாற்ற முடியாது. அவனது விருப்ப படியே செயலாற்றுகின்றான்.
13) விதிக்கப்பட்ட நேரத்தில் மறுமை நிச்சயம் தோன்றிவிடும். அப்போது அல்லாஹ் மனிதனை கப்ரில் இருந்து எழுப்புவான்.
14) கப்ரில் முன்கர் , நகீர் ஆகிய இரு மலக்குகளாலும் மனிதன் நிச்சயம் விசாரிக்கப்படுவான்.
15) அல்லாஹ் மனிதனின் ஆரம்பம், முடிவு போன்ற யாவற்றையும் மிகத் தெளிவாக அறிவான்.
16) நபிகளார் உடலுடன் தான் விண்ணுலக யாத்திரை செய்தார்கள்.
17) ஜானாஸாத் தொழுகை மூலம் குறிப்பிட்ட ஆத்மாவுக்கு நன்மை கிடைக்கிறது.
18) பகுத்தறிவை விட வஹிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனெனில் பகுத்தறிவு வஹியை விளக்குவதாக அமைய வேண்டும்.
மேற் குறிப்பிட்ட முக்கிய கோட்பாடுகளை அஷ்அரிய்யாக்கள் கொண்டிருப்பது போன்றே மற்றும் சில விடயங்களில் முஃதஸிலாக்களிலிருந்து வேறுபட்ட கருத்துக்களை கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, முஃதஸிலாக்களது ஐந்து பிரதான கோட்பாடுகளையும் அஷ்அரிய்யாக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
மெய்மை பற்றிய கோட்பாடு
அல்லாஹ்வின் மெய்மையும் பண்பும் முஃதஸிலாக்கள் கூறுவது போல ஒன்றல்ல, அவை இரண்டும் வித்தியாசமானவைகளாகும் என அஷ்அரிய்யாக்கள் கூறுகின்றனர். இவற்றை மனித இயல்போடு தொடர்புபடுத்தி நோக்கினால் தான் முஃதஸிலாக்கள் அவை இரண்டும் ஒன்றென பிழையாக கூறுகின்றனர் என வாதிக்கின்றனர். மனிதனை விடவும் அறிவும் ஆற்றலும் கொண்ட இறைவனின் பண்புகளை மனித இயல்போடு வைத்து தீர்மானிக்க முடியாது என்ற அஷ்அரிய்யாக்களது இக்கருத்தை அபூ ஹுதைலி என்ற முஃதஸில் மறுத்துரைத்து அல்லாஹ்வின் மெய்மையும் பண்பும் வித்தியாசமானதாயின் என்னை மன்னிப்பாயாக எனப் பிராத்திப்பதற்குப் பதிலாக அறிவே என்னை மன்னிப்பாயாக எனப் பிராத்திப்பது சரியாக அமைந்து விடும் என்றார். இதற்கு அஷ்அரிய்யாக்கள் விளக்கமளிக்கும் போது முஃதஸிலாக்கள் தத்துவ அடிப்படையில் நோக்கியதனாலேயே இத்தகைய சந்தேகமான விளக்கங்களைக் கொடுத்தார்கள் என்றும் மெய்மை அன்றி பண்புகளை யாரும் அல்லாஹ்வாக கருதுவதில்லை என்றும் கூறுகின்றனர்.
குர்ஆன் படைக்கப்பட்டது பற்றிய கோட்பாட
அல்குர்ஆனை அல்லாஹ்வின் கலாமாகவும் அது அழியாத நிரந்தரத் தன்மை கொண்டது எனவும் விசுவாசம் கொள்ளும் அஷ்அரிய்யாக்கள் அது படைக்கப்பட்டது என்ற முஃதஸிலாக்களின் கருத்தை எதிர்க்கின்றனர். மெய்மை, பண்புகள் பற்றிய தமது கோட்பாட்டின் அடிப்படையிலேயே இதற்கும் விளக்கம் கூறுகின்றனர். அல்குர்ஆனை அல்லாஹ்வின் கலாம் எனக் குறிப்பிடுவதையும் குன் பயகுன் என்ற இறைவசனத்தையும் ஆதாரமாக கொண்டு தான் நாடியதை படைக்கும் ஆற்றலுடையவன் , ஆனால் ஒரு வார்த்தை மற்றொரு வார்த்தையை படைக்க முடியாது. எனவே குர்ஆன் படைக்கப்பட்டிருக்க முடியாது. அது படைக்கப்பட்டதுமல்ல என விளக்கமளிக்கின்றனர்.
இறைவனை மறுமையில் பார்ப்பது பற்றிய முஸ்லிம்களின் கோட்பாட
இறைவனை மறுமையில் பார்க்க முடியாது என்ற முஃதஸிலாக்களின் கருத்தை அந்த நாளில் சிலருடைய முகங்கள் மிக்க சந்தோஷமுடையதாக தங்கள் இறைவனை நோக்கிய வண்ணம் இருக்கும் என்ற இறைவசனத்தை ஆதாரமாக கொண்டு அஷ்அரிய்யாக்கள் மறுக்கின்றனர். மேலும் முஃஃதஸிலாக்கள் கூறுவது போன்று இறைவன் கட்டுபட்டுத்தான் செயலாற்ற வேண்டும் எனக் கூற முடியாது எனவும் அல்லாஹ்வைப் பார்க்க முடியுமென்றால் பிழை செய்வாயாத , பாவம் புரியாத நபி மூஸா அலை அவர்கள் அவனைப் பார்க்க வேண்டும் எனப் பிராத்திப்பார்களா ? என்றும் கேட்கின்றனர். ஆனால் முஃதஸிலாக்கள் நபி மூஸா அலை அவர்கள் இறைவனைப் பார்க்க கேட்ட போது லன் தரனி என்று இறைவன் கூறிய பதிலை சுட்டிக் காட்டி அவனை மறுமையில் பார்க்க முடியாது என்கின்றனர். மேலும் மறுமையில் அல்லாஹ் பூரண சந்திரனைப் போன்று முஃமின்களுக்கு காட்சியளிப்பான் – திர்மிதி என்ற ஹதீஸை அஷ்அரிய்யாக்கள் சுட்டிக் காட்டி முஃதஸிலாக்களின் கருத்தை மறுக்கின்றனர். அதற்கு முஃதஸிலாக்கள் இந்த ஹதீஸை முதவாதிரானது அல்ல என்றும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறுகின்றனர்.
அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான்
அல்லாஹ் அர்ஷில் இருப்பான் என்ற கருத்தை உருவக கருத்தாகவே நாம் கொள்ள வேண்டும் என முஃதஸிலாக்கள் கூற அதனை நாம் நேரடிக் கருத்தாகவே கொள்ள வேண்டும் என அஷ்அரிய்யாக்கள் கூறுகின்றனர். தம் கருத்துக்கு ஆதாரமாக அலல் அர்ஷி இஸ்தவா என்ற குர்ஆன் வசனத்தையும் அல்லாஹ் ஒவ்வொரு இரவிலும் அடிவானத்துக்கு இறங்கி என்னிடம் கேட்போர் உண்டா ? நான் கொடுக்கத் தயாராக இருக்கின்றேன் என்று அதிகாலை வரை சொல்லிக் கொண்டிருக்கின்றான் என்ற ஹதீஸையும் அஷ்அரிய்யாக்கள் சுட்டிக் காட்டி முஃதஸிலாக்கள் கூறுவது போல் அல்லாஹ் எங்கும் இருப்பான் என்று கூறுவதாயின் அவன் அருவருப்பான, அசுத்தமான இடங்களிலும் இருப்பானா ? என வினா எழுப்புகின்றனர்.
மனிதனின் செயற் சுதந்திரம்
மனிதனது செயற் சுதந்திரம் பற்றி விவாதிக்கும் அஷ்அரிய்யாக்கள் மனிதனின் செயல்கள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அவனுக்கு சுதந்திரமாக செயற்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்கின்றனர். ஒருவன் ஒரு செயலைச் செய்கின்றான் என்றால் அதன் விளைவைப் படைப்பது அல்லது அதனைப் பூரணப்படுத்தி வைப்பது இறைவனின் நாட்டத்தைப் பொறுத்தே ஆகும். அதாவது ஒரு செயலை நாடுவதும் அதற்காக உழைப்பதும் மனிதனைப் பொருத்தது. இறைவன் கொடுத்த ஆற்றலால் அதனை மனிதன் செய்கின்றான். ஆனால் அச்செயலை முடித்து வைப்பது அல்லது அதன் விளைவைப் படைப்பது இறைவனைப் பொருத்ததாகும் என்கின்றனர்.
உதாரணமாக மனிதன் சாப்பிடுகின்றான் என்றால் அவனது பசியைத் தீர்த்து வயிற்றை நிரப்பும் செயலை இறைவனே படைக்கின்றான். இதே போல் ஒருவன் படிக்கின்றான் என்றால் அதன் மூலம் அறிவு அல்லது பயன் இறைவனால் படைக்கப்படுகின்றது என்பதே இதன் கருத்தாகும்.
இந்த வகையில் நோக்குகின்ற போது தான் இறைவன் மனிதனது செயல்கள் குறித்து நிர்ப்பந்திப்பதும் அவனது வேண்டுகோளுக்கு ஏற்ப அச்செயல்கள் அமையும் போது நற்கூலியும் மாறாக, அமையும் போது தண்டைனையும் வழங்குவது நியாயமாக அமைய வேண்டும் என அஷ்அரிய்யாக்கள் கூறுகின்றனர்.மேலும் மனிதன் கருவியே அன்றி கர்த்தா அல்ல என விவாதிக்கும் இவர்கள் கர்த்தாவான இறைவனே கருவியான மனிதனை இயக்குகின்றான் என்கின்றனர்.
உதாரணமாக ஒருவன் பேனையால் எழுதுகிறான் என்றால் உண்மையில் அவன் எழுதப் பயன்படுத்தும் பேனாவுக்கு எழுதும் சக்தி கிடையாது. அல்லாஹ் மனிதனது சிந்தனையைத் தூண்டி பேனாவை எடுக்கச் செய்து அவனை எழுத வைக்கின்றான் .பின் பேனாவிற்கும் எழுதும் சக்தியைக் கொடுக்கின்றான். இதனால் தாளில் எழுத்துக்கள் பதிகின்றன என விளக்கம் அளிக்கின்றனர்.
ஆனால் முஃதஸிலாக்கள் லஹா மா கஸபத் வஅலைஹா மக்தஸபத் என்ற குர்ஆன் வசனப்படி மனிதன் பூரண செயற் சுதந்திரமுடையவன் , அவன் வெளிச் சக்தி ஒன்றால் இயக்கப்படுவதில்லை, அவனது செயலுக்கு அவனே பொறுப்பாளி, சுய விருப்பத்தினடிப்படையிலேயே செயற்படுகின்றான். இந்த வகையில் அவனது செயலை அவனே படைத்துக் கொள்கின்றான் என விளக்கம் கூறுகின்றனர். இது பற்றி ஸஃரிஸ்தானி விளக்கமளிக்கையில் அல்லாஹ் நாடியதைச் செய்யலாம், அவன் விரும்பினால் எல்லா மக்களையும் சுவர்க்கத்தில் நுழைய வைக்க முடியும் , பாவிகளை சுவர்க்கத்தில் நுழைய வைப்பது அவனைப் பொறுத்த வரையில் அநீதியாக இருக்க முடியாது , அவனைப் பொறுத்த மட்டில் அதுவும் பிழையல்ல. ஏனெனில் மனித இயல்போடு சம்பந்தப்பட்ட நன்மை, தீமை, நீதி, அநீதி என்ற வரையறைக்குள் அவன் உட்பட்டவனல்ல என்கின்றனர்.
ஆரம்பத்தில் முஃதஸிலாக் கோட்பாட்டை விசுவாசித்திருந்த பின்னர் அதற்கெதிராகச் செயற்பட்ட இமாம் அஷ்அரி அவர்கள் அவ்வாறு செயற்பட அடிப்படைக் காரணமாய் அமைந்தது மனிதனது செயற் சுதந்திரம் தொடர்பான பிரச்சனையாகும். இவர் இவ்விடயத்தில் தனது ஆசிரியர் ஜுபாலியுடன் கருத்து முரண்பாடுபட்டு முஃதஸிலாக் கொள்கையை விட்டே விலகிச் சென்றார். பின்னர் அதன் பிழையான போக்கை மக்கள் மத்தியில் நிறுவினார்.
இமாம் அஷ்அரி தனது ஆசிரியரிடம் 03 மனிதர்கள் குறித்து வினவினார். அவர்களுள் ஒருவர் முஸ்லிம், மற்றவர் காபிர், அடுத்தவர் குழந்தை. இம்மூவரும் மரணித்த பின் அவர்களது நிலை யாது ? என வினவினார். அதற்கு ஜுபாலி முஸ்லிம் சுவர்க்கத்திலும் காபிர் நரகத்திலும் இருப்பார்கள். குழந்தைக்கு விமோசனம் கிடைக்கும் என்றார். அதற்கு அஷ்அரி குழந்தை தன் சகோதரன் போல சுவர்க்கம் நுழைய விரும்பினால் அனுமதிக்கப்படுமா ? என வினவினார். அதற்கு ஜுபாலி அவ்வாறு அனுமதிக்கப்பட மாட்டாது என்றார். மூத்த சகோதரன் நற்கருமங்களாலேயே சுவர்க்கம் புகுந்தான். குழந்தை அவ்வாறு செய்யவில்லை என்றார். அதற்கு அல் அஷ்அரி தான் செயற்படாதது தனது குற்றமல்ல, எனக்கு அதற்கு நீண்ட ஆயுள் தரப்பட்டிருந்தால் நானும் நற்கருமங்கள் செய்திருப்பேன் என அக்குழந்தை கூறினால் அதற்கு அல்லாஹ் என்ன பதிலளிப்பான் எனக் கேட்டார். அதற்கு ஜுபாலி உனக்கு நீண்ட ஆயுள் தரப்பட்டிருந்தால் நீர் வழிதவறி நரகில் புகுவாய் என அறிந்தே உனக்குச் சொற்ப ஆயுள் தந்தேன் என பதிலளிப்பான். அப்போது அல் அஷ்அரி நரகில் காணப்படும் சகோதரன் அக்குழந்தைக்கு என்ன நிகழும் என்றறிருந்து அவனுக்கு நன்மை செய்த நீ எனக்கு என்ன நிகழும் என்பதையும் நீ அறிந்தே இருப்பாய், அப்படியாயின் குழந்தைக்குப் போல் ஏன் எனக்கும் நன்மை செய்யவில்லை என அல்லாஹ்விடம் கேட்டால் அல்லாஹ் என்ன பதிலளிப்பான் என விளக்கம் கேட்டார். அதற்கு பதில் கூற முடியாது திணறிப் போன ஜுபாலி அஷ்அரி ஷைத்தானுக்கு வசப்பட்டு விட்டதாக கூறினார். ஆனால் அஷ்அரியோ அல்லாஹ் சிலர் மீது கருணை புரியவும் சிலரை தண்டிக்கவும் தேர்ந்தெடுத்துள்ளான். அவ்வாறு தேர்ந்தெடுப்பது அவனது நாட்டத்தைப் பொறுத்ததாகும். இதில் கூட எவ்வித தீய நோக்கமும் கிடையாது என விளக்கினார்.
இவ்வாறு இமாம் அஷ்அரி முஃதஸிலாக்களது கருத்துக்களை தொடர்ந்து எதிர்த்து வந்ததுடன் தனது கருத்துக்களை முன்வைத்து அவற்றை வளர்க்கும் பணியிலும் தீவிரமாக செயற்பட்டு வந்தார். என்றாலும் முஃதஸிலாக்களும் தமது கருத்தில் உறுதியாக இருந்து அதனை வளர்ப்பதில் தியாகங்கள் புரிந்து வந்தனர். இதனால் இரு முரண்பட்ட போக்குகள் இஸ்லாமிய உலகில் வளரலாயிற்று. என்றாலும் முஃதஸிலா இயக்கம் காலப் போக்கில் பல்வேறு காரணங்களால் செல்வாக்கிழந்து மறைந்தது போல் அஷ்அரியாவின் செல்வாக்கு மறையவில்லை.
இதற்கு அடிப்படைக் காரணம் முஃதஸிலாக் கோட்பாடுகள் பகுத்தறிவு அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்தன. ஆனால் அஷ்அரிய்யாக்கள் தமது கருத்துக்களை புதிய கோணத்தில் விளக்கினார்கள். அதாவது குர்ஆனையும் சுன்னாவையும் ஸஹாபாக்களது வழிமுறையையும் முன்மாதிரியாக கொண்டு தமது கருத்துக்களை விளக்கினார்கள் . அவற்றுக்கு பகுத்தறிவு ரீதியான விளக்கங்களையும் கொடுத்தார்கள். தத்துவ விசாரணைகளையும் பழைய சமய நூல்களையும் காரிஜ், சீயா போன்ற புதிய கொள்கைகளையும் ஆராய்ந்து விளக்கமளித்தார்கள். இவர்களது இவ்வணுகுமுறை கடினமாக அமைந்திருந்தாலும் இக்கொள்கையை ஏற்றிருந்த அவர்களது விடா முயற்சியால் அது சுலபமானதாக அமைந்து விட்டது. வாதப் , பிரதிவாதங்கள் மூலமும் சொற் பொழிவுகள் மூலமும் நூல்கள் மூலமும் அறிஞர்கள் தமது கருத்துக்களை பொது மக்களுக்கும் அறிஞர்களுக்கும் விளங்க வைப்பதில் அயராது உழைத்தனர். இதனால் அஷ்அரிய்யாக் கொள்கை முஃதஸிலாக் கொள்கையைப் போலல்லாது வரலாற்றில் நிரந்தரத் தன்மையை பெற்றுக் கொண்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக