செவ்வாய், 23 அக்டோபர், 2012

ஹஜ் ஒரு தியாகப் பயணம் (உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி)


“ஹிஜ்ஜுல் பைத்” எனப்படும் இறையில்லத் தரிசனம் ஓர் இணையில்லா அனுபவம். படைத்தவனது இல்லம் நோக்கி படைப்பினங்கள் மேற்கொள்ளும் தியாகப் பயணம். ஹஜ்ஜில் எத்தனை தியாகங்கள்?

நிய்யத் ஒரு தியாகம்

“லப்பைக்“ – உனது அழைப்பை ஏற்றுவிட்டேன் என்று கூறும் போதே இந்த உலகத்தை துறந்து விட்டேன் என்ற உணர்வை பற்றிக் கொள்கிறது.
இறைவா உன்னை நினைத்து விட்டேன். உனக்காக புறப்படுகிறேன் என்ற புளகாங்கிதம் உடம்பெல்லாம் பரவுகிறது. உற்றார் உறவினர்களின் உறவுகளை விடுவித்துக் கொண்டு “அல்வுர்வதுல் வுஸ்கா” எனும் அறுபடாத அல்லாஹ்வின் உறவோடு தன்னை இறுகப் பிணைத்துவிட்டதொரு நம்பிக்கை மலர்கிறது. வீடு வளவுகளும், சொத்து சுகங்களும் ஒரு முறை நீர்க்கானலாக தோன்றி மறைந்து விடுகின்றது. “லப்பைக்.. லப்பைக்.. அல்லாஹும்ம லப்பைக்” நாவிழும் நினைவிழும் நனைந்த நாதங்களாக வெளிவருகின்றன. உள்ளம் இந்த உலகத்தை விட்டகல்கிறது. ஒரு புதிய உலகம் நோக்கி ஒரு புதிய பயணம் ஆரம்பமாகிறது.

ஹாஜியின் உடை ஒரு தியாகம்

 ஹாஜியின் உள்ளத்திற்கேற்றதோர் உடை வர்ணங்கள், வசீகரங்கள், பகட்டு, பெருமிதம் அத்தனைக்கும் மொத்தமாக விடை கொடுக்கும் ஓர் எளிமையான ஆடையை ஒரு ஹாஜி அணிந்து கொள்கிறார். பெறுமதிகள் வேறுபட்டாலும் எளிமையமான தோற்றத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஆடை அது. அது வெண்மையான ஆடை... எளிதில் தூசு படிந்து அழுக்கடையும் ஆடை... தன்மீதும் தனது அலங்காரம் மீதும் ஒரு மனிதன் கொண்டுள்ள மித மிஞ்சிய கவனத்தை செயலிழக்கச் செய்யும் ஆடை... அல்லாஹ்வின் தரிசனத்திற்காக புறப்பட்டவனின் கவனத்தை பிறிதொன்றால் லயிக்கச் செய்யாத ஆடை... அந்த ஆடையே ஒரு தியாகம்தான்!

பொருட் தியாகம்
ஹஜ்ஜுக்காக புறப்பட்ட ஒருவர் தனிமையில் சென்றாலும், தனது குடும்பத்துடன் சென்றாலும் தனது செல்வத்தின் ஒரு பகுதியை தியாகம் செய்தாக வேண்டும் மக்காவை அண்டிய பகுதிகளில் இருப்போரும் ஹஜ்ஜுடைய காலத்தில் அதிக செலவீனங்களை எதிர் நோக்குகிறார்கள். குடும்பத்தோடு ஹஜ் செய்பவர்கள் அதிகம் செலவிட வேண்டியிருக்கிறது. தனிமையில் ஹஜ் செய்பவர்கள் சில போது தமது செலவுகளுக்கு மேலாக, அக்காலத்துக்குரிய தமது வருவாயை இழக்க வேண்டி வருகிறது.

ஆம்! ஹஜ் எனும் தரிசனப் பயணம் தியாகம் நிறைந்தது. இந்த உலகில் அல்லாஹ்வின் வீட்டை தரிசிக்க புறப்பட்டவர்கள் அதற்காக செலவு செய்தாக வேண்டும். அந்தச் செலவுகள் விடயத்தில் கருமித்தனம் காட்டுவோர் ஒரு யுதனாக அல்லது ஒரு கிறிஸ்தவனாக மரணிக்கட்டும் என இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

“ மனிதனே நீ உனது இரட்சகனை நோக்கியொரு முயற்சி செய்து முன்னேறிக் கொண்டே இருக்கிறாய். நீ அவனைத் தரிசிப்பாய் ”

ஹஜ்ஜுக்காக செலவு செய்கின்ற அதே வேளை ஒரு ஹாஜி நேரிய வழியில் வியாபாரம் செய்வதையோ இலாபமீட்டுவதையோ இஸ்லாம் தடுக்கவில்லை. ஏனெனில், பொருளீட்டுதல் மேலும் மேலும் இறைபாதையில் செலவு செயவதற்கான வாய்ப்பைத் தருகிறது. பொருளீட்டுவதன் உன்னத நோக்கமும் அதுவே ஹஜ்ஜின் நோக்கத்தை இது பாதிப்படையச் செய்வதில்லை. மாறாக ஊக்குவிக்கின்றது. எனினும் ஹஜ்ஜையே வியாபாரமாக்கி விட்டால் அதன் நிலை வேறு.

உடல் தியாகம்:

ஹஜ்ஜின் நிபந்தனைகளுள் ஒன்று ஹஜ்ஜை நிறைவேற்றுபவர் தேகாரோக்கியமுடையவராக இருப்பார் என்பதாகும். எனினும் தேகாரோக்கியம் குன்றியவர்கள் ஹஜ் செய்வதை நடைமுறையிலே காண்கிறோம். அங்கே தேகாரோக்கியத்தை விட அவர்களது மனோதிடம் ஹஜ் செய்வதற்கு பெரிதும் துணையாக இருக்கிறது. எனவே﹐ ஹஜ் எனும் தியாகப் பயணத்திற்கு மனோ வலிமை இன்றியமையாதது. மன உறுதி  இல்லாதவர்கள ஹஜ்ஜின் சிரமங்களைத் தாங்கிக் கொள்ள மாட்டார்கள்.

சிரமங்கள் என்ற வகையில்  பொருட் சிரமம்﹐ உடல் சிரமம் என்ற இரண்டாலும் ஹஜ் பிணைக்கப்பட்டிருக்கிறது. வசதியுள்ளவர்கள் அதிக பொருட் செலவையும்﹐ குறைந்த உடற் சிரமத்தையும் தாங்கிக் கொள்கிறார்கள். வசதி குறைந்தவர்கள் குறைந்த பொருட் செலவையும்﹐ அதிக உடற் சிரமத்தையும் ஏற்றுக் கொள்கிறார்கள். நடுநிலையானவர்கள் இரண்டு சிரமங்களையும் சமநிலையில் அனுபவிக்கிறார்கள்.

இத்தகைய சிரமங்களைத் தாங்கிக் கொள்ளும் துணிவும்﹐ வீரமும் இறைதரிசனப் பயணத்திற்கு இன்றியமையாதவைகளாகும்.

தியாகங்களுக்கு மத்தியில் ஒரு மனக்குறை

கடும்குளிர்﹐ வெப்பம் புழுதிக் காற்று வீட்டுப் பழக்கங்களை அனுசரித்துக் கொள்ள முடியாமை﹐ சூழல் மாற்றங்கள்﹐ சுவை தராத உணவுகள்﹐ மலசல கூடங்களில் இடநெருக்கடி﹐ வியர்வையின் அழிச்சாட்டியம்﹐ இடையிடையே கால்களிலிருந்து விடைபெறும் பாதணிகள்﹐ பையிலிருந்து காணமற்போகும் பணம். உறவினர்களைத் தவற விட்டுத் தவிக்கும் தவிப்பு கண்டும் காணாமல் செல்லும் பெருங்கூட்டம்.

மினாவிலிருந்து அரபா﹐ அங்கிருந்து முஸ்தலிபா﹐ மீண்டும் மினா ஜம்ராக்களில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாகக் கல்லெறிதல்﹐ அறுத்துப் பலியிடல்﹐ தரிப்பிடங்களுக்கிடையிலும்﹐ ஜம்ராக்களிலும் ஓட்டமும் நடையுமாக சனநெறிசல்களுக்கு மத்தியில் அள்ளுண்டு செல்லல்﹐ சிலபோது கால்களிடையே வீழ்ந்து உயிருக்காகப் போராடுதல்.

இவ்வாறு சிரமங்களை அடுக்கின் கொண்டெ போகலாம். ஹாஜிகள் பலர் இந்த சிரமங்களை சகித்துக் கொண்டாலும் வேறொரு வகையில் மனக் குறைபட்டுக் கொள்கிறார்கள்.

 தரிப்பு﹐ ஓட்டம்﹐ நடை﹐ சுற்றறுதல்﹐ இரவு தங்குதல்﹐ கல்லெறிதல்﹐ அறுத்துப் பலியிடல்﹐ மயிர்களைதல் இவைகள்தாமா ஹஜ்? பாலைவனம் போன்றதொரு பிரதேசத்தில் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதன் மூலம் ஓர் உயிரோட்டம் இருப்பதாகத் தெரியவில்லையே! ஹஜ்ஜில் ஐங்காலத் தொழுகைகளைக் கூட சேர்த்தும்﹐ சுருக்கியும் தொழுது விடுகிறோம்! கால நேரங்கள் பயனின்றி கழிவது போலிருக்கிறதே! என்பது அவர்களது மனக் குறை.

தொழுகை﹐ நோன்பு ஆகிய வணக்கங்களைப் போல அமைதியும். பக்தி சிரத்தையும் இல்லாதிருப்பதைக் கண்டு பலர் ஹஜ்ஜின் மகிமையை உணராது போகின்றனர்.

உண்மையில் ஹஜ்ஜும் ஒரு வணக்கம்தான். மறுகணம் அது ஒரு போராட்டமாகவும் திகழ்கிறது. அந்தப் போராட்டத்தில் அமைதி﹐ பக்தி சிரத்தை என்பவற்றுடன் வீரமும்﹐ சகிப்புத் தன்மையும் அதிகமாகத் தேவைப்படுகிறது.

இஸ்லாத்தின் கடமைகளை நோக்குங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான போராட்டத்தை நாம் காணலாம்.

தொழுகை:

இது மனித உள்ளத்தில் இடம் பிடிக்க முயலும் பல்வேறு எண்ணங்களோடு ஒரு மனிதன் நடாத்தும் போராட்டமாகும். இந்தப் போராட்டத்தில் அல்லாஹ்வின் எண்ணம் (திக்ர்) அவனது உள்ளத்தில் நிலைத்து வெற்றி பெற்றதாக வேண்டும்.

நோன்பு:

இது உடம்பின் இச்சைகளோடு நடாத்தும் போராட்டமாகும். மனிதனுள் இருக்கும் மிருக உணர்வுகள் அவனை மிகைத்து விடாமல் இந்தப் போரட்டம் அவனைப் பாதுகாக்கிறது.

ஸகாத்:

மனிதன் பொருள் மீது கொண்ட ஆசைகளோடு நடாத்தும் போராட்டமே ஸகாத் ஆகும். பெருட்களும் செலவும் வளர்ந்து செல்லும்போது அவற்றுடன் சேர்ந்து வளர்ந்து விடுகிற கருமித்தனத்தை இந்தப் போராட்டம் கருவறுக்கிறது.

ஹஜ்:

முதல் மூன்று போராட்டங்களும் ஒருசேர அமைவதுடன் மற்றொரு நான்காவது போராட்டத்தின் களமாகவும் ஹஜ் பரிணமிக்கிறது. ஆம்! மனிதம்﹐ சகோதரத்துவம் என்பவற்றை அவமதிக்கும் கீழ்த்தரமான உணர்வுகளோடும் போராடும் களமே ஹஜ்ஜாஹும்.

பல்வேறு பிரதேசம்﹐ மொழி﹐ நிறம்﹐ இனம் கோத்திரம் என்பவற்றைச் சேர்ந்தவர்கள் ஹஜ்ஜுக்காக செல்கிறார்கள். அவர்களது இயல்புகள்﹐ சுபாவங்கள்﹐ பழக்க வழக்கங்கள்﹐ வாழ்க்கை முறைகள் வெவ்வேறாக அமைந்திருக்கின்றன. இத்தகைய முரண்பாடுகள் ஒன்றினைகின்ற ஒரு களத்தில் நிச்சயம் ஒருவரால் மற்றவர் பாதிப்படைவர். ஹஜ்ஜின்போது மனிதர்கள் அனுபவிக்கும் சிரமங்களே அதிகம்.

இயற்கையாலும்﹐ வேறுபல அனர்த்தங்களாலும் மனிதன் சிரமங்களுக்குள்ளாகும்போது ஆவேசமின்றி அவற்றை எதிர்கொள்கிறான். எனினும் மனிதர்களால் நெருக்கடிகள் வரும்போது அவன் சகித்துக் கொள்வதேவையில்லை. மனித வாழ்க்கை அமைதியிழந்து தவிப்பதற்கு இது ஒரு முக்கிய காரணியாகும். இந்நிலையை மாற்றியமைப்பதனால் மனிதமும்﹐ சகோதரத்துவமும் மதிக்கப்பட வேண்டும். ஹஜ் அந்த உயர்ந்த நோக்கத்தை நிறைவேற்றி வைக்கிறது. மனிதர்களின் தொல்லைகளையும்﹐ அவர்களால் ஏற்படும் நெருக்கடிகளையும் சகித்துக் கொள்ளும் போராட்டத்திற்காகவே தயார் செய்யப்பட்ட களமாக ஹஜ் திகழ்கிறதே என எண்ணத் தோன்றுகிறது.

ஹஜ்ஜின் பிரதேசம் மினா﹐ அரபா﹐ ஸபா﹐ மர்வா என்று விரிவடைகிறது. ஹஜ்ஜின் கிரியைகள் தவாப் (வலம் வருதல்)﹐ சஈ (ஓடுதல்) மபீத் (இரவு தங்குதல்)﹐ வுகூப் (துரித்தல்)﹐ ரம்யு (கல்லெறிதல்)﹐ ஹல்க் (மயிர்களைதல்)﹐ நஹ்ர் (அறுத்துப் பலியிடுதல்) என்று தொடர்கின்றன. இவற்றை நோக்குமிடத்து வேகமும்﹐ பரபரப்பம் கலந்த ஒரு தன்மையை ஹஜ்ஜில் அவதானிக்க முடிகிறது. அமைதியும் நிதானித்தலும் அங்கே மிகக் குறைவு. பரபரப்பும் வேகமும் கலந்த ஒரு சூழல் நெருக்கடிகள் மிக்கதாகவே காணப்படும். ஹஜ்ஜும் அப்படித்தான் அதனால்தான் போலும் ஹஜ்ஜை நிறைவேற்ற வருவோர் பின்வரும் கட்டுப்பாடுகளுக்கு தம்மை உட்படுத்தியாக வேண்டும் என்பதை அல்குர்ஆன் வலியுறுத்துகிறது.

''குறிப்பிட்ட சில மாதங்கள் ஹஜ்ஜுக்குரிய காலமாக இருக்கின்றன. அவற்றில் ஹஜ்ஜைத் தம்மீது கடமையாக்கிக் கொண்டவர்கள் மனைவியோடு தாம்பாத்திய உறவில் ஈடுபடலாகாது. பாவங்கள் செய்யலாகாது பிற மனிதர்களுடன் தர்க்கத்தில் ஈடுபடக்கூடாது''

தர்க்கம் புரிவது கூட ஹஜ்ஜில் தடைசெய்யப்பட்டுள்ளது. அந்நளவுக்கு பிறரது விவகாரத்தில் சகிப்புத் தன்மையை கடைபிடிப்பது மனிதத்தையும் சகோதரத்துவத்தையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை ஹஜ் வலியுறுத்துகிறது.

இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்றவர் மப்ரூரான ஹஜ்ஜை நிறைவேற்றியவராவார். அதன் பொருள் 'நன்மைகள் நிறைந்த ஹஜ்' என்பதாகும்.

ஹஜ்ஜில் வெறும் சகிப்புத் தன்மை மட்டுமல்ல﹐ தொல்லைகள் தருவோருக்கு நன்மைகள் செய்யும் தாராளத் தன்மை அதில் பிரதிபலிக்க வேண்டும். அந்த ஹஜ் நிச்சயம். நன்மை  நிறைந்த ஹஜ்ஜாக இருக்கும்.

ஹஜ்ஜின் இறுதியில்...

ஹஜ் கடமை சில தினங்களோடு முடிந்து விடுவது உண்மைதான் ஆனால் ஹஜ்ஜின் நோக்கம் அவற்றோடு முடிவடைந்து விடுவதில்லை. அல்குர்ஆன் அதனைப் பின்வருமாறு தெளிபடுத்துகிறது.

''நீங்கள் (ஹஜ்ஜின் போது அறுத்துப் பலியிடும்) மிருகங்களின் இரத்தமோ இறைச்சியோ அல்லாஹ்வைச் சென்றடைவதில்லை. (அச்சந்தர்ப்பத்தில்) உங்களது உள்ளத்திலிருந்து தோன்றும் இறையச்சமே அல்லாஹ்வை சென்றடைகிறது.''

பயணம் கஃபா வரையென்றாலும் உள்ளம் கஃபாவின் உரிமையாளன் வரை செல்ல வேண்டும். உள்ளத்தின் ஹஜ்ஜுடன் அந்தப் பயணம் நிறைவு பெறும் பயணமல்ல... இறுதி மூச்சு வரை தொடரும் பயணம்.... மஹ்ஷரிலும் தொடரும் பயணம்... மறுமையின் வீடான சுவனத்தில் அந்த  அல்லாஹ்வின் திருமுகம் காணும் வரை தொடர்கின்ற பயணம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக