அல்லாஹ்தஆலா அனைத்தையும் ஒரு தரத்தில் படைக்காது ஏற்றத்தாழ்வுடன் படைத்துள்ளான். சிலதை விட மற்றும் சிலதுக்கு சிறப்புக்களைக் கொடுத்துள்ளான். இந்த வகையில் மாதங்களில் புனித மாதங்களாக துல் கஃதா, துல் ஹிஜ்ஜா, முஹர்ரம், ரஜப் ஆகிய நான்கு மாதங்களையும் ஆக்கியுள்ளான். இவற்றில் துல் ஹஜ் மாதத்தில் புனித ஹஜ் கடமை வருவதனால் ஏனைய மாதங்களை விட இந்த மாதம் சிறப்பாகின்றது.
துல் ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்கள் விஷேடமானவை. இதன் மகிமையை உயர்த்துவதற்காக அல்லாஹ் இவ்விரவுகளின் மீது சத்தியம் செய்துள்ளான். "பஜ்ரின் மீது சத்தியமாக, பத்து இரவுகள் மீது சத்தியமாக" (பஜ்ர்: 1-2). இங்கு சத்தியம் செய்யப்பட்டுள்ள இரவுகள் துல்ஹஜ் மாதத்தின் பத்து இரவுகள் என்ற கருத்தை அறிவிக்கும் ஜாபிர் (றழி) அவர்களது ரிவாயத்தை இமாம் நஸாஈ, ஹாகிம் போன்றோர் தமது கிரந்தங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
ஏனைய நாட்களை விட இவ்விரவுகளில் செய்யப்படக்கூடிய அமல்கள் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவை என ஹதீஸ்கள் கூறுகின்றன.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள்: (துல்ஹஜ்ஜின் ஆரம்ப பத்து நாட்களாகிய) இந்த நாட்களில் செய்யப்படக்கூடிய அமல்களை விட அல்லாஹ்வுக்கு விருப்பமாக வேறு நாட்கள் கிடையாது. அப்போது (அங்கிருந்தோர்) கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்வின் பாதையில் போராடுவதையும் விடவா?. அதற்கு நபியவர்கள் பதிலளித்தார்கள்: அல்லாஹ்வின் பாதையில் போராடுவதையும் விடவாகும். ஆனால் ஒருவன் ஜிஹாதுக்காக தனது உயிர், செல்வத்துடன் சென்று அதில் எதனையும் திரும்பி கொண்டு வராவிட்டால் அந்த அமலை விட. (அபு தாவுத், திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத்) (அதாவது அவன் போராட்டத்தில் ஷஹீதாகின்றான்).
தபரானியில் வந்துள்ள இன்னுமொரு ரிவாயத்தில் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்: இந்த நாட்களில் அமல் செய்யப்படுவதை விட அல்லாஹ்விடம் மகத்துவமாக, அவனுக்கு விருப்பமான வேறு நாட்கள் கிடையாது. எனவே நீங்கள் இந்த நாட்களில் அதிகமாக தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ்), தஹ்மீத் (அல்ஹம்துலில்லாஹ்), தஹ்லீல் (லா இலாஹா இல்லல்லாஹ்), தக்பீர் (அல்லாஹ் அக்பர்) கூறுங்கள்.
இந்த மாதத்திலே தான் அரபா தினம் வருகின்றது. ஹஜ்ஜாஜிகள் அல்லாஹ்விடத்தில் அனைத்தையும் முறையிட்டு, ஈருலக பாக்கியங்களையும் பெற்றுக்கொள்வதற்கான ஒரு அரிய சந்தர்ப்பம். ஹஜ்ஜூக்குச் செல்லாத முஸ்லிம்கள் இந்நாளில் நோன்பு பிடிப்பதன் மூலமாக தமது பாவங்களுக்கான மன்னிப்பை தேடிக் கொள்ளுமாறு நபி (ஸல்) எமக்குச் போதித்துள்ளார்கள்.
அபு கதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இறைத் தூதர் (ஸல்) அவர்கள் அறபா நோன்பு பற்றி வினவப்பட்ட போது கூறினார்கள்: அது கடந்த வருடத்தினதும், அடுத்த வருடத்தினதும் பாவங்களை மன்னித்து விடும். (முஸ்லிம், அஹ்மத்).
இந்நாட்கள் இவ்வளவு சிறப்புப் பெறுவதற்கான காரணத்தை இமாம் இப்னு ஹஜர் (றஹ்) இவ்வாறு அடையாளப்படுத்துகின்றார். இந்நாட்களில் தான் ஏனைய நாட்களில் போன்றல்லாது தொழுகை, நோன்பு, ஹஜ், ஸதகா போன்ற தலையாய வணக்கங்கள் ஒன்று சோ்கின்றன. (பத்ஹூல் பாரி).
இந்த நாட்களில் அதிகமாக அமல்கள் செய்யப்பட வேண்டும். இங்கு சில நடைமுறை சாத்தியமான சில அமல்களை அடையாளப்படுத்த விரும்புகின்றேன்.
"அதிகமாக நோன்பு நோற்றல். குறிப்பாக அரபா தினம். திங்கள், வியாளக்கிழமை நாட்களிலும் நோன்பு பிடிப்பது பொதுவாக சுன்னா என்ற வகையில் இந்த நாட்களிலும் நோன்பை நோற்றல்.
"தொழுகைகளை உரிய நேரத்திற்கு தொழல். ஆண்கள் பள்ளிவாயலில் ஜமாஅத்தாகவும், பெண்கள் குறித்த நேரத்தில் வீடடிலும் தொழுகையை நிறைவேற்றல்.
"முடியுமாயின் நாளாந்தம் தஹஜ்ஜூத் தொழல். அதே போன்று வித்ர், ளுஹா, முன் பின் சுன்னத்கள் போன்றவற்றையும் நிறைவேற்றல்.
"குர்ஆன் திலாவத். குறைந்த பட்சம் நாளாந்தம் புனித அல்குர்ஆனை தவறாமல் ஓதிவரல். அதிலும் குறிப்பாக நாளாந்தம் ஒரு ஜூஸ்உ ஓத முடியுமாக இருந்தால் அது ஏற்றமானது. நன்மைகளில் அதிகம் ஆசையுள்ளவர்கள் இப்பத்து நாற்களிலும் நாளாந்தம் மூன்று ஜூஸ்உகள் ஓதுவதனால் ஒரு முறை குர்ஆனை ஓதிய நன்மையைப் பெற்றுக் கொள்ளலாம்.
"அதிகமாக திக்ர் செய்தல். இதில் குறிப்பாக காலை மாலை ஓத வேண்டிய அவ்ராதுகளை (மஃசூராத்) தவராமல் ஓதல். மேலும் குறைந்தது ஒரு நாளைக்கு 1000 திக்ருகள் செய்தல். இதில் பல் வகையான திக்ருகளையும் சோ்த்துக்கொள்ளல். இஸ்திஃபார், ஸலவாத், லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ், சுப்ஹானல்லாஹ்.
"அதிகமாக துஆக்களில் ஈடுபடல். குறிப்பாக முஸ்லிம் உம்மத்தின் ஜக்கியத்திற்கும், விஷேடமாக பலஸ்தீன், சிரியா, பர்மா முஸ்லிம்களின் விடுதலைக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தல்.
"வசதியுள்ளவர்கள் குர்பான் கொடுத்தல்.
"அதிகமாக ஸதகா செய்தல்
"ஹஜ் செய்ய பாக்கியம் கிடைக்காதவர்கள் அடுத்த வருடம் ஹஜ் செய்வதற்கான உறுதியான நிய்யத்தை வைத்தல்.
"உள்ளங்களுக்கு மத்தியில் காணப்படக்கூடிய கோபதாபங்களை விட்டுவிட்டு, ஒருவரை ஒருவர் மன்னித்துக் கொள்ளல். பலபோது நாம் செய்யும் அமல்கள் அங்கீகரிக்கப்படாமல் இருக்க இது ஒரு முக்கிய காரணம் என ஹதீஸ்கள் சொல்கின்றன.
எனவே கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற்ற சிறந்த அடியார்களாக மாறுவோம். அல்லாஹ் எம்மனைவரது அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக