ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

நபியின் மீதான அன்பை வெளிப்படுத்தல்.

இஸ்லாத்துக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படும் போதெல்லாம் அவற்றுக்கு எதிராக கண்டனப் பேரணிகளை நடாத்துவது தற்போது வாடிக்கையாகிவிட்டது. இதனை சற்று நிதானமாகப் பார்த்தால், இஸ்லாத்துக்கு எதிரான விமர்சனங்களோ  அல்லது அவற்றுக்கு எதிரான கண்டன நடவடிக்கைகளோ, முடிவின்றி, தொடர்ந்தும் புதிது புதிதாக முன்னெடுக்கப்படும் என்றே தோன்றுகிறது. அப்படியென்றால், இது திட்டமிட்ட தொடர் நடவடிக்கை என்பது நிரூபனமாவதுடன், இந்தக் கேடு கெட்ட கைங்கரியத்தை சமூகமயப்படுத்துகின்ற ஒரு பொது எதிரி இருப்பதும் தெளிவாகிறது. 'இந்த எதிரிக்கு எதிராக நாம் என்ன செய்யலாம்?'


முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் மீது அவதூறான கருத்துக்கள் சொல்லப்படும் போது, முஸ்லிம்கள் அவற்றை கடுமையாக எதிர்க்கக் காரணம், தங்களது குடும்பம், சொத்து, செல்வங்கள் அனைத்தையும் விட இறை தூதரான நபியின் மீது அன்பு செலுத்த வேண்டும் என்ற இஸ்லாத்தின் போதனையே. ஆனால், இந்த அன்பு, பாசம் போன்றவை, அன்னார் மீது அவதூறு சொல்லப்படும்போது மட்டும்தான் வெளிப்பட வேண்டுமா? ஏனைய சந்தர்ப்பங்களிலும் அன்னார் மீதான அன்பையும் பாசத்தையும் நாம் வெளிப்படுத்துகிறோமா? இவை எங்களுக்குள்ளேயே கேட்டுக்கொள்ளப்பட வேண்டிய கேள்விகள்!

நபியவர்களை இழிவு படுத்தும் நோக்குடன் அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு திரைப்படத்துக்கு எதிரான கண்டன நடவடிக்கையின்போது, அமெரிக்காவின் லிபிய நாட்டுக்கான தூதுவர் உட்பட மூவர் கொல்லப்பட்டனர். ஆயினும், இந்த நடவடிக்கை, நபியவர்களின் முன்மாதிரிகளைப் பிரதிபலிக்கிறதா? நபிகளாரின் கூற்றுப்படி, முஸ்லிம் சமூகத்துக்குள் இருக்கும் முஸ்லிம் அல்லாத ஒருவர் தகுந்த காரணங்கள் எதுவுமின்றி கொல்லப்பட்டால், கொலை செய்தவர் மறுமையில் சுவர்க்கத்தின் வாடையைக் கூட நுகர முடியாது. அப்படியென்றால், நபியின் மீதான அபிமானத்தின் காரணத்தினால் நாம் நினைத்தவாறெல்லாம் நடந்து கொள்ள முடியாது என்பது தெளிவாகிறது.



நபிகளார் மீதான அன்பு என்பது வெறும் கண்டனக் கோசங்கள் எழுப்புவதன்று. மாறாக, உள்ளத்தால் அன்பு செலுத்தி, எல்லா சந்தர்ப்பங்களிலும் நபிகளார் சொன்ன விதத்தில் அதனை வெளிப்படுத்துவதாகும்.

இன்றைய சூழ்நிலையில், இஸ்லாத்துக்கெதிரான மிகப் பெரிய எதிரி இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமையே ஆகும். இந்த எதிரி இருக்கும் வரை, இஸ்லாத்துக்கு எதிராக விமர்சனங்களை முன்வைப்போருக்கு சிறந்த பிரதிபலன் கிடைத்துக்கொண்டே இருக்கும். 

எனவே, இஸ்லாத்தைப் பற்றிய புரிதல் இன்மையினால் எழும் பிரச்சினைகளுக்கு பதில் கொடுப்பதை விட்டுவிட்டு, சரியான புரிதலை ஏற்படுத்த முயற்சிப்பதே நாம் மேற்கொள்ள வேண்டிய சிறந்த பணியாகும். இதுவே தற்போதைய நிலையில் நாம் நபியின் மீது அன்பு காட்டும் சிறந்த முறையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக